500 மில். டொலர் கடன் வழங்கியது இந்தியா

பெற்றோலிய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் டொலர் கடனை இந்தியா வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கருக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த மெய்நிகர் கலந்துரையாடலில், அத்தியாவசிய பொருட்களுக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி மற்றும் எரிபொருள் வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கடிதம் வழங்குவது குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அனைத்துப் பிரஜைகளுக்குமான உரிமைகளை உறுதிசெய்வதற்கு பிரிட்டன் முழுமையான ஆதரவை வழங்கும்

இலங்கையில் சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன் அனைத்துப் பிரஜைகளுக்குமான மனித உரிமைகளை உறுதிசெய்வதை முன்னிறுத்தி செயற்பட்டுவருபவர்களுக்கு ஆதரவை வழங்குவதில் பிரிட்டன் உறுதியாக இருப்பதாக அந்நாட்டின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட் இன்றையதினம் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கைக்கான தனது விஜயம் குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் அமைச்சர் தாரிக் அஹமட் மேலும் கூறியிருப்பதாவது,

கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் வசிக்கக்கூடிய அனைத்து இனங்களைச்சேர்ந்த மக்களையும் சந்திப்பதற்குத் திட்டமிட்டிருக்கின்றேன்.

உலகளாவிய வர்த்தகம், முதலீடு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு ஆகியவற்றில் இந்திய – பசுபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் குறித்து பிரிட்டன் விசேட அவதானம் செலுத்தியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் பொருளாதார ரீதியான தொடர்புகளை அடிப்படையாகக்கொண்ட வலையமைப்பைக் கட்டியெழுப்பிவரும் அதேவேளை, இவ்விடயத்தில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளது.

அத்தோடு இலங்கையில் சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன் அனைத்துப் பிரஜைகளுக்குமான மனித உரிமைகளை உறுதிசெய்வதை முன்னிறுத்தி செயற்பட்டுவருபவர்களுக்கு ஆதரவை வழங்கவேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன்.

பொதுநலவாய அமைப்பில் பிரிட்டனும் இலங்கையும் நீண்டகாலமாக அங்கம்வகிப்பதுடன் சர்வதேசத்தின் கரிசனைக்குரிய பல்வேறு விடயங்களில் ஒன்றிணைந்து செயலாற்றி வந்திருக்கின்றன.

அவற்றில் காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் முக்கியமானவையாகும்.

பிரிட்டனால் காலநிலை மாற்றம் தொடர்பான ‘கோப் 26’ மாநாடு கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச நாடுகளின் தலைவர்களின் பங்குபற்றலுடன் கிளாஸ்கோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து சூழலுக்கு நேயமானதும் நிலைபேறானதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதன் அவசியத்தை அனைத்துத்தரப்பினருக்கும் உணர்த்துவதை இலக்காகக்கொண்டு இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக இருக்கின்றது.

காலநிலைமாற்ற சவால்களைக் குறைப்பதற்கும் சூழலைப் பாதுகாப்பதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்.

மேலும் கொரோனா வைரஸ் பரவல் பொருளாதார ரீதியில் பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் தோற்றுவித்திருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் புதியதொரு பொருளாதாரக்கட்டமைப்பை உருவாக்கல், நிதிச்சேவை வழங்கல் துறையை அபிவிருத்திசெய்தல், வர்த்தக மற்றும் முதலீட்டுத்தொடர்புகளை விரிவுபடுத்தல் ஆகியவற்றுக்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.

அந்தவகையில் இலங்கையில் போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் சமாதானத்தையும் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையையும் உறுதிப்படுத்துவதற்கான ஆதரவை வழங்கும் அனைத்துத் தரப்பினருக்கும் அவசியமான செயற்திட்டத்தை ஜெனீவாவின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வழங்கியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

சப்புகஸ்கந்தவில் மின் உற்பத்தி நிறுத்தம்

எரிபொருள் இன்மையால் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஊடாக 900 மெட்ரிக்தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையை வரவேற்கிறோம் – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

ஜனாதிபதியின் அரச கொள்கை விளக்கவுரையில் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு அவசியமான விதத்தில் ஒத்துழைப்புகளை வழங்குவோம் எனவும், ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையை ஆதரிப்பதாகவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்பதாம் பாராளுமன்றத்தின் இரண்டாம் கூட்டத்தொடரை இன்று ஆரம்பித்துவைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய கொள்கை விளக்க உரை தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இதனை கூறினர்.

இது குறித்து கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகையில், ஜனாதிபதியின் உரையில் கடந்த காலங்களில் அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குல் எந்த முரண்பாடுகளும் இல்லை என்றார்.

கட்சியின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவிக்கையில்,யதார்த்தமாக தற்போது முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பிடவேண்டிய சகலதையும் ஜனாதிபதி தமது உரையில் குறிப்பிட்டுள்ளார். பாரிய நெருக்கடிகளுக்கு நாம் தீர்வு காண வேண்டியுள்ளது என்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டார். நாடு எதிர்கொண்டுள்ள டொலர் பிரச்சினை, எரிபொருள், கல்வித்துறை உள்ளிட்ட விடயங்களையும் அவர் தெளிவுபடுத்தினார்.

எவ்வாறாயினும் பாரிய சவால்களை அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். எதிர்வரும் மூன்று வருடங்கள் நாட்டுக்கு பெரும் சவால்கள் உள்ளன. அதேபோன்று நாடு என்ற ரீதியில் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது என நாம் அனைத்து நாட்டு மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம். சவால்களை எதிர்கொள்ளக் கூடிய பலம் எமக்குத் தேவை என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அதில் எந்தவித பிரச்சனையும் கிடையாது.

அதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். அரசாங்கத்திற்குள் சிக்கல்கள் ஏற்படும்போது நாம் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவோம். அது அரசாங்கத்தின் ஆரோக்கியமான நிலைக்கு சிறந்ததாக அமையும். எதையும் பேசாமல் அனைத்துக்கும் கைகளை உயர்த்துவதை விடுத்து சில சில விடயங்களில் எமது கருத்துக்களை தெரிவிப்பது அவசியமாகிறது என்றார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டு ஆவணம் இந்தியத் தூதுவரிடம் நாளை கையளிப்பு!

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்தியத் தூதுவரைச் சந்தித்து இந்தக் கடிதத்தை அவர் மூலம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைப்பர் என ஏற்பாட்டாளர்கள் ஆகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இச்செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

தமிழ் தேசிய பங்காளி கட்சியான ரெலோவின் முயற்சியினால் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைளையும் முன்வைத்து ஆவணமொன்றை அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

Posted in Uncategorized

ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்கள் கடனை கோரும் இலங்கை !!

கடனில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 3.5 பில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடனை டொலராக மாற்றுவதற்கான சரியான அளவு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து தீர்மானம் எட்டப்படும் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வரலாற்று ரீதியாக இலங்கைக்கு அபிவிருத்தி உதவிகளை வழங்கும் ஜப்பான், நிதி உதவி மட்டுமல்லாமல் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறது.

ஜப்பானில் இருந்து பெறப்படும் கடன் ஜப்பானிய யெனில் வழங்கப்படும் என்பதோடு 0.05 சதவீத வட்டி விகிதத்தைக் கொண்டிருக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்கள் மட்டுமே உள்ள நிலையில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு இந்த தொகை சில மாத இறக்குமதிக்கு போதுமானதாக காணப்படுகின்றது.

அத்தோடு ஜனவரி 18ல் 500 மில்லியன் டொலர் மற்றும் ஜூலையில் 1 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்துவது உட்பட, இந்த ஆண்டு 6 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடனை திருப்பி செலுத்த வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

பணப்புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடன் வழங்கும் முகவர்களிடமிருந்து குறிப்பாக உலக வங்கி, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மேலும் கடன்களை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பதை பிரிட்டன் தாமதிப்பது ஏன் ? – எலியற் கொல்பர் கேள்வி

ஏனைய நாடுகளில் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ள இலங்கையின் சில இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கலாக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் தடைவிதிப்பதற்கு ஏன் காலதாமதமாகின்றது என்று பிரிட்டனில் இயங்கும் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் எலியற் கொல்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரிட்டனில் வாழும் பரந்தளவிலான மற்றும் செல்வாக்குமிக்க தமிழ்ச்சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கவேண்டுமெனில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகத் தடைவிதிக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்டப்போரின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டிய கட்டளை வழங்கும் அதிகாரத்திலிருந்த இராணுவ ஜெனரல்களுக்கு எதிராக பிரிட்டன் அரசாங்கம் சர்வதேச மெக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் தடைவிதிக்கவேண்டும் என்று அண்மையில் 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியிருந்தன.

அதுமாத்திரமன்றி இவ்வாண்டு பிரித்தானியாவின் பேர்மிங்கில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியில் பங்கேற்பதற்காக முன்னாள் இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரிய தனது அணியுடன் பிரித்தானியாவிற்கு வருகைதரும்பட்சத்தில், சர்வதேச சட்டவரம்பின்கீழ் அவரைக் கைதுசெய்து விசாரணையை ஆரம்பிப்பதொன்றே தற்போது பிரித்தானியா செய்யக்கூடிய மிகக்குறைந்தபட்ச நடவடிக்கையாகும் என்றும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச மெக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் இலங்கை தொடர்பில் பிரித்தானியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழர்களுக்கான அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் வலியுறுத்தியுள்ளது.

Posted in Uncategorized

3 நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது – அமைச்சர் காமினி லொகுகே

மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திரமே தற்சமயம் கையிருப்பில் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் களனி திஸ்ஸமின் நிலையத்திற்கு தேவையான 3000 ஆயிரம் மெற்றிக் தொன் உராய்வு எண்ணெயை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்கியதை தொடர்ந்து எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மின்விநியோகத்தை துண்டிக்காமலிருக்க எதிர்பார்த்துள்ளோம்.

நுரைச்சோலை அனல்மின்நிலையத்தில் இருந்து கிடைக்கப் பெறும் மின் வழமைக்கு திரும்பியுள்ளதால் மின்விநியோகத்தை தற்போதைய நிலையில் துண்டிக்காமலிக்க அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளோம்.

இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்க முடியாது என வலுசக்தி துறை அமைச்சரால் குறிப்பிட முடியாது.

நாட்டில் எரிபொருள் இறக்குமதி மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றின் தனியுரிமை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உண்டு என்றும் அவர் கூறினார்.

மின்சாரத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

சந்திரிக்காவுடன் இன்னும் சில முக்கியஸ்தர்களை உள்ளடக்கி எதிர்வரும் மார்ச்சில் புதிய அரசியல் கட்சி ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உள்ளிட்ட இன்னும் சில முக்கியஸ்தர்களை உள்ளடக்கி எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த அரசியல் அணியில் மையப்புள்ளியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க இருக்கவுள்ளதோடு, குமார் வெல்கம, அர்ஜுண ரணதுங்க, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் ஒருங்கிணையவுள்ளனர்.

இந்த அணியானது குமார வெல்கம தலைமையில் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சியான புதிய லங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்தி பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கும் வகையில் இந்த அணி செயற்படவுள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம கொழும்பு பத்திரிகை ஒன்றிடம் தெரிவிக்கையில்,

எமது கட்சியின் தலைமைக்காரியாலயத்தினை எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் திறப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

குறித்த நிகழ்வில் எமது கட்சியை மையப்படுத்திய பரந்து பட்ட அணியொன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். ஜனநாயகம், மனிதாபிமான பண்புகள் நிறைந்த அரசியல் கலாசாரமொன்றையும் அனைவரும் சமத்துவமாக வழும் அமைதியான சூழல் ஒன்றையும் கட்டியெழுப்புவதற்கு சமூகத்தினை வழிநடத்தக்கூடிய அரசியல் கட்சியொன்று அவசியமாகின்றது.

அந்த வெற்றிடத்தினைப் பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காகவே இப்புதிய அரசியல் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

இந்தக் கட்சியின் போசகராகவும் எம்மை வழிநடத்துபவராகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க செயற்படவுள்ளார். அத்துடன் அவருடைய வழிகாட்டலில் மாற்றத்தினை ஏற்படுத்துவதை நோக்கி நகரவுள்ளோம்.

இந்த நிகழ்விற்கு அனைத்து தலைவர்களையும் அழைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். மேலும், எமது கொள்கைகளையும், இலக்குகளையும் ஏற்றுக்கொள்பவர்கள் எம்முடன் இணைந்து பயணிப்பதற்கு முடியும்.

அவ்விதமானவர்களுக்காக எமது கதவுகள் திறந்தே இருக்கும். அண்மையில் சுசில் பிரேமஜயந்தவுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன்.

அதேநேரம், ஏனைய தலைவர்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதில் எமக்கு தயக்கங்கள் இல்லை. மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் பங்காளியாக இருக்கின்றார். அவர் அதிலிருந்து வெளியேறி எம்முடன் இணைந்து கொள்வது பற்றி தீர்மானித்தால் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளோம் ஏனைய எதிரணிகளையும் இணைத்துப் பயணிப்பதற்கும் தயாரகவே உள்ளோம் என குறி்ப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பதவியை, பேராயருக்கு வழங்க வேண்டும் என்கிறார் ஞானசார தேரர்

நாட்டின் பொலிஸ் மா அதிபர் பதவியை, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் வழங்க வேண்டுமென ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பிரதானி கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பதுளை சமூக நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஞானசார தேரர் கலந்து கொண்டு பேசும்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

கர்தினாலின் சில செயற்பாடுகளை பார்க்கும் போது அவர் அதிகாரபூர்வமற்ற பொலிஸ்மா அதிபராக செயற்படுவதாகவே தென்படுகிறது.

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் ஓர் சாதாரண விடயம் அல்ல, இந்த நாட்டில் விசாரணை நடாத்தப்படும் முறையொன்று உள்ளது.

கர்தினால் தனது சமூகத்தின் சார்பில் குரல் கொடுக்க வேண்டும் என்பதில் பிரச்சினையில்லை. கர்தினால் பொலிஸ் மா அதிபரை விமர்சனம் செய்திருந்தார்.

அவ்வாறானால் பொலிஸ் மா அதிபர் பதவியை ஜனாதிபதி கர்தினாலிடம் வழங்குவதே பொருத்தமானது என கலகொடத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.