ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒத்தி வைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இந்தப் பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 27ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிரேஸ்ட தலைவர்கள் சிலர் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொள்ளவிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணக்கட்டுப்பாடு விவகாரம் ; இராணுவ தளபதியின் அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமைக்கு கொண்டுவர எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் ஜூன் 10 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றறிக்கை வெளியிட்டார்.

பின்னர், ஜூலை 14 முதல் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி அத்தியாவசிய கடமைகளுக்காக மாகாணங்களுக்கு இடையில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ் மற்றும் ரயில்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், இந்த முடிவு எடுக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு, மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் ஓகஸ்ட் முதலாம் திகதிவரை வரை நிறுத்தப்பட்டன.

இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட பஸ் மற்றும் ரயில் சேவைகள் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையில் இயங்கும் என்றாலும், மறு அறிவிப்பு வரும் வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஹிருணிகா உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கடந்த மாதம் பொது மன்னிப்பு வழங்கி விடுவித்திருந்தார்.

இந் நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய பொது மன்னிப்பின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வியான ஹிருணிகா பிரேமச்சந்திர, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

துமிந்தா சில்வாவுக்னா பொது மன்னிப்பு முடிவு நியாயமற்றது மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2016 செப்டெம்பர் மாதம் மரண தண்டனை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுமிக்கு நீதி கிடைக்க ரிஷாத் எம்.பி. முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ; ரெலோ செயலாளர் ஜனா எம்.பி

பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் மரணித்துள்ள சிறுமிக்கு நீதி கிடைக்க ரிஷாத் பதியுதீன் எம்.பி. முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில்,

ரிஷாத் பதியுதீன் எம்.பி.யின் வீட்டில் மலையக சிறுமி ஒருவர் மரணித்திருக்கின்றார்.

பொறுப்பு வாய்ந்த ஒரு கட்சியின் தலைவர், ஒரு பாராளுமன்ற உறுப்பினர், ஒரு சமூகத்தை வழிநடத்துபவர் என்ற ரீதியில் ரிஷாத் பதியுதீன் எம்.பி. அந்த சிறுமிக்கு நீதி கிடைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்துடன் மன்னாரில் இருந்து இமானுவேல் எமாஞ்சலின் என்ற யுவதி விமானியாக முதல்கட்ட பயிற்சியை முடித்துள்ளார். அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பிலும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.

Posted in Uncategorized

உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் பாராளுமன்றில் இன்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பில் குறித்த பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 151 வாக்குகளும் , எதிராக 62 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

இதற்கமைய, நம்பிக்கையில்லா பிரேரணை 91 ​மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று (19) ஆரம்பமானதுடன், இன்றும் இடம்பெற்றது.

Posted in Uncategorized

டயகம சிறுமிக்கு நீதி கோரி ரிஷாத் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து எரிகாயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நியாயம் கோரி இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு – பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்திற்கு முன்பாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் எஸ்.இராஜேந்திரன்,

வறுமை நிலையிலுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை இவ்வாறு வீடுகளில் பணிக்கு அமர்த்துகின்றனர். இவ்வருடத்தில் மாத்திரம் இது போன்று 10 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த சம்பவம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

வறுமையிலுள்ள குடும்ப பிள்ளைகளுக்கு இவ்வாறு அநீதி இழைக்கப்படுவதை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே உயிரிழந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்கும் வரை எமது போராட்டத்தை நாம் கைவிடப் போவதில்லை. பாராளுமன்றத்திலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த சிறுமி குறித்து கருத்து வெளியிடவில்லை.

தேர்தல் காலங்களில் சென்று வாக்கு கேட்கும் இவர்கள் , பாராளுமன்றத்தில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதன் காரணமாகவா இது தொடர்பில் கருத்து வெளியிடவில்லை என்று கேள்வியெழுப்புகின்றோம். எனவே அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் இதற்கான நீதியை வழங்க வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மனோ கணேசன் கூட்டணி ஆதரவு

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

இந்த விடயத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பிக்களான மனோ கணேசன், வே.இராதாகிருஷ்ணன், ப.திகாம்பரம், எம்.வேலுகுமார், எம்.உதயகுமார் ஆகியோர் நாளை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று விவாதம் ஆரம்பமானது. நாளை மாலை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மலையக சிறுமி மரணம் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

ரிஷாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நான்கு பேரின் தொலைப்பேசி உரையாடல் பதிவு அறிக்கையை பொரளை பொலிஸில் உடனடியாக ஒப்படைக்குமாறு சேவை வழங்குனர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், ரிஷாட் பதியுதினின் வீட்டில் உயிரிழந்த 16 வயது சிறுமியை அழைத்து வந்த இடைத்தரகரின் வங்கிக் கணக்கு தகவல்களையும் பொரளை பொலிஸிற்கு பெற்றுக் கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

டயகம பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரிஷாட் பதியுதீன் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியின் வயது 15 வருடங்களும் 11 மாதங்களும் ஆகும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த குறித்த சிறுமி கடந்த ஜூலை மாதம் மூன்றாம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தயார் – கோட்டாபய ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விரும்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மட்டுமல்லாது அதற்குப் பின்னர் வரும் ஐந்து வருடங்களுக்கும் தனது அரசியல் கொள்கைகளை அமுல்படுத்ததவுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அதரவாக வாக்களிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுக் கொண்டு இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டிருந்தால் இன்னும் பலபம்பொருந்தியதாக அமைந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized