11 இஸ்லாமிய அடைப்படவாத அமைப்புகளுக்கு தடை விதிப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த சில வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொழுத்துடன் வெளியாகியுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடை செய்யப்படுவதாக, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தௌஹீத் ஜமாத்

சிலோன் தௌஹீத் ஜமாத்

ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்

அகில இலங்கை தௌஹீத் ஜமாத்

ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா

தாறுல் அதர்

ஶ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்

இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு

அல்கய்தா அமைப்பு

சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு

சுப்பர் முஸ்லிம் அமைப்பு

ஆகிய அமைப்புகள் நேற்று (13) நள்ளிரவு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன.

சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோ அல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நாசகாரி ஐ.என்.எஸ் ரன்விஜய் கப்பல் இலங்கைக்குப் பயணம்

ஐந்தாவது ராஐ்புத் வகை நாசகாரி ஐ.என்.எஸ் ரன்விஜய் கப்பல் கடந்த திங்கட்கிழமை கொழும்புக்கான நல்லெண்ண விஜய் ஒன்றைமேற்கொண்டுள்ளது.

இலங்கை – இந்தியா ஆகிய நட்பு நாடுகள் மத்தியில் கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் செயற்பாடுகளில் மற்றொரு படியாக இந்தக் கப்பலின் விஜயம் அமைகின்றது என்று கொழுப்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ச்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“புதுவருட கொண்டாட்டங்கள் நடைபெறும் தருணத்தில் இலங்கை மக்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான வாழ்த்துக்களுடன் கூட்டொருமைப்பாடு மற்றும் ஐக்கியம் ஆகிய செய்தியினையும் குறித்து நிற்பதாக குறித்த இந்திய கடற்படைக் கப்பலின் வருகை அமைகின்றது.

இக் கப்பல் கப்டன் நாராணன் ஹரிஹரனின் கட்டளையின் கீழியங்குவதுடன் மேற்கு கடற்பிராந்திய கட்டளை தளபதி சுதர்ஷனவையும் கப்டன் நாராயணன் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் நாளை இந்திய அமைதிப்படையினரின் நினைவுத்துாபியில் அவர் அஞ்சலி செலுத்தவுள்ளார். பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கையில் இலங்கையும் இந்தியாவும் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பினை பராம்பரிய ரீதியாக பகிர்ந்து வருகின்றன.

பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி செயற்பாடுகளில் பரஸ்பரம் நன்மை தரும் வகையில் இரு கடற்படையினரும் ஒத்துழைப்பினை வழங்கி செயற்பட்டு வருகின்றனர்.

மிகவும் நெருங்கிய நட்பு நாடுகள் மத்தியில் கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் செயற்பாடுகளில் மற்றொரு படியாக இந்த கப்பலின் விஜயம் அமைகிறது.

நீர் மூழ்கி எதிர்ப்பு வசதியினைக் கொண்டிருக்கும் இந்த ஏவுகனை எதிர்ப்பு கப்பலானது சுதேசிய முறையில் சுயமாக தயாரிக்கப்பட்ட பிரமோஸ் சுப்பர் சொனிக் ஏவுகணை வசதிகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்துடன் பேசுவதால் எந்த தீர்வையும் காணமுடியாது : அமெரிக்காவின் தலையீட்டை கோருகின்றோம் – காணாமல் போனோரின் உறவுகள்

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக கோருவதாக, வவுனியாவில் கடந்த 1515 ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வருடப்பிறப்பான இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

கடந்த 2009 முதல் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு குழந்தையை கூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை நாங்கள் நிச்சயமாக கண்டறிந்துள்ளோம்.

எந்தவொரு தீர்வையும் அடைய தமிழர்களுக்கு மூன்று தடுப்புக்கள் உள்ளன. முதலாவது புத்த மதகுருக்கள், இரண்டாவது சிங்கள அரசியல்வாதிகள், இறுதியாக சிங்கள பொதுமக்கள் அவர்கள் எப்போதும் இனவெறி அரசியல்வாதிகளையே பதவிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.

பெப்ரவரி 2017 முதல், எங்கள் போராட்டத்தில் இலங்கையில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் கேட்டு வருகிறோம். இலங்கைக்கான அமெரிக்க அழைப்பை பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிராகரித்தனர். இப்போது, அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும், சிந்தனையாளர்களும் ஐ.நா.வில் அமெரிக்காவின் தலையீடு முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

எனவே அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக உதவவும், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்களை கண்டுபிடிப்பதற்கும் அமெரிக்க உதவியை பகிரங்கமாக கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நாளில், இனப்படுகொலை மற்றும் ஒடுக்கு முறையிலிருந்து தமிழர்களை மீட்க அமெரிக்க உதவியை நாம் அனைவரும் கூட்டாக அழைக்கிறோம்.

இலங்கையில் அமெரிக்க தலையீட்டை கேட்டு, ஆயிரக்கணக்கான அமெரிக்க கொடிகளுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மற்றொரு பெரிய ஆர்ப்பாட்டம் தேவை என்பதை தமிழ் தலைவர்கள் உணரவேண்டும்.

இல்லையெனில், இந்த தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு அல்ல, மாறாக அவர்களின் சுகபோக நல்வாழ்வுக்கும் அவர்களின் அதிகாரத்துக்கும் மட்டுமே. என்றனர்.

Posted in Uncategorized

சீனாவின் மாநிலமாக மாறும் துறைமுக நகரம் – அனுரகுமார திஸாநாயக்க

துறைமுக நகரத்தை சீனாவின் மாநிலமாக மாற்றும் அதிகாரத்தை வழங்கி, ஆணைக்குழு சட்டமூலம் ஒன்றை ஜனாதிபதி உருவாக்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு என்ற பெயரில் சட்டமூலத்தை உருவாக்கியுள்ளது.

இந்த துறைமுக நகரம் எந்த உள்ளூராட்சி நிறுவனத்தின் ஆளுகைக்கும் உட்படாது. உள்ளூராட்சி நிறுவனங்கள் அந்த பிரதேசத்திற்கு உட்பட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படுகிறது.

எனினும் ஜனாதிபதியால், நியமிக்கப்படும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களே துறைமுக நகரத்தை ஆட்சி செய்வார்கள். அத்துடன் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதனை செய்தாலும் செய்ய தவறினாலும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கோப் உட்பட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இந்த சீன மாநிலத்தை அழைக்க முடியாது. அதேபோல் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரமே துறைமுக நகரில் முதலீடு செய்ய முடியும். துறைமுக நகரில் தொழில் புரியும் நபர்களுக்கு சீனாவின் யுவான் நாணயம் மூலமே சம்பளம் வழங்கப்படும்.

வருமான வரியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள முக்கியமான சட்டங்களை துறைமுக நகரில் அமுல்படுத்த முடியாது. இப்படியான பல பாரதூரமான விடயங்கள் இதன் மூலம் நடக்கும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

கொரோனா தொற்றினால் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 600 ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் 04 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 602 ஆக உயர்ந்துள்ளது என இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலியைச் சேர்ந்த 45 வயது ஆண் ஒருவரும் அக்குரஸவில் வசிக்கும் 71 வயது பெண் ஒருவரும் நேற்றைய தினம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாரஹன்பிட்டவைச் சேர்ந்த 74 வயது பெண் நேற்று காலமானார் என்றும் அதே நேரத்தில் மகரகமவைச் சேர்ந்த 76 வயது ஆண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிமோனியா மற்றும் முன்பே பிற நோய்களினால் அவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் பின்னர் கொரோனா தொற்று உறுதியாகி நால்வரும் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

எந்த அரசியல்வாதிகளுக்கும் ஹிட்லர் முன்னுதாரணமாக இருக்க முடியாது -ஜேர்மன் தூதுவர்

மில்லியன் கணக்கானவர்களின் இறப்புகளிற்கும் மனித துயரங்களிற்கும் காரணமாகவிளங்கியவர் ஹிட்லர், எந்த அரசியல்வாதிகளுக்கும் முன்னுதாரணமாக இருக்க முடியாது என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் ஹோல்ஹெர் சூபேர்ட் தெரிவித்துள்ளார்.

”ஒரு சர்வாதிகாரி போன்று செயற்படுவார் என எதிர்பார்த்தே மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்களித்தனர். ஆனால் இன்று அவரது அரசாங்கத்தின் செயற்பாடின்மைக்காக மக்கள் அவரை குற்றம்சாட்டுகின்றனர். ஜனாதிபதி ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால் எவரும் குறைகூறமாட்டார்கள். குற்றம் சாட்ட மாட்டர்கள். தற்போதைய நிலைமை மாறாவிட்டால் அது ஜனாதிபதி ஹிட்லராக மாறும் நிலையை உருவாக்கும். ஜனாதிபதி அவ்வாறு செயற் பட விரும்பவில்லை”

என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஹிட்லராக மாறும் சாத்தியக் கூறுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ள ஜேர்மனியின் தூதுவர், “ஹிட்லர் ஒருவர் காணப்பட்டால் அது இலங்கைக்கு நன்மைபயக்கும் விடயம் என தெரிவிக்கப்படுவதை அறிந்துள்ளேன். இவ்வாறு கருத்து தெரிவிப்பவர்களிற்கு நான் ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன் – மில்லியன் கணக்கான இறப்புகளுக்கும் கற்பனைக்கு அப்பாற்றபட்ட மனித துயரங்களுக்கும் விரக்திக்கும் காரணமாகயிருந்தவர் ஹிட்லர். எனவே எந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர், நிச்சயமாக முன்மாதிரியில்லை” என்று கூறியுள்ளார்.

Posted in Uncategorized

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே உத்தியோகபூர்வ விஜயம்!

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் அவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது சீன பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், சீனாவின் உயர்மட்ட அதிகாரியொருவர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபர் மாதத்தில் சீனாவின் இராஜதந்திரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் இங்கு வரவுள்ளார்.

இதேவேளை சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சீனாவுக்கு பயணமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Posted in Uncategorized

இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் உயர் நிலைக்கு கொண்டுசெல்வோம் – புத்தாண்டு வாழ்த்தில் சீனா

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்களும் உருவாக்கிய முக்கிய உடன்பாடுகளை வழிகாட்டலாகக் கொண்டு சீன-இலங்கை ஒத்துழைப்புக் கூட்டுறவைத் தொடர்ந்து முன்னெடுத்து, மேலும் உயர் நிலைக்கு செல்ல முயற்சிகளை முன்னெடுப்பதாக இலங்கையிலுள்ள சீனத் தூதுவர் கீய் ஷென்ஹோங் தெரிவித்துள்ளார்.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சீன தூதுவரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

2021 ஆம் ஆண்டு சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் , சீனத் தொழில் நிறுவனங்கள் மற்றும் இலங்கை வாழ் சீனர்களின் சார்பில் தனிநபர் பெயரில் இலங்கையின் பல்வேறு இன மக்களுக்கும் சீன-இலங்கை உறவு மீது அக்கறை செலுத்தும் நண்பர்களுக்கும் உளமார்ந்த மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்.

கடந்த ஓராண்டில் சீனா – இலங்கை இடையே பரஸ்பர அரசியல் நம்பிக்கை இடைவிடாமல் மேம்பட்டு வந்துள்ளது.

சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இரு முறை தொலைபேசியில் உரையாடினர்.

இதனிடையில் தொலைநோக்குப் பார்வையில் சீன-இலங்கை உறவுக்கு வழிகாட்டி இரு நாட்டு ஒத்துழைப்புகள் குறித்து முக்கிய உடன்பாடுகளை உருவாக்கியுள்ளனர்.

பலதரப்பு அரங்குகளில் சர்வதேசத்தின் நேர்மை மற்றும் நீதியையும் இரு தரப்புகளின் கூட்டு நலன்களையும் பேணிக்காக்கும் வகையில் நாங்கள் பலமுறை ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டுள்ளோம்.

கடந்த ஓராண்டில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து கொவிட்-19 நோய் தொற்றை எதிர்த்து போராடியுள்ளன. இதனிடையில் இலங்கையின் பல்வேறு துறையினர்களும் அளித்த உறுதியான ஆதரவுகளை சீன மக்கள் மறக்க மாட்டார்கள்.

சீனா இலங்கைக்கு பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்ததோடு நிதி ஆதரவுகளையும் வழங்கியுள்ளது. இரு நாட்டு மக்கள் இன்னல்களைக் கூட்டாகச் சமாளித்து வரும் போக்கில் நம் பாரம்பரிய நல்லுறவு மேலும் மேம்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் பல்வேறு துறைகளில் நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்புகளை இரு நாடுகள் முன்னெடுத்து சென்றுள்ளன. பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்து சக்தியாக விளங்கும் கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் சாதனைகள் தெளிவாகக் காணப்படுகின்றன.

சீன-இலங்கை தண்ணீர் தொழில் நுட்பத்துக்கான கூட்டு ஆய்வு மையம், தேசிய சிறுநீரக நோய் மருத்துவ மனை உள்ளிட்ட மக்கள் வாழ்க்கை நலன் சார்ந்த சில செயல்திட்டங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

சில பயன்பாட்டிற்கு வர உள்ளன. இவை இலங்கையின் பொருளாதாரச் சமூகத்தின் நிலையான வளர்ச்சிக்கும் ‘பி.ஆர்.ஐ’ கட்டுமானம் இலங்கையின் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ எனும் கொள்கையுடன் ஒன்றிணைவதற்கும் வலுவான ஆற்றலை வழங்கும்.

புதியதோர் ஆண்டில் ஒரு புதிய தொடக்கம் இருக்கும். இரு நாட்டுத் தலைவர்கள் உருவாக்கிய முக்கிய உடன்பாடுகளை வழிகாட்டலாகக் கொண்டுஇ சீன-இலங்கை ஒத்துழைப்புக் கூட்டுறவைத் தொடர்ந்து முன்னெடுத்து மேலும் உயர் நிலைக்கு செல்லவும் மேலதிக சாதனைகளைப் பெறவும் இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்கள் பயன் அடையச் செய்யவும் பாடுபடுகின்றோம்.

Posted in Uncategorized

பெரமுன கூட்டிற்குள் வலுக்கும் குழப்பம் – சமரச முயற்சியில் பிரதமர்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் காணப்படும் கருத்துவேறுபாடுகளிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளி;ல் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.

மேதின நிகழ்வுகள் மற்றும் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் காணப்படும் கருத்துவேறுபாடுகளிற்கு தீர்வை காணலாம் என நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார் என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்பிரல் 19ம் திகதி அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்திற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படடுள்ளதாக ஐலண்ட் தெரிவித்துள்ளது.

அரசியல் கூட்டணியில் இடம்பெற்றுள்ளவர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பில் தங்கள் சொந்தக் கருத்துக்களை கொண்டிருப்பது வழமை என தெரிவித்துள்ள பிரதமர் வேறுபட்ட அரசியல் கொள்கைகள் கருத்துக்களால் இந்த நிலை காணப்படும் என தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் காணப்படும் அரசியல்கூட்டணிகளை கருத்தில் கொள்ளும்போது இது புதிய விடயமல்ல என தெரிவித்துள்ள பிரதமர் இது எங்கள் கூட்டணியில் உள்கட்சி ஜனநாயகம் காணப்படுவதை வெளிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கூட்டணி கட்சிகள் பல விவகாரங்கள் தொடர்பில் தங்கள் சொந்தக்கருத்துக்களை முன்வைக்கலாம் என தெரிவித்துள்ள பிரதமர் கூட்டணியின் ஐக்கியத்திற்கு ஆபத்து என்பது இதன் அர்த்தமல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க மக்களிடம் ஒத்துழைப்புக் கோருகிறார் சரத் வீரசேகர

இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை இல்லாதொழிக்க நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அடிப்படைவாத கொள்கை எவ்வழியில் தோற்றம் பெற்றாலும் அதற்கு இடமளிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐ.எஸ்.ஐ.எஸ்.அடிப்படைவாதம், வாஹப் வாதம், சல்பி வாதம் என மதம் மற்றும் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாதம் காணப்படுகிறது.

உருவ வழிபாட்டுக்கு இவர்கள் முழுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். தங்களின் மத கொள்கையினை பரப்புவதற்கு பிற மதங்களை கொல்வது சரி என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. பாதுகாப்பு தரப்பினராலும், புலனாய்வுபிரிவினராலும் மாத்திரம் அடிப்படைவாதத்தை இல்லாதொழித்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.

அடிப்படைவாதம் தொடர்பில் நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு உரிய தகவல்களை வழங்க வேண்டும்.

தீவிர மத கொள்கையினை உடையவர்கள் ஒரு கட்டத்தில் அடிப்படைவாதிகளாக மாற்றமடைகிறார்கள். இறுதியில் பயங்கரவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இவ்வாறான பின்னணியில் நடத்தப்பட்டது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன்னிலைப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அடிப்படைவாத தாக்குதல்கள் நாட்டில் எதிர்காலத்தில் இடம்பெறாத அளவிற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை குறித்து எதிர்தரப்பினர் மாறுப்பட்ட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அறிந்திருந்தால் அதனை பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறு குறிப்பிட்டோம்.

ஆனால் எதிர்த்தரப்பினர் இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினையும் அரசியல் தேவைக்காக எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றார்.