13 பாராளுமன்ற குழுக்கள் எதிர்வரும் 03 வாரங்களில் கூடவுள்ளதாக அறிவிப்பு

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கள் உள்ளிட்ட 13 பாராளுமன்ற குழுக்கள் எதிர்வரும் 03 வாரங்களில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதுடன், கோப் குழு அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கூடவுள்ளது. அன்றைய தினம் நெடுஞ்சாலை அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தலைமையில் கூடவுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் கூடவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக, ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையிலும், நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் அலி சப்ரி தலைமையிலும் சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தலைமையிலும் கூடவுள்ளது.

அதேவேளை, ஆகஸ்ட் 04 ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலையில் பாராளுமன்றத்தில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 05 ஆம் திகதி சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூடவுள்ளதுடன், நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவும் கூடவுள்ளது. மேலும், அன்றைய தினம் கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அத தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கூடவுள்ளது.

அதேவேளை, எதிர்வரும் 17 ஆம் திகதி நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூடவுள்ளதுடன் அன்றைய தினம் அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்க தலைமையில் வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவும் கூடவுள்ளது.

ஆகஸ்ட் 18 ஆம் திகதி மீண்டும் நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூடவுள்ளதாகவும், 19 ஆம் திகதி உயர் பதவிகள் பற்றிய குழு கூடவுள்ளதாகவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

கருவின் தலைமையில் எதிர்க்கட்சிகள் முக்கிய பேச்சு! – தமிழரசுக் கட்சியும் பங்கேற்பு

நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனைச் செய்வது தொடர்பிலும், பலமிக்க மாற்று அரசியல் சக்தியை உருவாக்குவது குறித்தும் இன்று பல எதிர்க்கட்சிகள் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டன.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் கலந்துகொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழர் தரப்பிலுள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் தனித்தனியாக அழைப்பு அனுப்பப்பட்டது. எனினும், இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜாவும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டனர். தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ரெலோ, புளொட், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும் சந்திப்பில் பங்கேற்கவில்லை.

ஆனால், சந்திப்புக்கு ஆதரவு தெரிவித்து குறித்த கட்சிகளின் தலைவர்கள் கடிதம் அனுப்பியிருந்தனர்.

இதேவேளை, இன்றைய சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்றிருந்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவில்லை.

சந்திப்புக்கான ரணிலின் ஆதரவுக் கடிதத்துடன் அவரின் பிரதிநிதி ஒருவர் கலந்துகொண்டார்.

Posted in Uncategorized

ரணில் விக்கிரமசிங்க- சஜித் பிரேமதாஸ சந்திப்பு!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை(17) பிற்பகல் இடம்பெறவுள்ளது.

மேற்படி சந்திப்புக்கள் ஏற்பாட்டை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ரிஷாத்தின் வீட்டில் வேலை செய்த சிறுமியின் மரணம் : விசாரணையில் திருப்பம்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் ஹிஷாலினி எனும் 16 வயது சிறுமி , உடலில் தீ பரவி பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு அதிகாரிகளும், பொரளை பொலிஸாரும் இணைந்து இந்த தீவிர புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் குற்றவியல் மற்றும் போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதானியுமான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இறக்கும் போது 16 வயதும் 8 மாதங்களும் பூர்த்தியான குறித்த அட்டன் – டயகம மேற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி விவகாரத்தில் இதுவரை வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையப்படுத்தி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.

கடந்த 3 ஆம் திகதி வெள்ளியன்று உடலில் தீ பரவியமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஹிஷாலினி அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலை பொலிஸ் பொறுப்பதிகாரி இது தொடர்பில் பொரளை பொலிசாருக்கு அறிவித்து முறையிட்ட நிலையில், இந்த விவகாரத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் கடந்த 7 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் பொரளை பொலிஸாரால் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டு, இரசாயன பகுப்பாய்வுக்கான உத்தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

இந் நிலையில் பலத்த தீ காயங்களுக்குள்ளான ஹிஷாலினி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 73 ஆவது சிகிச்சை அறையில் தீவிர சிகிச்சைப் பிரிவு 2 இல் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார்.

இதனையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற, கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, வழக்கிலக்கம் பீ/52944/2/21 இற்கு அமைய, உயிரிழந்த ஹிஷாலினி தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி ஹிஷாலினியின் சடலம் மீதான பரிசோதனைகள் கொழும்பு சட்ட மருத்துவ நச்சு ஆய்வியல் நிலையம் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு விஷேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக் இந்த பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில், வெளிப்புற தீக்காயங்கள் , கிருமி தொற்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி மரணத்துக்கான காரணமாக அதில் கண்டறியப்பட்டுள்ளது.

விஷேடமாக குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, விஷேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக், 3 சிறப்பு குறிப்புக்களை இட்டுள்ளதுடன், அதில் ஹிஷாலினியின் உடலில் 72 வீதமான பகுதி தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஹிஷாலினி எந்தவிதமான சித்திரவதைகள், கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என குறிப்பிட்டுள்ள சட்ட வைத்திய அதிகாரி, நாற்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலான சான்றுகள் உள்ளதாக சுட்டிக்கட்டியுள்ளார்.

இந் நிலையிலேயே ஹிஷாலினி விவகாரத்தில் இருவேறு விடயங்களை மையப்படுத்தி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஹிஷாலினி பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா, அவர் வீட்டு வேலைக்காக சேர்க்கப்படும் போது 16 வயதை பூர்த்தி செய்திருந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

Posted in Uncategorized

ரிஷாட் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின் நிமித்தம் கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மாரடைப்பு கரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 42 ஆம் இலக்க சிகிச்சை அறையில் அவர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதி செய்தன.

ரிஷாத் பதியுதீன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ள நிலையில், அதனையடுத்தே அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சி.ஐ.டி.யினர் அழைத்து சென்றதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.

அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளை அடுத்து அவர் தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யினரின் பாதுகாப்புக்கு மத்தியில் அவர் சிகிச்சைப் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

சர்வதேசத்தை வளைக்க முன் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும்

புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இலங்கையில் உள்ள அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரித்தானிய தூதுவர்களை அவசர அவசரமாக சந்தித்துள்ளார். நம்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவை என்று கூறுகிறார். அதற்கு இந்த தூதுவர்கள் உதவ வேண்டுமெனவும் கூறுகிறார். புதிய நிதியமைச்சரின் கருத்து சரிதான்.

ஆனால், சர்வதேச நாடுகளை வளைத்து போட, நிதியமைச்சரை மாற்றி, தூதுவர்களை சந்தித்து கோரிக்கை விடுப்பது மாத்திரம் போதாது. இலங்கை அரசாங்கம் தனது, “போலி தேசியவாத” கொள்கையை மாற்ற வேண்டும். இனவாதத்தை கைவிட்டு, தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.

அதேபோல் இலங்கை அரசாங்கம், உலக நாடுகளுக்கு தந்துள்ள தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவை பற்றிய உறுதிமொழிகளை காப்பாற்றுகின்றதா என்பதை, இந்த அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரித்தானிய தூதுவர்களும் உறுதி செய்து விட்டு, இலங்கை அரசுக்கு உதவ முன்வர வேண்டும். அதைவிடுத்து விட்டு, தங்கள் சொந்த நலன்களுக்காக, தமிழ் பேசும் மக்களின் தோள்களில் சவாரி ஓட இனியும் முனைய கூடாது. உங்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற நிலைக்கு தமிழ் மக்களை தள்ளி விட வேண்டாம். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என, இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து “வன் பெல்ட்-வன் ரோட்” என்ற சீனாவின் பட்டுப்பாதையில் தமிழ் மக்களும் பயணிக்கும் நிலைமையை உருவாக்கிட வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இவ்விவகாரம் பற்றி தமுகூ தலைவர் மனோ எம்பி மேலும் கூறியதாவது, புதிய துடைப்பான் நன்றாக துடைப்பது போன்று, புது நிதி மந்திரி பதவிக்கு வந்தது முதல் நன்றாக சுறுசுறுப்பாக இயங்குகிறார். விளைவுகள் இன்னமும் வெளிவரவில்லை என்றாலும், பசில் ராஜபக்ச அரசுக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் ராஜபக்ச சகோதரர்களின் தோல்வியால் துவண்டு போயிருந்த இலங்கை பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு பெசில் ராஜபக்சத்தான் இப்போது கிடைத்துள்ள ஒரே துருப்பு சீட்டு என நன்றாக தெரிகிறது.

இவரது மூத்த சகோதரரும் பிரதமரும் முன்னாள் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச தந்து கையில் எப்போதும் ஒரு மந்திர பந்தை வைத்து உருட்டிக்கொண்டே இருப்பார். கடைசியில் அந்த மந்திர பந்து சரியாக வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. அது சரியாக வேலை செய்து இருந்தால், அவர் பதவி விலகி அந்த இடத்துக்கு பெசில் வர வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்காதே.

இப்போது புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, ஏறக்குறைய எனக்கு எதிரிலேதான் ஆளும் தரப்பில் அமர்ந்துள்ளார். அலாவுதீனின் அற்புத விளக்கை, பெசில் தனது கையில் வைத்திருக்கின்றாரா என நான் அவர் பாராளுமன்றம் வந்த நாளன்று தேடி பார்த்தேன். அலாவுதீனின் அற்புத விளக்கை காணோம். தனது அலுவலகத்தில் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை.

‘அண்டா-கா-கசம், அபூ-கா-கசம்-திறந்திடு சீசே’ என்ற மந்திரத்தை சொல்லி, கொள்ளையன் அபு ஹுசைனின் ரகசிய குகையை திறந்து, தங்கத்தையும், வைரத்தையும், செல்வத்தையும், நம்ம அலிபாபா எடுத்து தந்ததை போல, நம்ம புதிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்சவும் மக்களுக்கு மந்திரத்தால் நிவாரணம், விலை குறைப்பு, சம்பள உயர்வு, இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு, அனைவருக்கும் எல்லையில்லா தடுப்பூசி என்று வரிசையாக எடுத்து விடுவார் என எதிர்பார்த்தேன்.

அவர் தற்போது, அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரித்தானிய தூதுவர்களை சந்தித்து ஒத்துழைப்பை கோரி உள்ளார். நிறைய ன் முதலீடுகளையும், கடன்களையும், நன்கொடைகளையும், நிதி அமைச்சர் கோரினார் என எனக்கு ஒரு மேற்குலக வெளிநாட்டு தூதுவர் கூறினார். நல்ல விசயம்தான். எப்படியாவது மக்களுக்கு நல்லது நடந்தால் சரி. எமது அரசாங்கம் விரைவில் வரும். அதுவரை கஷ்டத்தை பொறுத்துக்கொண்டு இருங்கள் என நான் அரசியல் நோக்கில் பேச மாட்டேன். எங்கள் மக்களுக்கு நன்மை கிடைத்தால், நாம் உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும், அது நம்ம அரசாங்கம்தான்.

ஆனால், புதிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்சவும், அவரது ஜனாதிபதி சகோதரரும், பிரதமர் சகோதரரும், தமது கொள்கைகளை மாற்ற வேண்டும். தொட்டதுக்கு எல்லாம் போலி தேசியவாதம் பேசி, நாடு பறி போகிறது என்று கூறி, சிங்கள இனம், பெளத்த மதம் ஆகிய இரண்டையும் இழுத்து விடும் பழக்கத்தை கைவிட வேண்டும். தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவை தொடர்பில் உலகத்துக்கு கொடுத்த உறுதி மொழிகளை நிலை நாட்ட முன் வர வேண்டும். தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க இலங்கை மக்களின் மனங்களை வெல்ல முயல வேண்டும். அப்படி செய்தால், இலங்கை நாட்டை நோக்கி முதலீடுகள் குவியும். செல்வம் குவியும். வானளவு வளம் குவியும்.

அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரித்தானிய நாட்டு தூதுவர்களுக்கும் ஒன்றை கூற விரும்புகிறேன். இந்த செய்தியின் மொழிபெயர்ப்பு இவர்கள் கவனத்துக்கு போகும் என எனக்கு தெரியும். தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க இலங்கை மக்களை இந்த அரசாங்கம் நியாயமாக நடத்துகிறதா என தேடி பாருங்கள். தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை உறுதி செய்ய சொல்லுங்கள். உங்கள் சொந்த நலன்களுக்காக தமிழ் மக்களை பயன்படுத்த முயல வேண்டாம்.

உங்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற நிலைக்கு தமிழ் மக்களை தள்ளி விட வேண்டாம். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என, இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து “வன் பெல்ட்-வன் ரோட்” என்ற சீனாவின் பட்டுப்பாதையில் தமிழ் மக்களும் பயணிக்கும் நிலைமையை உருவாக்கிட வேண்டாம் எனக்கூறி வைக்க விரும்புகிறேன்.

Posted in Uncategorized

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து மஹா சங்கத்தினருக்கு ஜனாதிபதி விளக்கம்

நாட்டின் எதிர்காலத்திற்காக முன்னெடுக்கப்படும் கொள்கை சார்ந்த திட்டங்களுக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பது எதிர்கால தலைமுறையினருக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாக கருதப்படும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்ட மூலத்தில் உள்ள தடைகளை நீக்கி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பௌத்த மகாசங்கத்தினரிடம் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை பௌத்த ஆலோசனை சபை ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது,

உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் அதிக நிதியை செலவு செய்கிறார்கள். இந் நிதியை சேமிக்க வேண்டுமாயின் உயர் தரம் வாய்ந்த பல்கலைகழகங்கள் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்ட மூலத்தில் உள்ள தடைகளை நீக்கி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

பயணக்கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிப்பு!

தற்போது அமுலாக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தும் நோக்கில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திலிருந்து அமுலாகும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மிருககாட்சிசாலைகளை பார்வையிட ஒரு தடவையில் 25 வீதமானவர்களுக்கே அனுமதியளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளக இசைநிகழ்ச்சிகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடாத்தவும் புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வழிப்பாட்டு தலங்களை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டல்கள் வேறுவேறாக வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் புதன் பேச்சு

அரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகளை களைவதற்காக, எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமையன்று முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் ஸ்ரீ லங்கா சுத்திரக்கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலேயே இப்பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடனும் தனியாக, சுதந்திரக் கட்சியினர்
பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என அறியமுடிகின்றது.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்திலும், பிரதமருடனான பேச்சுவார்த்தை அலரிமாளிகைளிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. எனினும், பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு இன்னும் திகதி குறிக்கப்படவில்லை என்றும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை கவனத்தில் எடுக்காமல் விடுதல், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்காக, ஒருங்கிணைப்பாளர்களை இணைத்துக் கொள்ளும் போது, சுதந்திரக் கட்சியினரை கணக்கிலெடுக்காது விடல், உள்ளிட்டவை தொடர்பில், அரசாங்கத்துக்கு எதிராக, சுதந்திரக் கட்சியினர் தொடர்ச்சியாக
குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதேவேளை, அரசாங்கத்தின் பங்காளியிலிருந்து விலகுமாறும், சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், அண்மையில் நடந்த
மத்தியக்குழுக் கூட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தனர்.

எனினும், நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு அவ்வாறான தீர்மானங்களை அதிரடியாக எடுக்காமல், அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடன் பேச்சுவார்த்தை ஈடுபடுவதற்கே சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.அதன்பிகாரமே எதிர்வரும் 21ஆம் திகதியன்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை ஆகஸ்ட் வரை இடைநிறுத்தம்

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளை நாளை (17) முதல் இடைநிறுத்தவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்தார்.

இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதனடிப்படையில், நாளை (17) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களின் போக்குவரத்து வசதி கருதி மாத்திரமே மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் கடந்த புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டன.

Posted in Uncategorized