மின்சாரதுறை மறுசீரமைப்புக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு

வலு சக்தி துறை மற்றும் மின்சாரத்துறை மறுசீரமைப்புக்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டம் அதன் ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் திங்கட்கிழமை (08) அமைச்சில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் ஆலோசகர் அரிந்தம் கோஷ் உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய எதிர்வரும் 8 வாரங்களுக்குள் மறுசீரமைப்புக்களுக்கான வரிபடத்தை தயாரித்து , அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் இந்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தால் வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்க ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றினையும் வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாடாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

1948ம் ஆண்டு முதல் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 1958, 1976, 1983 ஆண்டுகளில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழினம், ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்ட பின் தினம் தினம் திட்டமிட்ட பாரிய இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த உயிர் காத்த கஞ்சியினையே இன்று எமது உரிமை போராட்டத்தின் ஓர் வடிவமாக, மக்களின் மீதான இனவழிப்பின் சர்வதேச நீதி தேடலின் ஓர் கருவியாக பயன்படுத்தவுள்ளதாகவும் மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

இவ்வாறு தாம் முன்னெடுக்கும் இச்செயல்பாட்டில் அனைத்து தமிழ் மக்களும் வேறுபாடுகளை துறந்து தமிழினமாக தம்முடன் இணைந்துகொள்ளுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கையாலாகாத தமிழ்க் கட்சிகள்? – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த இடத்தில் தவறிழைக்கின்றது? நிலாந்தன்

விசாக பௌர்ணமியன்று தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் குறைவானவர்களே பங்குபற்றியிருக்கிறார்கள்.

அவர்களிலும் நான்கு பேர் காணி உரிமையாளர்கள். ஏனையவர்கள் அரசியல்வாதிகளும் கட்சித் தொண்டர்களும்.

அதே நாளில் இரவு யாழ்ப்பாணம் அரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாக விகாரையில் இடம்பெற்ற வெசாக் அலங்காரங்களைப் பார்ப்பதற்கு தொகையாக வந்த தமிழ் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதே இரவு குடாநாட்டின் மற்றொரு தொங்கலில் வல்வெட்டித் துறையில் நடந்த இந்திர விழாவில் பங்குபற்ற ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்தார்கள். அங்கே இசை நிகழ்ச்சிகளும் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

வெசாக் தினத்திலன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த இந்த மூன்று நிகழ்ச்சிகளையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது என்ன தெரியவருகிறது? சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகத் திரண்ட மக்களை விட சிங்கள பௌத்த விழா ஒன்றில் பெருந்திரளான தமிழ்மக்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள்.

அதைவிடப் பெருந்தொகையானவர்கள் ஒரு ஊரின் இந்திர விழாவில் பங்கு பற்றியிருக்கிறார்கள். அந்த ஊர் எதுவென்று பார்த்தால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிறந்த ஊரும், ஆயுதப் போராட்டத்தில் அதிக தொகை தியாகிகளைக் கொடுத்த ஊரும் ஆகும். இதுதான் யாழ்ப்பாணத்தின் ஆகப்பிந்திய மூன்று காட்சிகள்.

தையிட்டி விகாரைக்கு எதிராக குறைந்தளவு மக்களே திரண்டமைக்கு என்ன காரணம்? அந்த போராட்டத்திற்கான அழைப்பை தமிழ்த் தேசிய பேரவை என்ற ஒரு அமைப்பு விடுத்திருந்தது.

அதை ஒரு பொதுக் கட்டமைப்பு என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைக்கின்றது. அந்தப் பெயரை முன்னணி ஏற்கனவே பயன்படுத்தியுமிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவையிடமிருந்து அந்த அமைப்பை வித்தியாசப்படுத்துவதற்காக பெயரில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அந்தக் கட்டமைப்பின் அழைப்பை ஏற்று பொதுமக்கள் அங்கே திரண்டு வரவில்லை. அதற்கு யார் பொறுப்பு? அழைத்த கட்சி பொறுப்பா? அல்லது வராத மக்கள் பொறுப்பா?

கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் இடம் பெற்ற மக்கள் எழுச்சிகளை தொகுத்துப் பார்த்தால், ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். ஒரு கட்சி அழைத்த ஆர்ப்பாட்டங்களை விடவும், சிவில் சமூகங்களின் தலைமையில் பல கட்சிகள் அழைக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகளவு சனம் திரள்கிறது.

பொங்கு தமிழ், எழுக தமிழ், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணி என்று உதாரணங்களைக் கூறலாம்.

ஒரு கட்சி அழைக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு தொகையான மக்கள் வருவது என்றால், அந்தக் கட்சிக்கு கிராம மட்டத்தில் பரவலான கட்டமைப்புகள் இருக்க வேண்டும். முன்னணியிடம் மட்டுமல்ல வேறு யாரிடமும் அப்படிப்பட்ட கட்டமைப்புகள் இல்லை.

மிகக் குறுகிய கால அழைப்புக்குள் அவ்வளவு தொகை மக்களைத் திரட்ட முடியாது. அப்படித் திரட்டுவதென்றால் அந்தப் போராட்டத்திற்கான காரணம் மக்கள் மத்தியில் அதிகம் நொதிக்க வேண்டும். முன்னணி விவகாரத்தை பொலிஸாரோடு ஒரு மோதலாக மாற்றியது.

எனினும் மக்கள் மத்தியில் நொதிப்பு எதுவும் நிகழவில்லை. அதனால் மக்களும் அங்கே பெரியளவில் போகவில்லை. போராட்டத்தைத் தொடங்கிய அன்றிரவு முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சட்டத்தரணி ஒருவரும் மற்றொருவருமாக குறைந்த தொகையினர்தான் அங்கே காணப்பட்டார்கள். அடுத்த நாளும் வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் உட்பட குறைந்தளவு எண்ணிக்கையானவர்களே அங்கே காணப்பட்டார்கள்.

அண்மை வாரங்களில் தமிழ்ப் பகுதிகளில் நடந்து வரும் சிங்கள பௌத்த மயமாக்களுக்கு எதிரான பெரும்பாலான போராட்டங்களில் குறைந்தளவு மக்கள்தான் கலந்து கொள்கிறார்கள்.

இதில் வவுனியாவில் நடந்த ஊர்வலத்தில் ஒப்பீட்டளவில் கூடுதலான தொகையினர் காணப்பட்டார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குபடுத்திய வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியிலும் பெரிய அளவில் மக்கள் பங்களிக்கவில்லை.

அந்தப் பேரணியின் பின்னணியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான அமைப்பே காணப்பட்டது. அண்மை வாரங்களாக நடந்து வரும் பெரும்பாலான போராட்டங்கள் குறியீட்டு வகைப்பட்ட சிறு திரள் போராட்டங்கள்தான். அல்லது ஒரு நாள் கடையடைப்புகள்தான்.

அரசாங்கத்துக்கு நோகக்கூடிய போராட்டங்கள் அவையல்ல. உலக சமூகத்தை தம்மை நோக்கி ஈர்க்கத்தக்க சக்தி அவற்றுக்கு குறைவு. தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற ஒரு விடயத்தை  வெளிக் கொண்டு வந்தது மட்டும்தான் அவற்றுக்குள்ள முக்கியத்துவம்.

தையிட்டியிலும் அதே நிலைமைதான். தையிட்டி விகாரை விவகாரமானது முன்னணி தலையிட்ட பின் சூடு பிடித்தது. ஆனாலும் அதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்ல முன்னணியால் முடியவில்லை. அது ஏறக்குறைய ஒரு கட்சிப் போராட்டம்தான்.

போராட்டம் தொடங்கிய மறு நாள் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அங்கே காணப்பட்டார்கள். ஆனால் அது “பிரசன்ற் மார்க்” பண்ணும் வேலை தான். அது ஒரு முழுமையான பங்களிப்பு அல்ல. அதன் பின் நடந்த போராட்டங்களில் ஏனைய கட்சிகள் முழுமனதோடு ஒத்துழைக்கவில்லை.

அவ்வாறு ஒத்துழைப்பு நல்கத்தக்க நல்லுறவை முன்னணி ஏனைய கட்சிகளோடு பேணவும் இல்லை. தன்னை ஒரு தூய தேசியவாத கட்சியாகக் காட்டிக் கொள்ளும் முன்னணி, ஏனைய கட்சிகளை ஒட்டுக்குழுக்கள், துரோகிகள், வெளிநாடுகளின் கைக்கூலிகள், ஏஜென்ட்கள் போன்ற வார்த்தைகளின் மூலம் விமர்சித்து வருகிறது.

அதனால் ஏனைய கட்சிகளோடு இணைந்து ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதில் அக்கட்சிக்கு நடைமுறையில் வரையறைகள் உண்டு.

அதற்காக ஏனைய கட்சிகள் பரிசுத்தம் என்றில்லை. கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்த கடையடைப்பில் ஏனைய ஏழு கட்சிகள் ஒன்றாகத் திரண்டன.

ஆனால் அந்தத் திரட்சி விசுவாசமானது அல்ல. ஏனென்றால் தமிழரசுக் கட்சி தனது முன்னாள் பங்காளிக் கட்சிகளை ஒட்டுக்குழுக்கள் என்றும், போதைப்பொருள் வித்தவர்கள் என்றும், ராணுவச் சோதனைச் சாவடிகளில் முகமூடி அணிந்து தலையாட்டியவர்கள் என்றும்,கா ட்டிக் கொடுத்தவர்கள் என்றும் குற்றம் சாட்டியிருந்தது. எனினும் தேவை என்று வந்த பொழுது அந்தக் கட்சிகளும் தமிழரசுக் கட்சியும் ஒன்றாக திரண்டு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தன.

ஆனால் முன்னணி அவ்வாறான உறவுகளுக்குத் தயாரில்லை. எனவே ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அல்லது எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பது என்றால் ஏனைய கட்சிகளை நம்பி முன்னணி அதில் களமிறங்க முடியாது.

தமிழ் சிவில் சமூக மையத்தைத் தவிர ஏனைய, குடிமக்கள் சமூகங்கள் மத்தியிலும் முன்னணிக்கு பெரிய வரவேற்பு இல்லை. குறிப்பாக பொதுக் கட்டமைப்புகளைக் குறித்து அண்மையில் ஓர் ஊடகத்துக்கு கஜேந்திரகுமார் வழங்கிய பேட்டியில் அவர் பெரும்பாலான பொதுக் கட்டமைப்புகளை நிராகரித்திருந்தார்.

அவற்றை புலம்பெயர்ந்த தமிழர்கள் இயக்குகிறார்கள், வெளிநாட்டு உளவு அமைப்புகள் இயக்குகின்றன என்ற பொருள் தரும் விதத்தில் அவருடைய பேட்டி அமைந்திருந்தது.

அதன்படி பொதுக்கட்டமைப்புகளையும் முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னரும், அன்னை பூபதியின் நினைவிடத்திலும் பொதுக்கட்டமைப்போடு முன்னணி முரண்பட்டது. இந்த மோதல்கள் வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலிலும் இடம்பெற வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் ஏற்கனவே ஒரு பொதுக் கட்டமைப்பு அந்த நினைவு கூர்தல் தொடர்பாக அறிக்கை விட்டிருக்கிறது.

இவ்வாறு நடைமுறையில் உள்ள பொதுக் கட்டமைப்புகளோடு முரண்படும் முன்னணியானது, எதிர்காலத்தில் பொதுக் கட்டமைப்புகளோடு இணைந்து மக்களை அணி திரட்டும் வாய்ப்புகளும் மங்கலாகவே தெரிகின்றன.

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் மக்களைத் திரட்ட முடியாமல் போனமை என்பது தனிய முன்னணியின் தோல்வி மட்டுமல்ல. அந்த விகாரை விடயத்தில் தொடக்கத்தில் இருந்தே மெத்தனமாக இருந்த, அல்லது வேறு உள்நோக்கங்களோடு அதை கண்டும்காணாமலும் விட்ட பிரதேச சபைத் தவிசாளர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்.

அப்பொழுது கூட்டமைப்பு இப்பொழுது தமிழரசுக் கட்சி. இதில் தமிழரசு கட்சிக்கும் குற்றப் பொறுப்பு உண்டு. கடந்த சில ஆண்டுகளாக விகாரை கட்டப்பட்டு வருவது எல்லாருக்குமே தெரியும். இந்த விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிய பிரதேச சபை தவிசாளர் சுமந்திரனுக்கு நெருக்கமானவர் என்பது மேலதிக தகவல்.

விகாரை படிப்படியாக கட்டப்பட்டு 100 அடிவரை உயர்ந்த பின்தான் எல்லாருடைய கண்களுக்கும் தெரிந்தது என்பதே தமிழரசிகளின் கையலாகாத்தனம் தான்.

முன்னணி அதைத் தன் கையில் எடுத்து போராட்டத்தை மக்கள் மயப்படுத்த முடியாமல் போனதும் அக்கட்சியின் பலவீனம்தான். தையிட்டி விகாரை தனியார் காணியில் கட்டப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல, தமிழ்க் கட்சிகளின் கையாலாகத்தனத்தின் மீதுந்தான் கட்டப்பட்டிருக்கிறது.

முன்மொழிவுகளை பரிசீலித்து மூன்றாம் வாரத்தில் எல்லை நிர்ணயம் குறித்து இறுதி அறிக்கை

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கிட்டத்தட்ட 400 முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்து வருவதாகவும், விரைவில் அவை குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து, தமது முன்மொழிவுகளைச் சமர்பிப்பதற்கு காலவகாசமும் வழங்கப்பட்டது.

குறித்த முன்மொழிவுகளை தேசிய எல்லை நிர்ணயக் குழு பரிசீலித்து குழுவின் இறுதி அறிக்கை இம்மாதத்தின் மூன்றாம் வாரத்தில் சமர்ப்பிக்கப்படும் என தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை சுமார் 4,000 ஆகக் குறைக்கும் நோக்கத்துடன் 2020 இல் தேசிய எல்லை நிர்ணயக் குழு உருவாக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை நிர்வாகத்தை நெறிப்படுத்தவும், உள்ளூர் அளவில் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது

கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட 4 ஆளுநர்களை இராஜினாமா செய்ய ஜனாதிபதி செயலகம் பணிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து 4 மாகாணங்களுக்கான ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் பணித்துள்ளது

கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

குறித்த ஆளுநர்கள், மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படாமை காரணமாகவே விலக்கப்படவுள்ளனர்.

இதேவேளை பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியவுடன் புதிய ஆளுநர்கள் விரைவில் பெயரிடப்படவுள்ளனர்.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானின் பெயரும் பரிந்துரையில் இருப்பது குறிப்பிடத்தக்கது

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது – சவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அடிக்கல் நட்டிருந்தார்.

தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சவேந்திர சில்வா, குறித்த திஸ்ஸ விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது என்றார்.

மேலும் இனவாத, மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பணத்திற்காக காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாம் – த.சித்தார்த்தன்

சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

சில காலத்தின் முன்னர் வரை இங்கு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். தமிழ் பௌத்த சின்னங்களை ஆக்கிரமிப்பதற்காகத்தான் பௌத்த விகாரைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. பௌத்தர்களே இல்லாத இடங்களில் அவை கட்டப்படுகின்றன.

விகாரைகளை கட்டி, அதை பராமரிக்க மெதுமெதுவாக ஆட்களை கொண்டு வந்து, சிங்கள பிரதேசங்களாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

இந்த ஆட்சியில் பல விடயங்கள் நிறுத்தப்படலாமென பலர் நினைத்தனர். ஆனால் நிறுத்தப்படவில்லை. ஜனாதிபதிக்கு பலமுறை முறையிடப்பட்டும், அது கவனிக்கப்படவில்லை.

இவற்றை நிறுத்த நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தை, சாத்வீக வழி, பாராளுமன்றத்தின் ஊடாக முயற்சிக்க வேண்டும். அவற்றை செய்து கொண்டிருந்தாலும், அவற்றின் வேகம் போதாது என நினைக்கிறேன்.

நான் கந்தரோடையில் இருக்கிறேன். இந்த கிராமத்திலுள்ள பெரும்பாலான மக்களிற்கு இந்த பிரச்சினை சரியாக புரியவில்லை. எப்படி சிங்கள பௌத்த மத அடையாள மாற்ற முயற்சிகள் நடக்கிறது என்பது அவர்களுக்கு விளங்கவில்லை.

அது மாத்திரமல்ல, சற்று அதிக பணம் கிடைக்கிறது என்றால் காணிகளை விற்கிறார்கள். முக்கியமாக வெளிநாட்டில் உள்ளவர்கள். வெளிநாட்டில் உள்ள ஒருவர்தான் கந்தரோடையில் விகாரை கட்டப்படவுள்ள காணியையும் விற்றவர்.

வெளிநாட்டிலுள்ள பலர், இங்குள்ள காணிகளை பிற சமூகத்தவர்களுக்கு விற்பதால் ஏற்படும் அபாயத்தை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து விற்று வருகிறார்கள். சில இடங்களில் காணிகள் விற்கப்பட்டுள்ளதை அறிகிறோம். நல்லூரிலும் விற்கப்படுகிறது.

இங்குள்ள இராணுவத்தினர் வெறும் காணிகளை அடையாளம் கண்டு, அவற்றின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அவற்றை வாங்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள்.

ஆகவே, சிறியளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக மாற்று சமூகத்தினருக்கு விற்பதை நிறுத்துங்கள்.

இங்கு பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இப்போது நடக்கும் போராட்டங்கள் மிகச்சிறியவை. 3,5,10 பேருடன் நடக்கும் போராட்டங்களினால் அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படாது. பெருமெடுப்பிலான போராட்டங்களை அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்

பௌத்த விகாரைகள் கட்டப்படுவது என்பது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் தமிழர்கள் வாழும் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்படுகின்றது என்பதே குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதற்கமைய பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரை ஒன்றை அமைத்து அந்த விகாரையை பேணி பாதுக்காக்கும் வகையில் பௌத்த பிக்குகளை கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழர் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

இதற்கமைய இந்த அரசாங்கத்திலாவது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்ப்பார்ரக்கப்பட்ட போதிலும் அதற்கான எந்தவித நடவடிக்கையில் முன்னெடுக்கப்படவில்லை – என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனும் கலந்து கொண்டார்.

வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் கடமையில் இணைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்கள் எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.

அவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்த தொகுதியில் இல்லாமல் வேறு தொகுதியில் பணியாற்ற முடியும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கையை தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்ப இராஜாங்க அமைச்சரின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அரச ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து சகல கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

மன்னராக முடிசூட்டப்பட்டார் மூன்றாம் சார்லஸ்

74 வயதான மூன்றாம் சார்லஸ் இன்று பிரித்தானியா மற்றும் 14 பிற கொமன்வெல்த் நாடுகளின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில், பரிசுத்த நற்செய்தியின் மீது கைவைத்து மூன்றாம் சார்லஸ் மன்னர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.

அவர் தனது வாக்குறுதிகளை செயல்படுத்தவும், நிறைவேற்றவும் உறுதியளித்த அவர், தேவாலயங்கள் உட்பட சீர்திருத்தக் கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த விழாவில், கேன்டர்பரி பேராயர், மிகவும் மரியாதைக்குரிய ஜஸ்டின் வெல்பி முடிசூட்டு பிரமாணத்தை செய்து வைத்தார்.

விழாவில் 100 நாட்டுத் தலைவர்கள் உட்பட சுமார் 2,300 பேர் கலந்து கொண்டனர். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்ற முடிசூட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டார்.

வெடுக்கு நாறி மலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப்போவதாக சரத் வீரசேகர மிரட்டல்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் மலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப் போவதாக மிரட்டல் தொனியில் கூறியுள்ளார் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர.

நேற்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு வந்த வீரசேகர, அங்கு நின்றவர்களிடம் இதனை குறிப்பிட்டார்.

சரத் வீரசேகர மற்றும் சிங்கள மக்கள் குழுவொன்று இன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதிக்கு வந்திருந்தனர்.

அவர்கள் மலையுச்சிக்கும் சென்று பார்வையிட்டனர்.

இன்று ஆலயத்தில் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. வீரசேகர குழுவினரும் ஆலயத்தின் பொங்கலை வாங்கி உண்டனர்.

பின்னர், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப் போவதாக சரத் வீரசேகர, அங்கு நின்றவர்களிடம் கூறினார்.

இதேவேளை, இன்று அங்கு கடுமையான மழை பெய்வதால், ஆலயத்தின் கீழ்ப்பகுதியில் 20 அடி தற்காலிக தகர கொட்டகையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்றுமாறு நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

அத்துடன், ஆலயத்தின அடிப்பகுதியில் சிறிய தகர கொட்டகையமைத்து இளைஞன் ஒருவர் குளிர்பானம் உள்ளிட்ட சில பொருட்களை விற்று வந்தார். அந்த கொட்டகையையும் அகற்றுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

அத்துடன், ஆலயத்துக்கு உழவு இயந்திரத்தில் வர முடியாது என்றும் குறிப்பிட்டார்.