தமிழர்களின் மீது மாத்திரம் இந்த அரசாங்கம் முற்றுமுழுதான இனவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது ஏன்? ரெலோ பிரதித் தலைவர் இந்திரகுமார் பிரசன்னா கேள்வி

கடந்த காலங்களில் போராட்ட இயக்கமாக இருந்த ஜே.வி.பியினருக்குக் கூட அவர்களது தலைவர்களை அஞ்சலிப்பதற்கு அனுமதிக்கின்றார்கள். ஆனால் ஏன் தமிழ் மக்களுக்கு மாத்திரம் இவ்வாறான தடைகள். தமிழர்களின் மீது மாத்திரம் இந்த அரசாங்கம் முற்றுமுழுதான தங்கள் இனவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது ஏன்? ஏன தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளருமாகிய இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் படுகொலை நினைவேந்தலை நடாத்துவதற்கு பொலிசாரினால் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

படுகொலைக்குள்ளான எமது தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத வண்ணம் இந்த அரசானது எனக்கும் எமது பாராளுமன்ற உறுப்பினருக்கும் தடை விதித்திருக்கின்றது. 1983ம் ஆண்டு படுகொலைக்குப் பின்பு தொடர்ச்சியாக நாங்கள் வடக்கு கிழக்கிலே எமது தவைர்களுக்கான அஞ்சலியைச் செலுத்திவருகின்ற வேளையில் இம்முறை இந்த அரசினால் மாத்திரம் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

எங்களுடைய தமிழ் ஈழ விடுதலை இயக்கமானது இலங்கையில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி. எமது கட்சியின் மூத்த தலைவர்கள் தான் தங்கதுரை, குட்டிமணி அவர்கள். எமது தலைவர்களை அஞ்சலி செலுத்துவதற்கு எமது கட்சிக்குத் தடை விதித்திருப்பதென்பது இந்த அரசின் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எதிரான செற்பாடாகவே இருக்கின்றது.

இந்த நாட்டில் தமிழினத்திற்காகப் போராடி சிறைச்சாலையிலே படுகொலை செய்யப்பட்டவர்கள். அந்த படுகொலை இடம்பெறுகின்ற போது அப்போது ஆட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி கூட அவர்களின் ஆட்சிக் காலத்தில் நினைவுகூரல்களை மேற்கொள்வதற்கு அனுமதித்திருந்ததது. ஆனால் இந்த அரசாங்கம் இனவாதத்தை மாத்திரமே கடைப்பிடித்து வருகின்றது.

கடந்த காலங்களில் போராட்ட இயக்கமாக இருந்த ஜே.வி.பியினருக்குக் கூட அவர்களது தலைவர்களை அஞ்சலிப்பதற்கு அனுமதிக்கின்றார்கள். ஆனால் ஏன் தமிழ் மக்களுக்கு மாத்திரம் இவ்வாறான தடைகள். தமிழர்களின் மீது மாத்திரம் இந்த அரசாங்கம் முற்றுமுழுதான தங்கள் இனவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது ஏன்?

தமிழ் மக்கள் ஒன்றை உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எந்தவித விமோசனத்தையும் தரப்போவதில்லை.

1983ம் ஆண்டு எமது தலைவர்களின் படுகொலையினுடாகத் தான் உலகத்திலுள்ள ஏனைய நாடுகளுக்கு இலங்கையில் தமிழர்கள் இருக்கின்றார்கள், இனஅழிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி தெரிய வந்தது. ஏன் தற்போது அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா கூட இந்தப் படுகொலையில் இருந்து தப்பித்தவர்தான். ஆனால் இந்த அரசாங்கத்துடன் இருந்து அவரும் அந்த நிகழ்வுகளின் தடைக்குத் துணை போகின்றார்.

எனவே இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக எங்கள் இனத்தின் மீதும் எங்கள் மக்கள் மீதும் துவேசத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்றது. எனவே நாங்கள் ஒற்றுமையாக இருந்து எமது இனத்தின் விடுதலைக்காகவும், எமது இனத்திற்காகப் போராடியவர்களுக்காகவும் அஞ்சலிக்க வேண்டும். இவ்வாறான அஞ்சலி நிகழ்வுகளுக்கு அரசால் விதிக்கப்படும் தடைகளை தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கை அழிவின் பாதைக்கு செல்லாமல் இருப்பது அரசாங்கத்தின் செயல்பாட்டில்தான் உள்ளது- ரெலோ செயலாளர் ஜனா எம்.பி

இந்த நாடு சுபீட்சமாக வேண்டுமா அல்லது கடந்த காலங்களைப் போல அழிவுப் பாதைக்குச் செல்ல வேண்டுமா என்பது இந்த அரசாங்கத்தின் கையில் தான் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் படுகொலை நினைவேந்தலை நடாத்துவதற்கு காவல்துறையினரால் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜுலை 23 தொடக்கம் 27ம் திகதி வரை கறுப்பு ஜுலை என்பது இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமல்லாது உலகத் தமிழ் மக்கள் மத்தியில் இருந்தும் அகல முடியாத, அகற்ற முடியாத ஒரு கரிநாளாக பதிந்து கிடக்கின்றது. இந்த நாளை தமிழின அழிப்பின் உச்ச கட்டமாகவே நாங்கள் பார்ப்பதோடு, கறுப்பு ஜுலையாக இதனை நாங்கள் நினைவு கூருகின்றோம்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலே 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை முழுவதிலும் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு தொடங்கியது. பல்லாயிரக் கணக்காண தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள், கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. தமிழர்களின் பூர்வீக இடமாகிய வடக்கு கிழக்கிற்கு பாதையூடாக வரமுடியாமல் கப்பல் மூலமாக மக்களை அனுப்பிய நாட்கள் அது

அதன் பின்னர் போராட்டத்தைத் தொடங்கிய தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணியுடன் அரசியற் கைதிகள் பலர் உட்பட 53 பேர் ஜுலை 25 மற்றும் 27ம் திகதிகளில் வெலிக்கடை சிறையிலே இலங்கை பாதுகாப்புப் படையின் ஆதரவு மற்றும் அனுசரணையுடன் ஏனைய கைதிகளினால் வெட்டியும் கொத்தியும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

தனக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் போது என்னைத் துக்கிலிடுவதன் மூலம் “ஒரு குட்டிமணியைத் தான் அழிப்பீர்கள் இதன் மூலம் ஆயிரம் ஆயிரம் குட்டிமணிகள் போராட்டத்திற்கு வருவார்கள் அவர்கள் மூலம் தமிழீழம் மலரும் அதனைப் பார்ப்பதற்கு என் கண்கள் இருக்க வேண்டும். எனவே என் கண்களைப் பார்வையற்ற ஒரு தமிழ் மகனுக்குத் தானம் செய்து விடுங்கள். அந்தக் கண்கள் மூலமாக மலரப் போகும் தமிழீழத்தை நான் பார்ப்பேன்” என்று குட்டிமணி தெரிவித்தார்.

அந்தக் கருத்திற்காக குட்டிமணியின் கண்கள் பிடுங்கி எடுக்கப்பட்டு சப்பாத்துக் கால்களில் இட்டு நசுக்ககப்பட்ட வரலாறுகளும் அந்தச் சிறைச்சாலையிலே நடைபெற்றன.

இந்தத் தினத்தை தமிழீழ விடுதலை இயக்கம் உட்பட அனைத்துத் தமிழ் மக்களும் கறுப்பு ஜுலை தினமாகக கடந்த 37 வருடங்களாக நினைவு கூர்ந்து இந்த ஆண்டு 38வது ஆண்டாக நினைவு கூருகின்றோம். இந்த 37 வருடமும் இல்லாத கெடுபிடிகள் இந்த ஆண்டிலே மேலோங்கியிருக்கின்றது.

இந்த நினைவு தினத்தை நினைவு கூறக்கூடாது என்று அவர்கள் நினைவான பதாதைகள் கிழித்தெறியப்படுவது மாத்திரமல்லாமல். நீதி மன்றத் தடையுத்தரவும் கொடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலே எனக்கும், எமது கட்சியின் உபதலைவரும் முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா அவர்களுக்கும் தடையுத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது.

1983ம் ஆண்டு நடைபெற்ற ஜுலைக் கலவர இன அழிப்பும், வெலிக்கடை சிறைச்சாலையினுள்ளே நடந்த படுகொலைகளும் உலகம் அறிந்த உண்மை. கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியின் தலைமையிலான இந்த அரசு இந்த நினைவு தினத்தை நினைவுகூரக் கூடாது என்று உறுதியாக இருக்கின்றார்கள்.

1983ம் ஆண்டு இவர்கள் சார்ந்த கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கவில்லை. ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. அந்த நேரத்தில் போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற போர்ப்பிரகடணமானது இன்னொரு நாட்டுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தைப் போன்று தன் நாட்டுக்குள்ளேயே உரிமைக்காகப் போராடும் மக்களுக்கெதிராகச் செய்யப்பட்ட வரலாறுகளும் உண்டு.

அந்த அரசு 1983ம் ஆண்டிற்குப் பின்பு பல தடவைகள் இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்களது ஆட்சிக் காலத்தில் கூட இந்தக் கறுப்பு ஜுலை தினத்தை நினைவுகூருவதற்கு எத்தடையும் விதிக்கவில்லை.

அதற்கு மேலாக சந்திரிக்கா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த போது கறுப்பு ஜுலைப் படுகொலைக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டிருந்தார். அதில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நட்டஈடும் வழங்கியிருந்தார். அவ்வாறு கடந்த கால அரசாங்கங்கள் மன்னிப்புக் கேட்டதும், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்க காலத்தில் இதற்குத் தடை விதிக்காமல் இருந்ததும் தங்கள் தவறுகளை உணர்ந்ததாலும், இந்த நினைவுகூரல்கள் நியாயமானது என அவர்கள் எண்ணியதாலுமேயாகும்.

ஆனால் இன்று இந்த கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசு தன்னுடைய கட்சி சார்ந்த அரசு அந்த நேரம் இல்லாதிருந்த போதிலும் தற்போது கடந்த காலங்களில் நடந்த இவ்வாறான சம்பவங்களை நினைவுரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.

அதாவது கடந்த காலங்களில் நாங்கள் செய்த அநியாயங்களை, அட்டூழியங்களை, படுகொலைகளை, சொத்து உட்பட பல அழிப்புகளையும் கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட வேண்டும் என்று கூறுவது போலவே எமது நினைவுகளுக்கான தடைகளை விதித்துக் கொண்டிருக்கினள்றார்கள். இதற்குத் தமிழ் மக்கள் ஒருபோதும் தயாராக இருக்க மாட்டார்கள்.

நீங்கள் இன்று சீனாவில் எதிர்க்கட்சி இல்லாமல், எதிர்க்கட்சிகளின் குரல் இல்லாமல் அரசு செய்வதை எதிர்த்துக் கதைக்க முடியாமல் ஒரு ஆட்சி இருப்பதைப் போன்று இந்த நாட்டிலும் இராணுவ ஆட்சியை, இராணுவ மயமாக்கும் ஆட்சியைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றீர்கள் என்பதைத் தான் நாங்கள் இதன் மூலம் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

எது எவ்வாறிருந்தாலும் கடந்த காலங்களிலே நீங்கள் தமிழ் மக்களுக்குச் செய்த துரோகத்தனங்கள், 2009 மே மாதம் செய்த இனஅழிப்புகள், மாறி மாறி வந்த அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட 1957 கலவரம், 1978 கலவரம், உக்கிரமடைந்த 1983ல் நடைபெற்ற இன அழிப்பு போன்றனவற்றை நாங்கள் மறந்துவிடப் போவதில்லை என்பதோடு 1983ம் ஆண்டு செய்த இனஅழிப்புதான் தமிழ் மக்கள் மத்தியிலே, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மத்தியில் அவர்களைப் போராட்டத்திற்கு வீறுகொண்டு எழ வைத்தது என்பதை உணர வேண்டும்.

அவ்வாறான ஒரு நிலைமையை மீண்டும் இந்த அரசு ஏற்படுத்த முனையக் கூடாது.

இந்த நாடு சுபீட்சமாக வேண்டுமா அல்லது கடந்த காலங்களைப் போல அழிவுப் பாதைக்குச் செல்ல வேண்டுமா என்பது இந்த அரசாங்கத்தின் கையில் தான் இருக்கின்றது” என்றார்.

சூரிச் மாநிலத்தில் தமிழ்தேசிய வீரர்கள் 38 நினைவு தினம்

25.07.2021 ஞாயிறு சுவிஸ்லாந்து சூரிச் மாநிலத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், சுவிஸ் கிளையால் அனுஷ்டிக்கப்பட்டது.

1983 ஜூலையில் வெலிக்கடை படுகொலை செய்யப்பட்ட ஸ்தாபன தலைவர்கள் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் நடேசுதாசன், தேவன், சிவபாதம் மாஸ்டர். குமார குலசிங்கம்,
மற்றும் 53 அரசியல் கைதிகளின் படுகொலையும், அதன்பின் ஏற்பட்ட இனக் கலவரத்தில் கொல்லப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி செய்யும் விதமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.

சுவிஸ் கிளையின் செயலாளர் விமல் அவர்கள் அஞ்சலி நிகழ்வை தொடங்கி வைத்தார்.

எம் கிளையின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சிவா அவர்களின் சிறிய அஞ்சலி உரையுடன் இந்த நிகழ்வு ஆரம்பமாகியது.

மேலும் ,வருகை தந்த அனைவருக்கும், மற்றும் தொலைபேசி வாயிலாகவும், இணையம் வாயிலாக ஆதரவு தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறியும்,
அத்துடன் எமது ஸ்தாபன தலைவர்கள் பற்றியும் அவர்கள் வழிகாட்டலில் எமது பாதை பயணங்கள் பற்றியும் ,சுவிஸ் கிளையின் அமைப்பாளர் ஞானம் அவர்கள் நன்றி உரையுடன் கூடிய சிற் உரையை வழங்கியிருந்தார்.

இந்த நிகழ்வில் இணையம் வழியாகவும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது சிறப்பு.

நன்றி
சுவிஸ் கிளை நிர்வாகம்.

வெலிக்கடை தியாகிகள் தினம் ரெலோ யாழ் மாவட்ட அலுவலகத்தில் நினைவுகூரல்!

வெலிக்கடை சிறையில் உயிரிழந்த குட்டிமணி தங்கத்துரை உள்ளிட்டவர்களின் 38 ஆம் ஆண்டு தேசிய வீரர்கள் தினம் நிகழ்வு யாழ் மாவட்ட ரெலோகட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 38வது தேசிய வீரர்கள் தினம் நிகழ்வு இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினரும்,யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் முன்னணிப் போராளிகளான தேவன், நடேசுதாசன், குமார், சிவபாதம், சிறிக்குமார், மரியாம்பிள்ளை,குமாரகுலசிங்கம் உள்ளிட்ட வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 அரசியல் கைதிகளின் நினைவுத தினம் இன்று அக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் சுடரேற்றி மலர் தூவி, மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் நிரோஷ்,ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்,தலைமை குழு உறுப்பினரும் பொருளாளருமான விந்தன்,யாழ் மாநகரசபையின் பிரதி முதல்வருமாகிய ஈசன்,நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளரும்,யாழ் மாவட்ட இளைஞர் அணி தலைவருமாகிய ஜெய்கரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற தவிசாளர்கள், உப தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் சுகாதார முறைப்படி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நாட்டில் இறுதி தமிழன் இருக்கும் வரையில் தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வுகள் நடந்தேயாகும் ரெலோ மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் சத்தியசீலன்

தடைகள் மூலம் எமது நினைவுகளைத் தடுத்துவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால் இந்த நாட்டில் இறுதி தமிழன் இருக்கும் வரையில் தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வுகள் நடந்தேயாகும் என மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய வீரர்கள் தினம் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்திய சீலன் தெரிவித்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 38வது தேசிய வீரர்கள் தினம் நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வருமாகிய க.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேசசபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், போரதீவுப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் க.ரஜனி, மட்டக்களப்பு மாசகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் என மட்டுப்படுத்தப்பட்ட அளவினர் கலந்து கொண்டனர்.

1983ம் ஆண்டு ஜுலைக் கலவரத்தின் போது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கதுரை மற்றும் தளபதி குட்டிமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் உட்பட படுகொலை செய்யப்பட்டிருந்த 53 அரசியற் கைதிகளையும் நினைவுகூரும் முகமாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் ஜுலை 25 தொடக்கம் 27 வரையில் தேசிய வீரர்கள் தினமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வினை நடாத்துவதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோருக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களின் பங்குபற்றுதல் இல்லாமல் மேற்படி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன் போது பிரதேச சபைகளின் தவிசாளர்களினால் குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு உறுப்பினர்களால் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மாநகர பிரதிமுதல்வர் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது இனத்தின் விடுதலைக்காக, எமது தமிழ் மக்களுக்காக இன்னுயிரைக் கொடுத்த எமது தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது கடந்த காலங்களில் எவ்வித தடங்கலும் இன்றி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இந்த அரசாங்கத்தினால் தமிழர்கள் தொடர்பான எவ்வித நிகழ்வுகளையும் நடாத்த அனுமதிக்கவில்லை. எமது பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் கட்சியின் உபதலைவர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோருக்கு இந்நிகழ்வினை நடாத்துவதற்கு நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கட்சியின் பிரதிநிதிகளாகிய எம்மால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படுகின்றது.

நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் கொவிட் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பேணி இந்நிகழ்வினை நாம் நடாத்துகின்றோம்.

தடைகள் மூலம் எமது நினைவுகளைத் தடுத்துவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால் இந்த நாட்டில் இறுதி தமிழன் இருக்கும் வரையில் தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வுகள் நடந்தேயாகும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

மன்னாரில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளுக்கு இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள், அக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்தன், ஈ.பி.ஆர்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வெலிக்கடை தியாகிகள் தினம் முல்லைத்தீவில் நினைவுகூரல்!

வெலிக்கடை சிறையில் உயிரிழந்த குட்டிமணி தங்கத்துரை உள்ளிட்டவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட ரெலோகட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இன அழிப்பை தொடர்ந்து ஜூலை 25, 27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறச்சாலைக்குள் நடைபெற்ற படுகொலைகளில் உயிரிழந்த குட்டிமணி தங்கத்துரை உள்ளிட்ட 53 அரசியல் கைதிகள் படுகொலை செய்ததன் 38வது நினைவு தினம் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் 38வது கருப்பு ஜூலை , வெலிக்கடை படுகொலை நினைவுதினம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர்களின் படத்திற்கு சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம்,முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

படுகொலை செய்தவர்களை மீண்டும் படுகொலை செய்கிறது கோட்டாபய அரசாங்கம் ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு இலங்கை அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் 1983 யூலை மாதம் 23 திகதியில் இருந்து 27 வரை நான்காயிரத்திற்கு அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

வெலிக்கடைச் சிறையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட விடுதலைப் போராளிகள் உள்ளிட்ட 53 பேர் வெட்டியும் கொத்தியும் படுகொலை செய்யப்பட்டு கைதிகளின் உடல் உறுப்புக்கள் வெட்டப்பட்டு காடையர்களால் புத்த பிரானுக்கு படைக்கப்பட்டன. கைதிகளின் குருதியை காடையர்கள் குடித்து கூத்தாடினர்.

இதனை கறுப்பு யூலைப் படுகொலை என்ற பெயரில் 37 ஆண்டுகளாக சுவர் ஒட்டிகள் ஒட்டி தமிழர் தாயகம் எங்கும் நினைவேந்தப்பட்டு வருகின்றது.

இம்முறை 38 ஆண்டு நினைவேந்தலுக்குகான சுவர் ஒட்டிகள் ஒட்டப்படும் போது தற்போதைய கோட்டாபய அரசாங்கம் இராணுவ இயந்திரத்தை தூண்டி சவர் ஒட்டிகளை கிழித்தும் கழிவு ஒயில் கொண்டு மறைத்தும் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய செயற்பாடுகள் ஏதேச்ச அதிகாரப் போக்குடன் படுகொலை செய்தவர்களை மீண்டும் படுகொலை செய்கின்ற கொடூரமான பாசிச நடவடிக்கையாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத போதும் அவர்களை நினைவேந்தல் செய்யக் கூட தடுத்தல் அப்பட்டமான மனிதவுரிமை மீறலாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்க ஆட்சியாளர்கள் நீதி கொடுக்கவே நினைவேந்தல் செய்ய அனுமதியே கொடுக்க தயார் இல்லை என்றால் தமிழ் மக்களுக்கு உள் நாட்டில் திட்டமிட்ட அடக்கு முறைகள் தொடரவுள்ளன என்பது உண்மை.

அச்சுறுத்தல்கள் மத்தியிலும் வலி கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்

இராணுவ பிரசன்னம் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இன்று காலை 9 மணிக்கு உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள், பணியாளர்களின் பங்கேற்புடன் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. வெலிக்கடை சிறையில் 1983 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன், உட்பட 53 அரசியல் கைதிகளுக்கும் அவ்வேளை படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமாக இரண்டு நிபுடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொது ஈகைச்சுடர் தவிசாளரினால் ஏற்றி வைக்;கப்பட்டு உரை நிகழ்த்தப்பட்டது. அதில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல அவர்களை நினைவு கூர்வதும் இராணுவ மயமாக்கலின் ஊடாக தடை செய்யப்படுகின்றது. இன்றைய தினம் கூட சுகாதார நடைமுறைகளுக்கு முழுமையாக மதிப்பளித்து நினைவேந்தலினை நாம் செய்ய முற்பட்ட போது காலையிலேயே பொலிசார் எமது அலுவலகம் முன்பாக நோட்டமிடுகின்றனர்.

அதுபோன்று இராணுவப் புலனாய்வாளர்கள் அலுவலக வாசலில் காத்து நிற்கின்றனர். இதை அடுத்து பல உறுப்பினர்கள் அச்சத்தின் நிமிர்த்தம் இந் நிகழ்வில் பங்கேற்கவில்லை.
உலகம் அறிந்த கறுப்பு யூலை போன்ற இனவாதத் தாக்குதல்கள் இனியும் தமிழ் மக்கள் மீது முடுக்கிவிடக்கூடாது என்பதற்காகவும் எமது நினைவு கூர்தல் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவும் அனுஸ்டிக்கின்றோம்.

ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் முழுமையான அனுசரனையோடு ஏமுத மக்குள் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையில் மிகக் கெடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். எமது தலைவர்கள் சிறையில் கண்கள் தோட்டப்பட்டு கொல்லப்பட்டனர். தமிழ் மக்களின் சொத்துக்கள் வாக்காளர் இடாப்பில் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இழிக்கப்பட்டன.

இடிப்படையில் இவைகள் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள். இவை போன்று தமிழர் வரலாற்றில் ஏராளமான கொடுமைகள், மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. இவை எதற்கும் 38 ஆண்டுகள் கடந்தபோதும் எமக்கு நீதி வழங்கப்படவில்லை.

இனி நடைபெறாது என்பதற்கும் உத்தரவாதமில்லை என்ற நிலைமையினையே இனத்திற்கு மறுக்கப்படும் நீதி உணர்த்துவதாக ரெலோவின் மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized
Velikkadai Sirai Padukolai

வெலிக்கடை தியாகிகளை நினைவுகூர்ந்த சுவரொட்களைத் ஒட்டுவதை தடுப்பதற்கு யாழில் இராணுவம் கடும் பிரயத்தனம்

வெலிக்கடை சிறைப்படுகொலையினை நினைவு கூர்ந்து சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு இராணுவத்தினர் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்ததுடன் ஏற்கனவே தம்மால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கும் இனந்தெரியாதவர்கள் கழிவு ஒயில் பூசி வருவதாக ரெலோவின் மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோவின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன், நடேசுதாசன், குமார், சிறீக்குமார், மரியாம்பிள்ளை, குமரகுலசிங்கம், உட்பட 53 அரசியல் கைதிகளுக்கும் அவ்வேளை படுகொலை செய்யப்பட்டவர்களையும் அஞ்சலித்து ரெலோ வடக்குக் கிழக்கு பூராகவும் சுவரொட்டிகளை ஒட்டி வருவதுடன் தொற்றுக் காலப்பகுதியைக் கருத்தில் கொண்டு மாவட்ட மட்ட அஞ்சலி நிகழ்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இந் நிலையில் இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் (27) வலிகாமம் கிழக்குப் பகுதியில் உரும்பிராய் பகுதியில் சுவரொட்டி ஒட்டியபோது உரும்பிராய்ச் சந்தியில் கன்டர் வாகனத்தில் தரித்து நின்ற பெருமளவான இராணுவத்தினர் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தடுத்தனர். பின்னர் என்னுடன் நின்றிருந்தவர்களின் கைளில் இருந்த சுவரொட்டிகளை பறிக்க முயற்சித்தனர். நாம் வழங்கவில்லை. இதனையடுத்து எமக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இராணுவத்தினர் எம்மை பிரதேசத்தினை விட்டு வெளியேறுமாறு கூறினர். எனினும் நாம் எமது பிரதேசத்தில் நடமாடுவதை தடுக்க நீங்கள் யார் என கேட்டேன். இதனைத் தொடர்ந்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை சுற்றிச் சுற்றி படம் எடுத்து எங்கோ வட்சப் அனுப்பினர்.

கறுப்பு யூலை நாடறிந்த உலகறிந்த படுகொலை இதை நினைவு கூர்வதை எவரும் தடுக்க முடியாது என்றோம். நான், நீங்கள் எந்த இராணுவ முகாமைச் சேந்தவர்கள் எனக் கேட்டேன். அவ்வாறு தங்கள் எந்த இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள் கூறமுடியாது என்றனர். பின்னர் உரும்பிராய் சந்தியில் இருந்து நாம் வெளியேறியவுடன் அவ்வாறாக முரண்பட்ட இராணுவத்திற்குப் புறம்பாக பீல் பைக்கில் நான்கு இராணுவத்தினர் எனது பிக்கப்பிற்கு முன்னும் பின்னுமாக குறிப்பிட்ட தூரம் பின்தொடர்ந்து பின்வாங்கிச் சென்றனர்.

இதேவேளை நாம் திரும்பி வரும் போது வல்லைப் பகுதி, ஆவரங்கால், புத்தூர் என சகல இடங்களிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கும் கழிவு ஒயில் பூசி மறைக்கப்பட்டிருந்ததுடன் சுவரொட்டிகள் அகற்ற கூடிய அளவிற்கு அகற்றப்பட்டிருந்தது.

இவ்வாறாக நினைவு கூர்வதற்கான உரிமை இராணுவ மயமாக்கலின் மூலம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வருடாவருடம் எமது கட்சி எமது தலைவர்களை நினைவுகூர்ந்து வருகின்றது. ஆனால் இம்முறை நினைவுகூரலை தடுப்பதற்கு கடும் பிரயத்தனங்கள் பிரயோகிக்கப்படுவதாக
ரெலோவின் மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.