ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்த அரசாங்கம் தயார் – விஜயதாச ராஜபக்ச

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வருடாந்த அமர்வுகளுக்கு முன்னதாக புலம்பெயர் குழுக்கள் இலங்கைக்கு எதிரான சர்ச்சைக்குரிய காணொளிகளை அடிக்கடி வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களின் பிரச்சினைகள் குறித்து புலம்பெயர் தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.

பிரித்தானிய தொலைக்காட்சி அலைவரிசையானது புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவான நிறுவனமாகும். ஆகவே ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 இன் காணொளி தொடர்பான சந்தேகம் எழுகின்றது. எவ்வாறாயினும் குறித்த காணொளியில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு 29 மாதங்களுக்கு முன்னர் இது குறித்து நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினேன். தேசிய ஒருமைப்பாட்டைக் சீர்குலைக்கவே நான் இவ்வாறு கூறியதாக அன்று பலர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அன்று நான் கூறி 29 மாதங்களுக்குப் பிறகு அனைவரின் கண்களும் திறக்கப்பட்டுள்ளன. அன்று எனது அறிக்கையை ஆராய்ந்திருந்தால் அந்த மக்கள் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தான் ஓய்வுபெற்று செல்லும் போதே கூறியிருந்தார். ஆனால் அவரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பெறச் செல்லும் போது நீதிமன்றம் ஊடாக அதற்கு தடையை பெற்றுக்கொண்டார்கள்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக தற்போது 42 வழக்குகள் உள்ளன. அதேபோன்று தாக்குதல் தொடர்பாக உள்நாட்டில் அல்லாமல் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் தயாராக உள்ளோம். இன்று சர்வதேச விசாரணைகளை கோருபவர்கள் தாக்குதலின் போது அரசாங்கத்தில் இருந்தனர்” இவ்வாறு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.