இதய சுத்தியுடன் ஜனாதிபதி அழைத்தால் பேச்சுவார்த்தைக்குச் செல்வோம் – ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினைக் காண்பதற்காக இதயசுத்தியுடன் ஜனாதிபதி அழைப்பு விடுத்தல் அதில் பங்கேற்பதற்கு தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்காக தமிழ்த் தரப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறித்தது தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மலையக தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்புக்களையும் தனித்தனியாக சந்திப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான மிகப்பொருத்தமானதொரு தருணம் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த தரப்பினரும், ஏனைய தமிழ்த் தரப்புக்களும் பிரிந்து நிற்பது துரதிஷ்டமானது என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும் இரா.சம்பந்தனின் காலத்திற்குள் தமிழ், முஸ்லிம் மக்களினது விவகாரங்களுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு என்றும் அனைத்து விடயங்களும் விரைவில் சீர்செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை எங்களையே விசாரிக்கின்றது; வெடுக்கு நாறி ஆலய நிர்வாகத்தினர் கவலை

எங்கள் மீதான விசாரணைகளே தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் ஆலய விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்த சந்தேக நபர்களையும் நெடுங்கேணி காவல்துறையினர் கைது செய்யவில்லை, எந்த விசாரணையும் செய்யவில்லை, என்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியிடம் நெடுங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வெடுக்குநாறி மலை ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் வவுனியா நீதிமன்றால் விடுவிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து நேற்று விசாரணை ஒன்றுக்கு வருமாறு ஆலயத்தின் பூசாரி மற்றும் அவரது மனைவிக்கு நெடுங்கேணி காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

காவல் நிலையம் சென்ற அவர்களிடம் 2019ம் ஆண்டு மலையில் ஏணிப்படி வைத்ததுயார், அதற்கு நிதி வழங்கியது யார் போன்ற விடயங்களை கோரி மூன்று மணிநேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை இன்று ஆலய பரிபாலன சபையின் போசகர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் ஆறு திருமுருகன் அவர்களிடம் யாழில் வைத்து நெடுங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். புதிதாக வழங்கிய விக்கிரகங்கள் தொடர்பாக குறித்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

இலங்கை – இந்தியா கடல்வழி மின் விநியோக ஒப்பந்தம் தயார்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே மின்சாரத்தை கொண்டு வருவதற்கான உடன்படிக்கை கொள்கை ரீதியில் எட்டப்பட்டுள்ளது என்று அறிய வருகின்றது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின்சாரத்தை கடத்துவதற்கு பயன்படுத்தப்படும் சிறப்பு மின் கேபிளை அமைக்க இந்திய – இலங்கை அதிகாரிகள் உடன்படிக்கைக்கு வந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சூழவுள்ள கடற்பரப்பில் இந்திய – இலங்கை எல்லைகளை பிரிக்கும் மணல்பரப்பின் ஊடாக இந்த மின்சார கேபிளை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர,

திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குதங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக இந்தியாவில் இருந்து திருகோணமலைக்கு நிலத்தடி வழியாக எரிபொருள் குழாய் அமைக்கவும் இரு நாட்டு அரசுகளும் திட்டமிட்டுள்ளன.

மின்சார கேபிள் அமைக்க சுமார் 80 கோடி அமெரிக்க டொலர்கள் செலவாகும் என தற்போதைய முதற்கட்ட கணிப்பில் தெரியவந்துள்ளது.

திருமலையில் தடையை மீறி பௌத்த நிகழ்வு முன்னெடுப்பு

இன நல்லிணக்கத்தை பாதிக்கும் என்று திருகோணமலையில் பௌத்த மத நிகழ்வை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டிருந்த இடத்துக்குள் நுழைந்து தேரர்களும் – சிங்கள மக்களும் நேற்று நிகழ்வை முன்னெடுத்தனர்

திருகோணமலை நெல்சன் திரையரங்குக்கு முன்பாக தொல்லியல் திணைக்களத்தால அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் தாய்லாந்தில் இருந்து வருகை தந்திருக்கும் பௌத்த தேரர்களின் உபசம்பதா நிகழ்வுக்காக பிரித் ஓதும் நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.

எனினும், இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டால் அது இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கலாம் என்ற அடிப்படையில் மாவட்ட அரசாங்க அதிபரினால் அந்நிகழ்வுகளை அவ்விடத்தில் நடத்த அனுமதி வழங்குவது தவிர்க்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில பௌத்த தேரர்கள், சிங்கள மக்கள், திருகோணமலையில் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து சமய நிகழ்வுகளை முன்னெடுத்தனர். அத்துடன், தடை விதிக்கப்பட்ட பகுதிக்குள் முப்படையினரின் பாதுகாப்பையும் மீறி வலுக்கட்டாயமாக நுழைந்து தமது சமய நிகழ்வுகளை நேற்று முன்னெடுத்திருந்தனர்.

தாய்லாந்து உபசம்பதா நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 270 வருட பூர்த்தியை நினைவுகூரும் நோக்கில் திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிய பாத யாத்திரையை முன்னெடுக்கும் முகமாக தாய்லாந்தில் இருந்து வருகைதந்த பௌத்த தேரர்கள், இயந்திரப் படகுகள் மூலமாக திருகோணமலை நகர இறங்கு துறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வந்திறங்கினர்.

இவர்களை மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட நதில்லோ பஞ்ஞாலோகோ தேரர் மற்றும் குழுவினர் வரவேற்றனர்.

கொழும்பில் இராணுவம் குவிப்பு

கொழும்பில் பெருமளவில் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தை அடிப்படையாக கொண்டு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிவிசேட படையினர், சிறப்பு கொமாண்டோ, பொலிஸார், கலகம் தடுக்கும் குழுவினர், நீர் தாரகை வாகனங்கள் அணி வகுத்து காத்திருக்கின்றன.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கும் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்கவுள்ளதால், வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தமிழரசுக் கட்சி கூட்டத்தில் மோதல்; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்திற்குள், முன்னாள் யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட்டால் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று (13) மாலை 5.30 அளவில் இந்த சம்பவம் நடந்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் இன்று மாலை, யாழ் தொகுதிக்கிளை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிவடைந்த பின், அலுவலக வளாகத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழரசுகட்சியின் உறுப்பினரும் சிவசேனை செயற்பாட்டாளருமான ஜெயமாறன் என்பவரே தாக்கப்பட்டார்.

“சிவசேனையில் உள்ள உனக்கு தமிழ் அரசு கட்சியில் என்ன வேலை? நாங்கள் சொல்லும் சட்டத்திட்டத்தின்படிதான் நடக்க வேண்டுமென கூறி, என் கன்னத்தில் அடித்தார். நான் நிலத்தில் விழுந்து விட்டேன். கட்சி பிரமுகர்கள், உறுப்பினர்கள் பலர் அங்கிருந்தனர். யாரும் எதுவும் செய்யவில்லை. நான் எனது சகோதரனுக்கு தொலைபேசியில் அறிவித்து, வைத்தியசாலையில் அனுமதியாகினேன்“ என தாக்கப்பட்ட ஜெயமாறன் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் பற்றி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வரும் நிலப் பகுதியில் தாய்லாந்திலிருந்து வரும் பெளத்த துறவிகளின் பங்கேற்புடன் சட்டவிரோதமாகப் புத்தர் சிலை ஒன்று நாளை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் இன்று காலை முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.

“திருமலை எங்கள் தலைநகரம், எமது நிலம் எமக்கு வேண்டும், எமது கடல் எமக்கு வேண்டும், தமிழர் தேசத்தில் பௌத்த விகாரை எதற்கு?, மண் துறந்த புத்தனுக்கு தமிழ் மண் மீது ஆசையா?, பௌத்தமயமாக்கலை நிறுத்து” – என்று போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

போராட்ட இடத்துக்குச் சென்ற திருகோணமலை மாவட்ட அரச அதிபர், போராட்டக்காரர்களுடன் பேசினார்.

எனினும், “போராட்டம் செய்வது எமது உரிமை; அதற்கு யாரும் தடை போடக்கூடாது” – என்று போராட்டக்காரர்கள் கூறியதையடுத்து மாவட்ட அரச அதிபர் அவ்விடத்திலிருந்து வெளியேறிவிட்டடார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானமும் கஞ்சி பரிமாறலும்

தமிழின படுகொலைகளின்போது உயிர் நீத்தவர்களையும், உணவின்றி வறுமையில் சிக்கியபோது கஞ்சியை மட்டுமே உட்கொண்டு வாழ்ந்த போர்க்கால வாழ்க்கையையும் நினைவுகூரும் வகையில், இந்த வாரம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல் வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்த வகையில், 2009ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில், மே 12 முதல் மே 18 வரை அனுஷ்டிக்கப்பட்டு வரும் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான நேற்று (12) மாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மக்களும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் இணைந்து வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.

 

புதிய மின்சார சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு

மின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது சம்பந்தமான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைபு இம்மாத இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதோடு பின்னர் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் தனது மகளைப் பார்ப்பதற்காக கனடா செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தை தடுக்க தவறியமை மற்றும் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சம்பிக்க ரணவக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்த உயர்நீதிமன்றம், 13 முதல் செப்டெம்பர் 23 வரை வெளிநாட்டு பயணங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டது.