கனேடிய உயர்ஸ்தானிகருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினான் மற்றும் உதவியாளர் டானியல் பூட் ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை முன்பகல் கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோ. கருணாகரம், மத்திய குழு உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பின் போது தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. ஐநா மனித உரிமை பேரவையின் 46/1 பிரேரணைக்கு பிரதான பங்கு வகித்த நாடான கனடாவுடனான இச் சந்திப்பு தமிழ் தரப்பின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு என்று ரெலோவின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்தார்.

 

Posted in Uncategorized

பாரிய திட்டத்தை கைவிட்டு இலங்கையில் இருந்து நகரும் சீனா!!

யாழ்ப்பாணம் – தீவகத்தில் மேற்கொள்ளப்படவிருந்த சூரிய சக்தி மின்நிலைய திட்டத்தை சீனா இடைநிறுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலைப் பதிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களில் இந்தச் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தைச் சீனா முன்னெடுக்கவிருந்ததுடன், இதற்கான அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இந்தியா தனது கரிசனையை வெளியிட்டுள்ளதுடன், தமிழ் அரசியல் கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தின.

தற்போது இந்த வேலைத்திட்டம் சம்பந்தமாக மூன்றாம் தரப்பு ஒன்றிலிருந்து எழுந்துள்ள பாதுகாப்புக் கரிசனை கருதி, இத்திட்டம் இடைநிறுத்தப்படுவதாக சீனா அறிவித்துள்ளது.

இதேவேளை, இதே மாதிரியான 12 தீவுகளில் கலப்பு மின்னுற்பத்தி மையங்களை அமைக்கும் வேலைத் திட்டம் ஒன்றுக்காக மாலைதீவு அரசாங்கத்துடன் கடந்த 29ஆம் திகதி சீனாவின் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் கைச்சாத்திட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் காணிகளை பிடிக்கும் அரச படைகளுக்கான முகவரா? ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

வடமாகாண ஆளுநர் ஜீவன் பொது மக்களின் காணிகளை பிடிக்கும் அரச படைகளுக்கான முகவரா? என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித்தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

வடமாகாணத்திலுள்ள காணிகளை அரச படையினரால் கைப்பற்றப்பட:டு வருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

வடக்கு மாகாணத்தில் பொது மக்களின் காணிகளை அரச படைகள் பிடிக்கும் நிகழ்ச்சி அண்மைய நாட்கள் முல்லைத்தீவு , வடமராட்சி கிழக்கு, மண்டைதீவு, காரைநகர், மாதகல் , வடமராட்சி வடக்கு வவுனியா வடக்கு, என தீவிரமாக முன்னகர்த்தப்படுகிறது. இதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகளும் ஆயுதம் தரித்த படைகளும் பயன்படுத்தப்படுகின்றனர்.

காணி அபகரிக்கும் செயற்பாட்டிற்கு இடையூறாக யாரும் இருந்தால் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக வடமாகாண ஆளுநர் அறிக்கை ஒன்றை 01/12/2021 வெளியிட்டுள்ளார். இது மிக வேதனையான விடயம் காரணம் காணி சுவீகரிப்பு என்பது பிரதேச செயலங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் தீர்மானங்களாக எடுத்தே மேற்கொள்ள முடியும் என்ற ஒழுங்கு முறை இருக்கும் போது சட்ட முறையற்ற வகையில் தனியாருக்கு சொந்தமான காணிகளை சுவீகரித்தல் என்ற பெயரில் படை முகாம்கள் அமைக்க அபகரிக்க முடியாது.

மக்கள் பிரதிநிதிகளை மக்கள் அழைக்கும் போது அதில் கலந்து கொண்டு அதற்காக நியாயம் கேட்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை அவர்கள் அதனை செய்யும் போது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கூறும் போது நீங்கள் ஆளுநரா? இல்லை பொது மக்களின் காணிகளை அரச படைகளுக்கு முகாம் அமைப்பதற்கு பிடித்துக் கொடுக்கும் முகவரா?

Posted in Uncategorized

அரசியல் தீர்வில் அமெரிக்க – இந்திய கூட்டு?

சுமந்திரன் பங்குகொள்ளும் விடயங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது சாதாரணமான ஒன்று. இப்படித்தான் இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளையும் நோக்க வேண்டும். சுமந்திரன் தலைமையிலான குழுவொன்று அமெரிக்கா செல்லவுள்ளதாக செய்திகள் வெளியான நாளிலிருந்தே இவ்வாறான சர்ச்சைகள் ஆரம்பித்துவிட்டன. பின்னர், சுமந்திரன் தரப்போடு, உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் இணைந்த போது, மேலும் புதிய சர்ச்சைகள் ஏற்பட்டன. இறுதியில் கூட்டமைப்பினரின் அமெரிக்க பயணமே ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாக நோக்கப்படுமளவிற்கு நிலைமைகள் மாறியது.

சுமந்திரன் என்னும் தனிநபர் தொடர்பான சர்ச்சைகளை ஓரு புறமாக வைத்துவிட்டு – விடயங்களை ஆழமாக நோக்க வேண்டியதே இப்போது முக்கியமானது.
சுமந்திரன் தலைமையில் ஒரு குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளதான செய்தி வெளியான சூழலில்தான், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டெலோ, டி.பி.எல்.எப் (புளொட்) மற்றும் விக்கினேஸ்வரன் தரப்பு ஆகியோர் இணைந்து, இந்தியப் பிரதமர் மோடியிடம் – அதாவது இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைப்பது தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்திருந்தனர். தமிழரசு கட்சியையும் இணைத்துக் கொண்டு அடுத்த கட்டம் தொடர்பில் ஆராயும் முடிவுடன் குறித்த சந்திப்பு கலைந்தது.

இதனடிப்படையில் உடனேயே ஒரு கொன்ஸ்பிரசி (சதிக் கோட்பாடு) அரசியலும் மெதுவாக எட்டிப்பார்த்தது. அதாவது, இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கும் முயற்சியை மழுங்கடிக்கும் வகையிலேயே, சுமந்திரனின் அமெரிக்க பயணம் இடம்பெறுகின்றது. இது இந்தியாவை விட்டுவிட்டு தனித்து ஓடுவதற்கான முயற்சியென்றும் சிலர் பேச முற்பட்டனர். தமிழ் சூழலில் எப்போதுமே இ;வ்வாறான கொன்ஸ்பிரசி அரசியலுக்கு பஞ்சமிருந்ததில்லை.

ஆனால் சுமந்திரன் கனடாவில் பேசுகின்ற போது, இந்திய – அமெரிக்க கூட்டின் மூலம் அரசியல் தீர்வொன்றை காணும் முயற்சியில் தாம் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்;திருக்கின்றார். அதே வேளை தமது பயணம் தொடர்பிலும், தங்களுடைய கலந்துரையாடல்கள் தொடர்பிலும் அமெரிக்காவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அதே வேளை சுமந்திரன் குறிப்பிட்டிருக்கும் பிறிதொரு கருத்து முக்கியமானது. அதாவது, இந்தியா ஒன்றுதான் ஈழத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறானதாக அமைந்திருக்க வேண்டுமென்பது தொடர்பில் பேசிவருகின்றது. இந்த அடிப்படையில் உலக வல்லரசான அமெரிக்காவும் பிராந்திய வல்லரசானா இந்தியாவும் அரசியல் தீர்வு விடயத்தில் சேர்ந்தியங்கும் வகையிலான முயற்சிகளிலேயே தாம் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆனால் இங்குள்ள கேள்வி – அது எப்படியான தீர்வு? ஒரு வேளை இந்திய – அமெரிக்க கூட்டில் ஒரு புதிய தீர்வாலோசனை முன்வைக்கப்படுமானால் அதனை கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா – ஏற்றுக்கொள்ளாவிட்டால் அமெரிக்காவும் இந்தியாவும் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்? இந்த கேள்விகளுக்கு நிச்சயமாக சுமந்திரனிடம் பதில் இருக்காது. ஒருவேளை ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் செயற்படுகின்றோம் என்னும் பதிலில் அவர் சரணடையலாம். அது ஒரு இலகுவான பதில்.

இந்தியா ஒன்றுதான் ஈழத் தமிழர் விடயத்தில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்திவருகின்றது. இதற்கு பக்கபலமாக இருப்பது இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும். இதன் காரணமாகத்தான் ஈழத் தமிழர் விவகாரம் என்று வருகின்ற போதெல்லாம் – இந்தியாவின் பார்வை, 13வது திருத்தச்சட்டத்தின் மீது மட்டுமே இருக்கின்றது. ஏனெனில் 13இற்கு அப்பால் ஒரு விடயத்தை வலியுறுத்துவதற்கான உரித்தை இந்தியா கொண்டிருக்கவில்லை. அப்படியான ஒன்றை புதுடில்லி வலியுறுத்த வேண்டுமாயின் – இந்தியா அதன் பலத்தை பிரயோகிக்க வேண்டும்.

ஏனெனில், அப்படி பலத்தை பிரயோகித்ததன் மூலம் வந்ததுதான், இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறான பலத்தை பிரயோகித்த போதும் அது சிங்கள – தமிழ் இரண்டு தரப்புக்களதும் எதிர்ப்பையே இறுதியில் சம்பாதித்தது. ஆனால் இன்றைய நிலைமை அப்படியான ஒன்றல்ல. எனவே, இந்த நிலையில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து ஒரு தீர்வாலோசனையை முன்வைப்பதென்பது, மேடையில் பேசுவது போன்று சாதாரணமான ஒரு விடயமல்ல.

ஒருவேளை, ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில், இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுவதாக இருந்தாலும் கூட, அங்கும் இந்திய- இலங்கை ஒப்பந்தம்தான் ஒரு அரசியல் அஸ்திபாரமாக இருக்க முடியும். இல்லாவிட்டால், அமெரிக்க – இந்திய கூட்டு முயற்சியில் இலங்கையுடன், ஒரு புதிய ஒப்பந்தம் இடம்பெற வேண்டும். அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வேண்டும். அதாவது, இன்றைய புதிய உலக அரசியல் போக்கிற்கு அமைவாக ஒரு புதிய இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற வேண்டும். அதில் அமெரிக்காவின் நலன்களும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்படியான ஒரு விடயம் இடம்பெறுகின்ற பட்சத்தில் மட்டும்தான், அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தலையீடு செய்கின்ற நிலைமை ஏற்படும். ஆனால் இவ்வாறானதொரு நிலைமை தற்போதைக்கு ஒரு போதையூட்டக் கூடிய கற்பனையாக மட்டுமே இருக்க முடியும்.

ஏனெனில் கொழும்பின் ஆட்சியாளர்களை – முக்கியமாக சிங்கள – பௌத்த கருத்தியல் ஆதிக்கத்தின் பிடிக்குள் சிக்குண்டிருக்கும் தென்னிலங்கை மக்களை பாரதூரமாக விரோதித்துக் கொள்ளும் வகையில் அமெரிக்காவோ, இந்தியாவோ எந்தவொரு முடிவையும் எடுக்கப் போவதில்லை. அமெரிக்கா, அதன் மனித உரிமை சார்ந்த அழுத்தங்களை தொடரும். அதேவேளை, அரசியல் தீர்வு விடயத்தில் அதிகம் தலையீடு செய்யாது. ஏனெனில், அமெரிக்காவின் அணுமுறைகள், இருதரப்பு உறவுகளை பாதிக்காத வகையிலேயே அமைந்திருக்கும். ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்கா அதன் மூலோபாய நலன்களை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்? இந்த கேள்வியிலிருந்துதான் விடயங்களை தமிழர் தரப்புக்கள் நோக்க வேண்டும்.

அரசியல் தீர்வை ஒரு ஆசையாகவும் அல்லது வெறும் நம்பிக்கையாகவும் நோக்கக் கூடாது. ஆனால் தமிழ் சூழலில் காணப்படும் அரசியல் தீர்வு தொடர்பான உரையாடல்களை நோக்கும்போது – எங்குமே ஆசையும் வெறும் நம்பிக்கையுமே மேலோங்கியிருக்கின்றது. இதன் காரணமாகவே அமெரிக்கா, இந்தியா தொடர்பில் அளவுக்கதிகமான கற்பனைகள் வெளிப்படுகின்றன.

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் முன்னரைவிடவும் நெருக்கமான உறவு இருப்பது உண்மை. குறிப்பாக, மோடி தலைமையிலான அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களைவிடவும் அமெரிக்காவுடன் நெருங்கிச் செயற்படுகின்றது. இந்த பின்புலத்தில்தான், இந்தோ-பசுபிக் குவாட் நகர்வுகளை நோக்க வேண்டும். அதே வேளை இந்தியா அதன் அணிசாரா வெளிவிவகாரக் கொள்கை பாரம்பரியத்தை முற்றிலுமாக இழந்துவிடக் கூடாதென்பதிலும் எச்சரிக்கையுடன் இருக்கின்றது.

அமெரிக்கா சவாலாக பார்க்கும் நாடுகளுடன் கூட இந்தியா தொடர்புகளை பேணிவருகின்றது. உதாரணமாக ரஸ்யா. அதே வேளை முற்றிலும் சீன எதிர்ப்பு கொள்கைக்குள்ளும் இந்தியா இல்லை ஆனால், இந்தியாவின் பிராந்திய செல்வாக்கை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான சீன நகர்வுகள் தொடர்பிலும் இந்தியா எச்சரிக்கையுடன் இருக்கின்றது.

ஆசியாவில் சீனாவின் எழுச்சியென்பது இந்தியாவிற்கு நெருக்கடியான ஒன்றுதான். சீன எழுச்சியின் இலக்கு தெளிவானது, அதாவது, ஆசியாவில் ஒரு ஒரு மேலாதிக்க அதிகாரமாக தங்களை நிலைநிறுத்திக் கொள்வது. சீன ஜனாதிபதி சி-ஐpன்பிங்கின் இலக்கு இதுதான். சீனாவின் ஆசிய மேலாதிக்க கனவானது, ஒரு உறையில் இரண்டு ஈட்டிகளை போன்ற உபாமாகவே இருக்கும். முதல் ஈட்டியில், அதன் இலக்கு ஆசியாவின் மீதான அமெரிக்க செல்வாக்கை நிர்மூலமாக்குவது.

இரண்டாவது ஈட்டியில் இந்தியாவின் பிராந்திய செல்வாக்கை நிர்மூலமாக்குவது. இந்தியாவின் பிராந்திய செல்வாக்கை பேணிப்பாதுகாக்க வேண்டுமாயின், ஆசியாவில் அமெரிக்க செல்வாக்கு வீழ்ச்சியுறக் கூடாது. ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கு வீழ்சியுறுமாக இருந்தால், அதன் பின்னர் இந்தியாவினால் தனித்து சீனாவை எதிர்கொள்ள முடியாமல் போகும். இந்த மூலோபாய இலக்கின் அடிப்படையில்தான் இன்றைய அமெரிக்க – இந்திய கூட்டு நகர்வுகளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில்தான் இலங்கை விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கையில், சீனாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கின்ற நிலையில்தான், இந்திய-அமெரிக்க கூட்டு வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையும் உள்ளடங்குகின்றது. இலங்கைக்கு விஐயம் செய்த, அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ, கொழும்பில் வைத்து சீனா தொடர்பில் காட்டமான கருத்துகளை வெளியிட்டிருந்தார். இலங்கையின் இறைமையை சீனா நிலத்திலும் கடலிலும் மோசமாக மீறி வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கூற்றானது, இலங்கையும் அமெரிக்க-சீன அதிகாரப் போட்டிக்குள் வந்துவிட்டது என்பதையே உணர்த்துகின்றது.

அண்மையில் வெளியான பென்ரகன் அறிக்கையில், சீனா ஒரு இராணுவ தளத்தை இலங்கைக்குள் நிறுவ முற்படுகின்றது என்று, குறிபிடப்பட்டிருப்பதையும் நாம் இணைத்தே வாசிக்க வேண்டும். பைடன் நிர்வாகத்தின் ஆசிய விவகாரங்களை கையாளும் உயர் அதிகாரியான ஹேர்ட் ஹம்பல், அண்மையில் தெரிவித்திருந்த கருத்தொன்று அமெரிக்க-சீன மேலாதிக்க போட்டியை தெளிவாக எடுத்துரைக்கின்றது. அதாவது, அமெரிக்க-சீன ஊடாட்ட காலம் முடிவுக்கு வந்துவிட்டது. அதிகாரப் போட்டியே இனி மேலாதிக்கம் பெறும்.

அமெரிக்க – சீன போட்டியென்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே எழுச்சிபெற்றுவருகின்ற நிலையில், இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்திருக்கின்ற நிலையில் – ஈழத் தமிழர் விவகாரம் சர்வதேச அரங்கில் ஒரு மனித உரிமை விவகாரமாக கவனம் பெற்றிருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்தியா வலியுறுத்திவருகின்றது. அதே வேளை புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவரப் போவதாக கோட்டபாயவின் அரசாங்கம் கூறிவருகின்றது. அரசியல் யாப்பின் பிரதான இலக்கு தமிழர்களுக்கு விசேட சலுகைகளை இல்லாதொழிப்பதுதான்.

13வது திருத்தம் ஓரளவு விசேட சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த விடயங்களை துல்லியமாக கணித்தால், தென்னிலங்கையின் நகர்வுகள் அடிப்படையிலேயே ஈழத் தமிழர்களுக்கு ஆபத்தானது. புதிய அரசியல் யாப்பின் ஒன்றை இலக்கு, 13வது திருத்தத்தை இல்லாமலாக்குவதுதான் என்றால், அமெரிக்க – இந்திய கூட்டின் மூலம் அரசியல் தீர்வை பெறலாம் என்பது ஒரு கவர்சியான மேடைப் பேச்சாக மட்டுமே இருக்க முடியும். இந்த நிலைமைகளை விளங்கிக்கொண்டு தமிழ் தலைமைகள் பயணிக்க வேண்டும். இப்போதுள்ள நிலையில், ஒன்றில் இருப்பதை பாதுகாப்பது – முன்னோக்கிப் பயணிப்பது, இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே நோக்க வேண்டும். இதுதான் சரியானதொரு அரசியல் தந்திரோபாயமாக இருக்க முடியும்.

வரலாற்றில் முதல் தடவையாக லண்டனில் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம்!

பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகரபிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை கடைப்பிடிக்கும் செயற்திட்டத்துக்காக லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாகவும் அவையில் நூறுவீத ஆதரவுடனும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள வரலாற்று பதிவு உருவாகியுள்ளது.

பெருநகர அவையின் இருந்த கென்சவேட்டிவ் கட்சிஉறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தபிரேரணைக்கு அவையில் இருந்த ஆளும்தரப்பான தொழிற்கட்சி உட்பட்ட அனைத்துவ உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

கனடாவை போல லண்டன் பெருநகரபிராந்தியத்திலும் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை எதிர்வரும் தைமாதம் முதல் கடைப்பிடிக்கப்படும் வகையில் ஒரு செயற்திட்டத்தை உருவாக்கும் வகையில் ஒரு வரலாற்றுத்தருணம் உருவாகியுள்ளது.

லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாகவும் அவையின் நூறுவீதஆதரவுடனும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த பிரேரணை மூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு வருடம் ஜனவரி மாதத்திலும் லண்டன் பெருநகரப்பிராந்தியத்தில் தமிழ் மரபுத் திங்கள் கடைப்பிடிக்கும் வகையிலான சாத்தியப்பாடுகள் உருவாகியுள்ளன.

லண்டன் பெருநகர அவையின கென்சவேட்டிவ் உறுப்பினர் நிக் றொஜர்ஸ் அவர்களால் இன்று பிற்பகல் இந்தபிரேரணை முன்மொழியப்பட்டு அதன் பின்னர் இது விவாதத்துக்கு விடப்பட்டிருந்தது.

இந்த விவாதத்தில் அனைத்து உறுப்பினர்களும் பிரேரணைக்கான ஆதரவினைத் தெரிவித்த பின்னர், ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அதாவது Tamil Heritage Month ஆக பிரகடனப்படுத்தும் பிரேரனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையிலான பேச்சுக்களும் செயற் திட்டங்களும் நகர்த்தப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த நர்வுகள் வெற்றியளித்தால் ஜனவரி மாதத்தில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வகையிலும் அதனை பகிரும் வகையிலும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுமென எதிர்பார்க்ப்படுகின்றது

தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது! மின்சூள் சின்னம்! – மனோ கணேசன்

தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

“டோர்ச் லைட்” என்ற மின்சூள் சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுபற்றி கூட்டணி தலைவர் மனோ எம்பி ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,

2015 வருடம் ஜூன் 3ம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சி தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று ஆறு ஆண்டுகளை கடந்த நிலையில், இடையில் இரண்டு பாராளுமன்ற தேர்தல்கள், ஒரு ஜனாதிபதி தேர்தல், ஒரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆகியவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு இந்நாட்டின் தேசிய அரங்கில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் இயக்கமாக வளர்ந்து, இன்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள், தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் கட்சிகள், தேசிய அரங்கில் ஒன்றுசேர வேண்டும் என்ற பேரவா இன்று தமிழ் முஸ்லிம் மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றி இருப்பதை நானறிவேன்.

எமது மக்களின் இந்த மன உணர்வுக்கு உயிர் கொடுத்து முழு நாட்டுக்கும் முன்மாதிரியாக நாம் இன்று நிற்கிறோம்.

“ஒற்றுமை நிலைக்க வேண்டும்” என எதிர்பார்த்த பெருந்திரள் மக்கள் மத்தியில், இது “தேர்தல் வரையிலான உறவு”, ஆகவே தேர்தல்கள் முடிந்த பின் உடைந்து விடும், உடைய வேண்டும் என்று எதிர்பார்த்த வினோதமானவர்களும் நம் மத்தியில் இருந்தார்கள். இருக்கிறார்கள்.

அவர்களை நாம் இன்று ஏமாற்றி இருக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

ஆகவே, கட்சிகள் “ஒன்றுசேர வேண்டும், ஒன்றுசேர வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்படும், அதேவேளை இன்று ஒன்றுபட்டு நின்று, பல சவால்களுக்கு மத்தியில் ஆறு ஆண்டுகளை கடந்து, எம்மை விட்டு பிரிந்தவர்களுக்கு துயருடன் விடை கொடுத்து விட்டு, புதியவர்களை உள்வாங்கி, எமது தேசிய பயணத்தை மாத்திரம் நிறுத்தி விடாமல் பயணித்து, இன்று அதிகாரபூர்வ பதிவையும், தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்கு பின்னால் எங்கள் ஒவ்வொருவரினதும் கடும் உழைப்பு, நேர்மை, துணிச்சல், தூரப்பார்வை, நிதானம், இன உணர்வு ஆகியவை இருக்கின்றன.

எங்கள் மின்சூள் சின்னம், நாடு முழுக்க இருளை அகற்றி, ஒளி பாய்ச்சும் இயக்கமாக இன்னமும் முன்னேற்றம் பெற, அனைத்து உடன்பிறப்புகளினதும், இரத்தத்தின் இரத்தங்களினதும் வாழ்த்துகளையும், ஆதரவுகளையும் எதிர்பார்க்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இந்திய நிதியமைச்சருடன் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடல்

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை புது டெல்லியில் சந்தித்த அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகளில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டங்களினூடாக பல வழிகளிலும் இலங்கை வழங்கிய உதவிகளுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்

உடன் அமுலுக்கு வரும் வரை மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில காலங்களாக மட்டக்களப்பு மாநகரசபையில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு மத்தியில் இன்றைய தினம் புதிய ஆணையாளர் ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில காலமாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளராகப் பதவி வகித்த மா.தயாபரனுக்கு பதிலாக புதிய ஆணையாளராக ந.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுடன் பிரதமர் சந்திப்பு

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலில் நேற்றிரவு இந்த சந்திப்பு நடைபெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட துரித செயற்பாட்டிற்கு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இதன்போது பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய நாடுகளுடனான இருதரப்பு உறவை தொடர்ந்து பேணுதல் மற்றும் பரஸ்பர செயற்பாடுகள், திட்டங்கள் ஊடாக இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்தல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாக இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் 15 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஓமான், பாலஸ்தீனம், குவைத், சவுதி அரேபியா, மலேசியா, கட்டார், துருக்கி, ஈரான், லிபியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் மற்றும் மாலைத்தீவு, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாடுகளின் இலங்கை உயர்ஸ்தானிகர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

‘ஒமிக்ரோன்’ இந்நாட்டினுள் நுழைந்து விட்டதா?

ஒமிக்ரோன் பிறழ்வு இந்நாட்டிற்கு வந்துள்ளதாக உறுதியாக கூற முடியாது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டிற்கு குறித்த வைரஸ் தாமதமாக வரக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

“இது தொடர்பில் உறுதியாக கூற முடியாது. உறுதியான தகவல்கள் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. எனினும், உலகின் ஏனைய நாடுகளுக்கு பரவியுள்ள விதத்தை பார்க்கும் போது நமது நாட்டிற்கு குறித்த பிறழ்வு வரவில்லை என எவராளும் கூற முடியாது. எனினும், இலங்கைக்கு தென்னாபிரிக்காவில் இருந்து நேரடியாக அதிகளவான மக்கள் வருவதில்லை. அதன் காரணமாக மற்றைய நாடுகளை விட நமது நாட்டுக்கு வருவது தாமதமாகக்கூடும். நாங்கள் ஒரு மாதிரியை எடுத்து மட்டுமே பகுப்பாய்வு செய்கிறோம். அந்த மாதிரிக்கு அகப்படும் வரையில் குறித்த வைரஸ் பிறழ்வு நாட்டில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.”

Posted in Uncategorized