வட மாகாண ஆளுநர் – இரா. சம்பந்தன் சந்திப்பு

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று (19) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்.

வட மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வினை காணும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வட மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா இதன்போது உறுதியளித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழர்களை அச்சுறுத்தி காணி அபகரிப்பு- இரவோடு இரவாக போடப்பட்ட வீதி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சவுக்கடி, புன்னைக்குடா, களுவன்கேணி பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களை அச்சுறுத்தி இரவோடு இரவாக சுமார் 10 கிலோமீட்டர் வீதி அமைக்கப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக புன்னைக்குடா பிரதேசத்தில் உள்ள அரச தனியார் காணிகளை எந்த வித அனுமதியும் இன்றி இஸ்லாமிய அடிப்படைவாத குழுவைச் சேர்ந்த சிலர் கம்பி வேலிகள் கொண்டு அடைத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நிறுத்துமாறு ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் ஏறாவூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் அது தடுத்து நிறுத்தப்படவில்லை.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அரபு நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத குழு ஒன்று தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளுக்கு போலி உறுதிகளை முடித்து அதனை ஆக்கிரமித்து இஸ்லாமிய அடிப்படைவாத பள்ளிகளை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை இவ்வாறு அபகரித்து அவற்றை இரவோடு இரவாக அடைத்து குறித்த காணிகளுக்கு சுமார் 10 கிலோமீட்டர் வரையான வீதிகளையும் போட்டுள்ளனர்.

பிரதேச சபை மற்றும் அரச திணைக்களங்களில் எந்த வித அனுமதியும் பெறாமல் நடைபெறும் மேற்படி சட்டவிரோத வேலைத்திட்டங்களை உடன் நிறுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும் அதனை பொருட்படுத்தாமல் குறித்த பகுதியில் வீதிகளை நிறுவி வருகின்றனர்.

காணி மாபியாக்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்காக ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் சர்வானந்தன் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு குறித்த பகுதியில் வீதி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த இரண்டு வாகனங்களை ஏறாவூர் காவல்துறையிடம் பிடித்து கொடுத்ததுடன் மேற்படி பிரதேசத்தில் நடைபெறும் சட்டவிரோத வீதி அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்துமாறு ஏறாவூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

ஆனால் முறைப்பாடு செய்த மறுநாள் இரவோடு இரவாக இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களை சேர்ந்த காணி மாபியாக்கள் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு வீதிகளை அமைத்துள்ளதோடு பச்சை மரங்களை கொண்டு கம்பி வேலிகளையும் அமைத்துள்ளனர்.

இது குறித்து மீண்டும் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் சர்வானந்தன் ஏறாவூர் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேவேளை குறித்த பகுதியில் உள்ள தமது காணிகளை அடைப்பதற்கு இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்ததிலும் சதி? – மனோ

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை  நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது என முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் டக்ளஸ் தேவானந்தவிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,  எங்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் குரல் கொடுப்பேன். வடக்கு மீனவர்கள் பிரச்சனை என்பது பெரும் பிரச்சனை அவர்கள் ஏற்கனவே துன்பத்தை சந்தித்தவர்கள் யுத்தத்தை நாம் விரும்பவில்லை யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்தது. வடக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு  உள்ள தடையை அகற்ற வேண்டும்.

இந்திய மீனவர்கள் 30 வருடகாலமாக இலங்கை கடல்வளத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவில் தற்போது இலங்கை வளத்தை பயன்படுத்திய  ஓர் தலைமுறையே உருவாகி விட்டது. இந்தியாவில்கூட  மாநிலம் மாறி வேறு மாநிலத்தில் மீன்பிடிக்க முடியாத நிலையில் இலங்கை எல்லைக்குள் வருவதும்  பிரச்சினைக்குரிய விடயம்.

இதற்கு இலங்கை மீனவர்களிற்கு பாரிய கப்பல்களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். கடற்றொழில் அமைச்சராக டக்ளசை நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது.

இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ டக்ளசிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது. இதனை வெறும் மீனவர்கள் பிரச்சனையாக மட்டும் அல்ல தமிழர்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என அரசியல் தலைவர்களை கோர விரும்புகிறேன்” என்றார்.

“25 ஆம் திகதி கடமைக்கு திரும்ப ஆசிரியர்களும் அதிபர்களும் எடுத்த முடிவு மிகச் சரியானது”

ஆசிரியர் – அதிபர்கள் மற்றும் விவசாயிகளினதும் போராட்டமும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளும் நியாயமானது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

எனவே அவர்களால் முன்னெடுக்கப்படும் நியாயமான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஆசிரியர்களுக்கு எதிராக செயற்படுவதை பெற்றோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர்களுக்கு எதிராக கருத்துரைக்கும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகள் அரச பாடசாலைகளிலா தற்போது கல்வி கற்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

அத்தோடு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கையை தொடங்க ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவை அனைத்து மக்களும் பாராட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

13 வது திருத்தம் கடனுக்கான முன்நிபந்தனை அல்ல – அரசாங்கம்

அரசியலமைப்பின் 13 வது திருத்தம் இந்தியாவிலிருந்து கடன் பெறுவதற்கான முன்நிபந்தனை அல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் வாங்குவதற்காக கடன் பெற இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இருப்பினும் இந்த விடயத்திற்கு அரசியலமைப்பின் 13 வது திருத்தம் ஒரு முன்நிபந்தனையாக வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்த இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவிற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியாவிடம் கோரியுள்ளது.

நாட்டில் தற்போது உள்ள எரிபொருள் அடுத்த ஜனவரி வரை மட்டுமே போதுமானதாக உள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஆசிரியர், அதிபர்களுக்கு வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே விடுத்துள்ள எச்சரிக்கை!

21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமான பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படும் என்று வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தெரிவித்துள்ளார்.

அதேபோல், 25 ஆம் திகதியன்று யாராவது வந்தால், அவர்கள் பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி, இணைய கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் அதிபர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தத்தின் 100 வது நாள் இன்று.

இந்தப் பின்னணியில், ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுக்கு எதிரான தேசியக் கூட்டமைப்பு கல்விச் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவை நேற்று (18) சந்தித்து கடிதம் ஒன்றை கையளித்து இருந்தனர்.

சம்பளப் பிரச்சினை தீரும் வரை தமது தொழிற்சங்கங்களின் ஆசிரியர் அதிபர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கு செல்லமாட்டார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், எதிர்வரும் நேற்று 25 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடங்க ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மடு கோயில் மோட்டை விவசாய காணியை ஒரு சிலரின் தூண்டுதலுடன் அபகரிக்க முயற்சி – மக்கள் போராட்டம்

மடு திருத்தலத்திற்கு உரிய  கோயில் மேட்டை விவசாய காணி அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றமையை கண்டித்து மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் சின்னப் பண்டிவிரிச்சான் கிராம மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் பஜார் பகுதியில் அமைதியான முறையில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

நீண்ட காலமாக மடு திருத்தலத்திற்கு சொந்தமாக காணப்பட்ட குறித்த காணியை சிலரின் தூண்டுதலுக்கு அமைவாக அபகரிக்கப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த பகுதியில் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்துள்ள நிலையில்,தற்போது ஒரு சில தீய சக்திகளால் மத பிரச்சினையை தோற்றுவிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மடு திருத்தலத்திற்கான கோயில் மோட்டை காணியானது பல வருடங்களை கொண்டுள்ள நிலையில்,மடு ஆலய நிர்வாகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையிலே குறித்த காணி தொடர்பாக சில விஷமிகளால் மத பிரச்சனைகளை தூண்டி, குறித்த காணியை அபகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த கிராமங்களில் ஏழை விவசாயிகள் இருக்கின்ற நிலையில் ஒரு குழுவினர் தாங்கள் ஏழை விவசாயிகள் என கூறிக்கொண்டு குறித்த காணியை அபகரிக்க முயற்சி செய்து வருகின்றதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஜார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தனர்.

பின்னர் வட மாகாணத்தின் புதிய ஆளுநருக்கு எழுதப்பட்ட மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலிடம் கையளிக்கப்பட்டதோடு,துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது – கொழும்பு பேராயர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக தெரிவித்து அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த தாக்குதல்களுக்கு பின்னணியில் மிகவும் சந்திவாய்ந்த ஒருவர் இருக்கின்றார் என்பதே இந்த தாமதத்திற்கு காரணம் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையவர்களை தண்டிப்பதாக பொதுமக்களுக்கு ஜனாதிபதி, தனது தேர்தல் பிரச்சாரத்திம் உறுதியளித்தார் என்றும் கொழும்பு பேராயர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தேர்தல் வெற்றியின் பின்னரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி உறுதியளித்தார் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டார்.

அத்தோடு சந்தேகத்திற்குரிய விடயங்கள் குறித்து விசாரணையை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் குறித்த ஆணைக்குழு அறிவுறுத்திய நிலையில் அதனை இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் கொழும்பு பேராயர் குற்றம் சாட்டினார்.

எனவே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக என்ன நடந்தது என்ற உண்மையை அறியும் முயற்சியில் சர்வதேச சமூகம் எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்தார்.

பங்காளிக் கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி கோட்டா!

கெரவலபிட்டிய மின் நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திடம் வழங்கும் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

மின்நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான முடிவு குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் பங்காளி கட்சிகளினால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்த பிரச்சினையைப் பற்றி விவாதிக்க வேண்டும் என கோரி பங்காளி கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலமான கோரிக்கையை விடுத்திருந்தனர்.

எனவே அந்தக் கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ள ஜனாதிபதி கோட்டாபய, அரசியல் முடிவுகள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால், கட்சியின் தலைவர், பிரதமர் அல்லது கட்சியின் தேசிய அமைப்பாளருடன் கலந்துரையாடுமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக ஆளும் பங்காளி கட்சிகள் கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருந்தது.

எனவே அந்த சந்திப்பில் திருப்தி இல்லை என குறிப்பிட்டு ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவதற்கு 11 அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தீர்மானித்திருந்த நிலையில் ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.

குறித்த கடிதத்திற்கு அனுப்பிய பதிலிலேயே ஜனாதிபதி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீண்டும் சந்தித்து இந்த விடயம் தொடர்பாக விவாதிக்க உள்ளனர்.

Posted in Uncategorized

21- 22ம் திகதிகள் அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில், பாடசாலை திறக்கப்படும் அதே நாளில் போராட்டத்தை முன்னெடுக்க அதிபர், ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாடசாலை ஆரம்ப தினத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதா? இல்லையா? என்பது குறித்து ஆசிரியர் தொழில்சங்கங்களுக்கு இடையில் இன்று (18) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போதே எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளனர். பாடசாலை ஆரம்ப தினத்தில் கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணிப்பதற்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தீர்மானித்துள்ளனர்.

எனினும், ஒக்டோபர் மாதம் 25ம் திகதி பாடசாலைகளுக்கு செல்ல அதிபர் − ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை பெரும் சிக்கலாக மாறியுள்ள நிலையில், தொழிற்சங்களின் செயல்பாடுகளால் அரசாங்கம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதே வேளை,

இலங்கையில் பாடசாலைகளின் கற்பித்தல் செயற்பாடுகளை பாடசாலை திறக்கப்பட்ட பின்னரும் புறக்கணிக்க பெரும்பாலான ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ள நிலையில், தாம் அதில் இருந்து விலகி கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

சம்பள உயர்விற்கு தாம் முரணானவர்கள் அல்லவெனக் குறிப்பிட்டுள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் சரா.புவனேஸ்வரன், யுத்த சூழ்நிலையில் கூட கற்பித்தல் செயற்பாடுகளை நிறுத்தாத நிலையில், பிள்ளைகளின் கல்வியை பணயம் வைக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஆசிரிய – அதிபர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், தமது சங்கம் போராட்டத்தில் கலந்துக்கொள்ளாமை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று விளக்கமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது, அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் வரும் 21ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டுமெனவும், இது யாருக்கும் எதிரான செயற்பாடு அல்லவெனவும் அவர் கூறியுள்ளார்.