அஸ்வெசும நலத்திட்டம் வினைத்திறனுடன் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த ஜனாதிபதி உத்தரவு

அஸ்வெசும நலத்திட்டத்தை வினைத்திறனுடன் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கு முன் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எழுத்து மூலமாக மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரை சமர்பிக்க அனுமதிக்கப்படும்.

அஸ்வெசும நலத்திட்ட பட்டியலில் பெயர்கள் இடம்பெறாதவர்கள் www.wbb.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று அங்கு குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கலாம்.

மேல்முறையீட்டு காலம் முடிவடைந்த பிறகு, பயனாளிகளின் இறுதிப் பட்டியலை அரசாங்கம் தயாரிக்கும் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்ட பெயர்களின் பட்டியல் இறுதிஉணவை அல்ல.

தமிழ் மொழியில் மேல்முறையீடு செய்ய https://wbb.gov.lk/web/download/tamil/form ஐ பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விவரங்கள் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 1924 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுக் கடனை இரத்து செய்யாமல் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியாது – ஹர்ஷ

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த மறுசீரமைப்புச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வு ஒன்று, மத்திய வங்கியின் ஆளுநரினால் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேற்படி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கியின் ஆளுநர், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான தெளிவுப்படுத்தல் ஒன்றை வழங்கியிருந்தார்.

ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது.

அரசாங்கமும், உள்நாட்டுக் கடனை இரத்து செய்யப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

இதனால், வங்கிக் கட்டமைப்பிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அல்லது சேமித்த பணத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் சமூகத்தில் நிலவி வருகிறது.

அத்தோடு, ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து நிலவி வருகிறது.

ஆனால், மத்திய வங்கியின் ஆளுநரோ இவை எதற்கும் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இதுதொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் – சஜித்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு, கடன் மறுசீரமைப்பு தொடர்பான உறுதியான நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும்.

கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதா? அப்படி செய்வதால் நாட்டுக்கு என்ன நடக்கும்?பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் இரத்து செய்யப்படுமா? வட்டி வீதம் இரத்து செய்யப்படுமா?

இதனால், நாட்டின் தேசிய வருமானத்திற்கு ஏற்படும் தாக்கம் என்ன? என்பதை ஜனாதிபதி தெளிவுப்படுத்த வேண்டும்.

உண்மையில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்றால் என்ன? இதன்ஊடாக வங்கிக் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து காணப்படுகிறது.

ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட பொது நிதிகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும்.
இவை தொடர்பாக நாட்டு மக்களுக்கு யாரும் தெரியப்படுத்தாத காரணத்தினால், சிலர் தவறான கருத்துக்களையும் அவர்களிடத்தில் கூறிவருகிறார்கள்.

எனவே, ஜனாதிபதி இதுதொடர்பான உண்மை நிலைமையை மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கூரையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை கருவிகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோபா குழுவின் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலையம் ஒன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றில் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கூட்டத்தின் போது, கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

எனவே, சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொணரும் பணியை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமனம்

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கை விமானப்படையின் தற்போதைய பதவி நிலைப் பிரதானியான எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்சவுக்கு நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் எயார் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ச இந்நாட்டின் 19 ஆவது விமானப்படை தளபதியாகவுள்ள நிலையில், அவர் கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர் என்ற வகையில் ஆனந்த கல்லூரியில் உருவான முதலாவது விமானப் படைத் தளபதியாகவும் கருதப்படுவார்.

1988 ஆம் ஆண்டில் பயிலுநராக கொத்தலால பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்துக்கொண்டதோடு, அநுராதபுரம் முகாமில் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் முதலாம் இலக்க 33 ஆவது விமானப்படை பயிற்சி பாடநெறியில் பங்குபற்றி பாடநெறியின் மிகச்சிறந்த பயிலுநராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளில் விமானப்படை அதிகாரியாக பங்கேற்ற அவர் சிறப்பான திறன்களை வெளிப்படுத்தியுள்ளார்.

விமானப்படை தளபதியாக நியமனம் பெறுவதற்கு முன்பாக அவர் விமானப்படையின் இரண்டாம் நிலை அதிகாரியாக நியமனம் வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (29) அதிகாலை 5.40 அளவில் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகத்தின் கடமை நேர உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த நால்வரும் பயணித்த சிற்றூந்து வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த அவர் புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்

விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 மருந்து விநியோகஸ்தர்களுக்கு 30 பில்லியன் ரூபா நிலுவை – சுகாதார அமைச்சு

 மருந்து விநியோகஸ்தர்களுக்கு 30 பில்லியன் ரூபா நிலுவைக் கொடுப்பனவை செலுத்த வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த நிறுவனங்களிடமிருந்து தொடர்ச்சியாக மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஶ்ரீ சந்திரகுப்தவிடம் வினவிய போது, இந்த பிரச்சினைகள் தொடர்பில் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக கூறினார்.

அதற்கமைய, நிலுவைக் கட்டணங்களை செலுத்துவதற்கான நிதியை உடனடியாக வெளியிட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, நேற்று முன்தினம்(26) முதல் அமுலாகும் வகையில் 60 வகையான மருந்துகளின் விலைகள் திருத்தியமைக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று கடந்த 15 ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய இஸ்ரேலுக்கு எதிராக விசாரணை நடாத்த கோரிக்கை

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக, இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்தாசை வழங்கி போர்க்குற்றத்துக்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் இஸ்ரேலுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை இஸ்ரேலின் மனித உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்த யெஸ் ஜிவல் (Yesh gvul), மற்றும் டொரட் செடெக் (terat zedec), மனித உரிமைகள் சட்டத்தரணி ஈடேய் மெக் ஆகியோரே முன்வைத்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் இஸ்ரேலிய ஆயுதங்களும் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருந்தன என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 14 வருடங்கள் ஆகின்ற போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரின் போது நடந்த போர்க்குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபையும், மனித உரிமை அமைப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன.

போரின்போது, பொதுமக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச ஆதரவு நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றென கண்டறியப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டுகளில், இஸ்ரேலின் இராணுவ தொழில்நுட்பத்தை கணிசமான அளவில் கொள்வனவு செய்து, ஆசியாவில் இஸ்ரேலின் மிக முக்கியமான வாடிக்கையாளர்களில் ஒருவராக இலங்கையும் மாறியது.

அத்துடன், போரில் ஈடுபட்ட இலங்கைப் படையினருக்கும் இஸ்ரேல் பயிற்சியும் அளித்துள்ளது. இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட கபிர் விமானங்கள் உள்நாட்டுப் போரில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

இலங்ககையின் உள்நாட்டு போரில் இஸ்ரேலிய ஆயுதங்களும் இராணுவ உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என குறித்த ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன.

இந்தநிலையில், போர்க் குற்றங்களில் இஸ்ரேலின் தொடர்பை வெளிப்படுத்தவும், வழக்குத் தொடரவும் தாம் விரும்புவதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணைகள் கோரப்படுகின்ற போதிலும் இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளில் இருந்து அவர்களுக்கு மறைமுகமாக உதவியவர்கள் மீது வழக்குத் தொடரப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

போருக்குப் பின்னர் இஸ்ரேலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் தலைமை அதிகாரி டொனால்ட் பெரேராவும் போரில் இஸ்ரேல் உதவியதை உறுதிப்படுத்தியுள்ளதாக கடந்த 2010 இல் இஸ்ரேலிய ஊடகமொன்று அளித்த செவ்வியில் அவர் இதனை பதிவிட்டார் என குறித்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது

உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான அதிகாரங்களை வழங்கும் பிரேரணை வர்த்தமானியில் வெளியீடு

நெருக்கடி காரணமாக தேர்தலை நடாத்த முடியாது என அறிவிக்கப்பட்டால் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான அதிகாரங்களை அமைச்சருக்கு வழங்குவதற்கான சட்டங்களைத் திருத்துவதற்கான ஜயந்த கடகொடவின் தனிநபர் பிரேரணை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தனிநபர் பிரேரணை மாநகர சபை கட்டளைச் சட்டம், மாநகர சபை திருத்தச் சட்டம் மற்றும் உள்ளுராட்சி மன்றச் சட்டம் ஆகியவற்றில் உள்ள பல சரத்துகளில் திருத்தங்களை அறிவித்துள்ளன.

இதன்படி, 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச, மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 252) மற்றும் நகர சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 255) ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு ஜயந்த கெட்டகொடவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இது அமுல்படுத்தப்பட்டால், தேர்தல் அறிவிக்கப்பட்டு, நெருக்கடி காரணமாக மேற்படி தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில், 12 மாதங்கள் கடந்தாலும் அமைச்சரின் விருப்பத்திற்கேற்ப முடிவெடுக்கப்பட்ட ஒரு காலத்திற்கு உள்ளூராட்சி மன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்படும்.

யாழ் – கொழும்பு புகையிரத சேவைகள் ஜூலை 15 ஆம் திகதி மீள ஆரம்பம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் கடவை பராமரிப்பு பணிகளுக்காக கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டது.

வடக்கு புகையிரத மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான நேரடிப் புகையிரத சேவைகள் அநுராதபுரம் புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்தியாவின் நிதி உதவியுடன் வடக்கு புகையிரத மார்க்க திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த திருத்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர் காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரத்திற்கு மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் புகையிரதங்கள் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு புகையிரதச் சேவையை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆசனப் பதிவுகள் உள்ளிட்ட மேலதிக விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களின் பின்னர் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என புகையிரதத் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் சமன் பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.