நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது – ரணில்

நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு ஒருபோதும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“கடினமான பயணத்தை விரைவுபடுத்துவோம். நாட்டைக் கட்டியெழுப்புவதுதான் நமது முதன்மையான குறிக்கோள்.அப்படி நினைத்தால் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செல்லலாம்.

அடுத்த 10 ஆண்டுகளில் இதுவரை வாங்கிய அனைத்து கடன்களையும் அடைக்க வேண்டும். இந்த பாதையில் நாம் தொடர்ந்து சென்றால் அந்த நிலையை அடைய முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.இந்த பாதையை பின்பற்றினால் 2048 இல் இலங்கையை உலகில் வளர்ந்த நாடாக மாற்ற முடியும்.

நான் பிரதமரானதும் எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கேட்டேன், ஆனால் கிடைக்கவில்லை. பட்ஜெட் விவாதத்தின் போது அவர்கள் ஆதரிக்கவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கியபோது ஆதரிக்கவில்லை.அந்த சமயங்களில் பல்வேறு காரணங்களை கூறி ஆதரிக்க மறுத்தனர்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவது அல்ல, ராஜபக்சவை மீட்பதே எனது நோக்கம் என எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் கடினமான காலத்தில் இருந்து இலங்கை அன்னை மீட்கப்பட்டதை சர்வதேச சமூகம் கூட தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்காத வகையில் விதிகளை வகுத்து எதிர்காலத்தை கட்டியெழுப்ப பாடுபடுகிறோம்.

இப்போதும் கூட இந்த நாட்டை கட்டியெழுப்ப ஒன்று சேருங்கள். நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடன் வாங்குவது அவமானம் ; தம்பட்டம் அடிக்க வேண்டாம் – தேசிய மக்கள் சக்தி

ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்ட போது பெருமையடித்து பேசியதைப் போன்று ஐ.எம்.எப். கடன் உதவியை கண்டு பெருமிதம் கொள்ள வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைக்கு அங்கீகாரம் வழங்குவதாக அரசாங்கத்தில் உள்ள சிலர் தம்பட்டம் அடிப்பதை இன்று செவ்வாக்கிழமை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியே விஜித ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை நம்பி நாட்டை திவாலாக்கியதன் பின்னர் வரம்பற்ற கடன்களை பெற்றுக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வரிச்சுமையை அதிகரித்து, அரச நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடனாளியாக மாறியுள்ளதாகவும், இது மற்றுமொரு கடன் பொறி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கையிருப்பை பூச்சியமாக்கி விட்டு கடன் பெற்றதாக தம்பட்டம் அடிப்பதில் அர்த்தமில்லை – கிரியெல்ல

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு இப்போது கடன் வாங்கிவிட்டதாக தற்பெருமை பேசி பயனில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் கையிருப்பை பூஜ்ஜியமாக குறைத்த இந்த அரசாங்கம் அந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே கடனைப் பெற்றதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பணத்தை வழங்குவதற்கான நிபந்தனைகள் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நாட்டின் நீதித்துறை, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஊடகவியலாளர்களை நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி நசுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

21 திருத்தத்தின் மூலம் நீதித்துறை மற்றும் உயர் அதிகாரிகளின் சுதந்திரம் தற்போது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி அழிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை இனி திவாலான நாடு இல்லை – ஜனாதிபதி

இலங்கையை திவாலான நாடு இல்லை என்றும் கடனை மறுசீரமைக்கும் திறன் இலங்கைக்கு உள்ளது என்பதை இந்த ஒப்புதல் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடனை மறுசீரமைத்து வழமையான கொடுக்கல் வாங்கல்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சர்வதேச சமூகத்தின் அங்கீகாரமாக இது அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு, நாட்டின் வேலைத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், இலங்கைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் சுற்றுலாத் துறை மீதான முதல் சுற்று கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடங்கி, இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் நடாத்தும் யோசனை தோற்கடிப்பு

சட்டக் கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாக்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு வாக்கெடுப்பு தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரினார். அதன்படி வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 113 வாக்குகளும் ஆதரவாக ஒரு வாக்கும் பதிவாகியிருந்தன. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மாட்டும் ஆதரவாக வாக்களித்தார்.

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள்; அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கையில் கடந்த ஆண்டிலும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழலில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு விசாரணை செய்து அவர்களை தண்டிக்க அரசாங்கம் குறைந்தபட்ச நடவடிக்கைகளையே எடுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த மே 9 அன்று கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்முறை சம்பவத்தின் பின்னர் 3,300 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 2,000 ற்கும் அதிகமானோர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அரசாங்கம் அறிவித்தது.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் செயற்பாடுகளில் தலையிட மாட்டோம் – சர்வதேச நாணய நிதியம்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளில் தலையிட மாட்டோம் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

மேலும் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் பரிந்துரை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய அனுமதிக்கு அமெரிக்கா வரவேற்பு

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதிக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, பொருளாதார மீட்சிக்கான பாதையின் ஒரு முக்கியமான படி இதுவென்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும் என்றும் வேலைத்திட்டங்கள் மற்றும் பொருளாதாரம் பாதையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அனைவரும் பயன்பெறும் வகையில் சிறந்த நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு தீர்வு காணும் கட்டமைப்பு மற்றும் நீடித்த சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் நாடு எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார மந்தநிலையிலிருந்து மீள்வதற்கு வலுவான சீர்திருத்தங்கள் அவசியம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

மேலும் ஊழலுக்கு எதிரான சட்டத்தை மறுசீரமைப்பது உட்பட ஊழலைச் சமாளிக்கும் முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

உறுதியான வங்கி முறையை பராமரிப்பது மிகவும் முக்கியம் என்றும் நிதி மேற்பார்வை மற்றும் நெருக்கடி மேலாண்மை கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் எரிபொருள் விலைகள் குறையும்

அடுத்த மாதம் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதன்பின், டிசம்பரில் மின்கட்டணமும் குறைக்கப்படும் என்றார். நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. மேலும் ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது. எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி எனக்கு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளார். நாங்கள் அந்த சலுகைகளை வழங்குகிறோம்.

சாலைகளில் போராட்டம் நடத்தி மின்சாரத்தை துண்டிக்கும்போது முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வர மாட்டார்கள். சில அரசியல் கட்சிகள் அதைச் செய்கின்றன.

அரசியல் கட்சிகள் வழிநடத்தும் தொழிற்சங்கங்கள் உள்ளன. சிலர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தோன்றியுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பணம் வரும்போது, ​​அவர்களின் முழக்கங்களில் ஒன்று தொலைந்து போகிறது. எரிபொருள் விலை குறையும் போது மற்றொரு கோஷம் இழக்கப்படுகிறது. பொருட்களின் விலை குறையும் போது மற்றொரு முழக்கம் மறைந்து விடுகிறது. எனவே, இவர்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர்“ என்றார்.

இலங்கைக்கு கடன் வழங்க IMF நிறைவேற்று சபை அனுமதி

இலங்கைக்கு இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு சர்தேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையானது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF) இலங்கையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது இலங்கைக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை அணுக உதவுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வொசிங்டனில் இன்று கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இது குறித்து நாளை (21) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதேவேளை இந்த விடயம் சம்பந்தமாக விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் வெளியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized