தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகின்றனர்

பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கத்தின் இரட்டைவேட நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பெரிய அளவில் பிரசாரம் செய்யப்படுகின்றதே தவிர, நடைமுறையில் எதுவும் பயனுள்ளதாகத் தெரியவில்லை. சிங்கள மக்களைத் தவறாக வழிநடத்தி, தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்த நிலைமைகளில் சிறிய மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. இந்த மாற்றத்தின் பின்னரும்கூட சுய அரசியல் இலாப நோக்கிலான கபடத்தனமான அரசியல் செயற்பாடுகளுக்கு முடிவேற்பட்டதாகத் தெரியவில்லை. அந்தப் போக்கில் இருந்து பேரின அரசியல்வாதிகள் தடம் மாறுவதாகவும் தெரியவில்லை.

அரசியல் இலாபத்திற்கும் அதிகாரப் பேராசைக்கும் இனவாத வெறியூட்டி சிங்கள மக்களை உசுப்பேற்றி, அதில் அரசியல் குளிர்காய்ந்த ஆட்சியாளர்களுக்கு அரகலய – போராட்டக்காரர்கள் சரியான பாடம் புகட்டினர். பொருளதார நெருக்கடியினால் எழுந்த பிரச்சினைகளின் தாக்கத்தில் உயிர்ப்பு பெற்ற சிங்கள மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஏமாற்றத்தின் விளைவாக தன்னெழுச்சி பெற்று கொதித்தெழுந்த மக்கள் பேரலைக்கு முகம் கொடுக்க முடியாத ஜனாதிபதியும் பிரதமருமாகிய ராஜபக்ச சகோதரர்கள் பதவிகளைத் துறந்தார்கள். கோத்ட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டே ஓடித்தப்பினார்.

இந்த மக்கள் எழுச்சியின் மூலம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் பிரசார அரசியல் போக்கிலேயே சென்று கொண்டிரக்கின்றது. கடன் தொல்லையில் இருந்தும் வங்குரோத்து நிலையில் இருந்தும் நாட்டை மீட்டெடுக்கப் போவதாக சூளுரைத்து அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலில் அகலக் கால்வைத்து முனைப்பாகச் செயற்பட முற்பட்டிருக்கின்றார். அவருடைய அரசியல் அகலக்கால் வெளிப்படுத்துவதைப் போன்று பெரிய வெற்றியை ஈட்டித் தரும் என்று கூறுவதற்கில்லை.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கூட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளை ஆதரித்து வாக்களித்த அதே அரசியல்வாதிகளாகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே கூட்டப்பட்ட அதிகாரங்களைக் குறைப்பதற்கும் பின்னர் மீண்டும் அவற்றைக் கூட்டுவதற்கும் வாக்களித்திருந்தார்கள். அதே அரசியல்வாதிகளே ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் வேறு நோக்கங்களுக்காகவும் கொண்டு வரப்பட்ட 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கும் ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள்.

இது, நாட்டை ஆள்கின்ற அரசியல்வாதிகளின் அப்பட்டமான சுய அரசியல் இலாப நோக்கத்தையும் அதிகாரப் பேராசையையும் வெளிப்படுத்துவனவாகவே இருக்கின்றது. மக்களின் நலன்களை மேம்படுத்தவும் நாட்டை முன்னோக்கி முன்னேற்றிச் செல்வதற்குரிய செயற்பாடாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சூட்டோடு சூடாக அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டிருந்த தன்னெழுச்சி பெற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர்களை அதிகாரப் பிடிகொண்டு அடக்கினார். அவரது நீண்டகால ஜனாதிபதி பதவி ஆசையைப் பூர்த்தி செய்வதற்கு கோட்டாபய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருந்த போராட்டமே உந்து சக்தியாக அமைந்திருந்தது. ஆனால் அந்தப் போராட்டத்தை அதிகார பலம் கொண்டு அவர் அடக்கினார். அதன் மூலம் மக்கள் அனைவரும் தனது பிடியின் கீழ் அடங்கி இருக்க வேண்டும் என்ற அதிகார மேலாண்மையை அவர் புலப்படுத்தி இருக்கின்றார்.

பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டிருந்த எரிபொருள் பற்றாக்குறை உணவுப் பொருள் பற்றாக்குறை போன்றவற்றில் அவர் சிறு தளர்வை ஏற்படுத்தி உள்ளார். அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் பொருட்களின் விலையேற்றம், அதிகரிக்கப்பட்டுள்ள வரிச்சுமைகள், கட்டுப்பாடின்றி வீங்கிச் செல்கின்ற பணவீக்கம் என்பவற்றைக் கட்டுப்படுத்துவதில் அவர் இன்னும் வெற்றி காணவில்லை. சிறிய அளவில்கூட முன்னேற்றம் காணவில்லை.

இதற்கிடையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்ற பாரிய முக்கியத்துவம் மிக்க நடவடிக்கைகளிலும் அவர் தீவிர கவனம் செலுத்தியிருப்பதாகக் காட்டியிருக்கின்றார். அரசாங்கத் தரப்பினால் கொண்டு வரப்படுகின்ற – 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் உள்ளிட்ட தீரமானங்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவு கிட்டியுள்ள போதிலும், நாட்டில் அரசியல் உறுதித்தன்மை இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.

கடன் சுமைகளும், கட்டுப்படுத்த முடியாமல் எகிறிச் செல்கின்ற பண வீக்கமும் நாட்டின் பொருளதார உறுதிப்பாட்டைக் குலைத்திருக்கின்றன. பொருளாதார நிலைமையை உறுதி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ள போதிலும், அந்த நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் அரசு நிலைதடுமாறி நிற்கின்றது.

அதேவேளை, மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதிலும், பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றுவதிலும், ஜனநாயத்தை முறையாகப் பேணுவதிலும் அரசாங்கம் இன்னும் முன்னேற்றத்தைக் காட்டவில்லை. இதனால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களினதும் இலங்கைக்கான உதவிகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜனாதிபதி அகலக்கால் வைத்து பல்வேறு விடயங்களில் நாட்டு மக்களினதும், சர்வதேசத்தினதும் நன்மதிப்பைப் பெறுவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெற்றியளிக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் (ஓ.எம்.பி), இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பவற்றின் செயற்பாடுகளை முன்னேற்றகரமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கவில்லை. அவர்கள் எதிர்பார்க்கின்ற வகையில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை அந்த முயற்சிகள் கொண்டிருக்கவில்லை. இதனால் அவற்றுக்கு எதிரான போராட்டங்களே எதிர்வினையாக கிளர்ந்திருக்கின்றன.

காணாமல் போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றின் நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக காணாமல் போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு அமைந்திருக்கின்றது. ஆனால் அந்த ஆணைக்குழு முன்னிலையில் தோன்றி சாட்சியமளிக்க முடியாது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்கள். அந்த ஆணைக்குழுவின் அமர்வுகைளயும் அவர்கள் புறக்கணித்துள்ளார்கள். அத்துடன் இழப்பீடாக 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பையும் அவர்கள் உதாசீனம் செய்துள்ளார்கள். தங்களுக்கு இழப்பீட்டுப் பணம் தேவையில்லை. நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையே அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றார்கள்.

அதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதங்களை வவுனியவைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் எரியூட்டியிருக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரியாகிய டொக் ஸொனெக்கிடம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் (ஓ.எம்.பி) இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு வடக்கு கிழக்குப் பிரதேச காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்கள்.

பொறுப்பு கூறும் கடப்பாட்டை நிறைவு செய்வதற்கு உள்ளகப் பொறிமுறையின் கீழ் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாக எடுக்கப்படுகின்றது என சர்வதேசத்துக்குக் காண்பிக்கவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கின்றது. ஆனால் அதற்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அரசின் முயற்சிகளை ஆட்டம் காணச் செய்துள்ளது என்றே கூற வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்குத் தீர்வு காண்பதற்காக அதற்கென அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் (ஓ.எம்.பி) செயற்பாடுகளுக்கு அரசு ஊக்கமளித்திருக்கின்றது. ஆனால் அந்த அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுந்தல பாதிக்கப்பட்டவர்களை சீற்றமடையச் செய்யும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர், (இராணுவத்திடம்) சரணடைந்து காணாமல் போனவர்கள் என்று எவரும் கிடையாது எனக் கூறியிருக்கின்றார். அதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என தெரிவித்துள்ள அவர் காணாமல் ஆக்கப்பட்டோரில் பெரும்பாலானவர்களை எல்ரீரீயினரே கடத்திச் சென்றனர் என்றும் ஏனைய குழுக்களும் அவர்களைக் கடத்திச் சென்றிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இராணுவத்திடம் விடுதலைப்புலி உறுப்பினர்களே சரணடைந்தனர். அதுவும் யுத்த முடிவில் பாதுகாப்பளிக்கப்படும். பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசு அளித்த உத்தரவாதத்துக்கமைவாகவே அவர்கள் சரணடைந்தனர். இந்தச் சம்பவம் இரகசியமாக நடைபெறவில்லை. பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் அவர்களின் கண்முன்னால்தான் நடைபெற்றது. குடும்பம் குடும்பமாக வந்தவர்கள் தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்தார்கள். இதற்கு ஏகப்பட்ட சாட்சிகள் இருக்கின்றன.

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்குகளில், வவுனியா மேல் நீதிமன்றத்தின் அறிவித்தலுக்கமைய முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்ப விசாரணைகளில் இது தொடர்பில் கண்கண்ட சாட்சிகள் போதிய அளவில் சாட்சியமளித்திருக்கின்றனர். இத்தகைய ஒரு நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுந்தல சரணடைந்தவர்கள் காணாமல் போனதற்கான சாட்சிகள் இல்லையென கூறியிருப்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற நடவடிக்கையாகும்.

அதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு உள்ளகப் பொறிமுறையின் கீழ் பொறுப்பு கூறுவதற்கு அரசாங்கம் முயற்சிகள் எடுத்துள்ள நிலையில் அவர் வெளியட்டுள்ள கருத்துக்கள் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகின்ற நிலைமையே வெளிப்படுத்தி இருக்கின்றன.

– பி.மாணிக்கவாசகம்

Posted in Uncategorized

உக்ரெய்ன் – ரசிய மற்றும் ஈழத்தமிழர் விவகாரம்- இரட்டைத் தன்மையைப் பின்பற்றும் இந்தியா

–சிக்கலான வாக்கெடுப்புகளில் நடுநிலை வகிப்பது அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. சிறிய நாடான இலங்கைத்தீவு விவகாரத்தில்கூட இரட்டைத் தன்மை என்றால், ஈழத்தமிழ் இனம் சார்ந்த தேவையற்ற கற்பனையான அச்சநிலை புதுடில்லிக்கு இருக்கின்றது என்பதே அதன் பொருள்–

-அ.நிக்ஸன்-

ரசிய – உக்ரெய்ன் போரில் இதுவரை நாளும் மௌனமாக இருந்த இந்தியா தற்போது வாய்திறப்பது போன்று பாசாங்கு செய்கிறது. உக்ரெய்னில் கைப்பற்றப்பட்ட நான்கு பிராந்தியங்களில் கடந்த மாதம் வாக்கெடுப்பு நடத்திய ரசியா, அந்தப் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்கத் தீர்மானித்திருந்தது. இதன் பின்னரான சூழலிலேயே இந்தியாவுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் உக்ரெய்ன் விவகாரம் தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரசியாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரசியா – உக்ரெய்ன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியிட மறுத்துவிட்டார்.

ஆனாலும் போர் என்ற கருத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும் ஜெய்சங்கர் வியாக்கியானம் செய்திருந்தார்.

இந்த நிலையில் உக்ரெய்னில் நான்கு பிராந்தியங்களை ரசியா இணைத்ததைக் கண்டிக்கும் வரைவுத் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரசியாவின் கோரிக்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.

சென்ற திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உக்ரைய்னில் உள்ள டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் ஜபோரிஜியா ஆகிய பகுதிகளை சட்டவிரோதமாக இணைத்ததாகக் குற்றம் சுமத்தி ரசியாவைக் கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா திட்டமிட்டிருந்தது.

ஐ.நா பொதுச் சபையில் ரசியா ரகசிய வாக்கெடுப்பை கோரியதற்கு இந்தியா உட்பட நூற்று ஏழு உறுப்பு நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை. ரசியாவின் கோரிக்கைக்கு ஆதரவாக பதின்மூன்று நாடுகள் மட்டுமே வாக்களித்தன, மீதமுள்ள முப்பத்து ஒன்பது நாடுகள் வாக்களிக்கவில்லை. ரசியாவும் சீனாவும் வாக்களிக்காத நாடுகள்.

ரசியாவின் ரகசிய வாக்கெடுப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் இந்த முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ரசியா கோரியது. ஆனால், ரசியாவின் இந்த கோரிக்கை மீள்பரிசீலனை செய்யப்படவில்லை. இந்தியா உட்பட நூறு நாடுகள் மீள்பரிசீலனைக்கு எதிராக வாக்களித்தன. பதினாறு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன, முப்பத்து நான்கு நாடுகள் வாக்களிக்கவில்லை.

இங்கு இந்தியா பகிரங்க வாக்களிப்பையே கோரியிருந்தது. இதன் காரணமாக நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில், ஆதரவாக நூற்று நாற்பத்து மூன்று வாக்குகளும் எதிராக ஐந்து வாக்குகளும் பெறப்பட்டன. முப்பத்து ஐந்து நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகிக் கொண்டன. சீனா, இந்தியா, பாகிஸ்தான். இலங்கை போன்ற நாடுகளே வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டன.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

ஆகவே ரசியாவின் ரகசிய வாக்கெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்தியா, உக்ரெய்னின் நான்கு பிராந்தியங்கள் ரசியாவுடன் இணைக்கப்பட்டமை தவறானது என்ற தீர்மானத்துக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்காமல் விலகியது.

ஆனால் எதிரும் புதிருமான நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் வாக்கெடுப்பில் இருந்து விலகியமைக்கான காரணங்கள் ஒரேமாதிரியானவை அல்ல.

சர்வதேச அங்கீகாரத்துடன் இணைக்கப்பட்டிருந்த இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம், 2019 ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்திய மத்திய அரசினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, அதற்கு எதிராக பொதுச் சபையில் ஐ.நா. ஏன் வாக்கெடுப்பு நடத்தவில்லை என்ற கேள்வியையே பாக்கிஸ்தான் முன்வைத்தது.

இதன் காரணமாகவே உக்ரெய்னின் நான்கு பிராந்தியங்களை ரசியா தனது நாட்டுடன் இணைத்தமைக்கு எதிராக ஐ.நா நடத்திய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்ற காரணங்களையும் பாக்கிஸ்தான் முன்வைத்தது.

 

ஆனால் சிக்கலான வாக்கெடுப்புகளில் நடுநிலை வகிப்பது அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை விவகாரத்திலும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டையே இந்தியா கடைப்பிடித்தும் வருகின்றது.

அயல் நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ரசியச் சார்பு நிலையில் இருந்தாலும், உக்ரெய்ன் விவகாரத்தில் ரசியாவுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் தவிர்த்ததன் மூலம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இரண்டு நாடுகளும் சேர்ந்து இயங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஏனெனில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தமைக்குப் பாக்கிஸ்தான் சொல்லும் காரணம் இந்தியாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை.

சீனா ரசியாவின் நட்பு நாடாக இருந்தாலும், மற்றொரு நாட்டின் இறைமை மீறப்படுகின்றது என்ற பொதுவான சர்வதேசக் குற்றச்சாட்டுக்களை வெளியில் இருந்து நியாயப்படுத்துவது போன்ற ஒரு தோற்றப்பாட்டைக் காண்பிக்க முற்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை, சீன – இந்திய அரசுகளின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு வாக்கெடுப்பில் இருந்து விலகியது என்பது வெளிப்படை.

இந்த நிலையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால், ஐ.நா.பொதுச் சபையில் உறுப்பு நாடுகள் தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவுக்கான ரசியத் தூதுவர் வாசிலி நெபென்சியா குற்றம் சுமத்தியிருக்கிறார்.

இப் பின்னணியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரசியா தொடர்பான அவுஸ்திரேலியச் செய்தியாளர்களின் கேள்விக்கு, இந்தியத் தேசிய நலன்கள் என்ற தொனியில் பதில் வழங்கியிருக்கிறார்.

அதாவது உக்ரைய்னில் என்ன நடக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு இந்தியா ரசியாவுடனான உறவை மறுபரிசீலனை செய்கிறதா மற்றும் ரசிய ஆயுத அமைப்புகளை இந்தியா நம்புவதை குறைக்க வேண்டுமென நினைக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ரசியாவுடனான உறவு இந்தியத் தேசிய நலன்கள் சார்ந்தது என்று விளக்கமளித்திருக்கிறார் ஜெய்சங்கர்.

அத்துடன் பல தசாப்தங்களாக, மேற்கத்திய நாடுகள் இந்தியாவிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சர்வதேச சமூகத்தில் அதன் சொந்த நலன்களை அடிப்படையாகக் கொண்டது எனவும் கூறியிருக்கிறார்.

ரசியாவுடன் ஒத்துழைப்பைப் பேணும்போது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளோடு நெருக்கமாக இருப்பதுடன், பரந்த சர்வதேச சூழலில் இந்தியா அதிகபட்ச நலன்களை நாடுவதாகவும் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால் இந்தியாவுக்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பட்டம் உள்ளிட்ட பல பயன்பாடுகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் வழங்கியுள்ளன. அமெரிக்கா, இந்தியாவிற்கு பாதுகாப்பு உதவியாக பல பில்லியன் டொலர்களை வழங்கியுமுள்ளது.

இந்தியாவுடன் இராணுவத் தகவல், தளபாடப் பரிமாற்றம், இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நான்கு பாதுகாப்பு ஒப்பந்தங்களில் அமெரிக்கா கையெழுத்திட்டுமுள்ளது.

இந்தியாவுடன் முக்கியமான செயற்கைக்கோள் உளவுத்துறையை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்திலும் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்திய குவாட் இராணுவ அமைப்பிலும் இந்தியாவுக்குத் தலைமைப் பொறுப்பை அமெரிக்கா வழங்கியுமுள்ளது. ஆகவே இப் பின்னணியில் உக்ரெய்னில் ரசியா மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு எதிரான அமெரிக்க வியூகத்திற்கு மாறாக இந்தியா செயற்படுகின்றது.

குறிப்பாக ரசியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தியா கனகச்திதமாகப் பேணி வருகின்றது.

ஆகவே இந்தியாவின் இந்த இரட்டைத் தன்மை (Duality) பற்றி மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு புரிந்துகொள்கின்றன என்பதிலும் கேள்விகள் இல்லாமலில்லை. ரசியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை விவகாரத்தில் கூட இந்தியா மாத்திரமல்ல பிரிக்ஸ் நாடுகளும் ஒத்துழைக்க மறுத்திருக்கின்றன.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பில் பிரதமர் நரேந்திர மோடி 2022 ஜூன் 23-24 அன்று காணொலி மூலமாக நடைபெற்ற பதின் நான்காவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அதாவது ரசியாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகள் தீர்மானித்திருந்த நிலையில் இந்த மாநாட்டில் நரேந்திரமோடி பங்குபற்றியிருந்தார்.

சீனாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் பிரிக்ஸ் மாநாட்டில் இணக்கமும் ஏற்பட்டிருந்தது.

ஆகவே இதன் பின்னணியில் உக்ரெய்ன விவகாரத்தில் ரசியா கோரிய ரகசிய வாக்கெடுப்புக்கு மாத்திரம் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டுப் பின்னர் பகிரங்கமாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் தவிர்த்ததன் மூலம் இந்தியாவின் சர்வதேச இரட்டை அணுகுமுறை பட்டவர்த்தனமாகிறது.

இதேபோன்று ஈழத்தமிழர் விவகாரத்திலும் இந்தியாவின் இரட்டைத் தன்மை அணுகுமுறை குழப்பங்களையே உருவாக்கி வருகின்றன.

ரசிய – உக்ரெயன் விவகாரம் பேரரசுகளுடன் சம்மந்தப்பட்டதுதான். ஆகவே புவிசார் அரசியல் – பொருளாதார பின்புலங்களை மையப்படுத்தியதாக இந்தியாவின் இரட்டைத் தன்மை அணுகுமுறை அமைந்தது என்று புதுடில்லி அதற்குக் காரணம் கற்பிக்கக்கூடும்.

ஆனால் ஈழத்தமிழர் என்பது சிறிய தேசிய இனமாக இருந்தாலும், அந்த இனத்தின் அரசியல் விடுதலை விவகாரத்தைக் கையாளும் முறையும், அந்த இனத்தை ஒடுக்குகின்ற சிங்கள ஆட்சியாளர்களுடனான உறவும் முன்னுக்கும் பின் முரணானது.

தனது அயல்நாடான மிகச் சிறிய இலங்கைத்தீவு விவகாரத்தில்கூட இந்தியா இரட்டைத் தன்மையைக் கொண்டிருக்கிறது என்றால், ஈழத்தமிழ் இனம் சார்ந்த தேவையற்ற கற்பனையான அச்சநிலை புதுடில்லிக்கு இருக்கின்றது என்பதே அதன் பொருள்.

தமிழர்கள் கோருகின்ற இன அழிப்பு விசாரணை அல்லது மிகக் குறைந்த பட்சமாகச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கையைப் பாரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைக்கு, விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க உள்ளிட்ட மேற்குலகமும் ஐரேப்பிய நாடுகளும் ஒப்புக்கொண்டாலும், நிரந்தர அரசியல் தீர்வு என்று வரும்போது இந்தியாவிடம் கேட்க வேண்டும் என்ற தொனியையே இந்த நாடுகள் வெளிப்படுகின்றன.

ஆனால் இந்தியா ஒருபோதும் குறைந்த பட்சத் தகுதியுடைய சர்வதேச விசாரணைக்குக் கூட உடன்படாது என்பதை ஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டில் இருந்து காண முடிகின்றது. அரசியல் தீர்வு என்றாலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தையே இந்தியா வலியுறுத்தியும் வருகின்றது.

இம்முறை 13 ஆவது திருத்தச் சட்டத்தைக்கூட மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் ஜெனீவா தீர்மானத்தின் பூச்சிய வரைபில் முன்வைக்கவில்லை. ஏனெனில் இந்தியாவுடன் ஏற்பட்ட சில இடைவெளிகளே அதற்குக் காரணம் என்பதும் கண்கூடு.

1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணத்தை, இலங்கை அரசாங்கம் 2006 இல் தன்னிச்சையாக உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இரண்டாகப் பிரித்தது.

இதனால் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றை ஒரு நாடு எவ்வாறு தன்னிச்சையாக மீற முடியும் என்ற கேள்விகள் எழு(ந்தன. ஆனால் இதுவரையும் அது பற்றி இந்தியா எந்தவொரு விளக்கத்தையும் இலங்கை அரசாங்கத்திடம் கேட்கவேயில்லை.

மாறாக அந்த ஒப்பந்த்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடமும் தமிழ்த் தரப்பிடமும் தொடர்ச்சியாக இந்தியா கோரி வருகின்றது.

ஆகவே அமைச்சர் ஜெய்சங்கர் அவுஸ்திரேலியாவில் கூறியது போன்று இந்தியத் தேச நலன் என்பதை மையமாகக் கொண்ட சர்வதேச வெளியுறவுக் கொள்கையில் உள்ள இரட்டைத் தன்மை, ரசிய – உக்ரெய்ன் போர் விவகாரத்திலும் குறிப்பாக ரசியா குறித்த அணுகுமுறையிலும், ஈழத்தமிழர் மற்றும் இலங்கை விவகாரத்திலும் எவ்வளவு தூரம் சாதகமான விளைவைக் கொடுத்திருக்கின்றது என்பதைப் புதுடில்லி பகிரங்கப்படுத்துமா?

இலங்கை விவகாரத்தில் அதுவும் ஈழத்தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய நலன்சார்ந்து செயற்படும் அமெரிக்கா, எதிர்காலத்தில் ரசிய விவகாரத்தில் இரட்டைத் தன்மையுடைய இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளுமா என்பதும் இங்கு கேள்வியே.

2009 இற்குப் பின்னரான இலங்கை விவகாரம் மற்றும் பிரிக்ஸ் நாடுகள் குறித்த அமெரிக்க அணுகுமுறைகளின் தவறுகளும் இந்தியாவின் இரட்டைத்தன்மைக்குச் சாதகமாக உள்ளன என்ற குற்றச்சாட்டுக்களை யாரும் முன்வைத்தால் அதனை மறுக்க முடியாது.

சீனாவும் இந்தியாவுடன் மேற்கொண்டு வரும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகச் செயற்பாடுகளும் இந்திய இரட்டைத் தன்மைக்குச் சாதகமாகவேயுள்ளன.

இந்த இடத்திலேதான் எழுபது வருடங்கள் அரசியல் போராட்டம் நடத்திய தமிழ்த் தரப்பு இந்தியாவை மாத்திரமே நம்பிக் கொண்டிருக்கின்றது. கொழும்பில் உள்ள சீனத் தூதுவரைச் சந்திப்பதற்குக்கூட தமிழ்த்தேசியக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் தயங்குகின்றன.

ஒன்றுக்கொன்று நலன் என்ற அடிப்படையில் எவ்வாறு அமெரிக்க – இந்திய அரசுகள் மற்றும் சீன – இந்திய அரசுகள் இயங்குகின்றதோ, அதேபோன்ற ஒரு அணுகுமுறையைப் பாதிக்கப்பட்ட தமிழ்த்தரப்பு பின்னபற்ற வேண்டும்.

கோரிக்கையை விட்டுக்கொடுக்காமலும், நியாயப்படுத்தியும் அழுத்தம் திருத்தமாக ஒருமித்த குரலில் உரத்துச் சொல்லும்போது, புவிசார் அரசியல் – பொருளாதாரப் பின்னணி கொண்ட வல்லரசுகள் நிச்சயமாகச் செவிசாய்க்க வேண்டிய கடப்பாடு தோற்றுவிக்கப்படும்.

ஜெனிவாத் தீர்மானம் 2022 : தமிழ் அரசியலின் இயலாமை?

நிலாந்தன் –

மற்றோரு ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் கேட்டது சரி என்பதை இப்புதிய தீர்மானம் நிரூபித்திருக்கிறது.கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஜெனீவாவுக்கு ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்பின.அதில் பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்ற கோரிக்கையை இணைத்தது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான்.இதுநடந்து 20மாதங்களாகிவிட்டன.பொறுப்புக்குகூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகும் முயற்சியில் மூன்று கட்சிகளும் எதுவரை முன்னேறியுள்ளன?

நடந்து முடிந்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அங்கு போயிருந்தார்.அங்கிருந்து அவர் வழங்கிய நேர்காணல்களில் அவர் ஒரு விடயத்தை திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டுகின்றார். அது என்னவெனில், கூட்டமைப்பும் சில புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் தொடர்ந்தும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை பலவீனப்படுத்தி வருகின்றன என்பதே அது.அதாவது ஜெனிவா தீர்மானத்தை முன் கொண்டுவரும் நாடுகளை நோக்கி கூட்டமைப்பு தமிழ்மக்களின் கோரிக்கையை வலிமையாக முன்வைக்கவில்லை என்பது அவருடைய முதலாவது குற்றச்சாட்டு.இரண்டாவது குற்றச்சாட்டு, பிரித்தானியா,ஆவுஸ்ரேலியா,கனடா ஆகிய நாடுகளை மையமாகக் கொண்டியங்கும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் சில தொடர்ந்து தத்தமது நாடுகளின் அரசாங்கங்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றன என்பது.அதாவது மேற்படி நாடுகள் ஜெனிவாவில் தமிழ்மக்களின் கோரிக்கைகளை தமது பூகோள அரசியல் இலக்குகளுக்காக நீர்த்துப்போகச் செய்யும்பொழுது அதுவிடயத்தில் மேற்படி புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு விசுவாசமாக கீழ்படிவாக செயல்படுகின்றன என்ற தொனிப்பட அவர் குற்றம் சாட்டுகிறார்.

ரணில் விக்ரமசிங்கவின் முன்னைய ஆட்சிக்காலத்தில்,2015ஆம் ஆண்டு நிலைமாறுகால நீதிக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுது தமிழ்த்தரப்பில் கூட்டமைப்பு அந்த தீர்மானத்தை ஆதரித்தது.அது நிலைமாறுகால நீதியின் பங்காளியாக மாறியது.அவ்வாறே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவும் நிலைமாறு கால நீதியை ஏற்றுக்கொண்டன.அதே சமயம் இன்னொரு பகுதி புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் தாயகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொள்ளவில்லை.அவை இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியைக் கேட்டன.

எனினும்,கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஐநாவுக்கு அனுப்பிய கூட்டுக் கடிதத்தில் கூட்டமைப்பு எனைய இரண்டு கட்சிகளோடு இணைந்து பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்று கேட்டிருந்தது. இலங்கை அரசாங்கத்தை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று அக்கடிதம் கேட்டிருந்தது.நிலைமாறுகால நீதியைப் பரிசோதித்தோம் அதில் தோல்வியுற்றுவிட்டோம் என்று சுமந்திரன் வவுனியாவில் வைத்துச் சொன்னார்.ஆனால் ஜெனீவாத் தீர்மானத்தின் சீரோ டிராப்ட் வெளிவந்த பொழுது கூட்டமைப்பு தலைகீழாகி நின்றது.இப்பொழுதும் கூட்டமைப்பு பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கருக்குழு நாடுகளின்மீது அழுத்தத்தை பிரயோகிக்கவில்லை என்று கஜேந்திரன் குற்றஞ்சாட்டுகிறார். அதுபோலவே அவர் குற்றஞ்சாட்டும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்துவதில்லை என்ற தொனிப்பட அவருடைய குற்றச்சாட்டு அமைகிறது.

இக்குற்றச்சாட்டுகளை தமிழில் அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதும் பலரும் கூட்டமைப்புக்கு எதிராக முன்வைத்து வருகிறார்கள்.குடிமக்கள் சமூகங்கள் மத்தியிலும் அவ்வாறான குற்றச்சாட்டுகள் உண்டு.தவிர காணாமல் போனவர்களுக்கான அமைப்புகள் உட்பட பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புகளும் கூட்டமைப்பின் மீது விமர்சனங்களைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. இந்த விமர்சனங்களின் விளைவாகத்தான் கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு அதன் ஆசனங்களில் ஆறை இழந்தது.அதன் ஏகபோகம் சரிந்தது.

ஆனால் அவ்வாறு இழந்த ஆறு ஆசனங்களையும் யார் பெற்றார்கள்?மூன்றே மூன்று ஆசனங்களைத்தான் மாற்று அணி பெற்றது.எனைய மூன்று ஆசனங்களும் தமிழ்த்தேசியப் பரப்புக்கு வெளியே போயின.அவ்வாறு மூன்று ஆசனங்கள் தமிழ்தேசிய பரப்புக்கு வெளியே போனதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் கூட்டுப் பொறுப்பை ஏற்கவேண்டும்.ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அரசியல் தரிசனம் அக்கட்சியிடம் இன்றுவரை இல்லை.எப்பொழுதும் ஏனைய கட்சிகளை குறைகூறி ஏனைய கட்சிகளில் குற்றம் கண்டுபிடித்து தங்களைப் பரிசுத்தர்களாக காட்டிக் கொள்ளும் ஒரு போக்குதான் அக்கட்சியிடம் இன்றுவரை உண்டு. அண்மையில் திலீபனின் நினைவுத்தூபி அவமதிக்கப்பட்ட போதும் அக்கட்சி தன் அரசியல் எதிரிகளைத்தான் குற்றஞ்சாட்டியது.

தன் உள் அரசியல் எதிரிகளை குற்றச்சாட்டுவது என்பது தேர்தல்மைய அரசியலின் ஒரு பகுதிதான்.ஆனால் ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் அதுமட்டுமே தேச நிர்மாணத்தின் பிரதான பகுதியாக அமைய முடியாது.ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியான இனப்படுகொலையால் நீர்த்துப்போன ஒரு மக்கள் கூட்டம். புலப்பெயற்சி, தோல்வி, கூட்டு காயங்கள், காட்டிக் கொடுப்புகள் போன்றவற்றால் தொடர்ந்தும் சிதறிப் போயிருக்கும் ஒரு மக்கள் கூட்டம். எனவே இந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் தேர்தல் அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் தமது அரசியல் எதிரிகளை திட்டிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.அதைவிட முக்கியமாக தாம் சரியெனக் கருதும் ஓர் அரசியல் இலக்கை நோக்கி மக்களைத் திரட்டவேண்டும்.ஒரு தேசத் திரட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது தேர்தல்மைய அரசியலை எப்படி ஒரு தேச நிர்மாணத்தின் பகுதியாக மாற்றலாம் என்று சிந்திக்க வேண்டும்.ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் உட்பட கூட்டமைப்பை விமர்சிக்கும் பலரிடமும் அவ்வாறான அரசியல் தரிசனம் உண்டா? என்ற கேள்வியை கடந்த 13 ஆண்டு கால அனுபவம் கேட்க வைக்கின்றது.

கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அரசியலானது புரோஅக்டிவ் – proactive- ஆக, அதாவது தானாக ஒன்றைக் கட்டியெழுப்பும் அரசியலாக இல்லை.அது ரியாக்டிவ்- reactive- ஆகத்தான் அதாவது பதில் வினையாற்றும் அரசியலாகத் தான் காணப்படுகிறது.அதாவது தேசத்தை நிர்மாணித்தல் என்பது எதிர் தரப்புக்கு எதிர்வினை ஆற்றும் தற்காப்பு நிலை அரசியலாகதான் மாறியிருக்கிறது.மாறாக தேசத்தை நிர்மாணிப்பதற்கான நிறுவனங்களை உருவாக்கி அதனூடாக தன் உள் அரசியல் எதிரியையும் வெளி எதிரிகளையும் எப்படித் தோற்கடிக்கலாம் என்ற சிந்தனை கூட்டமைப்பிடமும் இல்லை.கூட்டமைப்பின் எதிரிகளிடமும் இல்லை.

கூட்டமைப்பின் அரசியல் தவறுகள் காரணமாகத்தான் கடந்த பொதுத் தேர்தலில் அக்கட்சி ஏகபோகத்தை இழந்தது.ஆனால் அந்த தோல்வியை தன்னுடைய முழுமையான வெற்றியாக மாற்றிக் கொள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முடியவில்லை.எனைய தமிழ்த்தேசிய கட்சிகளாலும் முடியவில்லை.இதனால் தமிழ் வாக்குகள் மேலும் சிதறி,தமிழ்மக்களின் பேரபலம் சிதைந்தது. அதாவது தேசத் திரட்சி பலவீனமடைந்தது.

இப்பொழுதும் ஜெனிவா விவகாரத்தில் கூட்டமைப்பு செய்வது பிழை என்றால் ஏனைய கட்சிகள் அதை தோற்கடிக்க வேண்டும்.அதற்கு வேண்டிய மக்கள் ஆணையை முதலில் பெற வேண்டும். அந்த மக்கள் ஆணையை பெறுவதற்கு ஒரு பலமான மாற்று அணியை கட்டி எழுப்ப வேண்டும். மக்களாணையை பெற்ற பின் பொருத்தமான வெளியுறவு கொள்கை ஒன்றை வகுத்து வெளியுறவு கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதனூடாக ஜெனிவாவையும் இந்தியாவையும் எனைய தரப்புகளையும் அணுக வேண்டும். ஆனால் அப்படியான சிந்தனைகளையோ செயற்பாடுகளையோ தமிழ் அரசியலில் மிகக் குறைவாகவே காணமுடிகிறது.ஒப்பிட்டுளவில் அதிக ஆசனங்களைப் பெற்ற கூட்டமைப்போடுதான் வெளியுலகம் பேசும்.

 

தன் உள் அரசியல் எதிரியைத் திட்டித் தீர்ப்பதிலேயே தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் சக்தி பெருமளவுக்கு விரயம் செய்யப்படுகிறது.இது ஒரு விதத்தில் நெகட்டிவ் ஆனது. மாறாக பொசிட்டிவாக தனக்கு சரி என்று தோன்றும் ஓர் அரசியல் இலக்கை முன்வைத்து தேசத்தைக் கட்டியெழுப்ப இந்த கட்சிகளால் முடியவில்லை.இதனால்தான் கடந்த 13 ஆண்டுகளாக பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக முடியவில்லை. பேராசிரியர் ஜூட் லால் கூறுவது போல தமிழ்மக்கள் கடந்த 13 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றிகள் எதையும் பெற்ற முடியவில்லை.வேண்டுமானால் நெருப்பை அணையாமல் பாதுகாத்தோம் என்று கூறித் திருப்திப்படலாம்.

தனது உள் அரசியல் எதிரிகளைப் பற்றியே எப்பொழுதும் சிந்தித்து அவர்களுக்கு எதிரான வியூகங்களை வகுப்பதிலேயே தமிழ்ச் சக்தி வீணாகிக் கொண்டிருக்கிறது.மாறாக,ஆக்கபூர்வமான விதத்தில் பொசிட்டிவாக, புரோஅக்டிவாக,ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு வேண்டிய வழி வரைபடத்தை தயாரித்து முன் செல்லும்போது அரசியல் எதிரிகள் படிப்படியாக உதிர்ந்து போய் விடுவார்கள்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று கட்சிகளும் கூட்டாக கடிதமெழுதி கிட்டத்தட்ட 20 மாதங்கள் கழிந்துவிட்டன.இந்த 20 மாதங்களிலும் தாம் ஜெனிவாவை நோக்கி முன்வைத்த கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக இக்கட்சிகள் என்னென்ன செய்திருக்கின்றன?கூட்டமைப்பு தொடர்ந்து வாக்காளர்களை ஏமாற்றுகிறது என்று சொன்னால்,அவ்வாறு ஏமாற்றாத ஏனைய கட்சிகள் கடந்த 20மாதங்களாக என்ன செய்திருக்கின்றன? கூட்டமைப்பு ஏமாற்றுகிறது என்று சொன்னால் மட்டும் போதாது.தாங்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றும் சொல்லவேண்டும்.பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டுபோகும் விடயத்தில் இவர்கள் இதுவரை சாதித்தவை என்ன? மிகக்குறிப்பாக அந்த விடயத்தை நோக்கி அவர்கள் கட்டியெழுப்பி வைத்திருக்கும் கட்டமைப்புகள் எத்தனை?

பன்னாட்டு நீதிமன்றத்தை நோக்கிச் செல்லும் வழியில் கடந்த 20 மாத காலத்தில் எதுவரை முன்னேறி இருக்கிறோம் என்பதனை மூன்று கட்சிகளும் தமிழ்மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் மேற்படி கட்சிகள் தமது வாக்குறுதிகளுக்கும் அதை நம்பும் தமது மக்களுக்கும் பொறுப்பு கூறவேண்டும்.

Posted in Uncategorized

இலங்கைக்கு எதிரான ஐநாவின் தீர்மானம்: ஒரு பழைய துணியில் புதிய ஒட்டு-பேராசிரியர் குழந்தைசாமி

6.10. 2022 வியாழன் அன்று செனீவாவில் உள்ள ஐநாவில் நடைபெற்ற 51 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு 20 நாடுகள் ஆதரவாகவும் 7 நாடுகள் எதிராகவும்(சீனா, பாகிஸ்தான் உள்பட வாக்களித்தனர்.

20 நாடுகள் (இந்தியா, யப்பான், நேபாளம், கத்தார் உள்பட) வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்தில் எண் 05, 06, 14, 15 போன்ற சில தீர்மானங்கள் மனித உரிமை மீறல்களைப்பற்றி பேசுகின்றன. இதில் இடம்பெற்றுள்ள தீர்மானங்கள் பொதுவாக எல்லாமே மனித உரிமை மீறல்களைப்பற்றி பேசுகின்றன. இதில் உள்ள பிழைகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பொதுவாக்குதல் (Generalization)

தீர்மானங்கள் பொதுவாக்கப்பட்டு வெளிவந்துள்ளன. இந்திய தூதர் திருமிகு இந்திரா மணி பாண்டே அவர்கள் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்காக போராடுவதும் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு போராடுவது ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும் என்று கூறுகிறார். இப்படி பொதுவாக்குதல் ஒரு மனிதனின் பெருந்தன்மையைக் காட்டுகிறதென நாம் கருதலாம்.

அவ்வாறு செய்வது சில இடங்களில் சரியானதாகும். ஆனால் எல்லா இடங்களில் பெரிய ஆபத்தாகும். இதைத்தான் திருதந்தை பிரான்சிசு தனது சுற்றுமடலில் “Fratelli Tutti” நயனற்ற பொதுவாக்குதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய கொடூரத்தை விளைவிக்கிறது என்று விளக்குகிறார். நயனுள்ள பொதவாக்குதல் நன்மை பயக்கும். நயனற்ற பொதுவாக்குதல் மிகப்பெரிய துரோகமாகும். பொதுவாக்கும் தன்மை மேட்டுக்குடி மக்களின், அதிகாரத்தில் உள்ளவர்களின் பண்பாட்டு அரசியல் செயல்பாடாகும். இது தமிழர்களுக்கு பெரிய கொடூரத்தை செய்துள்ளது.

மூடிமறைத்தல்

இந்தப் பொதுவாக்குதல் தங்களது தவறுகளை மூடிமறைப்பதற்காக பயன்படுகிறது. சிங்கள பௌத்த பேரினவாத அரசு செய்த இனப்படுகொலையை மூடிமறைக்க இந்தப் பொதுவாக்குதல் பயன்படுகிறது. இந்த தீர்மான அறிக்கையில் தமிழர்களுக்கு கொடுமை இழைக்கப்பட்டது என்று ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை. யாருக்கு, யார் என்ன செய்தார்? என்று விளக்காமல் தீர்மானம் எடுப்பது மூடிமறைப்பதற்கு பயன்படுகிறது.

தமிழ் மக்களுக்கு நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்கும் தீர்மானமாக உள்ளது. உக்ரேன், மியான்மர் போன்ற நாடுகளில் நடந்த போரை ஓர் இனவழிப்பு போர் என்று கருதுகிற ஐநா தமிழர்களுக்கு நடந்த இனவழிப்பை மூடிமறைக்க முயற்சிப்பது அதன் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இவ்வாறு மூடிமறைக்கும் செயல் வரலாற்று அரசியல் குற்றமாகும்.

இனப்படுகொலை செய்த இனவாத அரசைக் காப்பாற்ற இந்த மூடிமறைத்தல் உதவுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவன் தமிழ் மக்களையும் சீரழித்தவனாக இருக்கிறான் என்பதை மூடிமறைப்பதால் அமைதியை உருவாக்க முடியாது. மூடிமறைத்தல் ஆதாயம் தேடும் கூட்டத்தின் யுத்தியாக பயன்படுகிறது. இதனால் குற்றங்கள் அதிகரிக்கும் குறைவதற்கு வாய்ப்பே இல்லை. மூடிமறைத்தல் குற்றவாளியின் மூர்க்கத்தனமான செயலாகும்.

திசை திருப்புதல்

இந்திய தூதர் பாண்டே ’13 வது திருத்தச்சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துகிறார். அதற்கான செயல்கள் முன்னெடுப்புகள் போதுமானதாக இல்லை’ என்று சொல்வது பிரச்சினையை திசை திருப்புவதாகும். 13வது திருத்தச் சட்டம் நயன்மையைப் பெற்றுத்தரும் சட்டமல்ல. நடந்த இனப்படுகொலைக்கு நயன்மை வேண்டும். அதிலிருந்து திசைமாற்றுவது இன்னொரு இனப்படுகொலையாகும். இலங்கையில் நடந்த பொருளாதார சிக்கலை அதிகம் பேசுவது திசைதிருப்பும் செயலாகும்.

தமிழ் அரசியல்வாதிகள் அமைதிகாப்பது, சிங்கள அரசுக்கு கைக்கூலிகளாக பணிசெய்வது பிரச்சினையை திசைதிருப்ப வழிவகுக்கும். நடந்ததை மறந்துவிட்டு நடக்கிறது, நடக்கபோகிறது பற்றி சிந்திப்போம் என்று சில படித்த முட்டாள்கள் பேசுவது அவர்களது திசை திருப்பும் செயலாகும். மனித உரிமை மீறல்களை மட்டும் பேசுவது நன்மை பாதையிலிருந்து விலகிசெல்வதற்கு உதவுகிறது.

சுருக்குதல்

எல்லா நாடுகளில் நடப்பதுபோல இலங்கையிலும் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்று கூறுவது தமிழர்களுக்கு நடந்த கொடூரத்தை சுருக்கிவிடுவதாகும். பிரச்சினையை சுருக்குவது நயனற்ற செயலாகும். இதனால் பிரச்சினையின் வீரியத்தையும் கடினத்தன்மையையும் அழிப்பதாகும். இந்த தீர்மானம் தமிழர்களுக்கு நடந்த கொடுமையை ஒரு சாதாரண நிகழ்வாக கருதுவதற்கு வழிவகுக்கிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், 1. 46. 000 மக்களை கொலைசெய்தது போன்ற பேரினவாத செயல்களை சுருக்கி விளக்குவது ஓர் இனப்படுகொலைக்கு சமமாகும். இனப்படுகொலைக்கு வேண்டிய ஆதாரங்களும், தரவுகளும் காரணங்களும் இருந்தும் இனப்படுகொலை என ஏற்றுக்கொள்ள இந்த தீர்மானம் மறுக்கிறது. தனிப்பட்ட ஆதாயம் தேடும் உலக நாடுகள் இந்த சுருக்கலுக்கு அடிப்படை காரணமாக உள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது.

பிளவுபடுத்துதல்

இந்த தீர்மானத்தில் இந்திய ஒன்றிய அரசின் தமிழ்நாட்டு அரசின் ஒற்றுமையின்மை, ஈழத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஒற்றுமையின்மை, திருமிகு கசேந்திர பொன்னம்மபலம், திருமிகு சிறீதரன் சிவஞானம் போன்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர தவறான வழியில் செல்லுதல், உலக தமிழர் அமைப்பு, பாதிக்கப்பட்ட சில நபர்கள் தவிர பிற அமைப்புகளின் ஈடுபாடு ஐநாவில் மிகக்குறைவு ஆகியவை வெளிப்படுகின்றன. தீர்மானங்கள் காலம் கடத்துவதால் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகின்றன. ஒற்றுமை நயன்மையை நிலைநாட்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இறுதியாக, நாம் கையறு நிலையில் இருந்தாலும் இந்த தீர்மானத்தை வைத்து தமிழர்களுக்கு நடந்த கொடூரத்தை உலகிற்கு எடுத்துச்சொல்லி நயன்மையை நிலைநாட்ட சிந்திக்கவேண்டும். செயல்பட வெண்டும். ஒன்றுமே இல்லை என்று நாம் விரக்தியாகாமல் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி செய்யவேண்டிய பணிகளை திட்டமிட்டு எதிர்நோக்குடன் நம்பிக்கையுடன் செய்யவேண்டும்.

இருட்டிலும் கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்iயில் தேடுவோம் கண்டடைவோம். இந்த தீர்மானத்தில் இருக்கும் வழிகளை(எண் 05, 06, 14, 15) பயன்படுத்தி கரம்கோர்த்து பணிசெய்ய முன்வருவோம். பாடம் கற்றுக்கொள்வோம். செயல்படுவோம் நன்மையை தமிழர்களுக்கு உறுதியாக கிடைக்கும் வரையில்.

நினைவு நாட்களுக்கு உரிமை கோருவது ?

நிலாந்தன்
நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பை குறித்த உரையாடல்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டன.ஆனால் ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழ்ப்பரப்பில் இருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பொருத்தமான வெற்றிகளை இதுவரை பெற்றிருக்கவில்லை.அனைத்து நினைவு கூர்தல்களுக்குமான ஒரு பொதுக் கட்டமைப்பை ஏன் உருவாக்க முடியவில்லை?

ஏனென்றால் ஒரு பொதுவான தியாகிகள் நினைவு தினம் தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அமைப்பும் தனக்கென்று தனியாக தியாகிகள் தினங்களை வைத்திருக்கின்றது. நினைவு நாட்களை வைத்திருக்கின்றது.இதில் ஒரு இயக்கம் தியாகி என்று கூறுபவரை மற்றொரு இயக்கம் துரோகி என்று கூறும் நிலைமையும் உண்டு.ஒரு இயக்கத்தால் தியாகியாக கொண்டாடப்படுகிறவர் மற்றொரு இயக்கத்தால் கொலைகாரராக பார்க்கப்படுகிறார்.எனவே இயக்கங்களுக்கிடையிலான ஒரு பொதுவான தியாகிகள் நாளை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.அதை என்றோ ஒரு நாள் கண்டுபிடிக்கும் பொழுதுதான் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயம் அதன் முழுமையான செழிப்பை அடையும்.

தியாகிகள் நாள் மட்டுமல்ல, இனப்படுகொலை நாளில் கூட சர்ச்சைகள் உண்டு.மே 18 எனப்படுவது தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாள்.எனவே அந்த நாளை இனப்படுகொலை நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கருதுகிறார்கள். ஒரு குறுகிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் அதிக தொகையினர் கொல்லப்பட்டதன்மூலம் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாள் என்ற அடிப்படையில் அந்த நாளை இனப்படுகொலை நினைவு நாளாக அனுஷ்டிக்கலாம் என்று கருதுபவர்கள் உண்டு.ஆனால் அங்கேயும் சர்ச்சைகள் உண்டு.அந்த நாளில் புலிகள் இயக்கத்தின் பிரதானிகள் பலர் தம் உயிர்களை துறந்தனர் என்ற அடிப்படையில் அதுவும்கூட புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களில் ஒன்றுதான் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லாத் தரப்புகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான நினைவு நாளை கண்டுபிடிப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை.அவ்வாறு ஒரு பொதுவான நினைவு நாள் இல்லாத ஒரு சமூகத்தில், நினைவு கூர்தலுக்காக ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதும் சாத்தியமில்லை.பதிலாக அவரவர் அவரவருடைய தியாகிகள் நாளை அனுஷ்டிப்பது என்ற அடிப்படையில் நினைவு கூர்தலில் பல்வகைமையை ஏற்றுக் கொள்வதுதான் உடனடிக்கு சாத்தியமான ஒன்று.

மேலும்,கடந்த 13ஆண்டுகளாக நினைவுகூர்தல் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் யாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட நினைவு நாட்கள்தான்.விடுதலைப்புலிகள் அல்லாத இயக்கங்களின் நினைவு நாட்கள் பொறுத்து பெரியளவில் சர்ச்சைகள் இல்லை.

இது எதை காட்டுகின்றது என்றால்,புலிகள் இயக்கத்தின் மெய்யான வாரிசு யார் என்ற ஒரு போட்டிதான்.அல்லது அந்த இயக்கத்தின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் யார் உரிமை கோரலாம் என்ற ஒரு போட்டிதான்.இந்தப் போட்டி காரணமாகத்தான் கடந்த 13ஆண்டுகளாக நினைவுகூர்தல் தொடர்பாக சர்ச்சைகள் எழுகின்றன.

இதில் பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் பெரும்பாலானவை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கானவைதான்.அவ்வாறான ஒரு பொதுக் கட்டமைப்பு இல்லாத ஒரு பின்னணியில்தான் இப்பொழுது மறுபடியும் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே பிடுங்குப்படத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு சர்ச்சை வரும் என்பதனை ஏற்கனவே எதிர்பார்த்த அரசியற் செயற்பாட்டாளர்கள் சிலர் இதில் சம்பந்தப்பட்ட எல்லாக் கட்சிகளையும் அணுகினார்கள்.குறிப்பாக இந்த சர்ச்சைகளின் மையமாகக் காணப்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு அணிகளையும் அணுகினார்கள். புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான பஷீர் காக்கா இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனோடு உரையாடினார்.தான் மட்டக்களப்புக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் தமது அமைப்பின் பேச்சாளர் சுகாசுடன் உரையாடும்படியும் கஜேந்திரன் சொன்னார்.எனினும்,இது தொடர்பாக அக்கட்சியின் உறுப்பினரும் திலீபனோடு நேரடியாகப் பழகியவருமான பொன் மாஸ்ரரோடு உரையாடுவது அதிகம் பொருத்தமாக இருக்கும் என்று பஷீர் காக்கா கருதினார் போலும். எனவே அவர் பொன் மாஸ்டரிடம் இது தொடர்பாக உரையாடியிருக்கிறார். எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட உடைவு நினைவு கூர்தலில் பிரதிபலிப்பதை அவரைப் போன்ற செயல்பாட்டாளர்களால் தடுக்க முடியவில்லை.மாறாக அரசியல்வாதிகள் பஷீர் காக்காவை போன்ற மூத்த செயற்பாட்டாளர்களை அவமதிக்கும் ஒரு நிலைமைதான் உருவாகியது.

முரண்பாடு பொதுவெளியில் வந்த பின்னர்தான் மணிவண்ணன் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கினார். முரண்பாட்டின் பின் உருவாக்கப்பட்டபடியால் அது முரண்பாட்டின் ஒரு விளைவாகவே பார்க்கப்படும். மாநகர முதல்வர் என்று அடிப்படையில் மணிவண்ணன் அதனை உருவாக்கிய போதிலும், அப்பொதுக் கட்டமைப்பு சுயாதீனமானது என்று அதைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.அது திலீபன் நினைவு நாட்களை சுயாதீனமாக நினைவுகூரும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் கஜேந்திரகுமார் அணியைச் சேர்ந்த பொன் மாஸ்டர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை வைத்துப்பார்த்தால்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு திலீபனின் நினைவு நாட்களில் பிரதிபலிக்கிறது என்றே தெரிகிறது. அது மட்டுமல்ல கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்மக்கள் ஒரு பொதுவான நினைவுகூரும் கட்டமைப்பை உருவாக்குவது எத்துணை சவால்கள் மிகுந்தது என்பதனை நிரூபிப்பதாகவும் அது காணப்படுகிறது.ஆயுத மோதல்களுக்கு பின்னரான கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகமும் அதன் அரசியலும் பண்புருமாற்றம் – transformation – ஒன்றுக்கு போகமுடியாது தியங்குவதையும் அது காட்டுகிறது.

தமிழ்மக்கள் முழு உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் ஓர் ஆயுதப் போராட்டத்தை நடாத்திய மக்கள்.ஆயுதப் போராட்டம் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும்.ஆயுதம் ஏந்தியவர்கள் மட்டுமல்ல,அந்தப் போராட்டத்தை ஏதோ ஒரு விதத்தில் ஆதரித்தவர்கள் எல்லாருக்கும் அதில் கூட்டுப்பொறுப்பு உண்டு.இதில் என்னுடைய கை சுத்தம், உன்னுடைய கையில் இருப்பது ரத்தம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.தியாகி – துரோகி என்ற அளவுகோள்கள் ஊடாக அரசியலைத் தொடர்ந்தும் அணுக முடியாது.நான் தியாகி,நீ துரோகி என்று வகிடுபிரிக்க வெளிக்கிட்டால் சமூகம் என்றைக்குமே ஒரு திரட்சியாக இருக்கமுடியாது.அதாவது தமிழ்மக்களை ஒரு தேசமாக கட்டியெழுப்பவே முடியாது.

இதில் தங்களை தியாகிகளாக காட்டிக் கொள்பவர்கள் அல்லது கடந்த காலத் தியாகங்களுக்கும் வீரத்திற்கும் உரித்து கொண்டாடுபவர்கள் முதலில் அந்த வீரத்தின் தொடர்ச்சியும் தியாகத்தின் தொடர்ச்சியும் தாங்களே என்பதனை நிரூபித்துக் காட்டவேண்டும்.அதை நிரூபிக்கும் இடம் நினைவு கூர்தல் அல்ல. மாறாக கடந்த 13 ஆண்டு கால அரசியலில் தமது சொத்துக்களை இழப்பதற்கும் ரிஸ்க் எடுப்பதற்கும் எத்தனை பேர் தயாராக இருந்தார்கள் என்பதிலிருந்துதான் அதை மதிப்பிடலாம். திலீபனை நினைவு கூர்வது என்பது நல்லூரில் இருக்கும் நினைவுத்தூபியில் சிவப்பு மஞ்சள் கொடியை கட்டுவது மட்டுமல்ல, விளக்குகளை ஏற்றுவது மட்டும் அல்ல,அது அதைவிட ஆழமானது. திலீபனைப்போல தமது அரசியல் இலக்கை அடைவதற்காக உயிரைத் துறக்கத் தயாரான எத்தனை அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? ஒருவர் முன்வரட்டும் பார்க்கலாம்?

இதுதான் பிரச்சினை.தியாகத்துக்கும் வீரத்துக்கும் உரிமை கோரும் அரசியல்வாதிகள் கடந்த 13ஆண்டுகளாக எத்தனை தியாகங்களைச் செய்திருக்கிறார்கள்?எத்தனை பேர் சட்ட மறுப்பாகப் போராடி சிறை சென்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் சொத்துக்களை துறந்திருக்கிறார்கள்?

கடந்த 13ஆண்டுகளில் காணாமல் போனவர்களின் அம்மாக்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.ஆனால் அவர்களை அரசியல் செயற்பாட்டாளர்கள் சாக விடவில்லை.இவைதவிர அரசியல்வாதிகள் என்று பார்த்தால் யாருமே அந்தளவுக்கு துணியவில்லை.

அதற்காக அரசியல்வாதிகள் சாக வேண்டும் என்று இக்கட்டுரை கேட்கவில்லை.உயிரைக் கொடுத்தது போதும்.இனி உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய காலம்.எனவே ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான ஒரு அரசியலுக்குரிய பண்புருமாற்றத்திற்கு தமிழ்மக்கள் தயாராக வேண்டும்.நான் வண்ணாத்து பூச்சி,நீ மசுக்குட்டி என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.ஏனென்றால் எல்லா வண்ணாத்துப் பூச்சிகளும் ஒரு காலம் மயிர்க்கொட்டிகளாக இருந்தவைதான்.

இந்த விடயத்தில் தமிழ்மக்கள் தென்னாபிரிக்காவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.தென்னாபிரிக்காவில் வெவ்வேறு ஆயுத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி ஒருவர் மற்றவரை கொன்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்கும் உணர்ச்சியோடு ஒருவர் மற்றவரைத் தண்டிக்க முற்பட்டிருந்திருந்தால் தென்னாபிரிக்கா தொடர்ந்தும் இறந்த காலத்திலேயே வாழ வேண்டியிருந்திருக்கும்.ஒரு புதிய காலத்துக்கு வந்திருக்கவே முடியாது.இதுவிடயத்தில் தென்னாபிரிக்காவை இறந்த காலத்திலிருந்து புதிய காலத்துக்கு அழைத்து வரத் தேவையான பண்புருமாற்றத்திற்கு மண்டேலா தலைமை தாங்கினார்.

ஈழத்தமிழ் அரசியலிலும் இறந்த காலத்தில் இருந்து ஒரு புதிய காலத்தை நோக்கி செல்வதற்கான பண்புருமாற்றம் தேவை.தனது அரசியல் எதிரியை துரோகி ஆக்குவதால் யாரும் தியாகி ஆகிவிட முடியாது.தியாகம் செய்தால்தான் தியாகியாகலாம்.தனது அரசியல் எதிரியைத் துரோகியாக்குவது என்பது தமிழ்ச் சமூகம் பண்புருமாற்றத்துக்கு தயாரில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. பண்புருமாற்றத்துக்கு தயாரில்லை என்று சொன்னால் கூட்டுக் காயங்களோடும் பிணங்களோடும் இறந்த காலத்திலேயே வாழ வேண்டியதுதான்.பழிவாங்கும் உணர்ச்சியால் பிளவுண்டு ஒரு தேசமாக திரட்சியுறாமல் சிதறிப் போவதுதான்.

சில மாதங்களுக்கு முன் பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய கஜேந்திரகுமார் சிங்கள பௌத்த அரசியலானது பண்புருமாற்றத்துக்குப் போகதவறியதன் விளைவே அதுவென்று கூறியிருந்தார்.உண்மை. அதுபோல தமிழ் அரசியலும் பண்புருமாற்றத்துக்குப் போக வேண்டும்.

கடந்த 13 ஆண்டுகளில் ஒரு பொதுவான நினைவு நாளையோ அல்லது நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பையோ ஈழத்தமிழர்களால் உருவாக்க முடியவில்லை என்பது தமிழ் அரசியல் தொடர்ந்து பண்புருமாற்றத்திற்கு தயாராக இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.இப்பொழுது திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக் கட்டமைப்பானது ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட உடைவைப் பிரதிபதிக்குமா? அல்லது ஒரு புதிய காலத்தை நோக்கிய பண்புருமாற்றத்தைப் பிரதிபலிக்குமா?

Posted in Uncategorized

தமிழ் பகுதிகளில் சீனாவின் ஆர்வம்?

யதீந்திரா
இலங்கையில் சீனாவின் பிரசண்ணம் அதிகம் பேசப்படும் ஒன்று. சர்வதேசளவில் இலங்கையின் நெருக்கடிகள் சீன-சிறிலங்கா உறவின் வழியாகவே நோக்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான பிரதான காரணமாகவும் சீனாவே நோக்கப்படுகின்றது. அண்மையில் அமெரிக்க வெளியக உளவுத் துறையான சி.ஜ.ஏயின் தலைவர் கூட, ஒரு கலந்துரையாடலின் போது, சீனாவுடன் தூரநோக்கின்றி பொருளாதார தொடர்புகளை பேணிக் கொள்ளும் நாடுகள் இலங்கையிலிருந்து கற்றுகொள்ள வேண்டுமென்று கூறியிருந்தார். இலங்கை தூரநோக்கின்றி சீனாவின் திட்டங்களை அனுமதித்ததன் விளைவாகவே, இன்று பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சி.ஜ.ஏயின் தலைவர் இவ்வாறு கூறுவதிலிருந்து எந்தளவிற்கு, சீன விவகாரம் மேற்குலகால் நோக்கப்படுகின்றது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

சீனாவிற்கும் சிறிலங்காவிற்குமான இருதரப்பு உறவு 1957களிலிருந்து நீடிக்கின்றது. ஆனாலும் நாடுகளுக்கிடையிலான சாதாரண உறவாகவே அது இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போதுதான், சீன-இலங்கை உறவில் சடுதியான மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தியாவும் அமெரிக்காவும் இறுதி யுத்தத்தின் போது, ஆயுதளபாட உதவிகளை செய்வதற்கு மறுத்திருந்த நிலையில்தான், சீனா அந்த இடத்தை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டது. இந்த பின்னணியில் நோக்கினால், மகிந்த ராஜபக்ச காலம்தான் சீனாவிற்கும் சிறிலங்காவிற்குமான தேனிலவுக் காலமாக இருந்தது. 1978இலிருந்து இலங்கைக்கு கடனுதவி வழங்கும் நாடுகளில் முதன்மையான இடத்தை ஜப்பானே பெற்றிருந்தது. மகிந்த காலத்தில் ஜப்பானின் இடத்தை சீனா எடுத்துக் கொண்டது.

இலங்கையில் சீனாவின் பிரசண்ணம் முதல் பார்வையில் இந்தியாவிற்கே சிக்கலானது. ஏனெனில் இலங்கை ஒரு உடனடி அயல்நாடு. இந்தியாவின் உடனடி அயல்நாடொன்றிற்குள், சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பது நீண்டகால நோக்கில் இந்தியாவிற்கு சிக்கலானதாகும். அடுத்தது அமெரிக்காவின் நோக்கிலும் சீனாவின் பிரசண்ணம் சிக்கலானது. ஆனால் அமெரிக்காவின் அவதானம் உலகளாவியது. சீனாவின் செல்வாக்கு இந்து சமூத்திர பிராந்தியத்தில் அதிகரித்துச் செல்லுதல் என்னும் நோக்கில்தான் இந்த விடயத்தை அமெரிக்கா நோக்கும். இந்த பின்னணியில்தான், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலர், மைக் பொம்பியோ, இலங்கையின் இறைமையை சீனா, கடலிலும் நிலத்திலும் மோசமாக மீறிவருவதாக குற்றம்; சாட்டிருந்தார். சீனாவின் பிரசண்ணம் சிக்கலானது என்னுமடிப்படையில்தான் இவ்வாறானதொரு கடுமையான அறிக்கையை பொம்பியோ வெளியிட்டிருந்தார். பொம்பியோவின் கூற்றுக்கள், சீனாவின் பிடிக்குள் அகப்பட்டிருக்கும் ஒரு நாடாக இலங்கையை நோக்குவதற்கான பார்வையை முன்வைத்தது. இன்று இலங்கை தொடர்பில் வெளிவரும் உலகளாவிய அவதானம் இந்த பின்புலத்தில்தான் முன்வைக்கப்படுகின்றது.

ஆனால் சீனா இவ்வாறான கடுமையான குற்றச்சாட்டுக்களால் பின்வாங்கும் நிலையிலில்லை. கிடைத்த சந்தர்பத்தை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்னும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது. தெற்கில் வலுவாக காலூன்றிருக்கும் சீனா, தற்போது தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் காலூன்றுவதற்கான வாய்ப்புக்களை தேடுவது போல் தெரிகின்றது. சீனத் தூதுவர், வடக்கு கிழக்கிற்கு விஜயங்களை மேற்கொள்வதில் அதிக ஆர்வத்தை காண்பிக்கின்றார். இவ்வாறானதொரு ஆர்வத்தை முன்னர் சீனா ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. வடக்கிற்கு விஜயத்தை மேற்கொண்டு தமிழ் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்களில் தூதுவர் ஈடுபடுகின்றார். அதே போன்றுதான் கிழக்கிலும். சமூக நலத்திட்டங்களுக்கு நிதியளிப்பதில் ஆர்வம் காண்பிக்கின்றார். இதன் மூலம் முழு இலங்கையிலும் தங்களின் பிரசண்ணத்தை வைத்திருக்க வேண்டுமென்று சீனா விரும்புவது போல் தெரிகின்றது. கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் நலிவுற்றவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான சிறியளவிலான உதவிகளை சீனா செய்திருக்கின்றது. அதே போன்று விவசாய திட்டமொன்றையும் பரீசிலிக்கவுள்ளது.

 

சீனாவிற்கும் தமிழர்களுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புகளுண்டு. இந்த தொடர்புகளை ஆராயும் முயற்சியிலும் சீனா முன்னர் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில்தான் அண்மைக்காலமாக தமிழ் பகுதிகளுடானான தொர்புகளை அதிகரிக்க முயற்சிக்கின்றது. இதுவும் இந்தியாவிற்கு சிக்கலான ஒன்றுதான். ஏனெனில் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், எவர் ஆதரவளித்தாலும், அதனை பெற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருக்கின்றனர். இந்த நிலைமையானது மறுபுறமாக, தமிழர்களுடனான சீனாவின் ஊடாட்டங்களை அதிகரிப்பதற்கு மிகவும் சாதகமானது. குறிப்பாக கிழக்கிலங்கையிலுள்ள மாவட்டங்களில் வாழும் வறுமைநிலையிலுள்ள தமிழ் மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிளை எதிர்கொண்டு வருகின்றனர். கிழக்கிலங்கை தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் பின்தங்கியிருப்பதாகவும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதான பார்வையொன்றும் கிழக்கிலங்கையின் படித்த தமிழர்கள் மத்தியிலுண்டு. இந்த பின்புலத்தில்தான் சீனத் தூதரகத்தை நாடும் போக்கு உருவாகியது. வடக்கு கிழக்கில் வாழும் பின்தங்கிய மக்கள் தொடர்பில் சீனத் தூதரகம் பிரத்தியேக மதிப்பீடுகளையும் செய்திருக்கலாம்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், வரலாற்று ரீதியாக இந்தியாவுடன் மட்டுமே, உணர்வு ரீதியாக பிணைந்திருக்கின்றனர். இதற்கு தமிழ் நாடு ஒரு பிரதான காரணமாகும். இரண்டாவது காரணம் இந்து மதமாகும். வடக்கு கிழக்கு இந்து தமிழர்களை பெரும்பாண்மையாக கொண்டிருக்கும் ஒரு தமிழ் பகுதி. இவ்வாறானதொரு ச10ழலில்தான் பொருளாதார தேவைகளை ஒரு விடயமாகக் கொண்டு, சீனா அதன் நகர்வுகளை மேற்கொள்கின்றது. நிலைமை சீனாவிற்கு சாதகமாகவே இருக்கின்றது. சீனா கொஞ்சம் கொஞ்சமாக முன்னெடுக்கும் திட்டங்கள் காலப் போக்கில், தமிழ் பகுதிகளில் சீன ஆதரவு பிரிவுகளை ஏற்படுத்தினால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் முஸ்லிம்கள் ஒரு அரசியல் பிரிவாக வளர்ச்சியுற்றிருக்கின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவிற்கு நெருக்கமானதொரு மக்கள் பிரிவாக ஒரு போதுமே இருக்கப் போவதில்லை. இந்த பின்புலத்தில் கிழக்கு மாகாணத்தில் இந்தியாவிற்கு நெருக்கமான மக்கள் கூட்டமென்றால், அது இந்து தமிழ் மக்கள் மட்டும்தான். அந்த மக்கள் மத்தியிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்தால் அது இந்தியாவிற்கு நல்லதல்ல.

இந்தியா பல்வேறு உதவிகளை செய்திருக்கின்றது. ஆனால் சமூகத்தோடு ஊடாடக் கூடிய திட்டங்களில் இந்திய தூதரகம் அதிகம் நாட்டம் கொள்வதில்லை. இனியும் அப்படி இருக்க முடியுமா? சர்வதேச அரசுசாரா நிறுவனங்கள் உள்ளுர் நிறுவனங்களின் திட்டங்களுக்கு நிதியளித்தாலும் கூட, அவைகள் எந்தளவிற்கு சரியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன என்பதில் கேள்விகளுண்டு. நிபுனத்தும் வாய்ந்த உள்ளுர் நிறுவனங்கள் மூலம் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதிலும் சந்தேகங்கள் உண்டு.

சீனா ஒவ்வொரு அடியையும் அவசரப்படாமல் எடுத்துவைப்பதாகவே தெரிகின்றது. அதே வேளை சீனாவின் நகர்வுகள் நீண்டகால நோக்கம் கொண்டது. இந்தியாவின் ஆர்வங்களை நன்கு கணித்தே சீனா ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்றது. வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் மீது இந்தியா செல்வாக்குச் செலுத்த முடியும் ஆனால் கிழக்கு அப்படியல்ல. ஏனெனில் கிழக்கிலங்கை தமிழ் மக்கள், தாங்கள் பல்வேறு விடயங்களில் பின்தங்கியிருப்பதாக கருதுகின்றனர். வடக்கிற்கு இருப்பது போன்று புலம்பெயர் ஆதரவு கிழக்கிலங்கை தமிழர்களுக்கில்லை. இந்த இடைவெளி சீனாவிற்கு மிகவும் சாதகமானது.

சீனா என்ன நோக்கில் இலங்கையை பயன்படுத்த விளைகின்றது என்னும் கேள்விகளுடன்தான் அனைத்தும் தொடர்புபட்டிருக்கின்றது. தன்னை நோக்கி மேற்கொள்ளப்படும் மேற்குலக நகர்வுகளை எதிர்கொள்ளுவதற்கான ஒரு தடுப்பரனாக இலங்கையை பயன்படுத்த முயற்சிக்கின்றதா? இந்தியாவுடன் எல்லைப்புறங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதற்கான ஒரு துப்புச் சீட்டாக இந்தியாவின் உடனடி அயல்நாடொன்றை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றதா? இவைகள் ஊகங்கள் மட்டுமே ஏனெனில் புவிசார் அரசியல் மோதல்கள் தொடர்பில் துல்லியமான கணிப்புக்களை எவருமே செய்ய முடியாது. சில அவதானங்களை மட்டுமே முன்வைக்கலாம். புவிசார் அரசியல் போட்டிகளில் எதுவும் நடக்கலாம். ஆனால் சீனா அண்மைக்காலமாக, தமிழ் பகுதிகள் மீது ஆர்வம் காண்பித்துவருகின்றது என்பது மட்டும் உண்மை. உதவித் திட்டங்கள் மூலம், சீனா தமிழ் மக்களுடன் நெருங்க முயற்சிக்கின்றது – நெருங்கும் என்பதும் உண்மை.

தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஆற்றல் – உண்மைதானா?

யதீந்திரா
ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சில தனிநபர்கள் மீதான தடையை நீக்கியிருக்கின்றது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இது தொடர்பில் நான் முன்னரே குறிப்பிட்டிருக்கின்றேன். இதனை வெறுமனே பொருளாதார நெருக்கடியின் விளைவாக மட்டும் நோக்கினால், அது முழுமையான பார்வையாக இருக்காது. ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் சிலர் மீதான தடைநீக்கப்பட்டது. கோட்;டபாய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்ததை தொடர்ந்து மீளவும் தடைவிதிக்கப்பட்டது. இப்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதை தொடர்ந்து மீளவும் தடைநீக்கப்பட்டிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் புலம்பெயர் சமூகத்தினுடான ஊடாட்டங்களை அதிகரிக்க விரும்புகின்றது. அதற்கான கதவுகளை திறந்து வைக்க விரும்புகின்றது. ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் இதற்கான பகுதியளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதில் சில வெற்றிகளையும் அரசாங்கம் எட்டியிருந்தது. தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பகுதியினர் கொழும்புடன் உரையாடுவதற்கு இணங்கியிருந்தனர்.

இதன் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை ஒரு புதிய விடயமும் இடம்பெறவுள்ளது. அதாவது புலம்பெயர் அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதனையும் வெறுமனே பொருளாதார நெருக்கடியை கையாளுவதற்கான ஒரு தந்திரோபாயமாக மட்டுமே நோக்குதல் சரியல்ல. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் புலம்பெயர் சமூகத்தை ஒரு தரப்பாக அணுக விளைகின்றது. இதில் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு. தமிழ் புலம்பெயர் சமூகம் தாயகத்தின் சமூக பொருளாதார அரசியல் விடயங்களில் உத்தியோகபூர்வமாக தலையீடு செய்வதற்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. ஆனால் மறுபுறம் புலம்பெயர் சமூகத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு பிரத்தியேக இடத்தை வழங்குகின்ற போது, தாயகத்திலுள்ள அரசியல் தரப்புக்களும் புலம்பெயர் அமைப்புக்களும் ஒரு புள்ளியில் சந்தி;க்காதுவிட்டால், அது இறுதியில் தாயக அரசியலை பலவீனப்படுத்தவே பயன்படும். இந்த விடயத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் மிகுந்த நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் அரசாங்கம் ஒரு தந்திரோபாய நகர்வை மேற்கொள்ளுகின்றது. அதனை எதிர்கொள்ள வேண்டுமாயின் எதிர்-தந்திரோபாயங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

முதலாவது தற்போது அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது முற்றிலும் தமிழ் புலம்பெயர் சமூகத்தை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல. புலம்பெயர் அலுவலகம் என்பது, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை அணுகுதல் என்னும் இலக்கையே கொண்டிருக்கின்றது. சிறி.நரேந்திரமோடி பிரதமரானதைத் தொடர்ந்து, இந்திய புலம்பெயர் சமூகத்துடன் ஊடாடும் நிகழ்சிதிட்டமொன்றை அவர் முன்னெடுத்திருந்தார். கிட்டத்தட்ட இதுவும் அவ்வாறான ஒன்றுதான். ஜரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் இலங்கையர்களை, தங்களது சொந்த நாட்டின் வளர்ச்சியின் மீது ஈடுபாடுள்ளவர்களாக மாற்றுவதும், அவர்கள் இலங்கையின் சமூக பொருளாதார அரசியல் விடயங்களில் ஊடாடுவதற்கான சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதுமே புலம்பெயர் அலுவலகத்தின் பிரதான இலக்காக இருக்கப் போகின்றது. இதில் தமிழர்கள் பிரதானமாக நோக்கப்படுவர் ஏனெனில் ஒப்பீட்டடிப்படையில் தமிழ் புலம்பெயர் சமூகமளவிற்கு சிங்கள சமூகம் வளர்சியடைந்திருக்கவில்லை.

இதனை நமது புலம்பெயர் சமூக அமைப்புக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன? வழமைபோல் சாதாரணமாக எதிர்த்துவிட்டு, கடந்து போகும் அணுகுமுறையை கைக் கொள்ளப் போகின்றோமா அல்லது, ஒரு எதிர்-தந்திரோபாய அடிப்படையில் கையாளப் போகின்றோமா? ஒரு விடயத்தை தெளிவாக குறித்துக் கொள்ள வேண்டும். அதாவது, நமது புலம்பெயர் அமைப்புக்கள் இதனை நிராகரிக்கலாம் ஆனால், உடன்பட்டுச் செல்பவர்களுடன் ஊடாடுவதன் மூலம், புலம்பெயர் அலுவலகத்தை இயக்க முடியும். குறிப்பாக ஜரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் சிங்களவர்கள் இதற்கு பெருமளவில் ஆதரவை வழங்குவர். ஆனால் பொதுவாக புலம்பெயர் சமூகத்துடனான ஊடாட்டமாகவே இது காட்சிப்படுத்தப்படும்.

யூத டயஸ்போறா போன்ற நிலையில் ஈழத் தமிழர்கள் இல்லாவிட்டாலும் கூட, கருத்தில்கொள்ளத்தக்க ஒரு டயஸ்போறாவாக, புலம்பெயர் ஈழத் தமிழர்கள் திரட்சிபெற்றிருக்கின்றனர். காலப் போக்கில் இந்த நிலையில் மேலும் வளர்சியேற்படலாம். ஆனால் அந்த வளர்ச்சியென்பது தாயகத்தில் வாழும் மக்களுக்கு பயன்படவில்லையாயின், புலம்பெயர் சமூகமென்பது பயனற்ற ஒன்றாகிவிடும் ஆபத்துண்டு. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில், ஈழத் தமிழர் புலம்பெயர் சமூகம் பெருமளவு திரட்சிபெற்ற சமூகமாக இருந்தது. தாயகம் தொடர்பான ஈடுபாடும் அர்ப்பணிப்பும் மேலோங்கியிருந்தது. 2009இற்கு பின்னர் இந்த நிலைமை பெருமளவு வீழ்சியடைந்துவிட்டது. பொதுவாக தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் என்று கூறிக்கொண்டாலும் கூட, இதில் பல பிரிவுகளும் பார்வைகளும் உண்டு. இந்த நிலையில்தான், கொழும்பு, புலம்பெயர் சமூகத்தை ஒரு தரப்பாக அணுகும் தந்திரோபாயமொன்றை முன்னெடுக்க முயல்கின்றது.

 

மற்றவர்கள் எங்களை நோக்கி வருகின்ற போது, அதனை எதிர்கொள்ளாமல் விலகிக் கொள்வது ஒன்று. இரண்டு அதனை எதிர்கொண்டு, அவர்கள் திறக்கும் கதவுகளால் சென்று, அதனை கையாள முற்படுவது என்பது இன்னொன்று. ஆனால் இந்த விடயத்தில் விலகிக் கொள்வது புத்திசாதுர்யமான அணுகுமுறையாக இருக்க முடியுமா?

தமிழ் புலம்பெயர் சமூக அமைப்புக்கள் தங்களை ஒரு பலமாக முன்னிறுத்துவதற்கான ஒரு வாய்ப்பு நமது கதவை தட்டுகின்றது. இதனை எவ்வாறு கையாளலாம்? இதனை கையாளுவதற்கு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் ஒரு வேலைத்திட்டத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். குறுகிய கால நிபந்தனைகளின் அடிப்படையில் விடயங்களை கையாள முற்படலாம். தாயகத்திலுள்ளவர்களும், புலம்பெயர் அமைப்புக்களும் இணைந்து குறித்த குறுகியகால நிபந்தனைகளை திட்டமிடலாம். புலம்பெயர் அலுவலகம் என்பது அடிப்படையில் மத்திய அரசின் கீழுள்ள கட்டமைப்பாகவே இருக்கும். தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் தமிழர் தாயகத்துடன் நேரடியாக ஊடாடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. மாகாண சபைகள் இயங்குமாக இருந்தால் அதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக்கும்.

இவ்வாறானதொரு பின்னணியில் புலம்பெயர் அலுவலகத்துடன் தமிழ் புலம்பெயர் சமூகம் எவ்வாறு இணைந்து செயற்பட முடியும்? இந்த இடத்தில் தமிழ் புலம்பெயர் சமூகம் ஒரு நிபந்தனையை முன்வைக்க முடியும். அதாவது, வடக்கு கிழக்கிலுள்ள சுயாதீன அமைப்புக்களுடன் இணைந்து தடையற்ற வகையில் செயற்படுவதற்கான சந்தர்பங்களை புலம்பெயர் அலுவலகம் ஏற்டுபடுத்த வேண்டும். தேசிய பாதுகாப்பு கருதி சில கண்காணிப்புக்கள் (மறைமுகமாக) இருந்தாலும் கூட, தமிழ் புலம்பெயர் சமூகத்தின் தாயக செயற்பாடுகளில் எவ்வித இடையூறுகளும் இருக்கக் கூடாது. இதற்கான உத்தரவாதங்களை புலம்பெயர் அலுவலகம் உறுதிப்படுத்த வேண்டும். இப்படியான கோரிக்கைகளை முன்வைக்கலாம்.

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்று சாத்தியப்படும் வரையில், தமிழ் புலம்பெயர் சமூகம் மத்திய அரசின் அங்கங்களோடு இணைந்து செயற்பட முடியாதென்னும் நிபந்தனையை முன்வைக்கலாம். இதனை நிராகரிப்பதற்கான வாய்ப்புக்கள் தற்போதைய சூழலில் இல்லை. ஒரேயடியாக நிராகரித்துவிட்டுச் செல்வதற்கு பதிலாக, இவ்வாறான அணுகுமுறையின் மூலம் ஊடாடுவது, ஒரு தந்திரோபாய அணுகுமுறையாக இருக்கின்ற அதே வேளை, புலம்பெயர்; சமூகம், தாயகத்திலுள்ள அமைப்புக்களுடன் இணைந்து, இயங்குவதற்கான வாய்ப்பும் உருவாகும் ஒரு வேளை ஒரு கட்டத்தில் இது தோல்வியுற்றாலும் கூட, தமிழ் புலம்பெயர் சமூகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஏனெனில் ஏற்கனவே செய்யப்பட்ட பணிகளால் தாயக மக்கள் நன்மடைந்திருப்பர்.

குறுகிய கால நிபந்தனைகளை அரசாங்கம் எவ்வாறு நிறைவேற்றுகின்றது என்பதற்கு அமைவாக, தமிழ் புலம்பெயர் சமூகம் அதன் ஊடாட்டத்தை அதிகரிக்கலாம். தமிழ் புலம்பெயர் சமூகம் ஒரு பலமாக திரட்சிபெற்றிருக்கின்றது என்பதை நிரூபிப்பதற்கான தருணமிது. ஆனால் இதனை போதிய தயாரிப்புடனும் தந்திரோபாயத்துடனும் அணுக வேண்டும். உணர்சிவசப்பட்டும் அணுகக் கூடாது அதே வேளை, வழமையான எதிர்பரசியல் அணுகுமுறையின் ஊடாகவும் அணுகக் கூடாது. அத்துடன் போதிய வெளிப்படைத் தன்மையில்லாமல், ஒவ்வொருவரும் தங்களுக்கிருக்கும் தொடர்புகளின் வழியாகவும் அணுகக் கூடாது. இது தொடர்பில் விரிவான கலந்தாலோசனைகள் அவசியம்.

புலம்பெயர்ந்த தமிழர்களால் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்கமுடியுமா?

நிலாந்தன்

கடந்த இரு தசாப்தகால அனுபவத்தின்படி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் அதிகரிப்பதுண்டு.எனினும் இம்முறை அவர் அதிர்ஷ்டலாபச் சீட்டில் ஜனாதிபதியாக வந்ததும் தென்னிலங்கையில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் சுருங்கியது எனலாம்.மக்கள் எழுச்சிகளின் காரணமாக அந்த வெளி கடந்த மூன்று மாதங்களாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு அதிகரித்துவந்தது. ஆனால் ரணில் அதைச் சுருக்கி விட்டார்.அரகலயவை முறியடிப்பதில் அவர் முதற்கட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறார்.அதனால் அவசரகாலச் சட்டத்தைத் நீக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்.

இவ்வாறு தென்னிலங்கையில் மக்கள் எழுச்சிகளின் விளைவாக அதிகரித்து வந்த ஜனநாயக வெளியைக் குறுக்கிய ஒருவர்,எப்படித் தமிழ்மக்களுக்கு ஜனநாயக வெளியை அதிகப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது?ஆனால் தென்னிலங்கை நிலவரமும் தமிழ்ப் பகுதிகளின் நிலவரமும் ஒன்று அல்ல. தென்னிலங்கையில் போராட்டத்தை தொடர்ந்து அனுமதித்தால் ரணில் தன்னுடைய ஆட்சியை பாதுகாக்க முடியாது. அதேசமயம் தமிழ் பகுதிகளில் அவ்வாறான போராட்டங்கள் எவையும் இடம்பெறவில்லை. மேலும் ஜெனிவாக் கூட்டத்தொடரை நோக்கி அவ்வாறு தமிழ் மக்களின் அரசியலில் ஜனநாயக வெளியை அதிகப்படுத்த வேண்டிய தேவை ரணிலுக்கு உண்டு.கடந்த நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சிக் காலத்தில் அவர் அதைச் செய்தார்.அவர் திறந்துவிட்ட அதிகரித்த ஜனநாயக வெளிக்குள்தான் தமிழ் மக்கள் பேரவை எழுச்சி பெற்றது, இரண்டு எழுக தமிழ்கள் இடம்பெற்றன.

இம்முறையும் அவர் அவ்வாறு தமிழ் மக்களுக்கு ஜனநாயக வெளியை அகலப்படுத்துவாரா என்று பார்க்க வேண்டும்.கடந்தவாரம் அவர் சில புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீதான தடைகளை அகற்றினார்.அதை அவர் நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சிக் காலத்திலும் செய்தார்.அதைவைத்து அவர் ஜனநாயக வெளியை அதிகப்படுத்துகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா? இல்லை. ஏனென்றால் புலம்பெயர் தமிழர்கள்-தமிழ் டயஸ்பொறா- இப்பொழுது நாட்டுக்குத் தேவை. புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்தால் நாட்டின் செல்வச்செழிப்பை அதிகப்படுத்தலாம்.நாடு இப்பொழுது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் தேவை என்பதனை ரணில் மட்டுமல்ல கோட்டாபயவும் ஏற்றுக் கொண்டிருந்தார்.

தமிழ் டயாஸ்போற எனப்படுவது தட்டையான, ஒற்றைப்படையான ஒரு சமூகம் அல்ல. அதில் பல அடுக்குகள் உண்டு. இப்பொழுது தடை நீக்கப்பட்ட எல்லா அமைப்புகளும் நபர்களும் முழுத்தமிழ் டயஸ்போறவையும் பிரதிபலிக்கிறார்களா என்ற கேள்வி உண்டு.மேலும்,ராஜபக்சவால் தடை செய்யப்பட்ட உலகத்தமிழர் அமைப்பின் தலைவரான மதகுரு யாழ்ப்பாணத்தின் தெருக்களில் லேடிஸ் பைசிக்கிளில் வழமைபோல நடமாடினார். அவர் விடயத்தில் தடை ஒரு நடைமுறையாகவே இருக்கவில்லை. எனவே தடை நீக்கமும் அவ்வாறு சம்பிரதாயபூர்வமானதா ?எதுவாயினும், ,இதுதொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் என்ன செய்ய வேண்டும்?

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கு முண்டியடித்துக் கொண்டு வரத்தேவையில்லை. நிதானமாக முடிவெடுக்கலாம். இந்த அரசாங்கமும் ஒரு நாள் மாறும்.மாறும்போது எப்படி கோட்டாபய வந்ததும் ரணில் தடை நீக்கிய அமைப்புக்கள்,தனி நபர்கள் மீண்டும் தடை செய்யப்பட்டார்களோ,அப்படி இந்த நிலையும் மாறலாம். எனவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் ஆட்சி மாற்றங்களைக் கண்டு மயங்கத் தேவையில்லை. மாறாக இந்த சந்தர்ப்பத்தை வெற்றிகரமாகக் கையாண்டு எப்படி ஒரு அரசுக் கட்டமைப்பு மாற்றத்துக்கான பேரத்தைப் அதிகப்படுத்தலாம் என்று சிந்திக்க வேண்டும்.தமிழ் முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவது என்று சொன்னால் அதற்கு ஓர் அரசியல் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.தமிழ் மக்களை நாட்டின் பொருளாதாரத்தில் பங்காளிகளாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.அதாவது தமிழ்மக்களை முதலீட்டாளர்களாக இணைப்பதற்கு பதிலாக தமிழ்மக்களை அரசியற் பொருளாதாரப் பங்காளிகளாக இணைக்கவேண்டும்.அதற்கு முதலில் அரசியல் தீர்வு ஒன்று வேண்டும்.அரசுக்கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இப்பொழுது முதலீடு செய்தவர்கள் சில ஆண்டுகளின் பின் அவற்றை திருப்பி எடுத்துக் கொள்ளும் ஒரு நிலைமை வரக்கூடாது. எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வு தரப்படாத ஒரு பின்னணிக்குள் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு ரணிலின் அழைப்பை ஏற்கத்தேவையில்லை. பதிலாக இத்தருணத்தை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்கவின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம். ஒரு தீர்வை முதலில் கொண்டு வாருங்கள், அதற்குரிய நல்லெண்ண சூழலை முதலில் உருவாக்குங்கள். உதாரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்,கைதிகளை விடுதலை செய்யுங்கள், காணிகளை விடுவியுங்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிவாரணத்தை வழங்குங்கள்.இவற்றின் மூலம் ஒரு நல்லெண்ண சூழலை பயமற்ற சூழலை ஏற்படுத்துங்கள்.அதைத்தொடர்ந்து அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குங்கள். அதில் புலம்பெயர்ந்த தமிழர்களையும் பங்காளிகள் ஆக்குங்கள். ஒரு தீர்வு கிடைக்கட்டும். அதன் பின் நாங்கள் முதலீடு செய்கிறோம் என்று நிபந்தனை விதிக்கலாம்.

தமிழ்மக்கள் ஏன் புலம்பெயர்ந்தார்கள்? ஏனென்றால் நாட்டுக்குள் பாதுகாப்பு இல்லை என்பதனால்தான்.கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக தென்னிலங்கையில் தமிழ் மக்களின் சொத்துக்களை குறி வைத்து தாக்குதல்களை நடத்தப்பட்டன. அதுதான் பின்னாளில் முஸ்லிம்களுக்கும் நடந்தது..தென்னிலங்கையில் சிங்களவர்கள் அல்லாத ஏனைய இனங்கள் நிதி ரீதியாக செழித்தோங்குவதைக் கண்டு சகிக்க முடியாத ஒரு கூட்டு மனோ நிலை சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திடம் உண்டு. அது இப்பொழுது மாறிவிட்டதா?

அந்த மனநிலையின் விளைவாகத்தான் தமிழ் மக்கள் நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிக்காத ஒரு நிலை அதிகரித்தது.ஆனால் புலப்பெயர்ச்சியானது சிங்கள பெருந்தேசியவாதம் கற்பனை செய்ய முடியாத வேறு ஒரு வளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.புலம்பெயர்ந்து சென்ற சென்ற தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில் மிக விரைவாக தங்களை ஸ்தாபித்துக் கொண்டார்கள்.நிதி ரீதியாக செழித்தோங்கினார்கள்.சில தசாப்தங்களுக்கு முன்பு ரூபாய்களோடு முதலாளிகளாக காணப்பட்டவர்கள்,புலம்பெயர்ந்த பின் டொலர்களை விசுக்கும் பெரு வணிகர்களாக மாறினார்கள்.எந்தத் தமிழர்களை தென்னிலங்கையில் இருந்து அகற்றவேண்டும் என்று திட்டமிட்டு இன அழிப்பு முன்னெடுக்கப்பட்டதோ, அதே தமிழர்கள் இப்பொழுது கொழும்புக்கு திரும்பி வந்து தனது டொலர்களால் காணிகளையும் கட்டிடங்களையும் விலைக்கு வாங்குகிறார்கள். சிங்கள மக்கள் விற்கும் காணிகளை வாங்கி அங்கெல்லாம் அடுக்குமாடித் தொடர்களைக் கட்டி வருகிறார்கள். இங்கே ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

எதிரிசிங்க குரூப் ஒஃப் கொம்பனி என்று அழைக்கப்படும் ஒரு பிரம்மாண்டமான வணிக நிறுவனம் தென்னிலங்கையில் வந்துரோத்து நிலையை அடைந்தது. நூற்றுக்கணக்கான நகைக்கடைகள், சுவர்ணவாகினி என்று அழைக்கப்படும் ஊடக நிறுவனம் போன்றவற்றைச் சொந்தமாக கொண்டிருந்த எதிரிசிங்க குரூப் ஒஃப் கொம்பனி வங்குரோத்தானபோது அதை புலம்பெயர்ந்து வாழும் ஒரு தமிழ் பெரு வணிகர் விலைக்கு வாங்கினார். அவர் ஏற்கனவே ஒரு ஊடகப் பெரு வணிகரும் ஆவார். இவ்வாறு தென்னிலங்கையில் வங்குரோத்தாகும் கொம்பனியை விலைக்கு வாங்கும் அளவுக்கு தமிழ் மக்கள் நிதி ரீதியாகப் பலம் மிக்கவராக காணப்படுகிறார்கள். புலப்பெயர்ச்சி தமிழ் மக்களை ஒரு விதத்தில் சிதறடித்திருக்கிறது.இன்னொரு விதத்தில் உலகில் மிகவும் கவர்ச்சியான,பலம்வாய்ந்த ஒரு டயஸ்பொறவை உருவாக்கியிருக்கிறது.இந்த வளர்ச்சியை சிங்களபௌத்த பெருந்தேசியவாதம் கணித்திருக்கவில்லை.அதன் விளைவாகத்தான் புலம்பெயர்ந்த தமிழர்களை நாட்டில் முதலீடு செய்யுமாறு கோட்டாவும் கேட்டார். இப்பொழுது ரணிலும் கேட்கிறார்.

மேலும் ஜெனிவாவில் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள்தான். எனவே அவர்களோடு சுமுகமான உறவை வைத்துக் கொள்வதன்மூலம், அரசாங்கம் ஜெனிவாவில் தனக்கு ஏற்படக்கூடிய நெருக்கடியின் அளவைக் குறைக்கலாம்.

ஆனால் எதுகாரணமாக தமிழ்மக்கள் நாட்டின் பொருளாதாரத்தில் முழு அளவுக்குப் பங்களிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டதோ,அக்காரணங்களை அகற்ற ரணில் விக்ரமசிங்க தயாரா என்ற கேள்விக்கு விடை இல்லாமல் புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டில் முதலீடு செய்ய முன்வரக்கூடாது. அதுபோலவே ஜெனிவாவில் அரசாங்கத்தின் மீது நெருக்கடியைப் பிரயோகிக்கும் செய்முறைகளையும் நிறுத்தக்கூடாது.

இந்தவிடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலில் ஓர் அமைப்பாகத் திரள வேண்டும். அதன்பின் அந்த அமைப்பானது அனைத்துலகை வழமைகளின் ஊடாக அரசாங்கத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.அப்பொழுது இனப்பிரச்சினைக்கான தீர்வை ஒரு முக்கிய முன் நிபந்தனையாக முன் வைக்கலாம். தனித்தனி அமைப்பாக தனிநபர்களாக அரசாங்கத்தோடு டீல் களுக்குப் போவதற்கு பதிலாக ஒரு அமைப்பாகத் திரண்டு அதைச் செய்ய வேண்டும்.குறிப்பாக ரணில் விக்ரமசிங்க டயஸ்போறாவை பிரித்துக் கையாள வாய்ப்பளிக்கக்கூடாது.

நாட்டுக்குள் முதலீடு செய்வது என்பது இலங்கைத்தீவின் பொருளாதாரத்தில் டயஸ்பொறா ஒரு பங்காளிகளாக மாறுவது என்ற பொருளில் அல்ல.அதைவிட ஆழமானபொருளில் ,தமிழ்த்தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற நீண்ட கால நோக்குநிலையிருந்தே திட்டமிடப்படவேண்டும்.அதாவது முதலீட்டின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவது.யூதர்கள் கடந்த நூற்றாண்டில் அவ்வாறு முதலீட்டின்மூலம் ஒரு தேசத்தை-இஸ்ரேலைக்- கட்டியெழுப்பினார்கள்.எனவே புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் இலங்கைத்தீவின் பொருளாதாரத்தில் பங்காளிகளாவது என்று சொன்னால்,அதைத் தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற உள்நோக்கத்தோடு திட்டமிடவேண்டும்.

மாணவர் செயற்பாட்டாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

அமைதியான போராட்டங்களில் எந்தவொரு தடையையும் ஏற்படுத்தப்போவதில்லை என அறிவித்திருந்த அரசாங்கம், அரசியலமைப்பு, சர்வதேச நியாயங்களுக்கேற்ப பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயகம் என்பவற்றை, அவசரகால சட்டத்தை பயன்படுத்தியமை ஊடாக ஒடுக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்படுமென அறிவித்த ஜனாதிபதி, விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, 07 மாவட்டங்களுக்கு முப்படையினரை அழைத்துள்ளமை மூலம் அவரது கருத்திற்கும் செயற்பாட்டிற்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவது புலனாவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள்?

யதீந்திரா

ரணில் விக்கிரமசிங்க அவரது, நீண்டநாள் இலக்கில் வெற்றிபெற்றிருக்கின்றார். ஆனாலும் இதனை முழுமையான வெற்றியென்று கூறவிடமுடியாது. ஏனெனில் அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு இந்த இடத்தை அடையவில்லை. ஆனாலும் கிடைத்த இடத்தை கெட்டியாக பற்றிக்கொள்வதும் அதே வேளை, எதிர்காலத்தில் முடிந்தால் மீண்டுமொருமுறை சதுரங்கத்தை ஆடுவதும்தான் அவருக்கு முன்னாலுள்ள தெரிவுகளாக இருக்கின்றன. எனவே அடிப்படையில் ரணில் ஆடப்போவது முற்றிலும் தென்னிலங்கைக்கான அரசியல் ஆட்டம்தான். எனவே இதில் தமிழர்கள் அதிகம் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இந்தத் தென்னிலங்கை ஆட்டத்திற்குள் எந்தளவு தூரம் போகலாம், போகக் கூடாது என்பதில் தமிழ் தேசிய தரப்பினர் மத்தியில் தெளிவான புரிதல் இருக்க வேண்டியது அவசியம். 2015 ஆட்சி மாற்றத்திலிருந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு அளவுக்கதிகமாக தென்னிலங்கை அரசியலுக்குள், தேவையற்ற வகையில் தலையீடு செய்துவருகின்றது. சுமந்திரன்தான் இதற்கான பிரதான காரணமாகும்.

சுமந்திரனின் வரவுக்கு முன்னர் இவ்வாறானதொரு போக்கு தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருந்ததில்லை. இதற்கு சுமந்திரனின் பின்னணியும் ஒரு பிரதான காரணமாகும். சுமந்திரன் அடிப்படையிலேயே தமிழ் தேசிய அரசியல் பின்புலம் சார்ந்த ஒருவரல்ல. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தமிழ் தேசிய அரசிலுக்குள் இணைந்து கொண்டவர். இப்போது ரணில் விக்கிரமசிங்கவின் நிலையில்தான், 2010இல் சுமந்திரனும் இருந்தார். ராஜபக்சக்களின் வீழ்சி, ரணிலுக்கு வாய்ப்பை வழங்கியது போன்றுதான், புலிகளின் வீழ்ச்சி சுமந்திரனுக்கு மட்டுமல்ல விக்கினேஸ்வரனுக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், சம்பந்தனும் சுமந்திரனும் எதிர்பார்த்தது போன்று விக்கினேஸ்வரன் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்கு வந்ததும், விக்கினேஸ்வரன் அவரது இயல்புக்கு மாறானதொரு கடும்போக்கு நிலைப்பாட்டை தழுவிக் கொண்டார். இப்போது அதனை தொடர்ந்தும் கடைப்பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றார்.

விக்கினேஸ்வரனோடு ஒப்பிட்டால் சுமந்திரன், வலிந்து தேசியவாதியாவதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை. சுமந்திரன் ஒரு வேளை அப்படி நடிக்க முற்பட்டிருந்தாலும் கூட, அது அதிக காலத்திற்கு நீடிக்காது. ஆனால் இந்த அரசியல் நடிப்பில் இப்போதும் கொடிகட்டிப் பறக்கும் ஒருவரென்றால், அது சிவஞானம் சிறிதரன் மட்டும்தான். அவரால் பிரபாகரனுக்கு பிறந்தநாளும் கொண்டாட முடிகின்றது, உருத்திரகுமாரனோடு சேர்ந்து பொதுசன வாக்கெடுப்பு தொடர்பிலும் பேச முடிகின்றது பின்னர் ரணில்விக்கிரமசிங்கவுடன், அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்போவதாகவும் கூற முடிகின்றது. இவ்வாறான நடிப்பாற்றல் எல்லோருக்கும் வாய்க்காது.

2015, தேர்தலில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்தே, சுமந்திரனின் செல்வாக்கு கூட்டமைப்பிற்குள் வலுவடைந்தது. தேசிய பட்டியல் மூலம் சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கு ஒரு இடத்தை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் இருந்த போதிலும் கூட, சம்பந்தன் அதனை விரும்பவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறை என்பது, முற்றிலும், கொழும்மை அனுசரித்து – முக்கியமாக ரணில் விக்கிரமசிங்கவோடு இணைந்து பயணிப்பாதாகவே இருந்தது. இந்தக் காலத்தில்தான், சுமந்திரனின் கொழும்பு செல்வாக்கு கணிசமாக வலுவடைந்தது. ஒரு தமிழ் தேசிய கட்சியின் பிரதிநிதி என்பதற்கு அப்பால், ஒரு இலங்கை அரசியல்வாதியாக சுமந்திரன் வளர்சியடைந்தார். சுமந்திரன் அதிகம் தென்னிலங்கை அரசியலுக்குள் ஆர்வம் காண்பிப்பதை, இந்த பின்புலத்திலிருந்துதான் நாம் நோக்க வேண்டும்.

ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள் பற்றி பேசும்போது, இந்த விடயங்கள் எதற்காக என்னும் கேள்வி எழலாம். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில், ரணிலுக்கும் சுமந்திரனுக்கும் நெருக்கமான உறவிருந்தது. ரணிலுக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கூட்டமைப்பு கடுமையாக விரோதித்துக் கொண்டது. ஆனால் இப்போது, ரணில் தொடர்பில் சுமந்திரன் வெளிப்படுத்திவரும் அபிப்பிராயங்களை உற்றுநோக்கினால், தென்னிலங்கையிலுள்ள சிங்கள அரசியல்வாதிகள் கூட, சுமந்திரனை போன்று ரணிலை விமர்சிக்கவில்லை. இதன் பின்னணி என்ன? சுமந்திரன் தென்னிலங்கை அரசியலுக்குள் அதிகம் தலையீடு செய்ய முற்பட்டதன் விளைவாகவே, ரணிலுடன் முரண்பட வேண்டியேற்பட்டிருக்கின்றது. அது எவ்வாறான தலையீடு என்பதை நம்மால் அறிய முடியாவிட்டாலும் கூட, சுமந்திரன் மேற்கொண்ட சில நகர்வுகள், ரணிலின் தென்னிலங்கை நகர்வுகளுடன் நேரடியாக உரசியிருக்கின்றது. இல்லாவிட்டால் இந்தளவிற்கு ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்க வேண்டிய தேவையில்லை.

ரணிலின் தென்னிலங்கை நகர்வுகள் வெள்ளிடைமலை. அதாவது, தற்போது கிடைத்திருக்கும் அதியுச்ச அதிகாரத்தை முழு அளவில் பிரயோகித்து, தன்னை நிலைநிறுத்திக் கொள்வது. அவ்வாறு தனது அதிகாரத்தை அதியுச்சளவில் பிரயோகிக்க வேண்டுமாயின், அரசு பலமாக இருக்க வேண்டும். அரசு பலமாக இருக்க வேண்டுமாயின் அரசிற்கு எதிரான எதிர்ப்புக்களை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டு. இதனை கருத்தில்கொண்டே, போராட்டக்காரர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் வளர்சியடைவதை ரணில் தடுக்க முற்படுகின்றார். மேலும் இடதுசாரி பின்புலம் கொண்ட சக்திகள் கொழும்பில் எழுச்சியடைவதை இந்தியா மற்றும் மேற்குலம் ஒரு போதும் ஆதரிக்காது. தாராளவாத பின்புலம் கொண்டவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு கட்டத்திற்கு மேல் எதிர்க்க மாட்டார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில்தான், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, பொன்சேகா, போராட்டத்தை தன்வசப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றார். பொன்சேகாவின் தலைமைக்கு போராட்டம் கைமாறுமாயின், அது முற்றிலும் கட்சி அரசியலுக்குள் சென்றுவிடும். ஆனால் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழ வேண்டிய உடனடித் தேவையை எதிர்கொண்டிருக்கும் மக்களோ, மூச்சுவிடுவதற்கான அவகாசத்தை தேடியலைகின்றனர். இந்த நிலையில் இவ்வாறான போராட்டங்களை மக்கள் வெறுக்கவே அதிக வாய்ப்புண்டு. இந்த விடயத்தையும் ரணில் சரியாக கணித்திருப்பார். மேலும் ரணில் பிரச்சினைகளை தீர்க்கக் கூடியவர் என்னும் அப்பிராயம் மத்தியதர வர்கத்தினர் மத்தியிலுண்டு. இதுவும் ரணிலுக்கு சாதகமான ஒரு விடயமாகும்.

 

ரணிலின் தென்னிலங்கை நகர்வுகளுக்கு இரண்டு இலக்குகள் இருக்கலாம். ஒன்று, வீழ்ந்துகிடக்கும் ஜக்கிய தேசியக் கட்சியை தூக்கிநிறுத்த முயற்சிப்பது. இதுதான் ஜக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம். அதே வேளை, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியாக தன்னை நிலைநிறுத்துவது. தற்போதுள்ள நிலையில், ராஜபக்சக்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பில்லை. இந்த நிலையில் அனைவரது ஆதரவுடனும் ரணில் விக்கிரமசிங்க ஒரு பொது வேட்பாளராக வருவதற்கான வாய்ப்பையும் குறைத்துமதிப்பிட முடியாது.

ஆனால் அனைத்தும் பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகொள்வதில்தான் தங்கியிருக்கின்றது. மொத்தத்தில், இது ரணிலுக்கான இறுதி அரசியல் சதுரங்கம். ரணிலை பொறுத்தவரையில் – அரசியல் சதுரங்க ஆட்டத்தை விடவும் மேலானது. அதுவே சற்று காலம் எடுக்குமென்றால், அரசியல் ஒரு மரதன் ஓட்டம் போன்றது. கடுமையான ஆட்டமெனில், அது ரகர் விளையாட்டு போன்றது. இரத்தம்பார்க்கும் விளையாட்டு எனில் பொக்சிங் போன்றது. அனைத்து ஆட்டத்தையும் ரணில் ஆட வேண்டியிருக்கின்றது. மற்றவர்கள் எவரையும் விடவும், அரசியலில் இந்த ஆட்டங்களை ரணில் நன்கு கற்றுத்தேறியவர். ரணிலின் தென்னிலங்கை ஆட்டத்திற்குள் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காமல் இருப்பதுதான், தமிழ் தேசிய தரப்பினருக்கு நல்லது. ஆட்டத்தின் சூட்;சுமங்களை விளங்கிக்கொள்ளாமல், ஆட்டத்திற்குள் நுழைவது எதிர்மறையான விளைவுகளையே தரும். யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னிரு வருடங்களில், தமிழ் தேசிய தரப்பினர், சிறிலங்காவின் அரசியல் சதுரங்கத்தில் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கின்றனர். சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்கள் தாங்கள் ஆடுவதாக எண்ணிக் கொண்டனர் ஆனால் அவர்கள் ஆடவேயில்லை.