கறுப்பு யூலை தேசிய வீரர்கள் தினம் லண்டனில் இன்று பொது கூட்டம்

கறுப்பு யூலை தேசிய வீரர்கள் தினம்

லண்டனில் இன்று பொது கூட்டம்
25-07-2021
நேரம்:மாலை 6 மணி
இடம்:Pinner Green Social Club,Greenwood Hall,Rickmansworth RD, Pinner,HA5 3TJ.
Nearest underground: Northwood hill (metropolitan line)

தலைவர் தங்கதுரை தளபதி குட்டிமணி ஆகியோரின் புதல்வர்கள் இருவரும்  ஈகை சுடர் ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகும்

1.ஈழத்தமிழரின் இன்றைய சவாலாக உள்ள இராஜதந்திர அணுகுமுறை

2.தென் இலங்கையை விளங்கி கொள்வதும் வினையாற்றலும்

என்றதலைப்பில் அரசியல் ஆய்வாளர்கள் உரையாற்றுவார்கள்.

வெலிக்கடை சிறைப்படுகொலையின் போது உயிரிழந்த தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னணி போராளிகளான ஜெகன்,தேவன்,நடேசுதாசன்,குமார்,சிவபாதம்,சிறிக்குமார்,மரியாம்பிள்ளை,குமாரகுலசிங்கம் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் அஞ்சலி.

ரெலோ பிரித்தானிய கிளை

1983 கறுப்பு ஜூலையும்! ஆயர் லக்ஸ்மன் விக்கிரமசிங்கவும் – வீரகேசரி

1983 (கறுப்பு ஜூலை). 38 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ‘இனப்படுகொலை’ என்றுமே மறக்கமுடியாது. ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் நினைவு கூரப்படுகிறது.

1956 ஆம், 1958 ஆம், 1977 ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராக பேரினவாதிகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை விட மிகக்கொடுமை! பயங்கரமானது.இந்நாட்டில் தமிழர்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும்,பாதுகாப்பாகவும் வாழ முடியாது என்ற நிலைமையை உருவாக்கிய நிகழ்வுகள்.

தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்கவும், இந்தியாவை இலங்கை இனப்பிரச்சினையில் நேரடியாக தலையிடுவதற்கும் வழிவகுத்தது.

அன்று ஆட்சியிலிருந்தவர்களோ, சிங்களத்தலைவர்களோ, பௌத்த மதகுருமாரோ,பௌத்த அமைப்புக்களோ இச்சம்பவங்களுக்காக மன்னிப்பையோ, வருத்தத்தையோ தெரிவிக்கவில்லை. ஆனால், அங்கிலிக்கன் (Anglican) திருச்சபையின் குருநாகல் மறை மாவட்டத்தின் மறைந்த ஆயர் மேதகு லக்ஸ்மன் விக்கிரமசிங்க ஆண்டகை இதனை வன்மையாக கண்டித்ததுடன் சிங்கள மக்கள் சார்பில் மன்னிப்பும் கோரியிருந்தார்.

 

2009 இறுதி யுத்தத்தின்போது மகிந்த ஆட்சியில் தமிழர்கள் எப்படி,யாரால் வன்னியில் கொல்லப்பட்டனர் என்ற விபரங்களை துணிந்து வெளிக்கொண்டுவந்த மன்னார் ஆயரான மறைந்த மேதகு இராயப்பு யோசப் ஆண்டகைக்கு முன்னரே ஒரு அங்கிலிக்கன் சிங்களவரான ஆயர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க 1983 ஆடி மாதம் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சியில் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பேரழிவுகள் எனத்துணிந்து வெளிக்கொண்டுவந்ததுடன், தமிழ் மக்களுக்காகவும் குரல் எழுப்பினார்.

 

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய கிறிஸ்தவ மாநாட்டிலும் இத்துயர நிகழ்வுகளை எடுத்துக்கூறியிருந்தார். மன்னார் ஆயர் தமிழன் என்பதால் புலிச்சாயம் பூசினார்கள். ஆனால்,ஆயர் லக்ஸ்மன் சிங்களவர் என்பதால் மௌனம் காத்தனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி அரசு கறுப்பு ஜூலை வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவதற்கும் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்த ஆயர் விக்ரமசிங்க, இதற்கு நீதிவிசாரணை வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், நட்ட ஈடு வழங்கவேண்டும் எனவும் கூறியிருந்தார்.

1977 வன்முறைகளுக்கு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன நியமித்த நீதியரசர் சன்சோனி ஆணைக்குழு விசாரணையில் நாடு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான வன்செயல்கள், யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் அத்துமீறல்கள் வெளிவந்தன. யாழ். வர்த்தக நிலையங்கள் எரிப்பு போன்றவையும் தெரியவந்தது. யாழ்.சுகாதாரப் பணிப்பாளரான டாக்டர் தசநாயக்கா என்ற சிங்களவர் நேரில் கண்டவற்றை துணிந்து கூறியதால் ,அவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. வவுனியாவில் அவரது கார் தாக்கப்பட்டது.

1983 கறுப்பு ஜூலை சம்பவங்களுக்கு ஆணைக்குழுவை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன நியமித்து விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை. ஜே.ஆர்.ஜெயவர்த்தன, அவரது சில அமைச்சர்கள், ஐக்கிய தேசியக்கட்சியின் குண்டர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததால் விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கவில்லை என தமிழர் விடுதலைக்கூட்டணி செயலர் அ.அமிர்தலிங்கம் கூறியிருந்தார்.

இலங்கையில் அங்கிலிக்கன் திருச்சபைக்கு கொழும்பு, குருநாகல் ஆகிய இரு மறை மாவட்டங்கள் . இரு ஆயர்களின் கீழ் இயங்கி வருகின்றன. (ஆங்கில திருச்சபை, இலங்கை திருச்சபை) பிரதமர் பண்டாரநாயக்கா, தந்தை செல்வநாயகம், அமைச்சர்கள் லக்ஸ்மன் கதிர்காமர், பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற பல சிங்கள தமிழ் அரசியல் தலைவர்கள் இத்திருச்சபையை சேர்ந்தவர்கள். அங்கிலிக்கன் திருச்சபைக்கு சொந்தமான பல பாடசாலைகள் நாடு முழுவதும் உள்ளன. கல்கிசை சென்.தோமஸ், யாழ்.சென்.ஜோண்ஸ், கண்டி திரித்துவ கல்லூரிகள் இச்சபையால் நிர்வகிக்கப்படும் தனியார் பாடசாலைகள்.

1983 ஜூலை இனவன்முறை பதற்றமான சூழலில் துணிந்து செயற்பட்ட ஒரு சிங்கள மதத்தலைவரே குருநாகல் ஆயர் மேதகு லக்ஸ்மன் விக்கிரமசிங்க.

இவர் யார் ? முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சிறிய தந்தையும், ஜனாதிபதி ஜே.ஆரின் மைத்துனர் முறையானவர். 1983 கலவரங்களுக்கு எனது நெருங்கிய உறவினர்களுக்கு தொடர்பு என பகிரங்கமாக குற்றம் சுமத்தியவர்.” Two of my Closest Family Members were involved in the Murderous Tamil Riots of 1983 ” Sobbed an Inconsoble – Lacksman Wickramasinghe – Bishop of Kurunagale- The RW File ( Part 2).

 

1983 ஜூலை லண்டனில் இதயநோய்க்கு மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த ஆயர் லக்ஸ்மன் விக்ரமசிங்க அங்கிருந்தே கறுப்பு ஜூலை தமிழர்களின் உயிரிழப்புக்களை, சொத்தழிப்புக்களை அறிந்து, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவையும் அவரது ஆட்சியையும் கண்டித்தார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ்க்கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை அரசின் திட்டமிட்ட செயலே எனக்கூறி, அதற்கு வருத்தமும் தெரிவித்திருந்தார். லண்டனில் சிகிச்சை முடிந்து நாடு திரும்பி, கொழும்பு மாவட்டத்தில் அழிக்கப்பட்ட தமிழர்களின் இல்லங்கள், எரிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள்,தொழிலகங்களை நேரடியாக சென்று பார்வையிட்டு கண்கலங்கினார்.

கொழும்பில் தமிழர்கள் அகதிகளாக தஞ்சமடைந்த முகாம்கள், பாடசாலைகளுக்கும் விஜயம் செய்து ஆறுதல் கூறினார். அதேபோலவே மலையகத்துக்கும் சென்று கண்டி, மாத்தளை பிரதேசங்களில் பாதிக்கப்பட்டு முகாம்களில் இருந்த தமிழர்களை சந்தித்து கவலையும், ஆறுதலும் கூறினார். மலையக தமிழர்கள் தனிநாடு கேட்டார்களா ? என்று அங்கு வந்த அதிகாரிகள், பொலிசாரிடம் கேள்வி எழுப்பினார்.

அன்றைய பாதுகாப்பு சூழலில் பலர் யாழ்ப்பாணம் போகவேண்டாம் என்று தடுத்தும் துணிந்து ரயில் மூலம் யாழ்ப்பாணம் சென்ற ஒரு சிங்கள மதத்தலைவர். எனக்கு யாழ்ப்பாணத்தில் பிரச்சினையில்லை, இங்குதான் பிரச்சினை என்றார். யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் உரையாடி ஆறுதல் கூறினார். அங்கிலிக்கன் திருச்சபையின் நிவாரணப்பணிகளையும் முன்னெடுத்தார்.

1982 டிசம்பர் 8 இல் ” லண்டன் ரைம்ஸ் ” பத்திரிகைக்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சர்வாதிகார ஆட்சியை குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதினார். 1977 பொதுத்தேர்தலில் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சர்வாதிகார ஆட்சி ! சிறிமாவின் குடியுரிமையை பறித்து ஜனாதிபதி தேர்தலில் சிறிமாவை போட்டியிடாது தடுத்தது! அவருக்கு எதிராக விசாரணை ஆணைக்குழுவை நியமித்தது! சர்வசன வாக்கெடுப்பு! பாராளுமன்ற கால நீடிப்பு! அவசரகால சட்டம்! பத்திரிகைகளுக்கு சீல்! சுதந்திரக்கட்சி பிரமுகர்கள் கைது! ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக கூட்டம் நடத்தியவர்கள் மீது குண்டர்கள் தாக்குதல்! போன்ற பல அநீதியான சம்பவங்களை அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அப்பத்திரிகை பிரசுரிக்க மறுத்துவிட்டது.பின்பு ” லங்கா கார்டியன்” பத்திரிகை 1984 பெப்ரவரி 15 ஆயரின் மறைவுக்கு பின்னர் அதனை பிரசுரித்தது. 1981 திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையை பறிப்பதற்கு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன நடவடிக்கை எடுத்தபோது மனித உரிமை அமைப்பின் தலைவராக அதனைக் கண்டித்தும், நிறுத்துமாறும் அவருக்கு கடிதமூலம் வேண்டுகோள் விடுத்தார்.

1980 வேலை நிறுத்தம் செய்ததால் அரச ஊழியர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் பதவி நீக்கம் செய்யப்பட்டதையும் ஆயர் கண்டித்தார். இனங்களுக்கு இடையில் ஒற்றுமை,சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை பெரும்பான்மையினத்தவர்கள் வழங்கவேண்டிய அவசியம் தொடர்பாக கருத்தரங்குளை பல தடவைகள் சிங்கள பேராசிரியர்கள், சிங்கள தமிழ் அரசியல் தலைவர்களை அழைத்து நடத்தியிருந்தார்.

குருநாகல் ஆயர் என்ற முறையில் மலையக பிரதேசங்களுக்கு செல்லும்போது தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டு வேதனைப்பட்டார். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்புகளான அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் அவசியத்தையும் அடிக்கடி கூறிவந்தார். இன்றுவரை அந்த மக்கள் பல்வேறு துன்பங்கள் மத்தியில் வாழுகின்றனர்.

1983 செப்டம்பர் 23 இடம்பெற்ற குருநாகல் மறை மாவட்ட குருக்கள் கூட்டத்தில் பேசியபோது, ஆடி மாதம் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்கொடுமைகளை சுட்டிக்காட்டியதுடன், இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார். சிங்கள மக்கள் கறுப்பு ஜூலை சம்பவங்களுக்காக முதலில் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

1983 ஜூலை சம்பவங்களுக்கு நீதிவேண்டும்.குற்றம் செய்தவர்களை இறைவன் தண்டிப்பான் இன்று தமிழர்களுக்கு ! நாளை உங்களுக்குள்ளும் ஏற்படும் என்று ஒரு வழிபாட்டு நிகழ்வில் கூறியிருந்தார். அவர் கூறியபடி ஐக்கிய தேசியக்கட்சி கடந்த தேர்தலில் ஒரு இடத்தையும் பெறவில்லை. அவரது பெறாமகன் ரணில் விக்கிரமசிங்கவே படுதோல்வியடைந்தார். 1983 ஆடி தமிழர்களை கொன்று எரித்ததுபோல, 1989 களில் தெற்கில் வீதிகளில் எரிந்த சடலங்கள். காணாமல்போனோர். அரசியல் படுகொலைகள். வன்முறைகள்.பாதாள உலக குழுக்கள் சண்டை எனப்பல தொடர்வதை காணமுடிகிறது.

மட்டக்குளி- எலி ஹவுஸ் வீதியில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் 1970 களில் தமிழில் திருப்பலி,வழிபாடுகள் நடத்துவதற்கு சில சிங்கள கத்தோலிக்கர்கள் தடை விதித்து,பெரும் பிரச்சினைகள் தோன்றின.பின்னர்,சில காலத்தால் நிலைமை வழமைக்கு வந்து தமிழிலும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

1983 ஒக்டோபர் 23 திடீர் இதயநோயால் 56 வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.”ஆயர் லக்ஸ்மன் விக்கிரமசிங்காவிடம் கிறிஸ்துவை கண்டேன்!

தமிழ் மக்களுக்காக துணிந்து குரல் கொடுத்து பணியாற்றிய மனிதநேயமுள்ள மதகுரு! அவரைப்போன்ற சிங்கள மதத்தலைவர்கள் இருந்தால் நாட்டில் இனங்களுக்கிடையே பிரச்சினைகளும்,கலவரங்களும் ஏற்பட்டிருக்காது என தமிழர் விடுதலைக்கூட்டணி செயலர் அ.அமிர்தலிங்கம் கூறியிருந்தார்.

மலையக தோட்டத்தொழிலாளர்கள் என்றுமே மறக்கமுடியாத ஒரு கிறிஸ்தவ துறவி என மறைந்த அமைச்சர் சௌ.தொண்டமான் இரங்கல் தெரிவித்தார். 2019 ஏப்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கையில்லை என கொழும்பு பேராயர் கருதினால் மல்க்கம் ரஞ்சித் ஆண் டகை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்.

ஆனால்,வன்னி இறுதிப்போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஒரு கண்டனத்தையும் வெளியிடவில்லை. இதற்கு உள்நாட்டு விசாரணையை ஆதரித்தவர்.1995 சந்திரிகா ஆட்சியில் நவாலி புனித பீட்டர் தேவாலயத்தின் மீது புக்கார குண்டு வீச்சு விமானம் நடத்திய தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் 125 பேர் கொல்லப்பட்டனர்.பலர் காயம். 1993 நவம்பர் ஐ.தே.க. ஆட்சியில் யாழ்.புனித யாகப்பர் ஆலயத்தின் மீதான விமானத்தாக்குதல்10 பேர் பலி,பலர் காயம்.இதேபோல வடகிழக்கில் பல கிறிஸ்தவ வணக்க தலங்கள் அழிக்கப்பட்டன.தென் பகுதி கத்தோலிக்க ஆயர்கள் எவருமே இவற்றைக்கண்டிக்கவில்லை.

1985 ஜனவரி 5 மன்னார் வங்காலை புனித அன்னம்மாள் தேவாலய பங்குத்தந்தை வண.மேரி பஸ்ரியன் அடிகளார் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு சடலம் படையினரால் எடுத்துச்செல்லப்பட்டதை பலரும் கண்டனர்.இதனை மன்னார் ஆயர் இல்லமே முறையிட்டது.இவர் இந்தியாவுக்கு கடல் வழியாக தப்பிச்சென்றுவிட்டதாக தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலி தெரிவித்தார்.வண.மேரி பஸ்ரியன் அடிகள் இந்தியாவில் நலமாக இருப்பதாக அன்றைய கொழும்பு பேராயர் நிக்கலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ வத்திக்கானுக்கு அறிவித்திருந்தார்.

வண.மேரி பஸ்ரியன் தமிழ் போராளிகளுக்கு ஆதரவாக செயற்பட்டாரா? மன்னாரில் படையினரின் மனித உரிமை மீறல்களை மேலிடத்துக்கு முறையியிட்டது,படையினரால் கொல்லப்பட்ட மக்களின் சடலங்களை அப்புறப்படுத்தியது, கொல்லப்பட்ட மெதடிஸ்த திருச்சபை குரு வண.ஜெகராசசிங்கம், மனைவி சடலங்களை உறவினரிடம் ஒப்படைத்தது.இவை குற்றமா? தென்பகுதி கத்தோலிக்க ஆயர்கள் இவற்றை அறிந்திருக்கவில்லையா.

சிலாபத்தில் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வந்த பரதகுல தமிழ்க்குடும்பங்கள் இன்று சிங்கள குடும்பங்களாகியுள்ளன. சிலாபம் மறை மாவட்டத்தின் மறைந்த ஆயர்.மேதகு எட்மன்ட் பீரிஸ் ஆண்டகை இங்கிருந்த நாற்பத்தெட்டு தமிழப்பாடசாலைகளை ( றோ.க.தமிழ் பாடசாலை)சிங்கள மொழி மூல பாடசாலைகளாக மாற்றிவிட்டார்.

 

சிலாபம் மறை மாவட்டம் முன்னர் யாழ்.மறை மாவட்டத்துடன் இணைந்திருந்தது.மறைந்த பேராயர் நிக்கலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ தமிழ்க்குடும்பத்தை சேர்ந்தவர். சிலாபம்,நீர்கொழும்பு, பிரதேசங்களில் முன்னர் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாறிவிட்டனர்.இரு மொழிகளையும் சிலர் பேசுகின்றனர்.

வடக்கு,கிழக்கு பிரதேச கத்தோலிக்க மக்களுக்காக தனியாக ஒரு உயர் மறை மாவட்டத்தை ( Archdiocese) 1975 இல் ஏற்படுத்தவேண்டும் என மறைந்த யாழ்.ஆயர்.மேதகு தியோகுப்பிள்ளை ஆண்டகை வத்திக்கானிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.ஆனால்,இதனை அன்றைய கண்டி ஆயர் லியோ நாணயக்கார எதிர்த்தார். இன்று வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1983 கறுப்பு ஜூலைக்கு பின்னர் கண்டி தேசிய குருமடத்தில் தமிழ் குருமாணவர்கள் கற்பதற்கு அச்சம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து யாழ்.ஆயர்.மறைந்த வ.தியோகுப்பிள்ளை ஆண்டகை வத்திக்கானின் அனுமதியுடன் யாழ்.கொழும்புத்துறையில் தமிழ் கத்தோலிக்க குருமாணவர்களுக்காக புனித சவேரியார் குருத்துவ கல்லூரியை ஆரம்பித்தார்.இதற்கும் தென் பகுதி ஆயர்கள் எதிரப்புத்தெரிவித்தனர்.

இறுதிப்போரில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்கள் குறித்தும் தென்பகுதி கத்தோலிக்க ஆயர்கள் எதுவித கருத்துக்களையும் கூறவில்லை.

அங்கிலிக்கன் ஆயர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க எம்மத்தியில் இன்று இருந்தால்,சிறுபான்மை முஸ்லிம்களுக்காகவும் குரல் எழுப்பியிருப்பார்.யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகளாகிவிட்டன.அவர் கூறியபடி இனப்பிரச்சினையோ,தமிழ் மக்களின் பிரச்சினைகளோ இன்னும் தீர்க்கப்படவில்லை.

 

Posted in Uncategorized

கறுப்பு ஜூலையும் இன்றைய நிலைமையும் – எம்.எஸ்.எம். ஐயூப்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தை எதிர்த்து, ஆசிரியர் தொழிற்சங்கங்களும் அனைத்துப்பல்கலைகழக மாணவர் ஒன்றியமும் இணைந்து, கடந்த எட்டாம் திகதி பாராளுமன்ற சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்தின.

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்களை, பொலிஸார் கைது செய்தனர். நீதிமன்றம் அவர்களைப் பிணையில் விடுதலை செய்ததன் பின்னர், பொலிஸார் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்காகப் பலாத்காரமாக அழைத்துச் சென்றனர்.

இந்தப் பின்னணியில், அடக்குமுறை, விலைவாசி உயர்வு போன்ற நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளை முன்னிட்டு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர், கடந்த ஒன்பதாம் திகதி சுதந்திர சதுக்கத்தின் முன்னால் மௌன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ் மொழியில் சுலோக அட்டைகள் இருக்கவில்லை. இதற்கு, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனும், எதிர்ப்புத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதையடுத்து, கடந்த 17 ஆம் திகதி சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகருமான கரு ஜயசூரிய, ஜனநாயகத்தைப் பாதுகாப்பது தொடர்பாகக் கலந்துரையாட, சகல எதிர்க்கட்சிகளையும் அழைத்து இருந்தார். அக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளைத் தவிர, ஏனைய சகல எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அந்தக் கூட்டத்தில், நான்கு முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்தல்; பொருளாதார முன்னேற்றம்; மனித உரிமைகளை நிலைநாட்டல்; நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாத்தல் ஆகியன நான்கு விடயங்களும் வலியுறுத்தப்பட்டு இருந்தன.

கூட்டத்தில் உரையாற்றிய சுமந்திரன், இவ்வாறு வலியுறுத்தப்பட்ட நான்கு விடயங்களில், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் உள்ளடக்கப்படவில்லை எனக் கூட்டத்தின் அமைப்பாளர்களை விமர்சித்தார். மனோ கணேசனும் அதே கருத்தைத் தெரிவித்தார்.

இந்த வாரம், சிங்கள அரசியல்வாதிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் ​வெவ்வேறு அரசியல் கோணங்களில், 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடளாவிய ரீதியில், தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகளையும், ஏனைய வன்செயல்களையும் நினைவு கூர்கின்றனர். அந்தக் கொடுமைக்கு, 38 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், நாட்டில் அரசியல் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதை, இந்த இரு சம்பவங்களும் மிக அருமையாக எடுத்துரைக்கின்றன.

2000 ஆம் ஆண்டு, இனப்பிரச்சினையின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும். அந்த ஆண்டின் இறுதியில், இரு பிரதான கட்சிகளும் தற்காலிகமாகவேனும் இனவாதத்தை அரசியல் கருவியாகப் பாவிப்பதை நிறுத்திக் கொண்டன. அதேபோல், தமிழ் அரசியலிலும் பாரியதொரு மாற்றம் ஏற்பட்டது. ‘துரோகிகள்’ என, ஏனைய தமிழ்க் கட்சிகளை அழைத்த புலிகள், அக்கட்சிகளை அரவணைத்துச் செல்ல முன்வந்தது. அந்தத் தமிழ் கட்சிகளும், புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி என்று ஏற்றுக் கொண்டன.

2000ஆம் ஆண்டு வரை, நாட்டில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக மாறி மாறி இனவாதத்தைத் தூண்டி, தமிழர்களுக்கு சிறிதளவேனும் உரிமைகளை வழங்க அரசாங்கங்கள் எடுத்த முயற்சியைத் தடுத்தன. ஆனால், 2000ஆம் ஆண்டு இறுதியில், இந்த நிலைமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அதற்குப் பின்னர் ஜனாதிபதி சந்திரிகா, நோர்வே மத்தியஸ்தத்துடன் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எடுத்த முயற்சியை, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கவில்லை.

அதையடுத்து, அரசியலமைப்பின் படி பாதுகாப்புத்துறை ஜனாதிபதியின் கீழ் இருக்க வேண்டிய விடயமாக இருந்தும், அதை ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஒருவரிடம் வழங்க, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இணங்கினார். அதேபோல், ஐ.தே.க அரசாங்கம் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதையும் அவர் எதிர்க்கவில்லை.

ரவி கருணாநாயக்க போன்ற ஐ.தே.க தலைவர்கள், சந்திரிகாவை தனிப்பட்ட முறையில் ஆத்திரமூட்டியதை அடுத்தே, அவர் 2004ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஐ.தே.க அரசாங்கத்தைக் கலைத்தார்.

சந்திரிகாவின் காலத்துக்குப் பின்னர், மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்திலிருந்தே, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இனவாதத்தை மிக மோசமாகப் பாவித்து வருகிறது. எவ்வாறாயினும் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஐ.தே.கவும் அதிலிருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தியும் இனவாதத்தை அரசியல் கருவியாகப் பாவிக்கவில்லை.

அவ்விரு கட்சிகளும், இனவாதத்தை அரசியல் கருவியாகப் பாவிக்காவிட்டாலும் அக்கட்சிகளும் இனங்களுக்கும் மதங்களுக்கும் அப்பாற்பட்ட கண்ணோட்டத்தைக் கொண்டு இருப்பதாகவோ, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் மீது, அக்கறை கொண்டவை என்றோ கூற முடியாது. ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் அதையே எடுத்துரைக்கின்றன.

இனப்பிரச்சினையின் ஒரு திருப்பு முனையாகிய, 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரங்கள் இடம்பெற்று 38 ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையிலும், நாட்டின் நிலைமை இதுவாகும்.

பெரும்பான்மைத் தலைவர்கள் மட்டுமன்றி, சிறுபான்மை அரசியல்வாதிகளிலும் பெரும்பாலானோர் இன்னமும் 1983ஆம் ஆண்டிலேயே வாழ்கின்றனர். 1983ஆம் ஆண்டளவில், உலகில் அமெரிக்கா தலைமையிலும் சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலும், இரண்டு பிரதான அரசியல் அணிகள் இருந்தன. இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன, அமெரிக்க அணியையும் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, சோவியத் ஒன்றியத்தையும் ஆதரித்தனர்.

இலங்கையில் தமிழ் இயக்கங்கள் சோஷலிஸத்தை ஆதரித்தன. அவற்றின் தலைவர்கள் முன்னாள் சோவியத் ஜனாதிபதியான ஜோசப் ஸ்டாலினின் வழியிலேயே சுயநிர்ணய உரிமையை விளக்கினர். ஜே. ஆரின் அமெரிக்க ஆதரவுக் கொள்கையால் ஆத்திரமடைந்து இருந்த இந்திராவுக்கு, தமிழ் இயக்கங்களுக்கு பணத்தால் ஆயுதத்தால் உதவிகள் வழங்கி, ஜே ஆரை அசௌகரியத்துக்கு உள்ளாக்க அந்த நிலைமை வசதியாகியது.

உண்மையிலேயே, அன்றும் இந்தியா இலங்கையில் தனித் தமிழ் நாடொன்று உருவாவதை விரும்பவில்லை. 1988 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டின் போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.கே சிங், “இலங்கையில் தனித் தமிழ் நாடொன்று உருவானால் அது, தமிழ் நாட்டிலும் பிரிவினைவாதத்தை மீண்டும் தூண்டிவிடும். எனவே, இலங்கையில் தனித் தமிழ் நாடொன்று உருவாவதற்கு இந்தியா இடமளிக்காது” என்று கூறியிருந்தார்.

அன்றைய பூகோள அரசியல் நிலைமை காரணமாக, இலங்கைக்கு எதிரான நடவடிக்கையாக மட்டுமே, தமிழ் இயக்கங்களுக்கு பணத்தாலும் ஆயுதத்தாலும் பயிற்சியாலும் இந்திரா உதவி வழங்கினார்.

1983ஆம் ஆண்டு ஜூலையில் உலகிலும் பிராந்தியத்திலும் இலங்கையிலும் இருந்த நிலைமை இன்று இல்லை. இன்று இந்தியா, அமெரிக்க அணியிலேயே இருக்கிறது. இன்றும் இலங்கை, இந்தியாவுக்கு எதிரான அணியொன்றை (சீன அணி) ஆதரித்த போதிலும் இந்தியா, இலங்கைக்கு எதிராகப் பழைய பிரிவினைவாத ஆயுதத்தைக் கையிலெடுக்கத் தயாராக இல்லை.

இதைத்தான் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயமென்றை மேற்கொண்டு இருந்தபோது, 1987ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்டதற்குப் பின்னர் நிலைமைகள் மாறியுள்ளன. (Much water has flowed under the bridge since 1987 ) என, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் கூறியிருந்தார்.

“தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, புதிதாக உருவாகியுள்ள நிலைமைகளையும் சந்தர்ப்பங்களையும் பாவிக்க வேண்டும்” எனவும் அவர் அறிவுரை வழங்கி இருந்தார். “வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் விடயத்தில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்தியா உதவ வேண்டும்” என்று பிரேமசந்திரன் கூறிய போதே, அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று, தமிழ்த் தலைவர்கள் கூறும் போது, தமிழர்கள் எதைக் கேட்கிறார்கள் என்று வினவும் பலர், பெரும்பான்மை மக்கள் மத்தியில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இனவாதிகள் அல்லர்; அதேவேளை, இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று, தமிழர்கள் தனித் தமிழ் நாட்டையே கேட்கிறார்கள் என நினைப்போரும் உள்ளனர்.

அதாவது, 30 வருடத்துக்கு மேலாக ஆயுதப் போர் நடத்தி, பல்லாயிரக் கணக்கான உயிர்களைத் தியாகம் செய்து, தமிழர்கள் வழங்கிய செய்தி, போதியளவில் தெற்கே சென்றடையவில்லை என்பதே, இதன் யதார்த்தம் ஆகும். அந்த மக்களும், இன்னமும் 1983ஆம் ஆண்டில் நினைத்ததைப் போலவே நினைக்கிறார்கள்.

பெரும்பான்மையினத் தலைவர்களும் மாறவில்லை; பெரும்பான்மை மக்களது வாக்குகளால் பதவிக்கு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து அவர்களும் விடுபடவில்லை.

தற்போது தமிழ் பேசும் மக்களின் ஆதரவைப் பெற்று வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களும், இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறப்பட்ட இரண்டு சந்தர்ப்பங்களின் போது, தமிழ் மொழியையும் தமிழ் மக்களின் பிரச்சினையையும் மறந்து விட்டனர் என்றால், 30 ஆண்டு காலப் போருக்கு முன்னர் அதாவது, 1983ஆம் ஆண்டு இருந்த நிலையிலேயே அவர்களும் செயற்பட்டு வருகிறார்கள் என்பதையே அது எடுத்துக் காட்டுகிறது.

அவர்களை மட்டும் குறைகூறிப் பயனில்லை. இந்த நிலைமையைச் சீர்செய்ய தமிழ், முஸ்லிம் தலைவர்களிடம் என்ன உத்தி இருக்கிறது என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

Velikkadai Sirai Padukolai

தேசிய வீரர்கள் தினம் வடக்கு கிழக்கில் பல இடங்களில் போஸ்டர்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் ஏற்பாட்டில் வெலிக்கடை சிறைப்படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இந்த பதாகைகள் வடக்கு கிழக்கில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

வெலிக்கடை சிறைப்படுகொலையின் போது உயிரிழந்த தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னணி போராளிகளான ஜெகன், தேவன்,நடேசுதாசன், குமார்,சிவபாதம்,சிறிக்குமார்,மரியாம்பிள்ளை,குமாரகுலசிங்கம் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக இந்த போஸ்டல்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தமது தலைவர்கள் வெலிக்கடை வெஞ்சிறையில் படுகொலை செய்யப்பட்ட தினமான யூலை 25 இருந்து 27 திகதி வரை தமிழ் தேசிய வீரர்கள் தினம் ஆக பிரகடனப்படுத்தி நினைவுகூரப்பட்டு வருகிறது.

Posted in Uncategorized

வடக்கின் புதிய பிரதம செயலரை மாற்றுங்கள்; மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள்

வடக்கு மாகாண பிரதம செயலாளர் நியமனத்தில் உடனடியாக மாற்றம் செய்யுமாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பத் தீர்மானித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்துக்குப் புதிய பிரமத செயலாளராக சமன் பந்துலசேன ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டுள்ளார். இது தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி கலந்துரையாடி யிருந்தனர்.

இதன் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் 13 பேர் நேரில் சமூகமளித்து ஜனாதிபதிக்கு அனுப்பும் கடிதத்தில் ஒப்பமிட்டனர். 14 பேர் தொலைபேசி மூலமாக இந்தக் கடிதத்துக்கு ஆதரவைத் தெரிவித்தனர்.

நிர்வாக மொழியான தமிழ் மொழியைக் கொண்ட வடக்கு மாகாண சபையில் மக்களினதும் அதிகாரிகளினதும் தொடர்பாடல் கருதி இப் பதவிக்குப் பொருத்தமான தமிழ் அதிகாரிகளில் ஒருவரை நியமித்து உதவுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்று கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Posted in Uncategorized
Velikkadai Sirai Padukolai

முல்லைத்தீவில் ரெலோ கறுப்பு யூலை தேசிய வீரர்கள் தினம் ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து விசாரணை

தமிழ்த் தேசிய வீரர்கள் தினம் ஜூலை 25 தொடக்கம் 27 வரை நினைவுகூரப்பட்டு வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதில் பல பதாகைகள் கிழித்து எறியப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான கண்காணிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ) கட்சியின் ஏற்பாட்டில், வெலிக்கடை சிறைப்படுகொலையின் போது உயிரிழந்த குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளின் 38ஆம் ஆண்டு நினைவேந்தலை அனுஷ்டிக்கும் வகையில் இந்த பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

இலங்கையில் அர்த்தபூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம் – கறுப்பு ஜூலையை முன்னிட்டு கனடா பிரதமர் அறிக்கை

இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுவதற்கு அனைவரினதும் நம்பிக்கையை பெறக் கூடிய அர்த்த பூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் சிறீலங்கா அரசால் முன்னெடுக்கப் பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக 1983ம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்ற வன்முறைகள் கறுப்பு ஜுலை என தமிழர்களினால் நினைவு கூரப்படுகின்றன.

இந்த கலவரம் ஏற்பட்டு 38 வருடங்களாகின்றதை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

இன்று நாங்கள் கனடாவை சேர்ந்த தமிழர்கள் மற்றும் உலகலாவிய ரீதியில் உள்ள தமிழ் சமூகத்தினருடன் இணைந்து இலங்கையின் பயங்கரமான கறுப்பு ஜுலை சம்பவங்களை நினைவு கூருகின்றோம். 1983 ஜுலை மாதம் நீண்டகால பதற்றமும் அமைதியின்மையும் கொழும்பிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இறுதியில் தமிழர்களிற்கு எதிரான படுகொலைகளாக மாறியது –பின்னர் நாட்டை 26 வருட ஆயுத மோதலிற்குள் தள்ளியது.

ஆயுதமோதல் பல ஆயிரக் கணக்கானவர்களை கொன்றது பலரை நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது, நாட்டின் சமூகத்தினர் மத்தியில் ஆறாத காயங்களை ஏற்படுத்தியது. கறுப்பு ஜூலைக்கு பிந்தைய மாதங்களில் கனடாவை சேர்ந்த தமிழர்களின பரப்புரை காரணமாக கனடா அரசாங்கம் விசேட திட்டங்களை நடைமுறைப் படுத்தியது, இது 1800 தமிழர்கள் கனடாவில் குடியேறுவதற்கும் தங்கள் வாழ்க்கையை பாதுகாப்ப கட்டியெழுப்பு வதற்கும் உதவியது.

இன்று கனடா தமிழர்கள் புலம் பெயர் சமூகத்தின் பெரும் பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். மேலும் அவர்கள் வலுவான அனைவர்களையும் உள்ளடக்கிய கனடாவை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்.

கனடா அரசாங்கத்தின் சார்பில் கறுப்பு ஜூலையின் போதும் அதன் பின்னரும் துயரங்களை அனுபவித்தவர்களுக்கும் உறவுகளை இழந்தவர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். ஆயுத மோதல் 2009 இல் முடிவிற்கு வந்தது எனினும் நாட்டில் உள்ள அனைவருக்கும் நிரந்தர அமைதி மற்றும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் பாடுபட வேண்டும். இதற்கு பாதிக்கப்பட்ட அனைவரினதும் நம்பிக்கையை பெறக்கூடிய அர்த்த பூர்வமான நல்லிணக்க முயற்சிகள் அவசியம். இந்த இலக்கை நோக்கி பாடுபடும் அனைவருக்கும் கனடா தனது ஆதரவை வழங்குகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

“தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“தமிழ் நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை வசதிகளையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (23.7.2021) தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் வாயிலாக மேற் கொள்ளப்பட்டு வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு, முன்னாள் படை வீரர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது.

இதில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்குக் காப்பீட்டுத் திட்டம், அடையாள அட்டை, கட்டணமில்லா தொலைபேசி உதவி மையம், வெளிநாடு வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை இணைய வழியில் கற்பிப்பதற்குத் தமிழ் இணையக் கல்விக் கழகம் அமைப்பது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர்,

“தலை நிமிரும் தமிழகம்” தொலை நோக்குத் திட்டங்களில் அறிவுறுத்தியபடி வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் பேணிடவும், அங்கு பாதிப்புக்கு உள்ளானோர்க்கு உதவிடவும், நாடு திரும்பிய வெளி நாடுவாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்குத் துணை நிற்கவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற ஒரு புதிய துறையை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வழி காட்டுதல் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கும், குடிநீர், கழிவறை வசதி, தெருவிளக்கு, மின்வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், மாதாந்திர பணக் கொடையை உயர்த்தி வழங்கிடவும், சமையல் பாத்திரங்கள் மற்றும் துணிமணிகள் வழங்குவதற்கான ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார். மேலும், இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

பதியுதீனின் மனைவி உட்பட நால்வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நான்கு பேரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த நால்வரையும் 48 மணி நேரம் விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் ரிஷாட் பதியுதீனின் மனைவியை விசாரணை செய்ய கிருலப்பனை பொலிஸாரிற்கும் ஏனைய மூவரையும் விசாரணை செய்ய பொரளை பொலிஸாரிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பௌத்த சிங்கள சிந்தனையின் வெளிப்பாடே பிரதம செயலாளர் நியமனம்: சி.வி.

ஆளுமையுள்ள பல தமிழ் அலுவலர்கள் இருக்கும் போது வடமாகாணசபையின் பிரதம செயலாளராகத் தமிழ் தெரியாத ஒருவரை நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்டுள்ள தீர்மானம் அவரின் பௌத்த சிங்கள சிந்தனையின் வெளிப்பாடே என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனம் தொடர்பில் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக முன்னைய வடமாகாணசபை உறுப்பினர்களின் எதிர்ப்புக் கூட்டம் யாழ்ப்பாணம் இளம் கலைஞர் மன்றத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றபோது உரையாற்றியபோதே விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

“வலு நீங்கிய வடமாகாணசபையின் முன்னைய அங்கத்தவர்கள் பலரையும் ஒருங்கே சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இக் கூட்டத்திற்கு வழி அமைத்த சிவாஜிலிங்கம், ஐங்கரநேசன் போன்றோருக்கும் எங்கள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்களுக்கும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்!

எமது புதிய சிங்கள பிரதம செயலாளர் ஒரு நல்ல காரியத்தைச் செய்துள்ளார். பிரிந்து வாழ்ந்த எம்முள் பலரை ஒருங்கு சேர வைத்துள்ளார். அந்த அளவில் அவர் சார்பான நல்ல “சர்டிபிகெட்டை” இடை நிறுத்திக் கொள்கின்றேன்.

ஒரு தமிழரின் பெயரைக் குறிப்பிட்டு அவரைத் தான் ஜனாதிபதி நியமிக்கப் போகின்றார் என்று பத்திரிகைகளில் எல்லாம் விளம்பரப்படுத்திய நிலையில் தமிழ் போட்டியாளர்களும் அரச சார்பு அரசியல்வாதிகளும் அந்த நபருக்கு எதிராகக் கொடுத்த புகார்களையும் வாதங்களையும் பொறுக்க முடியாமலே ஒரு சிங்கள அலுவலரை ஜனாதிபதி நியமித்துள்ளார் என்று பரவலாகக் கூறுகின்ற போதும் ஆளுமையுள்ள பல தமிழ் அலுவலர்கள் இருக்கும் போது இவ்வாறான ஒரு தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார் என்றால் அவரின் பௌத்த சிங்கள சிந்தனையின் வெளிப்பாடே இது என்று தான் நாங்கள் இந்த நியமனத்தைக் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தகுதிவாய்ந்த ஆளுமை மிக்க தமிழ் அலுவலர் ஒருவரை ஜனாதிபதி நியமித்திருக்கலாம். ஆளுமை மிக்கவர்கள் தமிழரிடையே இருக்கும் போது அமுல் பேபிகளுக்குச் சார்பான தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான ஒரு நியமனத்தைச்; செய்திருக்கின்றார்கள் அரசாங்கத்தினர்.

தமிழ் மண்ணில் பிரதம செயலாளராகத் தமிழ் தெரிந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். இம் மாகாணத்தின் பெரும்பான்மை மக்களின் மொழியறியாத ஒருவரை நியமித்ததன் மூலம் தமிழ் பேசும் மக்களை அவமதித்துள்ளார், வஞ்சித்துள்ளார் ஜனாதிபதி. தனது அரசியலுக்கு முதல் இடமும் மக்களின் பிரச்சனைகளுக்குக் கடை இடமும் அளித்துள்ளார்.

மக்களின் மொழியறியாத ஒருவர் நிர்வாகத் தலைவராக இருந்தால் அவர் மற்றவர்களின் மொழிபெயர்ப்பின் அடிப்படையிலேயே கடமையாற்ற வேண்டியிருக்கும். அவருக்கு வரும் தமிழ்க் கடிதங்கள் மொழிபெயர்த்த பின்னரே அவரால் வாசிக்கப்படுவன. ஆனால் அவை சம்பந்தமான பதில்களை அவர் தமிழ் மொழியில் தனது கையெழுத்துடன் அனுப்ப முடியாது. அவர் சிங்கள அல்லது ஆங்கில ஆவணங்களுக்கே கையெழுத்திடுவார். அக் கடிதங்களுடன் தமிழ் மொழி பெயர்ப்புக்களை அனுப்பாமல் விட இடமிருக்கின்றது.

நான் முதன் முதலில் 1979ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்றுச் சென்ற போது தமிழ் அலுவலர்கள் பலர் சிங்களத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்குக் கடிதம் அனுப்புவதை அவதானித்தேன். அவ்வாறு செய்யாமல் தமிழில் அனுப்புங்கள் என்று ஆணையிட்டேன். ஆணைக்குழுவிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. என்னுடைய நண்பராக இருந்த என் கல்லூரியின் பழைய மாணவரான ஆணைக்குழுச் செயலாளரைச் சென்று சந்தித்தேன். அதற்கு அவர் தந்த பதில் என்ன தெரியுமா? எங்களிடம் மொழி பெயர்ப்பாளர்கள் இல்லை. நாங்கள் மொழிபெயர்ப்புக்கு உங்கள் கடிதங்களை வெளியாட்களுக்கு அனுப்ப முடியாது. ஆகவே தான் உங்கள் தமிழ்க் கடிதங்கள் இங்கு மண்டிக் கிடக்கின்றன என்றார். 16வது திருத்தச் சட்டம் அப்போது வெளிவந்திருக்கவில்லை. அது 1988ல் தான் வெளிவந்தது. எனினும் சட்டம் என்னவாக இருந்தாலும் தமது அடாத செயல்களை அரச அலுவலர்கள் இவ்வாறு தான் காரியமாற்றி வந்துள்ளார்கள். அதன் பின் எமது தமிழ்க் கடிதங்களுடன் ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பியதன் பின்னர் தான் பதில்கள் கிடைத்தன.”

Posted in Uncategorized