யாழில் 58 பேர் உள்ளடங்கலாக வட மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை (மே 13) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடம் என்பவற்றில் 853 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் மன்னாரில் இருவரும் என வடக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 74 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மாங்குளம் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தருமபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நால்வரும் வீதி சீரமைப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் 2 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சுகாதார உத்தியோகத்தர்கள்.

வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 18 பேருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 39 பேருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கும் என 58 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு குழந்தையும் அடங்குகின்றார். இந்தியாவிலிருந்து தப்பித்து யாழ்ப்பாணம் வந்த நால்வர் குருநகரில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு குழந்தைக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 11 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நெல்லியடி வெதுப்பகத்தின் ஊழியர்கள்.

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 21 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தையிட்டி கிராமத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டவர்கள். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருமண நிகழ்வுக்கு தடை என அறிவிக்கப்பட்ட பின் இரகசியமாக இந்த திருமண நிகழ்வை நடத்தியுள்ளனர்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Posted in Uncategorized

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த தடை உத்தரவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட மக்களை நினைந்து முள்ளிவாய்க்காலில் ஆண்டு தோறும் மே 18 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைந்த பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் பொது நினைவுக்கல் ஒன்றினை நடுகை செய்ய கொண்டு சென்றவேளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தடுத்துள்ளதுடன் குறித்த நினைவுகல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளதுடன் நினைவுத்தூபியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் பலர் தங்கள் கண்டனங்களை வெளிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கோ மக்கள் கூடுவதற்கோ முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளார்கள்.

கொரோனா நிலையினை கருத்தில் கொண்டு 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் எந்த நிகழ்வும் நடத்தகூடாது மக்கள் கூடக்கூடாது பொது இடத்தில் வைத்து நினைவுகூர கூடாது என்றும் இந்த தடை உத்தரவினை முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு சமர்ப்பித்து அதற்கான அனுமதியினை பெற்றுள்ளார்கள்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவினை சேர்ந்த து.ரவிகரன், ம.ஈஸ்வரி, பீற்றர் இளஞ்செழியன், க.விஜிந்தன், ச.விமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

ஏ.ஆர் 418 / 21 வழக்கு இலக்கத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

19, 20 ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம் தொடர்பான விவாதம்

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதத்தை இம்மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

புத்த பிக்குகளின் இராச்சியமாக இந்த நாடு மாறியுள்ளது முள்ளிவாய்க்காலில்- ரெலோ தலைவர் செல்வம்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளமை மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய நிலமைககள் தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் திருடப்பட்ட உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு இடத்தினை பார்வையிட்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்..

அவர் நினைவுத்தூபி உடைக்கப்பட்ட இடத்திலிருந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உடைக்கப்பட்டுள்ளது எங்கள் மக்கள்துன்பங்களை நினைவுகூருகின்ற நினைவுத்தூபியாக புனித இடமாக பார்க்கப்பட்டுள்ளது படையினரின் அடாவடித்தனங்கள் பொலீசாரின் மேற்பார்வையுடன் உடைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக காணக்கூடியதாக இருக்கின்றது.

எங்கள் பங்குத்தந்தையர்கள் நேற்று ஆரம்பிக்கின்ற நாளாக நினைவுச்சின்னத்தினை நாட்டுவதற்காக வந்தபோது படையினர் குவிக்கப்பட்டு அதனை செய்யவேண்டாம் என பொலீசார் அறிவித்துள்ளார்கள்.

அதன்பின்னர் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளது ஆகவே படையினர் அந்த நினைவுத்தூபியினை உடைத்துள்ளார்கள் என்பதை வெளிப்படையாக சொல்கின்றேன்.இதில்இருந்து தெரிகின்றது இந்த தேசதம் இரண்டாக உள்ளது சிங்களதேசம் தமிழ்தேசம் என இரண்டாக இருக்கின்றது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

குருந்தூர்மலையில் புத்தபிக்குகள்,படையினர் புடைசூழ பிரித் ஓதப்பட்டு விழாக்கோலம் போட்டது போல் காட்சியளித்தது இராணுவத்தளபதி சொல்கின்றார் நினைவேந்தலை வீடுகளில் செய்யவேண்டும் என்று சொல்கின்றார்கள் இன்றில் இருந்து 17 ஆம் திகதி தொடக்கம் கொரோனா வைரஸ்சினை நிறுத்துவதற்காக நாடு முடக்கப்படுகின்றது.

புத்த பிக்குகள் தமிழர் பிரதேசத்தில் வந்து பெரியளவில் பிரித் ஓதுகின்றார்கள் படையினர் குவிக்கப்பட்டு சுகாதார முறைப்படி அவர்கள் எப்படி செயற்பட்டிருக்கமுடியும் அங்கு சட்டம் வேறையாக இருக்கின்றது.

எங்கள் பங்குத்தந்தைகள் இங்கு வந்து நினைவுத்தூபியினை செப்பனிடவரும் போது தடுக்கப்படுகின்றார்கள் காரணம் வைரஸ்தொற்றுக்கான நடவடிக்கை என்று .
இதில் தெரிகின்றது இந்த நாடு புத்த பிக்குகளின் இராச்சியமாக இந்த நாடு மாறிஇருக்கின்றது இதனை விட இரண்டு நாடுகளாக இலங்கை இருக்கின்றது தமிழர்களின் பிரதேசத்தில் எதுவும் நடக்கலாம் சிங்கள பிரதேசங்களில் மிகவும் நேர்த்தியான முறையில் அவர்களின் செயற்பாடுகள் இருக்கின்றது.

ஆகவே புத்த பிக்குகள்,இராணுவம்,பொலீசார் தமிழ்பிரதேசங்களில் எதுவும் செய்யலாம் சட்டம் ஒழுங்கு என்பது இங்கு மறுக்கப்பட்டுள்ளது.

ஆகவே தமிழர்கள் பூர்வீகம் உடைக்கப்படுகின்ற சிதைக்கப்படுகின்ற ஒரு நிலையினை இந்த அரசாங்கம் கொண்டிருக்கின்றது என்பதை உறுதியாக இந்த நேரத்தில் உணர்த்த முடியும் ஆகவே எங்கள் மக்கள் எங்கள் கட்சிகள் ஒன்றிணையவேண்டும்.

இதற்காக போராடவேண்டும் எங்கள் தேசத்தினை நிலத்தினை காப்பாற்ற நாங்கள் முனைப்புடன் செயற்படவேண்டும் என்று படுகொலைசெய்யப்பட்ட மக்களின் அவல ஓலங்கள் ஜ.நாவினை தட்டியது எங்கள் கட்சிகளின் மனங்களையும் தட்டவேண்டும் பொதுமக்களின் மனங்களையும் தட்டவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மிலேச்சத் தனத்தின் உச்ச வடிவம் இனப்படுகொலையின் மறுவடிவம் – ரெலோ வன்மையாகக் கண்டிக்கிறோம்

மிலேச்சத் தனத்தின் உச்ச வடிவம்,இனப்படுகொலையின் மறுவடிவம்

மரணித்த மக்களை நினைவு கூரும் சின்னங்களை அழிக்கும் கொடுமை உலக நாகரீகத்தில் எங்கும் இல்லாத ஈனச் செயல்.

வெட்கப் படவேண்டியது. கண்டிக்கப்பட வேண்டியது.

முல்லைத்தீவில் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட, 2009 மே 18 இல் முடிவடைந்த இனவழிப்பு கொடிய யுத்தத்தில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் ஆத்மாக்களை வருடா வருடம் நினைவு கூர அமைக்கப் பட்ட நினைவுச் சின்னம் நேற்று 12 மே 2021 மானிடத்தை மதிக்காத மனித விலங்குகளால் சேதமாக்கப் பட்டுள்ளமையை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

Posted in Uncategorized

முள்ளிவாய்க்கால் நினைவுக் கல் மாயம்; நினைவுச் சின்னமும் சிதைக்கப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத் தூபி இன்று வியாழக்கிழமை(13) அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

நேற்றுப் பிற்பகல்-06 மணியளவில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கபட்டிருந்தது. இந்த நிலையில் பொலிஸார், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் இணைந்து விசாரணைகளில் ஈடுபட்டிருந்ததோடு நினைவுக்கல் நடுகை செய்யமுடியாது எனத் தடை ஏற்படுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக அப்பகுதி இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்ததுடன் முள்ளிவாய்க்கால் முற்றத்துக்குச் செல்லும் அனைத்து வீதிகளிலும் உள்நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே இரவோடு இரவாக நினைவுக்கல் காணாமல் ஆக்கப்பட்டிருந்ததுடன் பொது நினைவுத்தூபியும் அடித்து உடைத்தெறியபட்டுள்ளது .

நினைவுக்கல் இருந்த இடம் தெரியாது அகற்றிச் செல்லப்பட்டுள்ளதுடன் பொது நினைவுத்தூபியும் உடைக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கிலோவுக்கு அதிகமான எடையைக் கொண்ட நினைவுக்கல் கனரக வாகனங்களைக் கொண்டு அகற்றிச் செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, இரவிரவாக அப்பகுதி முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டிருந்ததாகவும், இராணுவ வாகனங்கள் சுற்றி திரிந்ததாகவும் அயலில் உள்ள மக்கள் தெரிவித்தனர். உடைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியைச் சூழ இராணுவ சப்பாத்து அடையாளங்களை ஒத்த அடையாளங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

இனப்படுகொலை நடந்த முல்லை மண்ணில் மீண்டும் கலாசாரப் படுகொலை – ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் தெரிவிப்பு

இனப்படுகொலை நடந்த முல்லை மண்ணில் மீண்டும் கலாசாரப் படுகொலை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் எப்படி ஒரு தமிழினப் படுகொலை அரங்கேற்றப்பட்டதோ அதே மே மாதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனைப் பிரதேசத்தில் குருந்தூர் மலையில் தமிழர்களின் கலாசார மத அடையாளங்களை பிரதிபலித்த ஆதிசிவன் ஐய்யனார் அமைந்திருந்த இடத்தில் தொல்லியல் என்ற போர்வையில் கையகப்படுத்தி இராணுவ இரும்புக்கரம் கொண்டு எந்தவிதமான ஐனநாயக, சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றாது பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு புத்தரின் சிலையை வைத்து பௌத்த பிக்குகளினால் பிரித்து ஓதல் நடைபெறுதல் மீண்டும் ஒரு கலாசார படுகொலையை முல்லை மண்ணில் அரங்கேற்றியுள்ளது.

தொல்லியல் திணைக்களம் ஏற்கனவே குருந்தூர் மலையில் மேற்கொண்ட ஆய்வில் இறுதியில் கண்டெடுக்கப்பட்டது சிவலிங்க வடிவிலான தொல் பொருள் என்பது உலகமே அறிந்த விடையம்.

அத்துடன் குருந்தமரம் என்பது இந்துக்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த ஒன்று இதற்கு பல ஆதாரங்கள் உண்டு இவ்வாறான ஒரு கலாசாரப் பகுதி திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றது இதுவும் தமிழர்களின் கலாசாரத்தை இராணுவப் பிடிக்குள் வைத்து மேற்கொள்ளப் படும் படுகொலையாகவே அமைந்துள்ளது.

கொரோன பெரும் தொற்று என பிரகடனப்படுத்தி இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மக்களை கோரும் அரச இயந்திரம் தாங்களே அப்பட்டமாக மீறுகின்ற மிக அவலமான நிலை குருந்தூர் மலையில் இடம் பெற்றுள்ளது. சட்டம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளதுடன் எதேச்சதிகாரம் மேலோங்கி உள்ளதையே இவ்வாறான செயற்பாடுகள் வெளிப்படுத்தியுள்ளது.

மே 18 ஆம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரியுங்கள் – வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் வேண்டுகோள்

போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு – கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18 ஆம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம். என வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்புவிடுத்துள்ளது.

இதுதொடர்பில் போரில் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் தினம் என்ற தலைப்பில் மன்றம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மே மாதம் 18ஆம் திகதி இலங்கையின் வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் பன்னிரண்டாவது ஆண்டு நிறைவாகும்.

இறுதிப் போரின் போது கொல்லப்பட்டவர்களுக்கு இறுதிக் கிரிகைகள்கூட செய்யமுடியாது புதைத்துவிட்டு தப்பிப் பிழைத்து வந்தவர்களும், அதற்கு சாட்சிகளாக இருக்கும் ஏனையவர்களும் உயிரிழந்தவர்களை கண்ணீரோடு நினைவுகூரும் நாளாகும். இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையுடைய நாளாகவும் அந்நாள் இருக்கின்றது.

படுகொலை செய்யப்பட்டவர்கள் அனுபவித்த வேதனைகளும் துன்பங்களும் விடுதலை வாழ்வுக்கு தொடர்ந்து பங்களிப்புச் செய்கின்றன.

இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்ற போரிலும் குழப்பங்களிலும் தமது உயிர்களை இழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து செபிக்கும்படியாகவும் கேட்டுநிற்கின்றோம்.

அனைத்துப் பங்குத் தந்தையர்களையும், துறவறக் குழுமங்களையும், மத நிறுவனங்களுக்குப் பொறுப்பானவர்களையும் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மே 18 2021 செவ்வாய்க்கிழமை மாலை 06.00 மணி – ஆலயங்களில் மூவேளை செப மணியோசை எழுப்புதல் மக்களை செபிக்க அழைத்தல்.

ஈகைச் சுடர் ஏற்றுதல் இரண்டு நிமிட அக வணக்கம் இறந்தோர், பாதிக்கப்பட்டோர், துன்புறுவோரை நினைத்து மௌன செபம். மாலை 06.15 மணிக்கு இறந்தோரை நினைவுகூர்ந்து துக்க மணி ஓலித்தல் (கொவிட் 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும்) இவ்வேளையில் மக்கள் தங்கள் இல்லங்களில் இருந்தவாறு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செய்யவும் செபிக்கவும் அறிவுறுத்தவும் என்றுள்ளது.

இவ்வாண்டும் மே 18 முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல்: சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறும்

முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18 அன்று, கொவிட் 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரான எழுச்சிமையம். அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர, விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில்லை என விடுதலைப் போராட்ட வரலாற்றியல் எமக்குக் கற்பித்திருக்கின்றது .

முள்ளிவாய்க்காலும் இதற்கு விதிவிலக்கல்ல முள்ளிவாய்க்கால் நினைவுதினம் கடந்த காலம் தொடர்பானது மட்டுமல்ல, எதிர்கால அடக்குமுறைக்கெதிரான இயங்கியல் தொடர்பானது. கொத்துக் கொத்தாய் இறுதிப்போரில் கொல்லப்பட்ட எமது இரத்த உறவுகளை, அவர்களது கனவுகளைச் சுமந்து கனத்து நிற்கின்றது முள்ளிவாய்க்கால் மண்.

மே 18 நினைவேந்தல் தமிழ் இனப்படுகொலை நீதிக்கான ஒரு தசாப்தத்தைக் கடந்திருந்தாலும், இலக்கினை எட்டும் வரைக்கும் தொடர்ந்து பயணிப்போம் என்ற வாஞ்சை ஈழத்தமிழர்களை ஒருங்கிணைக்கின்றது. எமது வளங்களை ஒன்றிணைத்து , கடந்த கால பட்டறிவிலிருந்து பாடங்களைக் கற்று கொண்டு புதிய உத்திகளைக் கையாண்டு எதிர்காலத்தை எதிர்கொள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அழைப்புவிடுக்கின்றது.

சிங்கள-பௌத்த அரசு முள்ளிவாய்க்கால், இனப்படுகொலையை நிராகரித்து, இறுதிப்போரை பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமாக சித்தரித்து வந்துள்ளது. பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமாக சித்தரிப்பதன் மூலம் பாரிய இனப்படுகொலையை நியாயப்படுத்தி வந்துள்ளது.

இறுதிப் போரை சிங்கள பௌத்ததிற்கு கிடைத்த வெற்றியாக பிரதிபலித்து மகாவம்ச வரலாற்றியலில் சிங்கள வரலாற்றியலில், சிங்கள பௌத்த தேச அரச கட்டுமானத்தை இன்னும் இறுக்கமாக முன்னெடுத்து வருகின்றது. ஒற்றையாட்சிக்குள் மையத்தை வலுப்படுத்துவதன் ஊடாக, அதிகாரப் பரவலாக்கத்தை நீர்த்துபோகச் செய்து தமிழர்களின் அரசியல் கோரிக்கையை வலுவிழக்கச் செய்து வருகின்றது. தமிழரகளின் தாயகமான வடக்கு கிழக்கை துண்டாடி, ஆட்புல கட்டுறுதியை உடைப்பதன் ; வழியாக தாயகக் கோரிக்கையை கேள்விக்குட்படுத்தி வருகின்றது. இராணுவமயமாக்கலை வடக்கு கிழக்கில்

செறிவாக்கி அரசிற்கெதிரான எதிர்ப்பை அடக்கிவருகின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. பின் முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றுத் தளத்தில் நினைவு கூரலை சிங்கள அரசு தொடர்ந்தும் ஈழத்தமிழர்களுக்கு மறுத்தே வந்துள்ளது. தமிழர்களின் பண்பாட்டு தார்மீக உரிமையான நினைகூரல் பல ஆயிரம் ஆண்டுகளைக்கொண்ட பாரம்பரியம்.

இந்நினைவுகூரலுக்கு முஸ்லிம், பெரும்பான்மை முற்போக்கு அமைப்புக்களுக்கு அழைப்பு விடுப்பதோடு தொடர்ந்து குரல் கொடுத்து நீதிப் பயணத்தில் இணைய அழைக்கப்படுகின்றார்கள். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பசில் ராஜபக்ஸ மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றார்

ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இன்று (12) அதிகாலை 3.15 மணிக்கு பசில் ராஜபக்ஸ புறப்பட்டுச் சென்றுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார்.