வெடுக்குநாரி மலையில் வழிபாடுகள் மீள ஆரம்பம்

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு வழிபாடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களம், பொலிஸ் ஆகியோரினால் வழிபாட்டுக்கு இடையூறாக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பூசைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களை இனம் தெரியாத நபரினால் உடைக்கப்பட்ட நிலையில் மீண்டும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு முன்னெடுக்கப்பட்டு கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆலயம் சார்பில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது வவுனியா நீதவான் நீதீமன்றத்தினால் அடியார்கள் வழிபாட்டுக்கு செல்வதையும், ஆலய வழிபாட்டுக்கும் அரச உத்தியோகத்தரினால் தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நீதி மன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக நேற்றைய தினம் ஜேசுதகுருக்கல் தலைமையில் சுபவேளையில் பூசைகள் மற்றும் வழிபாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இன்று(வியாழக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக சபைக்கு அறிவித்தார்.

வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்க கறுப்பு பட்டியலில் இணைப்பு

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், அவர் மீதான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அவருக்கு விசா வழங்க மறுப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், அவர் குறித்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்ததுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வடமேல் மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.

கரன்னாகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ‘தீவிரமான மற்றும் நம்பகத்தன்மையுடன்’ இருப்பதாகவும், ஆளுநரோ அல்லது அவரது மனைவியோ அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், இலங்கையில் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்கா தமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசந்த கரன்னாகொடவிற்கு அமெரிக்காவில் நுழைய தடை

வடமேல் மாகாண ஆளுநரான அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொடவிற்கு தமது நாட்டிற்குள் நுழைய அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் வசந்த கரன்னாகொடவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி அசோகா கரன்னாகொட ஆகியோருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி ஜே. பிலின்கன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த மோதல்களின் போது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் வசந்த கர்ன்னாகொடவிற்கு இந்த தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

சவேந்திரவுக்கு எதிராக விமல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு: மறுக்கும் பாதுகாப்பு அமைச்சு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, பாதுகாப்புத் தலைமை அதிகாரி சவேந்திர சில்வாவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டை, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா, அரகலய போராட்டத்தின்போது இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் சதித்திட்டத்திற்கு ஆதரவளித்ததாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

2022ஆம் ஆண்டு மே 09ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களின் முதல் திட்டமாக, அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தலைவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்த நிலையில் கொலை செய்வதாகும் என்று குறிப்பிட்டிருந்த விமல் வீரவன்ச, அந்த நேரத்தில் ஜெனரல் சவேந்திர சில்வா இந்திய விஜயத்தை மேற்கொண்டமை இந்த சந்தேகத்தை எழுப்பியதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிக்கை!

தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டும் புத்துயிர் பெறுவதாகவும் அதனை முன்னோக்கி கொண்டு செல்ல முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நியாயமான சமூக வர்த்தக, பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு தான் பாடுபட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டு வரிகளை குறைத்ததன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் கொரோனா தொற்றுநோய் போன்ற பிரச்சினைகளால் ரூபாயின் மதிப்பு கடந்த வருடத்தின் மூன்று மாதங்களுக்குள் 40% குறைந்துள்ளது.

இந்த பின்னணியில் தான் ஜனாதிபதி பதவியை ஏற்றதாகவும் இல்லையெனில் இந்த நாடு அழிவை சந்தித்திருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க சரத்வத்தேச நாணய நித்தியத்திற்கு செல்வதைத்தவிர மாற்று வழி கிடையாது என்றும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கையில் ஒளிபரப்பு சேவையினை ஆரம்பித்தது ஆதவன் தொலைக்காட்சி

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையின் கீழ் பிரித்தானியாவை தலைமையகமாகக் கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு சேவையினை செய்துவரும் ஆதவன் தொலைக்காட்சி இன்று(புதன்கிழமை) முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பா, பிரித்தானியா, கனடா என புலம்பெயர்ந்து வாழும் உலக தமிழ் மக்களுக்கோர் உறவுப்பாலமாக ஆதவன் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு சேவையினை முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறான பின்னணியைக் கொண்ட ஆதவன் தொலைக்காட்சி இன்று முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்துள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் லைக்கா குழுமத்தின் பிரதித்தலைவர் பிரேம் சிவசாமி உள்ளிட்ட லைக்கா குழுமத்தின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

மூன்று நேர பிரதான செய்திகளையும், மணித்தியால செய்திகளையும், தமிழர் தாயகத்தில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளையும், புலம்பெயர் நாடுகளில் இடம்பெறும் தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளையும், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் என 24 மணித்தியாலங்களும் மக்களை மகிழ்ச்சிப்படுத்த ஆதவன் தொலைக்காட்சி தொடர்ந்தும் சேவையாற்றவுள்ளது.

கச்சத்தீவு புத்தர் சிலை விவகாரம்: ஆயர் இல்லம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

சிலை அகற்றப்பட்ட விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

இவ்விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

அத்துடன் , அது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் நன்றி தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

விமலின் கருத்துக்கு அமெரிக்க தூதுவர் மறுப்பு

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான 75 ஆண்டுகால ஜனநாயக மற்றும் இறையான்மை உறுதிப்பாடுகள் அவ்வாறே தொடர்ந்தும் பகிரப்படும் எனத் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்துக்களை மறுத்துள்ளார்.

‘ஒன்பது – மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ‘அரகலய’ ஆர்ப்பாட்டத்தின் பின்னணியுடன் அமெரிக்க தூதுவரை தொடர்புபடுத்தி அவரை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்துள்ள டுவிட்டர் பதிவிலேயே தூதுவர் தனது மறுப்பினை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில் , ‘புனைகதை’ என்று முத்திரை குத்தப்பட வேண்டிய புத்தகத்தில் ஒரு எம்.பி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி அப்பட்டமான பொய்களை பரப்பியிருக்கின்றார்.

75 ஆண்டுகளாக அமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் செழிப்புக்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. அதேபோன்று தொடர்ந்தும் கூட்டாண்மையுடன் எதிர்காலத்தை நாம் உருவாக்குவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் முழுமையாக முடங்கியது

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவும் தமிழர்களின் பாரம்பரிய இன, மத அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் வடக்கு, கிழக்கில் இன்றைய தினம் நிர்வாக முடக்கல் போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகள் வெறிச்சோடி போயுள்ளதாக தெரியவருகிறது