இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி தயார்

பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கும், பொருளாதார மீட்சியைத் துரிதப்படுத்துவதை முன்னிறுத்தியும் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், பல்வேறு துறைகளிலும் இலங்கையுடன் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

தென்கொரியாவின் இன்ஸியான் நகரில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்ஸுகு அஸகவாவுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை (2) நடைபெற்றது.

இதன்போது மிகவும் சவாலான காலப்பகுதியில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களுக்காகவும் நாட்டின் பொருளாதார மீட்சியை முன்னிறுத்தி வழங்கிய உதவிகளுக்காகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு அமைச்சர் அலி சப்ரி நன்றி தெரிவித்தார்.

அதேவேளை டிஜிட்டல்மயமாக்கல், விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்திவலு ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கும் நிதியியல்துறை உறுதிப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும் அமைச்சர் அலி சப்ரி கோரிக்கைவிடுத்தார்.

அதற்குப் பதிலளித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்ஸுகு அஸகவா, மிகமோசமான பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கும், மீட்சிக்கான வலுவான அடித்தளத்தை இடுவதற்கும் இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளைப் பெரிதும் பாராட்டியதுடன் பல்வேறு துறைகளிலும் இலங்கையுடன் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

திருகோணமலை விமானப்படைத் தளத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய விமானப்படைத் தளபதி உறுதி

தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் திருகோணமலை விமானப்படைத் தளத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய விமானப்படைத் தளபதி Air Chief Marshal V.R.சௌத்ரி உறுதியளித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு இந்தியா தொடர்ச்சியாக வழங்கும் ஒத்துழைப்பிற்கு பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் இரு நாட்டு விமானப்படைகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை அடையாளப்படுத்தும் வகையில், நட்புறவு கேட்போர் கூடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய விமானப்படைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் இறுதி காலாண்டில், இரு நாடுகளின் விமானப் படைகளும் இணைந்து இலங்கை கடற்பகுதியில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான உத்தேச விமான சேவைகளை அதிகரிப்பதும் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கான படகு சேவைகளை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளமையும் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார சுற்றுலாவை மேம்படுத்தும் என இந்திய விமானப்படைத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்திய விமானப்படைத் தளபதி Air Chief Marshal V.R.சௌத்ரி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவையும் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று காலை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

யாழில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழ்.ஊடக அமையத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தின் முன்றலில் இன்றையதினம்(03.05.2023) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மூத்த ஊடகவியலாளரின் கருத்து

இந்த போராட்டத்தின்போது மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும்போதும் பேனாவுடனே அலைந்த எமக்கு ஊடக சுதந்திரம் உறுதிபடுத்தபடுத்தப்பட வேண்டும் என மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர்களது பிரச்சினை தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஊடகவியலாளர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க கூட இந்த அரசாங்கம் தயங்குகின்றது.

பயங்கவாத சட்டம் என்பது மூன்று தசாப்த காலம் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட போது இங்கே இருந்தது. இப்பொழுது அந்த சட்டத்தை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.

எமக்கும் உரிமை இருக்கிறது

ஆனால் இந்த சட்டத்தை கண்டு நாங்கள் பயப்படவில்லை. அதாவது எமது சக ஊடகவியலாளர்கள் வீதிகளில் சுடப்பட்ட பொழுது நாம் பேனாவை மட்டுமே கையில் கொண்டு அலைந்தோம். இந்த அட்டூழியங்களை பேனா கொண்டு தான் சர்வதேசத்திற்கு சொன்னோம். இந்த நாட்டில் இருக்க எமக்கு உரிமை இருக்கிறது.நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை.

இந்த நாட்டிலே வாழுகின்ற மக்கள் கேட்கின்ற அதே விடயங்களை தான் நாமும் கேட்கின்றோம். நாங்கள் புதிதாக எதனையும் கேட்கவில்லை .எமது சக ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?

நீதி வேண்டும்

சுடப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விசாரணை வேண்டும் நீதி வேண்டும் சர்வதேசம் இதனை பார்க்க வேண்டும். உலகில் சின்ன நிலபரப்பாக இருக்கும் இங்கு இடம்பெறும் விடயங்கள் பெரிதாக பேசப்படுகின்றனவே தவிர எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக இல்லை.

விலை பேசும் உலகில் ஒவ்வொரு நாடுகளும் தம்முடைய தேவைக்காக இலங்கையை பயன்படுத்துகின்றன. இந்த மக்கள் சிறுபான்மையினரை கண்டுகொள்ளாமல் இருப்பதை நாங்கள் சுட்டிகாட்டிகொண்டே இருப்போம்.

எங்கள் ஊடகவியலாளர்கள் பணியாற்றி படுகொலை செய்யப்பட்டவர்களின் பாதையில் நாமும் பயணிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஊழியர் குற்றப்பத்திரத்தை திருத்த அனுமதி

2019ஆம் ஆண்டு வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஊழியர் கனியா பனிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திருத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலேல்ல சட்டமா அதிபருக்கு, புதன்கிழமை (03) அனுமதி வழங்கினார்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அண்மித்த காலப்பகுதியில் கொழும்பு கறுவாத் தோட்டம் பகுதியில் வைத்து வெள்ளை வாகனத்தில் வந்த ஐவர், தன்னைக் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி பல மணிநேரம் தடுத்து வைத்ததாக கறுவாத் தோட்டம் பொலிஸில் முறைப்பாடு கனியா பனிஸ்டர் பதிவு செய்தார்.

எனினும், மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பொய்யான சாட்சியங்களை சோடனை செய்ததாக கனியா பனிஸ்டர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

இலங்கை அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக பொய்யான தகவல்களை வழங்கியதாகவும், தனது கடத்தல் குறித்த விடயத்தில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதாகவும் கனியா பன்னிஸ்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தையிட்டியில் காணிகளை விடுமாறு போராடியவர்களை கைது செய்ய முயற்சி!

தையிட்டியில் காணிகளை விடுமாறு போராடியவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸார் முயன்றதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்தும், சிங்கள குடியேற்றத்தை நிறுவும் நோக்கில் விகாரையை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு கோரியும் அப்பகுதி மக்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டத்தில் உள்நுழைந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் அப்பகுதிச் செல்லும் வீதிகளை மூடி அங்கிருப்பவர்களை கைது செய்ய முயன்றதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் ஆணையின்படி பேசுவதற்கு தமிழர் தரப்பு தயார்: ரெலோ

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக மக்கள் ஆணையின் படி பேசுவதற்கு தமிழர் தரப்பு தயார் என ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (03.05.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்த ஆண்டின் இறுதியில் ஒரு முடிவை புதிய அரசியலமைப்பு மூலம் காண இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மே தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

சந்தர்ப்ப வாதம்

இனப்பிரச்சினைக்கான தீர்வை எதன் அடிப்படையில் பேசுவதாக ரணில் விக்ரமசிங்க வெளிப்படையாக இதுவரை பொது வெளியில் கூறவில்லை.

அத்துடன் நம்பிக்கை தரும் வகையில் அவரது ஏனைய நடவடிக்கைகள் அமையவில்லை. அத்துடன் ஜனாதிபதியின் உரைகள் பதவி ஏற்பில் இருந்து மாறி மாறி சந்தர்ப்ப வாதமாகவே அமைந்துள்ளது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக நடாத்திய சனநாயக தேர்தல்களில் மக்கள் ஆணையாக அறுதிப் பெரும்பான்மையான மக்கள் சமஷ்டித் தீர்வு வேண்டும் என்றே ஆதரவு கோரியுள்ளனர்.

இனப்பிரச்சினை

இதற்கு ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் மிகப் பெரும் ஆதாரம் அதன் பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வான சமஷ்டி அடிப்படையில் பேச வருமாறு வெளிப்படையாக அரசாங்கம் அறிவித்தால் தமிழர் தரப்பு எப்போதும் தயாராகவுள்ளனர்.

இந்த நாட்டின் மீள முடியாத பின்னடைவுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு கொடுக்கப்படாமை என்ற உண்மையை உணர்ந்தும் சிங்கள ஆட்சியாளர்கள் கபடத்தனமாக மறைக்காது வெளிப்படையாக இன நல்லிணக்கத்துடன் மேசையில் உக்கார தயார் என்றால் அது தான் தீர்வுக்கான ஆரம்பம் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தமிழ் மக்களை ஏமாற்றாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தர வேண்டும்: கோவிந்தன் கருணாகரம்

‘மக்களை ஏமாற்றாமல் உண்மையாக சிந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வினை வைத்துவிட்டு எங்களுடன் பேச வாருங்கள் நாங்கள் பூரண ஒத்துழைப்பினை தருகின்றோம்‘‘ என நாடாளுமன்ற உறுப்பினரும், நாயகம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசு தமிழ் தரப்புகளை ஏமாற்றி அரசாங்கத்தில் இணைய வைத்து பொருளாதாரத்தினை நிலை நிறுவுவதற்காக முயற்சி செய்வதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி நேற்றைய தினம் (01.05.2023) தமிழ் கட்சிகளுக்கு விடுத்த அழைப்பு தொடர்பில் (02.05.2023) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை

இது தொடர்பில் மேலும் கூறுகையில், ‘‘நேற்றை மேதின உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கியமான கருத்தினை வெளியிட்டிருந்தார்.

இந்த வருட இறுதிக்குள் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காணுவதற்கு உத்தேசித்துள்ளதாக கூறியிருக்கின்றார்.

இதேபோன்று தான் கடந்த ஆண்டும் சென்ற சுதந்திரதினத்திற்கு முன்னர் தீர்வினை காண வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த ஆண்டுக்குள் தீர்வினை காணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தமிழ் தரப்புகள் இந்த தீர்வு காணும் விடயத்தில் பின்னடிப்பதாகவும் விலகி தூர நிற்பதாகவும் கூறியிருந்தார்.

பேச்சுவார்த்தை

ஆனால் போராட்டம் நடைபெற்ற காலம் தொடக்கம் ஒரு பக்கம் ஆயுதப் போராட்டம் நடைபெற்றாலும் மாறிமாறி வந்த ஆட்சியாளர்களுடன் தமிழ் தரப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டே வந்தார்கள்.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட தன் பின்னர் மகிந்த ராஜபக்சவுடன் 18 சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியை விட அதிகாரம் கூடியவராக இன்றைய ஜனாதிபதி பிரதமராகயிருந்தார்.

அப்போது நாடாளுமன்றத்தினை இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் ஒரு சபையாக மாற்றி பல கூட்டங்களை நடத்திய போதும் அது ஏமாற்றப்பட்டதாகவே சென்றுவிட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்

அந்தவகையில் இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னுடன் இணைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வினை காணுவதற்கு முன்வர வேண்டும்.

இந்த நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைமைக்கு மாறியதற்கு இலங்கையின் இனப்பிரச்சினை தான் காரணம் என்பதை சிங்கள மக்களுக்கும் பேரினவாதிகளுக்கும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூறி அவர்களை தங்களுடன் இணைத்து இந்த இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

அதன் ஊடாக கொண்டு வரப்படும் தீர்வுத் திட்டத்தினை நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் வைத்துவிட்டு தமிழர்தரப்புடன் பேசவேண்டும்.

நாங்கள் என்றும் பேச்சுவார்த்தைக்கு பின்னடிப்பவர்களோ விலகி நிற்பவர்களோ அல்ல என்பதை நாங்கள் உறுதியாக தெரியப்படுத்துவோம்.

அதனைவிடுத்து தற்போதைய பொருளாதார நிலைமையினை சீர்செய்வதற்காக மீண்டும் மீண்டும் தமிழ் தரப்புகளை ஏமாற்றி அரசாங்கத்தில் இணைய வைத்து இலங்கையின் பொருளாதாரத்தினை நிலை நிறுத்துவதற்காக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக சிந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தினை முன்வைத்துவிட்டு எங்களுடன் பேசவாருங்கள்.

நாங்கள் பூரண ஒத்துழைப்பு தருவதுமட்டுமல்லாமல் புலம்பெயர்ந்துள்ள மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை கூட நிலை நிறுத்த உதவிசெய்வார்கள் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றோம்‘‘ என தெரிவித்துள்ளார்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு இவ்வருடத்துக்குள் தீர்வு – ஜனாதிபதி

நாட்டின் நீண்டகாலமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நியாயமான, புதிய போட்டித்தன்மையுள்ள மற்றும் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

ஆகவே அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய விமானப்படை அதிகாரி இலங்கையை வந்தடைந்தார்

இந்திய விமானப் படை பிரதானி ஏர் சீஃப் மார்ஷல் சவுத்ரி, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை ஏர் சீஃப் மார்ஷல் சவுத்ரி சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சொந்தமாக காணி வாங்கி விகாரை அமைக்க விண்ணப்பித்துள்ள பிக்கு

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம் கந்தரோடை பகுதியில் தமிழ் – பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும், அதன் எச்சங்களும் காணப்படுகின்றன. அவை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

தமிழ் – பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான சுமார் 06 பரப்பு காணியினை தென்னிலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த காணிக்குள் புதிய விகாரை ஒன்றினை அமைக்கவுள்ளதாகவும், விகாரை அமைக்கவுள்ள காணிக்கு அருகில் தொல்லியல் எச்சங்கள் காணப்படுவதனால், விகாரை அமைப்பதால் அதற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா ? அக்காணியில் விகாரை அமைக்கலாமா ? என தொல்லியல் திணைக்களத்திடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்க அனுமதி வழங்கியவுடன், ஏனைய அனுமதிகளை விரைந்து எடுத்து, விகாரை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பிக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.