ஈழத்தமிழர் கருத்தை உள்வாங்கிய வெளியுறவுக்கொள்கை நிலைப்பாட்டை பலப்படுத்தவேண்டும் – ரெலோ

நோர்வேயில் வாழும் ஈழத்தமிழர்கள் கொண்டிருக்கும் கருத்தையும் உள்வாங்கியே வெளியுறவுக்கொள்கையை அந்த நாடு வகுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை பலப்படுத்தவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ தெரிவித்துள்ளது.

நோர்வேயில் பாராளுமன்றத் தேர்தலில் பங்காற்றிய புலம்பெயர் தமிழர்களை பாராட்டுகிறோம் என்ற தலைப்பில் நோர்வேயில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கைக்கொண்ட அணுகுமுறைகளை நாம் வரவேற்ற்றுப் பாராட்டும் வகையில் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2021 செப்டம்பர் மாதம் 13ம் திகதி நோர்வேயில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கைக்கொண்ட அணுகுமுறைகளை நாம் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம்.

புலம்பெயர் நாடுகளில் தேர்தல்கள் நடைபெறும்போது கொள்கை ரீதியாகக் குறைந்தபட்சம் திம்புக்கோட்பாடுகளில் வெளிப்படுத்தப்பட்ட ஈழத்தமிழர் தரப்புக் கோரிக்கைகளைக் கொள்கை ரீதியாக ஆதரிக்கும் கட்சிகளுக்குத் தமிழர்கள் கூட்டாக வாக்களிக்கும் நிலைப்பாட்டைக் கைகொண்டது பொருத்தமான ஓர் அணுகுமுறை என்று நாம் கருதுகிறோம். இது சம்பந்தமாக நோர்வே வாழ் எமது உறவுகளின் பிரதிநிதிகளோடு நாம் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் கடந்த காலங்களில் ஈடுபட்டிருந்தோம்.

இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்குப் பகுதிகளை ஈழத் தமிழர்களின் மரபுவழித் தாயகமாவும், ஈழத் தமிழர்கள் தனி இனமாகவும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும் அங்கீகரித்தல் ஆகிய நிலைப்பாடுகள் அடிப்படையானவை.

இவ்வருட ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் சிவில் சமூகத்தோடு ஒன்றிணைந்து ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கும் அங்கு தீர்மானம் இயற்றும் நாடுகளுக்கும் இக்கோட்பாடுகளை முன்வைத்து கூட்டுக் கோரிக்கையை சமர்பித்துள்ளோம்.

குறைந்தபட்சம் இந்த கோரிக்கைகளை கொள்கையளவில் பிரகடனப்படுத்தும் கட்சிகளை நோர்வே புலம்பெயர் தமிழ் உறவுகள் குறிப்பாக ஆதரிக்கவேண்டும் என தெளிவு படுத்தியிருந்தோம்.

இந்த கொள்கை அடிப்படையில் , நோர்வேயின் தலைநகர் தேர்தற்தொகுதியில் நாடாளுமன்ற உறுப்புரிமையைக் கொண்டிருந்த ரொட்த் கட்சி கடந்த பெப்ரவரி மாதத்தில் ஈழத் தமிழர் தேசியம் சார்ந்த கொள்கையை கட்சியின் நிலைப்பாடாக அறிவித்திருக்கிறது. இது ஒரு முன்மாதிரியான, வரவேற்கத்தக்க செயற்பாடு.

நோர்வே தழுவிய தேசிய மட்டத்தில் ஏனைய கட்சிகளையும் அதைப் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றுமாறு தமது அரசியல் நடவடிக்கைகளை புலம் பெயர் தமிழர்கள் ஒருமித்த நிலையில் கட்டமைக்கவேண்டும் எனவும் எமது நோர்வே வாழ் உறவுகள் முன்னெடுத்திருந்தனர்.

இதனடிப்படையில் ஈழத் தமிழ் தேசத்தின் அங்கீகரித்த ரொட்த் எனும் சிவப்பு கட்சி 8 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்ட நோர்வே வாழ் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

அங்கு வாழும் ஈழத்தமிழர்கள் கொண்டிருக்கும் கருத்தையும் உள்வாங்கியே தமது நாடுகளின் வெளியுறவுக்கொள்கையை அந்த நாடு வகுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை நோர்வே புலம்பெயர் தமிழர்கள் பலப்படுத்தவேண்டும்.

நோர்வேயில் பரந்து வாழும் தமிழர்கள் எமது தேசியம் சார்ந்த கொள்கை வகுப்பை வலியுறுத்தும், பலப்படுத்தும் வகையில் நீங்கள் ஆதரிக்கும் கட்சிகளிடம் கோரிக்கைகளை முன்வைக்குமாறும் வேண்டுகிறோம்.

ஈழத் தாயகத்தில் எமது மக்களின் நிரந்தர அரசியல் தீர்வின் விடிவுக்காய் போராடிக் கொண்டிருக்கும் எமது வேலைத்திட்டங்களுக்கு வலுச் சேர்க்க,  புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது தமிழ்தேசிய உறவுகளை இவ்வகையான செயல்பாடுகளை ஒருமித்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு கோருகிறாம்.