புதிய அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் விரைவில் பட்டியலிடப்படும்

நாட்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக இதுவரை 35 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த விண்ணப்பங்கள் விரைவில் பட்டியலிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல்கள் முன்னெடுக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட கட்சிகளை பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நல்லூரில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம் – ரெலோ பந்தல் வசதிகள் அமைத்து கொடுத்தது

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

நல்லூரில் சூழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ளும் மக்களுக்கு மேலும் ஆறுதல் கொடுக்கும் வகையில் ரெலோ யாழ் மாவட்ட துணைப் பொறுப்பாளரும் மாநகர பிரதிமேயருமான ஈசன் அவர்கள் தலைமையில் பந்தல் வசதிகள் அமைக்கப்பட்டள்ளது (03/03/2021).அவர்களுக்கு தேவையான பாய்,தலைஉறை போன்ற பொருட்கள் ரெலோ வின் யாழ் மாவட்ட அணியினால் அன்பளிப்பு செய்யப்பட்டது, ரெலோ உறுப்பினர்களும் சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தில் இருப்பவர்களுடன் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினார்கள்.

போராட்டத்தின் கோரிக்கைகளாவன

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக சிறிலங்கா அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும்.

தமிழ் இனத்தின் மீதானா இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைது குறித்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்( ரெலோ)
யாழ் மாவட்டம்

Posted in Uncategorized

‘கருப்பு ஞாயிறு’ தின போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி அனுஷ்டிக்கப்படவுள்ள கருப்பு ஞாயிறு தின போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகளை வெளிப்படுத்தவும் தவறு செய்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கவும் அரசாங்கத்தையும் சட்ட அமுலாக்க அதிகாரிகளையும் கேட்டுக்கொள்வதாக தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7ஆம் திகதி கிறிஸ்தவ மக்களால் கருப்பு ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தியடைய முடியாது எனக்கூறி கறுப்பு ஞாயிறு தினத்தை அறிவிக்க கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயர்கள் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்கத்திற்கும் சர்வதேச நாடுகளுக்கும் தெரிவிப்பதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருப்பள்ளி பூஜைக்கு வருகைத்தரும் அனைவரையும் கருப்பு நிறத்திலான ஆடை அணிந்து வருமாறு மறைமாவட்டத்தின் பேராயர்கள் அறிவித்துள்ளார்.

மக்கள் பிரச்சினைகள் குறித்து கிழக்கு ஆளுநருடன் ஜனா,சாணக்கியன் சந்திப்பு!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரெலோ கட்சியின் பொருளாளருமான கோவிந்தன் கருணாகரனும்,தமிழரசுக் கட்சியின் இரா.சாணக்கியனும், திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநரான அனுராதா யாஹம்பத்தினை இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) சந்தித்து பேசியிருந்தனர்.

இதன்போது பல விடயங்கள் கிழக்கு மாகாண மக்கள் நலன் சார்பாகவும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்ட முக்கிய பிரச்சனைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவற்றில் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உரிய வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும், தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதிலும் குறிப்பாக பல நாட்களாக இழுபறியில் உள்ள DCC மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தினை நடத்தி மக்களுக்கு உரிய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை பெற்றுக் கொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டதற்கமைய, சட்டவிரோத மண் அகழ்வு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இவ்வளவு காலமும் அமைக்கப்படாமல் இழுபறியில் இருக்கும் விசேட குழு ஒன்றை உடனடியாக அமைத்து பிரச்சனைக்குரிய தீர்வு காணுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சில சட்ட விரோத செயல்பாடுகள் செயல்கள் என்பவற்றை தடுப்பதற்கான சில கலந்துரையாடல்களும் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது

இரணைதீவுக்கு செல்ல ஊடகவிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

இரணைதீவுக்கு பொதுமக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்றபோது, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணை மாதா நகர் பகுதியில் இன்று(03) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட கோட்ட முதல்வர், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், மெசிடோ நிறுவனத்தினர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர், பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். அத்துடன் அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தையடுத்து இரணை மாதா நகர் பகுதியில் இருந்து படகுMமூலம் இரணைதீவுக்குப் பொதுமக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்றபோது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டக் குழுவினரால் பூநகரிப் பிரதேச செயலாளர், யாழ். மறைமாவட்ட ஆயர், யாழ். மனித உரிமை ஆணைக்குழுவினருக்கு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஜனாசா நல்லடக்கம் முஸ்லிம் தலைவர்களுடன் பேசியே தீர்மானிக்க வேண்டும் அரசின் தான்தோன்றித்தனமான செயற்பாடு ஏற்புடையதல்ல ரெலோ கண்டனம்

முஸ்லிம் மக்களினுடைய ஜனாசா நல்லடக்கம் பற்றிய விடயத்தை தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய தாகவே அரசாங்கம் ஆக்கி வருவது கண்டனத்துக்குரியது. அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவது போல பாசாங்கு காட்டி அதைத் தொடர்ந்தும் நிறைவேற்றாது கேள்விக்குறியாக வைத்திருக்கின்ற அரசின் நிலைப்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

அரசாங்கம் தாங்கள் நினைத்த இடங்களில் தங்கள் வசதிக்கு ஏற்ப முஸ்லீம் மக்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முற்படுவது அடிப்படை மனித உரிமை மீறிய செயலாகும். இரணை தீவிலே நல்லடக்கம் செய்ய முற்படுவதும் இதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

மாறாக முஸ்லிம் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி ஜனாஸாக்களை எங்கு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை எட்டுவது தான் அந்த மக்களுடைய கோரிக்கையை கௌரவமான முறையில் நிறைவேற்றுவதாக அமையும்.

ஏற்கனவே மன்னாரில் நல்லடக்கம் செய்ய முற்பட்டு அது வெற்றி அளிக்காமல் போன நிலைமையிலே மீண்டும் இரணைத்தீவை தேர்ந்தெடுத்திருப்பது இன முறுகலை தோற்றுவிக்கின்ற நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம். மேலும் இது சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் அசெளகரியங்களை ஏற்படுத்தும் நடவடிக்கை. ஒரு முஸ்லீம் இறந்து 24 மணித்தியாலத்திற்குள் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களுடைய பிரதான கோரிக்கையாக அமைந்திருக்கிறது. பொது இடங்களை தேர்ந்தெடுத்து அங்கு நல்லடக்கம் செய்ய முற்படுகின்ற பொழுது நாட்கணக்கில் அல்லது வாரக்கணக்கில் இழுத்தடிப்பை ஏற்படுத்துவதோடு அந்த குடும்பங்கள் அந்த இடங்களுக்குச் சென்று தமது முறையை பின்பற்றுவது இலகுவான காரியமாக இருக்கப்போவதில்லை. இப்படியான இழுத்தடிப்பு செய்வதையும் மற்றவர் கலாச்சார முறைகளை அரசே தீர்மானிப்பதை தவிர்த்து குறித்த இனத் தலைவர்களோடு பேச்சுவார்த்தையை நடத்தி நாடு முழுவதும் ஜனாஸா நல்லடகத்துக்கான பொது விதிமுறையை கையாள்வதன் மூலம் தான் இதற்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதோடு அந்த மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமையும். தவிர இப்படியான நடவடிக்கைகளால் முடிவுகள் எட்டப்படாது. ஆகவே அரசாங்கம் பாசாங்கு செய்வதைவிட சரியான தீர்வினை முஸ்லீம் தலைவர்களுடன் கலந்தாலோசித்து முன்னெடுப்பதே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கொடுக்கும். இதற்கு அரசு ஆவன செய்ய செய்ய வேண்டும்.

சுரேந்திரன்- பேச்சாளர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (த.தே.கூ) – ஊடக வாரியம்

Posted in Uncategorized

முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறவே சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதித்தது – ரெலோ எம்.பி ஜனா

முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் மக்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் பொருளாளருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “முஸ்லிம் மக்களது இறந்த உடல்களை புதைப்பதா அல்லது எரிப்பதா என்கின்ற நீண்ட நாள் விவாதங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன.

உலகத்தில் 190இற்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனாவால் இறந்த மக்களின் உடலை புதைக்கும் நிலையில், இலங்கையில்கூட இது தொடர்பாக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழு எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் என அறிக்கை கொடுத்தும் இலங்கை அரசு புதைக்க விடாமல் இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் புதைப்பதற்கு அனுமதி கொடுத்திருக்கின்றார்கள் என்றால் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்று வரவுள்ள நிலையில், முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது.

ஏனைய போராட்டங்களுக்கோ, ஆர்ப்பாட்டங்களுக்கோ அல்லது பாகிஸ்தான் பிரதமர் இங்கு வந்து சென்றதற்காகவோ அல்ல.

வர்த்தமானி அறிவித்தலைக்கூட இரத்து செய்யக்கூடிய ஒரு நாடாகதான் இலங்கை இருக்கிறது. ஏனெனில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்ட வர்த்தமானிகூட 4 மணித்தியாலங்களில் ஜனாதிபதியின் உத்தரவில் இரத்து செய்யப்பட்ட வரலாறும் இருக்கின்றது.

அதேபோல் சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியும் தேவையேற்பட்டால் இரத்து செய்யப்படலாம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய மைதான அபிவிருத்தியை கட்சி நிகழ்வாக்க முயற்சி ரெலோ வலி கிழக்கு தவிசாளர் நிரோஸ் எதிர்ப்பு

தேசிய மைதான அபிவிருத்தியை கட்சி நிகழ்வாக்க முயற்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலி கிழக்கு தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஸ் எதிர்ப்பு.

அரசாங்கத்தின் 332 கிராமிய விளையாட்டு மைதானங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தவிசாளர் தியாகராஜா நிரோஸ் உள்ளிட்ட பிரதேச சபையின் உறுப்பினர்கள் சென்ற நிலையில், நிகழ்வினை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் சார்ந்தவர்கள் அரசின் திட்டமொன்றை கட்சி நிகழ்வாக மேற்கொண்டமையினால் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது.

அரசினால் 332 கிரமப்புற மைதானங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முகமாக செயற்றிட்டத்தை நாடளாவிய ரீதியில் இன்று (02.03.2021) காலை 10.25 மணிக்கு ஆரம்பிக்குமாறு விளையாட்டு உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சினால் பிரதேச சபைத் தவிசாளருக்குக் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

1.5 மில்லியனில் பிரதேச சபை எல்லைகளுக்குள் நாடளாவிய ரீதியில் அபிருத்தி முன்னெடுக்கப்படவுள்ளது. இச் செயற்றிட்டத்திற்காக அமைச்சினால் கோரப்பட்டதற்கு அமைய புத்தூர் வளர்மதி விளையாட்டுக்கழக மைதானத்தினது மதிப்பீடு வலிகாமமம் கிழக்கு பிரதேச சபையினால் வழங்கப்பட்டது.

இந் நிலையில் அமைச்சின் அறிவிப்புக்கும்; நாட்டின் தேசிய நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் யாழில் வேவ்வேறு நேரங்களில் அடிக்கலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் நாட்டி வைப்பார் எனக் குறிப்பிட்டு பிரதேச செயலகங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இதனிடையே பிரதேச சபையின் தவிசாளர், தனக்கு அமைச்சில் இருந்து நாடளாவிய செயற்றிட்டத்தினை ஆரம்பிக்க அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் குறுகிய அழைப்பு என்பதனால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், அரச அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பியதுடன் விளையாட்டுக் கழகத்திற்கும் தெரியப்படுத்தி செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைக்க முயற்சித்தார்.

இதற்காக காலையில் பிரதேச சபை தவிசாளர் தலைமையில் உறுப்பினர்கள் சென்றபோது, அங்கிருந்த மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் இணைப்பாளர், தன்னையே மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பெயர்ப்பலகையினைத் திறந்து வைக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் பின்னர் வருகை தந்து அடிக்கல்லை நாட்டுவார் எனவும் தெரிவித்தார்.

இதற்கு தவிசாளர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படவேண்டும் என அரசினால் தீர்மானிக்கப்பட்ட விடயம் ஒன்றை வேறு எவரும் கையில் எடுக்க முடியாது. இச் செயற்றிட்டம் அமைச்சினால் ஒவ்வொரு பிரதேச சபைகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

நாட்டில் தெற்கில் ஒரு அபிவிருத்திக் கொள்கையும் வடக்கில் ஒரு கட்சிசார் அபிவிருத்திக்கொள்கையும் இருக்க முடியாது.

மக்களின் வரிப்பணம். சபை ஒன்றிற்கான செயற்பாட்டையாரும் செய்யட்டும் என நான் பார்த்திருக்க முடியாது. மக்களுக்கும் உறுப்பினருக்கும் நான் பொறுப்புச்சொல்ல வேண்டும். பிரதேச சபைகளே மேற்படி நிகழ்வினை ஒருங்கிணைத்து செயற்படுத்தும் தகுதிவாய்ந்த நிறுவனம்.

வடக்கில் மட்டும் பிரிதொரு நடைமுறை பின்பற்றப்படமுடியாது என்றார். நீங்கள் சபையின் அனுமதியின்றி காட்சிப் பதாகை நாட்டுவதற்கு முடியாது. நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம். அப்போது இதில் இருக்கின்ற அரச உத்தியோகத்தரும் சாட்சியாக அமைவர் எனத் தெரிவித்து தவிசாளர் தரப்பினர் சென்றனர்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை ’குப்பியாவத்த மயானத்தில் அடக்கலாம்’ – மரிக்கார்

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான இடங்களைத் தேடி அலைய வேண்டாமெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தெமட்டகொட- குப்பியாவத்த மயானத்தைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

‘கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பிலான இழுபறி தொடருமாயின், அதற்கான முழுப்பொறுப்பையும் சுகாதார சேவைகள் பணிப்பாளரே ஏற்கவேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

‘கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யலாமென, வர்த்தமானியைத் திருத்தி, சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ளார். எனினும், உரிய இடமில்லையெனக் கூறி, சுகாதார பணிப்பாளர், காலத்தைக் கடத்தி வருகின்றார்’ என்றும் மரிக்கார் எம்.பி குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்த அவர்,
சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பிலான பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கை, பேராசிரியை ஜெனிபர் பெரேராவால் டிசெம்பர் 28ஆம் திகதி, சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. அதனடிப்படையில், உரிய இடத்தைத் தேடாமல், கடந்த இரண்டு மாதங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் எனவும் கேள்வியெழுப்பினார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவால் தெமட்டகொட- குப்பியாவத்த மயானம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அங்கு 2.5 அடி ஆழத்திலேயே நிலக்கீழ் நீர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த மயானம், மருதானை பள்ளிவாசலுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்த அவர், ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக, அந்த மயானத்தை வழங்க விருப்பம் தெரிவித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளருக்குக் கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார்.

பேராசிரியை ஜெனிபர் பெரேராவின் அறிக்கையை, இரண்டு மாதங்களாக, மறைத்து வைத்தவர்கள், சடலங்களைப் பலவந்தமாகப் புதைத்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்த அவர், அடக்கம் செய்யும் விவகாரத்தில் இழுபறி தொடர்ந்தால், அதற்கான முழுப்பொறுப்பும் சுகாதார பணிப்பாளரையே சாரும் என்றார்.

Posted in Uncategorized

இராணுவத்தை பாதுகாக்க புதிய சட்டங்கள் தேவைப்படின் அதனையும் நிறைவேற்றுவோம் – ஜெனிவா அமர்வுகள் குறித்து அரசாங்கம் உறுதி

அப்பாவி தமிழ் இளைஞர் யுவதிகளை பலவந்தமான முறையில் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளாக்கியவர்கள் இன்று சர்வதேச அரங்கில் மனித உரிமை குறித்து வாதிடுகிறார்கள்.

ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிகொள்ளும் . இராணுவத்தினரை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டங்கள் தேவையாயின் இயற்றப்படும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் . பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை நேற்று சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய ஆரம்பமானது..கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள 38 மாணவர்கள் 40 விசேட பரீட்சை நிலையங்கள் ஊடாக பரீட்சைக்கு தோற்றியுள்ளார்கள்.

ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக் கொள்ளும். இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளரது அறிக்கை இலங்கையின் சுயாதீனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டது.

இறுதி கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு தேவையான சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை. மாறாக 2019 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஆணையாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

அப்பாவி தமிழ் இளைஞர்களை பலவந்தமான முறையில் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகளாக்கியவர்கள் இன்று சர்வதேச அரங்கில் மனித உரிமை பேரவை குறித்து வாதிடுகிறார்கள். இவர்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

30 வருட கால யுத்தத்தை நிறைவு செய்த இராணுவத்தினரை அரசியல் பழிவாங்களுக்குட்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது .

இராணுவத்தினரை பாதுகாக்க தற்போதை சட்டம் போதுமானதாக அமையாவிடின் புதிதாக சட்டத்தை உருவாக்குவோம். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு நாட்டு மக்கள் இவ்விடயத்தை கருத்திற் கொண்டு ஆணையை வழங்கியுள்ளார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக இலங்கை 70 வருட காரமாக இணக்கமாக செயற்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை முழுமையாக செயற்படுத்தியுள்ளோம். ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு எதிராக செயற்படுகிறார்.ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக் கொள்ளும் என்றார்.