தமிழர் தேசத்துக் கல்வி மீண்டெழ ஆரம்பித்துள்ளது – இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம்

தமிழர் தேசத்துக் கல்வி மீண்டெழ ஆரம்பித்துள்ளது என இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளிவந்த நிலையில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த கால கல்வி வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தொடங்கிவிட்டோம்.

2021 க.பொ.த உயர்தர பெறுபேறுகள், 2021 க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் கணிசமான மாற்றத்தை தந்துள்ளன. ஒப்பீட்டளவில் நாம் மீண்டெழ ஆரம்பித்துள்ளோம்.

இதனை நாம் எந்தச் சூழ்நிலையிலும் விட்டுவிட முடியாது. இதற்காக பெற்றோர்கள், மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் அக்கறையுடனும் தொழிற்பட வேண்டும்.

கடந்த 2021 க.பொ.த உயர்தர பெறுபேற்றுக்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவை, அதிபர்களின் விடாமுயற்சி, பெற்றோர்களின் ஒத்துழைப்பு என்பன கணிசமான பங்கு வகித்தன. அதனாலேயே முதல் மூன்று இடங்களில் தமிழர் செறிந்து வாழும் மாகாணங்கள் முதல் நிலையில் வந்தன.

அதேபோன்று 2021 க.பொ.த சாதாரண தர பெறுபேற்றுக்கும் ஆசிரியர்களின் அளப்பரிய சேவை, அதிபர்களின் சீரிய மனப்பாங்கு, பெற்றோரின் வகிபாகம் என்பன காரணமாக அமைகின்றன.

தமிழர் செறிந்து வாழும் மாகாணங்களில் மாணவர்களுக்கான அரச பொதுப் பரீட்சைகளில் மாணவர்கள் எடுத்துள்ள பெறுபேற்று உயர்ச்சி எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனை நாம் தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும். இன்னும் மேலெழ வழி தேட வேண்டும். எத்தகைய நெருக்கடிகள், தலையீடுகள், கலாசார பிறழ்வுகள், போதை கலாசாரங்கள், திணிப்புகள் எது வந்தாலும் நாம் அனைத்தையும் தகர்த்தெறிய வேண்டும்.

கல்வி என்பது எமது சொத்து. அதனை நாம் கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டும். அதுவே எமது வாழ்வின் ஆதாரம். அதற்காக அதிபர்கள் தாம் பொறுப்பேற்றுள்ள கல்விக் காப்பகத்தின் கண்ணியத்தையும், அங்கு காக்கப்படும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அன்போடு அரவணைப்போடு அனைவரையும் ஒன்றிணைத்து, ‘எமது இலக்கு ஒன்றே’ என்ற வாசகத்தை மனதில் இருத்தி தொழிற்பட வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்களுக்கு எமது வாழ்த்துக்கள்!

ஆயிரம் சுமைகள், துன்பங்கள். பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி எம் தேசத்துக் குழந்தைகள் என்ற உணர்வோடு ஆசிரியர்களான நீங்கள் ஆற்றும் பணியை அனைவரும் மதிக்கின்றனர்; வாழ்த்துகின்றனர்!

இன்னும் நாம் எமது கடந்த கால இலக்குகளை அடையவில்லை. அவை அடையப்பட வேண்டியவை. அதுவும் எமது காலத்தில் அவை அடையப்பட வேண்டும். அதற்காக எத்தகைய சவால்கள் வந்தாலும், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு பணியாற்றுவோம்.

இறைவனின் ஆசியும், குழந்தைகளின் பெறுபேற்று வெற்றி, அவர்களின் உயர்ச்சி, அவர்கள் பெறும் பதவிகள், பட்டங்கள் என்பன உங்களுக்கு அணிகலன்களாக அமையும் என்பது உண்மை. உங்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

நாம் பல்லாண்டு காலம் கொடிய யுத்தம், அனர்த்தம் என்பவற்றை கடந்து வந்தவர்கள். அந்த காலங்களிலும் நாம் கல்வியை கைவிட்டதில்லை. அதற்காக அக்காலத்தில் யாரும் தடையாக இருந்ததும் இல்லை.

இன்று தடைகளும் திணிப்புகளும் எம்மை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. தலையீடுகள் பல எமது எதிர்கால குழந்தைகளில் கல்வியை சீரழிக்க முனைகின்றன. அவற்றுக்கெல்லாம் நாம் இடம்கொடுக்க முடியாது.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கைகளில் மட்டுமே தங்கியுள்ளது என்பதை நீங்கள் மனதில் இருத்தி தொழிற்பட வேண்டும் என வினயத்துடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைவர தடை

பயணிகள் அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அவர்கள் வருவதற்கு முன்னர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடம் அனுமதி பெற்றால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் பயணிகள் தங்க நகைகள் அணிந்து வருவதற்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு அல்லது சாதாரண பயணிகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தாது என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்துக்கட்சிகளையும் அரவணைத்துச் செல்வதற்கு ஒருங்கிணைப்பு குழுவில் முடிவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளை தவிர்த்து, வலுவாக ஒன்றுபடுவதோடு, தேசிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள தேசியக் கட்சிகளையும் அரவணைத்து செல்வதெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், சனிக்கிழமை (26) முற்பகல் 11மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் அவருடைய தலைமையில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம், கோவிந்தன் கருணாகரம், பேச்சாளர் சுரேன்குருசுவாமி, புளொட் சார்பில் அதன் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது, கூட்டமைப்பின் தலைவர், சம்பந்தன், தேசியப் பிரச்சினை விவகாரம் சம்பந்தமாக வெள்ளிக்கிழமை (25)தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளமையை வரவேற்று கருத்துக்களை பரிமாற்றியதோடு, தொடர்ச்சியாக அக்கருமத்தினை நீடிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து, கூட்டமைப்புக்குள் காணப்படும் பங்காளிக்கட்சிகளுக்குள் உள்ள கருத்து முரண்பாடுகள் மற்றும் உட்பூசல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

அதனையடுத்து, எதிர்வரும் காலத்தில் உள்ளக விமர்சனங்களை பொதுவெளியில் உரையாடுவதை கைவிடுவதெனவும், கூட்டமைப்பின் பங்காளிகளும், அதற்கு வெளியில் உள்ள தேசியக் கட்சிகளையும் இணைத்து தேசிய பிரச்சினைக்கான பேச்சுக்கள் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகளில் ஒருங்கிணைந்து செயற்படுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு, மற்றும் ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றை கிரமமாக நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாராளுமன்றக்குழு கூட்டத்தினை அவசியம் ஏற்பட்டால் சம்பந்தனின் இல்லத்தில் நடத்துவதெனவும், ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தினை ஆகக்குறைந்தது மாதமொன்று ஒருதடவையேனும் முன்னெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விகிதாசார முறைக்கு புதிய சட்டமூலம் கொண்டுவந்தால் ஆதரவளிக்க தயார் – லக்ஷ்மன் கிரியெல்ல

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை தேர்தல்களை விகிதாசார முறையில் நடத்துவதற்கு புதிய சட்டமூலம் கொண்டுவந்தால் நாங்கள் அதற்கு பூரண ஆதரவை வழங்குவதற்கு தயார்.

அரசாங்கம் சட்டமூலம் வர தயாரா  என எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான இருக்கும் தடைகளை நீக்கி, புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை கடந்த காலத்தில் அரசாங்கத்துக்கு இருந்தது.

ஆனால் அதனை அரசாங்கம் செய்யவில்லை. தற்போது அந்த பெரும்பான்மை இல்லை.  அதனால் மாகாணசபை தேர்தலை விகிதாசார முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் புதிய  சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்தால் அதற்கு பூரண ஆதரவை வழங்குவதற்கு நாங்கள் தயார்.

ஆனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் மாதத்துக்கு முன்னர் நடத்தவேண்டும். அதனை பிற்போட்டால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம்.

அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் தற்போது அதிகம் பேசப்படுவது அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதாகும்.

ஆனால் இந்த திருத்தத்துக்கு அன்று ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்தார்கள். யாரும் எதிர்க்கவில்லை.

8ஆயிரமாக இருக்கும் உறுப்பினர்களை 4ஆயிரமாக குறைக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினை என்றால் அதனை ஒரு சரத்தின் ஊடாக விகிதாசார முறைக்கு மாற்ற முடியும்.

அதன் மூலம் தானாகவே 4ஆயிரமாக மாறும். அதனை நாங்கள் செய்வோம். அதற்கு நாங்கள் ஆதரவு. ஆனால் அரசாங்கத்துக்கு தேவையாக இருப்பது தேர்தலை பிற்போடுவதாகும் என்றார்.

இதற்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்குபுர பதிலளிக்கையில்,  தேர்தலை விகிதாசார முறையில் நடத்துவதற்கு முடியுமான புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவோம். வரவு செலவு திட்ட விவாதம் முடிந்ததுடன் அந்த சட்டமூலத்தை பாாரளுமன்றத்துக்கு கொண்டுவருவோம் என்றார்.

இவ்வருட இறுதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் – மஹிந்த தேசப்பிரிய

எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்த முடியாது. இவ்வருட இறுதிக்குள் தேர்தலுக்கான தினம் மற்றும் வேட்புமனு தாக்கல் தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு நிச்சயம் வெளியிடும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மார்ச் 20 க்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனில் , பெப்ரவரி இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அவர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஏதுவாக அமையும் என்று பலராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பின் ஊடாக உரித்தாக்கப்பட்டுள்ள உதாசீனப்படுத்த முடியாத பொறுப்பிற்கு , எல்லை நிர்ணய குழுவின் செயற்பாடுகள் எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

எல்லை நிர்ணய குழுவினால் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியும் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இக்குழுவினால் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு மேல் பாராளுமன்றமும் , நீதிமன்றமும் காணப்படுகின்றன. எனவே எல்லை நிர்ணய குழுவின் ஊடாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்த முடியும் என்று எவரேனும்

கூறுவார்களாயின் , அவர்கள் அரசியல் மற்றும் சட்டம் என்பவற்றை அறியாதவர்களாகவே இருப்பர்.

தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை வேறு எவராலும் கேள்விக்குட்படுத்த முடியாது. அதேபோன்று ஆணைக்குழுவிற்கு இதனை உதாசீனப்படுத்தவும் முடியாது.

இவ்வாண்டு நிறைவடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கானதும் மற்றும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பை ஆணைக்குழு நிச்சயம் வெளியிடும் என எதிர்பார்க்கின்றோம்.

பெப்ரவரி 28 ஆம் திகதியே எம்மிடம் எல்லை நிர்ணய அறிக்கை கோரப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாம் எமது அறிக்கையை சமர்ப்பிக்கும் போது , தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் எனில் , பெப்ரவரி இறுதி வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு , முடிவுகள் வெளியிடப்பட வேண்டியது கட்டாயமாகும்.

எனவே எமது அறிக்கை தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே , தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியாகிவிடும் என்றார்.

தமிழர்களின் நிலை தொடர்பில் உலகம் எவ்வாறு சிந்திக்கும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும்- டலஸ் அழகப்பெரும

தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் பிற்போட்டால் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் தோற்றம் பெறும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. தமிழர்களின் அரசியல் உரிமையை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாகாண சபை தேர்தல் இல்லாமல் உள்ள நிலையில் உள்ளூராட்சிமன்றத்  தேர்தல் பிற்போடப்பட்டால் தமிழர்களின் நிலை தொடர்பில் உலகம் எவ்வாறு சிந்திக்கும் என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் , உள்ளூராட்சி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தற்போதைய ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பொறுப்புக் கூற வேண்டும்.மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் செயற்படுவது பாரிய குறைப்பாடாக கருதப்படுகிறது.

1931 ஆம் ஆண்டு அரச நிர்வாக கட்டமைப்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் விடயதானத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

உள்ளூராட்சி மன்றங்களின் சேவையாளர்கள் தற்போது சேவை கட்டமைப்பில் பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகளின் ஒருசில விடயங்கள் அரச சேவையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காணப்படுகிறது.

2017ஆம் ஆண்டு மாகாண சபைகள் திருத்த பிரேணை கொண்டு வரப்பட்ட போது தெரிவு குழுவின் போது 31 திருத்தங்கள் உள்வாங்கப்பட்டன.மாகாண சபை தேர்தல் காலரையறையில்லாமல் பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் என்ற சொல் கூட தற்போது வழக்கில் இல்லை.இது ஒரு பாரியதொரு ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடாகும்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலை விற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய அண்மையில் தெரிவு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் 2018 ஆம் ஆண்ட விசேட தெரிவு குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திலும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் தேர்தல் முறைமை தொடர்பான தெரிவு குழு நியமிக்கப்பட்டது,கலப்பு தேர்தல் முறைமைக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.இவ்வாறான பின்னணியில் மீண்டும் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய தெரிவு குழுவை ஸ்தாபிப்பது எத்தன்மையானது.

ஆகவே மாகாண சபைகளுக்கு செய்ததை,உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கும் செய்ய வேண்டாம் என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.தேர்தல் மீதான அச்சத்தில் முறையற்ற வகையில் செயற்பட வேண்டாம் என்பதை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளூராட்சிமன்ற சபை முறைமை தொடர்பில் எவ்வித கொள்கையுட் நடைமுறையில் இல்லை,2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்றங்கள் தொடர்பான கொள்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது,ஆனால் இதுவரை அந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஏந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் தேர்தலை உரிய காலத்தில் நடத்தி நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திய தலைவர்கள் இந்த  சபையில் உள்ளார்கள்.தேர்தல் புறக்கணிக்கப்படும் போது அது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதற்கு வரலாற்றில் பல சான்றுகள் காணப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் குறைந்தளவில் உள்ளார்கள்.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.

இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என குறிப்பிடப்பட முடியாத நிலையில் உள்ளுராட்சிமன்ற தேர்தலும் பிற்போடப்பட்டால் தமிழ்களின் நிலை குறித்து உலகம் என்ன குறிப்பிடும் என்பது தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

தமிழ்தேசிய கட்சிகள் தீர்வுக்காக ஒன்றிணைய வேண்டும் – எம்.கே சிவாஜிலிங்கம்

தமிழ்த்தேசியக் கட்சிகள்  பேச்சுவார்தை என்ற மாயைக்குள்   ஏமாந்து விடாது  தமிழ்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலான  பேச்சுவார்தையாக அதனை மாற்றி அமைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68 ஆவது பிறந்த தினம்  இன்று சனிக்கிழமை வல்வேட்டிதுறையிலுள்ள தலைவர் பிரபாகரனின் வீட்டின்முன்பாக வெடிகொழுத்தி,எள்ளுப்பாகு வழங்கி கொண்டாட்டப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த நோக்கத்திற்காக விடுதலைப்போர் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக தமது உயிர்களை ஈந்தவர்களை நினைவில் கொண்டு அதனை அடையக்கூடிய வகையில் சுதந்திரமான வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் அதனை  அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்கவகையில் நடாத்தப்படவேண்டும்   தலைவர் பிரபாகரன் பிறந்த தினத்தில் திட சங்கர்ப்பமாக ஒரு இனம் தங்கள் தலைவிதியை தாங்களே நிர்வகிக்கின்ற உரிமையை நிலைநாட்டவேண்டும்.

இதற்கு வடக்கு கிழக்கு மாநிலங்களில் சர்வஜன வாக்கெடுப்பு புலம்பெயர் தமிழர்களும் பங்குபற்றகூடிய வகையில் நடாத்தடப்படவேண்டும் இதனைத்தான் பிரபாகரனின் 68 ஆவது பிறந்த தினத்தில் எடுத்துக்கூறவிரும்புகின்றோம். இதைவிடுத்து அரசாங்கம்  தீர்வு  தருவார்கள் ,போசுவார்கள் என்று ஏமாந்தது போதும் 75 சுதந்திர தினத்திற்கு முன்பாக தீர்வு காண்போம் எனக் கூறுவது ஏன் என்பது புரியவில்லை. இதில் தமிழ் தேசியக் கட்சிகள் ஏமாந்து விடக்கூடாது .தமிழ் மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கான தீர்வுகளை பேறுவதற்கான    முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. நாங்கள் ஒன்றிணைவதே காலத்தின் தேவையாகவுள்ளது என்றார்

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் விருப்பம்

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.

WION ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டமூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மாகாணங்களுக்கு புதிய எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கு சில சட்டத் தடைகள் இருப்பதால் அது நடைபெறவில்லை என்றும் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் 13 வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதோடு அவர்களிடமுள்ள அதிகாரங்கள் அவர்களுக்கு திருப்ப வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு ஐ.நா. உள்ளிட்ட பொதுவெளியில் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் அண்மையில் ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் இணைந்து 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த உதவுமாறு இந்தியப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஆளுநரின் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடுவோம் – சீ.வீ.கே. சிவஞானம்

வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதி சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளோம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார்.

கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,

வடக்கு ஆளுநர் கடந்த 27 திகதி இரண்டு நியதி சட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற இரண்டினை வர்த்தமானியில் பிரசித்துள்ளார். ஒன்று வாழ்வாதாரம் தொடர்பான விடயம் மற்றையது சுற்றுலா தொடர்பான விடயங்கள் என்ற இரண்டு நியதிச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

இந்த இரண்டுமே ஆளுநருடைய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும் சட்டவிரோதமானதும் முறையற்றதுமான மாகாண சபைகள் சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் மாகாண சபைகள் கட்டளை சட்டத்திற்கு முரணானது.

மாகாண சபை சட்டத்தின் படி ஆளுநர் தனது அதிகாரங்களை ஜனாதிபதியின் பணிப்புரையின் பெயரால் செயற்படுத்த முடியும் என்றுள்ளது.

எனவே ஆளுநருக்கு சட்டவாக்க அதிகாரம் எந்த இடத்திலும் கொடுக்கப்படவில்லை, எந்த இடத்திலும் ஆளுநர் சட்டம் இயற்றலாம் என்று குறிப்பிடப்படவில்லை.

இவர் துணிவாக எதேச்சாதிகாரமாக தனது இரண்டு நியதி சட்டங்களை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இருக்கக்கூடிய அதிகாரங்களையும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் பறித்தெடுக்கின்றார் என்பதே விடயம். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இது பாரதூரமான ஒரு விடயம் அரசியல் ரீதியாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். எங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களையும் பறிக்கக் கூடிய ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது.

இந்த விடயத்தில் விழிப்பாக நாங்கள் இருக்க வேண்டியதுமாகும், ஆளுநர் எதேச்சாதிகாரமாக கேட்பதற்கு யாரும் இல்லை என்ற நிலையில் செயற்படுகின்றார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்து உள்ளோம். உடனடியாகவே ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கும் இந்த விடயத்தினை உடனடியாக தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என்றார்.

ஊழியர்களுக்கு அருகில் உள்ள அலுவலகம் : அரசாங்கம் திட்டம்

போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதால், அரசதுறை ஊழியர்களுக்கு வீட்டுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களை பணிக்கு ஒதுக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, வீட்டுக்கு அண்மித்த பிரதேசங்களில் உள்ள அரச அலுவலகங்களுக்கு அரச ஊழியர்களை இடமாற்றம் செய்யும் முறைமை ஏற்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் டாக்டர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் இது தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்வால் பஸ்களில் கடமைக்குச் செல்ல முடியாமல் அரச ஊழியர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.