சீன சினோபெக் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த யோசனைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (27) அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதன்படி இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சினோபெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கான முதலீடு 4.5 பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் இதற்கான யோசனைக்கு அழைப்பு விடுத்த போது சீனாவின் சினோபெக் நிறுவனமும் மற்றும் Vitol நிறுவனமும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை சமர்ப்பித்திருந்தன.

ஆனால் பின்னர் Vitol நிறுவனம் இந்த செயல்முறையிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம்(25) வெல்லாவெளியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் நீதிமன்றத் தடையுத்தரவு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நிகழ்வின் ஏற்பாட்டாளரான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் விசாரணை என்ற பெயரில் பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டார்.

சுமார் மூன்றரை மணிநேரம் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் விசாரணை இடம்பெற்று மாலை 04.30 மணியளவில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பொலிசாரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 14 நாட்கள் விளக்க மறியலில் வைப்பதற்கான உத்தரவை களுவாஞ்சிக்குடி நீதவான் பிறப்பித்ததையடுத்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை தடுத்திருந்தால் பூகோள அரசியல் போட்டி கூர்மை அடைந்திருக்காது – சபா குகதாஸ்

முள்ளிவாய்க்கால் பேரழிவை தடுத்திருந்தால் பூகோள அரசியல் போட்டி கூர்மை அடைந்திருக்காது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பொறுப்பாளரும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பூகோள அரசியல் அதிகாரப் போட்டியினால் இலங்கை எதிர்காலத்தில் போர்க்களமாக மாறும் அபாயம் உள்ளதாக ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமான First Post ற்கு செவ்வி வழங்கியுள்ளார்.

இலங்கைத்தீவில் சிங்கள பேரினவாத ஆட்சியாளரின் அதிகார பதவி வெறியும் ஊழலும் நாட்டை வங்குறோத்து நிலைமைக்கு மாற்றியது மாத்திரமல்ல பூகோள நாடுகளின் அரசியல் சதுரங்கமாகவும் மாறியுள்ளது நாடு பற்றியதும் அதன் நிலையான அபிவிருத்தி பற்றியதும் நிலையான கொள்கைகளை வகுக்காமல் ஆட்சிக்கு வந்ததும் தமக்கான அதிகாரங்களை அளவுக்கு அதிகமாக பெற்று அதிகார துஸ்பிரையோகங்களை செய்து அவற்றில் இருந்து தப்பிக் கொள்ள தமக்கு விரும்பிய வெளிநாடுகளுக்கு நாட்டின் முதன்மையான பகுதிகளை விற்று மறைமுக காலணித்துவத்தை வலுப் பெறச் செய்து விட்டு பொறுப்பற்ற வகையில் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்து வேதாந்தம் ஓதுகின்றனர் இதற்கு தற்போதைய ஐனாதிபதியும் விதிவிலக்கல்ல.

2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை சிங்கள ஆட்சியாளர்கள் குறிப்பாக ராஐபக்சக்களும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தடுத்து நிறுத்தியிருந்தால் பூகோள நலன் சார்பு நாடுகளின் அரசியல் அதிகாரப் போட்டி இன்று இலங்கைத் தீவில் தீவிரம் பெற்றிருக்காது ஆனால் தற்போதைய தீவிரப் போக்கு கூர்மை அடையுமாக இருந்தால் ஐனாதிபதி கூறும் அபாயம் தென்னிலங்கையில் தான் மையங் கொள்ள இருக்கிறது.

2009 இற்கு முன்னர் இந்தியாவின் தென்கடல் பிராந்தியம் மிக பாதுகாப்பாக இருந்தது காரணம் இலங்கையின் வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் பலமான கடற்படைக் கட்டுமானத்தை விடுதலைப் புலிகள் வைத்திருந்தமை அத்துடன் பூகோள நாடுகளின் அதிகாரப் போட்டியும் கூர்மையடையாது வரையறுக்கப்பட்டதாக இருந்திருக்கும் இவையாவும் தலைகீழாக மாறுவதற்கு முள்ளிவாய்க்கால் பேரவலமும் விடுதலைப் புலிகளின் மௌனிப்பும் காரணமானாது.

தற்போது பிராந்திய அரசியல் அதிகாரப் போட்டியும் பூகோள நாடுகளின் ஆதிக்கமும் அதிகரித்தமைக்கு மிகப் பிரதான காரணம் ஈழத் தமிழர்களின் அரசியல் அதிகாரப் பிரச்சனை தான் எனவே சிறிலங்கா ஆட்சியாளர் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் தென்னிலங்கைக்கான அபாயத்தை நிறுத்த இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதே உசிதம் ஆனால் அவ்வாறான மாற்றம் சிங்கள ஆட்சியாளர் இடையே ஏற்பட்டால் அதிசயமாகவே இருக்கும்.

இலங்கைத் தீவில் மையம் கொண்டுள்ள பிராந்திய மற்றும் பூகோள நாடுகள் தங்களின் நலன்களை முன்னுரிமைப் படுத்தி சிங்கள ஆட்சியாளரை முழுமையாக கையாளவே முயற்சிக்கின்றனர் அதுவே ஆட்சி மாற்றங்களுக்கும் ஸ்திரம் அற்ற ஆட்சிக்கும் வழி வகுக்கின்றது.

தமிழர் தரப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான பேரப்பலம் விடுதலைப் புலிகளிடம் மாத்திர இருந்தது துரதிஸ்ட வசமாக தனி நாட்டுக் கோரிக்கையில் ஒரு படி இறங்கி சமஸ்டி தீர்வை பெற்றுவதற்கு பச்சைக் கொடியை காட்ட தாமதித்தமையால் மௌனிப்புக்கு வழி வகுத்தது அன்று சமஸ்டி தீர்வை பெற்றிருந்தால் இன்று தனி நாட்டிற்கான பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கலாம்.

தற்போது தமிழர் தரப்பில் மிதவாத தலைமைகளும் ஏனைய தரப்புக்களும் சிங்கள ஆட்சியாளர்களையும் பூகோள அரசியல் அதிகாரத் தரப்புக்களையும் கையாள முடியாத இராஐதந்திரம் அற்ற வெற்று வேட்டுகளாகவே உள்ளனர்.

உண்மையில் இலங்கை மீது மையம் கொண்டுள்ள பூகோள அதிகாரப் போட்டிக்கு சிங்கள ஆட்சியாளர் தான் காரணம் என்றால் இந்தப் போட்டிக்குள் தமிழர்களுக்கான அதிகாரங்களை பெறுவதற்கான சாதக நிலமைகள் இருக்கின்ற போதும் அந்த பூகோள அரசியலை தமிழர் தரப்பு கையாளவில்லை.

தமிழர்களை சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாக தவறாக சித்தரிக்கும் தென்னிலங்கை : கோவிந்தன் கருணாகரம்

நம் நாட்டின் தழிழ் மக்களை, சிங்கள பௌத்த எதிர்ப்பாளர்களாக தென்னிலங்கை சித்தரித்ததன் விளைவே இன்றைய பாதுகாப்பு செலவீனங்களின் ஒதுக்கீடுகளாகும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(23) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்த நிலையிலிருந்து சற்று எழும் நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக பாரிய நிதி ஒதிக்கீட்டிற்கு உட்பட்ட துறையாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு செயற்பட்டு வருகின்றது.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் தமது நாட்டின் பாதுகாப்பு துறைக்கு வரவு செலவுத் திட்டத்திலிருந்து 12 மற்றும் 13 வீதங்களுக்கு இடைப்பட்ட தொகையையே ஒதுக்கப்படுகின்றன.

இந்நாடுகளை போன்றே அந்நிய அச்சுறுத்தல் இல்லாத நமது நாடும் சமமான தொகையை பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கியுள்ளது.

நமது நாட்டிற்கு அந்நிய நாடுகளினால் அச்சுறுத்தல் இல்லை. நமது நாட்டின் பாதுகாப்பிற்கும் சமத்துவத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பது நாட்டின் ஆட்சியாளர்களே என குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் மாவீரர் தினத்தை நினைவுகூருபவர்கள் மீது கடும் நடவடிக்கை – பொலிஸ்மா அதிபர் உறுதி

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவுகூர முயற்சிப்பவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி, பொலிஸ் மா அதிபர் (IGP) மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) பணிப்பாளர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், அத்தகைய நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம இந்த உறுதிமொழியை வழங்கினார்.

நவம்பர் 27 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வீதியின் ஊடாகச் செல்லும் சாத்தியக்கூறுகள் – சட்ட வைத்திய அதிகாரி

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஐந்தாவது நாளாக இன்றையதினம் (24.11.2023) இடம்பெற்று இன்றையஅகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஐந்தாவது நாளாக தொடரும் கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது நான்கு மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் குண்டு சிதறல்களும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் பேனா மாக்கர் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் ஸ்கானர் மூலம் இந்த புதைகுழியானது எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது என பரிசோதனை செய்யப்பட்டது இதன் முடிவுகள் நாளையதினம் அகழ்வு பரிசோதனை பணி நிறைவுற்றதன் பிற்பாடே கிடைக்கப்பெறும்.

இவ் புதைகுழியானது வீதியின் ஊடாகவும் மற்றைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனினும் நாளைய பரிசோதனையின் பின்னரே இறுதி முடிவுகள் என்னால் உறுதியாக கூறமுடியும் என மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் காவலில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் வழக்கில் மூவரை கைது செய்ய உத்தரவு

சித்தங்கேணி இளைஞன் வழக்கில் மூவரை கைது செய்யுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான மற்றைய இளைஞன் அடையாளம் காட்டும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு,

சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று எடுத்து கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கை முன்னிட்டு யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் வழமைக்கு மாறாக அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியொதுக்கீடு – 8 தமிழ் எம்.பிக்கள் மட்டும் எதி்ர்ப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 68 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 08 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 142 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதம் இடம்பெற்றது.

விவாத முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீது வாக்கெடுப்பைக் கோரினார்.

இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 68 மேலதிக வாக்குகளினால் ஒதுக்கீடு நிறை வேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக அரச தரப்பினர் வாக்களித்திருந்த நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலையரசன், ஆகியோர் வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும்,மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

தமிழ் கட்சிகளை தடை செய்ய கூறும் சரத் வீரசேகரவின் மூளையை பரிசோதிக்க வேண்டும்

வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை பல்லின சமூகம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது.

ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பின் உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.

இவர்கள் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அழித்திருக்க வேண்டும். அவர்களை அழிக்காமல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச பாரிய தவறிழைத்துள்ளார என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

அடுத்த ஆண்டு தேர்தல் வருடம் – பிரதமர் தினேஷ் குணவர்த்தன

அடுத்த ஆண்டு (2024) தேர்தல்கள் நடைபெறும் வருடமாகவே இருக்கும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற்றே தீரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று பிரதமர் குறிப்பிடவில்லை. மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் அவர் வாய் திறக்கவில்லை.

எனினும், 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலும் அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2025ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடக்கும் என்று ஜனாதிபதியும் எதுவும் தெரிவித்திருக்கவில்லை.

இதேவேளை, எந்தத் தேர்தல் நடந்தாலும் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இருக்கும் என்று பிரதமர் தினேஷ் மேலும் கூறினார்.