சுதந்திரக் கட்சியின் சிலர் வீரவங்சவுடன் இணைந்து கிளர்ச்சி செய்கின்றனர் – பசில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தாம் எப்போதும் உதவுவதாகவும் எனினும் அந்த கட்சியின் சிலர் அமைச்சர் விமல் வீரவங்சவுடன் இணைந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதாக பசில் ராஜபக்ச, சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் குற்றம் சுமத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக கடந்த வாரம் பசில் ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்கள் மகிந்த அமரவீர மற்றும் லசந்த அழகியவண்ண ஆகியோர் முன்னிலையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் ஒரு மாகாண சபை தொகுதியில் மூன்று வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று பசில் ராஜபக்ச முன்வைத்த யோசனையை சுதந்திரக் கட்சியின் எதிர்த்ததை அடுத்தே பசில் இப்படியான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதுடன் சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை கோரும் போது அதனை உடனடியாக வழங்குதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள தயாசிறி ஜயசேகர, தன் மீதே இந்த குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் தான் அவ்வாறான கிளர்ச்சியில் ஈடுபடவில்லை எனவும் கூறியுள்ளார்.

சற்றுமுன்: புதிதாக 1,304 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 1,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 109,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 95,975 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி 678 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, வலிதெற்கு பிரதேச சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்.மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை மற்றும் வலிதெற்கு பிரதேச சபைக்கான எல்லைகளை நிர்ணயம் செய்கின்றமை தொடர்பான கலந்துரையாடல் யாழ்.அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட ஒரு பிரதேசம் நல்லூர் பிரதேச சபைக்கானது என்ற கோரிக்கையின் பிரகாரம் எழுந்த சர்ச்சையை அடுத்து அது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்கும் முகமாக இக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த மாநகர முதல்வர். வி.மணிவண்ணன் பிரச்சனைகள் நீண்டு செல்வது உகந்தது அல்ல. அவ்வாறு இப் பிரச்சனை நீடிக்கப்படுவதன் காரணமாக பாதிக்கப்படப்போவது நல்லூர் பிரதேச சபையே அன்றி யாழ்.மாநகர சபை அல்ல. யாழ்.மாநகர சபை போல் நல்லூர் பிரதேச சபையும் ஒரு நகர சபையாகவே மாநகர சபையாகவோ தரமுயர்த்தப்படவேண்டும். அதற்கு அடிப்படையானது இந்த எல்லை நிர்ணயம் எனவே அதனைக் கருத்திற் கொண்டு விட்டுக் கொடுப்புடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்றார்.

யாழ்.மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் அவர்கள் நல்லூர் பிரதேச சபை தங்களுடைய பகுதி என்று உரிமை கூறும் இடங்களில் உள்ள ஆதனங்கள் எதுவும் நல்லூர் பிரதேச சபைக்குரியதாக இல்லை. அவை மாநகர சபைக்குரியது. அவர்கள் தங்களுடைய வரிகளினை மாநகர சபைக்கே செலுத்துகின்றார்கள் எனவே நல்லூர் பிரதேச சபை கோருகின்ற பகுதிகளை எம்மால் வழங்க முடியாது என்றும் ஆனால் தொழிநுட்ப கல்லூரியின் ஒரு கட்டிடப் பகுதியின் நடுவே மாநகர சபையின் எல்லைக் கோடு செல்வதனால் அக் கட்டிடப்பகுதியினை முழுமையாக நல்லூர் பிரதேச சபைக்கு விட்டுக் கொடுக்க இணக்கம் தெரிவிக்க முடியும் என்று தெரிவித்தார்.

இவ்விடயத்தில் கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்கள் தற்போது மாநகர சபைக்கு ஆதனவரிகளைச் செலுத்திக்கொண்டு இருப்பவர்களை பிரதேச சபைக்கு மாற்ற முடியாது அதன் அடிப்படையில் மாநகர சபை தமக்குரியது என்று கூறுகின்ற பகுதிகளுக்குள் உள்ளவர்கள் மாநகர சபைக்கே தங்களுடைய ஆதனவரிகளைச் செலுத்திக் கொண்டிருப்பதனால் அப் பகுதி மாநகர சபைக்கே உரியது. எனவே குறித்த பகுதி மாநகர சபைக்கே உரியது என்ற இணக்கப்பாட்டிற்கு வருவோம் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து நல்லூர் பிரதேச சபை மற்றும் வலிதெற்கு பிரதேச சபைகளின் எல்லைகளை நிர்ணயம் செய்கின்றமை தொடர்பில் விவாதிக்கப்பட்டது.
யாழ்.மாவட்ட அரச அதிபர் மகேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் யாழ்.மாவட்ட மாவட்ட மேலதிக அரச அதிபர்கள், யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில் பிரதேச செயலாளர்கள், யாழ்.மாநகர முதல்வர், நல்லூர் பிரதேச சபைத் தலைவர், வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர்,யாழ்.மாநகர ஆணையாளர், நல்லூர் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

Posted in Uncategorized

மட்டக்களப்பு புளுட்டுமானோடை பகுதியில் உள்ள பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசத்திற்கு த.தே.கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் கள விஜயம்!

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் புளுட்டுமானோடை பகுதியில் உள்ள பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசத்தினை அண்மையில் அரச அதகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பௌத்த பிக்குகள் வருகை தந்து பார்வையிட்டு அவ்விடத்தில் பௌத்த மத்தியஸ்தானம் அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் அவ்விடம் கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசசபைப் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் உள்ளிட்ட பலரும் இவ் விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பிரதேசத்தின் நிலைமைகள் மற்றும் சூழமைவுகள் தொடர்பில் இவர்கள் பார்த்து பரிசீலித்தனர். இப்பிரதேசம் பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசமாக இருப்பதுடன் பல செதுக்கல்கள், படி அமைப்புகள் போன்றனவும் இங்கு அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி பிரதேசம் தொல்பொருள் சார்ந்த பிரதேசமாக இருந்தாலும், இதனை வைத்து இது பௌத்தத்திற்குரியது என்று சொல்லி பௌத்த விடயங்களை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு அரசு செயற்பட முனையக் கூடாது, அதிகாரிகளும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கக் கூடாது,

அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படின் அதற்கெதிரான நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்ற அடிப்படையில் ஊடகங்கள் வாயிலாக அவரவர் கருத்துக்களை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா : 12 புதிய கட்டுப்பாடுகளின் புதிய சுகாதார வழிகாட்டி விவரம்

நாட்டில் ​கொரோனா தொற்றின் வேகம், நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அதிகரித்து செல்லும் நிலையில், சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.

அதடினப்படையில்..
​கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் செய்யவேண்டும்.

இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், மறு அறிவித்தல் வரையிலும் மூடப்படும்.

வெசாக், றமழான் ​பெருநாள்களை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும்.

ஹோட்டல்களில் கூட்டங்கள் மற்றும் ஒன்று கூடல்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது.

அரச ஊழியர்கள், பொதுநிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் வருகை தரவேண்டும்.

தனியார்துறை ஊழியர்கள் குறைந்தளவானோர் அலுவலகத்துக்கு சமூகமளிக்க வேண்டும்.

பொது போக்குவரத்து சேவைகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்லவேண்டும்.

மாநாடு, கருத்தரங்கு, கூட்டங்கள், பகல்போசன விருந்துபசாரம், மே.21 வரை தடைச்செய்யப்பட்டுள்ளன.

அங்காடிகள், மொத்த வர்த்த நிலையங்கள், நிதி நிறுவனங்கள், புடவை கடைகள், சில்லறை கடைகளில், மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்குள் மட்டுப்படுத்தவேண்டும்.

மத வழிபாட்டு இடங்களில் பொதுமக்கள் ஒன்றுக்கூட முடியாது.
கைதிகளை பார்வையிட முடியாது.

நீதிமன்றத்தில் முழு கொள்ளளவு 25 சதவீதத்துக்கு இருக்கவேண்டும். மக்கள் வருகைதரமுடியும்.

இசைக்கச்சேரி, கரையோர ஒன்றுகூடல்கள், உற்சவங்களுக்கு முழுத்தடை
மே.4 முதல் மே 20 வரை திருமண வைபவங்களுக்கு அனுமதி இல்லை. மே.20 ஆம் திகதியன்று நாட்டில் காணப்படும் கொரோனா நிலைமையை கருத்தில்​கொண்டு அது திருத்தப்படும்.

Posted in Uncategorized

சிங்கப்பூர் இத்தாலி நாடுகள் இலங்கைப் பயணிகளுக்கு பயணத் தடைகளை விதித்தன

கடந்த 14 நாட்களுக்குள் இலங்கைக்கு பயண வரலாற்றைக் கொண்ட நீண்ட கால பாஸ் அனுமதி வைத்திருப்போர் மற்றும் குறுகிய கால வருகை யாளர்கள் நாட்டுக்குள் நுழைவது தடை செய்யப்படும் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தடை இன்று(1) முதல் நடைமுறைக்கு வருவதுடன் மறு அறிவித்தல் வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வருவோருக்கும் இந்த நிபந்தனை அமுல்படுத் தப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்குள் நுழைய முன் அனுமதி பெற்ற அனைவருக்கும் இத்தடை பொருந்தும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு சமீபத்திய பயண வரலாற்றைக் கொண்ட கப்பல் பணியாளர்களின் மாற்றல்களுக்கும் தடை செய்வதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கையில் கொவிட்-19 தொற்று அதிகரித்துள்ளதால் இலங்கையர்கள் இத்தாலிக்குள் நுழைவதை அந்நாடு தடை செய்துள்ளது.

மேலும் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருவதால் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் தங்கள் பிரஜைகள் இலங்கைக்கு பயணிப்பதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெண்களுக்கு 30 வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் தமிழ் கட்சிகளிடம் யாழில் பெண்கள் போராட்டம்

தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெண்களுக்கு 30 வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உழைக்கும் மகளீர் அமைப்பின் இயக்குனர் மிதுலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் கோரியுள்ளார்.

உழைக்கும் மகளீர் அமைப்பின் இன்றைய மேதின ஒன்று கூடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் “பெண்கள் அனைவரையும் ஒன்றிணைத்து சமூக பொருளாதார ரீதியாக முன்னேற வைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

மே தினமாகிய இன்றைய தினம் நாம் ஒரு பெரிய நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். அதனை தற்போது நிறுத்தி இருக்கின்றோம். எனினும் இன்றைய தினம் ஒரு சிறிய ஒன்றுகூடலை நடத்தினோம்.

அதில் அரசியலில் பெண்களுக்கு 30 வீதமான இட ஒதுக்கீடு மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத்திலும் வழங்கப்பட வேண்டும். இம்முறை தமிழ் பெண்கள் எவரும் பாராளுமன்றம் செல்ல வில்லை. ஆனால் பெரும்பான்மை கட்சிகளில் பெண்கள் பலர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்று இருக்கின்றார்கள்.

ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரைக்கும் பெண்களில் ஒருவரும் நாடாளுமன்றம் செல்ல வில்லை. என்பது குற்றச்சாட்டாக காணப்படுகின்றது.

யுத்த காலத்தில் இருந்து பெண்களாகிய நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே பெண்கள் எமது பிரச்சனையை தீர்ப்பதற்கு நாமே பாராளுமன்றம் மற்றும் ஏனைய சபைகளுக்கு செல்வதன் மூலம் எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள முடியும்.

எனவே எம்மை போன்ற பெண்களை நாடாளுமன்ற அனுப்புவதன் மூலம் தங்களுடைய பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக் கொள்வார்கள். எனினும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும முகம் கொடுத்துக் கொண்டு கையேந்தி நிற்கும் நிலை காணப்படுகின்றது.

பலர் கடனாளிகளாக இருக்கின்ற நிலை காணப்படுவதோடு பலர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றதோடு, சமூக மட்டத்தில் பல பாதிப்புக்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

எனவே அவ்வாறான பெண்களின் வாழ்வாதாரத்தை வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நாங்கள் எமது அமைப்பின் மூலம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

ஒவ்வொரு மாதமும் போயா தினங்களில் அனைத்து பெண்களையும்இணைத்து ஒன்றுகூடல் நடத்துவது வழக்கம்
அதேபோலத்தான் மே தினமாகிய இன்றைய தினம் இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருக்கிறோம். எமது மே தின கோரிக்கையாக 30 வீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்பதாகும்.

முக்கியமாக தமிழரசுக் கட்சியாக இருக்கலாம் , ரெலோ, புளொட். மற்றும் விக்னேஸ்வரன் அனந்தி சசிதரன் போன்ற அனைத்து தமிழ் கட்சிகளும் பெண்களுக்கு 30 வீதமான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதுதான் மேதின தினமாகிய இன்றைய தினம் எமது கோரிக்கையாகும்.

தமிழ் கட்சிகள் வெல்லக்கூடிய பெண்களை தேர்தலை நிறுத்துவது இல்லை. வெல்லாத பெண்களை நிறுத்தி விட்டு பெண்கள் தேர்தலில் வெல்ல மாட்டார்கள் என காண்பிப்பது வழமை.

எனவே அனைத்து தமிழ் கட்சிகளும் 30 வீத இட ஒதுக்கீட்டை எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் வழங்க வேண்டும். என்பதுதான் மே தினத்தில் எமது கோரிக்கையாக காணப்படுகின்றது. பல்வேறுபட்ட திறமையான பெண்கள் உள்ளார்கள். அவர்களை தேர்தலில் நிறுத்தினால் கட்டாயம் வெல்வார்கள்” என்றார்.

Posted in Uncategorized

யாழ். கொடிகாமம் மரக்கறி சந்தைக்கு பூட்டு

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மரக்கறி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் நடத்தப்பட்ட எழுந்தமானமான பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சந்தை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சுகாதார பிரிவினரால் சந்தை முடக்கப்பட்டிருப்பதுடன், தொற்று நீக்கம் செய்யப்பட்டு சந்தையில் உள்ள ஏனைய வர்த்தகர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு இனிவரும் பீ.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில் சந்தையை மீளவும் திறப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என சுகாதார பிரிவனர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சீனாவின் அடிப்படை அபிலாஷைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கும்: ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல்

இலங்கை சீனாவுடன் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கு முன்னுரிமையளித்துள்ளதாகவும் சீனாவின் அடிப்படை அபிலாஷைகளுக்கு உயர் மட்டத்தில் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக Xinhua News Agency இன்று தகவல் வௌியிட்டுள்ளது.

சீன பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe உடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சுயாதீன வௌிநாட்டுக் கொள்கையை கடைப்பிடிப்பதாகவும் வலயத்திற்கு வௌியில் உள்ள உலகின் அதிகாரமிக்கவர்களின் அதிகாரத்திற்கு அடிபணியப் போவதில்லையெனவும் எந்தவொரு நாட்டுடனும் கூட்டிணைவதில்லையெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டதாக Xinhua செய்தி வௌியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன

நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் மே 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொவிட்-19 சவாலை எதிர்கொண்டு, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த ஒத்திவைப்பு விவாதம் மே 4 ம் திகதி மதியம் 1 மணிக்கு நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையகத்தின் சட்டமூலம், இந்த மாதம் 5 ஆம் திகதி தாக்கல் செய்யப்படும். காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை முழு நாளிலும் விவாதத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த இரு நாட்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்வழி கேள்விகளுக்கும், நிலையான ஆணை 27 (2) இன் கீழ் உள்ள கேள்விகளுக்கும் நேரமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.