பொலிஸ் திணைக்களத்தில் மக்கள் நம்பிக்கை இழப்பு : மனித உரிமை ஆணைக்குழு

அண்மையகாலங்களில் பொலிஸாரின் சில முறையற்ற நடத்தைகள் மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்திருப்பதுடன் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டிற்கு இருக்கின்ற நன்மதிப்பையும் இல்லாமல்செய்திருக்கின்றது என்று பொலிஸ்மா அதிபரிடம் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களத்தில் ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் ஆர்ப்பாட்டமொன்றுக்கு மத்தியில் களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண் பொலிஸார் இருவரை கழுத்தில் பிடித்துத் தள்ளுகின்ற காணொளி சமூகவலைத்தளங்களில் வெகுவாகப் பகிரப்பட்டதுடன், அப்பொலிஸ் அதிகாரியின் நடத்தை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இச்சம்பவம் குறித்தும் அமைதிப்போராட்டத்தை சட்டவிரோதமான முறையில் நிறுத்துவதற்கும், அதில் கலந்துகொண்டோரைக் கைதுசெய்வதற்கும் பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி அவ்விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு அவசியமான சில விபரங்களை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறுகோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்க பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

களுத்துறையிலிருந்து ஆரம்பமான அமைதிப்போராட்டம் பாணந்துறையில்வைத்து பாணந்துறை பொலிஸாரால் இடைநிறுத்தப்பட்டது. அதனை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இப்போராட்டத்தை இடைநிறுத்தியமைக்கான காரணம், யாருடைய உத்தரவின்பேரில் இடைநிறுத்தப்பட்டது, அந்த உத்தரவை செயற்படுத்தியது யார் என்ற விபரங்களை நீங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவேண்டும்.

அதேபோன்று பாணந்துறை பொலிஸ்நிலைய எஸ்.எஸ்.பி ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்போது உரியவாறான உத்தரவுகளைப் பிறப்பித்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் பாதுகாப்பதற்கு அவர் தவறியுள்ளமை அவதானிக்கப்பட்டது.

எனவே பாணந்துறை பொலிஸ்நிலைய எஸ்.எஸ்.பி உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தவறியமைக்கான காரணத்தையும் நீங்கள் எமக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

மேலும் பொலிஸ் அதிகாரிகளின் தரப்பிலிருந்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உங்களால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென்பது பற்றியும் தெளிவுபடுத்துங்கள். இவற்றை உறுதிப்பத்திரத்தின் வாயிலாக எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் எம்மிடம் கையளியுங்கள்.

அண்மையகாலங்களில் பொலிஸாரின் சில முறையற்ற நடவடிக்கைகள் ஏற்கனவே மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்திருப்பதுடன் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டிற்கு இருக்கின்ற நன்மதிப்பையும் இல்லாமல்செய்திருக்கின்றது.

எனவே பொலிஸ் திணைக்களத்தில் ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு உங்களிடம் வலியுறுத்துகின்றோம் என்று அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கைக்கு விஜயம்

இதற்கமைய  இன்றும் நாளையம் இலங்கையில் தங்கியிக்கும் அவர்  ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளார்.

இதேவேளை கடந்த காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை

இவ்வாறான ஓர் பின்னணியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாநகர சபை பிரதி மேயர் துரைராஜா ஈசன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபை உறுப்பினர்கள், மாவீரர்களுக்கு இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, “எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நவம்பர் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இருப்பினும், யாழ். மாநகர சபையின் அடுத்த அமர்வு மாவீரர் நாள் முடிந்த பின்பே வரவுள்ளதால் இன்றைய அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது பொருத்தமாகயிருக்கும்” என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாநகர சபை பிரதி மேயர் ஈசன் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரின் தலைமையில் வியாழக்கிழமை (நவ.17) நிதியமைச்சில் நடைபெற்றது.

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹடட்- ஸ்வோஸ் உள்ளிட்ட குழுவினருடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாட்டின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அரச நிதிக் கண்காணிப்பு மற்றும் கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்தல், வரி நிர்வாகக் கொள்கையை மேம்படுத்தல், இறையாண்மை நிதித்துறையின் தொடர்பு மற்றும் கட்டமைப்பு ரீதியில் இடர் குறைப்பு, வலுசக்தித் துறையின் செயல்திறனை மேம்படுத்தல் மற்றும் காபன் வெளியேற்றத்தைக் குறைத்தல், கொள்கை நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல் மற்றும் பொருளாதார போட்டித்தன்மையை அதிகரித்தல், அரச தொழில் முயற்சிகளை மறுசீரமைத்தல், தனியார் மூலதனத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பிரோட்பேண்ட் சந்தையில் போட்டித் தன்மையை அதிகரித்தல், சமூக பாதுகாப்பு நிறுவனங்களைப் பலப்படுத்தல் மற்றும் விநியோகக் கட்டமைப்பை இலக்காகக் கொள்ளுதல் ஆகிய 8 துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அது குறித்த ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் துறைசார் நிறுவனங்களின் அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

அதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹடட்- ஸ்வோஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதிக்கு இவ்விடயங்கள் குறித்து விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

தொலைநோக்குடன் தேசிய இன விடுதலையை அணுகிய நாபாவுக்கு இன்று 71ஆவது பிறந்த தினம்!

தொலைநோக்குடன் தேசிய இன விடுதலையை அணுகிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபாவின் 71ஆவது பிறந்த தினம் இன்று.

இதனையொட்டி அக்கட்சியின் செயலாளரும் வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபர்களில் ஒருவரும் இறுதித்தருணம்வரை அதன் செயலாளர் நாயகமுமாகத் திகழ்ந்த எமது தோழர் க.பத்மநாபா அவர்கள் தொலைநோக்குடன் தேசிய இன விடுதலையை அணுகியவர். தேசிய இனவிடுதலையுடன் வர்க்கப் புரட்சியையும் இணைக்க வேண்டும் என்று கனவு கண்டார். இலங்கையில் வர்க்கப் புரட்சி வெற்றியடைந்தால் தேசிய இனப்பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும் என்றும் அவர் நம்பினார். அதற்காகவே தென்னிலங்கை ஜனநாயக முற்போக்கு சக்திகளுடனும், இடதுசாரிக் கட்சிகளுடனும் நெருக்கமான உறவுகளைப் பேணிவந்தார்.

காடையர்களின் துணையுடன் அரச அனுசரணையுடன் தமிழர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட தொடர்ச்சியான அடக்குமுறைகளும் வன்முறைகளும் தென்னிலங்கையின் ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் இடதுசாரிக் கட்சிகளையும் தமிழ் மக்கள்மீது அனுதாபம் கொள்ளச் செய்திருந்தன. அடக்குமுறையின் உச்சகட்டமாக நடந்தேறிய 1983 கறுப்பு ஜூலை தேசிய இனவிடுதலையை துரிதப்படுத்தியது. எனவே தேசிய இனவிடுதலையை முன்னெடுத்துக்கொண்டே வர்க்கப்போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று தோழர் பத்மநாபாவும் ஏனைய தோழர்களும் எடுத்த முடிவை தமிழ்த் தேசிய இனத்தின்மீது கரிசனை கொண்டிருந்த அன்றைய தென்னிலங்கை அரசியல் சமூகமும் ஏற்றுக்கொண்டன. அதனால் அவர் இலங்கையில் கம்யூனிச ஆட்சியைக் கொண்டுவர முயற்சிக்கிறார் என்று அன்றைய ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசினால் குற்றம் சுமத்தப்பட்டு தேசத்துரோக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

தன்னை பயங்கரவாதியாக சித்தரித்த அரசிற்கு எதிராக துணிச்சலுடன் செங்கோடன், சேரன், ரஞ்சன் என்ற பலபெயர்களுடன் தென்னிலங்கையிலும், மலையகத்திலும் இந்தியாவிலும் புரட்சிக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். தேசிய இனவிடுதலைக்காகப் போராடும் அனைத்து சர்வதேச அமைப்புகளுடனும் நெருக்கமான உறவைப் பேணிவந்தார். சர்வதேச ரீதியில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் போராட்டங்களுக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆதரவை வழங்கியதுடன் அவர்களது போராட்டங்களில் இலங்கையிலும் இந்தியாவிலும் பங்கெடுத்துக்கொண்டார்.
நிக்கராகுவா, பாலஸ்தீன விடுதலை இயக்கம், உள்ளிட்ட பல புரட்சிகர அமைப்புகளுடனும் ரஷ்யா, கியூபா போன்ற இடதுசாரி நாடுகளுடனும் கட்சிரீதியான உறவைப் பேணிவந்தார்.

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் இந்தியாவைப் பகைத்துக்கொண்டு எத்தகைய முன்னேற்றத்தையும் அடைய முடியாது என்பதிலும் இந்துமகா சமுத்திரப் பிராந்தியத்திலும் புவிசார் அரசியலிலும் இந்தியாவின் வகிபாகம் மறுதலிக்க முடியாதது என்பதையும் எமது செயலாளர் நாயகம் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார். அந்தப் புரிதலின் அடிப்படையிலேயே அன்றைய பனிப்போர் காலகட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்பும் தமிழர்களின் பாதுகாப்பும் பிரிக்க முடியாதவை என்பதில் உறுதியாக இருந்ததுடன், இந்தியாவின் சிறந்த நண்பராகவும் திகழ்ந்தார். இந்த அடிப்படையில் அவரது தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அன்று ஏற்றுக்கொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவான 13ஆவது அரசியல் சாசனத் திருத்தத்தின் கீழ் உருவான மாகாணசபை முறைமையையே இன்று முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்த் தேசிய பரப்பில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் அனைத்து கட்சிகளும் கோருகின்றன.

நாம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணசபையை பொறுப்பேற்றிருந்த வேளையில், இலங்கை அரசாங்கத்துடனும் இந்திய அரசாங்கத்துடனும் மாகாணசபை சட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டே பல்வேறு இன்னல்களின் மத்தியில் அதனை முன்னெடுத்துச் சென்றோம். குறுகிய காலப்பகுதிக்குள் எமக்குக் கிடைத்த அதிகாரங்களைக் கொண்டு பல அரிய விடயங்களைச் செய்திருந்தோம் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

அன்றைய பூகோள அரசியல் நிலைமையைப் போன்றே இன்றும் ஒரு அரசியல் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அன்று நாம் அரசியல் ரீதியிலும் ஆயுத ரீதியிலும் பலம்பெற்றிருந்தோம். இந்தியாவுடன் நட்பு பாராட்டும் சக்திகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது இந்தோ-பசிபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்று விரிவடைந்துள்ளது. இந்த பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. எனவே இந்தியாவின் பாதுகாப்பும் இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பும் தமிழ் மக்களின் பாதுகாப்பும் இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையும் பொருளாதார வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

எனவே, எமது இன்றைய அரசியல் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு எமது பலம், பலவீனம் என்பவற்றைக் கவனத்தில் கொண்டு, எமது மக்களுக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வாக சமஷ்டி தீர்வை அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்த குரலில் கட்சி பேதமின்றி இதயசுத்தியுடன் வலியுறுத்துவதுடன் அதனை அடைவதற்கு அனைவரும் ஓரணியில் திரண்டு ஐக்கியமாகச் செயற்பட்டு கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என்று எமது செயலாளர் நாயகம் க.பத்மநாபாவின் எழுபத்தியோராவது பிறந்த தினத்தில் அறைகூவல் விடுக்கின்றோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

உரிய வயதில் தேசிய அடையாள அட்டையை பெறாதவர்களுக்கு 2500 ரூபா அபராதம்

ஆட்பதிவு சட்டத்தின் கீழ் சில விடயங்களுக்கான அபராதத் தொகை திருத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, 15 வயதை எட்டிய நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் தேசிய அடையாள அட்டையை பெறாத விண்ணப்பதாரர்களுக்கு அறவிடப்படும் அபராதத் தொகை 2500 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்கள ரீதியான தாமதம் காரணமாக, முதல் விண்ணப்பத்திற்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தினால் இரண்டாவது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் 250 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

திணைக்கள ரீதியான தாமதம் இல்லாத சந்தர்ப்பங்களில் முதற்தடவையாக தேசிய அடையாள அட்டை பெறாத விண்ணப்பதாரர்களிடம் 2500 ரூபா அறவிடப்படுமென ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

இரட்டைக் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்கள் நிறைவடைவதற்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்களிடம் இருந்து 2500 ரூபா அபராதம் விதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மற்றும் பிழையான தகவல்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட, சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய குற்றங்களுக்கும் 2500 ரூபா அபராதம் விதிக்கப்படுமென ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

கிராமிய அபிவிருத்திக்கு கொரியாவின் உதவி

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக இலங்கையில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கொரியாவின் சைமோல் மன்றம் வழங்கி வரும் உதவிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன  நன்றி தெரிவித்தார்.

சைமோல் மன்றத்தின் தலைவர் லீ சூங் (Lee Seung) மற்றும் மன்றத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சைமோல் மன்றம் இலங்கையில் மேற்கொள்ளவிருக்கும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று  (17) பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமரை சந்தித்தனர்.

தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி சியோல் நகரில் இலங்கையர் ஒருவர் உட்பட மேலும் பலரின் உயிரிழப்புக்கும் மற்றும் பலர் காயமடைவதற்கும் காரணமான அனர்த்தம் தொடர்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய் நிலைமைகளின் போது கொரிய அரசாங்கம் மற்றும் மக்கள் வழங்கிய உதவிக்காக பிரதமர் அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஊடாக இலங்கையர்களுக்கு வழங்கப்படும் உயர் கல்வி வாய்ப்புகள்/பயிற்சித்நிகழ்ச்சித்திட்டங்களையும் பெரிதும் பாராட்டினார். இலங்கையர்களின் திறன் விருத்தி மற்றும் பயிற்சி வாய்ப்புகளுக்காக வழங்கப்படும் ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும், தொடர்ந்தும் வாய்ப்புகளை வழங்குவது குறித்தும் பரிசீலிக்குமாறும் அவர் தூதுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார்.

சைமோல் கருத்திட்டம் ஒரு சமூக அபிவிருத்தித் திட்டம் என்றும், விவசாய உற்பத்தி, வீட்டு வருமானம், கிராமிய வாழ்க்கை, மக்களை வலுவூட்டுதல் மற்றும் பெண்களின் பங்கேற்பு மூலம் கிராமிய சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு பங்களிப்பதாகவும் திரு. லீ சூங் தெரிவித்தார். சைமோல் மன்றம் சப்ரகமுவ மாகாண சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதுடன், எஹெலியகொட பஹலகம கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் ரம்புக்கன பிடியேகம கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. திருகோணமலை மற்றும் நுவரெலியாவிலும் விரைவில் திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட சைமோல் மன்றத்தின் தலைவர், பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகளுக்கான திறன் விருத்தித் திட்டங்களுக்கு உதவுமாறு பிரதமர் விடுத்த கோரிக்கைக்கும் இணக்கம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, கொரியா நாட்டின் தூதுவர் வூன்ஜின் ஜியோங், தூதுக் குழுவின் பிரதித் தலைவர் லிம் மியோங், சைமோல் மன்றத்தின் இலங்கை அலுவலக பணிப்பாளர் சோய் சுங் வூ, அதன் பணிப்பாளர் குவோன் லூங்மின், உதவிப் பணிப்பாளர்களான வென்போ கியோங் மற்றும் கிம் போமின் ஆகியோர் பங்குபற்றினர்.

வெளிநாட்டு சேவைத் துறையில் குறைபாடுகள் உள்ளன – அலி சப்ரி

2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாமையால் வெளிநாட்டு சேவைத் துறையில் குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. இந்த நிலையில் வெளிநாட்டு சேவைக்கு நாற்பது பேர் கொண்ட குழுவை யூலை முதல் ஆட்சேர்ப்புச் செய்ய எதிர்பார்த்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் (10) அதன் தலைவர் அமைச்சர்  அலி சப்ரி தலைமையில் நடைபெற்றது. இதன்போது வெளிநாட்டு சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளவர்களின் தரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலையை வெளியிட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தூதரகங்களின் நுழைவாயில்களுக்கு அருகில் உள்ள நடைபாதைகளில் பல இலங்கையர்கள் காலை முதல் நண்பல் வரை நீண்ட வரிசையில் நிற்பது குறித்து உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். இது சிறந்ததொரு நிலைமை அல்ல என்றும், இதனைத் தவிர்ப்பதற்கு
முறையான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சின் நாளாந்த செயற்பாடுகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்வைத்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தியிருப்பதுடன், இதுபோன்ற சர்வதேசத்தின் அக்கறைகளை உள்நாட்டில் முகங்கொடுப்பதற்கான வழிகளை ஆராய்வதில் வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பிலும் அமைச்சர் இங்கு விளக்கமளித்தார்.
கடன் மீள்கட்டமைப்புச் செயற்பாடு தொடர்பில் பல்வேறு சர்வதேச நாடுகளுடன்
ஒருங்கிணைந்த அடிப்படையிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பெண்கள், பாலின சமத்துவம் குறித்த தனி நிறுவனம் அவசியம்

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலப்படுத்துவது தொடர்பாகத் தயாரிக்கப்படும் சட்டமூலத்தை அடுத்த வருடத்தின் ஆறு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தற்போதைய செயலாற்றுகை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் (15) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் என்பன இணைந்து பாலின சமத்துவும் மற்றும் பெண்களின் உரிமைக்காகத் தயாரித்துவரும் இந்தச் சட்டமூலத்தின் ஆரம்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குக் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவை தொடர்பில் கொள்கைகள் மற்றும் சட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுடன் இணைந்து செயற்படுவதற்கு பெண்கள் மற்றும் பாலின சமத்துவம் குறித்த தனியான நிறுவனமொன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்ட திட்டங்களை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, இதனை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிமொழியளித்தார். அத்துடன் சட்ட மற்றும் கொள்கைகளைத் தயாரிக்கும்போது சகல நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்குத் தேவைப்படும் ஊழியர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சி அவசியமாகவிருந்தால், தூதரகங்கள் மூலம் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள், பாலின சமத்துவம் குறித்த தொடர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்துக்கு வருகை தந்தமை தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, தமது ஒன்றியத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்தார். அத்துடன், சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்னவும் தமது ஒன்றியத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினார்.

பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்துக்கான தனியான
ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். அத்துடன், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது. பாராளுமன்றத் தேர்தல் உட்பட ஏனைய தேர்தல்களிலும் பெண் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், மாகாணசபைத் தேர்தலில் தற்போதுள்ள பெண்களுக்கான 25% இட ஒதுக்கீட்டை குறைக்க வேண்டாம் என உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததுடன், அவ்வாறான எதிர்பார்ப்பு எதுவும் இல்லையென்றும் ஜனாதிபதி பதிலளித்தார்.

பெண் பொலிஸ் அதிகாரிகளுக்குக் காணப்படும் வெற்றிடங்களைத் தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன், பொலிஸ் நிலையங்களில் பெண்களின் முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் போது அவர்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளைக் கொண்ட தாய்மார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்குச் செல்வதைத் தடுப்பது, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்த விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அதுகோரல, ரஜிகா விக்ரமசிங்ஹ, மஞ்சுளா திசாநாயக, முதிதா பிரசாந்தி, கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகள் இணைந்திருந்தனர்

2027 க்குள் கண்ணிவெடி இல்லாத இலங்கையை உருவாக்க திட்டம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பில் இருந்து  கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களின் நலனுக்காக விடுவிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி கிட்டத்தட்ட 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட உள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் கைச்சாத்திட்டுள்ளது. அந்த சாசனத்தின்படி, ஜூன் 2027க்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற வேண்டும்.

கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் அவசர வேலைத்திட்டத்தின் பிரகாரம் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்ற முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு தொடக்கம் கண்ணிவெடி அகற்றும் திட்டம் இலங்கை பூராக இயங்கி வருகிறது, 2010 இல்  ‘தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம்’ நிறுவப்பட்டது. இது கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது. மற்றும் கண்காணிக்கிறது. இதற்கு இலங்கை இராணுவம் நேரடியாகப் பங்களிக்கிறது.

இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்கு மேலதிகமாக, இரண்டு சர்வதேச அரச சார்பற்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும், இரண்டு உள்ளூர் அரச சார்பற்ற கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும் இந்நாட்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
மற்ற நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சர்வதேச உதவி நிறுவனங்களிடமிருந்து ஆண்டுதோறும் 17.5  மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுகின்றன.

இதுவரை 870,412  சாதாரண கண்ணிவெடிகளும், 2,169 இராணுவத் தாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வெடிக்காத 365,403 இராணுவ வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 1,184,823 தோட்டாக்கள் மற்றும் ஏனைய சிறிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கண்டெடுக்கப்படும் நிலக் கண்ணிவெடிகள், வெடிமருந்துகள் மற்றும் ஏனைய இராணுவ வெடி பொருட்கள் பொதுமக்களின் கைகளில் சிக்குவதைத் தடுப்பதற்காக இராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினரால் தினந்தோறும் வெடிக்கச் செய்து அழிக்கப்படுகின்றன.

நிலக் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கையின் போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, 12,000 க்கும் மேற்பட்டவர்கள் நிலத்தை அகற்றும் செயல்முறையின் மூலம் வாழ்வாதாரத்தை ஈட்ட முடிந்தது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Posted in Uncategorized