இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு

இந்திய அதானி நிறுவனம் கடந்த 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு நாடுகளிலும் அதானி குழுமம் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலுசக்தி துறைக்கே அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதானி குழுமம் எதிர்பார்த்துள்ளதாக குறித்த நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்  திறப்பு தங்களிடமே தரப்பட்டதாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்  நினைத்து செயற்படுவது வேதனைக்குரியது – பா.உ. ஜனா

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திறப்பை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்களிடமே தந்துவிட்டதாக  அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் நினைத்துக் கொண்டு இப்படியான தியாகிகள் தினங்களில் தனித்து தியாகிகள் தினங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இது உண்மையில் வேதனைக்குரிய விடயம். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

தியாகி திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவையொட்டி மட்டக்களப்பு காந்திப் பூங்காவில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்று தியாகி திலீபன் அவர்களது 35ஆவது ஆண்டு நினைவு தினம். மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது தடவையாக நினைவு கூரப்பட்டதையிட்டு உண்மையிலேயே வேதனையடையக் கூடியதாக இருக்கின்றது. இத்தனை இழப்புக்களுக்குப் பின்பும், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் எங்களுக்குள் ஒரு ஒற்றுமையில்லை என்பதை நினைக்கும் போது உண்மையில் வேதைனையாக இருக்கின்றது. இருந்தாலும் தியாகங்கள் என்பது பல்வகைப்பட்டது. 1974ஆம் அண்டு தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்று பொன் சிவகுமாரன் தன்னுடைய உயிரைத்தியாகம் செய்ததிலிருந்து 2009 மே 18 வரை பல தியாகங்கள் தமிழர்களின் உரிமையைப் பெறுவதற்காக இந்த நாட்டிலே நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் திலீபனுடைய தியாகம் முற்றிலுமாக மாறுபட்ட ஒரு தியாகமாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம். ஏனென்றால், போராட்டத்தில் மோதலில், குண்டு வெடிப்பில் தன்னுடைய உயிரை எம் மக்களுக்காகத் தியாகம் செய்யாமல் உண்ணா நோன்பிருந்து அஹிம்சை வழியில், காந்திய வழியில் தன்னுடைய உயிரை ஈர்த்த ஒரேயோரு நபர் என்றுதான் நாங்கள் கூறக்கூடியதாக இருக்கும்.

உண்மையில், அவருடைய அதே காலத்தில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தவன் என்ற ரீதியில் அவருடன் ஒரே இயக்கத்தில் இணைந்து பயணிக்காவிட்டாலும் சம காலத்தில் இரு வேறு திசைகளில் பயணித்தவன் நான் என்ற வகையில் இன்று 35 வருடங்களில் முதல் முறையாக அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் புழகாங்கிதமடைகின்றேன். அந்தவகையில், திலீபன் அவர்கள் ஐந்து அம்சக் கோரிக்கைகளை மு;னவைத்து உண்ணா நோன்பிருந்து 12 நாட்களில் மரணத்தைத் தழுவியிருந்தார். அந்த ஐந்து கோரிக்கைகளில் மூன்று கோரிக்கைகள் 35 வருடங்கள் கடந்த போதும்; நிலுவையில், கோரிக்கைகளாகவே இருக்கின்றன. பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக அகற்றப்பட வேண்டும். இராணுவ முகாம்களிலும், சிறைகளிலுமிருக்கும் தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வடக்குக் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளில் மூன்று இன்றும் தொடர்ச்சியாகவே இருக்கிறது.

அந்த வகையில், தமிழ் ஈழப் போராட்டத்தில் குறிப்பாக, பிரதானமாக 5  இயக்கங்கள் சமகாலத்தில் போரிட்டிருந்தாலும் அந்த இயக்கங்களுக்குள் ஒற்றுமையீனும் ஏற்பட்டது. அந்தக் கால கட்டத்தில்  தங்களுக்குள் பல வகையான முரண்பாடுகளுடன் அந்த போராட்டங்கள் தங்களுக்குள்ளும் நடைபெற்றது. இருந்தாலும் தமிழர்களின் உரிமைக் குரலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சக்தி இருக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உணர்ந்ததன் நிமிர்த்தம் 2001இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. வடக்குக் கிழக்கில் தமழ் மக்களின் பெரும் பிரதிநிதியாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து கொண்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இன்று ஒரு சில கட்சிகள் பிரிந்து சென்றிருந்தாலும் தனித்துவமாக நடந்து கொண்டிருந்தாலும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திறப்பை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்களிடமே தந்துவிட்டதாக  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே தந்துவிட்டதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று கூற முடியாது அந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே மணிவண்ணன் தரப்பினரும், கஜேந்திரகுமாரும் உரிமை கோருகிறார்கள். எனவே அகில இலங்கை தமிழ்க் காங்கிரசிடமே பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் திறப்பைத் தந்து விட்டுச் சென்றிருப்பதாக தாங்கள் நினைத்துக் கொண்டு இப்படியான தியாகிகள் தினங்களில் தனித்து தியாகிகள் தினத்தை, இங்கு மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்தில் கூட செய்து கொண்டிருக்கிறார்கள். இது உண்மையில் வேதனைக்குரிய விடயம். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயமல்ல.

நாங்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த இடத்தில் திலீபன் அவர்களை நினைவு கூர்ந்தாலும் இன்றைய சூழலில் பெருமளவான மக்கள் அவரை நினைத்து அஞ்சலி செலுத்துவதற்கு மனமிருந்தாலும், இலங்கை அரசியன் புலனாய்வுப்பிரிவினரின் கெடுபிடிகளுக்குப் பயந்து, அதாவது விசாரணைகளுக்கு அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளும் முகமாக இப்படியான நிகழ்வுகளை தவிர்த்துக் கொண்டு வருகிறார்கள். அந்த நிலை நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனால், இன்று சற்றுக் குறைந்திருக்கிறது. இது எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்று கூறமுடியாது. கடந்த காலங்களில் திலீபன் உட்பட எமக்காக உயிர் நீத்த அத்தனை தியாகிகளையும் நினைத்து அனைவருக்குமாக பிரார்த்திப்போமாக என்றார்.

Posted in Uncategorized

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கம்?

கொழும்பில் உள்ள பல விசேட பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலிதற்றதாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு சட்டமா அதிபரால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

எனினும், கொழும்பின் மத்திய பொருளாதார வலயத்தின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பால், பாரியளவில் பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள்  ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பில் அவ்வப்போது நடைபெறும் போராட்டங்களினால் ஏற்படும் பொருளாதார சேதங்கள் அதிகமாக உள்ளபோதும், அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதன் மூலம் வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கிணங்க, அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றி, புலனாய்வுப் பிரிவினரை ஒருங்கிணைத்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு, பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயத்தின் பின்னர், ஜனாதிபதி நாடு திரும்பியதும் வர்த்தமானி இரத்துச் செய்யப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் அறிய முடிகிறது.

Posted in Uncategorized

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வை.கோபால்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே வைகோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீள வழங்கப்பட வேண்டும் ஐ.நாவில் இந்தியா தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா தவறாமல் கலந்துகொண்டு அதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளர் விளக்கம்

இலங்கையில் ஸ்திரமான சூழ்நிலை உருவாகி வருகின்ற போதிலும், போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால்  காவல்துறையினர் சட்டத்தை அமுல்படுத்துவர் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உயர்பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்தல் மற்றும் சட்டவிரோத போராட்டங்களுக்கு எதிராக பலத்தை பிரயோகிப்பது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து விளக்கமளித்த பாதுகாப்பு செயலாளர், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் இலங்கையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. நீண்ட காலமாக நிலவிவரும் சில சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட விடயங்கள் இவை.

கடந்த காலங்களில் ஜனாதிபதி செயலகம் சுற்றி வளைக்கப்பட்டது அரசாங்க அதிகாரிகள் அங்கு தமது கடமைகளைச் செய்யமுடியாது போனது. இதுபோன்ற முக்கிய முடிவெடுக்கும் இடங்கள் தடைபட்டால், அத்தகைய இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும். முன்னைய நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்.

Posted in Uncategorized

இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்தார் ஹக்கீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை திங்கட்கிழமை  (26)அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் சந்தித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளதோடு, ஒலுவில் துறைமுகம் பாவனைக்கு உகந்தாக இல்லாத  நிலையில், அதன் நுழைவாயில் பிரதேசத்தைச் சூழ மணல் மேடு குவிவதாலும், கடலரிப்பு காரணமாக அயல் கிராமங்களும் கூட பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாலும், அலைத் தடுப்புச் சுவரின் தவறான நிர்மாணம் காரணமான சீர்கேடுகளினால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும்  அவரது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் இந்தியாவின் நிதியுதவித் திட்டத்தின் கீழ், ஒலுவில் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் முன்வைத்த வேண்டுகோளையும் மிகவும் சாதகமாகப் பரிசீலிப்பதாகவும் உயர்ஸ்தானிகர்  தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பில்  மீன்பிடித் துறை அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிகராலய வர்த்தக ஆலோசகர் ரகேஷ் பாண்டே, துறைமுக அதிகார சபை உயர் அதிகாரிகள் ஆகியோருடனான பேச்சுவார்த்தையொன்றுக்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படுமென ஐநா செயலாளர் உறுதி!

இலங்கைக்கான உதவிகளை அணிதிரட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அன்டோனியோ குட்டேரஸை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளர்.

இலங்கை எதிர்கொள்ளும் சமூக பொருளாதார நிலை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேசிய சபை முதற் தடவையாக 29 ஆம் திகதி கூடுகிறது!

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி தேசிய சபை நாளை மறுதினம்(29) வியாழக்கிழமை முதல் தடவையாக கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சபைக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அண்மையில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

அதனடிப்படையில், டக்ளஸ் தேவானந்தா, நசீர் அஹமட், டிரான் அலஸ், சிசிர ஜயக்கொடி, சிவனேசத்துரை சந்திரகாந்தன், ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ரவூப் ஹக்கீம், பவித்ரா வன்னியாரச்சி, வஜிர அபேவர்தன, நாமல் ராஜபக்ஸ, ஜீவன் தொண்டமான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அத்துரலியே ரத்தன தேரர், அசங்க நவரத்ன, அலி சப்ரி ரஹீம், C.V.விக்னேஸ்வரன், வீரசுமன வீரசிங்க மற்றும் சாகர காரியவசம்  ஆகியோர் தேசிய சபையின் உறுப்பினர்களாவர்.

இவர்கள் தவிர, ஏ.எல்.எம். அதாவுல்லா, திஸ்ஸ விதாரண, ரிஷாட் பதியுதீன், விமல் வீரவன்ச, வாசுதேவ நாணாயக்கார, பழனி திகாம்பரம், மனோ கணேசன், உதய கம்மன்பில மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் டலஸ் அழகப்பெரும அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

ஜனாதிபதி ரணில் சிங்கபூர் பிரதமர், ஜப்பான் வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசின் லூன் இடையே டோக்கியோ நகரில் இரு தரப்பு பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி மற்றும் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் யோஷிமசா ஹயாஷி இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று(26) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயங்களை நிறைவு செய்துகொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

அதியுயர் வலயங்கள் பிரகடனம்- கொழும்பில் நீதிமன்றத்தின் முன் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள்

கொழும்பின் சில பகுதிகளை அதியுயர்வலயங்களாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் முன்பாக இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை சட்டத்தரணிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து முன்னெடுத்திருந்தனர்.

Posted in Uncategorized