“தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“தமிழ் நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை வசதிகளையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (23.7.2021) தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் வாயிலாக மேற் கொள்ளப்பட்டு வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு, முன்னாள் படை வீரர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது.

இதில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்குக் காப்பீட்டுத் திட்டம், அடையாள அட்டை, கட்டணமில்லா தொலைபேசி உதவி மையம், வெளிநாடு வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை இணைய வழியில் கற்பிப்பதற்குத் தமிழ் இணையக் கல்விக் கழகம் அமைப்பது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர்,

“தலை நிமிரும் தமிழகம்” தொலை நோக்குத் திட்டங்களில் அறிவுறுத்தியபடி வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் பேணிடவும், அங்கு பாதிப்புக்கு உள்ளானோர்க்கு உதவிடவும், நாடு திரும்பிய வெளி நாடுவாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்குத் துணை நிற்கவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற ஒரு புதிய துறையை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வழி காட்டுதல் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கும், குடிநீர், கழிவறை வசதி, தெருவிளக்கு, மின்வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், மாதாந்திர பணக் கொடையை உயர்த்தி வழங்கிடவும், சமையல் பாத்திரங்கள் மற்றும் துணிமணிகள் வழங்குவதற்கான ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டார். மேலும், இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.