மலையக மக்களுடன் இந்திய அரசாங்கம் எந்நேரமும் இருக்கும்- இந்திய நிதி அமைச்சர்

மலையக மக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற இந்திய அரசாங்கம் தயாராகவுள்ளதென நாம் 200 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு “நாம்-200” நிகழ்ச்சி  கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றுகையிலேயே இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இங்கு உரையாற்றிய அவர்,

மலையக மக்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆசிரியர் பயிற்சி வழங்கல் செயற்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

இந்திய நிதியுதவியின் கீழ் 4ஆம் கட்டமாக 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான இணைப்புப் பாலமாக மலையகத் தமிழர்கள் திகழ்வர்கள் என இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.

மிகவும் கஷ்டமான சூழலில் பெரிய பங்களிப்பை மலையக மக்கள் வழங்கியிருக்கிறீர்கள். நாடு நலமாக இருக்க பெரும் தொண்டாற்றியிருக்கிறீர்கள்.

தேயிலை என்றாலே இலங்கை என்ற நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்கள்  தமிழ் மக்களின் வளர்ச்சியும் நல்வளர்ச்சியாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

மலையக மக்களின் கஷ்டத்தையம் கடின உழைப்பையும் புரிந்து கொண்ட  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் 10000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டத்தை இன்று ஆரம்பிக்கிறது.

உங்களுக்குக் கல்வி,சுகாதார,மருத்ததுவ உதவி முக்கியம் என்பதால் இலங்கை அரசுடன் இணைந்து சகல உதவிகளையும் வழங்க  இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

நாம் 200 நிகழ்வில், மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வமத தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அலி சப்ரி, மஹிந்த அமரவீர, பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார, லசந்த அழகியவன்ன ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், துமிந்த திசாநாயக்க, நிமல் லன்சா, எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் ராசமாணிக்கம், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, மேல் மாகாண ஆளுனர் மார்ஷல் ஒப் த எயார் ரொஷான் குணதிலக்க, கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரசாங்க அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதியுடன் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு ; பெளத்த உறவுகளை மேம்படுத்தும் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய உயர்  ஸ்தானிகர் கோபால் பக்லே உள்ளிட்டு இந்திய தூதுக்குழுவினர்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்ப பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இச் சந்திப்பு கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழ்கிழமை (2) இரவு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விற்கும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமனுக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சு வார்த்தையில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பௌத்த  உறவுகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தின் 15 மில்லியன் டொலர் அன்பளிப்புடன்  முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.

திருமலையில் ஐ. ஓ.சி.யின் எண்ணெய் குதங்களை பார்வையிட்டார் இந்திய நிதி அமைச்சர்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் திருகோணமலையில் உள்ள ஐ. ஓ.சி.யின் எண்ணெய் குதங்களை வியாழக்கிழமை (2) பார்வையிட்டனர்.

மேலும் இந்நிகழ்வில் காஸ் ஒயில் குதங்களான 1, 2,  (Gasoil tank no 11,12) ஆகியன திறந்து வைக்கப்பட்டன.

திருகோணமலையில் State bank of india புதிய கிளை திறப்பு

திருகோணமலையில் State bank of india புதிய கிளை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வங்கியில் முதல் கணக்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கியதுடன், அதற்காக passbook நிர்மலா சீதாராமன் அவர்கள் செந்தில் தொண்டமானிடம் கையளித்தார்.

இந்திய நிதியமைச்சர் திருக்கோணேஸ்வரத்திற்கு விஜயம்

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை  திருக்கோணேஸ்வரம் கோயிலில் இடம்பெற்ற  விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் குறித்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும்  பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தனி பிரதேச செயலகம் கோரி சிங்களவர் நேற்று போராட்டம்

வவுனியா, போகஸ்வெவ பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள மக்கள் நேறறு வவுனியா மாவட்ட செயலகத்தின் முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் ‘ஒரே கிராமம் ஒரே நாடு’ கலந்துரையாடல் நடந்தபோது, இந்த போராட்டம் இடம்பெற்றது. வடக்கு சிங்கள மக்கள் ஒன்றியம் என குறிப்பிட்ட பதாதைகளை தாங்கியவாறு மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு தனியான பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும், கமநலசேவைகள் நிலையம் அமைக்கப்பட வேண்டும், விவசாய நிலம் வழங்க வேண்டும், கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் 6 பேர் அழைக்கப்பட்டு, பிரதமருடன் கலந்துரையாட அனுமதிக்கப்பட்டனர்.

தென்னிலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த வழக்குகளில் தொடர்புபட்டவர்கள் உள்ளிட்டவர்கள் போகஸ்வெவவில் குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேட்டு நிலம், வயல் நிலங்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதும், இதுவரை வயல் நிலங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன், அந்த குடியேற்ற திட்டத்துக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை.

இதேவேளை, தமிழ் மக்களின் இனப் பரம்பலை சிதைக்கும் நோக்கத்துடன் இந்த விதமான குடியேற்றங்கள் இடம் பெறுவதாக தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 13 பாராளுமன்றில் பட்ஜெட் சமர்ப்பிப்பு

2024 ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகள் மீதான விவாதம், 26 நாட்களுக்கு இம்முறை நடைபெறவுள்ளது. வரவுசெலவுத்திட்ட உரை நவம்பர் 13 திங்கட்கிழமை மதியம் 12  மணிக்கு நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவினால்   நிகழ்த்தப்படும்

அதற்கு முன்னர்,  பாராளுமன்றம் நவம்பர் 7 முதல் 10 வரை கூடும் என  பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடிய போதே இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.

 வரவுசெலவுத்திட்ட விவாதம்

எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாம் மதிப்பீடு எனப்படும் ‘வரவுசெலவுத்திட்ட உரை’ பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவுள்ளது. அதன்பின்னர், நவம்பர் 14 முதல் 21 வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்ட) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், வரவுசெலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, குழுநிலை விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசெம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்ந்து 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. அதற்கமைய, 2024 நியதியாண்டுக்கான வரவு-செலவுத்திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசெம்பர் 13 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை விவாதம் இடம்பெறவுள்ளதுடன், வாக்கெடுப்பு இடம்பெறும் நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பி.ப. 6.00 மணி முதல் பி.ப. 6.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதன விவாதம் இடம்பெறும்.

யாழ்.பல்கலைக்கழக மாவீரர் நினைவுத் தூபியில் ஈகை சுடர் ஏற்றப்பட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்புரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்புரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை ஈடுபட்டனர்.

அதன்பின் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றி மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்திய நிதிஅமைச்சர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு இன்று  இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் விஜயம் செய்துள்ளார்.

திருகோணமலை விமான தளத்தில் நிர்மலா சீதாராமனை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதம செயலாளர் ரத்நாயக்க, ஆளுநர் செயலாளர் மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக  செயலாளர்  அணில் விஜயஶ்ரீ, அரச அதிபர் மற்றும் சுற்றுலா பணியக தவிசாளர் மதன் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் ஆளுநரின் ஏற்பாட்டில் நிர்மலா சீதாராமன் நாளை திருக்கோணேச்சரம்  ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதுடன், மேலும் பல முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார்.

கண்டி மல்வத்து மகாநாயக்கரை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய நிதி அமைச்சர்

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டியில் மல்வத்தை மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை இன்று புதன்கிழமை (01) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இவர் மகாநாயக்கருடனான தனது சந்திப்பின் போது இலங்கை மக்களுடனான இந்திய நட்புறவை  மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் நாளை வியாழக்கிழமை (2) இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களின் சூரிய மின்மயமாக்கலுக்கான  ஒப்பந்தத்தின் பரிமாற்றத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும் அதில் பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 107.47 கோடி ரூபாயில் 82.40 கோடி ரூபாயை இந்தியா ஒதுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாற்றப்படும் என இந்தியாவின் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான கலாசார உறவுகளையும் இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரியத்தையும் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் அங்கீகரித்தார்.

மேலும் இந்தியா வழங்கிய பொருளாதார உதவிகளுக்கு  நன்றி தெரிவித்த அவர் இலங்கையின்  பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு உதவுவதற்கு முதலில்  கைகோர்த்த நாடு இந்தியாவே ஆகும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்திய நிதியமைச்சர் கண்டியில் சியாம் பிரிவின் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதனையையும் சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் இந்திய நிதியமைச்சர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளின் தொடர்ச்சியான பாரம்பரியம் குறித்து விவாதித்தார்.

இந்தியாவின் நிதியமைச்சர் இலங்கையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களின் சூரிய மின்மயமாக்கல் திட்டம் தொடர்பாகவும் கூறினார்.

மேலும் மகாநாயக்க தேரர்கள் இந்தியாவுக்கு உதவிய விடயங்களுக்காக நன்றி தெரிவித்ததுடன் அவர்களின் ஆற்றல் தேவைகளுக்கு இது ஒரு முக்கிய நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டினார்.