தேசிய சபை சாத்தியப்படுமா: அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் C.V.விக்னேஸ்வரனும் நேற்று (23) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தேசிய சபையில் இணைந்துகொள்ளுமாறு இதன்போது பிரதமர் தமக்கு அழைப்பு விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் ஏதாவது இரண்டை முதலில் நிறைவேற்றுமாறும் அதன் பின்னர் தேசிய சபையில் இணைவது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் தாம் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் C.V.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

இதேவேளை, தேசிய சபையில் இணைவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் கூடி முடிவெடுக்கவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

தேசிய சபையில் பங்கேற்றாலும் நடைமுறையில் அதனை எவ்வாறு செயற்படுத்தப்போகிறார்கள் என்பதனை பார்த்தே அடுத்த கட்ட தீர்மானத்தை எடுக்க வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உண்மையான நோக்கத்தில் அதனை செயற்படுத்தினால், அதில் பங்குபற்ற முடியும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால், அதில் பங்கேற்க முடியாது எனவும் பேச்சுவார்த்தைகளின் பின்னரே தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் கட்சியிலும் எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், தேசிய சபையில் தனது பெயர் இருப்பது ஊடகங்களில் தகவல் வௌியாகும் வரை தனக்கு தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஐ.நா.வில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அதிருப்தி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மைய குழுவினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான வரைபு தீர்மானம் அதிருப்தியை அளிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது முந்தைய அறிக்கையில் பரிந்துரைத்ததை இந்த வரைவுத் தீர்மானமும் இன்னமும் உள்ளடக்கவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதே பரிந்துரையையே அனைத்து முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்களும் ஒன்பது இலங்கைக்கு வருகை தந்த முன்னாள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் இலங்கை தொடர்பான ஐ.நா நிபுணர்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் முன்வைத்துள்ளனர்.

மூத்த ஐ.நா அதிகாரிகளின் இந்த கூட்டு பரிந்துரையை முன்னிறுத்தி, நாங்கள் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பாதிக்கப்பட்ட தரப்பினர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் ஆகியோர் மைய குழு நாடுகளுக்கு கூட்டாக கடிதம் ஒன்றை எழுதி இருந்தோம். அக்கடிதத்தில் அவர்களின் தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தோம்.

இலங்கை மீதான ஐ.நா தீர்மான செயல்முறையின் முக்கியமான இந்த தருணத்தில், இத் தீர்மானத்திலாவது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையையும் ஐ.நா.வின் மூத்த அதிகாரிகளின் கோரிக்கையையும் புறக்கணிக்காது சேர்த்துக் கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமை மன்ற உறுப்பினர்களை குறிப்பாக இந்தியாவை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழரின் வரலாற்றுப் பெருமை கொண்ட திருக்கோணேஸ்வரம் சூரையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது  –   ஜனா

தொல்பொருள் என்னும் பெயரிலே தமிழரின் வரலாற்றுப் பெருமை கொண்ட திருக்கோணேஸ்வரம் சூரையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டிலே வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தொல்பொருள் திணைக்களம் திருக்கோணேஸ்வரத்தில் மாத்திரம் தொல்பொருள் என்கின்ற போர்வையில் குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய விடயம் தொடர்பிலான ஒத்துவைப்புப் பிரேரணை மீததான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொல்பொருள் என்னும் பெயரிலே தமிழரின் வரலாற்றுப் பெருமை கொண்ட திருக்கோணேஸ்வரம் சூரையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கோணேஸ்வரர் ஆலயத்தின் புகழை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே பல புராணங்கள் போற்றியுள்ளன. இதற்கு சிறந்த உதாரணம் தட்சண கைலாய புராணமாகும். இலங்காபுரியை ஆண்ட இராணவனால் வழிபட்ட இவ்வாலயத்தின் பெருமையை திருஞானசம்மந்தர் பதிகம் மூலம் பாடியுள்ளார். பல்லவ, சோழர் கால கல்வெட்டுக்கள் பலவற்;றில் இதன் பெருமை எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

1624ம் ஆண்டு போர்த்துக்கேயர் திருகோணமலையிலே ஆட்சி செய்த காலம் இந்தக் கோயிலை உடைத்து அதன் செல்வங்களை அள்;ளிச் சென்றது மாத்திரமல்லாமல், அந்தக் கோயிலை உடைத்த கற்களைக் கொண்டுதான் சரத் வீரசேகர பாராளுமன்ற உறுப்பினர் கூறிய பிறட்ரிக் கோட்டை என்பது உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் 1952லே மூன்று மதஸ்தலங்களிலே அதுவும் ஒன்று என்று கூறுகின்றார்.

ஐம்பது வருடங்களுக்கு மேலாக திருக்கோணேஸ்வரத்தைப் புனித நகராக மாற்ற வேண்டும் என்று இந்துக்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 1965ல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஒரு நல்;லிணக்கத்தை இந்த நாட்டு அரசுடன் ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வைக் காண வேண்டும் என ஆட்சி அதிகாரத்தில் பங்குகொண்டிருந்தார்கள். திருச்செல்வம் அவர்கள் உள்ளுராட்சி அமைச்சராக இருந்தார். அவர் திருகோணமலை நகரைப் புனித பூமியாக மாற்ற வேண்டும் என்ற பிரேரணை கொண்டு வந்திருந்தார். டட்லி சேனநாயக்காவும் அதற்கு அனுசரணை கொடுத்திருந்தார். ஆனால் விகாராதிபதிகளின் எதிர்ப்பைத் தாங்க முடியாமல் திருச்செல்வத்திற்கே தெரியாமல் அந்த ஆணைக்குழுவை நிராகரித்தமையால் திருச்செல்வம் அவர்கள் அமைச்சரவையை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

இருந்தாலும் 2018ம் அண்டு திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தலே அரச அதிபர் அங்குள்ள நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னலையிலே முடிவு எட்டப்படடது. அங்கு கடைகள் வைத்திருந்த 45 பேரும் அமைச்சர் சொல்வது போன்று அந்தக் கோயிலையோ, அப்பிரதேசத்தையோ சுற்றியிருந்தவர்கள் அல்ல. அன்று இரத்தினபுரியிலே இருந்து திருகோணமலைக்கு வந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட புஞ்சிநிலமே அவர்கள் தன்னுடைய பிரதேசத்தில இருந்தும், தம்புள்ளை, குருநாகல், பொலநறுவை போன்ற பிரதேசங்களில் இருந்தும் தன்னடைய தேர்தல் அடாவடி வேலைகளுக்காகக் கொண்டு வரப்பட்டவர்கள் தான் அங்கு குடியேற்றப்பட்டார்கள், அவர்களின் வாழ்வாhரத்திற்காக அந்தக் கோயில் பிரதேசத்திலே தற்காலிகக் கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதை இந்தச் சபை தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்தக் கோயில் நிருவாகம் மனச்சாட்சியுடன் நடந்து கொள்கின்றார்கள். என்னவென்றால் 2018ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக அவர்களை அங்கு தங்க வைப்பதற்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை என அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், தொல்பொருள் திணைக்களம் என்பது இந்த நாட்டிலே வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் திருகோணமலையில், கோணேஸ்வரத்தில் மாத்திரம் தொல்பொருளை பாதுகாக்க வேண்டிய திணைக்களம் அவ்விடத்தில் வேற்று மதத்தவர்களை, இனத்தவர்களை அந்தக் கோயிலையே வழிபடாதவர்ககளைக் கொண்டு வந்து தொல்பொருள் திணைக்களம் என்கின்ற போர்வையில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் கோயில் நிருவாகத்தினரை ஆலோசனை பெறுவதற்காகக் கூப்பிடவில்லை, அறிவுறுத்தல் தருவதற்காகவே அழைத்துள்ளோம், நாங்கள் அவர்களுக்கு நிரந்தரமான கடைகள் அமைத்துக் கொடுக்கப் போகின்றோம் என ஆளுநரும், தொல்பொருள் அதிகாரியும் கூறியுள்ளார்கள். ஆனால் அந்தக் கடைகளின் வடிவங்களைப் பார்க்கும் போது அந்தக் கடைகள் கடைகளாக இல்லை, அவை குடியேற்ற வீடுகளாகவே இருக்கின்றது. எனவே கௌரவ அமைச்சர் அவர்கள் இந்த விடயத்தின் நியாயத் தன்மையைப் புரிந்துகொண்டு நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்கென ஒரு தொல்பொருள் செயலணியை இதற்கு முன்பிருந்த ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் அமைத்திருந்தார். முன்னாள் இராணுவத் தளபதி கமால் குணரட்ண தலைமையில் முழுக்க முழுக்க சிங்கள அதிகாரிகளையும் பௌத்த பிக்குகளையும் கொண்ட ஒரு செயலணியாக அது அமைக்கப்பட்டது. இன்று திருகோணமலை திருக்கோணேஸ்வரத்திலே சிங்களம் மட்டும் பேசக் கூடிய பல்கலைக்கழக மாணவர்களினாலேயே அந்தப் பிரதேசத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நடக்கின்றது. ஏன் இந்த நாட்டிலே தொல்பொருளுடன் தொடர்புடைய ஏனைய மதத்தவர்கள் இல்லையா?  கிழக்கு மாகாணத்திற்கென நூறு வீதம் சிங்களவர்களினால் மாத்திரம் உருவாக்கப்பட்ட செயலணியும், தொல்பொருள் சம்மந்தமாக ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழக மாணவர்களும் எதனைச் செய்ய முனைகின்றார்கள்?

கிழக்கு மாகாணத்திலே சிங்களப் புராதனச் சின்னங்கள் மாத்திரம் தான் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றார்களா? ஏனைய மதத்தவர்களும் அந்தச் செயலணிக்குள் உள்ளடக்கட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அந்தச் செயலணி கலைக்கப்பட வேண்டும். அந்தச் செயலணிக்குள் ஏனைய மதத்தவர்களோ, ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழக மாணவர் குழாமிற்குள் ஏனைய மத மாணவர்களோ உள்வாங்கப்பட்டால் அங்கிருப்பது எந்த மதத்தைச் சார்ந்த, எந்த மதத்தினர் வழிபட்ட புராதனப் பொருட்கள் என்பது வெளிப்பட்டுவிடும் என்ற பயமா?

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த நாட்டிலே நாங்கள் நல்லிணக்கத்தை விரும்புகின்றோம். நீங்கள் கூறுவது போன்று நீங்கள் தமிழருக்கு இரத்தம் கொடுத்திருக்கலாம், நீங்கள் குறிப்பிட்ட தமிழர்களுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். ஆனால், கடந்த அமைச்சரவையிலே இருந்த இனவாதிகளுள் முக்கியமான இனவாதி நீங்களாகவே இருப்பீர்கள்.

இந்த நாட்டை அழித்த சில இனவாதிகள் இருந்திருக்;கின்றார்கள்;. குறிப்பாக கே.எம்.பி.ராஜரெட்ண, ஆர்ஜி.சேனநாயக்க, சிறிலால் மத்தியு போன்ற மூன்று மிகவும் துவேசமான இனவாதிகள் இருந்திருக்கின்றார்கள். அந்த மூன்று இனவாதிகளையும் ஒன்று திரட்டி ஒரே ஆளாக நீங்கள் இருக்கின்றீர்கள். ஏனெனில் நீங்கள் தற்போது பேசும் போது சுற்றிவர இருந்தவர்களுக்கு முன்னுரிமை, நாங்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் கூறுகின்றீர்கள். ஆனால், இந்த நாட்டிலே கடந்த காலங்களிலே நடைபெற்றவைகளுக்கு நீங்களும் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றீர்கள்.

எனவே, தொடர்புடைய அமைச்சரிடம் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் ஏழாம் நூற்றாண்டிலே பாடல் பெற்ற இந்தத் திருக்கோணேஸ்வரம் முன்னூற்று நாற்பது ஏக்கர் பரப்பளவைக் கொண்டதை 1971ம் ஆண்டு தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருந்தாலும், பதினெட்டு ஏக்கருக்கு உட்பட்ட காணி கோயிலுக்குச் சொந்தமானதாக இருக்கின்றது. அந்தக் கோயில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். பாடல் பெற்ற தளம் இராஜகோபுரம் இல்லாமல் இருக்கின்றது. அதற்கான இராஜகோபுரம் அமைக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இரந்து இங்கு சுற்றுலாவிற்கு வருபவர்கள் இந்த நாடடைப் பற்றிப் படித்து விட்டுத்தான் வருகின்றார்கள். இந்த நாட்டிலே சோழர் பல்லவ காலத்து ஆட்சியைப் பற்றி அறிந்து விட்டுத்தான் வருகின்றார்கள். அவர்கள் திருக்கோணேஸ்வரத்திற்குச் செல்லும் போது வழியிலே கடைகளை வைத்து இந்து சமயத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வழிபடுவதற்கும், ஆராய்வதற்கும், சுற்றலாப் பயணிகள் மேலும், மேலும் வருவதற்கும் ஆவனசெய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என்கிறார் விக்டோரியா நுலாண்ட்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் உறுதியளித்துள்ளார்.

தற்போது அமெரிக்கா சென்றுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைபொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் சுதந்திரமான மற்றும் வளமான பிராந்தியத்திற்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றும் அமெரிக்காவின் துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு முன்னர் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும்!

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு முன்னர் உரிய உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தமக்கு அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கு முன்னர் கடனாளர்களுடனான கலந்துரையாடலில் அறிக்கை உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எல்லா தகவல்களும் கிடைத்த பிறகு அமைச்சரவைக்கு விளக்கம் அளிக்கப்படும். மேலும், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆர்வமுள்ள கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

ரவிகரன் மற்றும் மயூரன் விடுதலை செய்யப்படாவிட்டால் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

குருந்தூர்மலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும், பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக இராமநாதன் வீதி ஊடாக பரமேஸ்வராச் சந்தியை அடைந்து அங்கிருந்து சிறிது நேரம் வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பின்னர் பேரணியாக பல்கலைக்கழகத்தை வந்தடைந்தனர்.

ரவிகரன் மற்றும் மயூரனை விடுதலை செய், எமது காணி எமக்கு வேண்டும், எமது மலை எமக்கு வேண்டும், குருந்தூர் மலையை ஆக்கிரமிக்காதே போன்ற கோஷங்கள் பல்கலைக்கழக மாணவர்களால் எழுப்பப்பட்டது.ரவிகரன் மற்றும் மயூரன் விடுதலை செய்யப்படாவிட்டால் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து நேற்றையதினம் புதன்கிழமை குருந்தூர்மலையில் அப்பகுதி மக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில்சமூகப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

“ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை புரிந்துகொள்ள இந்தியா தயாராக இல்லை“

ஜெனீவாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நெருக்கடி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே கருத்து தெரிவிக்கையில் ‘இலங்கை தமிழர்கள் இனப்பிரச்சினையில் அரசியல் தீர்வு ஏற்பட அந்நாட்டு அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை’ என சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், இந்திய தரப்பின் இக்கருத்து குறித்து சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் குழந்தைசாமி இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி….

கேள்வி

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வை காண்பது தொடர்பில் இலங்கை அக்கறை செலுத்தவில்லை என ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இந்தியா தெரிவித்ததன் பின்னனி என்ன?

பதில்

இந்தியா ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது என்பது தவறான புரிதலாகும். இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண அவைகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து, மாகாண தேர்தலை நடத்தி, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்று காங்கிரஸ் அரசும் பாரதிய சனதா கட்சி அரசும் தொடர்ந்து கூறிவருகின்றன.

தனது நிலைப்பாட்டை இலங்கை அரசு விரைவாக செயல்படுத்தவேண்டும் என்பதில் இந்திய ஒன்றிய அரசு தெளிவாக உள்ளது. தனி ஈழம் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. சிங்கள பேரினவாதத்தை வளர்த்து, இனப்படுகொலை செய்த இனத்தோடு இணைந்து வாழ வாய்ப்புகள் குறைவு. ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை சரியாக புரிந்துகொள்ள இந்திய ஒன்றிய அரசு தயாராக இல்லை. தனது நிலைப்பாட்டை செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டி, தனது அதிகாரத்தை இலங்கையில் நிலைநிறுத்த விரும்புகிறது. இந்திய ஒன்றியம் பௌத்த சிங்கள பேரினவாத அரசுக்கு தொடர்ந்து ஆதரவும் பாதுகாப்பும் கொடுத்து வருகின்றது.

உள்நாட்டு மக்களின் உரிமைகளையும் தேவைகளையும், மக்களாட்சியின்மீது நம்பிக்கை வைக்காத பாரதிய சனதா கட்சி இன்னொரு நாட்டிலுள்ள மக்களின் உரிமைகளை மதிக்காது. இந்திய ஒன்றிய அரசு இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்கும் வேலையை தீவிரமாக செய்து வருகிறது.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்ற நோக்கில் ஈழத்தமிழர் பிரச்சினையை அணுகுகிறது. நிரந்தர அரசியல் தீர்வுகாண இந்திய ஒன்றிய அரசிடம் எவ்வித திட்டமும் செயல்பாடும் இல்லை. இந்திய ஒன்றிய அரசு ஈழத்தமிழர் இனச்சிக்கலை இரட்டை வேதத்தில் பார்க்கிறது. இதனால் இந்திய ஒன்றிய அரசால் எவ்வித தீர்வும் கிடைக்காது.

இந்திய ஒன்றியத்தின் நிலைப்பாடு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தமிழர் பிரச்சினை குறித்து இந்திய ஒன்றியம் பேசுகின்ற போதிலும் இந்திய ஒன்றியத்திற்கு பொருளாதார ரீதியில் அதன் வழியாக எவ்வித நன்மையும் இல்லை. அது ஒரு நிலைப்பாடு. வழக்கம்போல் அது இந்திய ஒன்றியத்தின் அறிவிப்புதான் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஆர். சிவராசா கூறுகின்றார்.

நீதி, அமைதி, சமத்துவம் மாண்பு ஆகியவை தமிழர்களுக்கு கொடுக்க வேண்டுமென்று இந்திய ஒன்றிய அதிகாரி கூறுகிறார். ஆனால் எப்படி தருவது? இனப்படுகொலை செய்த பேரினவாத அரசு தமிழர்களுக்கு நீதி வழங்காது. இலங்கை குறித்த இந்திய ஒன்றிய நிலைப்பாடு இலங்கை அரசை காப்பாற்ற மீண்டும் முயற்சி செய்கிறது. இந்திய ஒன்றியத்தில் இந்து பேரினவாத அரசு இலங்கையில் உள்ள பௌத்த பேரினவாத அரசை, மானிட உரிமைகளை பாதுகாக்க எவ்வாறு அழைக்க முடியும்?

இலங்கையில் மாற்றம் வரக் கூடாதென இந்திய ஒன்றிய அரசு. இந்திய ஒன்றிய அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பை ஆராய்ந்து தண்டனை வழங்காமல் தமிழர்களை ஆற்றல்படுத்த முடியாது. 13 வது திருத்தச் சட்டம் பெரும் பலனை ஈழத்தமிழர்களுக்கு கொடுக்க முடியாது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அதில் தமிழ்நாட்டு தமிழர்களின் ஓட்டுகளைப் பெற நடத்தும் ஒரு தேர்தல் நாடக யுத்தியாகும். சீனாவிற்கு எதிராக இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்ற சிந்தனையில் இந்திய ஒன்றியம் செயல்படுகிறது. இலங்கைத் தீவு ஈழம், சிங்களம் என் இருநாடுகளாக பிரியக் கூடாதென இந்தியா தெளிவாக இருக்கிறது. அதனால் இந்த 51 வது ஐநா கூட்டத்தொடரில் இந்தியாவின் நிலைப்பாடு ஈழத்தமிழர்களுக்கு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

கேள்வி

உண்மையில் இந்தியா தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதா இல்லை தமிழர்களை மீண்டும் பயன்படுத்த முற்படுகின்றதா?

பதில்

இந்திய ஒன்றிய அரசு ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. பேரினவாத அரசு இன்னொரு பேரினவாத அரசை ஏற்றுக்கொள்ளும். ஒருபோதும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை ஏற்காதுஇ அந்த உரிமைகளை மதிக்க மறுக்கும். இந்திய ஒன்றிய அரசு ஈழத்தமிழர்களிமீது எவ்வித அக்கறையும் இல்லை. தமிழ்நாட்டு முகாமில் வாழும் 58. 422 ஈழத்தமிர்களை வைத்து இலங்கை அரசை மிரட்டுகிறது. வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள் சமய வேறுபாடின்றி வாழ்ந்து வரும் தமிழர்களை பயன்படுத்தி இந்துத்துவா கொள்கையை பரப்பி இந்துகளையும் கிறித்தவர்களையும் பிரிக்கிறது. வடக்கு கிழக்கு பகுதிகளை இந்துநாடாக மாற்ற இந்திய ஒன்றிய பேரினவாத அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டு தமிழர்களும் ஈழத்தமிழர்களுக்கும் உள்ள உறவை அறுத்து, வெறுப்பை வளர்த்து அன்னியப்படுத்த இந்திய ஒன்றிய அரசு செயல்படுகிறது.

ஈழத்தமிழர்களை தனது தன்னல நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த இந்திய ஒன்றிய அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கீழ்கண்ட கோரிக்கைகளை இந்திய ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும். 1. ஈழத்தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலையை நன்கு ஆராய்ந்து நீதி வழங்க வேண்டும்.

2. வடக்கு கிழக்கு பகுதிகளில் பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும்.

3. சிங்களவர்களோடு இணைந்து வாழ்வதா? தனிநாடாக பிரித்து வாழ்வதா? என்று பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும்.

4. ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கவேண்டும்.

5. சிங்கள பேரினவாத அரசை பன்னாட்டு குற்றவியல் நடுவர் மன்றத்தில் நிறுத்த வேண்டும்.

இந்தச் செயல்பாடுகளை இந்திய ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழ் மக்களை தனது தன்னலத்திற்காக பயன்படுத்தி, தமிழர்களை அடிமைபடுத்துகிறது. இந்திய ஒன்றிய அரசை நம்பி நமது உரிமைகளை இழந்துவிடவேண்டாம்.தொடர்ந்து போராடி தனது உரிமைகளை பெற தமிழர்களாகிய நாம் ஒன்றிணைவோம்.

போர் முடிந்து 13 ஆண்டுகள் முடிந்தும் இன்னும் நீதி ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் இந்திய ஒன்றிய அரசுதான். ஈழத்தமிழர்களை மனிதர்களாக மதிக்கவில்லை. வடஇந்திய ஒன்றிய அரசுகள் தமிழர்களை புரிந்தகொள்ள மறுக்கின்றன. சமயம்தான் முன்னிலைப் படுத்துகிறது. ஆனால் மனித உரிமைகளை பின்னுக்கு தள்ளுகிறது. அடிப்படையில் ஈழத் தமிழர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு, அரசுகளுக்கு, நாடுகளுக்கு தன்னலத்திற்காக பயன்படுகின்றனர். இந்திய ஒன்றிய அரசை சரியாக நாம் புரிந்துகொள்ளவேண்டும். எவரும் நம்மை பயன்படுத்த விடாமல் உலக உரிமை சக்திகளோடு இணைந்து தொடர்ந்து போராடி தங்களது உரிமைகளை வென்றெடுப்போம்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் ஐ.நா கவனம் எடுக்க வேண்டும்- அருட்தந்தை மா.சத்திவேல்

தியாகி திலீபனின் தியாக வாரம் ஆரம்பித்திருக்கின்ற இவ்வேளையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 3 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் இளைஞர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக விடுதலை அல்லது பிணை வேண்டுமென உண்ணாவிர போராட்டத்தை ஆரம்பித்து நடத்தி வரும் நிலையில், இன்று அவர்களை சந்தித்த வடமாகாண ஆளுநர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் அவர்கள் உண்ணாவி ரதத்தை கைவிட்டிருக்கின்றனர்.

இவ்வாறான வாக்குறுதிகள் அரசியல்வாதிகளால் எத்தனையோ முறை அரசியல் கைதிகளுக்கு கொடுக்கப்பட்டும் இன்றுவரை அது நிறை வேற்றப்படவில்லை என்பதையும் ஆளுநர் நினைவில் கொள்ள வேண்டும்.

தியாகி திலீபனின் தமிழர் தாயகம் மீதான ஐந்து கோரிக்கைகளில், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதும் ஒன்று. கடந்த 35 வருட காலமாக இக்கேரிக்கையை முன்னிலைப்படுத்தி தமிழ் சமூகம் பல் வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளது.

அரசியல் கைதிகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியும் பேரினவாத ஆட்சியாளர்கள் இதுவரை அரசியல் கைதிகள் உள்ளனர் என ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

தமிழர்களின் அரசியல் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என காலாகாலமாக இழுத்தடிப்பு செய்வதை போன்று அரசியல் கைதிகளின் விடுதலையும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றது.

பதவி விலகி ஓடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே “நாட்டில் அரசியல் பிரச்சினை என்று ஒன்று இல்லை. இருப்பது பொருளாதார மற்றும் அபிவிருத்தி பிரச்சனையே “என்று கூறியதோடு “சிறையில் உள்ளோர் பயங்கரவாதத் தடை சட்டத்தால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளே” என்றார். பேரினவாத அமைச்சர்களும் அரசாங்கமும் தொடர்ந்தும் அவ்வாறே கூறி வருவதை நாம் அனுபவரீதியாக அறிவோம்.

மேலும் பயங்கரவாத தடை சட்டம் ஒட்டுமொத்த தமிழர்களையும், தமிழர்களின் அரசியலையும் அழிப்பதற்காக கொண்டுவரப்பட்டு 42 ஆண்டுகளாகின்ற போதும் அதனை நீக்காது அதன் துணையோடு ஆட்சியாளர்கள் இன்றும் அச்சட்டத்தின் மூலம் தம்மை பாதுகாத்துக் கொள்கின்றனர். இதனையே புவிசார் அரசியல் செய்யும் வல்லரசுகளும் விரும்புகின்றன.

தற்போது மிக நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகளில் பெண் ஒருவர் உட்பட 46 பேர் விடுதலைக்காக ஏங்கி நிற்கின்றனர்.

இவர்களில் தண்டனை தீர்ப்பளிக்கபட்டவர்கள் 24 பேர். பத்து வழக்குகளில் வழக்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் 22 பேர் உள்ளனர். அத் தோடு இருநூறு ஆண்டுகால சிறைத் தண்டனை பெற்ற ஒருவரும், மரண தண்டனை கைதிகள் மூவரும் உள்ளனர். மேலும் ஆயுள் கைதிகள் ஒன்பது பேரும் உள்ளனர். ஆகக் கூடுதலாக 26 வருட காலம் சிறை வாழ்வை அனுபவிப்போரும் உள்ளனர்.

தமிழ் இன விடுதலை செயற்பாட்டில் ஈடுபடக் கூடாது என்ற மனநிலையை உருவாக்கவும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக தண்டனை கொடுக்கவுமே அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாதுள்ளனர்.

ஒட்டுமொத்த தமிழர்களையும் தமிழர் தேசத்தையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே போலி புலி புரளி உண்டாக்கியும் புலிகளின் மீளுருவாக்கம் என பலர் கைது செய்யப்பட்டுமுள்ளனர். இவர்களில் ஒரு சிலரை விடுவித்து விட்டு அரசியல் கைதிகளை விடுவித்தோம் என சர்வதேசத்தை ஆட்சியாளர்கள் கடந்த காலத்தில் ஏமாற்றியுள்ளனர்.

ஐநா மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் இக் காலகட்டத்தில் நாட்டின் ஜனாதிபதி “தலதா மாளிகை மீது குண்டு வைத்தவர்கள், அரசியல்வாதிகளை கொலை செய்ய முயற்சித்தவர்கள் தவிர ஏனையோரை விடுவிக்க நடவடி க்கை எடுக்கின்றோம்” எனக் கூறியிருக்கின் றார்.இது எந்த வகையில் சாத்தியமாகும்? ஒட்டுமொத்த அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

பயங்கரவாத சட்டத்தை பாதுகாக்கின்றவர்களும், சுதந்திரம் என அறிவி க்கப்பட்ட நாளிலிருந்து இன அழிப்பு செய்கின்றவர்களுமே பயங்கரவா திகள். அந்த வகையில் நாட்டை ஆட்சி செய்த அனைவருமே பயங்க ரவாதிகள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

நாட்டில் அரசியல் கைதிகள் உள்ளனர் என்பதை ஐநா மனித உரிமை பேரவை வெளிப்படுத்தி அரசியல் கைதிகளை கைதிகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டும். அதுவே தமி ழர்களின் அரசியல் தீர்வு காண ஆரம்ப புள்ளியாகவும் அமையும்.

Posted in Uncategorized

”இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும்”

இலங்கைக்கு இயன்ற உதவிகளை தொடர்ந்தும் இந்தியா செய்யும் என்று  இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளுக்கு இலங்கை தொடர்ந்து உதவுவதுடன் குறிப்பாக நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதே இதன் நோக்கமாகும் என உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு இந்தியா இனி நிதி உதவி வழங்காது என ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இவ்வருடம் இதுவரையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இருதரப்பு உதவியின் பெறுமதி 4 பில்லியன் டொலர்கள்.

இது தவிர, இருதரப்பு வளர்ச்சி ஒத்துழைப்பு திட்டங்களுக்காக இந்தியா சுமார் 3.5 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக உதவுமாறு ஏனைய தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் இலங்கையர்களுக்கு லண்டனில் இருந்து ஜனாதிபதி விடுக்கும் அழைப்பு!

தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கில் காணப்படும் காணிப்பிரச்சினை, காணாமற்போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரித்தானியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் இடையில் நேற்று (19) பிற்பகல் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பிரித்தானிய வாழ் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

புதிய அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு பிரித்தானிய வாழ் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பிரித்தானியாவின் புதிய மன்னரின் தலைமையில் பொதுநலவாய நாடு என்ற வகையில், எதிர்கால சவால்களை இலங்கை வெற்றிகொள்ளும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இங்கு மேலும் குறிப்பிட்ட ஜனாதிபதி,

எதிர்காலத்தில் நாம் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து பொதுநலவாய செயலாளர் நாயகத்துடன் கலந்துரையாடவுள்ளோம். பொதுநலவாய அமைப்பு வலுவடைந்து முன்னேறிச் செல்ல வேண்டும். அதேபோன்று இங்கிலாந்திற்கு உள்ள பிரச்சனைகளை அவர்கள் வெற்றிகரமாக தீர்த்துக் கொள்வார்கள். இங்கிலாந்து எங்களுடன் நீண்டகால நட்பு கொண்டுள்ளது. எமது நாடு ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியின் கீழ் இருந்தபோதும், சுதந்திர நாடாக நாம் இங்கிலாந்துடன் சிறந்த உறவுகளை பேணி வருகிறோம். எங்கள் உறவு நீண்ட காலமாக தொடர்கிறது. இங்கிலாந்துடன் உடன்படும் சந்தர்ப்பங்களைப் போன்றே, உடன்படாத சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

ஆட்சியில் இருப்பது தொழிற்கட்சி அல்லது கன்சர்வேடிவ் கட்சி அல்லது கூட்டணியென எதுவாக இருந்தாலும், நாங்கள் இங்கிலாந்துடனான எமது உறவை தொடர்ந்து பேணவே விரும்புகிறோம். எமது நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பது இரகசியமல்ல. இந்தப் பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. IMF உடனான அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளோம். நாம் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் தனியார் கடன் வழங்குநர்களுடனும் பேச்சு நடத்த வேண்டும். நாம் பெற்றுள்ள கடன்களையும் அடைக்க வேண்டும். கடனை அடைப்பதற்கு இன்றிலிருந்து 25 ஆண்டுகள் வரை செல்லும். அதாவது 2048 இல், இலங்கை சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இலங்கை சுபீட்சமான நாடாக உருவாக முடியும்.

அச்சமயத்தில் நம்மில் பலர் உயிருடன் இருக்கமாட்டோம். ஆனால் அதற்கு பங்களித்தவர்களாக இருப்போம். அரசியல் செயற்பாடுகளில் இளைய தலைமுறையினரின் கருத்துக்களை எப்படி உள்வாங்குவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு ஜனநாயகம் வேண்டும் என்றால் நிலையான ஆட்சி, ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன இருக்க வேண்டும். வீடுகளை எரிப்பதா அல்லது அலுவலகங்களைக் கைப்பற்றுவதா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. அது ஜனநாயகம் அல்ல. ஜனநாயகம் என்பது சட்டத்தின் ஆட்சியின் கீழ் செயல்படுவதாகும்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சில தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். நாம் அவர்களின் கருத்துக்களை கண்காணிப்புக் குழுக்களில் சேர்த்துள்ளோம். பாராளுமன்றத்தில் 19 கண்காணிப்புக் குழுக்கள் உள்ளன. அவற்றில் ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க இருக்கிறோம். வேறு எந்த நாடும் அவ்வாறு செய்தது கிடையாது. கண்காணிப்புக் குழுவால் அனுப்பப்படும் எந்த அறிக்கைக்களுடனும் மேலதிக ஆவணமாக இளைஞர்களின் கருத்துக்களை சமர்ப்பிக்கலாம். எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அவர்களின் தேவைகளின் பிரகாரம் நாட்டை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அவர்களை இணைத்துக் கொள்ளக் கூடிய பல்வேறு வழிகளைக் கண்டறிய வேண்டும். கரு ஜயசூரிய மற்றும் விக்டர் ஐவன் ஆகியோர் கிராம சேவகர் மட்டத்தில் மக்கள் சபைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கில் காணப்படும் காணிப்பிரச்சினை, காணாமற்போனவர்கள் தொடர்பான பிரச்சினை, அவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை என்பவற்றுக்கு தீர்வு வழங்க வேண்டும். அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகளைக் கவனிக்க வேண்டும். 2018ஆம் ஆண்டு அரசியலமைப்பை திருத்த நாம் நடவடிக்கை எடுத்தபோது வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள ஏழு முதலமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவரும் யோசனைகளை முன்வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர்களும் அதற்கு உடன்பட்டுள்ளதால் எமக்கு அதனை தொடர முடியும். அதனை நிறைவேற்ற முடியும் என்றும் நம்புகிறேன்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து வளமான தேசமாக எமது நாட்டை மாற்ற வேண்டும். இங்கே வாழ்வதால் நீங்கள் வெற்றி அடைந்திருப்பீர்கள். இங்கு வாழும் சுமார் 500,000 இலங்கையர்கள், தங்களை முதல் அல்லது இரண்டாம் தலைமுறை இலங்கையர்களாக அடையாளப்படுத்துகின்றனர். வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், புலம்பெயர் மக்களாக அழைக்கப்படுகின்றனர். புலம்பெயர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான பணி முன்னெடுக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு அதைச் செயல்படுத்தி வருகிறது. அது ஜனாதிபதியின் அலுவலகத்தின் கீழ் இருக்கும். சில காலங்களின் பின்னர் அது வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும். ஆனால் இந்த அலுவலகம் வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் அனைவரும் இதில் கைகோர்க்க வேண்டும். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்ய முடியும். உங்களில் சிலருக்கு தெற்கு அல்லது கிழக்கில் தொடர்புகள் இருக்கலாம். அவர்களுக்கு உதவியளிக்க விரும்பலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. உங்களால் முடிந்த விதத்தில் இலங்கைக்கு உதவுங்கள்’’ என்று ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவன் விஜேவர்தன, முதற் பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized