சீன வௌிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

சீன வௌிவிவகார அமைச்சர் Wang Yi உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 8 ஆம் திகதி மற்றும் 9 ஆம் திகதிகளில் அவருடைய விஜயம் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான 65 வருட கால வரலாற்று உறவினை சிறப்பிக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவுமே சீன வௌிவிவகார அமைச்சரின் வருகை அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை? மாற்று வழியை நாடும் சீன நிறுவனத்தின் அதிரடி

இலங்கைக்கு பசளைகளை ஏற்றுமதி செய்யும் சர்ச்சைக்குரிய சீன நிறுவனம், இலங்கைக்கு எதிரான தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு எதிராக கடுமையான பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை விதிக்க முன்மொழிந்துள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பசளைகளில் மேற்கொள்ளப்பட்ட உள்ளூர் பரிசோதனைகள் மூலம் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இலங்கை அதனை நிராகரித்திருந்தது.

எனினும், நாணயக்கடிதம் திறக்கப்பட்ட நிலையில் தமது பொருட்களுக்கான பணப் பெறுமதியை வழங்கவேண்டும் என்று சீன நிறுவனம் வலியுறுத்தி வந்தது.

இதனையடுத்து இலங்கை அரசாங்கம், 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை Seawin Biotech Group Co,Ltd க்கு வழங்குவதற்கு தீர்மானித்தது.

இருப்பினும் நீண்ட தாமதத்துக்கு பின்னர் சீன நிறுவனத்திற்கு பணம் செலுத்தும் இலங்கையின் முடிவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமை தொடர்பிலேயே சீவின் பயோடெக் நிறுவனம், இலங்கை மீது தனது எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்வதாக கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக, சீவின் பயோடெக் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள், இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சீன அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஷான்டாங் மாகாண அரசாங்கத்தை அணுகியுள்ளனர்.

அத்துடன் சர்வதேச நிறுவனங்களிடம் முறையிடப்போவதாகவும் சீவின் பயோடெக் அதிகாரி ஒருவரை கோடிட்டு கொழும்பின் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தமது பசளையை இறக்குமதி செய்வதற்காக, சீவின் பயோடெக் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு சில இலங்கை உள்ளூர் அதிகாரிகள், தரகுப்பணம் கோரியதாகவும் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Posted in Uncategorized

சிறையில் உள்ளோர் அனைவரும் குற்றவாளிகள் அல்ல – அமெரிக்காவில் நீதி மறுக்கப்பட்ட தமிழர்!

அமெரிக்காவில் உட்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு தண்டனைக்கு உள்ளான இலங்கை தமிழரான ராஜ் ராஜரட்ணம், தமது கைது மற்றும் தண்டனை தொடா்பாக நூல் ஒன்றை இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்காவில் வெளியிட்டாா்.

Uneven Justice ( சீரற்ற நீதி) என்ற இந்த ஆங்கில நுால் தொடர்பில் கனடாவின் International United Women federation ( சர்வதேச ஐக்கிய பெண்கள் சம்மேளனத்தின்) ராஜி பாற்றர்சன் தமிழில் நுால் விமா்சனம் செய்துள்ளாா்.

Uneven Justice – தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? ஆமாம், அமெரிக்காவில் ஒரு தமிழன் நீதிக்காக போராடிய கதை புத்தக வடிவில் வெளிவந்துள்ளது. தன் மீது குற்றம் சுமத்திய அரசாங்கத்தை எதிர்த்து தான் ஒரு நிரபராதி என நிரூபிக்க கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் போராடி, பதினோரு வருடங்கள் சிறைத்தண்டனை பெற்று, ஏழரை வருடங்கள் தண்டனை அனுபவித்து விடுதலையான பின்னர் , இரண்டு வருட மௌனத்தை கலைத்திருக்கின்றது இந்த நூல். தன் மீது சுமத்தப்பட்ட வழக்கு எவ்வாறு பின்னப்பட்டது, எவ்வாறு நடத்தப்பட்டது, சாட்சியங்கள் எப்படி தனக்கெதிராக உருவாக்கப்பட்டது போன்ற விடயங்களுடன் தான் பெற்ற அனுபவத்தையும் அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் எழுத்தாளர்.

சரி ஏன் இந்த புத்தகத்தை அவர் எழுதினார் என்கின்ற வினாவுக்கு, அனைவரும் குறிப்பாக அவரது சகாக்கள், பொருளாதார அல்லது நிதி துறையின் வல்லுநர்கள் இந்த புத்தகத்தை வாசித்து, நடந்த உண்மைகளை அறிந்து கொண்டு தன்னை நியாயம் தீர்க்க வேண்டும் என்பதுடன், சட்ட விரோதமாக தனது உரையாடல்கள் ஓட்டுக் கேட்கப்பட்டு, அந்த நாட்டின் பிரஜையான தான் கண்காணிக்கபட்டதன் ஊடாக தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

2008 -ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு அல்லது பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு பலிகடாவை தேடிய லட்சிய வழக்குரைஞர்களால் ஒரு பொறிக்குள் தன்னை சிக்க வைத்து, பொது ஊடகங்களினால் அநியாயமான முறையில் தனது கவுரவம் மற்றும் கண்ணியமான வாழ்வு சிதறடிக்கப்பட்டு, மன அழுத்தத்தை எதிர் நோக்கியதையும் அனைவரும் அறிய வேண்டும்.

இரண்டாவதாக, மேலும் முக்கியமாக, சில சீர்கேடான வழக்குரைஞர்கள் மற்றும் FBI முகவர்கள் குற்றவியல் நடத்தையிலிருந்து எப்படி தப்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்குள் உருவாக்குவதன் மூலம் ஒரு பொது விவாதத்தைத் தொடங்க விரும்புவதாக குறிப்பிட்ட எழுத்தாளர் அமெரிக்காவின் நீதி அமைப்பில் சமநிலைகள் இல்லை என்பதை மிக ஆணித்தரமாக கூறுகின்றார் .

சரி யார் இந்த எழுத்தாளர்? அமெரிக்காவின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கு மிக சிறந்த நிதி மேலாளராக திகழ்ந்த ராஜ் ராஜரட்ணம் என அறியபடும் ராஜகுமாரன் ராஜரட்ணம் தான் இந்த எழுத்தாளர்.

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட இவர் பதினோரு வயதில் தாய் நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார்.

லண்டனில் அமைந்துள்ள Dulwich college- ல் தனது கல்வியை தொடர்ந்த அவர் பட்டப்படிப்பை பொறியியல் துறையில், University of Sussex- ல் நிறைவு செய்தார்.

1983-ல் தனது முதுகலைமானி பட்டப்படிப்பை அமெரிக்காவில் பென்சில்வேனியா Wharten school of the University யில் வணிக நிர்வாகத்தில் நிறைவு செய்து அங்கேயே ஒரு வங்கியில் கடன் வழங்கும் அதிகாரியாக தனது பணியை ஆரம்பித்தார்.

1985-ல் நீதம் & கோ(Needham & CO) நிறுவனத்தில் இணைந்து அவரது கடின உழைப்பாலும் அசாதாரண திறமையாலும் படிப்படியாக உயர்ந்து தனது 34-வது வயதில் அதன் தலைவராக உயர்ந்தார்.

1992-ல் நீதம் & கோ கம்பெனியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட Hegde Fund திரு ராஜ் ராஜரத்தினம் அவர்களால் வாங்கப்பட்டு Galleon Group என பெயரிடப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.

ஒரு குறுகிய காலத்தில் மிக சிறப்பான வளர்ச்சியை அடைந்த அவரது நிறுவனம் உலகின் முதல் பத்து Hedge Fund நிறுவனங்களுக்குள் தனது பெயரையும் உள்வாங்கி கொண்டது.

மிக சிறந்த பகுப்பாய்வாளர்களை இணைத்து, அமெரிக்காவின் சட்ட திட்டங்களை மிக சரியான முறையில் பின்பற்றி மிகப் பெரியளவில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த Galleon Group மற்றவர்களின் கண்களை உறுத்தியதில் ஆச்சரியம் இல்லை தானே?

Wall Street Super Star என அழைக்கப் பட்ட திரு ராஜ் ராஜரட்ணம் அவர்களை 2009-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் “forbes” Magazines அமெரிக்காவின் 400 பணக்காரர்களில் ஒருவராகவும், உலகின் 559 வது பணக்காரராகவும் மதிப்பிட்டது.

அதே ஆண்டு அக்டோபர் 16-ம் திகதி Federal Bureau of Investication (FBI) லினால் சட்ட விரோதமான உள் வர்த்தக ( insider trading) நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப் பட்டு கைது செய்யப்பட்டார்.

அவருக்கு முன்னால் மூன்று தெரிவுகள் இருந்தன. சுமத்தப்பட்ட குற்றத்தை ஏற்றுக்கொண்டு குறைந்த அளவு தண்டனை பெறுதல், அரசாங்கத்தின் சாட்சியாக மாறி தண்டனையில் இருந்து தப்புதல், நிரபராதி என நிரூபிக்க போராடுதல். செய்யாத குற்றத்தை ஏற்றுக் கொண்டு தண்டனை அனுபவிக்க திரு ராஜ் அவர்களுக்கு உடன்பாடில்லை.

நேர்மையான வழியில் தனது வாழ்வை அமைத்துக் கொண்ட அவருக்கு, அரசாங்கத்தின் கையாளாக மாறி இன்னுமொருவரை வஞ்சக வலைக்குள் சிக்க வைத்து விட்டு அவர் தப்பிக்கவும் மனமில்லை.

எனவே அவருக்கு முன்னால் இருந்த தெரிவு தன்னை நிரபராதி என நிரூபிக்க போராடுவது தான். ஆனால் அந்த பயணத்தில் பல மில்லியன் டொலர்கள் செலவு ஏற்பட வாய்ப்பு உள்ள அதேவேளை, மிக சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்பதுவும் அவருக்கு தெரிந்திருந்தது.

அமெரிக்காவின் நீதித்துறையில் மிக நம்பிக்கை கொண்ட அவர் நீதிக்காக போராட துணிந்தார் .

அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாரானார். அந்த நீதிக்கான பாதையில் அவர் கண்டறிந்த விடயங்கள் பற்றியும், அவர் சந்தித்த பல விதமான மனிதர்கள் பற்றியும் அமெரிக்க நீதி துறை எவ்வாறு செயற்படுகின்றது என்பது போன்ற பல விடயங்களை மிக தெளிவாக கூறியிருக்கின்றார்.

எந்த மிரட்டல்களுக்கும் அடி பணியாத அவர், அவரது சட்டத்தரணிகளுடன் இணைந்து தனக்கெதிராக புனையப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து பல ஆதாரங்களை வழங்கிய போதும் அவற்றில் பல புறக்கணிக்கபட்டதையும் தமது பக்க சாட்சியங்களில் ஐந்து பேரை மட்டுமே உள்வாங்கி கொண்டதாக குறிப்பிட்ட அவர் நடுவர்கள் பன்னிரண்டு பேரில் (Jury) ஒருவருக்கும் அவரது துறை சார்ந்த அறிவு பெற்றிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

நிதி மேலாண்மை மற்றும் முதலீடு தொடர்பான அறிவு இல்லாதவர்களினால் எவ்வாறு அதன் சட்ட முறைகள் நுணுக்கங்கள் பற்றி தெரியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த நடுவர் குழுவினரினால் குற்றவாளி என தீர்க்கப்பட்டு பதினோரு வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டதுடன் 150 மில்லியன் டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டதாக குறிப்பிடும் எழுத்தாளர் இந்த முழு நூலையும் சிறையில் தனது கையாலேயே எழுதியாக குறிப்பிடுகின்றார்

அமேசான் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு நூலாகும் என்பதில் ஐயமில்லை .

இந்நூல் விற்பனையில் பெறப்படும் நிதியானது நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு உதவ பயன்படும் என திரு ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நீதித்துறையினால் வஞ்சிக்கப்பட்டு, செய்யாத குற்றத்துக்காக ஏழரை வருடங்கள் சிறையில் வாடிய வலிகள் அவரது வார்த்தைகளில் பிரதி பலிக்கின்றது.

இந்த நூல் அவரது வலி நிறைந்த குரல் மட்டுமல்ல நீதி மறுக்கப்பட்டு செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் அனைவரின் குரலாகும்.

சிறையில் இருப்போர் அனைவரும் குற்றவாளிகளுமல்ல .வெளியில் உலாவுவோர் அனைவரும் நீதிமான்களுமல்ல.

 

ராஜி பாற்றர்சன்

Raji Patterson Canada International United Women federation

மகிந்தவிற்கு விமானம் வழங்கியது யார்? வெளியான தகவல்

பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் திருப்பதிக்கு விஜயம் செய்திருந்த நிலையில், வேலுப்பிள்ளை கனநாதன் என்பவரே பிரத்தியேக ஜெட் விமானத்தை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக அண்மையில் திருப்பதி சென்றிருந்த நிலையில், அவர் பயணித்த விமானம் தொடர்பில் சமூக ஊடகங்கள் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இந்த விமானம் பிரதமரின் நண்பர் ஒருவரால் இலவசமாக வழங்கப்பட்ட போதிலும் குறித்த வர்த்தகரின் பெயர் தனக்கு தெரியாது என பிரதமரின் தலைமை செயல் அதிகாரி யோஷித ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இதனிடையே, குறித்த விமானம் தொடர்பிலும், விமானத்திற்கு அறவிடப்படும் கட்டணம் தொடர்பிலும் சோலிஷ முன்னிலை கட்சியின் தேசிய அமைப்பாளர் புபுது ஜாகொட பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே, பிரதமருக்கு பிரத்தியேக ஜெட் விமானத்தை வழங்கியவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உகாண்டாவுக்கான தூதுவராக கடமையாற்றிய கனநாதன் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கென்யாவிற்கான தூதுவராக கடமையாற்றி வருகின்றார்.

ராஜபக்ச குடும்பத்தின் நண்பராகக் கருதப்படும் கனநாதன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படுகிறார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசுக்கு துணைபோகாமல், நீதியை நிலைநாட்டுங்கள்! – சர்வதேசத்திடம் காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை

சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்குத் துணைபோகாமல் எமக்கான நீதியினை வழங்க முன்வரவேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் (30) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

எமக்கான நீதி கிடைக்காத நிலையிலும் 12 வருடங்களாகத் தொடர்ச்சியாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். பெறுமதிமிக்க எமது உயிர்களைத் தொலைத்துவிட்டு நாம் வீதி வீதியாகப் போராடிக்கொண்டு சொல்லொணா துன்பங்களையும், அவலங்களையும் அனுபவித்து வருகின்றோம்.

வருடங்கள் மாத்திரமே கடந்து செல்கின்றது, எமக்கான நீதி மட்டும் கிடைக்கப்பெறவில்லை. போரிற்குப் பின்னர் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட பிள்ளைகளையே நாம் கோரி நிற்கின்றோம். இழப்பீட்டையோ வாழ்வாதாரத்தையோ கேட்டு நாம் போராடவில்லை.

சர்வதேச சமூகம் எமக்கான நீதியினை வழங்காமல் இலங்கை அரசுக்குத் துணைபோகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது, எனவே நீங்கள் கண்மூடியிருக்காமல் எமது நிலை கருதி சாட்சிகளான நாங்கள் இருக்கும் போதே எமக்கான நீதி கிடைப்பதற்குரிய பொறி முறைகளை சர்வதேச சமூகம் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, ஆணைக்குழுக்களும் வேண்டாம், விசாரணையும் வேண்டாம், பொய்யான அறிக்கையை வழங்கி சர்வதேசத்தையும் தமிழர்களையும் ஏமாற்றாதே, இனப்படு கொலையாளியைக் காப்பாற்ற நினைப்பவர்கள் தமிழின துரோகிகள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

தமிழர்களின் இறைமையை அழிக்க இலங்கை அரசு பாரிய சதி: ரெலோவின் இளைஞர் அணித்தலைவர் சபா குகதாஸ்

இலங்கைத்தீவில் சட்டரீதியாக முதல் இறைமையைக் கொண்ட தமிழர்களின் மிகப் பெரும் ஆதாரமாக விளங்கும் தேசவழமைச் சட்டங்களைச் சட்ட அங்கிகாரம் இல்லாது அழிப்பதற்கு பாரிய சட்ட ரீதியான நடவடிக்கையை ஐனாதிபதி கோட்டாபய ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற செயலணி மூலம் மேற் கொள்ளச் சதித் திட்டம் போட்டுள்ளார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித்தலைவரும் (ரெலோ) வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ இலங்கைத் தீவில் சிறிய எண்ணிக்கையில் வாழும் இனங்களுக்குப் பாதகமாக அமையும் என்ற பொதுவான நிலைப்பாடு இருந்தாலும் இதன் பாரிய தாக்கம் வடக்கு கிழக்கைப் பூர்வீக வாழ்விடமாகக் கொண்ட தமிழர்களையே குறி வைத்துள்ளது.

காரணம் ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இலங்கையின் தலைநகர் வடக்கைத் தளமாகக் கொண்ட சிங்கை மன்னர்களான தமிழர்களாலே நிர்வகிக்கப்பட்டது. அவர்களின் கால சட்டங்களே தேசவழமை சட்டங்கள் என தற்போதும் வடக்கில் முதன்மையானவையாக விளங்குகின்றன.

ஆரம்பத்தில் இலங்கையில் கண்டியை மையமாகக் கொண்ட கண்டியச் சட்டங்களைச் சிங்களவரும் வடக்கு யாழ்ப்பாண ராசதானியை மையமாகக் கொண்ட தமிழர்கள் தேசவழமைச் சட்டங்களையும் கொண்டிருந்த இரு தேசங்கள் இருந்தன. இதன் அடிப்படையில் தான் தமிழர் தேசம் தங்களுக்குரிய நாட்டுச் சட்டங்களை தேசவழமைச் சட்டங்கள் என அழைத்தனர்.

இதுதான் தமிழர்கள் இந்த நாட்டின் இறைமை உள்ள இனம் என்பதற்கு மிகப் பெரும் ஆதாரம் ஆகும். தேசவழமைச் சட்டங்கள் ஒல்லாந்தர் காலத்தில் டச்சுச் சட்டங்களுடன் தனித்துவமாகத் தமிழ் முதலிமாரால் தொகுக்கப்பட்டு வடக்குத் தமிழர்கள் இலங்கையில் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு தேசவழமைச் சட்டம் ஏற்புடையது என அங்கிகாரம் வழங்கினர்.

இதனை பிரித்தானியரும் தமது கோல்புறுக் அரசியலமைப்பின் ஊடாக அங்கிகாரம் வழங்கினர் . இலங்கைத் தமிழர்கள் இறைமை உள்ள இனம் என்பதை ஆதாரமாகக் கொண்ட தேசவழமைச் சட்டங்களை இல்லாது ஒழிப்பதே ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் பிரதான இலக்கு.

ஞானசார தேரர் யாழ்ப்பாணம் வந்து ஒரு சிலரிடம் குறிப்பாகக் கோட்டா சார்பான கட்சியின் பிரதிநிதிகளுடன் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ தொடர்பாகக் கருத்துக்களை முன்வைக்கும் போது தேசவழமைச் சட்டங்கள் உள்வாங்கப்படும் என்ற வெற்று அறிக்கை ஒன்றைத் தமிழர்களை ஏமாற்றுவதற்காகக் கூறினாரே தவிர உண்மையாக தேசவழமைச் சட்டங்களை நீக்குவதே அவர்களது எண்ணம்.

இவர்களைப் புரிந்த யாரும் மறுக்க மாட்டார்கள். ஜனாதிபதி கோட்டாபயவின் செயலணி ஒரு போதும் கண்டியச் சட்டத்தில் எந்த மாற்றங்களையும் செய்ய மாட்டார்கள். ஆகவே அவர்களது பிரதான நோக்கம் தமிழர்களை இறைமை அற்ற இனமாக மாற்றுகின்ற பாரிய தமிழின அழிப்பாகும்.

தொடர்ச்சியாக 1956 இல் இருந்து 2009 வரை பாரிய தமிழ் இனப் படுகொலைகளைச் செய்த இலங்கை ஆட்சியாளர்கள் தமிழர்களது கலாச்சாரத்தையும் இல்லாதொழித்து பௌத்த மயமாக்கலை இன்று வரை தமது நிகழ்ச்சி நிரலாகத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இறுதியாக எஞ்சிய சட்டரீதியான இறைமைக்குரிய ஆதாரமான தேசவழமைச் சட்டங்களையும் அழித்து இறைமை அற்ற இனமாகத் தமிழர்களை மாற்றி சிங்களவர்களுக்கு மட்டும் உரித்தான ஒரு நாடு ஒரு சட்டம் என்ற புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பாரிய சதியில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கட்சித் தலைவர்களின் இறுதிக்கட்ட பரிசீலனை சம்பந்தன் – ஹக்கீம் நாளை நேரில் பேச்சு மனோவும் பங்கேற்பார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இரா. சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பிலும், ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் மு.கா. சார்பிலும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் மனோ கணேசனும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை – இந்திய ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும், இதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு இந்தியா பிரயோகிக்க வேண்டும் எனக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கூட்டு ஆவணமொன்றை அனுப்பிவைப்பதற்குத் கொழும்பில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற 11 கட்சிகளின் தலைவர்களுடைய சந்திப்பில் தமிழ் பேசும் கட்சிகள் முயற்சித்தன.

இதுவரை மூன்று சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. எனினும், சில அரசியல் காரணங்களால் கூட்டு ஆவணத்தில் கையொப்பமிட முஸ்லிம் கட்சிகள் இழுத்தடிப்பு செய்து வருகின்றன.

அக்கட்சிகளின் தலைவர்களுக்கு கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே நாளை ஹக்கீமை, சம்பந்தன் தரப்பு சந்திக்கவுள்ளது.

முஸ்லிம் தரப்புகள் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்யும் பட்சத்தில், தமிழ்க் கட்சிகள் மட்டும் இணைந்து கையொப்பமிடுவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

13ஆம் திருத்தச் சட்டம் பற்றிய பரச்சினையை எப்படிக் கையாள்வது?

– தி. திபாகரன் –

13ஆம் திருத்தச் சட்டம் பற்றி கடந்த ஒரு மாதமாக தமிழ் மக்கள் மத்தியிலும், தமிழ் ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்ட வருகிறது. தமிழ் மக்கள் 13வது திருத்தச் சட்டத்தை ஏற்பதா என்ற கேள்வி ஒரு புறமும், அதை ஏற்பவர்கள் “”துரோகிகள் “” என்று கூறுபவர்கள் இன்னொரு புறமுமாகக் குடும்பிபிடிச் சண்டையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இன்னொரு பகுதியினர் அது போதாது என்கிறனர். இதன் உண்மைத்தன்மை பற்றிச் சற்று பார்ப்போம்.

1987ல் செய்துகொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக அன்றைய காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் ஒரு தற்காலிக தனிஅலகா, மாகாண ஆட்சி அதிகாரத்தில் கீழான தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு முறைமையாகும். இந்த தீர்வுத்திட்டத்தை அமுல்ப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் திருத்த வரைபு ஒன்று செய்யப்பட்டது. இதன் அடிப்படையில்தான் இலங்கையின் ஒற்றையாட்சி முறையில் அமைந்த 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனையே 13ஆம் திருத்தச் சட்டம் என அழைக்கப்படுகிறது.

இந்தத் திருத்தச் சட்ட மசோதாவை 1987 டிசம்பரில் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவுடன்தான் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

இந்திய-இலங்கை உடன்படிக்கையை உங்கள் பக்கம் நின்று நிறைவேற்றுவேன் என அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களுக்கு வாய்மொழி மூலமாக உறுதியளித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே தற்காலிக மாகாண ஆட்சி அதிகார சபையை பொறுப்பேற்று நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முன் வந்தார்கள் என்பதும் உண்மையே.

ஆனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தன மேற்கொண்ட இராஜதந்திர நாசகாரச் செயல்களால் மூன்று மாதத்திலேயே விடுதலைப் புலிகளையும் இந்தியாவையும் மோத வைத்துவிட்டது . இதன்பின் மோதலில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளை தவிர்த்து ஏனைய ஆயுதக் குழுக்களை இணைத்து ஒரு மாகாணசபை அரசாங்கத்தை உருவாக்குவதற்கான முயற்யி இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த திருத்தச் சட்டம் இந்தியாவின் அழுத்தத்தினாற்தான் கொண்டுவரப்பட்டது என்பதும் உண்மையே. ஆனால் 1987 ஒட்டோபர் 10ம் திகதி புலிகள்-இந்தியபடை போர் ஆரம்பித்திவிட்டது. யாழ்குடாவலும் வன்னியிலும் கடுமையான சண்டை நடந்துகொண்டிருக்க கொழும்பில் இருந்துகொண்டு
இந்தியா சொல்கிறது என்பதனாற்தான் நாம் ஆதரிக்கிறோம் என கூட்டணியினர் அன்றைய காலத்தில் குறிப்பிட்டனர் என்பதும் உண்மையே. அதேபோன்றே ஆயுதப் போராட்ட இயக்கங்களும் கூறின என்பதனையும் கருத்திற்கொள்ள வேண்டும்.

வட-கிழக்கு மாகாணசபை என்ற நிர்வாக அலகு ஜனாதிபதியின் அறிவிப்பின்மூலம்
1988 அக்டோபர் 2 ஆம் திகதி அன்று வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டது. உண்மையில் இந்த இணைப்பை ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு முறைப்படி அறிவித்து அங்கு வாக்கொடுப்பிற்கு விட்டு சட்டமாக நிறைவேற்றியதன் பின்தான் அறிவித்திருக்கவேண்டும். அவ்வாறு பிரகடனப்படுத்தினால் மட்டுமே அரசியல் சாசனப்படி அந்த இணைப்பு செல்லுபடியானதாகும் என்பது இங்கே முக்கியமானது.

மேற்படி சட்ட வலுவற்று இணைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாணத்தில் 1988 நவம்பர் 19 இல் தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலில் EPRLF இயக்கத்தின் வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். அந்த மாகாண சபை 1990 ஏப்ரல் 26ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது. காரணம் அன்றைய நாள் வட மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த வரதராசப் பெருமாள் தன்னிச்சையாக வடகிழக்கு மாகாணத்தை தனிநாடாக தமிழீழப் பிரகடனத்தை செய்து திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அதனைக் காரணம் காட்டி அதன் அடிப்படையில் அந்த வட-கிழக்கு மாகாணசபையை இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா அவர்களால் கலைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாகாண ஆட்சி முறைமை வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட வடிவில் நீண்ட காலமாக இருந்துவந்தது. அதேவேளை வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டது தவறானதென்று 2006 /07 /14 ஆம் திகதி ஜேவிபி உச்சநீதிமன்றத்தில் வழக்கை கொடுத்தது.

அன்று பதவியிலிருந்த அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தன மாகாணங்களை இணைத்த முறைமை தவறானது என்றும் அது சட்ட ஒழுங்கு முறைக்கு முரணான வகையில் இணைக்கப்பட்டுள்ளது என்றும் காரணம் கூறி உச்சநீதிமன்றம் 2006-10-16 இல் தீர்ப்பு வழங்கியது . அதாவது மாகாண சபை இணைப்பு பிழையானது என்று தீர்ப்பு வழங்கப்படவில்லை . மாறாக ஜனாதிபதி அதனை நாடாளுமன்றத்தின் வாயிலாக இணைக்காது அரச இதழ் வாயிலாக அறிவித்தமை சட்ட நடைமுறைக்கு தவறானது என்று கூறியே வடக்கு– கிழக்கு இணைப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதனை அடுத்து 2007 ஜனவரி முதலாம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டன.

அதாவது இங்கு “வடக்க-கிழக்கு மாகாணங்களை இணைத்த முறைமை தவறானது” என்றுதான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே அரசுத் தலைவர் இணைக்க வேண்டிய விதத்தில் இணைத்தால் அது அரசியல் சட்டத்துக்கு அமைய செல்லுபடியாகும் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. எனவே நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளித்து எதிர்கட்சி ஆசனத்தில் இருந்தவர்கள் அன்று அரசாங்கத்துடன் பேசி ஜனாதிபதி மைத்திரிபால அவர்களைக்கொண்டு நாடாளமன்றில் பிரிக்கப்பட்ட வட,கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைத்தருக்கமுடியும். அதணை இந்த சுயநல தமிழ் அரசியல் தலைமைகள் செய்யவில்லை. இப்போதும்கூட வடகிழக்கை ஜனாதிபதி நினைத்தால் சட்டரீதியாக இணைக்கமுடியும்.

இன்நிலையில் நீண்ட கால இழுபறிக்கு பின்னர் 2008ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு.கூ – த.ம.வி.பு கட்சியின் சார்பில் சி. சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராகவும் 2012 – 2015ம் ஆண்டு தேர்தலில் ஐ.ம.சு.கூ – இ.சு.க நஜீப் அப்துல் மஜீத் பின்னர் ஹாபிஸ் நசீர் அகமது அவர்கள் முதலமைச்சராவும் 2013/09/21 இல் மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வடக்கில் விக்னேஸ்வரன் அவர்களும் தொடர்ந்து முதலமைச்சராக பதவிவகித்தார்.

இதன்பின் மாகாணசபை 2018 ஒட்டோபர் 23ல் கலைக்கப்பட்டுவிட்டது. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக நடைபெறாமல் கிடப்பில் கிடக்கிறது. மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமா என்பதற்கான எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. சில வேளை அவ்வாறு ஒரு தேர்தல் நடந்தால் 13ம் திருத்தச்சட்டத்தை எதிர்ப்பவர்கள், நிராகரிப்பவர்கள், அதரிப்பவர்கள் என பிரிந்துநின்று வாயால் வாள்வீசி குடும்பிபிடிச் சண்டையிடும் அனைத்துக் கட்சிகளும் நிச்சயமாக போட்டிபோடும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. இதனை சமூகவலைத்தளம் ஒன்றின் கேள்விக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாகாணசபைத்தேர்தல் நடத்தப்படுமானால் தாம் நிச்சயமாக போட்டியிடுவோம் என பதிலளித்து உறுதிப் படுத்தியுமுள்ளார். இதுவே பதவி மோகம் அரசியல்வாதிகளின் இன்றைய நிலையும் ஆகும்.

அதேநேரத்தில் சிங்கள தேசத்தை பொறுத்தவரையில் இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழித்து மூன்றாம் தரப்பு தமிழர் பிரச்சினையில் தலையிடுவதை முற்றாக நிராகரிப்பதையே நோக்காகக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையிற்தான் இன்று ஆட்சியில் இருக்கும் இலங்கை அரசாங்கம் கடந்த நாடாளுமன்ற, மற்றும் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணசபையை முறைமையை ஒழிப்பது என்ற வாக்குறுதியை முன்வைத்தனர். இந்த வாக்குறுதியின் மூலம் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக அவர்கள் பெருவெற்றி ஈட்டியுள்ளார் . எனவே மாகாணசபையை ஒழிப்பதற்கான “”மக்கள் ஆணையை”” சிங்கள தேசத்து மக்களிடமிருந்து ராஜபக்சக்கள் பெற்றிருக்கின்றனர்.

உருப்படியான அதிகாரமற்ற, அற்ப சொற்ப சலுகைகளை மட்டுமே கொண்ட மாகாணசபைகூட தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடாது என்பதுவே சிங்கள தேசத்தின் விருப்பு. எனவே அதனை ஒழிப்பதற்காகத்தான் சிங்கள மக்கள் ராஜபக்ஷக்களுக்கு “”ஆணை”‘ கொடுத்து இருக்கிறார்கள் . அந்த ஆணையை நிறைவேற்றவே ராஜபக்சக்கள் முனைப்பு காட்டுவார்கள்.

அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை கொடுக்க ஒருபோதும் முன்வர மாட்டார்கள். தமிழ் மக்கள் ஏதேனும் ஒரு சிறிய நலனையேனும் பெற்று அனுபவிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதுதான் இன்றைய யதார்த்தம்.

இந்நிலையில் மாகாணசபையை இல்லாதொழிக்கும் ராஜபக்சக்களின் செயல் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து, அதை நிறைவேற்றுவதற்காகத் தமிழர் தரப்பில் ஒரு பகுதியினர் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு அதனை இல்லாதொழிக்கான செயற்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக செயற்படுவது என்பது எதிரிக்கு சேவை செய்வதாகவே அமையும். ராஜபக்சக்கள் விரும்புவதை எவர் செய்தாலும் நடைமுறையில் அவர்கள் ராஜபக்சக்களின் அணியைச் சேர்ந்தவர் என்பதே பொருள் . ஆகவே தமிழர் தரப்பில் ராஜபக்சக்கள் விரும்புவதை எவர் செய்தாலும் அவர்கள் தமிழ் மக்களின் மத்தியில் “”நண்பனின் வடிவில் இருக்கின்ற தமிழ் மக்களின் எதிரிகள்”” என்பதே உண்மை.

எனவே இன்றைய சூழலில் “”எதிரி எதை விரும்புகிறானோ அதை நீ நிராகரி. எதிரி எதை எதிர்க்கின்றானோ அதை நீ ஆதரி”” இதுவே அரசியல் வளர்ச்சியும் அரசியல் தந்திரமுமாகும். இதனை தமிழ் அரசியல் தலைமைகள் எனப்படுவோர் கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில் இந்த 13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு தீர்வாகவும் அமையவில்லை. அமையவும் முடியாது என்பதிற் சந்தேகமில்லை.

அதேவேளை இந்த 13ம் திருத்த சட்டவாக்கத்தில் இருப்பவற்றை கடந்த 34 வருடங்களாக சட்ட அமுலாக்கம் செய்யப்படவுமில்லை. அப்படிச் செய்ய சிங்களப் பேரினவாதம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தும் வகையில் குறைந்தபட்சம் அதனை முழுமையாக அமுலாக்கம் செய்யும்படி கேட்பதுதான் இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கடமை. அதனை இந்த நிமிடம் வரைக்கும் ஒரு தமிழ் தலைமயாவது சட்ட அமுலாக்க செய்யும்படி பாராளுமன்றத்தில் பேசியதோ, அதற்காக போராடியதோ கிடையாது. அதுவே ராஜரீக அரசியற் செயற்பாடு. அதனைவிடுத்து வெறுமனே மக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும், தெருக்களிலும் ஊளை இட்டு புலம்புவதில் எந்த பலனும் கிடையாது. இவ்வாறு நீலிக் கண்ணீர் வடிப்பது படுஅயோக்கியத்தனமானது.

இப்போது 13 திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்று போர்க் பறையடிக்கும் தமிழ் தலைவர்கள், தமிழ் கட்சிகள் ஏன் கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார்கள் அல்லது அதற்கு எதிராக முன்னின்று போராடவில்லை என்ற கேள்வி முக்கியமானது. 2022 ஆம் வருட ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என இலங்கை அரசாங்கம் அறிவித்த போது உடனே மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை செய்து , கங்கணம் கட்டி நின்றவர்களும் இந்த அரசியல்வாதிகள்தான் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

குறைந்தபட்சம் அரசியல் யாப்பில் இருக்கின்ற காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் உட்பட 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் படி தமிழ் கட்சிகள் போராடியிருக்க வேண்டும். அப்படி போராடாமல் இருந்துவிட்டு பதவிகளையும் சுகபோகங்களையும் அரவணைக்கத் துடிக்கும் தலைவர்கள் இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். இது இன்று நேற்றல்ல இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த அனைத்து அரசியல் கட்சிகளும் செய்கின்ற அயோக்கியத்தனமான தமிழ் மக்கள் விரோத நடவடிக்கையே ஆகும்.

13ம் திருத்தச் சட்டம் என்பது ஒரு போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வல்ல. அதில் தமிழ் மக்களுக்கான எத்தகைய அதிகாரங்களும் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த 13 ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது.

அதாவது இலங்கை அரசியலில் அரசியல் யாப்பானது வளர்ச்சி விதிக்கு உட்படாமல் மாறாக அது தேய்வுக்கு உட்பட்டு வருவதை காணமுடிகிறது. உதாரணமாக 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பில் இடம்பெற்றிருந்த 29 ஆவது சரத்து சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அது 1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசு யாப்பில் இல்லாது ஒழிக்கப்பட்டது.

அவ்வாறே 13ஆம் திருத்தச் சட்டமும் 2022 ஆம் ஆண்டு வரப்போகின்ற அரசியல் யாப்பில் இல்லாதொழிக்கப்பட்டு விடப்போகிறது. அது தமிழ் மக்களுக்கு மேலும் தீர்வுக்கான வழிகளை தேடும் மார்க்கத்தில் கீழ்நோக்கிய பெரும் சரிவை ஏற்படுத்தும். 13 ஆம் திருத்தச் சட்டமானது ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான வெளி அல்லது மூன்றாம் தரப்பு ஒன்றின் தலையிட்டுக்கான ஒரு வழியாகவும் இருக்கின்றது. எனவே 13 ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கும் வகையில் ஒரு புதிய அரசியல்யாப்பை கொண்டுவரப்போகிறார்கள். இதன் மூலம் வெளித் தரப்புக்கள் இலங்கையில் தலையிடுவதை வெற்றிகரமாக தடுத்து தமிழ் மக்களை தனிமைப்படுத்தி இலங்கைத் தீவுக்குள் அழித்தொழிக்க சிங்கள அரசு முயற்சிக்கின்றது. இதுவே சிங்கள அரசின் திட்டவட்டமான சதிகார இராஜதந்திர வியூகமாகும்.

எனவே 13 திருத்தச் சட்டத்தை நிராகரிப்பது அல்லது ஒழிப்பது என்பதை விடுத்து அதற்கு அப்பால் கடந்து தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றை முன்வைத்து அதனைப் பெறுவதற்கான போராட்டத்தையே இந்த தமிழ் அரசியல் தலைமைகள் ஜனநாயக ரீதியிலும், ஜனநாயக முறைகளுக்கு உட்பட்டும் முன்னெடுக்க வேண்டும்.

தியாகி திலீபனுக்கு தீபம் ஏற்றுவதில் அக்கறை காட்டுவோர் உண்மையாகவே அவரின் கொள்கையை மதித்து அதன்படி தாமும் முன்நின்று முன்னுதாரணமாய்ப் போராட வேண்டும். 13ஆம் திருத்தம் வேண்டாம் என்பவர்களும், 13ஆம் திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்பவர்களும், திலீபனின் வழியில் போராடி தாங்கள் தியாகிகள் என்பதை நிரூபிக்கட்டும். அப்படி ஒரு சிறந்த கோரிக்கையை முன்வைத்து இவர்கள் போராடினால் 13ஆவது திருத்தச் சட்டம் பற்றிய பேச்சுக்கே இடம் இருக்காது.

குறைவான 13ம் திருத்தம் வேண்டாம் என்று போராடிக் கொண்டிருப்பதைவிட , நிறைவானதாக எமக்கு என்ன வேண்டுமோ அதனை முதலில் முன்வைக்க வேண்டும். அதனையே கோரிக்கையாக முன்வைத்து அதற்காகப் போராடும் போது ஒரு மேலான வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும். குறைந்தபட்சம் ஒரு சில தலைவராவது அவ்வாறான ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும். அவ்வாறு அதை இவர்கள் நடத்திக்காட்டி தங்களை உயர்த்த தலைவர்களாக நிரூபிக்கலாம். மாறாக மற்றவர்களை துரோகிகள் என்று கூறுவதை விடுத்து நீங்கள் தியாகிகளாகுங்கள் என்று இவ்வாறானவர்களுக்கு வரலாறு அழைப்பு விடுக்கின்றது. அப்போது அவர்கள் கூறும் துரோகிகள் தாமாகவே இல்லாது அழிந்துவிடுவர். அதுவே இவர்கள் தமிழ்மக்களுக்கான அரசியலில் செய்யக்கூடிய பங்களிப்பும் ஆகும்.

மீண்டும் பயங்கரவாத சட்டத்தை இறுக்கமாக்கும் முயற்சியில் அரசு: சுரேஸ் பிரேமச்சந்திரன்

மீண்டும் பயங்கரவாத சட்டத்தை இறுக்கமாக்கும் முயற்சியில் அரசு ஈடுப்பட்டுள்ளது எனவும், அரசு பிரபாகரனை பயங்கரவாதியாக கூறினாலும், தமிழ் மக்கள் அவரை அவ்வாறு பார்க்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பிரபாகரனின் புகைப்படம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் காணப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டு ஒன்றிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் தற்போது அவர்கள் மீது மீண்டும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்க விடயம். படம் வைத்திருந்தால் பிரச்சினை என்றால் எத்தனை பேரை இவர்கள் இன்னமும் கைது செய்ய வேண்டும்.

இதனடிப்படையில் இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் கண்டிக்கத்தக்கது, இளைஞர்களின் மீது உள்ள இப்படியான வழக்குகள் மீளப்பெற வேண்டும்.

“சேகுவரே” போராளியின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட ரீசேட்களை சிங்கள இளைஞர்களும் அணிந்துகொள்கின்றனர். அப்போது அவர்களை இந்த அரசு கைது செய்யுமா? காலத்துக்கு காலம் அரசு தனக்கு வேண்டாதவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்றது என இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.

13ஐ அமுல்படுத்த கோருவது சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஒருபோதும் பாதிக்காது: விக்னேஸ்வரன்

I13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த கோருவது ஒருபோதும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை பாதிக்காது என்றும் மாறாக உரிமைக்கான போராட்டத்தை பலப்படுத்தும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் உங்கள் கட்சி முன்வைத்த விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சர்வதேச சமூகத்தினால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே பெறப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், தற்போது 13 ஆவது திருத்த சட்டத்தின் அடிப்படையில் தீர்வினைப் பெறும் முயற்சிகளை நீங்கள் முன்னெடுத்திருப்பது ஏன்? என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதிலிலேயே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மிகவும் சுருக்கமாக இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்கின்றேன். 13 ஆவது திருத்த சட்டத்தை ஒரு தீர்வாக நாம் ஏற்றுக்கொண்டுவிட்டதாக விஷமத்தனமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இது தொடர்பில் நான் முன்னரும் மிகவும் தெளிவாக எனது நிலைப்பாட்டை கூறியிருக்கின்றேன். எங்களுடன் சேர்ந்து பல தமிழ்க் கட்சிகள் அண்மையில் கூடி 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியாவை வலியுறுத்துவதற்கு எடுத்த தீர்மானத்துக்கும் எமது அரசியல் தீர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏற்கனவே இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருக்கும் ஒருசில சாதகமான விடயங்களை எமது தற்பாதுகாப்புக்காக பயன்படுத்துவதற்கு முயலும் ஒரு நடவடிக்கையே இது. இதனை நான் தற்போது மட்டும் கூறவில்லை. நான் முதலமைச்சராக இருந்தேபோதே, 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரம், முதலமைச்சர் நிதியம் ஆகியவை தரப்படவேண்டும் என்று பல தடவைகள் வலியுறுத்தி இருந்தேன். நில அபகரிப்பு, போரின் பின்னைய வறுமை, சமூக சீர்கேடு, இராணுவ மயமாக்கல் ஆகியன காரணமாக ஆபத்தின் விளிம்பில் இருக்கும் எமது தேசத்தைப் பாதுகாப்பதற்கு சில நடவடிக்கைகளை நாம் அவசரமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. “தீர்வு வரும், தீர்வு வரும்” என்று நாம் காலத்தை இழந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் நாம் எமது தேசத்தை இழந்துகொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை. ஆகவே தான் நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வினை நாம் பெற்றுக்கொள்ளும்வரையில் இருப்பவற்றைப் பாதுகாப்பதற்கு ஏற்கனவே சட்டத்தில் இருக்கும் அதிகாரங்களை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று முயற்சிக்க வேண்டியுள்ளது.

தற்போது எமக்கு நாம் விரும்பும் ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ளும் காலம் கனிந்துவிட்டதாகவும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் 13 ஆவது திருத்த சட்டத்தை இதனால்த்தான் வலியுறுத்துகின்றோம் என்பதுபோலவும் உண்மைக்கு மாறான கருத்துக்கள் கூறப்பட்டுவருகின்றன. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான கடந்த 12 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் எமக்குத் தீர்வு வரும் என்ற நம்பிக்கையுடனேயே நாம் வாழ்ந்துவந்திருக்கின்றோம். யுத்தம் முடிவடைந்து மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டபோது அதில் நாம் போட்டியிட்டபோது கடும் எதிர்ப்புக்கள் எமக்கெதிராக முன்வைக்கப்பட்டன. மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது என்பது 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒரு தீர்வாக நாம் ஏற்றுக்கொண்டுவிட்டதாக அர்த்தப்படுத்தப்பட்டுவிடும் என்று சில கட்சிகள் எதிர்ப்புத்தெரிவித்தன. தேர்தலையும் புறக்கணித்தன. ஆனால், உண்மையான நிலைமை அப்படி இருக்கவில்லை. அன்றே, நாம் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒற்றுமையுடன் நடவடிக்கை எடுத்து இருந்தால், இன்று மிகவும் பலமான ஒரு நிலையில் இருந்திருப்போம். அந்த நிலையில் நின்று கொண்டு எமது நிரந்தரத் தீர்வுக்காகப் போராடியிருப்போம். இன்று எமது நிலை மிகவும் வருத்தத்திற்குரியதாக மாறியுள்ளது. இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணித்து வந்துள்ளார்கள். எந்தவகையிலும், 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கோருவது எமது சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுக்கான கோரிக்கையை பாதிக்க முடியாது. ஆகவே, தவறுகளில் இருந்து நாம் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

ர்வுக்கான எமது நடவடிக்கைகளும் ஒற்றையாட்சியின் கீழ் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கான எமது முயற்சிகளும் வெவ்வேறானவை. அவை சாமாந்திரமானவை, ஒருபோதும் ஒன்றுடன் ஒன்று சந்திக்க முடியாதவை. 13 ஆவது திருத்த சட்டத்தின் கீழ் நான் முதலமைச்சராக இருந்திருக்கின்றேன். எமக்கு அமைச்சர்கள் இருந்தார்கள். பல நிறுவனங்கள் இருந்தன. ஆனால், இதற்காக எமது சுய நிர்ணயத்துக்கான கோரிக்கை ஒருபோதும் பாதிக்கப்படவில்லை. மாறாக, எனது பதவியைப் பயன்படுத்தி சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை நான் வலுப்படுத்தி இருக்கின்றேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு யாழ்ப்பாணத்தில் பொதுமேடையில் வைத்து நேருக்கு நேராகவே 13 ஆவது திருத்தம் ஒருபோதும் எமக்கு ஒரு தீர்வு அல்ல என்று கூறியிருக்கின்றேன். மாகாண சபை ஆட்சி அமைந்துவிட்டது என்பதற்காக தாயகத்திலும் சரி, புலம்பெயர் நாடுகளிலும் சரி எமது மக்கள் சுயநிர்ணயத்துக்கான கோரிக்கையையோ நடவடிக்கைகளையோ கைவிடவில்லை. 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டாலும் நிலைமை அதுதான்.

நாம் சட்டப் புத்தகத்தில் இருக்கும் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கோருவது நாளுக்கு நாள் எமது நிலைமை மோசமாகிக் கொண்டு வருவதைத் தடுக்கவே.

தமிழ் மக்களுக்கான நிறைந்த இறுதித் தீர்வு சர்வதேச சமூகத்தினால் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் ஊடாகவே நடைபெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. தமிழ் கட்சிகள் காலம் காலமாக சமஷ்டியை ஒரு தீர்வாக வலியுறுத்தி வருகின்றன. கூட்டு சமஷ்டியே நிரந்த தீர்வாக அமைய முடியும் என்பது எமது கூட்டணியின் நிலைப்பாடு. இதனை நாம் தீர்மானிக்க முடியாது. எமது மக்களே தீர்மானிக்க வேண்டும். அதனால்த்தான் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு நாம் கோரிக்கை முன்வைத்திருக்கின்றோம். இதனை இந்தியாவிடமும் நாம் வலியுறுத்தி உள்ளோம். மீண்டும் வலியுறுத்துவோம். ஆனால், சர்வஜன வாக்கெடுப்பு இன்று நடக்கும் , நாளை நடக்கும் என்று எதிர்பார்த்திருந்து எமது நிலத்தையும் மக்களையும் நாம் இழந்துவிடக்கூடாது. ஒவ்வொருநாளும் எமது நிலம் பறிபோகின்றது. பெருமளவில் எமது மக்கள் வெளியேறுகின்றார்கள். ஆகவேதான் ஏற்கனவே இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி சில வலுவூட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளோம்.

இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில், தமிழ்த் தேசத்தை இல்லாமல் செய்வதற்கான பாரிய திட்டங்களை அவர்கள் பல காலத்திற்கு முன்பிருந்தே வகுத்திருக்கின்றார்கள். தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அவர்களின் மிக சிறந்த உத்தி, காலத்தைக் கடத்துவதுதான். காலங் கடத்தி சிறிது சிறிதாக வடகிழக்கை ஆக்கிரமிப்பதே அவர்களின் குறிக்கோள். கடந்த 12 வருடங்களில் சிறிய அதிகாரத்தைக் கூட எமக்கு வழங்காமல் காலத்தை இழுத்தடிப்பு செய்ததன் மூலமே எம்மை அவர்கள் பலவீனப்படுத்தி இருக்கின்றார்கள். வடக்கையும் கிழக்கினையும் புவியியல் ரீதியாகப் பிரிப்பதற்கும், முல்லைத்தீவை ஒரு அம்பாறை ஆக்குவதற்கும் அவர்களுக்கு இன்னமும் சிறிது காலம் மட்டுமே தேவைப்படுகின்றது. தமிழ் மக்கள் தம்மை தாமே பாதுகாப்பதற்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள விடாமல் எவ்வளவுக்கு எவ்வளவு காலத்தை இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ்த் தேசத்தை நிர்மூலம் செய்ய முடியும் என்பது அவர்களின் கணிப்பு. அதுதான் உண்மையும் கூட. புள்ளிவிபரங்கள் அதைத் தான் எடுத்துக் காட்டுகின்றன.
நாம் கோரிக்கை விடுவதால் இலங்கை அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கு இலகுவில் உடன்படப்போவதில்லை. ஆனால், இதனை அமுல்ப்படுத்துவதற்கு இலங்கையை நிர்ப்பந்திப்பதற்கான தகுதியும், உரிமையும், கடமையும் இந்தியாவுக்கு இருக்கின்றது. இந்தியாவிடம் நாம் இந்தக் கோரிக்கையை எந்தவிதமான கால வரையறையும் இன்றி திறந்ததாக (ழிநn) விடுக்கவில்லை. தமிழ்ப் பேசும் மக்களுக்கு இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமையினை தீவிரமாக கவனத்தில் எடுத்து, மிக விரைவாக 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
இந்த இடத்தில் எமது முஸ்லிம் சகோதரர்கள் பற்றியும் மலையகச் சகோதரர்கள் பற்றியும் ஒரு சில வாசகங்களை உள்ளடக்குவது உசிதம் என்று எனக்குப்படுகிறது. வடகிழக்கு முஸ்லிம் தலைவர்கள் சிலர் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் அது முஸ்லிம் மக்களுக்கு பாதகம் விளைவிக்கக் கூடும் என்று எண்ணுகின்றார்கள். இது தவறு. வடகிழக்கு முஸ்லிம் மக்கள் சிந்திக்க வேண்டிய ஒரேயொரு விடயம் தமது முஸ்லிம் அலகு தமிழ்ப் பேசும் பிரதேசமாக வடகிழக்கினுள் இருக்க வேண்டுமா அல்லது சிங்கள பெரும்பான்மையினர் வசம் இருக்க வேண்டுமா என்பது. சிங்களப் பெரும்பான்மையினர் வசம் சென்றால் தமக்கு என்ன நடக்கும் என்பதை முஸ்லிம் சகோதரர்கள் கடந்த சில வருடங்களுக்குள் உணர்ந்திருப்பார்கள். வடகிழக்கில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களை ஒன்று சேர்த்து சமஷ்டி முறையிலான முஸ்லீம் அலகின் கீழ்க் கொண்டு வருவது சிரமமல்ல. அதே போன்று மலையகத் தமிழ் மக்களும் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களை ஒன்று சேர்த்து சமஷ்டி முறையிலான மலையக தமிழர் அலகை ஸ்தாபிப்பது சிரமமல்ல. ஆனால் கிழக்கு மாகாண முஸ்லிம் சகோதரர்கள் சிங்கள அலகினுள் சென்றால் காலக்கிரமத்தில் தமிழ் மொழியானது அவர்களிடையே அழிந்து போகும். இஸ்லாம் மதமும் வெகுவாகப் பாதிக்கப்படும். இவற்றையெல்லாம் முஸ்லீம் தலைவர்களும் விடுதலைப் புலிகளும் கருத்துப் பரிமாறிய பின்னரே அவர்களுக்குள் ஒரு உடன்பாடு முன்னர் ஏற்பட்டது. எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு இஸ்லாமிய மக்கட் தலைவர்களும் மலையக மக்கட் தலைவர்களும் எம்முடன் சேர்ந்து ஒருவர்க்கொருவர் பலமாக இருப்பதே தற்போதைய அவசரமான தேவையாகும்.

Posted in Uncategorized