ரஞ்சனுக்குப் பொது மன்னிப்பு -இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மறுப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக வெளியாகியிருந்த தகவல்களை மறுத்துள்ள இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் மற்றும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே அவ்வாறான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்றார்.

சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி பொது மன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக கையெழுத்திடப்பட்ட பொது மன்னிப்புக்கான ஆவணங்கள், சட்டத்தரணி அசான் பெர்ணான்டோவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்தத் தகவலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவருடைய கடிதத்தில் கிட்டத்தட்ட 08 மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் எனஇ நாட்டின் மூத்த பிரஜை மற்றும் முன்னாள் அரச தலைவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

ஒரு நடிகராக, ஒரு சமூக சேவையாளராக, ஒரு அரசியல்வாதியாக ரஞ்சன் ராமநாயக்க, பொது மக்களுக்கான சேவைகளை ஆற்றிவந்த ஒருவர் என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பாரிய குற்றங்களுக்காக சிறைத்தண்டனை வழங்கப்பட்ட பலருக்குஇ தற்போதைய அரசாங்கத்தினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட காரணத்தினால் அத்தகைய பாரிய குற்றமல்லாத விடயத்திற்காக ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு துன்பப்படுவது துரதிர்ஷ்டவசமான விடயம் என முன்னாள் ஜனாதிபதியின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 2021 ஜனவரி 12 ஆம் திகதி நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.