ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்த அரசாங்கம் தயார் – விஜயதாச ராஜபக்ச

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வருடாந்த அமர்வுகளுக்கு முன்னதாக புலம்பெயர் குழுக்கள் இலங்கைக்கு எதிரான சர்ச்சைக்குரிய காணொளிகளை அடிக்கடி வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களின் பிரச்சினைகள் குறித்து புலம்பெயர் தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.

பிரித்தானிய தொலைக்காட்சி அலைவரிசையானது புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான நிறுவனமாகும். ஆகவே ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 இன் காணொளி தொடர்பான சந்தேகம் எழுகின்றது. எவ்வாறாயினும் குறித்த காணொளியில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு 29 மாதங்களுக்கு முன்னர் இது குறித்து நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினேன். தேசிய ஒருமைப்பாட்டைக் சீர்குலைக்கவே நான் இவ்வாறு கூறியதாக அன்று பலர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அன்று நான் கூறி 29 மாதங்களுக்குப் பிறகு அனைவரின் கண்களும் திறக்கப்பட்டுள்ளன. அன்று எனது அறிக்கையை ஆராய்ந்திருந்தால் அந்த மக்கள் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தான் ஓய்வுபெற்று செல்லும் போதே கூறியிருந்தார். ஆனால் அவரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பெறச் செல்லும் போது நீதிமன்றம் ஊடாக அதற்கு தடையை பெற்றுக்கொண்டார்கள்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக தற்போது 42 வழக்குகள் உள்ளன. அதேபோன்று தாக்குதல் தொடர்பாக உள்நாட்டில் அல்லாமல் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் தயாராக உள்ளோம். இன்று சர்வதேச விசாரணைகளை கோருபவர்கள் தாக்குதலின் போது அரசாங்கத்தில் இருந்தனர்” இவ்வாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது.

 

இது தொடர்பில் குறித்த அகழ்வுப் பணியில் இணைந்திருந்த சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

ஏற்கனவே இனங்காணப்பட்ட மனித மனித எச்சங்களில், இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இரண்டும், விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அத்தோடு அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன.

அதற்கமைய முதலாவது மனிதஎச்சத்தின் பச்சைநிற நீளக் காட்சட்டையில் 3204 என்ற இலக்கமும், முளுநீள கையுடைய மேற்சட்டையும், 3174இலக்கமுடைய பெண்களின் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது மனித எச்சம்அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதிலும் பச்சைநிறக் முழுநீளக் காட்சட்டையும், முழுநீளக் கையுடைய மேற்சட்டையும், 1564 இலக்கமுடைய உள்ளாடையும், மார்புக்கச்சையும் எடுக்கப்பட்டது

அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட இருமனித எச்சங்களிலும் துப்பாக்கி ரவைகள் இருந்ததை அவதானிக்கமுடிந்தது.

மேலும் அவ்வாறு ஆடைகளில் இலக்கங்கள் மாத்திரமே பொறிக்கப்பட்டுள்ளதுடன், கறுப்பு நிறத்திலான நூலினாலேயே ஆடைகளில் இலக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணி ரனித்தா ஞானராசா, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், தடையவியல் பொலிசார், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், கொக்குத்தொடுவாய் கிராமஅபிவிருத்திச் சங்கத்தலைவர் கி.சிவகுரு ஆகியோர் பிரசன்னமகியிருந்தனர்.

குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தில் பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களும், தடையப்பொருட்களும் பொதியிடப்பட்டு, சட்டவைத்திய அதிகாரியால் பகுப்பாய்வுகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு

சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசினால்  40 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும்  அளிக்கப்பட்ட நிலையிலேயே  சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை   40 மேலதிக வாக்குகளினால் அரசினால் தோற்கடிக்கப்பட்டது.

சுகாதார  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான வைத்தியர் காவிந்த ஜயவர்தன கடந்த புதன்கிழமை  நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் முன்வைத்தார்.

மருந்து தட்டுப்பாடு,தரமற்ற மருந்து கொள்வனவு ,மருத்துவ சிகிச்சையின் போதான மரணங்கள், பாதிப்புக்கள் உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி   சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி  எம்.பி.யான வைத்தியர் காவிந்த ஜயவர்தன  இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை  கொண்டு வந்தார்.

கடந்த புதன்கிழமை கொண்டுவரப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை  விவாதத்திற்கு எடுக்கப்பட்டு  கடந்த 3 தினங்கள்  தொடர்ந்து இடம்பெற்ற விவாதம் மாலை 5,35 மணிக்கு முடிவுக்கு வந்தது.

இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணையை  அனுமதிக்கின்றதா என சபைக்கு தலைமைதாங்கிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபையை கேட்டபோது, எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வாக்களிப்பு கோரினார். அதன் பிரகாரம் மாலை  5,40  மணிக்கு   இலத்திரனியல் முறையில் வாக்கெடுப்பு   இடம்பெற்றது.

இதன்போது சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக   கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே .வி.பி, சுயாதீன எதிரணி  எம்.பி.க்கள், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி . இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வாக்களித்தன

அதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக அரச தரப்பான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து சுயாதீன எதிரணி எம்.பி.க்களான  நிமல்லான்சா, ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோரும்  ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஏ.எச்.எம். பெளசி வாக்களித்த நிலையிலேயே சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை  40 மேலதிக வாக்குகளினால் அரசினால் தோற்கடிக்கப்பட்டது.

சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான  இந்த   நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில்  38பேர் பங்கேற்கவில்லை.

இலங்கை பொறுப்புக்கூறல்களை நிறைவேற்றத் தவறுகின்றது – மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கை பொறுப்புக்கூறல்களை நிறைவேற்றுவதிலிருந்து தவறி வருகின்றது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) வெளியிட்டுள்ள வருடாந்தர அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் போர்க்குற்றங்கள், அண்மைய மனித உரிமை மீறல்கள், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றின் மூலம் பொறுப்பு கூறல்கள் மீறப்பட்டுள்ளமை நன்கு புலப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முன்னோக்கிச் செல்வதற்கு இந்த விடயங்கள் பாரிய தடையாக இருப்பதாகவும் அது தொடர்பாக மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் எனவும் யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும், அதனூடாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் தீர்வு கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டடமூலம் மற்றும் ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தும் சட்டம் உட்பட முன்மொழியப்பட்ட புதிய சட்டமூலங்கள் தொடர்பான பல கவலைகளையும் அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் மூலம் வாக்காளர்களின் சுதந்திரமான கருத்துரிமையை அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச கொள்கைக்கு முரணானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் 19-3 பிரிவு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிமனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை போன்றே இதுவும் அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டங்களை கருத்தில் கொண்டு, வரலாற்று மாற்றத்தின் சவால்களை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீதி, நியாயம், உண்மை என்பன நிறைவேற்றப்படாமல் வேதனையுடன் வாழ்ந்து வருவதாக உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்று அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அவ்வாறானதொரு பொறிமுறைக்காக உண்மையான பின்னணியை தயார் செய்ய வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தின எதிர்ப்பு வழக்கில் முன்னிலையாகாமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ரெலோ தலைவர் செல்வம் எம்.பிக்கு பிணை

சுதந்திர தினத்தை அரசுக்கு எதிரான கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரணியில் பங்களித்தனர் என பொலிசாரினால் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமானசெல்வம் அடைக்கலநாதன் எம்.பி புதன்கிழமை (06.09.2023) மதியம் யாழ்ப்பாணம் நீதாவன் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமான பேரணியில் பங்களித்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ் வழக்கு கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டது.

அழைக்கப்பட்ட போது நீதிமன்றில் பிரசன்னமாகாமைக்காக செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிரேஷ்ட சட்டத்தரணி என். சிறிகாந்த ஊடாக மன்றில் பிணை விண்ணப்பம் செய்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட மன்று ஆட்பிணையில் செல்வதற்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு அனுமதித்திருந்தது. இவ்வழக்கில் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் யாழ் மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் பிணை ஒப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘சனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்ட ஆவணத்தொகுப்பையடுத்து பேராயர் விடுத்துள்ள வலியுறுத்தல்

பிரித்தானியாவின் ‘செனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆவண தொகுப்பில் வெளியாகியுள்ள, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படுகின்ற பாரிய சூழ்ச்சி மற்றும் அதனூடனான சகல விடயங்களும், அதில் குறிப்பிடப்படுகின்ற நபர்கள் தொடர்பிலான விசாரணையொன்று சுயாதீன சர்வதேச விசாரணை குழு ஒன்றின் மூலமாக நடத்தப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

இந்த விசாரணை சுயாதீனமான முறையில் நடத்தப்பட வேண்டுமானால், இந்த விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற மற்றும் தற்போதும் புலனாய்வு பிரிவுகளைப் போலவே பொலிஸ் திணைக்களங்களில் உயர் பதவிகளில் இருக்கின்ற சகல அதிகாரிகளினது சேவைக்காலம், இந்த விசாரணை முடிவடையும் வரையில் இடைநிறுத்தப்பட‍ வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்.

தற்போது வெளியாகியுள்ள ‘செனல் 4 ‘ செய்திச் சேவை ஆவணத் தொகுப்பில் வெளியாகியுள்ள விடயங்கள் தொடர்பில் இந்நாட்டு மக்கள் அனைவரும் தங்களது கவனத்தை செலுத்துமாறும் பேராயர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பிரித்தானியாவின் ‘செனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆவண தொகுப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பொன்று நேற்றைய தினம் கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதன்போதே கர்தினால் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய உண்மையான பயங்கரவாதிகளை காப்பாற்றவே அஸாத் மௌலானா முற்படுகிறார்- சிவநேசத்துரை சந்திரகாந்தன்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தாக்குதலில் ஈடுபட்ட மற்றும் திட்டமிட்ட அனைத்து தரப்புக்களையும் பாதுகாக்கவே அஸாத் மௌலானா இவ்வாறான தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் இன்று இதுதொடர்பாக உரையாற்றிய அவர், புகலிடம் கோரி வெளிநாட்டில் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ள அஸாத் மௌலானா, புகலிடக் கோரிக்கைக்காகவே இவ்வாறான பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் தேசிய மற்றும் சர்வதேச சக்திகள், மதகுருமார்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சஹ்ரானுக்கு நெறுக்கமான தரப்பினர் சிறையிலும், பிணையில் வெளியிலும் இருக்கும் நிலையில், இவர்கள் அனைவரையும் பாதுகாக்கவே அஸாத் மௌலானா முற்படுகிறார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில், நாடாளுமன்றில் இதுதொடர்பாக பேசும் அரசியல்வாதிகள், மீண்டும் அச்சமானதொரு சூழலை நாட்டில் ஏற்படுத்தவே முற்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், குறுகிய அரசியல் நோக்கத்திற்காகவே இவ்விடயம் சபையில் விவாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து தனது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை இல்லாது செய்யும் முயற்சியாகவே, தன்மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் அவர் சாடினார்.

அத்தோடு, சனல் 4 ஆவணப்படம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படுமாக இருந்தால், அஸாத் மௌலானாவையும் விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

செனல் 4 தொலைக்காட்சியின் சர்ச்சைக்குரிய வீடியோ வௌியானது!

பிரித்தானியாவின் சேனல் 4 நேற்று (05) இரவு இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான 50 நிமிடங்கள் நிகழ்ச்சியில், பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா பிரதானமாகத் தகவல்களை சமர்ப்பித்துள்ளார்.

இந்த நாட்டில் நிதிக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர் அசாத் மௌலானா.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நீண்ட விமர்சனத்தை முன்வைத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தப்பட்டுள்ளன.

காணொளியில் பெரும்பாலான பகுதிகள் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அசாத் மௌலானாவும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.

பிள்ளையான் குழுவுடன் இணைந்து ட்ரிபொலி பிளட்டூன் என்ற ஆயுதக் கும்பலை அன்றைய அரசாங்கம் உருவாக்கி, ஊடகங்களை அடக்குவதற்கும் எதிரணியினரை மௌனமாக்குவதற்கும் பயன்படுத்தியதாக அசாத் மௌலானா இதன்போது தெரிவித்திருந்தார்.

இதன்போது, ஈஸ்டர் தாக்குதல் பற்றிய தகவல்களுக்காக கானியா பிரான்சிஸ் , வௌ்ளை வேன் குற்றச்சாட்டின் போது நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி நிஷாந்த சில்வா, வௌ்ளை கொடி வழக்கின் சாட்சியாளராக இருந்த ஊடகவியலாளர் பிரட்ரிக்கா ஜேன்ஸ், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பிற நபர்கள் சிலரின் வாக்குமூலங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்த காணொளியில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அம்பிகா சத்குணநாதன் மற்றும் முன்னாள் இராஜதந்திர அதிகாரி சரத் கொங்கஹகே ஆகியோரின் வாக்குமூலங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிள்ளையானின் அறிவுறுத்தலின் பேரில் 2018 ஜனவரி மாதம் புத்தளம் கரடிப்புல் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்களுக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த சுரேஷ் சலேவுக்கும் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் இதில் சஹ்ரான் உள்ளிட்ட ஜமாஅத் உறுப்பினர்கள் 6 பேர் கலந்து கொண்டதாக அசாத் மௌலானா தெரிவித்தார்.

அந்த சந்திப்பின் முடிவில் தன்னிடம் வந்த சுரேஷ் சலே, ராஜபக்ச ஆட்சிக்கு வர நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சேனல் 4 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பேஸ்மென்ட் பிலிமிஸ் நிறுவனத்தின் ‘பென் டி பெயார்’, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது நான்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கேள்விகளுக்கு பதில் கடிதம் அனுப்பி குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள நிலையில், சேனல் 4 காணொளியில் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, இது தொடர்பான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனவும் கூறப்படும் சந்திப்பின் போது தாம் மலேசியாவில் தங்கியிருந்ததாகவும் ஈஸ்டர் தாக்குதலின் போது இந்தியாவில் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல் தொடர்புடைய அறிக்கை நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பென் டி பியரிடம் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலே குற்றச்சாட்டை நிராகரித்தார் – செனல் 4

பிரித்தானியாவின் செனல் 4 இன்று (05) ஒளிபரப்பவுள்ள இந்நாட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்பட நிகழ்ச்சியின் ட்ரெய்லர் வௌியிடப்பட்டுள்ளது.

இதன் முழு காணொளி இங்கிலாந்து நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு ஔிபரப்பப்படவுள்ளது.

குறித்த ஆவணப்பட நிகழ்ச்சி தொடர்பில் விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சுரேஷ் சலேவுக்கும் ஈஸ்டர் தாக்குதலின் குண்டுதாரிகளுக்கும் இடையில் 2018ஆம் ஆண்டு சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் தி டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மௌலானாவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த ஆதாரம் அமைந்துள்ளது.

இன்று வெளியான ட்ரெய்லரில், தொலைதூரப் பண்ணையில் அப்போதைய இராணுவப் புலனாய்வுப்பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேவுக்கும் தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே சந்திப்பை ஏற்பாடு செய்ததாக அசாத் மௌலானா கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தை ஒழுங்கமைக்குமாறு இராஜாங்க அமைச்சர் சிவனேஷ்துரை சந்திரகாந்தன் தன்னிடம் கேட்டதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் சைனி மௌலவியை சந்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர், ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சஹ்ரானின் சகோதரர் என்பதை பின்னர் தான் கண்டுபிடித்ததாக அசாத் மௌலானா கூறினார்.

கூட்டத்தின் முடிவில் சுரேஷ் சலே தன்னிடம் வந்து ராஜபக்சக்கள் நாட்டில் பாதுகாப்பின்மையை உருவாக்க விரும்புவதாகவும் அதன் மூலம் தான் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வர முடியும் என்றும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது சிவனேஷ்துரை சந்திரகாந்தனோ பதிலளிக்கவில்லை என்றும் சுரேஷ் சலே இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் என்றும் செனல் 4 கூறுகிறது.

சஹ்ரான் உள்ளிட்ட குழுவுடன் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் தான் மலேசியாவில் இருந்ததாகவும், ஈஸ்டர் தாக்குதல் நடந்தபோது இந்தியாவில் தங்கியிருந்ததாகவும் சலே கூறியதாக செனல் 4 தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized