விமல் வீரவன்ச உள்ளிட்டோர் நடத்திய கூட்டத்தில் பதற்றம்

கண்டியில் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் நடத்திய அரசியல் கூட்டத்திற்கு மக்கள் குழுவினர் எதிர்ப்பு வெளியிட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

கூட்டம் முடிவடைந்து விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசியல்வாதிகள் வெளியேறிய போது, ​அங்கிருந்த இளைஞர்கள் அவர்களை கூச்சலிட்டு கடுமையாக திட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் விமல் வீரவன்ச தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் கூட்டம் நடைபெற்ற மண்டபத்தை விட்டு வாகனத்தில் வெளியேறியனார்.

இருப்பினும் கடும் எதிர்ப்பு காரணமாக வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண உள்ளிட்டோர் வெளியே வரமுடியாமல் மண்டபத்திற்குள் இருந்தனர்.

பின்னர் வாசுதேவ மற்றும் திஸ்ஸ விதாரணவும் எதிர்ப்புக்கு மத்தியில் தமது வாகனங்களில் ஏறிச் சென்ற வேளையில் இரு தரப்பினருக்கும் இடையில் பதற்றமான நிலைமை தொடர்ந்தது.

சுமார் 15 நிமிடங்களுக்கு இரு தரப்பினருக்கும் இடையில் பதற்றமான நிலைமை நீடித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திருமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! இந்தியா – இலங்கை பேச்சு

திருகோணமலை துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக லங்கா ஐ. ஓ. சி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் – லங்கா திருகோணமலை துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக லங்கா ஐ. ஓ. சி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற் றோலிய கூட்டுத் தாபனம் – லங்கா ஐ. ஓ. சி. இணைந்து நடத்தும் ட்ரிங்கோ பெற் றோலியம் ரேர்மினல் லிமிட்ரெட் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் இந்திய நிறுவனத்துக்கு உரியதாகும். திருகோணமலை துறைமுகத்தில் உள்ள இரண்டாம் போர் காலத்தில் அமைக்கப்பட்ட 51 எண்ணெய் குதங்களை இந்த நிறுவனம் கட்டுப்படுத்துகிறது. இந்த எண்ணெய் குதங்களை விரைவாக திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 10 எண்ணெய் குதங்களை 2 கோடி அமெரிக் டொலர் செலவில் உடனடியாக திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதேபோல, மீதமுள்ள எண்ணெய் குதங்களை 5 கோடி டொலர் செலவில் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

. தமிழ் மக்களின் அபிலாஷைகள் இணைந்த வட கிழக்கிலேயே பூர்த்தி செய்யப்பட வேண்டும். – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு எம்.பிக்களுடன் அடுத்தவாரம் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசியல் தீர்வு சம்பந்தமாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக விடுக்கப்பட்ட அழைப்பு நடைமுறையில் சாத்தியப்பட வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இனப்பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகள் சம்பந்தமான பேச்சுகள் முன்னெடுக்கின்றபோது கிழக்கு மாகாணத்தைப் புறக்கணிக்க முடியாது. ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு உறுப்பினர்களுடன் சந்திக்கும் அதேநேரம் கிழக்கு உறுப்பினர்களின் பிரசன்னம் அவசியமாகின்றது.  வடக்கை தனியாகவும் கிழக்கைத் தனியாகவும் பார்க்கமுடியாது.

அதேநேரம், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப்  பூர்த்தி செய்வதாக இருந்தால் அது இணைந்த வடக்கு கிழக்கிலேயே அமைய வேண்டும் என்பது எமது நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது. அவ்வாறான நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்கு உறுப்பினர்களுடனான பேச்சுகளின் போது கிழக்கு உறுப்பினர்களையும் உள்ளீர்க்க வேண்டியது அவசியமாகின்றது. இதனால் ஜனாதிபதியைச் சந்தித்து நேரில் கோரிக்கை விடுப்பதென தீர்மானித்துள்ளோம்.  பெரும்பாலும் இந்தச் சந்திப்பு அடுத்தவார நாடாளுமன்ற அமர்வில் இடைப்பட்ட நேரத்தில் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.

வவுனியாவில் முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் அங்குரார்ப்பணம்

நாட்டிலுள்ள அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒன்றினைத்து செயற்படுவதற்காக முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் எனும் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (13) காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , ஜனாதிபதி சட்டத்தரணியும் கொழும்பு தமிழரசு கட்சியின் தலைவருமான கே. வி. தவராசா, யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் , முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் , தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் , சிரேஸ்ட விரிவுரையாளர் பரந்தாமன் மற்றும் முன்னாள் போராளிகள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில் முன்னாள் போராளிகள் ஒன்றிணைவதில் உள்ள சட்டச்சிக்கல்கள் , முன்னாள் போராளிகளின் அரசியல் பிரவேசம் , தற்போது அங்கம் வசிக்கும் தமிழ் கட்சிகளின் நிலமை , போராளிகளின் நலன்சார்ந்து செயற்படுவது , புலம்பெயர் உதவிகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

வியட்நாமிலுள்ள இலங்கையர்கள் குறித்து சர்வதேச சட்டங்களே தீர்மானிக்கும் : விரும்பினால் அழைத்துவருவோம் : வெளிவிவகார அமைச்சர்

வியட்நாமில் உள்ள தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீளவும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.

அதேநேரம் குறித்த இலங்கையர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கனடா நோக்கி பயணிக்க முயற்சித்திருந்த நிலையில் மீண்டும் நாடுதிரும்ப விரும்பாதிருப்பார்களாயின் அவர்கள் தொடர்பில் வியநட்நாம் குடிவரவு குடியகல்வு சட்டங்களும் சர்வதேச புலம்பெயர்தல் சட்டங்களே தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சிங்கப்பூரில் இருந்து மீன்பிடிப் படகொன்றின் மூலம் சட்டவிரோதமாக கனடா செல்வதற்கு 303 இலங்கையர்கள் முயன்றிருந்த நிலையில் படகுக் கோளாறு காரணமாக தத்தளித்தவர்களை வியட்நாமிற்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தம்மை நாட்டுக்கு மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் தம்மை ஐ.நா.பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sabry tells Parliament some home truths – The Island

இவ்வாறான நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் வீரகேசரியிடத்தில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆபத்தான படகுப்பயணத்தில் பாதிக்கபட்டு வியட்நாமில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதுவர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக அவர்களுக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்கள் மற்றும் விமானச் சீட்டுக்களை வழங்கி மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாடுதிரும்ப மறுத்தால்?

எனினும் நாட்டில் காணப்படுகின்ற பொருளதார நெருக்கடிகளை மையப்படுத்தியே படகு மூலம் கனடாவுக்குச் செல்வதற்கு முயற்சிகளை குறித்த நபர்கள் மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள் மீண்டும் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதை மறுப்பார்காளாக இருந்தால் அதன் பின்னர் சதேசச் சட்டங்களும் வியநட்நாமின் குடிவரவு குடியகல்வுச் சட்டங்களும் தான் அவர்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும்.

குறிப்பாக ஐ.நா.வின் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் உள்ளிட்ட தரப்பினரே தீர்மானங்களை எடுக்கவுள்ளனர் என்றார்.

அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியம் – பொலீஸார் அராஜகம்

திகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியம் காரணமாக காவல்துறையினரின் அடாவடிகள் தொடர்கின்றன என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

நேற்று ( 12-11- 22) இடம்பெற்ற மூன்று சம்பவங்கள் இலங்கை பொலிஸார் எவ்வளவு தூரம் தரம்தாழ்ந்துவிட்டனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

முதலாவது சம்பவம் கையில் பதாகைகளுடன் நடந்துகொண்டிருந்த பெண்களை பொலிஸார் துன்புறுத்தியது.

இரண்டாவது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்பொஸிஸார் ஒருவரின் கழுத்தின் மீது கையை வைத்து அழுத்துவது.

மூன்றாவதாக சிரேஸ்ட சட்டத்தரணியொருவர் என்னை அழைத்து தனது உதவியாளரை அடையாள அட்டை வைத்திருக்கவில்லை என தெரிவித்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்தார்.அவரை பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.

பொலிஸாரை கையாளும் அதிகாரம் படைத்தவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களின் தோல்வி, மெத்தனப்போக்கினால் காவல்துறையின் ஈவிரக்கமற்ற தன்மைகள் தொடர்கின்றன

சீன உயரதிகாரி இலங்கை வருகை – கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு!

வெளி நாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் (CPAFFC) தலைவர் Lin Songtian நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார்.

அவர் பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லின் சாங்டியன் (62) 1986 இல் சீனாவின் வெளியுறவு சேவையில் நுழைந்தார், மேலும் சீன வெளியுறவு அமைச்சகத்தில் துணை பணிப்பாளர் (2007-2008), வெளியுறவு நிர்வாகத்தின் பணிப்பாளர்(2010-2014) மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கானபணிப்பாளர் (2014-2017).ஆகிய பதவிகளை இது வரையில் வகித்துள்ளார்.

2020 முதல், லின் சாங்டியன் வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

பெருந்தோட்டத்துறை தொடர்பில் ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம்

மத்திய மாகாண நுவரெலியா, கண்டி, மாத்தளை, ஊவா மாகாண பதுளை, மொனராகலை, சப்ரகமுவ இரத்தினபுரி, கேகாலை, மேல் மாகாண களுத்துறை, தென் மாகாண காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பான விசேட வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கி உதவுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும், கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் ஊடாக கோருகிறேன். பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்நடவடிக்கை அவசர நிலையாக கருதி முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கையில் “வறுமை” பற்றிய கணக்கெடுப்பு அறிக்கையில் உலக வங்கி, இலங்கையின் தேசிய வறுமை மட்டம் 26 விகிதமாக உயர்ந்துள்ள வேளையில் பெருந்தோட்ட துறையில் வறுமை 53 விகிதமாக அதீதமாக உயர்ந்து இருக்கின்றது. அதேவேளை, ஐநா உலக உணவு நிறுவனத்தின் இலங்கை பற்றிய அறிக்கையில் “உணவின்மை”, நகர துறையில் 43% என்றும், கிராமிய துறையில் 34% என்றும், பெருந்தோட்ட துறையில் 51%, என்றும் கூறுகிறது.

ஆகவேதான், மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் முதல், மேல் மாகாண களுத்துறை, கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை மக்கள் வாழும் குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும். நம் நாட்டில் இன்று நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள, உணவின்மை பிரச்சினையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விசேட உதவிகளை வழங்கிட இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் முன்வர வேண்டும்.

இலங்கை முழு நாட்டுக்கும் இந்திய மத்திய அரசு வழங்கிடும் உதவிகள், மிகவும் நலிவுற்ற நிலையில் வாடும் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோருகிறது.

இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் இலங்கை உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கை – இந்திய உறவுகளின் தற்போதைய நிலையை மீளாய்வு செய்து பரந்துப்பட்டு பல துறைகளில் கூட்டாண்மையுடன் செயற்படுவது தொடர்பில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவால் மற்றும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

புது டெல்லியில் சனிக்கிழமை (12) இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பு உறவின் தற்போதைய நிலைமை குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். கடந்த செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதியும் தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவால் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கும் இடையில் இதே போன்றதொரு கலந்துரையாடல் டெல்லியில் இடம்பெற்றிருந்தது.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் போது இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்கியது. பொருளாதார ஸ்தீரதன்மையை உருவாக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் முன்னெடுக்கும் பேச்சு வார்த்தைகளின் போதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான அவசியத்தை சர்வதேச அரங்குகளில் வலியுறுத்தி வருகின்றது. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியுடன் (எக்ஸிம்) இலங்கை கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

விடுவிக்கப்பட்டதும் சாந்தன் இலங்கை திரும்ப விருப்பம்

வேலூர் ஜெயிலில் சாந்தனை வக்கீல் ராஜகுரு சந்தித்து பேசினார். அப்போது சாந்தன் வெளியே வந்த பிறகு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபட உள்ளார். அதைத் தொடர்ந்து தனது சொந்த நாடான இலங்கைக்கு செல்ல உள்ளார் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது. எனவே பாஸ்போர்ட்டை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி (வயது 75) கூறியதாவது:- 30 ஆண்டுகளாக பிரிந்து இருந்த எனது மகனை தற்போது மத்திய அரசு விடுதலை செய்து அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காகப் பாடுபட்டு அத்தனை காலம் உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு பேரும் சேர்ந்துதான் எனது பிள்ளையின் விடுதலைக்கு வழி செய்திருக்கிறீர்கள். தமிழக அரசுக்கும் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் எப்போதும் இந்த நன்றியை மறக்க மாட்டோம். எனக்குத் தான் இந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. இருந்தாலும் நலமாக உள்ளேன். எனது பிள்ளை என்னோடு வந்து சேர்ந்துவிடுவான் என உறுதியாக உ ள்ளேன் . இவ்வவாறு அவர் கூறினார்.