இந்திய நிறுவனத்திடம் இழப்பீடு கோரும் இலங்கை

இந்திய மருந்துப் பயன்பாட்டினால் கணப்பார்வை பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தை அடுத்து குறித்த மருந்தை தயாரித்த இந்திய நிறுவனத்திடம் இழப்பீடு வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளரினால் நிறுவனத்திடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனத்திடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றும், மருந்தை கொள்வனவு செய்த முகவர்களிடமும் இதனை அறிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நோயாளர்களின் அவல நிலை குறித்து கவலை தெரிவித்த அமைச்சர், சில சமயங்களில் தர குறைபாடுகள் ஏற்படுகின்றன என்றும் உலக அளவிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் மருந்தை கொள்வனவு செய்யும் சப்ளையர் கடந்த ஏழு ஆண்டுகளாக இலங்கைக்கு மருந்துகளை விநியோகித்து வருவதாகவும், இது தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி மூன்று அரச மருத்துவமனைகளில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதால் பலருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சுமார் 30 நோயாளிகள் கண் பார்வை குறைபாடு ஏற்பட்டமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் இழப்பீடும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்களாக இன்று சத்தியப்பிரமாணம்

வட மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், வட மேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் இன்று (17) புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மற்றும்  வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் பதவிகளிலிருந்து நேற்று நீக்கப்பட்டதையடுத்து புதிய ஆளுநர்களாக இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இராணுவத்தை சரியான எண்ணிக்கைக்குள் பேணுவோம் என அமெரிக்க அதிகாரியிடம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உறுதி

இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை சரியான அங்கீகரிக்கப்பட்ட அளவுக்குள் பேணி, பாரம்பரிய இராணுவக் கடமைகளில் அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் (தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம்) திருமதி அஃப்ரீன் அக்தருடன் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அமெரிக்க பிரதி உதவிச் செயலாளர் திருமதி அக்தரிடம் தெரிவிக்கப்பட்டன.

அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்பு நடவடிக்கைகளை நினைவு கூர்ந்த இராஜாங்க அமைச்சர் தென்னகோன், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

மேலும் கடல்சார் விழிப்புணர்வு மற்றும் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இலங்கைக்கு உதவும் அமெரிக்காவின் முயற்சிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகளை அதன் பாதுகாப்புக் கொள்கையில் முன்வைப்பதற்கான இலங்கையின் முயற்சிகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் இராஜாங்க அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார்.

இச்சந்திப்பை நினைவுகூரும் வகையில், பிரதி உதவிச் செயலாளர் அக்தர், இராஜாங்க அமைச்சர் தென்னகோனுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் இ.சொனெக், தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விரைவில் உரியவர்களிடம் வழங்குவோம் – அமெரிக்க அதிகாரியிடம் நீதி அமைச்சர் உறுதி

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 90சதவீதத்துக்கும் அதிகமான காணிகள் அப்பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு காரணங்களால் விடுவிக்காமல் உள்ள காணிகளை உரியவர்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரச திணைக்களத்தின் தென் மற்றும் மத்திய ஆசிய பணியகத்தின் பிரதி உதவி செயலாளர் அப்ரீன் அக்டரிற்கும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ்வுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை நீதியமைச்சில் இடம்பெற்றது. இதன்போது பிரதி உதவி செயலாளர் அமைச்சரிடம் வினவிய கேள்விகளுக்கு தெளிவுடுத்துகையிலேயே இவ்வாறு தெரிவித்ததாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பிரதி உதவி செயலாளர் அமைச்சரிடம் ஆலோசித்திருந்தார். அதற்கு அமைச்சர், இந்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்கள்,அத்துடன் அவற்றை உள்வாங்குவதற்கான தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் தாக்கம் செலுத்திய காரணிகள் ஆகியவற்றை இதன்போது தெளிவுப்படுத்தியுள்ளார்.

அத்துடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பிலும்,இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் அரச மற்றும் தனியார் துறைகளில் ஏற்படும் மோசடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டத்தை அனுமதிக்கும் போதும் எதிர்க்கட்சியால் தடைகள் வந்தபோதும் , அதனை அனுமதிக்கப்பட்ட பின்னர் நாட்டுக்கு தேவையான சட்ட மூலங்களை அனுமதிக்கும்போது அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கிறோம்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட சிவில் தரப்பின் பிரதிநிதிகள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள்.பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வேண்டாம் என்றால் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதா என்ற கருத்தாடல் நாட்டுக்குள் ஏற்பட்டிருக்கிறது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பிரேரணைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் முடியுமானவகையில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதற்போது பிரேரணைகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.

மேலும் யுத்தம் நிறைவடைந்த நிலையில் பாதுகாப்பு படைகள் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் பிரதி உதவி செயலாளர் அமைச்சரிடம் வினவியபோது, இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 90சதவீதத்துக்கும் அதிகமான காணிகள் அப்பிரதேச மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் விடுவிக்காமல் உள்ள காணிகளை உரியவர்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

காணி பிரச்சினை என்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல,காணி தொடர்பில் சரியான மதிப்பீட்டை மேற்கொள்ள 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் வனப்பகுதி எத்தனை சதவீதமாக காணப்பட்டது என்பதை ஆராய்வதற்கு காணி அமைச்சு மற்றும் நில அளவை திணைக்களம் ஒன்றிணைந்து காணி அளவை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தென்னாப்பிரிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் உண்மையை கண்டறிவதற்கான ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,இதனூடாக நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் நீதி கட்டமைப்பின் அபிவிருத்திக்காக ஐக்கிய அமெரிக்க இராச்சியம் மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனம் வழங்கும் ஒத்துழைப்பை வரவேற்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் மதசிறுபான்மையினத்தவர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்கின்றது – அமெரிக்கா

2022 இல் இலங்கையில் மதசிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டார்கள் என அமெரிக்கா மதசுதந்திரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுடனான சந்திப்பின்போது அமெரிக்க தூதரக அதிகாரிகள் மோதலுக்கு பிந்தைய நல்லிணக்க செயற்பாட்டின் ஒரு பகுதியாக இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களை மதித்து அவர்களை அரவணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தனர் என அமெரிக்க இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

மதசிறுபான்மை குழுக்களை சேர்ந்தவர்களை துன்புறுத்தல் அவர்களிற்கு எதிரான பாரபட்சம் குறித்த கரிசனைகைளை தெரிவிப்பதற்காக தூதரக மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளை சந்தித்தனர் என தெரிவித்தனர் என அமெரிக்கா மத சுதந்திரம் குறித்த வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் எனவும் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தினர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை போர்க் குற்றவாளிகளை பிரிட்டன் தடை செய்ய வேண்டும் – தமிழருக்கான பிரிட்டனின் சகல கட்சிகளின் எம். பிக்கள்

இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் என தமிழர்களிற்கான பிரிட்டனின் அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் எலியட் கோல்பேர்ன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14 ஆண்டை குறிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஏனைய சர்வதேச நாடுகளை பின்பற்றி பிரிட்டன் இலங்கையின் யுத்தகுற்றவாளிகளிற்கு எதிராக மக்னிட்ஸ்கி பாணியிலான தடைகளை விதிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கு மன்னிப்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நீதிவழங்கப்படும்,தமிழர்கள் செழிக்ககூடிய எதிர்காலத்திற்காக நாம் உழைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எரிபொருள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான நிழல் அமைச்சர் பரிகார்டினர் இலங்கையில் நிலைமை இன்னமும் மாற்றமடையவில்லை என தெரிவித்துள்ளார்.

இன்னும் மனித உரிமை பேரவையின் எத்தனை அறிக்கைககள் தேவை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கில் இராணுவபிரசன்னத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள ஹரி பார்டினர் இலங்கை தனது திறமையையும் ஆளுவதற்கான உரிமையையும் இழந்துவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் கட்சியால் இலங்கை மீது கொடுக்கப்படவேண்டிய அழுத்தங்களை கொடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நான் உங்கள் போராட்டத்திற்கு எப்போதும் ஆதரவளிப்பது குறித்து பெருமிதம் அடைகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்திற்குமேலாகின்ற போதிலும் எவரும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தாதது குறித்து ஆசிய பசுபிக்கிற்கான நிழல் அமைச்சர் கதரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.

தொழில்கட்சி வலுவான ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்தை கொண்டுவரும் என தெரிவித்துள்ள கதரின் வெஸ்ட் இலங்கை அரசாங்கத்தின் யுத்தகுற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணையை கொண்டுவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக ஒரு தடையை கூட பிரிட்டன் விதிக்காதமை குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன்மெக்டொனாக் இது அமெரிக்காவின் நடவடிக்கைகளிற்கு முரணானது அமெரிக்கா இதுவரை இலங்கையின் பல அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது எனவும்குறிப்பிட்டுள்ளார்.

எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இலங்கையில் பொறுப்புக்கூறல் நீதிக்காக தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தொடர்ந்தும் குரல் கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலையாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் முடிவல்ல இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சி செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் தமிழ் இனபடு கொலை வாரத்தில் இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இன படுகொலையை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ், திருமதி சிவாஜிலிங்கம் மறறும் சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இங்கு மேலும் உரையாற்றிய எம்.கே.சிவாஜிலிங்கம்-

இலங்கையின் அரச படைகளினாலும், சிங்களக் காடையர் குழுக்களாலும் தமிழ் இனப் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் பொதுமக்களுக்கு எமது அஞ்சலிகள்.

தமிழ் மக்கள்மீதான இனப்படுகொலை, போர்க் குற்றங்களுக்கான குற்றவாளிகளைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி எமது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வோம்.

தமிழ் இனப் படுகொலைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும். ஈடுசெய் நீதி கிடைக்கவும் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் அரசியல் தீர்வைக் காண சுதந்திரத்திற்கான பொதுசன வாக்கெடுப்பு ஒன்றினை நடாத்த வேண்டும்.

ஒன்றை இலங்கையின் வடக்கு – கிழக்குப் பிராந்தியத்தில் வசிக்கும் மக்களும், 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் வாழ்ந்துவரும் பரம்பரையினரும் (புலம்பெயர் மக்களும் உட்பட) கலந்துகொள்ளும் வகையில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்த முன்வருமாறு சர்வதேச சமூகத்தைக் கோருகின்றோம்.

கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்ட தமிழ் மக்களுக்குச் சர்வதேச நீதி கிடைக்கச் செய்வோம் என எம். கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாகபூசணி அம்மன் சிலையை அகற்றக்கோரிய பொலிசாரின் மனு தள்ளுபடி

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த வழக்கை தொடர பொலிசாருக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸாரின் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தி இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகி கடந்த ஏப்ரல் 18ம் திகதி வழக்கு விசாரணையின்போது நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக்கை தள்ளுபடி செய்தது.

விகாரைகளுக்கு எதிராகத் தமிழ் இனவாதிகள் நடத்தும் போராட்டம் இனமோதலுக்கான சதி – அஸ்கிரிய பௌத்த பீடம்

இன மோதலை உருவாக்கும் திட்டமிட்ட நோக்கத்துடனேயே வடக்கு கிழக்கில் விகாரைகளுக்கும் தொல்பொருள் இடங்களுக்கும் எதிராக தமிழ்த் தேசிய இனவாத அரசியல்வாதிகளும் கடும்போக்குவாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்கள் என்ற கடுமையாகச் சாடியிருக்கிறார் இலங்கையின் பௌத்த உயர் பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீட பிரதிப் பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர்.

அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இதற்கெதிராக ஒன்றிணைந்து நிற்கும் சிங்கள பௌத்த மக்களால் ஒருநாள் ஏற்படும் பிரச்சினைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் பொறுப்பு என்றும் அவர் எச்சரித்தார்.

திருகோணமலையில் இருந்து ஆளுநரை மாற்றியிருப்பதும் பெளத்த சிங்கள மக்களுக்கு எதிரான ஆட்சியாளர்களின் செயற்பாடு என்றும் அவர் விமர்சித்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

அண்மைக் காலமாக வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகள் மற்றும் தொல்பொருள் இடங்களுக்கு எதிராக கடும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இனவாத வெறி பிடித்த சில அரசியல்வாதிகளும் கடும்போக்குவாத அமைப்புகளும் நாட்டில் இனவாத, மதவாத நெருக்கடியை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் மிகவும் திட்டமிட்டு இந்த இடங்களில் போராட்டம் நடத்தி வருவதாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

இது போன்ற மிக அண்மைச் சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தில் இருந்து 270 வருடங்களுக்கு முன்னர் பிக்குகள் இலங்கைக்கு வந்திறங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தை நினைவுகூரும் வகையிலான நிகழ்வுக்காக சியாமியத் துறவிகள் (பிக்குகள்) அங்கு வந்திறங்கினர். தமிழ் இனவாத அமைப்புக்களைச் சேர்ந்த சில பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் இந்த இடத்திற்கு வந்து கடும் எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றன.

இந்த நிலமையை இன்றைய ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் பாரதூரமான மத மற்றும் தேசிய நெருக்கடி உருவாகுவதைத் தடுக்க முடியாது. இன்று இந்த விடயம் தொடர்பில் தற்போதைய ஆட்சியில் உள்ள எவரும் பேசுவதில்லை. இந்த ஆட்சி ஆளுநர்கள் நியமனத்தில்கூட சிங்கள பௌத்த மக்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போது செயற்படுவதையே நாம் காணமுடிகிறது.

வடக்கு – கிழக்கின் பௌத்த பாரம்பரியம் பாதுகாக்கப்பவேண்டும். அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கு மட்டுமன்றி, அனைவரினதும் சமய நல்லிணக்கத்திற்காக ஒன்றிணைந்து செயற்படும் வகையில், இவ்வாறான தீவிரவாத அமைப்புக்கள் மற்றும் அடிப்படைவாத மதக் குழுக்களைக் கட்டுப்படுத்தி ஆட்சியாளர்கள் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்பதை ஆணித்தரமாக நினைவூட்ட விரும்புகின்றோம். சட்டம் தீவிரமாகச் செயற்படுத்தப்படவேண்டும் இந்தப் பின்னணியில் இந்நாட்டு சிங்கள பௌத்த மக்கள் அனைவரும் இணைந்து தமிழ் இனவாதத்திற்கு எதிராக நிற்கின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பில் ஒரு நாள் ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால் இன்றைய ஆட்சியே அதற்கு நிச்சயமாகப் பொறுப்பு என்றார்

நில அபகரிப்புகளைத் தடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் – கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம்

வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் மற்றும் நில அபகரிப்புகளை தடுப்பதற்கு அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும், கட்சி பேதங்களை கடந்து ஒன்றிணைந்து போராடமுன்வரவேண்டும் என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேசலோகநாதன் குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நொச்சிமுனையில் உள்ள ஒன்றியத்தின் அலுவலகத்தில் இன்றைய தினம் நினைவுகூரும் நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ லோகநாதன் குருக்கள் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருகோணமலை மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து இந்துக்குருமார்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் அலுவலகத்தில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, தென்னை மரத்திற்கு உயிர்நீர்த்தவர்களின் நினைவாக மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், படுகொலைசெய்யப்பட்ட மக்களின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டு, அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கல்லடி, சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக உப்புக் கஞ்சி காய்ச்சப்பட்டு அதனை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இந்துக்குருமார் ஒன்றிய உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேசலோகநாதன் குருக்கள்,

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் உப்புக்கஞ்சியை மட்டுமே தமது உணவாக கடைப்பிடித்தனர். அதனை மீட்டிப்பாக்கும் வகையிலும் எதிர்கால சமூகத்திற்கு இந்த விடயம் தெரியவேண்டும் என்பதற்காகவும் இதனை வருடாந்தம் நாங்கள் நினைவுகூர்ந்து வருகின்றோம்.

அனைவரும் இவ்வாறான நிகழ்வுகளில் இணைந்துகொள்ளவேண்டும் என்ற கோரிக்கையினை நாங்கள் முன்வைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கும் இந்த நேரத்தில் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் தேசியத்தில் பற்றுக்கொண்டவர்களுக்கு ஒரு கோரிக்கையினை கிழக்கிலங்கை இந்தக்குருமார் ஒன்றியத்தினூடாக முன்வைக்க விரும்புகின்றோம்.

தற்போது தையிட்டி, திருகோணமலை போன்ற இடங்களில் பௌத்தமயமாக்கலை மூலாதாரமாக கொண்டு பௌத்தர்கள் இல்லாத இடங்களிலெல்லாம் தற்போது புதுசுபுதுசாக பௌத்த ஆலங்கள் நிறுவப்படுகின்றன.

இந்த நேரத்தில் தமிழ் தேசியம் சார்ந்த அனைவரும் கட்சி பேதங்களை மறந்து எமது நிலப்பிரதேசத்தினை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது.

ஆகவே தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு எமது பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல், நில அபகரிப்புகளை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

வடகிழக்கு தமிழர்களின் தாயகப்பிரதேசம். இதனை யாருக்கும் விட்டுக்கொடுக்க நாங்கள் தயாரில்லை. அவ்வாறான சிந்தனையுடன் செயலாற்ற முன்வரவேண்டும் என அனைத்து தமிழ் கட்சிகளிடமும் வேண்டிக்கொள்கின்றோம்.