அரசாங்கத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகுமாறு கோரியும் அடக்குமுறைகளை நிறுத்துமாறு வலியுறுத்தியும் காலி சட்டத்தரணிகள் சங்கம் காலி நீதிமன்ற வளாகத்திலிருந்து கோட்டை வரை எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்திருந்தது.

காலி கோட்டை வளாகத்தில் சட்டத்தரணிகளை தடுத்து நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

காலி கோட்டை வளாகத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் காரணமாக குறித்த வளாகத்திற்குள் பிரவேசிக்க சந்தர்ப்பமளிக்க முடியாது என பொலிஸார் இதன்போது அறிவித்தனர்.

தமது போராட்டத்தை நிறுத்துவதற்கு பொலிஸாருக்குள்ள சட்ட ரீதியான அதிகாரம் என்னவென இதன்போது சட்டத்தரணிகள் கேள்வியெழுப்பினர்.

காலி மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகரும் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்ததுடன், கலகத்தடுப்பு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலிருந்து காலி கோட்டையை பார்வையிடுவதற்கு இன்று எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

சட்டத்தரணிகள் காலி நகரில் கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், இளைஞர்கள் சிலரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து, சட்டத்தரணிகள் தொடர்ந்தும் காலி நகரில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அடக்குமுறை அரசாங்கத்தை விரட்டியடிப்போம் எனும் தொனிப்பொருளில் சட்டத்தரணிகள் கொழும்பிலும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டத்தரணிகள் புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதி வளாகத்தில் இன்று காலை சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் பேரணியொன்றை முன்னெடுத்து உலக வர்த்தக மைய வீதி ஊடாக இலங்கை வங்கி வீதியை அடைந்தனர்.

இதன்போது, நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொள்வதற்காக பொலிஸாரின் வாகனங்கள் தயார் நிலையில் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

Posted in Uncategorized

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பரிந்துரைகள் முஸ்லீம்களின் உரிமைகளைப் பறித்துள்ளதாக குற்றச்சாட்டு

இலங்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் இறுதி அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், நேற்று முன்தினம் (29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், தமது செயலணியின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையினை கையளித்திருந்தார்.

எட்டு அத்தியாயங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் 43 பரிந்துரைகள் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்தே ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி உருவாக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, ‘அரசப் பணியில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களுக்கு, அவர்களின் கணவரை இழந்தால் வழங்கப்படும் ‘இத்தா’ காலத்துக்குரிய 4 மாதங்கள் 10 நாட்களைக் கொண்ட விடுமுறை இல்லாமலாக்கப்பட வேண்டும்’ எனவும் – ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்தார் மேர்வின் சில்வா!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

இன்று காலை அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனது கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே சுதந்திரக் கட்சியில் உறுப்பினராக இருந்த மேர்வின் சில்வா 2015 காலப்பகுதியில் அதில் இருந்து விலகியிருந்தார்.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டதுடன், தனிக் கட்சியொன்றையும் ஆரம்பித்தார்.

இவ்வாறான நிலைமையில் அவர் மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் காத்திருந்த போது பின்னால் வந்திருந்த இரு நபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காயங்களுக்குள்ளாகியுள்ள அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்ட வேண்டும் என்பது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செயற்படாமை தொடர்பிலும் அண்மையில் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இது திட்டமிட்டு இடம்பெற்ற தாக்குதலாக இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் தெரிவித்தார்.(

Posted in Uncategorized

ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய மகாநாயக்க தேரர்கள்!

அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மீண்டும் அழைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது ஜனாதிபதி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் காண வேண்டிய பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமஞ்ஞ மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மூலம் மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் – ஜப்பான்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை ஜப்பானிடமும் உதவியை கோரியுள்ளது. ஆனால் தற்போதைய சூழலில் உதவ முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று சந்தித்தபோது இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எனவே, ஜப்பான் இந்த நேரத்தில் நாட்டுக்கு உதவாது என்றும் அவர் இதன்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஜப்பான் அதை பின்னர் பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அமைதியான போராட்டங்களை அடக்குவதற்கு காவல்துறை, ஆயுதபடையினரை பயன்படுத்த கூடாது-BASL வலியுறுத்தல்

அமைதியான போராட்டங்கள் மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளை பயன்படுத்தக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை   ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினரை நேற்று (ஜூன் 29) காலி முகத்திடல் பகுதியில் இருந்து காவற்துறை மற்றும் இராணுவத்தினரால் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை BASL வெளியிடப்பட்டுள்ளது.

அதில் “காலி  முகத்திடல் பொது பகுதி என்பதனால்  அங்கு கூடும்  போராட்டக்காரர்களை கலைக்க எந்த சட்டபூர்வமான காரணமும் இல்லை. மக்கள் தங்கள் சுதந்திரத்தை பயன்படுத்த அனுமதிப்பதன் முக்கியத்துவத்தை   தொடர்ந்து நினைவூட்டுகிறோம். கருத்து மற்றும் கருத்து வெளிப்பாட்டின் உரிமை உட்பட எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை நசுக்குவது நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு தீர்வாகாது, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் சொல்லொணா இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை-மாணவர்களுக்காக 1000 மெட்ரிக் தொன் அரிசியை கல்வி அமைச்சுக்கு வழங்கியது சீனா

இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்காக 1000 மெட்ரிக் தொன் அரிசியை கல்வி அமைச்சுக்கு சீனா வழங்கியுள்ளது.

7900 பாடசாலைகளின் 11 இலட்சம் மாணவர்களுக்கு 6 மாத காலத்திற்கு உணவு வழங்குவதற்கு சீன அரசு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கான மேலும் இரண்டு தொகுதி அரிசி எதிர்வரும் இரண்டு வாரங்களில் கிடைக்கவுள்ளது.

யுத்த காலத்தில் கூட இவ்வாறான பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்ளவில்லை

இந்த அரசாங்கம் எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது. யுத்த காலத்தில் கூட இவ்வாறான பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்ளவில்லை. ஆனால் இன்று எரிபொருள், பசளை, உணவு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றோம் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் கிளிநொச்சியில் இடம்பெற்ற கவனயூர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

1932 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாதாந்தம் 30ம் திகதி கவனயூர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினமும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்றைய போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையு்ம, கோரிக்கைகளையும் உள்ளடக்கிய பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

இன்று 1932 நாட்களாக தீர்வின்றி போராடி வருகின்றோம். இந்த நிலையில் எமது தாய்மார் அன்றாட உணவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலை தொடராது எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும்.எமது பிள்ளைகளை காணாமல் செய்த கோட்டாவின் அரசு இன்று எமக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடியை கொடுக்கின்றது. இவ்வாறான நிலையில் சர்வதேசம் தலையீடு செய்து எம்மையும், எமது பிள்ளைகளையும் மீட்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கான சங்க அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் முன்னெடுக்கப்பட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

கடும் பொருளாதார நெருக்கடி – வவுனியாவில் இருந்து நான்கு பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை இலங்கை தமிழர்கள் 96 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.

இலங்கை தமிழர்களை மீட்ட மரைன் பொலிஸ் ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணைக்கு பின்னர் 4 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.(