மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சில நீதிமன்றங்கள் அனுமதி மறுப்பு

மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சில நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளதுடன், சில நீதிமன்றங்கள் அனுமதி மறுத்துள்ளன.

நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணை இடம்பெற்றது.

மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளை நடத்த முடியாது என இதன்போது நீதவான் உத்தரவிட்டதாக கிளிநொச்சி பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிமன்றம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கடந்த 17, 23 ஆகிய திகதிகளில் வழங்கிய தடை உத்தரவை திருத்தி அமைத்து கட்டளை பிறப்பித்துள்ளது.

இதற்கமைய, தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றின் நிகழ்வினை நினைவுபடுத்தக்கூடியதாக நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியாதென நீதிமன்றம் அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியுமெனவும் முல்லைத்தீவு நீதிமன்றம், மாவீரர் நாள் தடை உத்தரவை திருத்தியமைத்துள்ளது.

மாவீரர் தினம் அனுஷ்டிப்பு தொடர்பாக மன்னார் பொலிஸாரினால் நேற்று (26) மன்னார் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் மாவீரர் நாளுக்கு தடையுத்தரவு கோரி பொலிஸாரால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நேற்று (26) நிராகரிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியுமென்பதுடன், இறந்தவர் யாராக இருந்தாலும் அவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு எனவும் முல்லைத்தீவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உயிர் நீத்த உறவுகளுக்கு இன்று நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து உயிர் நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

மாவீர்களின் கல்லறைகளை சிதைத்து நாடே வெட்கத் தலைகுனியும் அரச பயங்கரவாதத்தை அரசே செய்தது – ரெலோ யாழ். மாவட்ட அமைப்பாளர் நிரோஷ்

கேர்ப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை அரசு படைத்தரப்பின் ஊடாக சிதை;தது நாட்டின் வரலாற்றில் வெட்கக்கேடான அரச பயங்கரவாதம் ஆகும்.போரில் இறந்தவர்களைக்கூட மலினப்படுத்தும் இனவாதமும் வெறித்தனமும் அரசிடம் நிலைத்திருப்பது மனிடத்தன்மை அல்ல. என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தவிசாளர் நிரோஷ் தெரிவித்தார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் மாவீரர் தினத்தினை அனுஸ்டிக்கும் முகமாக ஈகைச்சுடர் ஏற்றிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், நினைவு கூர்தல் என்பது எமது உரிமையாகும். இன்றைய நிலையில் அவ் நினைவுகூறும் உரிமையினை இராணுவ பிரசன்னங்கள், அடாவடித்தனங்கள் ஊடாக தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு மேலாக பொலிசார் பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளனர்.

எமது மண்ணில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆயுத ரீதியிலான அடக்கு முறைகளுக்கு எதிராக இனத்தினை பாதுகாப்பதற்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவில் கொள்கின்றோம். அவர்களது தியாகங்கள் மாவீரர்களை புனிதர்களாக்கியுள்ளது. இன்றும் இந் நாட்டில் எமது இனம் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டிருக்கின்றது.

இன்றும் கோப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவ முகாம்கள் ஆக்கப்பட்டு வித்தடல்கள் விதைக்கப்பட்ட கல்லறைகளை சிதைத்து அரசு கோரத்தாண்டவமாடியுள்ளது. உலகில் எங்குமில்லாத வன்முறை எண்ணம் இறந்தவர்களின் கல்லறையை சிதைத்த அரச இயந்திரத்திடம் தான் இருக்கின்றது. எத்தனை தடவைகள் மாவீரர் துயிலும் இல்லங்களைச் அரச படைகள் சிதைத்தன என்பதை உலகமே அறியும். அவ்வாறாக கல்லறைகளை சிதைத்த உங்களால் எமது மக்களிடத்தில் இருந்து மாவீரர்களின் தியாகங்களை அகற்ற முடியவில்லை என்பதை கொடூரமாக யுத்தத்தினை முடித்து 12 ஆண்டுகளின் கழிந்த மக்களின் உணர்வுகளில் இருந்து அரசு உணர்ந்தே வருகின்றது. இதனால் அரச கட்டமைப்பு எதிர்கொண்டிருக்கும் பயப்பீதியே சந்திக்கு சந்தியும் இராணுவத்தை நிறுத்தி மக்களை அச்சுறுத்தி அடக்க நினைப்பதற்கான காரணம் ஆகும்.

போரிட்டு மரணித்த மாவீரர்கள் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிராகவோ அவர்களது உரிமைகளுக்கு எதிராகவோ அவர்களது தேசியத்திற்கு எதிராகவோ போரிடவில்லை. எமது இனத்தின் அடையாளங்களும் நிலமும் பூர்வீகமும் திட்டமிட்டு காலத்திற்குக் காலம் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட போது அதற்கு எதிராகவே போராடினர். எம் மூதாதையர் அகிம்சை வழியில் போராடிய போது அதற்கு மதிப்பளிக்காது அகிம்சை வழியையும் ஜனநாயகப் போராட்டத்தினையும் அரச பயங்கரவாதத்தின் ஊடாக நசுக்கியமையின் விளைவாகவே விடுதலைப்போராட்டம் ஆயுத மயப்படுத்தப்பட்டது.

அதில் உலகில் எங்குமில்லாத அளவுக்கு எமது மாவீரர்களின் தியாகங்கள் நிலைத்திருக்கையில் மாவீரர்களை நினைவேந்துவதும் வரலாற்றுக்கடமையும் தெய்வீகக் கடமையும் ஆகும். இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஈகைச்சுடரினை ஏற்றி உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஊடகத்துறைக்கே நீதிவழங்க முடியாத ஜனநாயகமே நாட்டில் உள்ளது – பாராளுமன்றில் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

இன்றும் கேள்விக்குட்பட்டே ஊடக சுதந்திரம் நாட்டில் உள்ளது. படுகொலைசெய்யப்பட்ட ஊடகர் விடயத்திலேயே நீதி மறுக்கப்படுகின்றபோது என்ன ஜனநாயகம் இருக்கின்றது புர்ந்துகொள்ள முடிவதாக பாராளுமன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வெளிவிவகார மற்றும் ஊடக அமைச்சுக்களுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்று வியாழக்கிழமை(25) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தொரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகத்துறையை பாதுகாப்பதும் ஊடகர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நாடு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாட்டில் போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்பாகவும் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை எதற்குமே நீதி கிட்டவில்லை.

தமிழ் ஊடகத்துறையில் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதுபோன்று சுயாதீனமாக கருத்துக்களை வெளிக்கொண்டுவந்த சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, ஊடகவியலாளர்களான நிமலராஜன்(2000);, ஐயாத்துரை நடேசன் (2004);, தர்மரட்னம் சிவராம்(2005);, சுப்பிரமணியம் சுகிர்தராஜன் (2007), செல்வராஜா ரஜீவர்மன் (2007), லசந்த விக்கிரமதுங்க(2009), பரணிரூபசிங்கம் தேவகுமார்(2009) என நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கவென அயராது உழைத்த எத்தனையோ பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதுபோன்று சுப்பிரமணியம் ராமச்சந்திரன், பிரகித் எக்னலிய கொட என எத்தனையோ ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

உதயன் மற்றும் மகாராஜா ஊடக வலையமைப்பு உள்ளிட்ட பல நிறுவனங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறாக ஊடகத்துறை மீதான அடக்கு முறைகளும் ஒடுக்குமுறைகளும் மிலேச்சத்தனமான கருத்துச் சுதந்திர மீறல்களும் இந் நாட்டின் கறை படிந்த வரலாறுகளாகக் காணப்படும் போது இந்த நாட்டில் இவை எவற்றுக்காவது நீதி வழங்கப்பட்டுள்ளதா எனக் கேட்க விரும்புகின்றோம்.

ஊடக படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு நிச்சயமாக அரசாங்கம் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடமை காணப்படுகின்றது. ஆனால் தங்களது அரசாங்கத்தின் கடந்த ஆட்சியில் ஏராளமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட போதும் அவை அனைத்தினதும் கோவைகளும் இலாவகமாக முடப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்தில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறாக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களும் எந்த நீதியும் கிட்டாது தவிக்கின்றனர்.

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் வன்னி மாவட்டத்தில் கணவன் ஊடகத்துறையில் பணியாற்றியதன் காரணமாக குடும்பத்தலைவனை இழந்து பல தாய்மார்கள் வாழ்வாதாரம் கூட இன்றி இன்னல் படுகின்றனர். தங்களது குடும்பத்தினை வாழ்வாதார ரீதியாகக் காப்பாற்ற வேண்டிய கணவனை, தந்தையை இழந்த நிலையில் மெனிகளாக நடைபிணங்களாக அழைகின்றனர். எனவே ஒவ்வொரு இழப்பினையும் சரியாக ஆராய்ந்து நீதியுடன் கூடிய தீர்வுகள் முன்வைக்கப்படவேண்டும்.

அரசாங்கம் இந் வரவு செலவுத்திட்டத்திலே கடந்த ஆட்சியில் பழிவாங்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்களுக்காக நூறு மில்லியன்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்காக சட்டத்திற்குப் புறம்பாக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள அவர்களது குடும்பங்களுக்கு நிதியைப் பெற்றக்கொடுத்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தினை வழங்கவேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை உணர்ந்து செயற்படவில்லை.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் வாழ்வாதாரமும் எவ்வாறாக அரசாங்கத்தின் கவனிப்பின்றி காணப்படுகின்றதோ அதுபோன்றே இழப்புக்களைச் சந்தித்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களும் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டணையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்களை அரசியல் ரீதியில் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. அவ்வாறான நிலைமைகளே பல தசாப்தங்கள் கடந்துள்ள போதும் ஊடகர் படுகொலை விசாரணைகள் கிடப்பில் கிடப்பதற்கான காரணங்கள் ஆகும்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் விடயத்தில், கடந்த நல்லாட்சிக்காலப்பகுதியில் நீதி விசாரணைகளுக்குப் புறம்பாக வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்களது குடும்பங்களுக்கு நலத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டன. பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டில் குழு ஒன்று அமைக்கப்பட்டு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனினும் நல்லாட்சியில் இடையில் நிலவிய குறுக்கீடுகளும் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பும் அந் நடவடிக்கைகளை நிராகரித்துவிட்டன.
அடிப்படையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நீதி விசாரணையில் தலையீடு இன்றி மேலும் ஓர் செயற்றிட்டமாக வாழ்வாதார இழப்பீடு அளிக்கும் பொறிமுறையை ஏற்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவை அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. அடிப்படையில் நேற்றுக் கூட யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஊடக அமையத்தினருடன் நான் கலந்துரையாடிய போது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதுவும் சென்றடையவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்கள்.

ஊடகவியலாளர்களைப் பொருத்தளவில் அவர்கள் மக்களின் நலன்களுக்காக தினமும் உழைப்பவர்கள். அவர்கள் இந்த கொவிட் காலப்பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிப்படையில் சுயாதீன ஊடகவியலாளர்கள் பலர் பல்வேறுபட்ட இடர்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இந்த நிலையில் அரசாங்கம் அவர்களுக்கு சலுகையளிக்க முன்வரவேண்டும்.

வரவு செலவுத்திட்டத்தில் இணைய இணைப்புக்கள் மற்றும் பொதுப்போக்குவரத்தில் கட்டணச்சலுகையளிப்பு போன்றவற்றினை ஏற்படுத்துவது சிறந்ததாகும்.

மேலும் கொழும்பில் தங்கியிருந்து தொழில் புரியும் ஆசிரிய பீட ஊடகவியலாளர்களுக்கு அரசாங்க வீட்டுத்திட்டங்களை ஏற்படுத்துமாறு கோருகின்றேன். பிராந்திய செய்தியாளர்களுக்கு இலகு கொடுப்பனவு மோட்டார் சைக்கிள் திட்டங்களை அமுல்படுத்தவேண்டும். நோய்வாய்ப்படும் ஊடகவியலாளர்களுக்கு விசேடமான காப்புறுதித்திட்டம் ஒன்றை முன்வைக்கக் கோருகின்றேன். இன்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர் தனபாலசிங்கம், சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் போன்றோர் இன்னல் படுகின்றனர். இவர்கள் போன்றவர்கள் நியாயத்திற்காக ஆற்றிய பங்களிப்பை நாம் மனதில் கொள்ள வேண்டியுள்ளது.

மேலும், ஊடகத்தறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படுவது அவசியமாகும். இன்றும் வடக்குக் கிழக்கு ஊடகவியலாளர்கள் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்படுகின்றார்கள். இது அவர்களது கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தையும் தகவல் பெறும் சுதந்திரத்தையும் மீறுவதாகும். கடந்த மாவீரர் தினத்தில் உதயன் பத்திரிகை படம் ஒன்றை வெளியிட்டமைக்காக பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் வழக்கொன்றை எதிர்கொள்ள நேர்ந்தது. இதேவேளை மாவீரர் தின காலப்பகுதியில் ஊடகவியலாளர்களின் தொழில் உரிமையினைப் பறிக்கும் வகையில் பொலிசாரினால் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.

இந் நிலைமைகள் அவர்களது தொழிலைச் சிக்கலுக்குள் தள்ளியள்ளது. எனவே ஊடகத்தறையின் சிறப்பு உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அது இந்த நாட்டில் ஜனநாயகம் ஒரளவுக்கு ஏனும் வாழ்வதற்கு அவசியமானது. இவை குறித்து இந்த பாராளுமன்றம் விசேட கவனம் செலுத்த வேண்டும். என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

சிறுபான்மை குழு என்பதை ‘தமிழ் மக்கள்’ என்று மாற்றிக்கொண்டது அமரிக்க வெளிவிவகாரச் செயலகம்

சுமந்திரன் குழுவினர், அமரிக்க ராஜாங்க திணைகளத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் பதில் உதவி செயலாளர் லீசா பீற்றர்சன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுடனும், உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவுடனும் சந்திப்புக்களை நடத்தினர். இவ்வமைப்புக்கள் இலங்கையில் தமிழ் தேசிய இனப்பிரச்சனை என்பதை ஓரம்கட்டும் வகையில் சிறுபான்மை குழுவாக தமிழ் மக்களை சித்தரிக்குமாறு தமது கீச்கத்தில் (twitter) செய்தி வெளியிட்டன. அரசியல் தீர்வுக்காக பேசச் சென்றதாக சொல்லிக்கொண்ட சட்ட நிபுணர் குழுவும் அதனை ஆமோதிக்குமாறு அச் செய்தியை தமது கீச்சக பக்கத்தில் பகிர்ந்துகொண்டனர்.

சிறுபான்மை குழு என தமிழ் மக்களை சிறுமை படுத்தி அவர்களின் அரசியல் ஸ்தானத்தை குறைமதிப்பு செய்வதை தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் {TAMIL DIASPORA ALLIANCE} என்ற புதிய அமைப்பு ஆட்சேபித்து ராஜாங்க திணைக்களத்திற்கு செய்தியிட்டது. அதனை தொடர்ந்து கீச்சகபக்கதில் சில முக்கிய பிரமுகர்களும் ஆதரவு தெரிவிக்க தொடங்கினர். பேராசிரியர் ஓரின் யிவ்டாசல் Prof Oren Yiftachel சமூக விஞ்ஞானி, அனுராதா மிட்டேல் Anuradha Mittal ஒக்லாந்து நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், மேத்தா பட்கர் Medha Patkar பிரபல மனித உரிமை, சமூக செயற்பட்டாளர், கலாநிதி சுவாதி சக்கரபூர்த்தி Dr. Swati Chakraborty என பலரும் தமது ஆதரவை தெரிவிக்க தொடங்கினர்.

இந்நிலையில் இன்று அமரிக்க ராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு செயலகத்தில் துணை செயலர் டொனால்ட் லூ {Donald Lu] வுடன் சந்திப்பு நடந்தது. இச்சந்திப்பை தொடர்ந்து ‘சிறுபான்மை குழு’ என்பதற்கு பதிலாக ‘தமிழ் மக்கள்’ என்று மாற்றம் செய்து கீச்சகத்தில் செய்தி வெளியிட்டனர்.

அதில் “நிரந்தர சமாதானம் மற்றும் அவர்களின் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முழுக் குரல் கொடுப்பதற்காக இலங்கை தமிழ் மக்களுடன் அமெரிக்கா இணைந்துகொள்கிறது” என்று தெரிவிக்கப்ட்டிருக்கிறது.

இதையடுத்து தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் என்ற புதிய இளைய தலைமைத்துவ அமைப்புக்கு அரசியல் செயல்பாட்டாளர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நன்றி-nationaltamil

ஏப்ரல் 21 தாக்குதல் வழக்கு: 25 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை தமிழில் வழங்குமாறு கோரிக்கை

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நௌபர் மௌலவி, ராஜித் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டது.

தமித் தொடவத்த, அமில ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பலத்த பாதுகாப்புடன் பிரதிவாதிகள் அனைவரும் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரத்தை தமிழ் மொழியில் வழங்குமாறு பிரதிவாதிகள் இதன்போது கோரிக்கை விடுத்ததுடன், அதனை தயார் செய்வதற்காக கால அவகாசம் அவசியம் என்பதால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள் 10 பேர் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகவில்லை.

அதற்கமைய, தமிழ் மொழி தெரிந்த சட்டத்தரணிகளை முன்வைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு அறிவித்தல் அனுப்புமாறும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

Posted in Uncategorized

இந்திய பிரதமரை சந்திக்க டில்லி விரைகிறார் பஸில்

இந்திய பிரதமரை சந்திக்க டில்லி விரைகிறார் பஸில். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்க்ஷ அடுத்த சில நாட்களில் பதுடில்லி சென்று சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தச் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.

இச்சந்திப்பு எதிர்வரும் சில தினங்களில் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின்போது இந்தியாவில் உள்ள சில சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் நிதியமைச்சர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அவர் கூறினார்.

இந்தியாவுடனான இலங்கை உறவு வலுவான நிலையில் உள்ளது. இலங்கைக்கு தேவை ஏற்படும் போது இந்தியா எப்போதும் உதவிகளை வழங்கி வருவதாக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சாதகமாக்கிக் கொள்ளவேண்டிய புதிய அரசியலமைப்பு
எனினும் இந்த விஜயத்தின் போது நிதியமைச்சர் இந்தியாவிடமிருந்து கடன்களைப் பெற உத்தேசிக்கவில்லை எனவும் பீரிஸ் குறிப்பிட்டார். பதிலாக, இந்தியாவிடமிருந்து அதிக முதலீடுகளை நிதியமைச்சர் நாடுவார். அத்துடன், அதிக சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பது குறித்தும் அவா் பேசுவார் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்

கட்சியின் தீர்மானத்திற்கெதிராக வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் கௌரவ. றிஷாத் பதியுத்தீன், கௌரவ. இஷ்ஹாக் றஹ்மான், கௌரவ. அலி சப்றி றஹீம் மற்றும் கௌரவ. முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என, நேற்று (2021.11.21) நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

குறித்த தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வட்ஸ்அப், கடிதம் மூலமாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கட்சியின் தலைவர் தவிர்ந்த ஏனைய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் தீர்மானத்திற்கெதிராக இன்று (2021.11.22) வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவாக்களித்திருந்தனர். இது தொடர்பில் நேற்று ஒத்திவைக்கப்பட்ட கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டம் இன்று கூடியபோது ஆராயப்பட்டது.

இதன்போது, கட்சியின் யாப்பில் அரசியல் அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் அடிப்படையில், கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. இஷ்ஹாக் றஹ்மான், கௌரவ. அலி சப்ரி ரஹீம், கௌரவ. முஷாரப் முதுநபீன் ஆகியோரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதெனவும், அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக் கைகளை மேற்கொள்வதெனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. இஷ்ஹாக் றஹ்மான், கௌரவ. அலி சப்ரி ரஹீம், கௌரவ. முஷாரப் முதுநபீன் ஆகியோர் இன்றைய தினம் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்படுகின்றனர். அத்துடன் அவர்களுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கை கட்சியினால் மேற்கொள்ளப்படும். என செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்தார்.

டொலர்களுக்காக காணிகளை விற்க அரசு முயற்சி

டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் நாட்டில் உள்ள 50ற்கும் மேற்பட்ட உயர் பெறுமதிமிக்க காணிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குக் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

இவற்றில் சில காணிகள் கடந்த காலங்களில் குத்தகைக்கு தயார்ப்படுத்தப்பட்டபோதிலும், கொள்வனவு செய்பவர்கள் முன்வரவில்லை என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த காணிகள் அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சிகள் அல்லது கூட்டு முயற்சிகளுக்குக் கையளிக்கப்படும் எனவும், அதில் 51 வீதமானவை அரசாங்கத்தின் வசம் இருக்கும் எனவும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறினிமல் பெரேரா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தலைநகர் மற்றும் அதற்கு அப்பால் உள்ள நிலங்களிலிருந்து 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

முன்னதாக, ஓமானில் உள்ள ஷுமுக் முதலீட்டு மற்றும் சேவை நிறுவனம், கொழும்பு சார்மர்ஸ் களஞ்சியம் மற்றும் விமானப்படைத் தலைமையகம் அமைந்துள்ள ஒன்பது ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த எதிர்பார்த்தது, ஆனால் அது நிறைவேறவில்லை.

எவ்வாறாயினும், அந்த காணிகளுக்கு மேலதிகமாக குத்தகைக்கு புதிய காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கொழும்புத் தகவல்களுக்கு அமைய, சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட கொழும்பு 5இல் அமைந்துள்ள 10 ஏக்கர் நிலம், வொக்ஸ்ஹால் வீதி மற்றும் டி.ஆர். விஜேவர்தன மாவத்தை ஆறு ஏக்கர், கொள்ளுப்பிட்டி மற்றும் , நுகேகொடை பொதுச் சந்தைகளில் ஆறு ஏக்கர், நான்கு ஏக்கர் கொண்ட புறக்கோட்டை உலக சந்தை, இராஜகிரிய, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை மற்றும் பத்தரமுல்லை ஆகிய இடங்களில் தலா மூன்று ஏக்கர், நுவரெலியா மற்றும் கண்டியில் காணிகள் மற்றும் ஏகலையில் ஐம்பத்தைந்து ஏக்கர் காணி என்பன இந்த குத்தகை காணி பட்டியலில் உள்ள சொத்துக்களில் அடங்கும்.

வெலிக்கடை சிறைச்சாலை சொத்துக்களுக்காக கொரிய முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்குப் பதிலாக, ஹொரணையில் புதிய சிறைச்சாலையொன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கலப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், அடுக்குமாடி வளாகங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஓய்வு விடுதித் திட்டங்கள், பொருட்கள் கையாளும் மையங்கள் அல்லது பல மாடி வாகன நிறுத்துமிடங்களுக்கு நிலம் 33, 50 அல்லது 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்படும். நகர அபிவிருத்தி அமைச்சு தொடர்புடைய திட்டங்களுக்குக் கடன் மற்றும் உதவிகளை வழங்கும்.

இருப்பினும், குத்தகை காலம் தொடங்கி இரண்டு வருடங்களுக்குத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், நிலம் மீண்டும் கையகப்படுத்தப்படும். எவ்வாறெனினும் இந்த விடயத்தில் கொள்வனவாளர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரில், முதலீட்டுக்கான அனைத்து உட்கட்டமைப்புகளுடன் கூடிய இடங்கள் போட்டித் தன்மையுடன் வழங்கியமையும் இதற்கு ஒரு காரணமாகும். இதற்கிடையில், கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சந்தை தற்போது நிரம்பி வழிகிறது.

எவ்வாறாயினும், நகர அபிவிருத்தி அதிகார சபை நவம்பர் 25 அன்று பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜில் (Waters Edge) “இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த” மற்றொரு முதலீட்டு மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

கலப்பு வளர்ச்சித் திட்டங்கள், அடுக்குமாடி அபிவிருத்தி, விருந்தோம்பல் மற்றும் ஓய்வு விடுதி அலுவலக வளாக அபிவிருத்தி, பொருட்களைக் கையாளும் மைய அபிவிருத்தி மற்றும் பல மாடி வாகன தரிப்பிட அபிவிருத்தி ஆகியவற்றுக்கான முன்னணி சொத்துக்கள் வர்த்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தபோது, வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கு தற்போதைய நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் ஆராயும் எனத் தெரிவித்தார்.

ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகள் உள்ளூர் மற்றும் சர்வதேச மூலங்கள் மூலம் கலப்பு அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் பரிசீலிக்கப்பட வேண்டுமென அவர் பரிந்துரைத்தார்.

13 ஆவது திருத்த சட்டத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

மாகாண சபைகளை எலும்புக்கூடுகளாக ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை. 13 ஆவது திருத்தத்திலுள்ள முழுமையான அதிகாரங்களுடன் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை(19) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்தியாவுடன் இலங்கையின் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதனை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இங்கு அழகாக தெளிவு படுத்தினார்.

எனவே அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்தினால் இந்தியாவுடனான நட்புறவை மேலும் நெருக்கமாக்க முடியும். இந்தியாவின் முழுமையான ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும்.

எனவே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி அரசாங்கத்தை கோருகின்றோம். அதேவேளை 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

மாகாணசபையை எலும்புக்கூடுகளாக நாம் ஒரு போதும் ஏற்க மாட்டோம். 13 ஆவது திருத்தத்திலுள்ள முழுமையான அதிகாரங்களுடன் மட்டுமே மாகாணசபையை நாம் ஏற்போம்.

மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களை அரசாங்கம் மீளப்பெற்றுவிட்டது.

எனவே அந்த அதிகாரங்களை அரசாங்கம் மீளவும் மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும். அதனடிப்படையிலேயே தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில் இந்த மனுக்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.

முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 பிரிகேட் தலைமையகத்துக்கு முன்பாகவும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழலிலும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய எல்லையிலும் மாவீரர் நாளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அந்த மனுவில் கூறப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 120 ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் பொலிஸார்ர கோரியுள்ளனர்.

இந்த மனு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் வி.ரி. சிவலிங்கம் முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நாளை மறுதினம் 21ஆம் திகதி தொடக்கம் வரும் 28 ஆம் திகதிவரை ஒரு வாரத்துக்கு நடத்த தடை உத்தரவு நீதிமன்றினால் நடத்தப்பட்டது.