உள்நாட்டுக் கடனை இரத்து செய்யாமல் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியாது – ஹர்ஷ

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த மறுசீரமைப்புச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட அமர்வு ஒன்று, மத்திய வங்கியின் ஆளுநரினால் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேற்படி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கியின் ஆளுநர், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான தெளிவுப்படுத்தல் ஒன்றை வழங்கியிருந்தார்.

ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கிறது.

அரசாங்கமும், உள்நாட்டுக் கடனை இரத்து செய்யப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

இதனால், வங்கிக் கட்டமைப்பிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? அல்லது சேமித்த பணத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் சமூகத்தில் நிலவி வருகிறது.

அத்தோடு, ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்து நிலவி வருகிறது.

ஆனால், மத்திய வங்கியின் ஆளுநரோ இவை எதற்கும் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இதுதொடர்பாக நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.