வெலிக்கடை சிறையில் தொற்று நீக்கி திரவத்தை பருகிய ஈரானிய கைதிகள் இருவர் மரணம்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் தொற்று நீக்கியை அருந்தியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த திரவத்தை பருகிய ஈரானிய கைதிகள் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த 12 பேரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

காலாவதியான 60 சட்டங்களை திருத்த நடவடிக்கை

காலாவதியான 60 சட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதன்படி, நீதித்துறையில் தற்போதுள்ள குற்றவியல், வணிக மற்றும் சிவில் சட்டங்களை திருத்தியமைக்க மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்

சிறைச்சாலைகள் சீர்திருத்த மற்றும் கைதிகள் மறுவாழ்வு அமைச்சின் அதிகாரிகளுடன் இராஜகிரியவிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (13)  கலந்துரையாடலிலேயே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.

நீதித்துறையில் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து தேவையான தீர்வுகளை வழங்குவதற்கான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பணம்

லொஹான் ரத்வத்த நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக செயற்பட்டுள்ளதாகவும் இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் படி பாரிய குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் இன்றைய தினம் (13), மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அரசியல் கைதி தொடர்பான வழக்கில், சிரேஷ்ட சட்டத்தரணி  கே.எஸ்.  இரத்தினவேல் சமர்ப்பணம் மேற்கொண்டிருந்தார்.

இன்றைய தினம் (13), மன்னார் மேல் நீதிமன்றத்தில் சிவசுப்பரமணியம் தில்லை ராஜா என்ற அரசியல் கைதியின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த வழக்கில்  பிரதான வழக்கை விட மேலதிக சமர்பணம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  சிவசுப்ரமணியம் தில்லை ராஜ் என்பவர் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் இருக்கின்றார். அத்துடன், அவரையும் சேர்த்து  14 ஆண்  சிறைக்கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த தமிழர்கள் ஆவர். இதை தவிர, நான்கு  அல்லது ஐந்து பெண் கைதிகளும் உள்ளனர் என்றார்.

“செப்டெம்பர் 12ஆம் திகதியன்று  சிறைச்சாலை சீர்திருத்தத்துக்கு பொறுப்பான  இராஜாங்க அமைச்சராக இருந்த லொஹான் ரத்வத்த, அந்த சிறைச்சாலைக்குள் அத்துமீறி புகுந்து 6 மணியளவில் அந்தச் சிறைச்சாலை அதிகாரிகளை தனது அதிகாரத்துக்கு உட்படுத்தி, அவர்களை  பல வந்தப்படுத்தி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  தமிழ் சிறைக்கைதிகளை வெளியில் கொண்டு வரும்படி ஆணையிட்டுள்ளார்.

“அவரது உத்தரவுக்கு அடி பணிந்த சிறைச்சாலை அதிகாரிகள், பத்து கைதிகளை வெளியில் கொண்டு வந்து, அந்த முற்றத்தில் நிறுத்தி இருக்கிறார்கள். இந்த தருணத்தில், அந்த இராஜாங்க அமைச்சர் குடிபோதையில் இருந்ததாக அதனை அவதானித்த சிறைக்கைதிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்களை இராஜாங்க அமைச்சர் ஆபாச வார்த்தைகளால் பேசி அதன் பின்னர் அவர்களை முழந்தால் இட கட்டாயப்படுத்தி உள்ளார்.

“பயத்தின் நிமித்தம் தமிழ் அரசியல் கைதிகள்  முழந்தாலிட்டிருக்கின்றார்கள். அத்துடன், ஒவ்வொருவராக  அழைத்து, ‘நீ இராணுவத்தினரை கொலை செய்தாயா?’ என்று அச்சுறுத்தும் விதமாக கேட்டிருக்கின்றார் . அதே நேரம் இன்றைய  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  சிவசுப்பரமணியம் தில்லை ராஜா  என்பவரையும் கூப்பிட்டு, ‘நீ யாரை கொலை செய்தாய்?’ என கேட்டிருக்கிறார்.

“அவர் முதலில், ‘எனக்கு சிங்களம் தெரியாது’ என்று கூறிய நிலையில், பிறகு ஒரு மொழிபெயர்ப்பாளரை கூப்பிட்டு  மொழிபெயர்த்து சொல்லப்பட்டது. அப்போது குறித்த அரசியல் கைதி, ‘நான் கொலை ஒன்றும் செய்யவில்லை’ என்றும்  ‘எனக்கு ஒரு வழக்கு மன்னார் நீதிமன்றில் நடைபெறுகிறது’ என தெரிவித்துள்ளார். அதன் பின்னர், அவரை தூசண வார்த்தைகளால் பேசி விட்டு, இன்னும் பல கைதிகளை அச்சுறுத்தியுள்ளனர்.

“அத்துடன், இன்னோர் அரசியல் கைதியை அழைத்து அவருடைய தலையில் துப்பாக்கியை வைத்து உயிர் அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார். மேலும், எல்லா தமிழ் அரசியல் சிறை கைதிகளிடமும், ,’நீங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஜெனிவாவுக்கும் முறைப்பாடுகளை அனுப்பியிருக்கிறீர்கள். ஆனால் ஒன்றும் நடக்காது நடக்க விடமாட்டோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.

“மேலும், ‘ஜனாதிபதி எனக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் போது, நீ தமிழ் அரசியல் கைதிகளை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். விடுதலை செய்யவும் முடியும், அல்லது அவர்களை ஒழித்துக் கட்டவும் முடியும். அதற்கான அதிகாரத்தை தருகிறேன் என்று சொல்லித்தான் எனக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார். எனவே, உங்களை நான் எதுவும்  செய்யலாம். நீங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு முறைப்பாடு செய்யகூடாது’ என்றெல்லாம் சொல்லி, கடைசியில் அந்த துவக்கை தலையில்  வைத்த பொழுது சிறைச்சாலை அதிகாரிகள் தலையிட்டு, அவரை சமாதானப்படுத்தி வெளியே கொண்டு போயிருக்கிறார்கள்.

அதன் அடிப்படையில், இன்றைய தினம் (13), இத்தகைய சம்பவத்தை மன்னார் மேல் நீதிமன்றத்தில்  கூறி சமர்ப்பணம் மேற்கொள்ளப்பட்டது” என, சிரேஷ்ட சட்டத்தரணி இரத்தினவேல் தெரிவித்ததார்.

மேலும் இவ்வாறான செயற்பாட்டின் மூலம்  இராஜாங்க அமைச்சர்  லொஹான் ரத்வத்த  நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்குள்ளாகின்றார் எனவும் சமர்பணத்தில் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார் .

ஏனென்றால் இந்த சிறை கைதிகள் யாவரும் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே, இத்தகைய சிறைக்கைதிகளை யாராவது துன்புறுத்தினாலோ, அச்சுறுத்தினாலோ வேறு எந்த வகையில் சித்திரவதைக்கு உட்படுத்தினாலோ அவர்கள் நீதிமன்றத்தின் அதிகாரத்தை சவாலுக்கு உள்ளாக்குகிறார்கள்.

நீதிமன்றத்தை அவமதிக்கிறார்கள்  என்ற அடிப்படையில் இந்த விடயத்தை நீதிமன்றம் கையாள வேண்டும். இந்த விடயம் பற்றி ஒரு விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை ஒன்றையும்  சமர்பணத்தின் ஊடாக கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராஜங்க அமைச்சர் அது மட்டுமல்ல  இலங்கையின் குற்றவியல்  சட்டங்களின் படி ஒரு பாரிய குற்றத்தை இழைத்திருக்கின்றார்.  ஒரு துப்பாக்கியை தலையில் வைப்பதன் மூலம் ஒருவரை கொலை செய்ய எத்தனித்தமை என்ற குற்றமும் அவர் மீது சாட்டப்படலாம்.

இந்த விடயத்தில் சாதாரண சட்டங்களை மீறினால் உண்மையில் பொலிஸ் திணைக்களமும், சட்ட மா அதிபர் திணைக்களம் தான் உடனடியாக அவரை கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அதேநேரம் சிறைச்சாலை அதிகாரிகள் இந்த நீதிமன்றத்துக்கு  சட்டரீதியாக அழைக்கப்பட வேண்டும் என்பதுடன், இந்த நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படும்  குற்றம் சாட்டப்பட்டவர் அவருடைய சாட்சியமும் பதிவாக்கப்பட வேண்டும் எனவும் சமர்பணத்தில் குறிப்பிட்டதாகவும், சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எனவே, இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ததை அடுத்து மேல் நீதிமன்ற நீதவான்  சிறைச்சாலை அத்தியட்சகர் நாயகம்  அவருக்கு ஒரு அறிவித்தல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும்   12ஆம் திகதி செப்டெம்பர் மாதம் அநுராதபுரத்தில் நடைபெற்ற விடயம் சம்பந்தமாக விசாரித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து, ஒரு கட்டளை நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கி இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

அதே நேரம்  நவம்பர் 30 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் எடுக்கப்படும் பொழுது, அந்த சிறைச்சாலை அத்தியட்சகர் நாயகத்தின் அந்த அறிக்கையை நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

மேலும் நீதி சட்டத்துறை அமைச்சர் அலிசப்ரி, சமீபத்தில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து அங்கிருந்து வெளியேறும் போது, அவர் கூறியிருக்கிறார். தான் தமிழ் அரசியல் கைதிகளை  நேரடியாக சந்தித்து பேசியதாகவும் அவர்கள் எந்த வித அச்சுறுத்தலும் தங்களுக்கு இருக்கவில்லை என்று சொன்னதாகவும் கூறியிருந்தார்.  இது ஒரு அப்பட்டமான பொய் என்றே நான் கூற வேண்டும்.

இன்று நீதிமன்றத்துக்கு வந்திருந்த அரசியல் கைதியின் கருத்தின் படியும்   சம்பவம் நிச்சயமாக நிகழ்ந்திருக்கிறது. அவர் இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க தயாராக இருந்திருக்கிறார். ஆனால் நீதிமன்றம் முதலில் அந்த சிறைச்சாலை நாயகத்திடம் இருந்து அறிக்கை பெற்ற பின்னர் அவருடைய சாட்சியத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைக் கொண்டு இருக்கிறது என்றார்.

Posted in Uncategorized

அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க அனுமதி கோரிய சட்டமா அதிபர் !

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் கார்திய புஞ்சிஹோ இல்லாமல் 2015 பிணைமுறி மோசடி வழக்கை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்குமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றிடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த கோரிக்கையை சட்டமா அதிபர் முன்வைத்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கு 688 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய 2015 பெப்ரவரி மாதத்தில் 27 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களாக குறித்த இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் வசிக்கும் முதலாவது குற்றவாளியான அர்ஜுன மகேந்திரனை ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் இன்னும் சாதகமாக பதிலளிக்கவில்லை என நீதிமன்றத்தில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

அத்தோடு இந்த விவகாரத்தில் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய தேவையான நடவடிக்கைகள் குறித்து ஒரு பிரேரணை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அறிவித்தார்.

இதேவேளை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற இந்த வழக்கின் 8 வது சந்தேக நபரான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ரஞ்சன் ஹுலுகல்லேவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அசாத் சாலி தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியை இம்மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

அசாத் சாலி சார்ப்பில் ஆஜராக ஜனாதிபதி சட்டத்தரணி தாக்கல் செய்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை 25 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளதுடன் அன்றைய தினம் அசாத் சாலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஊடபவியாளர் சந்திப்பு ஒன்றில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்ததாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

’வேலையில்லா பிரச்சினையாலேயே வன்முறைகள் அதிகரிப்பு’

வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக, பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார் என்று, யாழ். மறைமாவட்ட ஆயர் கூறினார்.

வடமாகாணத்துக்கு இன்று (13), விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர், யாழ். மறைமாவட்ட ஆயரை இன்று மாலை ஆயர் இல்லத்தில்  சந்தித்து கலந்துரையாடிபேர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம்  ஆயர் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மீது நல்ல விருப்பம் கொண்டவர் எனவும்  இங்கே உள்ள பிரச்சினை தொடர்பில் ஆராயவே, யாழ். மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார் எனவும் கூறினார்.

“இளைஞர்களிடையே காணப்படும் வேலைவாய்ப்பில்லாத விரக்தி நிலை காரணமாகவே,  போதைப் பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல, பொலிஸார் மக்களுடன் கூடுதலாக பழகவேண்டும்.

“முன்னைய காலத்தில்,  வீதி போக்குவரத்து விதிமுறைகள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. அதனை மீண்டும் பாடசாலைகளில் ஆரம்பிக்குமாறு, அவரிடம் கூறி இருக்கின்றேன்” என்றார்.

இளைஞர் – யுவதிகளுக்கு வேலைவாய்ப்பின்மை காரணமாகவே, வடக்கில் வாள்வெட்டு சம்பவங்கள், திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. வேலையில்லாது சும்மா இருப்போருக்கு காசு தேவைப்படும் போது தான், அவர்கள் திருடுவதற்கு தூண்டுகின்றார்கள் என பொலிஸ்மா எடுத்துரைத்திருந்தார் எனவும் ஆயர் தெரிவித்தார்.

‘அத்துடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதை விடுத்து, அவர்களை ஒரு  மணிநேரம் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலம் தான் எமது மக்களுக்கு அதன் அர்த்தம் புரியும். அதனை செயற்படுத்துவதன் மூலம், பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியும் எனவும் பொலிஸ்மா அதிபர் கூறினார்.

“தமிழ் பொலிஸார் எமக்கு கடமைக்கு தேவையாக உள்ளது. ஏற்கெனவே 500 பேர் மாத்திரமே கடமையாற்றிவருகிறார்கள். மேலதிகமாக தமிழ் பொலிஸார் நமக்கு தேவையாக உள்ளார்கள். அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வடக்கு மாகாணத்தில் பயிற்றுவிக்கப்படும். ஏனெனில், வடக்கில் இருந்து வெளி மாவட்டங்களில் சென்று பயிற்சி பெறுவதற்கு பலர் விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. வடக்கிலிருந்து பொலிஸ் தொழிற்றுறைக்கு விண்ணப்பிப்போருக்கு, இங்கேயே பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு மொழி பயிற்சியும் வழங்கப்படும் என பொலிஸ்மா அதிபர் கூறினார்” என ஆயர் மேலும் தெரிவித்தார்.

ரவிகரன், சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாபாய கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்றைய நாளுக்கு (13) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் தவணையிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் கொவிட் -19 ஆசாதாரண சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவு நீதிமன்றால் குறித்த வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், எதிர்வரும் 2022 பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதிக்கு குறித்த வழக்கின் விசாரணைகள் திகதியிடப்பட்டுள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், கோட்டாபய கடற்படை முகாமிற்கு முன்பாக இடம்பெற்ற காணி அபகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் 28.02.2018 அன்று முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் பிணையில் விடுதலையாகியிருந்தார்.

இதேவேளை, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணைகோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார்.

அதனைத்தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த அன்ரனி ஜெகநாதன் பீற்றர் இளஞ்செழியன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன நிர்வாக உறுப்பினர் அன்னலிங்கம் சண்முகலிங்கம் ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறாக நால்வர் மீதும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில், இன்றைய நாளுக்காக தவணையிடப்பட்டிருந்த குறித்த வழக்கின் விசாரணைகள் தற்போதய கொவிட் -19 அசாதாரண நிலையினைக் கருத்தில் கொண்டு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதுடன், எதிர்வரும் 2022 பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதிக்கு இந்த வழக்கின் விசாரணைகள் தவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அரசாங்கம் FAIL என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டு விட்டனர்!

அரசாங்கம் பெயில் (FAIL) என்பதை மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். எனவே, மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி காத்திருக்கின்றது´ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ´சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்களால் நாட்டுக்கு எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் வரக்கூடும். முறையற்ற அரச முகாமைத்துவம் காரணமாகவே இந்நிலைமை ஏற்படும். நாட்டின் நிர்வாகம் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளது. இந்நிலைமையை நான் அன்றே சுட்டிக்காட்டினேன். பிரதேச சபையில்கூட அங்கம் வகிக்காத ஒருவரின் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என வலியுறுத்தியே கட்சியில் இருந்து வெளியேறினேன்.

மாகாண சபைத் தேர்தல் தற்போது அவசியமில்லை. அரசாங்கம் அதனை நடத்தினால் தேர்தலில் போட்டியிடவேண்டிய நிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படும். அவ்வாறு நடத்தினால் அரசாங்கத்துக்கு வீட்டுக்கு செல்லவேண்டிய நிலை தான் ஏற்படும். பொருட்களின் விலை உயர்வு உட்பட எல்லா துறைகளிலும் பிரச்சினை. இந்த அரசாங்கத்தால் முடியாது என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆக அரசாங்கம் ´பெயில்´ என்பது உறுதியாகியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எமது நாட்டுக்கு தேவையில்லை´ என்றார்.

ஜனாதிபதியை சந்தித்தார் சுப்ரமணியன் சுவாமி

பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13) முற்பகல் இடம்பெற்றது.

பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருக்கும் சுப்ரமணியன் சுவாமி , இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக முன்னிலை வகித்திருப்பதோடு, இலங்கையில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கான இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியவராவார்.

பொருளாதார நிபுணரும் புள்ளியியல் வல்லுநருமான சுப்ரமணியன் சுவாமி , பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில் நடத்தப்பட்ட மாநாடுகளின் போது, விரிவுரையாளராகவும் கலந்துகொண்டிருந்தார்.

சுப்ரமணியன் சுவாமி இம்முறை இலங்கை விஜயத்தின் போதும் சந்திக்கக் கிடைத்தமையிட்டு, ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.

கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாபஸ்

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அதி குற்றச்சாட்டுப் பத்திரத்தை மீளப்பெற தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று (13) அறிவித்தார்.

2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பிரதிவாதியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு எதிராக அதிகுற்றச் சாட்டுப் பத்திரம் பகிரப்பட்டது.

கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு சட்டமா அதிபர் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு கோரி, கரன்னாகொடவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கணேபொல ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, இந்த வழக்கில் பிரதிவாதியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனுதாரரான முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான அதி குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் வாபஸ்பெற தீர்மானித்துள்ளதாக. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச வழக்குரைஞர் அவந்தி பெரேரா மன்றுக்குத் தெரியப்படுத்தினார்.

இது தொடர்பாக மேல் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிரேஷ்ட அரச வழக்குரைஞர், நீதிமன்றத்தில் தெரிவித்தையடுத்து,
இந்த மனு மீதான மேலதிக பரிசீலனைக்கான தினமாக நவம்பர் 03 ஆம் திகதியை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்தது.