இந்தியாவை நாடும் தமிழ் கட்சிகளின் முடிவு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு !

இலங்கையின் மீது தேவையற்ற வகையில் ஆதிக்கம் செலுத்த எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் கோருவதற்கான எழுத்து மூலமான வரைவினை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரிடம் கேள்வியெழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு சமூகத்திற்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க உரிமை உள்ளது என்றும் போராட்டம் நடத்துவது என்பது ஜனநாயக உரிமை, அதை அரசாங்கம் மதிக்கிறது என கூறினார்.

அத்தோடு இலங்கை ஒரு சர்வாதிகார நாடு அல்ல என தெரிவித்த அவர் இறையாண்மையும் சுதந்திரமும் கொண்ட நாடு என்பதனால் வேறு நாடுகளினால் இங்கு ஆதிக்கம் செலுத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் என்பதோடு பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் ஆரோக்கியமான உறவு காணப்படுவதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கு, மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டம் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது

வரலாற்றில் முதல் தடவையாக மிக முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு கிழக்கு, மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டம் சம்பந்தன் தலைமையில் இன்று செவ்வாய் கிழமை(21/12/2021) காலை 11.00 மணிக்கு குளோபல் டவர் ஹோட்டலில் ரெலோவின் முன்னெடுப்பில் சிறப்புடன் ஆரம்பமாகியுள்ளது.

நவம்பர் 2 திண்ணையில் நடந்த சந்திப்பு மற்றும் கொழும்பில் குளோபல் டவர் ஹோட்டலில் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவும் இக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அரசியல் அமைப்பில் உள்ள 13 வது திருத்தத்தை முழுதாக நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்கள் விரைவில் நடாத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்த இந்திய அரசிடம் கோரிக்கை சமர்ப்பிக்கும் வரைபை இறுதி செய்யும் முயற்சியில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

நிபந்தனையின் அடிப்படையிலேயே 6.7 மில்லியன் டொலரை சீனாவுக்கு வழங்குகிறோம் – அரசாங்கம்

நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமையவே சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலரை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு இலங்கைக்கு மீண்டும் உரிய தரத்திலான உரத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே குறித்த தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்ததாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நாட்டில் பெரும் நெருக்கடிகளை மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் யாருடைய தவறின் காரணமாக சீன உரக்கப்பலுக்கு 6.7 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டி ஏற்பட்டது? என்று நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கேள்வியெழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமையவே சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலரை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அமைய சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட தெளிவுபடுத்தல் மற்றும் வழிகாட்டலுக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் இரு தரப்பினரதும் நிலைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. இலங்கையின் தரத்திற்கு ஏற்ப மீண்டும் உரத்தை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே 6.7 மில்லியன் டொலரை செலுத்த தீர்மானிக்கப்பட்டது.

குறித்த உர நிறுவனத்தினால் ஏற்கனவே 5 மில்லியன் டொலர் பிணைமுறி வைப்பிடப்பட்டுள்ளது. அந்த பிணைமுறி விடுவிக்கப்படவில்லை.

இலங்கைக்கு மீண்டும் உரிய தரத்துடனான உரம் வழங்கப்பட்ட பின்னரே அந்த தொகை விடுவிக்கப்படும். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமையவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

எனவே எதிர்காலத்தில் உரிய தரத்துடனான உரம் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கின்றோம். அதுவரையில் உர நிறுவனத்தினால் வைப்பிடப்பட்ட 5 மில்லியன் டொலர் வைப்பிலிருக்கும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

காரைநகர் பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் 2வது முறையும் தோல்வி

யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டது.

காரைநகர் பிரதேச சபை அமர்வு இன்று (21) தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையில் இடம்பெற்றது.

11 உறுப்பினர்களைக்கொண்ட காரைநகர் பிரதேச சபையில், குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு சுயேட்சை குழுவின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 2 உறுப்பினர்கள் என 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள அதேவேளை,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினர் என 6 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

அதனடிப்படையில், வரவு செலவுத் திட்டம் 1 மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தடவைகள் காரைநகர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால், தவிசாளரும் தனது பதவியை இழந்துள்ளார்.

இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த காரைநகர் பிரதேச சபையின் ஆட்சியை அப்போதைய தவிசாளர் உயிரிழந்ததால், கடந்த மாதம் 10 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உதவியுடன் சுயேட்சைக் குழு வசமானது.

பின்னர் புதிய தவிசாளரால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 8 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

வரவு செலவுத் திட்டம் தேற்கடிக்கப்பட்டமையினால், திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக இலங்கையை மாற்றுவதற்கு உதவி

இலங்கையை பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக மாற்றுவதற்கு உதவுவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி கெரன் அன்ட்ரூஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்புகளைப் படிக்க விரும்பும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பொருத்தமான பாடநெறிகளின் ஆரம்ப கட்டத்தை இலங்கையில் தொடர்வதற்குத் தேவையான கல்வி நிறுவனங்களை இலங்கையில் நிறுவுவதன் மூலம் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக அன்ட்ரூஸ் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 12 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ஆகும்.

இலங்கையில் தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய உற்பத்திகளை இலங்கைக்கு கொண்டுவந்து பெறுமதி சேர்த்து, மீள் ஏற்றுமதி செய்வதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக கெரன் அன்ட்ரூஸ் தெரிவித்தார்.

பசுமை விவசாயம் தொடர்பான இலங்கையின் கொள்கையைப் பாராட்டிய அமைச்சர், அவுஸ்திரேலியாவும் நிலைபேறான விவசாயத்தில் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2022ஆம் ஆண்டில், 75 வருடங்கள் நிறைவடைகின்றன. அந்த நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கைகளை அன்ட்ரூஸ் பாராட்டினார்.

11.7 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் உதவியை இலங்கையில் கொவிட் தடுப்புச் செயல்முறைக்கு வழங்கியதை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, மனித கடத்தலை நிறுத்துவதற்கு அப்போதைய அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிசனுடன் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. அவுஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமராக ஸ்கொட் மொரிசன் செயற்படுவதையிட்டு தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த ஜனாதிபதி, போதைப்பொருள் வியாபாரம், கடற்கொள்ளையர்களின் செயற்பாடுகள் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான வலுவான பொறிமுறையை இரு நாடுகளும் மேலும் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடலின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான பணிகளுக்கு தனது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும், பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் ஆண்ட்ரூஸ் கூறினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு புலம்பெயர் மக்களுடன் புரிந்துணர்வுடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக ஜுலி சங் : அங்கீகரித்தது அமெரிக்க செனெட் சபை

இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக ஜுலி சங்கை நியமிப்பதற்கு ஜனாதிபதி ஜோபைடனால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அமெரிக்க செனெட் சபை அங்கீகரித்துள்ளது.

ஜோ பைடனால் பரிந்துரை செய்யப்பட்ட இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

ஜுலி சங் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தில் மேற்கு ஹெமிஸ்பியர் விவகாரப் பணியகத்தின் பதில் உதவிச்செயலாளராகப் பணியாற்றியிருப்பதுடன் இராஜாங்கத்திணைக்களத்தில் ஜப்பானிய விவகார அலுவலகத்தின் பணிப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் கம்போடியாவின் ஃபோம் பென்னில் அமைந்துள்ள அமெரிக்கத்தூதரக விவகாரங்களுக்கான பிரதி தலைவராகவும் தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள அமெரிக்கத்தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் ஜுலி சங் செயற்பட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்கத்தூதரகங்களிலும் சீனாவிலுள்ள அமெரிக்க கொன்சியூலர் அலுவலகத்திலும் அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

ஜுலி சாங் கலிபோர்னியா – சான்டியேகோ பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டத்தையும் சர்வதேச மற்றும் பொது விவகாரங்களுக்கான கொலம்பிய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். காங்கேசன்துறை குமார கோவில் பிள்ளையார் சிலை மாயம்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை குமார கோவிலில் இருந்த பிள்ளையார் சிலையை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்தினுள் விகாரை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறை குமார கோவில் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காலப்பகுதியில் கோயில் வளாகத்தினுள் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து , குமார கோவில் புனரமைக்கப்பட்டு , ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த 09ஆம் திகதி இரவு ஆலயத்தில் இருந்த விநாயகர் சிலை இருப்பிடத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க நகர்வுகளில் இலங்கையின் முயற்சிகள் குறித்து அமெரிக்கா கேள்வி

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை இலக்காக கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் மற்றும் முன்னகர்வுகள் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் இரு தரப்பு நட்புறவு வேலைத்திட்டங்கள் குறித்தும் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க தெளிவுபடுத்தியுள்ளர்.

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்கவிற்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த வியாழக்கிழமை, இணையவழி கலந்துரையாடலாக இந்த உரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில், இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை, மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னகர்வுகள் குறித்து இலங்கையிடம் கேட்டறியப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டங்கள், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையின் முன்னகர்வுகள் குறித்தும், நல்லிணக்கத்தை இலக்காக கொண்ட இலங்கையின் தற்போதைய நகர்வுகளின் முன்னேற்றம் மற்றும் அதற்கான முயற்சிகள் குறித்து உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக் கேட்டறிந்துகொண்டுள்ளார்.

அதேபோல் நாட்டின் மனித உரிமைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக்கும் அவரது குழுவினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டங்கள், தற்போதுள்ள கொவிட் நெருக்கடி நிலைமைகளில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நிதி நெருக்கடி நிலைமைகள் குறித்து இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, நல்லிணக்கத்தையும் மனித உரிமைகளை பலப்படுத்தும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளின் முன்னேற்றகரமான சில வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சிகள், பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான நட்புறவை முன்னெடுத்து செல்வது குறித்தும் அவர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் சட்டவிரோத கருக்கலைப்புக்கு முயற்சித்தபோது கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மூங்கிலாறு கிராம மக்களால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மூங்கிலாறு கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 15ஆம் திகதி குறித்த சிறுமி காணாமல்போனதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதற்கு அமைவாக நான்கு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் பின்னர், கைவிடப்பட்ட வளவு ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

குறித்த சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அறிக்கை நேற்றையதினம் வெளியாகியிருந்தது. பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இறப்பு சம்பவித்துள்ளதோடு, இரண்டுமாதம் சிறுமி கருவுற்றும் இருந்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கருத்தரித்த பின்னர் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்புக்கு முயற்சித்து அதிக இரத்த போக்கு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரியும் சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த கோரியும் உயிரிழந்த சிறுமியின் கிராமமான மூங்கிலாறு கிராமத்தின் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் என பலரும் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மூங்கிலாறு சந்தியிலிருந்து உடையார்கட்டு மகா வித்தியாலயம் வரை பேரணியாக சென்று கறுப்பு கொடிகள் மற்றும் கறுப்பு பட்டிகளை அணிந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவின் ஆதிக்கத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் – இரா.துரைரெட்ணம்

வடக்கு மற்றும் கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முன்னெடுக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என பாத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

வடகிழக்கு தமிழர்கள் இந்தியா மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை குழப்புவதற்காகவே சீனாவின் இந்த செயற்பாடு அமைவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “குறிப்பிட்ட காலமாக யாழ். குடா நாட்டிலும் வடகிழக்கிலும் முன்னெடுக்கப்படும் இராஜதந்திர செயற்பாடுகளின் அடிப்படையில் வடக்கினை சீனாவுக்கு தாரைவார்த்துவிட்டது போன்று உள்ளது. வடக்கில் சீனாவின் மேலாதிக்கம் தொடர்ந்து வருகின்றது.

இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியாக வலுவடைவதற்காக யாழ். குடாவில் இந்தியாவுக்கு ஆபத்தாக வரக்கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்கின்ற சந்தேகம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளன.

கடந்தவாரம்கூட சீனாவின் தூதுவர்கள் யாழ். குடாவில் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கேந்திர நிலையத்திற்கு சென்ற விடயம் என்பது இலங்கை ஊடாக இந்தியாவுக்கு செய்தி ஏதும் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இலங்கை அரசாங்கம் அயல்நாடுகளுக்கு அச்சுறுத்தலையும் பாதுகாப்பு நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடிய இராஜதந்திர செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கின்றதா என்ற சந்தேகம் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு இறையான்மையுள்ளது. வடகிழக்கு பூர்வீகமாக தமிழர்கள் வாழும் பிரதேசம். தனியான கலைகலாசார விழுமியங்களை கொண்ட பகுதி. இந்த கலை கலாசார விழுமியங்களுடன் இந்தியா அங்குள்ள தமிழ் நாட்டுடன் உள்ள உறவு, தமிழர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தக்கூடிய செயற்பாடுகள் என பல விடயங்களில் வடகிழக்கு தமிழர்கள் இந்தியா மீது கடந்த காலத்தில் கரிசனை காட்டியுள்ளார்கள், எதிர்காலத்தில் காட்டுவார்கள், காட்டக்கூடிய சூழ்நிலையுள்ளது.

இந்த சூழ்நிலையினை குழப்புவதற்காக சீனாவின் ஆதிக்கத்தை கொண்டுவருவதை இலங்கை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும். அதுவே ஆரோக்கியமான செயற்பாடு.

இலங்கை அரசாங்கம் தனது பொருளாதார நலனுக்காக வடகிழக்கினை சீனாவுக்கு தாரைவார்த்துக்கொடுப்பது என்பதும் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடியவாறும் அயல்நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடியவாறும் இலங்கை அரசாங்கம் செயற்படுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.