துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க முடியாது – இலங்கை துறைமுக ஊழியர் சேவை சங்கம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது. கிழக்கு முனைய விவகாரத்தில் தேசப்பற்றுள்ளவர்களாகவும், மேற்கு முனைய விவகாரத்தில் தேசத்துரோகிகளாகவும் செயற்பட கூடாது என்று இலங்கை துறைமுக ஊழியர் சேவை சங்கத்தின் பொதுசெயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.

மேற்கு முனையத்தை துறைமுக அதிகார சபை முழுமையாக அபிவிருத்தி செய்வது குறித்து துறைமுக தொழிற்சங்கத்தினர் நாளை துறைமுக அதிகாரச சபை தலைவருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பான திட்டத்தில் இலங்கை அரசாங்கம் அதானி நிறுவனத்துடன் நேரடி தொடர்பை கொண்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேற்கு முனைய அபிவிருத்தி குறித்து அதானி நிறுவனம் வழங்கிய யோசனையை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியதாக இலங்கை அரசாங்கம் வெளியிட்ட கருத்து பொய்யானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக விவகாரத்தில் இந்திய அரசாங்கம் தற்போது அதிக அக்கறை கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

இலங்கை அரசாங்கம் இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு செயற்படுவதை அறிய முடிகிறது.

அரசாங்கத்தில் உள்ள ஒரு தரப்பினர் அதானி நிறுவனத்துடன் கொண்டுள்ள தனிப்பட்ட உறவை பலப்படுத்த மேற்கு முனையத்தை தாரைவார்க்க முயற்சிக்கிறார்கள்.

மேற்கு முனைய விவகாரத்தில் அதானி நிறுவனம் இந்திய அரசாங்கத்தை தவிர்த்து நேரடியாக இலங்கையுடன் தொடர்பு கொள்வது அதிருப்தியளிக்கும் செயற்பாடாகும்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபை முழுமையாக தனித்து அபிவிருத்தி செய்ய முடியுமாயின் ஏன் மேற்கு முனையத்தையும் அபிவிருத்தி செய்ய முடியாது?

கொழும்பு துறைமுகத்தின் ஏதாவதொரு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கும் தனிப்பட்ட முயற்சியை ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்கள் முன்னெடுக்கிநார்கள்.

இது நாட்டு மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும். கிழக்கு முனைய விவகாரத்தில் தேசப்பற்றுள்ளவர்களாகி, மேற்கு முனைய விவகாரத்தில் தேசத்துரோகிகளாக செயற்பட முடியாது.

மேற்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

தொழிற்சங்க போராட்டத்தை நிச்சயம் முன்னெடுப்போம்.மேற்கு முனையத்தை துறைமுக அதிகார சபையினால் தேசிய முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்ய முடியும்.

இவ்விடயம் குறித்து நாளை துறைமுக அதிகார சபை தலைவருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் அமெரிக்காவில் வெளிவந்த கட்டுரையை கண்டித்துள்ள இலங்கை

அமெரிக்காவின் வோஷிங்டன் போஸ்டில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான கட்டுரையை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது.

இலங்கையின் வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தமது தந்தையான சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறி கோட்டாப ராஜபக்சவின் அரசாங்கத்தை லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்க தெரிவித்த கருத்தை மையமாக வைத்தே இந்தக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அந்தக் கட்டுரையை தனிப்பட்ட முறையில் படிக்கவில்லை, எனினும் இந்த கட்டுரையானது, இலங்கைத் தலைவர்கள் மீது பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை விதிக்க சர்வதேச சமூகத்தை அணிதிரட்டுவதற்கான ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

அத்துடன் இலங்கையை அழிக்க பலர் உள்ளனர் என்று கொலம்பகே தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் புலம்பெயர் குழுக்கள் உட்பட்ட பலர் இலங்கைக்கு எதிராக செயற்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

Posted in Uncategorized

இராணுவத்தை மாத்திரம் தண்டித்தால் நல்லிணக்கம் பாதிக்கப்படும் – ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பங்குபற்றிய இரு தரப்பினரில் , இராணுவத்தினர் மீது மாத்திரம் குற்றஞ்சுமத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையானது இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமையோடு , மக்களின் வாழ்க்கையை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது. மனித உரிமைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் ஐ.நா. ஆணையாளரும் இலங்கை ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கமும் நடைமுறைக்கு சாத்தியப்படாத வகையிலேயே செயற்படுகின்றனர்.

நாட்டு மக்களின் உயிரை பாதுகாப்பதற்காக தமது உயிரை தியாகம் செய்த இராணுவத்தை தண்டிப்பதை , மதிப்பிற்குரிய மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதற்காக சர்வதேசத்திற்கு பல உதாரணங்களை காண்பிக்க முடியும். ஆணையாளரின் தரப்பு இந்த யதார்த்தத்தைக் கூட உணராதவர்களாக உள்ளனர்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் சேவையிலிருந்து நீக்குமாறு ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் விடுதலை புலிகள் அமைப்பு ஒழிக்கப்பட்டுள்ளது.

எனவே யுத்தத்தில் பங்குபற்றி இரு தரப்புக்களில் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் தண்டனை பெற்றுக் கொடுப்பது நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றினடிப்படையில் அவதானிக்கும் போது ஆணையாளரின் அறிக்கை நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பது தெளிவாகிறது.

2009 இற்கு பிறகு இலங்கையில் இனங்களுக்கிடையில் எவ்வித முரண்பாடுகளும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த 12 000 பேர் விடுதலை செய்யப்பட்டு தற்போது அவர்களும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களால் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நாடு என்ற ரீதியில் மன்னிப்பு வழங்கியுள்ளோம். உண்மையான நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த நாம் இதே வழியிலேயே பயணிக்க வேண்டும்.

கடந்த காலத்தை மறந்து எதிர் காலத்தை பற்றி சிந்தித்து செயற்படுவதன் மூலம் நல்லிணக்கத்தை ஸ்திரப்படுத்த முடியும். தற்போதும் சிறையிலடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் , விடுதலைப்புலிகள் தொடர்பிலும் இதே முறைமையையே பின்பற்ற வேண்டும்.

இலங்கை அரசாங்கமும் மனித உரிமைகள் ஆணையாளரும் எவ்வித முயற்சிகளையும் எடுப்பதாக தெரியவில்லை. ஆணையாளின் நடைமுறைக்கு சாத்தியமற்ற இந்த அறிக்கையை நிராகரிப்பதோடு , போலி சூழ்ச்சிகள் சமூகமயப்படுத்தி மனித உரிமைகளை மீறும் வகையில் இந்த அரசாங்கம் செயற்படுவதையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

ஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால் பாரதூரமான விளைவுகளை நாடு சந்திக்க நேரிடும்- சம்பிக்க

ஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால் எமது நாடு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், இராஜதந்திர ரீதியான நெருக்கடிகளும் எமது யோசனைகளும்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் இலங்கை மீண்டுமொருமுறை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டிருக்கிறது.

இலங்கை அதில் வெற்றியடையுமா? அல்லது தோல்வியடையுமா? என்பது குறித்து இப்போது உறுதியாகக் கூறமுடியாது. எனினும் இதனைத் தொடர்ந்து எமது நாடு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது மாத்திரம் தெளிவாக தெரிகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட போரின் போது, இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என்ற அடிப்படையிலேயே தற்போதைய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.முன்னரும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. அதில் நாம் தோல்வியடைந்தோம்.

அதனைத்தொடர்ந்து ஜீ.எஸ்.பி வரிச்சலுகை நிறுத்தப்பட்டது. அதன் விளைவாக அதனை மையப்படுத்திய பொருளாதார நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்தன. மீண்டும் அதேபோன்றதொரு நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசாங்கம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்கியதுடன், அந்தத் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதன் ஊடாக மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகையைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனை மீதான வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால், மீண்டும் அத்தகைய அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடுமா என்ற கேள்வி இருப்பதுடன் அது நாட்டு மக்கள் அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

மாகாண சபை தேர்தல் நடக்கும் என கூறியது யார் என்பதை தேடுகின்றோம்

ஜூன் மாகாண சபை தேர்தல் நடக்கும் என கூறியது யார் என்பதை தேடுவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தில் மாகாண சபை தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை எனவும் அது குறித்து வௌியாகும் செய்திகளில் உண்மை இல்லை

ஜுன் மாதம் மாகாண சபை தேர்தல் என்ற செய்தியை பத்திரிகையிலேயே நாம் பார்த்தோம். அப்படி ஒரு தேர்தல் எமக்கு தெரிந்து நடக்காது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ள சீனா

சீனா இலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வசதி வழங்க அனுமதித்துள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களில் அந்த கடன் வசதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பார்வை’ திட்டத்தின் இலங்கைக்கான ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கப்பட்டுள்ள 500 மில்லியன் டொலர் நிதி, கடன் வசதி திட்டமாகவும் மேலும் 600 மில்லியன் Swap எனப்படும் பரிவர்த்தனை திட்டத்தின் கீழும் கிடைக்கவுள்ளது.

Posted in Uncategorized

3 ஆவது நாளாக தொடரும் இரணை தீவு மக்களின் போராட்டம்

‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து கடந்த புதன்கிழமை (3) இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத் தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக இரணை தீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) இரணைதீவு பகுதியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இரணை தீவு பிரதான இறங்கு துறை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகிய பகுதிகளில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பட்ட தரப்பினர்களுக்கு இரணைதீவு மக்களால் நேரடியாக சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்ட போதிலும் இரணைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ நிறுத்தப்படவில்லை என இரணை தீவு மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை இன்று மாலை ஓட்டமாவடியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சர்வதேசத்துக்கு காட்டும் வகையிலும், முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறவுமே கொரோனா உடல்களை அடக்க அனுமதி

கொரோனாவினால் மரணிப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்வது சாத்தியப்படாது எனத் தெரிந்துகொண்டே அரசாங்கம் இரணைதீவில் அடக்கம் செய்யும் நடவடிக்கையை திட்டமிட்டு மேற்கொண்டுள்ளது. கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கி இருக்கும் அனுமதி முஸ்லிம் நாடுகளை ஏமாற்றி ஜெனீவாவில் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கொரோனாவினால் மரணிப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில்,

கொரோனாவால் மரணிப்பவர்களை உலகம் பூராகவும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அடக்கம் செய்யும் நிலையில் இலங்கை மாத்திரம் அதற்கு அனுமதி வழங்காமல் முஸ்லிம்களைப் பழிவாங்கும் நோக்கில் இழுத்தடித்துக் கொண்டிருந்தது. தற்போது ஜெனிவா மனித உரிமை மாநாடு ஆரம்பித்ததுடன் சர்வதேச நாடுகள் இலங்கையின் பலவந்த ஜனாஸா எரிப்புக்கு எதிராக கடும் அழுத்தங்களை பிரயோகித்து வந்தன. அதேநேரம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விஜயமும் இடம்பெற்ற நிலையில், கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டது.

சர்வதேச நாடுகளின் அழுத்தம் மற்றும் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அடக்கம் செய்ய அனுமதி வழங்கிவிட்டு, அடக்கம் செய்ய இரணை தீவை தெரிவு செய்திருக்கின்றது. கொழும்பில் இருந்து இரணை தீவுக்கு போய் வருவதற்கு 600 கிலோ மீற்றர் தூரம். சடலம் ஒன்றை எடுத்துக்கொண்டு இவ்வளவு தூரம் செல்வதென்பது சாத்தியமில்லாத ஒன்று.

அடுத்ததாக கொரோனா வைரஸ் நீரில் கலக்கும் சாத்தியம் இருப்பதாகத் தெரிவித்தே அரசாங்கத்தின் தொழில்நுட்பக் குழு அடக்கம் செய்ய அனுமதி வழங்காமல் இருந்தது. தற்போது அடக்கம் செய்ய அனுமதி அளித்திருக்கும் இரணைதீவு நிலத்தடி நீருக்கு மிகவும் நெருக்கமான பூமிப் பிரதேசமாகும்.

அப்படியானால் இதுவரை காலமும் அடக்கம் செய்ய அனுமதி வழங்காமல் இருந்தது, வெறும் அரசியல் அடிப்படையில் முஸ்லிம்களை பழிவாங்கும் நோக்கில் என்பது தெளிவாகின்றது. அத்துடன் கொரோனா வைரஸ் நீரில் கலந்து பரவுவதில்லை என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு தெளிவாகத் தெரிவித்திருந்தார். அதேபோன்று கொரோனா மரணம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஜெனிபர் பெரேராவின் குழுவின் அறிக்கையில், கொரோனாவால் மரணிப்பவர்களை பொது மயானங்களில் அடக்கம் செய்வதில் பிரச்சினை இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் சர்வதேசத்துக்கு காட்டும் வகையிலும் முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலுமே கொரோனா வால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருப்பது தெளிவா கின்றது. அதனால் அரசாங்கம் தொடர்ந்தும் இந்த ஏமாற்று நாடகத்தை மேற்கொள்ளாமல் உலக நாடுகள் கடைப்பிடிக்கும் முறையில் கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

இரணைதீவில் ஜனாஸாவை அடக்க அதிருப்தி, சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளிற்கு கடிதம்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வது குறித்த அரசாங்கத்தின் முடிவு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள இஸ்லாமிய அமைப்புகள் இது குறித்து சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளிற்கு கடிதங்களை அனுப்பவுள்ளன.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கு இது குறித்த கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்லாமிய நிலையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது

உடல்களை அடக்கம் செய்வதற்கு கௌரவமான இடமொன்றை ஒதுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என இஸ்லாமிய நிலையம் வேண்டுகோள் விடுக்கவுள்ளது.

உலக முஸ்லீம் காங்கிரசின் உறுப்பினரான இஸ்லாமிய நிலையம் உலக அமைப்புகளிற்கு இந்த விவகாரம் குறித்த தனது கரிசனையை முன்வைக்கவுள்ளதுடன் ஜெனீவாவில் உள்ள உலக முஸ்லீம் காங்கிரசின் அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவு குறித்துகடும் ஏமாற்றம் வெளியிட்டுள்ள முஸ்லீம் அதிகாரிகள் நாட்டின் வேறு பகுதிகளில் பொருத்தமான இடங்களை ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.

இராணுவச் சோதனைச் சாவடியால் மக்களுக்கு அசௌகரியம்- ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ரெலோ தலைவர்செல்வம் எடுத்துரைப்பு!

மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடியால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் நடைக்கலநாதன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றதுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம், மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேலின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

இதில், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.திலீபன், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், பிரதேசச் செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், பாதுக்காப்புப் படை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, குடி நீர், விவசாயம், கடற்தொழில், கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதேவேளை, மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடியினால் மக்கள், அரச பணியாளர்கள் பல்வேறு அசெகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரியப்படுத்தினார்.

அதாவது, “சோதனைச் சாவடிகள் உள்ளமை தொடர்பாக எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை. ஆனால், குறித்த சோதனைச் சாவடி அமைந்துள்ள பகுதியே ஒரு பிரச்சினையாக உள்ளது. மக்களின் பொழுது போக்கு இடமாகக் காணப்பட்ட குறித்த இடத்தில் இராணுவச் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இதானால், மக்கள் அவ்விடத்திற்குச் செல்லமுடியாத நிலை காணப்படுகிறது.

மேலும், அரச கடமைகளுக்காகச் செல்லும் பணியாளர்கள் குறித்த சோதனைச் சாவடியில் நிறுத்தப்படுகின்றனர். அவர்களின் மோட்டார் சைக்கிள் கழற்றப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. இதனால், அவர்கள் உரிய நேரத்திற்கு கடமைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இதேவேளை, 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தினூடாக ஒரு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற அனைத்து அபிவிருத்திச் செயற்பாடுகளும் அப்பிரதேச சபையின் அனுமதியுடனேயே நடைபெற வேண்டும்.

எனினும், மன்னார் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற சில அபிவிருத்திச் செயற்பாடுகள் எமது அனுமதியின்றியும், எமது கவனத்திற்குக் கொண்டுவராமலும் இடம்பெறுகின்றன. எனவே, இனிவரும் காலங்களில் மன்னார் பிரதேச சபையின் அனுமதியைப் பெற்று உரியமுறையில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாகிர் வலியுறுத்தியுள்ளார்.

Posted in Uncategorized