”இலங்கை கலவரங்களின் மையமாக இருக்கும்”: மைத்திரி எச்சரிக்கை!

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் இலங்கை கலவரங்கள் மற்றும் போராட்டங்களின் மையமாக இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்திற்கு பொருளாதார மந்தநிலையில் இருந்து இலங்கையை மீட்பதற்கு திறமையும் அறிவும் இல்லை.
இதனால் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க நான் தயாராக இல்லை.
இதனால் ஆளும்கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுமாறு கேட்கின்றேன். அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்து அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலர் அண்டனி பிளிங்கன் இலங்கை வருகிறார்

அமெரிக்க இராஜாங்க செயலர் அண்டனி பிளிங்கன் இலங்கைக்கு வியஜம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த விஜயமானது பெரும்பாலும் நவம்பரில் இடம்பெறலாம் எதிர்பார்க்கப்படுகின்றது.

பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள இலங்கை நட்பு நாடுகளிடம் கூடுதல் ஒத்துழைப்புகளை கோரிவருகின்றது.

இந்நிலையில் இலங்கையின் நெருக்கடி குறித்து அமெரிக்கா கூடுதல் அவதானம் கொண்டுள்ளமையை பிரதிப்பளிக்கும் வகையில் நாட்டின் உணவு பாதுகாப்பிற்காக 20 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

ஜி -20 உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி பைடன் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.

அதே போன்று வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்கவை ஜனாதிபதி பைடன் உட்பட இராஜாங்க செயலர் அண்டனி பிளிங்கன் ஆகியோரும் சந்தித்திருந்தனர்.

அந்த சந்திப்புகளின் போது இலங்கையின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு சாதகமான பதிலளிப்பே கிடைத்துள்ளதாக தூதுவர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அமெரிக்க திறைசேரியின் ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலர் ரொபேர்ட் கப்ரொத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலாளர் கெலி கெய்டெலிங் உட்பட உயர் மட்ட குழுவினர் கடந்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பலதரப்பட்ட சந்திப்புகளில் கலந்துக்கொண்டிருந்தனர்.

இதன் போது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கை – அமெரிக்கக் கூட்டுத்திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்புள் விஸ்தரிப்பு உள்ளிட்ட பரந்துபட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரைளாடியிருந்தனர்.

இந்த குழுவினர் தற்போது வோஷpங்டன் திரும்பியுள்ள நிலையில் இலங்கைக்கான அமெரிக்க ஒத்துழைப்புகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இராஜாங்க செயலர் அண்டனி பிளிங்கனின் இலங்கை விஜயம் தொடர்பான திகதி விபரங்களும் கூடிய விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா

மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா இன்று (2) சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நவ நாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலை திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்றதோடு, பக்தர்களுக்கு திருச்சொரூப ஆசியும் வழங்கப்பட்டது.

மடு அன்னையின் அருளைப் பெறுவதற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தமையும் குறிப்பிடத்தக்கது.

காலி போராட்டத்தில் இராணுவத் தலையீடு: உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

இராணுவ அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுத்து, பலவந்தமாக எதிர்ப்பு பதாகைகளை நீக்கியமையினால் தமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சிலர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நேற்றைய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது, காலி கோட்டையில் சாத்வீக வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இராணுவத்தளபதி, பொலிஸ்மா அதிபர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், அந்த அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உள்ளிட்ட 10 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாம் சாத்வீக வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மனுதார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்போது, அங்கு பிரவேசித்த ஆயுதம் ஏந்திய இராணுவ அதிகாரிகள், பலவந்தமாக தம்மிடம் இருந்த எதிர்ப்புப் பதாகைகளை நீக்கி அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவ அதிகாரிகளின் இவ்வாறான நடத்தையினால் சுதந்திரமாக கருத்துத்தெரிவிக்கும் உரிமை, சுதந்திரமாக ஒன்றுகூடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

அத்துடன், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமையினால், 5 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறும் மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஒவ்வொரு நாளும் சாதாரண இலங்கையர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பார்ப்பது கவலையாகவுள்ளது – கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன்

இலங்கையில், புறத்தாக்கங்களினால் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. அதன் விளைவாக ஒவ்வொரு நாளும் சாதாரண இலங்கையர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பார்ப்பது கவலையாகவுள்ளது.

பெருந்தொற்றின் போதும், சுமார் கடந்த 70 ஆண்டுகளாகவும் நாம் செய்தததைப் போன்றே, இந்த நெருக்கடி நேரத்திலும் கனேடியர்கள் தமது ஆதரவை வழங்கியுள்ளனர் என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் தெரிவித்தார்.

இதனோடு தொடர்புட்ட வகையில் கனடா இலங்கையின் மீளிணக்கச் செயன்முறைக்கு ஆதரவளிப்பதுடன், பெண்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்கள் சமூகங்களாகிய யாருடைய ஒருங்கிணைப்பு நாட்டின் வெற்றிக்கு அவசியமானதோ அவர்களின் வலுவூட்டலுக்கும் ஆதரவளிக்கின்றது.

இது பலமான மக்களிடையிலான இணைப்பையும் நீண்ட பொருளாதாரப் பிணைப்பையும் கட்டியெழுப்புகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கனடா தின வாழ்த்துக்கள். இன்று கனேடியர்கள் ஒன்றாக எமது நாட்டின் சாதனைகளைக் கொண்டாடுவதுடன் அவ்வாறு செய்வதில் ஒரு மகிழ்ச்சி உள்ளதாக நம்புகின்றோம்.

ஒரு சிறந்த கனடாவைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதால் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் நாம் சிந்திக்கின்றோம்.

கனடா தினமானது, வகைமாதிரியாக குடும்பம், நண்பர்கள் மற்றும் சன சமூகத்தில் கவனம் குவிப்பதுடன் முறைசார் ரீதியாகக் கொண்டாடப்படுகிறது. கனேடியர்களின் அனைத்தையும் உள்ளடக்கிய தேசியவாத உணர்வை இது பிரதிபலிக்கின்றது.

அவர்களது தனிப்பட்ட அடையாளங்களின் பல்வகையான பிரஜாநிலைகளை பல்வேறுபட்ட படைகளை மப்பிள் (maple) இலையின் கீழ் கனேடியர்களாக அனைவரையும் ஒன்றுசேர்க்கும் உணர்வுக்குள்ளான ஒருங்கிணைப்பை இயலச் செய்கிறது.

கொள்ளைநோயின் கொடுமையான கட்டமானது, நன்றிக்குரிய முறையில் எங்களுக்குப் பின்னால் சென்றுவிட்ட அதேவேளையில், உலகமானது எமது பதிற்செயற்பாட்டில் எம்மையெல்லாம் ஒன்றாக மீண்டும் பணியாற்ற கேட்டுநிற்கும் வேறுபட்ட சிக்கலான சவால்களை உலகம் எதிர்கொள்கிறது.

உலகளாவிய விளைவுகளின் பெரிய நெருக்கடிகள் உலகத்தைச் சூழ எழுந்துள்ளன. மிகவும் குறிப்பிடத்தக்கமுறையில் உக்ரைன் மீதான ரஸ்யப் படையெடுப்பு உள்ளது.

இலங்கையில், இந்த புறத்தாக்கங்களினால் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. அதன் விளைவாக ஒவ்வொரு நாளும் சாதாரண இலங்கையர்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பார்ப்பது கவலையாகவுள்ளது.

பெருந்தொற்றின் போதும், சுமார் கடந்த 70 ஆண்டுகளாகவும் நாம் செய்தததைப் போன்றே, இந்த நெருக்கடி நேரத்திலும் கனேடியர்கள் தனது ஆதரவை வழங்கியுள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருட்களின் கொள்வனவிற்கான நிதியினை நாம் வழங்குகின்றோம்.

தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சிக்கு உடனடியாக தேவையாகவுள்ள அரிசியினை கொள்வனவு செய்வதற்கு உலக உணவுத் திட்டத்துடனும் கனடா பணியாற்றுகின்றது.

நெருக்கடி அதிகரிக்கின்ற நிலையில், ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு செம்பிறைச் சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு பதிலளிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

இந்த சவால்மிக்க நேரங்களை ஒரு மிகவும் நிலையான, வளமான அத்துடன் இந்தக் குறிப்பிடத்தக்க நாட்டினதும் அதன் ஆற்றலுடைய மக்களினதும் பெரும் இயலுமையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு அனைத்துமடங்கிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக்குவதற்கான பல இலங்கையர்களின் விசேட ஆர்வத்தை நான் பாராட்டுகின்றேன்.

பல்வேறுபட்ட நிலைமைகளின் பொழுதும்கூட கனடாவில் நாம்கூட இது தொடர்பான ஒரு சட்டவாக்கத்தை அங்கீகரித்து முடிவுக்குக் கொண்டுவருதல் உட்பட சுதேசிய மக்களுடனான மீளிணக்கத்தை முன்கொண்டு செல்வதனால் எல்லோருக்குமான ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாமும் உழைக்கின்றோம்.

உலகம் முழுதிலும் இருந்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான புலம்பெயர்வாளர்களைத் தொடர்ந்து வரவேற்றுக்கொண்டிருந்த பொழுதிலும் எமது அழகான நாட்டின் பூர்வகுடிகளின் வழித்தோன்றல்களை ஏற்றுக்கொண்டு கனேடிய சமூகத்தில் முழுமையாகக் கொண்டாடுவதை நிச்சயப்படுத்த நாம் விரும்புகின்றோம்.

இதனோடு தொடர்புட்ட வகையில் கனடா இலங்கையின் மீளிணக்கச் செயன்முறைக்கு ஆதரவளிப்பதுடன், பெண்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட சன சமூகங்களாகிய யாருடைய ஒருங்கிணைப்பு நாட்டின் வெற்றிக்கு அவசியமானதோ அவர்களின் வலுவூட்டலுக்கும் ஆதரவளிக்கின்றது. இது பலமான மக்களிடையிலான இணைப்பையும் நீண்ட பொருளாதாரப் பிணைப்பையும் கட்டியெழுப்புகின்றது.

உலகம் எதிர்கொண்டிருக்கும் பல சவால்களினிடையே அவற்றிலெல்லாம் மிகவும் ஆழமான ஒன்றை நாம் மறந்துவிட முடியாது. காலநிலை மாற்றம்.

காலநிலை மற்றும் சுற்றாடல் செயற்பாடானது, கனடாவுக்கு ஒரு முன்னுரிமையான விடயமாகத் தொடர்ந்துள்ளதுடன் நாம் உலகளாவிய சுற்றாடல் வசதிப்படுத்தல் மற்றும் பசுமைக் காலநிலை நிதியம் ஆகிய இலங்கைக்கு வசதியளிப்பவர்களுக்கு நாம் தொடர்ந்து பங்களிப்புச் செய்கின்றோம். அண்மைய ஆண்டுகளில் ஒரு உள்ளுர் சுற்றாடல் முனைப்புக்காக நாம் எமது ஆதரவை அதிகரித்துள்ளோம்.

கனடாவை வடிவமைப்பதிலும், முன்னேற்றுவதிலும் தொடர்ந்து செயற்படும் இலங்கைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த பல கனேடியர்கள் பற்றி ஒரு குறிப்புடன் முடிக்காவிடில் அது ஒரு பெரிய கவனக்குறைவாக இருக்கும். பல்வகைத் தன்மை, ஐக்கியம் என்பவற்றுக்கான ஒரு தினமாக ஏன் நாம் கனடா நாளைக் கொண்டாடுகின்றோம் என அவர்கள் சான்று காட்டுவர்.

இன்னும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு எதிர்காலத்திற்காக நாம் நம்பியிருப்போமாக.

கனடா தின வாழ்த்துக்கள்! என அந்த அறிக்கையில் கனேடிய உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் நிலை

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்று காணப்படுகின்ற பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து வருகின்றனர்.

நாடு பொருளாதார நெருக்கடிக்கும், எரிபொருள் தட்டுப்பாட்டிக்கும் முகம் கொடுத்துள்ள இக்கட்டான இந்த காலக் கட்டத்திலும், பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டது

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவையினை இன்று (01) முதல் மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும் குறித்த விமான சேவை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு நம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்திற்கான விமான சேவைகள் 2020 ஆம் ஆண்டு வரை முன்னெடுக்கப்பட்ட நிலையில், COVID தொற்று காரணமாக மீண்டும் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

இதனிடையே, யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவிற்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க பல்வேறு தரப்பினரும் முயற்சித்து வந்த நிலையில், உள்ளூர் , வௌியூர் விமான சேவை நிறுவனங்களும் தமிழக விமான சேவைக்கான கோரிக்கையினை சமர்ப்பித்திருந்தன.

இந்த நிலையில், யாழ். பலாலி விமான நிலையத்திலிருந்து இன்று முதல் தமிழகத்திற்கான விமான சேவையினை ஆரம்பிக்க துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அத்துடன், கடந்த மாதம் 15 ஆம் திகதி பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியிருந்தார்.

ஜூன் 18 ஆம் திகதி யாழ். பலாலி விமான நிலையத்திற்கு விஜயம் செய்த சிவில் விமான சேவைகள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஜூலை முதலாம் திகதி பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படுமென தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்திய தரப்பில் உள்ள எரிபொருள் பிரச்சினை மற்றும் சட்டச்சிக்கல்கள் காரணமாக இன்று மீள ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவைகள் பிற்போட நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கோட்டாபய, புட்டினுக்கு Call எடுத்ததாக கூறுவது பொய் – உதயங்க வீரதுங்க

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து உரையாடியதாக கூறப்படும் கதை முற்றிலும் பொய்யானது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் ஜனாதிபதியின் உறவினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதியை தொடர்புக்கொள்ள தனியான அலைவரிசை உள்ளது

கடந்த பெப்பரவரி மாதம் ரஷ்ய ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்புக்கொள்ள கோட்டாபய ராஜபக்ச மறுத்தார். நித்திரைக்கு செல்லும் முன்னர் குட் நைட் என்று சொல்வதற்காக ரஷ்ய ஜனாதிபதியை தொடர்புக்கொள்ள முடியும் என்று நினைத்தீர்களா?.

இதனால், ஜனாதிபதி புட்டினுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது. ரஷ்ய ஜனாதிபதியை நினைத்த மாத்திரத்தில் உடனடியாக தொடர்புக்கொள்ள முடியாது அதற்கு வழிமுறைகள் உள்ளன.

ரஷ்ய ஜனாதிபதியுடன் இலங்கை ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்புக்கொள்ள ஒரு அலைவரிசை உள்ளது. அதில் தொடர்புக்கொண்டால், தொடர்புக்கொள்வதற்கு முன்னர் எனக்கு தெரியும்.

இந்த அலைவரிசை ஊடாக தொடர்பை ஏற்படுத்தாமல், வேறு வழியில் தொடர்புக்கொண்டால், ராஜதந்திர முறைகளுக்கு அமைய இரண்டு நாடுகளின் ஜனாதிபதிகள் உரையாட முடியாது.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ரஷ்யாவுக்கான தூதுவர் பதவியை பணத்திற்கு விற்றுள்ளார். ஜனாதிபதி மாத்திரமல்ல, செயலாளர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

ரஷ்ய விமானங்கள் மூலம் இலங்கைக்கு ஒரு வாரத்திற்கு 12 லட்சம் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன. அமெரிக்க சார்பு ஜனாதிபதி அதனை கிடைக்காமல் செய்துள்ளார்.

எரிபொருளை இறக்குமதி செய்வது சம்பந்தமாக பேச்சுவார்த்தை ரஷ்யாவுக்கு சென்ற அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அங்கு எண்ணெயை மாற்றிக்கொண்டு வருவார்.

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தால், அதனை செய்து காட்ட தயார் எனவும் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார்.

உதயங்க வீரதுங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சித்தியின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் வழங்கப்படாவிட்டால் பயணிகள் புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் – புகையிரத சேவை தொழிற்சங்கம்

புகையிரத சேவையாளர்கள் சேவைக்கு சமூகமளிப்பதற்கு தேவையான எரிபொருளை விநியோகிக்க வலுசக்தி அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காவிடின் எதிர்வரும் நாட்களில் பயணிகள் புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும்.

புகையிரதசேவை மாத்திரமே போக்குவரத்து ஊடகத்தில் பொது மக்களுக்கு இறுதி தீர்வாக உள்ளது என புகையிரத சேவை தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

எரிபொருள் பற்றாக்குறை பொதுப்போக்குவரத்து சேவைக்கு பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அரச மற்றும் தனியார் பஸ்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுப்படுகின்றன.

பஸ் கட்டணம் சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தினால் பொது பயணிகள் பஸ் சேவையினை பயன்படுத்துவதை புறக்கணித்து புகையிரத சேவையினை அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள்.

இருப்பினும் பஸ்களில் சனநெரிசல் அதிகமாகவே உள்ளது. ஒருசில பகுதிகளில் பொதுபயணிகள் பாதுகாப்பற்ற முறையில் பஸ்ஸின் கூரையில் அமர்ந்தவாறு பயணம் செய்வதை அவதானிக்க முடிந்தது.

புகையிரத சேவைக்கு தேவையான எரிபொருளை விநியோகிப்பதில் எவ்வித சிக்கல் நிலையும் ஏற்படவில்லை என புகையிரத திணைக்களம் கடந்த வாரம் குறிப்பிட்டது.

புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கைக்கும், சேவையில் ஈடுப்படுத்தப்படும் புகையிரதங்களின் எண்ணிக்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

அதிகரித்துள்ள பொது பயணிகளின் பயன்பாட்டிற்கமைய புகையிரத சேவையினை அதிகரிப்பது சாத்தியமற்றதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டது.

எரிபொருள் பற்றாக்குறை புகையிரத சேவையாளர்கள் சேவைக்கு சமூகமளிப்பதில் தாக்கம் செலுத்தியுள்ள காரணத்தினால் நேற்று 28 புகையிரத சேவைகளும், இன்றையதினம் 22 புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டன. அத்துடன் புகையிரத சேவைகளும் காலதாமதப்படுத்தப்பட்டன.

புகையிரத சேவையாளர்கள் சேவைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்றைய தினம் 22 புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டதால் கோட்டை புகையிரத நிலையத்தில் அமைதியற்ற தன்மை காணப்பட்டது.

புகையிரத சேவைக்காக அதிக நேரம் காத்திருந்த பொது பயணிகள் புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டதால் கலக்கமடைந்து எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புகையிரத சேவையினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு தேவையான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.

எரிபொருள் விநியோகத்தில் புகையிரத சேவைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தியும் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை.

எரிபொருள் பற்றாக்குறை, பஸ் கட்டண அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் பொது மக்கள் தற்போது புகையிரத சேவையினை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். பொது போக்குவரத்து சேவையில் புகையிரத சேவை மாத்திரமே தற்போது இறுதி தீர்வாக உள்ளது.

புகையிரத சேவையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு முறையான நடவடிக்கையினை முன்னெடுக்காவிடின் எதிர்வரும் நாட்களில் புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கததினர் தெரிவித்தனர்.

ஜப்பான், ஓமன் தூதுவர்களை ஜனாதிபதி சந்தித்தார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜப்பான் மற்றும் ஓமன் தூதுவர்களை இன்று சந்தித்தார்.

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஜப்பான் தூதுவர் Hideaki Mizukoshi தெரிவித்துள்ளார்.

இலங்கையுடனான பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்ல நடவடிக்கை எடுப்பதாக ஜப்பான் தூதுவர் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 8 வருட சேவையின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்டு செல்வதற்கு முன்னர் ஓமன் தூதுவர் அஹமட் அலி சயிட் அல் ரஷீட், ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு தேவையான எரிபொருள், எரிவாயு , முதலீட்டு சந்தர்ப்பங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized