அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது

பாராளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. உரை

சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தல்

கொழும்பு, செப். 9, 2026:

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து நீக்கப்படுவது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிநாடுகளால் பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள ஒருவர் பாதுகாப்புப் படைகளின் உயர்பதவியில் இருப்பது பொருத்தமானதல்ல எனக் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கைகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், செம்மணி உள்ளிட்ட புதைகுழிகள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் அநீதிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதியும் நியாயமும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“உள்ளக விசாரணையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச அனுசரணையுடன் இடம்பெற வேண்டும்” என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. வலியுறுத்தினார்.

மேலும், கடந்த காலங்களில் நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்றளவும் சிறைகளில் உள்ள இளைஞர்கள் தொடர்பில் அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் எவராக இருந்தாலும், அவர்களின் அரசியல் அல்லது சமூக பின்னணியைப் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபர்களாகக் குறிப்பிடப்படுபவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட கருத்துகளையும் சுட்டிக்காட்டினார்.

“தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது எங்களுடைய ஆதரவு நிச்சயமாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் தொடர்பில் அறிக்கைகளை வெளியிடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. வலியுறுத்தினார். ஐ.நா. மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏறாவூர் உப தவிசாளர் தாக்கப்பட்ட சம்பவம்

தொடர்ந்து, ஏறாவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் ஞானசுந்தரம் கஜேந்திரன் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் அவர் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

ஐ.நூதீன் என அழைக்கப்படும் அதிகாரி தொடர்பில் விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் கோரிக்கை விடுத்தார்.

கள்ளிக்குளம் காணி விவகாரம்

மேலும், கள்ளிக்குளம் பகுதியில் வன இலாகா திணைக்களத்தினர் காணி எல்லைக் கற்களை நாட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கள்ளிக்குளம் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, அப்பகுதியில் வன இலாகா திணைக்களத்தினர் காணி எல்லைக் கற்களை நாட்டக்கூடாது என முடிவு செய்யப்பட்டிருந்த போதிலும், அந்தத் தீர்மானத்தை மீறி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
“அபிவிருத்திக் குழு எடுக்கின்ற தீர்மானங்களை அரச திணைக்களங்கள் ஏன் கடைப்பிடிக்க மறுக்கின்றன?” எனக் கேள்வி எழுப்பிய செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சில அரச திணைக்களங்கள் தனியான அரசாங்கம் போன்று செயற்படுகின்றனவா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அரசாங்கம் மற்றும் அபிவிருத்திக் குழுக்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு அரச அதிகாரிகள் உரிய முறையில் செவிசாய்க்க வேண்டும் என்றும், மக்களின் காணி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தடையாக இருக்கும் திணைக்கள நடவடிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

“ஜனாதிபதி கூறினாலும், வேறு யார் கூறினாலும் நாங்கள் இதனை கவனத்தில் கொள்ளமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் திணைக்களங்கள் செயற்படக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்

Posted in Uncategorized

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம்

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் போராட்டத்திற்கு ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் அனுமதியளித்துள்ள விடயம் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 15-08-2026 வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் எவ்வகையில் போராட்டத்திற்கு அனுமதியளிக்க முடியும் விளக்கம் கேட்டு யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகத்தில் அவரது அலுவலகத்தில் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தவிசாளரிடம் கேட்டபோது, யாழ்ப்பாண தலைமைப் பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடிதத்துடன் எனது அலுவலகத்திற்கு வருகை தந்த பொலிசார் என்னை பதிலளிக்குமாறு கோரும் கடிதத்தினை கையளித்தனர்.

ஐக்கியநாடுகள் சபை

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது செம்மணியில் போராட்டக்காரர்கள் தங்கியிருந்து போராடுவதுடன் பேரணியாக யாழிலுள்ள ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகத்தில் மனு கையளிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் போராட்டத்திற்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஆகிய நீங்கள் அனுமதி வழங்கியுள்ளமை பொலிஸ் தரப்பிற்குத் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான போராட்டத் தொடர் நடத்தப்படுவதன் மூலம், இலங்கையினுடைய வெவ்வேறு இனத்தவர்களுக்கிடையே ஒருவித அமைதியற்ற சூழ்நிலை ஏற்படுவதற்கும்இ பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதற்கும் வழிவகுக்கும் என பொலிஸ் கருதுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளக்கம்

மேலும் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடிதத்தில், பொலிஸ் தரப்பின் அனுமதியின்றி இவ்வாறான போராட்டத் தொடரை நடத்துவதற்கு உங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருப்பின் அதற்கான சட்டபூர்வமான அடிப்படை என்ன, இவ்வாறானதொரு போராட்டத் தொடரை எம்மால் எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஜனநாயக ரீதியிலான நீதி கோரிய வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நீதி கோரிய போராட்டத்தினை எமது பயன்பாட்டில் உள்ள நிலத்தில் நடத்துவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஜனநாயக ரீதியிலான மனித உரிமைகளை வலியுறுத்திய மக்கள் போராட்டம் என்ற அடிப்படையில் எமது மக்களின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு தான் அனுமதியளித்ததாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பொலிஸ் தரப்பிற்கு எழுத்து மூலம் பதிலளித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

குட்டிமணி தங்கத்துரை சிலை அமைப்பு விவகாரம்: ஏற்பாட்டாளரிடம் புலனாய்வு பிரிவு 5 மணிநேரம் விசாரணை

வெலிக்கடையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலை நிறுவுதல் ஏற்பாட்டாளரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான கந்தசாமி சதீசிடம் 06-08-2026 கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவினர் 5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

நேற்றைய தினம் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையம் ஊடக கிளிநொச்சி விசேட குற்ற பிரிவு அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான விசாரணை பிற்பகல் 3 மணி வரை இடம்பெற்றுள்ளது.

அழைப்பாணை

இதேவேளை குறித்த கந்தசாமி சதீஷ் அவர்கள் குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலைகளை கிளிநொச்சியில் உள்ள சிற்ப ஆச்சாரி ஒருவர் மூலம் செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த குட்டிமணி தங்கத்துரை ஆகியோரது சிலைகளை 14 நாட்கள் கிளிநொச்சி சிற்பக்கூடத்திலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் ஊடான தடை உத்தரவை வழங்கியுள்ளதுடன் நாளைய தினம் கந்தசாமி சதீஸ் அவர்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

வல்வெட்டித்துறை முன்னாள் உப தவிசாளரும், குட்டிமணி தங்கதுரை ஆகியோரது சிலை நிறுவுவதற்கான ஏற்பாட்டாளராக சொல்லப்படுகின்ற கந்தசாமி சதீஸ் கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இவர் 6.8.2026 காலை முதல் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

விசாரணை

எந்த விதமான போதுமான ஆதாரங்களோ ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் நேற்றைய தினம்(5.8) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் வல்வெட்டித்துறை பொலிஸ் ஊடக கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக இன்று அழைப்பதற்கான அழைப்பு ஆணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கத்துரைக்கு சிலை தற்காலிக தடையை நீக்கிய பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்

வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கத்துரைக்கு சிலை – தற்காலிக தடையை நீக்கிய பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்

வெலிக்கடை சிறைச்சாலையில் பேரினவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவர்களான குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு, வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதைத் தடுக்கும் வகையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தற்காலிகத் தடை உத்தரவு இன்று 05.08.2026 நீக்கப்பட்டுள்ளது.

குறித்த சிலை அமைப்பு தொடர்பில், முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளரும் ஏற்பாட்டாளருமான கந்தசாமி சதீஷுக்கு எதிராக வல்வெட்டித்துறை காவல்துறையினர் கடந்த ஜூலை 22ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, மேலதிக ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்காக காவல்துறையினர் 14 நாட்கள் கால அவகாசம் கோரியிருந்தனர்.

எனினும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106ஆம் பிரிவின்படி, தற்காலிகத் தடை உத்தரவை 14 நாட்களுக்கு மேல் நீடிக்க முடியாது என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து, வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் காவல்துறையினர் போதுமான ஆதாரங்களையோ ஆவணங்களையோ சமர்ப்பிக்காத காரணத்தால், முன்னர் பிறப்பிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை உத்தரவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்று நீக்கியுள்ளது.

இதன் மூலம், குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

குட்டிமணி, தங்கத்துரை சிலை நிறுவ நாளை வரை தற்காலிக தடை

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை இருவருக்குமான சிலை நிறுவுவதற்கு நாளை வரை(05) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.

கடந்த 25/07/2026 அன்று தியாகிகள் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது 43 வது தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவு நாளில் அவரது சகோதரனால் அவரது சொந்த காணியில் சிலை வைப்பதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இன்றுவரை சிலை வைக்க தடை

இந்தநிலையில் கடந்த 22/07/2026 அன்று முன்னாள் வல்வெட்டிதுறை நகரசபை உப தவிசாளர் சதீஸ் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்த நிலையில் இன்றுவரை குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை வைக்க தடை விதிக்கப்பட்டிருந்தது

நீதிமன்றின் உத்தரவு

இன்றையதினம் வழக்கு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந் நிலையில் அரச சட்டத் தரணியால் புலனாய்வு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு காலம் கோரப்பட்ட நிலையில் நாளைய தினம் வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் சிலை நிறுவுவதற்கும் நாளை வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட்ட ஐந்து சட்டத்தரணிகள் இன்றைய தினம் நீதிமன்றில் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் குற்றம் சாட்டப்பட்ட கந்தசாமி சதீஸ் சார்பில் மன்றில் முன்னிலை ஆகியிருந்தனர்.

இதேவேளை சதீஸ் அவர்களுடன் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் ஞானேந்திரன், சமூக ஆர்வலர் S.கஜந்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பொறுப்பாளர் ஈசன்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் க.கணேசகுமாரன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்

Posted in Uncategorized

வவுனியா ரெலோ மாவட்ட தலைமை செயலகத்தில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 23ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட போராளிகளையும் பல்லாயிரக் கணக்கான பொது மக்களையும் நினைவுகூரும் நினைவேந்தல் வவுனியாவில் இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா ரெலோ மாவட்ட தலைமை செயலகத்தில் நேற்று (26) மாலை 43 ஆம் ஆண்டு தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் பூறூஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ரெலோ தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,கட்சியின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி

இதன் போது குட்டிமணி, தங்கத்துரை உள்ளடங்கலாக 53 அரசியல் கைதிகளுக்கும், பொது மக்களுக்குமான நினைவேந்தல் இடம்பெற்றது.

அந்தவகையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகிய இருவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு

26.07.2026 சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள டூபென்டார்ஃப் (Dübendorf) பகுதியில், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் மற்றும் அஞ்சலி நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மறைந்த தலைவர்கள் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன், தேவன், நடேசுதாசன், குமார், குமாரகுலசிங்கம் ஆகியோருக்கும், 1983 ஜூலை 25 மற்றும் 27 ஆகிய நாட்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மௌன அஞ்சலி செலுத்தி, தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களை அர்ப்பணித்தவர்களின் தியாகத்தையும் நினைவுகூர்ந்தனர். அவர்களின் இலட்சியங்களும் தியாகங்களும் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

இந்நினைவேந்தல் நிகழ்வை ரெலோ சுவிஸ் நிர்வாகக் குழு ஒழுங்காகவும் அமைதியான முறையிலும் முன்னெடுத்து நடத்தி நிறைவு செய்தது.

“தியாகிகளை நினைவுகூர்வோம் – வரலாற்றை மறவோம்.”

Posted in Uncategorized

மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு

நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 23ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட போராளிகளையும் பல்லாயிரக் கணக்கான பொது மக்களையும் நினைவுகூரும் நினைவேந்தல் மன்னாரில் இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரிலுள்ள ரெலோ அலுவலகத்தில் நேற்று (26) மாலை 43 ஆம் ஆண்டு தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும், மன்னார் நகர முதல்வருமான டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி

இதன் போது குட்டிமணி, தங்கத்துரை உள்ளடங்கலாக 53 அரசியல் கைதிகளுக்கும், பொது மக்களுக்குமான நினைவேந்தல் இடம்பெற்றது.

அந்தவகையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகிய இருவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய வீரர்கள் தினம் திருகோணமலையில் உள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கில் நினைவுகூரப்பட்டது

வெலிக்கடை தியாகிகள் – 25-07-2026 தமிழ் தேசிய வீரர்கள் தினம்

திருகோணமலையில் உள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கில் திருகோணமலை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் சுடர் ஏற்றப்பட்டு நினைவுகூரப்பட்டது.

நினைவுத் தூபிக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணிச் செயலாளரும் திருகோணமலை மாநகர சபை உறுப்புனருமான தி.பிரபாதரன் மற்றும் மாநகரசபை உறுப்பினர் சற்பரூபன், திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேசசபை உறுப்பினர்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிருவாக செயலாளர் நித்தி மாஸ்டர், திருகோணமலை மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமைக்குழு உறுப்பினர் இலண்டன் ரூபன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவாளர்களின் பங்களிப்புடன் நினைவு தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடரேற்றப்பட்டு நினைவு கொள்ளப்பட்டது.

‘சட்டம் பொதுமக்களுக்கு மட்டுமா?’; யாழ்ப்பாணத்தில் 90% அரச கட்டிடங்கள் உள்ளூராட்சி அனுமதி இன்றி சட்டவிரோதமாக இயங்குவது அம்பலம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகளின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களில் 90 சதவீதமானவை, அந்தந்தப் பகுதிகளுக்குரிய உள்ளூராட்சி சபைகளின் (பிரதேச சபைகள்/மாநகரசபை) முறையான கட்டிட அனுமதி பெறப்படாமலேயே சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்டுள்ளதாக ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

சாதாரண பொதுமக்களின் சட்டவிரோத கட்டுமானங்களை உடனடியாக இடித்து தள்ள நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் அரச இயந்திரம், தங்களின் சொந்த நிறுவனங்கள் என்று வரும்போது சட்டத்தை அப்பட்டமாக மீறி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுமதியற்ற கட்டுமானங்களும் பொதுப்பாதுகாப்பு அபாயமும்
மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் எவ்வித முறையான கட்டிட அனுமதியோ அல்லது ‘குடியிருப்பு சான்றிதழோ’ (COC) இன்றியே பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.

நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கூடும் இந்த அரச கட்டிடங்களின் சுகாதாரம், தீயணைப்பு பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பொதுப் பாதுகாப்பு குறித்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ உத்தரவாதமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது பாரியதொரு ஆபத்தாகும்.

90% சட்டவிரோத கட்டுமானங்கள்: அரச நிதியுதவியுடன் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கட்டிட கட்டுமானங்களில் பெரும்பாலானவை பிரதேச சபைகளை முழுமையாகப் புறக்கணித்தே செய்யப்பட்டுள்ளன.

10 வருட கால எல்லை மற்றும் தடை: ஆளுநரின் புதிய அறிவுறுத்தலின்படி, கடந்த 10 வருடங்களுக்குள் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வர்த்தக அனுமதிப்பத்திரம் (Trade License) வழங்கப்பட வேண்டுமாயின், ‘குடியிருப்பு சான்றிதழ்’ சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பல அரச நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அபராதத்துடன் கூடிய சலுகைக்காலம்: தற்போது சட்டவிரோத மட்டத்தில் உள்ள அரச கட்டிடங்களுக்கான நிலு வரி மற்றும் அபராதங்களைச் செலுத்தி, அவற்றை விரைவாக வரன்முறைப்படுத்துவதற்கு பிரதேச சபை சில தளர்வுக் கொள்கைகளை (Flexibility) வழங்கத் தயாராக உள்ளது.

“சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்”
இது குறித்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விடுத்துள்ள நேரடி உத்தியோகபூர்வ அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ளதாவது:

“சட்டம் என்பது பொதுமக்களுக்கு மாத்திரமல்ல, அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கூட சட்டத்திற்கு அடிபணிய வேண்டும். சாதாரண மக்கள் மீது மட்டும் சட்டத்தை மிகக் கொடூரமாகப் பாய்ச்சிவிட்டு, நாட்டில் ‘சட்டத்தின் ஆட்சி’ (Rule of Law) நிலவுகிறது என்று நாம் பெருமகிழ்ச்சி அடைய முடியாது. சட்டம் அனைவருக்கும் சமமாகவே அமுல்படுத்தப்பட வேண்டும்.”
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற உத்தியோகபூர்வக் கூட்டத்தின் போதே தவிசாளரால் இந்த விபரங்கள் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டன.

இதன் அடிப்படையில், இனிவரும் காலங்களில் கட்டிட சட்ட விதிமுறைகளை மீறும் மற்றும் பிரதேச சபைகளைப் புறக்கணிக்கும் அரச நிறுவனங்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளூராட்சி சபைகள் தீர்மானித்துள்ளன.