மங்களவின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமாகியது

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பூதவுடல் இன்று அக்கினியுடன் சங்கமமாகியது.

கடந்த ஆகஸ்ட் 13 ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான மங்கள சமரவீர கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (24) காலமானார்.

இந்நிலையில், அன்னாரது இறுதிக் கிரியை இன்று (24) மாலை பொரள்ளை பொதுமயானத்தில் கொவிட் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தகனம் செய்யப்பட்டது

கொரோனாவுக்கு மேலும் 194 பேர் உயிரிழப்பு

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 194 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,560 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 393,223 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 344,381 ஆக அதிகரித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் – G.L. பீரிஸ் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் வௌிவிவகார அமைச்சர் G.L. பீரிஸிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

COVID-19 தொற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு இந்தியாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்கு அமைச்சர் G.L.பீரிஸ் நன்றி தெரிவித்ததாக வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலை பயன்படுத்தி இலங்கைக்கான ஒக்சிஜனை அனுப்பி வைத்தமைக்கும் இதன்போது அமைச்சர் தமது நன்றியை தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு இறுதியாக கூடப்பட்ட இந்து – லங்கா ஒன்றிணைந்த ஆணைக்குழுவை மீண்டும் விரைவில் கூட்டுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவினால் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள மருந்து உற்பத்தி தொழிற்சாலை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக உறவுகளின் முக்கியத்துவம் குறித்து இருதரப்பும் அவதானம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. கண்காணிப்பு செயன்முறையின் கீழ் இருக்கும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு, சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உட்பட பல விடயங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டெனிஸ் சாய்பி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பணிகள் குறித்தும், கூட்டு ஆணைக்குழுவின் நிழலின் கீழ் தொடர்புடைய பணிக்குழுக்களைக் கூட்டுவது குறித்தும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை வர்த்தக உறவுகளின் முக்கியத்துவத்தையும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் பரந்த ஒத்துழைப்பு குறித்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அமைச்சர் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் தூதுவர் டெனிஸ் சாய்பியுடன் கலந்துரையாடியுள்ளார்.

கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் நல்கிய ஆதரவுகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் நன்றிகளை இதன் போது தெரிவித்தார்.

மேலும் தடுப்பூசிகள் உலகளாவிய ரீதியில் சமமாகக் கிடைத்தல் மற்றும் ஆராய்ச்சியை ஆதரித்தல் ஆகியவற்றுக்கான கோவெக்ஸ் வசதிக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்புக்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இலங்கையின் கடல் பகுதியில் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கடல் சுற்றுச்சூழல் பேரழிவுக்குப் பின்னர், எதிர்காலத்தில் இலங்கையின் அனர்த்த ஆயத்தத்தை மேம்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் இதன்போது விளக்கமளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுக் கட்டமைப்பிற்குள் இலங்கையின் வழக்கமான ஈடுபாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. கண்காணிப்பு செயன்முறையின் கீழ் இருக்கும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு, சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உட்பட பல விடயங்களும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பணிகள் குறித்தும், கூட்டு ஆணைக்குழுவின் நிழலின் கீழ் தொடர்புடைய பணிக்குழுக்களைக் கூட்டுவது குறித்தும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை வர்த்தக உறவுகளின் முக்கியத்துவத்தை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மீண்டும் வலியுறுத்தினார். மீன்வளத் துறையிலான ஒத்துழைப்பு தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

மலையக கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்

வட, கிழக்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது போல் மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இன்று வட, கிழக்கு மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு விடயங்களுக்கு எதிராக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் வட, கிழக்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது வரவேற்க கூடிய விடயமாகும்.

அதேபோல மலையகத்திலும் இன்று எங்களுடைய மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள்.

குறிப்பாக சம்பள உயர்வு பிரச்சினை, தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சலுகைகள் கிடைக்காத சூழ்நிலை தடுப்பூசி தொடர்பாக சரியான விழிப்புணர்வு இல்லாத நிலைமை என பல்வேறு பிரச்சினைகளை எமது மக்கள் சந்தித்து வருகின்றார்கள்.

இந்த பிரச்சினைகளுக்கான தீர்வை அரசாங்கத்தின் மூலம் பெற்றுக்கொடுக்க வேண்டுமாக இருந்தால் மலையகத்தில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அவ்வாறு செயற்படுவதன் மூலம் மாத்திரமே அரசாங்கத்திற்கான ஒரு பாரிய அழுத்ததினை கொடுக்க முடியும். மலையக கட்சிகள் தனித்து நின்று செயல்படுவதால் எதனையும் சாதிக்க முடியாது.

அனைவருடனும் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்கான முன்னெடுப்புகளை உரியவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

இன்று கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகின்ற இந்த சூழ்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் பல மைல்களுக்கு அப்பால் அமைக்கப்பட்டு இருப்பதால் எங்களுடைய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே ஏனைய மாவட்டங்களை போல மலையக பகுதிகளில் இருக்கின்ற பாடசாலைகள், ஆலய மண்டபங்கள், சனசமூக நிலையங்கள் இவற்றை தனிமைப்படுத்தல் நிலையங்களாக செயற்படுத்த முடியுமாக இருந்தால் சிரமங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.

அரசாங்கம் 2000 ரூபாய் வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற இந்த சூழ்நிலையில், அந்த தொகையானது மலையகத்திலே கடந்த காலங்களில் கட்சி ரீதியாக வழங்கப்பட்டதை போல் அல்லாமல் உரியவர்களுக்கு சென்றடைவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் சரியானவர்களை இணங்கண்டு அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று அரசாங்கம் தன்னுடைய இயலாமையை மறைத்து கொள்வதற்காக அரசாங்கத்திற்குள் சிக்கல்கள் இருப்பது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றி மக்களின் உண்மையான பிரச்சினைகளை மழுங்கடிக்க செய்வதற்கு முயற்சி செய்கின்றது.

எனவே அந்த செயல்பாடை தவிர்த்து மக்களின் பிரச்சினைகளை இணங்கண்டு அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இலங்கை நாட்டிற்கு எப்போதெல்லாம் பிரச்சினைகள் ஏற்படுகின்றதோ, அனர்த்தங்கள் ஏற்படுகின்றதோ, அந்த ஒவ்வோரு சந்தர்ப்பத்திலும் இந்திய அரசாங்கம் தன்னுடைய உதவி கரத்தை நீட்டி இருக்கின்றது.

இந்த கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் எங்களுக்கு தேவையான ஒரு தொகை தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வைத்ததோடு, இன்னும் பல்வேறு உதவிகளை செய்தது.

இன்று ஒட்சிஜன் தடுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தின் கப்பல் மூவமாக 100 டன் ஒட்சிஜன் அனுப்பி வைத்துள்ளதோடு, எங்களுடைய கப்பல் மூலமாக கொண்டு வருவதற்கு 40 டன் ஒட்சிஜனையும் வழங்கியுள்ளது.

காலத்தின் தேவையறிந்து இந்திய அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. எனவே இன்னும் பல உதவிகளை இந்திய ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் எங்களுடைய வெளியுறவு கொள்கையில் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

அதனை உணர்ந்து புதிய வெளியுறவு அமைச்சர் செயல்படுவார் என எதிர்ப்பார்க்கின்றோம் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நாட்டில் வெளிநாட்டுச் செலவாணி பற்றாக்குறை! ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் ‘டொலர் வீரர்களாக” வேலை செய்யவேண்டும்!

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளின் பணியாற்றும் அனைவரையும் பணியாற்ற அழைக்க முடியாமையால் கிடைத்திருக்கும் ஓடர்களை சரியான நேரத்தில் வழங்க முடியாமல் ஆடைத் தொழில் துறை பாதிக்கப்படக் கூடுமென தைத்த ஆடைகள் ஏற்றுமதி வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் ஹேமந்த பெரேரா கூறுகிறார்.

Daily Mirror பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள அவர், தற்போது ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு வருபவர்கள்; குறைக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலை திறனில் 75 -85 வீதம் மாத்திரமே செயற்படுவதாகக் கூறியுள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில் ஆடைத் தொழிற்சாலைகளின் இலக்கை அடைவதற்காக செயற்பட வேண்டுமெனவும், குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காக ஊழியர்களை சேவைக்கு அழைக்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அனைவருக்கும் ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், தொழிற்சாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் கூடியளவு செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

நாட்டில் வெளிநாட்டுச் செலவாணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தைத்த ஆடைகளின் வருமானத்தை கூடுதலாகப் பெற வேண்டியுள்ளதாக மேற்படி சங்கத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார். எரிபொருள் இறக்குமதி மற்றும் கொவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்காக நாட்டுக்கு அதிகளவு டொலர் தேவைப்படுவதாகக் கூறும் ஹேமந்த பெரேரா, ஆடைத் தொழிற்சாலைகள் கூடிய திறனுடன் செயற்படும் பட்சத்தில் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் ‘டொலர் வீரர்’களா ஆவர் எனவும்; கூறியுள்ளார். சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர் சங்கத்தின் துணைத் தலைவராக உள்ள ஹேமந்த பெரோரா, இஸபெல்லா ஆடை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமாவார்.

தொற்றுநோய் வேகமாக வியாபிப்பதைத் தடுப்பதற்காக அரசாங்கம் கடந்த 20ம் திகதி 10 நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினாலும், ஆடைத் தொழிற்சாலைகளை மூடவில்லை. எவ்வாறாயினும், ஆடைத் தொழிற்சாலைகளை செயற்படுத்தும் போது தற்போதைய வேலைத்தளங்களில் திறனுக்கேற்ப 50 வீத ஊழியர்களை அல்லது அதற்குக் குறைவான ஊழியர்களை பணியில் அமர்த்துமாறு சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

கடந்த வருட ஒக்டோபர் மாதம் இரண்டாவது கோவிட அலை நாட்டில் வியாபிக்கக் காரணமாக இருந்தது சரியான நடைமுறைகளின்றி ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்ற வேண்டியிருந்தமைதான். சில நிறுவனங்களின் முகாமையாளர்கள் கிருமிநாசினிக்கு செலவு செய்யாமல் ஊழியர்களிடமிருந்து இலக்கை அடைந்து அதிக லாபமீட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தப் பின்னணியில், கடந்த வருடம் பங்குச் சந்தையில் அதிக லாபமீட்டிய நிறுவனங்களில் ஆடை உற்பத்தி நிறுவனங்களும் அடங்குகின்றன.

Posted in Uncategorized

ஹிஷாலினி வழக்கில் 5ஆவது சந்தேகநபர் ரிஷாட்

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றுமொரு வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைச்செய்த, தலவாக்கலை-டயகமவைச் சேர்ந்த 16வயதான ஹிஷாலினின் என்ற சிறுமி, எரிகாயங்களுக்க உள்ளான நிலையில் மரணமடைந்தார்.

அந்த வழக்கிலேயே ரிஷாட் பதியுதீன் எம்.பி. 5ஆவது சந்தேகநபராக பெயர்குறிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கின் ஏனைய சந்தேகநபர்களான ரிஷாட் பதியுதீனின் மனைவி, ரிஷாட்டின் மாமனார் மற்றும் தரகர் ஆகியோர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு

தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவதற்காக தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை 22- 08- 2021 காலை 11.00 மணியளவில் மெய்நிகர் இணைய வழியின் ஊடாக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். இச்சந்திப்பில் மாவை சேனாதிராஜா, சீ. வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன்,கோவிந்தன் கருணாகரம், என்.ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்றக் கூடிய விடயங்கள், எதிர்வரும் ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் மற்றும் தமிழ் தரப்பினரோடு அரசாங்கம் முயற்சிக்கும் பேச்சுவார்த்தை ஆகியவை முக்கிய விடயங்களாக கருத்தில் கொள்ளப் பட்டன.

ஏற்கனவே தமிழ் கட்சிகள் சந்தித்த கூட்டங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்றக் கூடிய விடயங்களை அடையாளப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் பட்டியலிடப்பட்ட விடயங்களில் மிக முக்கியமாக, முதல் கட்டமாக ஒருமித்த நிலைப்பாட்டில் இணக்கம் காணப்படுவதற்கு நான்கு விடயங்கள் அடையாளப்படுத்த பட்டன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கை, அரசியல் கைதிகள் விடுதலை, தாயகப் பரப்பில் நடைபெறும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துதல் மற்றும் அரசியல் யாப்பில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்த அரசையும் இந்தியாவையும் கோருதல் என்பவையாகும்.

13வது திருத்தச் சட்டத்தை எம்முடைய தீர்வாக ஏற்க முடியாது. ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பது சாத்தியமில்லை என்பது அனைவருடைய நிலைப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும் அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய 13ஐ நிறைவேற்ற அரசு முன் வருவது நல்லிணக்க நடவடிக்கையாக கருத முடியும் என தீர்மானிக்கப் பட்டது.

இந்த விடயங்களில் காத்திரமாக ஒருமித்து செயலாற்றுவதென தீர்மானிக்கப் பட்டது. அதேவேளை மற்ற விடயங்களையும் கட்டம் கட்டமாக ஒருமித்து எதிர் காலத்தில் முன்னெடுக்கவும் இணக்கம் காணப்பட்டது.

அரசியல் தீர்வு சம்பந்தமாக அரசுடனான பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம். ஆயினும் அது தமிழ் மக்களின் நலன்களுக்காக அமைய வேண்டும் என்பதிலும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசு தப்பிக்க இடமளிக்க கூடாது என்பதிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என முடிவு எட்டப் பட்டது. போருக்கு முன்னும் பின்னும் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்கும் பல பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவது அவசியமாகும். இது பேச்சுக்கான ஒரு நல்லிணக்க நடவடிக்கையாக அமைவதோடு சாதகமான சூழலையும் ஏற்படுத்தும். ஆகவே சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் தமிழ் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில், மேல் குறிப்பிட்ட இணக்கம் காணப்பட்ட விடயங்கள் உட்பட மற்றும் பல விடயங்களையும் உள்ளடக்கிய கோரிக்கையை முன் வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

வரவிருக்கும் ஐநா கூட்டத்தொடரில் 46/1 பிரேரணை சம்பந்தமாக ஐநா மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. இதன் பொருட்டு தமிழ் தரப்பினால் ஒருமித்து அறிக்கை ஒன்று தயாரித்து சமர்ப்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதில், 46/1 பிரேரணையில் உள்ள விடயங்களை அரசு நிறைவேற்றாமலும் அதேவேளை அவற்றிற்கு எதிராகவும் செயற்படுவதை சுட்டிக்காட்டியும் குறிப்பாக பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் விபரங்களையும் உள்ளடக்குவது என்று இணக்கம் காணப்பட்டது.

மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் மிக ஆரோக்கியமான முறையில் நடைபெற்றதோடு மீண்டும் விரைந்து சந்திப்பதற்கான ஒத்திசைவுடன் பிற்பகல் இரண்டு முப்பது மணிக்கு நிறைவு பெற்றது.

Posted in Uncategorized

திட்டமிடல் இல்லாத அரசாங்கத்தால் மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர்-ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

அரசாங்கம் தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதினால் பொதுமக்கள்தான் அதிகளவு அவதிக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, நாட்டில் தீடீரென கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்த வேளையில், மருத்துவர்களும் சுகாதார தரப்பினரும் இணைந்து நாட்டை முடக்கி கொரனாவை கட்டுப்படுத்துங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், அதன்போது அந்த விடயத்தை கவனத்தில் கொள்ளாமல் செயற்பட்டுவந்த அரசாங்கம், தற்போது வேண்டா வெறுப்பாக எத்துயர் ஏற்பட்டாலும் அதனை மக்களே எதிர்கொள்ளட்டும் என்ற விரோத சிந்தனையுடன் திடீரென நாட்டை முடக்குவதாக தெரிவித்துள்ளது என செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பினால், பொது மக்கள் பலரும் நகர்ப்பகுதியில் அதிகளவில் ஒன்று கூடியிருந்தனர். இது கொரோனா தொற்றை நிறுத்துவதற்கு பதிலாக அதிகரிப்புக்கே வழிவகுத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

அதாவது வங்கிகள், நகை அடகு வைக்கும் இடங்களில் மக்கள் அதிகமாக காணப்பட்டனர். வர்த்தக நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. இது பாரதூரமான விளைவை ஏற்படுத்துமென செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் ஒரு நாள் தவணை வழங்கி நாட்டை முடக்கியிருக்கலாம். திட்டமிடல் இல்லாத அரசாங்கத்தால் மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை நெருக்கமாக அரவணைக்க பஷில் முயற்சி

புதிய வெளியுறவு கொள்கை ஊடாக மாற்றத்தை நோக்கி இலங்கையை நெறிப்படுத்த நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ முற்படும் அதே சமயம் இந்தியா , அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளை நெருக்கமாக அரவணைக்கவும் சீனாவையும் நட்பு வலயத்தில் வைத்திருக்கவும் முற்படுவதாக கொழும்பை தளமாக கொண்டியங்கும் இராஜதந்திரிகள் குறிப்பிடுகின்றனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆரோக்கியமாக கையாள்வதன் ஊடாக மாத்திரமே குறித்த நாடுகளுடன் மீண்டும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த முடியும் என்பதுடன் செப்டெம்பர் மாதம் ஜெனிவா சவால்களை கையாள்வதற்குமாகவே வெளிவிவகார அமைச்சில் திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த மே மாதம் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்னர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் சந்தித்திருந்தார்.

மறுப்புறம் அமெரிக்க சென்ற பஷில் ராஜபக்ஷ வாஷிங்டனில் சந்திப்புகளை நடத்தியிருந்தார். தனிப்பட்ட விஜயமாக அமெரிக்கா சென்றிருந்ததாக கூறப்பட்டாலும் பெஷில் ராபக்ஷ நாடு திரும்பியதும் அவருக்கு நிதியமைச்சு பதவி வழங்கப்பட்டது.

நிதி அமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னர் கெரவலப்பிட்டி திரவ இயற்கை வாயு மின் திட்டம் அமெரிக்காவிற்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மறுபுறம் கொழும்பு துறைமுக நகர் திட்டத்தில் சீனாவின் ஆதிக்கங்கள் குறித்து பிராந்திய அளவில் பேசப்பட்ட நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கை சார்ந்த பல நாடுகளுக்கும் துறைமுக நகர் திட்டத்திற்கு உள்வாக்கப்படுவதற்காக சூழல் ஏற்படுத்தப்பட்டது.

இலங்கையுடன் திரைக்கு பின்னால் மனகசப்பினை கொண்டிருக்க கூடிய நாடுகளை சமாதானப்படுத்தும் வகையில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ செயற்பட ஆரம்பித்துள்ளார்.

குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடனான உறவுகளை புதிப்பிக்கும் வகையிலான செயற்பாடுகளை பெஷில் ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார்.

இதில் முக்கியதொரு வெற்றியாகவே மிலிந்த மொரகொட டெல்லியில் இலங்கையின் உயர்ஸ்தானிகராக பதவியேற்றார். ஏனெனில் மிலிந்த மொரகொடவின் நியமனத்தை டெல்லி நீண்ட நாட்கள் ஏற்காதிருந்தது.

ஆனால் அந்த நிலை மாற்றமடைந்து கொழும்பு – டெல்லி உறவுகளை மீள்புதுப்பிக்கும் வகையில் பல திட்டங்களை மிலிந்த மொரகொட தற்போது முன்னெடுத்து வருகின்றார். கல்கத்தாவிலும் துணை உயர்ஸ்தானிகராலயமொன்றை அடுத்த ஆண்டில் ஸ்தாபிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டெல்லியில் இலங்கையின் தலைமை உயர்ஸ்தானிகராலயம் உட்பட சென்னை மற்றும் மும்பாயில் இரு துணை உயர்ஸ்தாணிகராலயங்கள் உள்ள நிலையிலேயே நான்காவதாக கல்கத்தாவில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவை தவிர்த்து ஏனைய பன்னாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கை ஏற்படுத்திக்கொண்டுள்ள பின்னடைவுகளை மீள்சரி செய்யும் போக்கினை பெஷில் ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.

இதன் போது தமிழ் மக்களின் அரசியல் மற்றும் மனித உரிமைகளின் பொறுப்புக்கூறல் குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கவத்தில் கொண்டுள்ளமையினால் அந்த விடயங்களை கையாள்வதற்கு பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சு கைமாறுவதற்கும் இதுவே காரணம். மறுப்புறம் ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு நிறுத்தப்படவும் , பெஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் அந்த சந்திப்பு இடம்பெறவும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளன.

எனவே ஒரு புதிய மாற்றத்தை நோக்கி இலங்கையை நெறிப்படுத்த பெஷில் ராஜபக்ஷ முற்படுகிறார். இந்தியா , அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளை நெருக்கமாக அரவணைக்கும் அதே சமயம் சீனாவையும் நட்பு வலயத்தில் வைத்திருக்க முற்படுகிறார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே கொழும்பு துறைமுக திட்டத்தின் முறைப்படுத்தல் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக சீன பிரதமர் லீ கெகியாங் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கை வருகின்றார்.