சுதந்திரக் கட்சியின் சிலர் வீரவங்சவுடன் இணைந்து கிளர்ச்சி செய்கின்றனர் – பசில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தாம் எப்போதும் உதவுவதாகவும் எனினும் அந்த கட்சியின் சிலர் அமைச்சர் விமல் வீரவங்சவுடன் இணைந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவதாக பசில் ராஜபக்ச, சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் குற்றம் சுமத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக கடந்த வாரம் பசில் ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்கள் மகிந்த அமரவீர மற்றும் லசந்த அழகியவண்ண ஆகியோர் முன்னிலையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் ஒரு மாகாண சபை தொகுதியில் மூன்று வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று பசில் ராஜபக்ச முன்வைத்த யோசனையை சுதந்திரக் கட்சியின் எதிர்த்ததை அடுத்தே பசில் இப்படியான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதுடன் சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை கோரும் போது அதனை உடனடியாக வழங்குதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள தயாசிறி ஜயசேகர, தன் மீதே இந்த குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் தான் அவ்வாறான கிளர்ச்சியில் ஈடுபடவில்லை எனவும் கூறியுள்ளார்.