ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் திருச்சபை சார்ந்த தமிழினத்தை வேதனைக்கு தள்ளியுள்ளது-அருட்தந்தை மா.சத்திவேல்

கத்தோலிக்க மதத்தலைவர்களின் தலைமையில் திருச்சபையின் மக்களால் ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தமது திருச்சபை சார்ந்த தமிழினத்தை வேதனைக்கு தள்ளியுள்ளது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (11.04) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோத்தா கோ ஹோம் என தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராகவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் நாட்டின் பல பாகங்களிலும் போராட்டம் தொடரும் நிலையில் கிறிஸ்தவ கத்தோலிக்க மதத்தலைவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமையும் திருச்சபையின் மக்களால் அவர்கள் புனித நாளான குருத்தோலை ஞாயிறு பல்வேறு இடங்களில் கோட்டா கோ ஹோம் பாணியில் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்தப்பட்டது.

இவர்களின் தேசியக்கொடியும் முன்வைத்த கோஷங்களும், பதாகைகளும் அவர்களின் நடுநிலையை மட்டுமல்ல கிறிஸ்தவ மத இறை சிந்தனையின் இருண்ட தன்மையை வெளிப்படுத்துவதோடு தமது திருச்சபை சார்ந்த தமிழினத்தையும் வேதனைக்கு தள்ளியுள்ளது என்றே கூற வேண்டியுள்ளது.

இந்த நாட்டை ஆட்சி புரிந்த அனைத்து கட்சிகளும் பௌத்த சிங்கள இன மத மக்களை தவிர்ந்த ஏனைய இனத்தவர்களையும் மதத்தவர்களையும் சமத்துவம் அற்றவர்களாக, அந்நியர்களாக பார்த்ததோடு அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்றே செயல்பட்டு அரசியல் யாப்பையும் தயாரித்து அதன் அடையாளமாகவே தேசியக் கொடியை வடிவமைத்து பாதுகாத்து வருகின்றனர். இத்தகைய கொடியை உயர்த்திப் போராட்டம் நடத்துவது இவர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை என்பதா? அல்லது தங்களையும் ஏமாற்றி தங்கள் பக்தியை நிர்வாணப்படுத்த முயற்சிக்கின்றார்கள் என்று சிந்திப்பதா?

வடகிழக்கு மக்களும் மலையக மக்களும் பல தசாப்தங்களாக இன அழிப்பிற்கு உட்பட்டு வருவதோடு குறிப்பாக 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இந்த நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலைக்கும் இன அழிப்பிற்கும் முகங்கொடுத்து நீதி கேட்டு சர்வதேசத்தின் கதவுகளை தட்டி கொண்டிருக்கின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடுவோர், அரசியல் கைதிகள் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கும் உறவுகள், இராணுவம் கையகப்படுத்திய காணிகளை மீள பெற்றுக்கொள்ள காத்திருப்போர் வீதிகளில் நிற்க, வடகிழக்கில் பௌத்த மயமாக்கல், இராணுவ மயமாக்கல் தொடர்ந்திட அவற்றிற்கு எதிராக நீண்ட காலமாக போராட்டம் தொடர்கின்றது.

அத்தோடு நீண்டகால யுத்தத்திற்கான செலவீடுகளும் தொடர்ந்து இராணுவத்தை பாதுகாப்பதற்கான பெருமளவான நிதி ஆண்டுதோறும் விரயமாக்கி வருவதோடு யுத்த காலத்தில் பல மில்லியன் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாயிருப்பது போன்ற விடயங்களும் இக்கால திருச்சபைத் தலைவர்கள் வெளிக் கொண்டுவர தயங்குவது ஏன்?

மேலும் 2019ஆம் ஆண்டு உயிர்ப்பு தின குண்டுத் தாக்குதல் காரணமாகவே கடவுள் நாட்டை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளார் என்பதோடு இந்த வருடம் உயிர்ப்பு தின தினத்தோடு நாட்டின் பிரச்சினைகள் முற்றுப் பெற்றுவிடும் என்பது இவர்களின் அரசியல் பொருளாதார குருட்டுத் தன்மையை மட்டுமல்ல கடவுள் பற்றிய இவர்கள் சிந்தனையின் மலட்டுத்தன்மை கொண்டதாகவே உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இவர்களின் கூற்றுப்படி 2019ஆம் ஆண்டு குண்டுத்தாக்குதல் மட்டுமே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம். கடவுள் அதற்காகவே தண்டிக்கின்றார் என்றால் வடகிழக்கில் நடந்த யுத்தத்தையும், இனப்படுகொலையையும், உறவுகள் காணாமலாக்கப்பட்டதையும், அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறையில் வாடுவதையும், நிலம் பறிக்கப்பட்டு சுதந்திரமிழந்த மக்களாக தமிழர்கள் வாழ்வதையும் கடவுளை ஏற்றுக் கொள்கிறாரா? அடிமட்ட மக்கள் நாளாந்த உணவுக்கு கையேந்துவதும் கடவுள் விருப்பமா? எனும் கேள்வியையும் கேட்க தோன்றுகின்றது.

தற்போதைய கிறிஸ்தவ கத்தோலிக்க தலைவர்கள் வடகிழக்கில் எத்தனையோ கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டும் காணாமலாக்கபட்டும் இருக்கையில் குறைந்தது அவர்களையாவது சிந்திக்க தவறுவது ஏன்? இவர்களின் சிந்தனையில் தெற்கின் கிறிஸ்தவ கடவுள் வேறு , வட கிழக்கு கிறித்தவர்களின் கடவுள் வேறு என்றா கூறுகின்றனர்?

கிறிஸ்தவ தலைவர்கள் ஒடுக்கப்படும் மக்களை பிரித்தும் ஒடுக்கப்பட்டவர்கள் தான் யாரால் கொடுக்கப்படுகிறோம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தாமல் இருப்பதும் அவர்கள் பற்று வைத்திருக்கும் கடவுளுக்கும் அவர்களின் திருமறை போதனைக்கும் எதிரானதே.

இவ்வருட உயிர்ப்பு தினத்திற்கு முன் நிறுவன திருச்சபையும் அதன் அமைப்புகளும் தலைமைத்துவங்களும் மீண்டும் திருமுழுக்குப் பெற வேண்டும். உண்மைக்கு திரும்ப வேண்டும். கிறிஸ்துவின் வாழ்வு மற்றும் உயிர்ப்பு வெளிச்சத்தில் எழுந்து நாட்டில் பிரச்சினைகளை அணுகி வரலாற்று ரீதியில் புரையோடிப் போயுள்ள அரசியல் பொருளாதார பிரச்சினைக்கு காரணமானவர்களை அடையாளப்படுத்தி வடகிழக்கு, மலையக மக்களினதும் உரிமைகளுக்காக குரல் எழுப்பி பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே ஒடுக்கப்படும் அனைத்து மக்களினதும் கோரிக்கையும் வேண்டுகோளுமாகும் என அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

 எம்.பி.களை மனசாட்சிபடி வாக்களிக்க கோர வேண்டும் – மனோ கணேசன் யோசனை 

ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் 20ம் திருத்தத்தை அகற்றி, பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை மீளப்பெறும் 19ம் திருத்தத்தை உள்வாங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவோம். இதற்கான வாக்கெடுப்பில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சென்று நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்க கோருவோம். 225 எம்.பி.களில் மனசாட்சிபடி வாக்களிக்கும் எம்.பி.கள் யார், மனசாட்சியை மறந்துவிட்டு வாக்களிப்பவர்கள் யார் என்பதை  அவர்களுக்கு வாக்களித்த மக்களும், வெளியே போராடும் மக்களும் அறிந்துகொள்ளலாம்.

முதலில் இவரது அதிகாரங்களை பிடுங்க வேண்டும். அதைவிடுத்து இவருக்கு கீழே “காபந்து” அரசு அமைத்தால், அது “கால்பந்து” அரசாகவே அமையும்  என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது டுவீட்டர் தளத்தில்கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,  

நம்பிக்கை இல்லா பிரேரணையை விட இதுதான் ஜனாதிபதியை நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப கோரும் கோஷத்தின் அடிப்படை இதுதான். எமது கட்சி உட்பட, இந்நாட்டில் எதிரணி அரசியல் கட்சிகள் கோருவது இதைதான். சமூக சிவில் அமைப்புகள் கோருவது இதைதான். வெளியே தெருக்களில் போராடும் மக்கள் கோருவதும் இதைதான்.

நம்பிக்கை இல்லா பிரேரணையையிலும் கையெழுத்திடுவோம். அதையும் கொண்டு வருவோம். ஆனால், அதைவிட 21ம் திருத்தத்தை கொண்டு பிரதானமாக கொண்டு வருவோம்.

நம்பிக்கை இல்லா பிரேரணை என்பது ஜனாதிபதியின் அரசாங்கத்துக்கு எதிரானது. அது வெற்றி பெற்றால், புதிய அமைச்சரவை இந்த ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவின் கீழேயே அமைய வேண்டும். அதை செய்ய முடியாது. அது நடைமுறை சாத்தியமற்றது.

ஏனெனில், ஜனாதிபதியின் சொந்த பொதுஜன முன்னணி கட்சி அமைச்சரவையே இவருக்கு கீழே செயற்பட முடியாவிட்டால், எதிரணியும் பங்கு பற்றும் காபந்து அரசாங்கம் எப்படி இவருக்கு கீழே செயற்பட முடியும்? அப்படியானால், அது “காபந்து” அரசாங்கமாக இருக்காது, “கால்பந்து” அரசாங்கமாகவே இருக்கும்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை பிடுங்கும் 21ம் திருத்தத்தை, ஆதரிக்காமல், தமது மனசாட்சியை மறந்துவிட்டு பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிக்கும் எம்.பி.களை அவர்களுக்கு வாக்களித்த மக்கள் அடையாளம் கண்டு கொள்ளலாம். வெளியே போராடும் மக்களும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இந்த ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச பதவி விலகி வீட்டுக்கு போக வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த இலங்கை மக்களின் கோரிக்கை.  ஆகவே அவர் வீட்டுக்கு போகும் போது, 21ம் திருத்தத்தை, தமது மனசாட்சியை மறந்துவிட்டு எதிர்த்து வாக்களிக்கும் எம்.பி.களையும் அவருடன் துணைக்கு அனுப்பி வைக்கலாம்.

Posted in Uncategorized

ஜனாதிபதி – சுயாதீன எம்.பிக்களுடனான சந்திப்பில் இணக்கப்பாடு இல்லை!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் எம்.பிக்களுக்கும் இடையில் நேற்றிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.

புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று சுயாதீன உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளது.

அத்துடன் அந்த அமைச்சரவையில் ராஜபக்சக்கள் இடம்பெறக்கூடாது எனவும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மேற்படி பிரதிநிதிகளை ஜனாதிபதி நேற்றிரவு அழைத்திருந்தார். நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் பிரதானிகள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

சுமார் இரண்டவரை மணிநேரம்வரை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இடைக்கால அரசு அமைப்பது தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரியவருகின்றது.

Posted in Uncategorized

அமெரிக்க டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு

பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 330 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி முகத்திடலில் கோ ஹோம் கோத்தா கிராமம் உருவானது !

கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பு கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக இன்று திங்கட்கிழமை 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பபட்டுள்ள மக்கள் ‘கோட்டா-கோ-கம’ (கோட்டகோகம) என்ற பெயரில் முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களால் காலி முகத்திடல் பகுதியில் கூடாரங்கள் அமைத்து உணவு சமைத்து, பரிமாறி ஆர்ப்பாட்டம் தொடர் ஆர்ப்பாட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

ஒரு சிறிய மாதிரிக் கிராமம் போன்று கோட்டா-கோ-கம அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இலவச உணவு, தண்ணீர், கழிப்பறைகள் மற்றும் சுகாதார அவசரநிலைகளுக்கான மருத்துவ முகாம் உட்பட அனைத்து அடிப்படைத் தேவைகளும் உள்ளன.

Posted in Uncategorized

அரசாங்கமும் தோற்றுவிட்டது எதிர்க்கட்சிகளும் தோற்றுவிட்டன நாடே தோற்றுவிட்டது?

-நிலாந்தன்.

தற்பொழுது தென்னிலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மக்கள் எழுச்சிகள் இலங்கைத்தீவின் நவீன அரசியல் வரலாற்றில் முன்னெப்பொழுதும் ஏற்படாதவை. இதற்கு முன்பு இலங்கைத்தீவு, நாடு தழுவிய வேலை நிறுத்தங்களை கண்டிருக்கிறது. தமிழ் மக்களின் சத்தியாகிரக போராட்டத்தை கண்டிருக்கிறது. தொழிற்சங்க போராட்டங்களை கண்டிருக்கிறது. ஜேவிபியின் இரண்டு ஆயுதப் போராட்டங்களை கண்டிருக்கிறது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை கண்டிருக்கிறது. தவிர கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் ஆங்காங்கே தெட்டந் தெட்டமாக நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்கள், ஒருநாள் எழுத தமிழ்கள், சில நாள் P2P போன்றவற்றை கண்டிருக்கிறது. ஆனால் தென்னிலங்கையில் இப்பொழுது நடப்பதுபோல மக்கள் தன்னியல்பாகவும் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் அரசாங்கத்துக்கு எதிராக வீதிகளில் இறங்குவது என்பது ஒரு புதிய தோற்றப்பாடு.

இம்மக்கள் எழுச்சிகளில் ஒருபகுதி எதிர்க்கட்சிகளால் ஒழுங்கு படுத்தப்படுகின்றன. மற்றொரு பகுதி தன்னியல்பானது. மக்கள் தாமாக முன்வந்து போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இந்த மக்கள் எழுச்சிகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டன.அவற்றுக்கு தலைமைத்துவம் உண்டு,வழிகாட்டல் உண்டு. ஒரு அரசியல் வழி வரைபடம் உண்டு. ஆனால் தன்னியல்பான போராட்டங்கள் அப்படியல்ல.அவற்றுக்கு தலைமைத்துவம் இல்லை.பொது சனங்களின் கோபம்தான் அந்த போராட்டங்களுக்கான உணர்ச்சிகரமான அடிப்படை. அப் போராட்டங்களில் கட்சிகளின் சின்னங்கள் இல்லை,கட்சிகளின் கோரிக்கைகளும் இல்லை. ஆனால் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பொதுவாக சிங்கக்கொடிகளோடு காணப்படுகிறார்கள்.இவர்களுக்கு தலைமைதாங்கி ஒன்று திரட்டும் மக்கள் இயக்கம் அரங்கில் இல்லை.அரங்கில் உள்ள கட்சிகளும் ஒற்றுமையாக இந்த மக்கள் எழுச்சி களுக்கு தலைமை தாங்கும் நிலை இல்லை.

இலங்கைத்தீவின் நவீன அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சிகளுக்கு இது போல ஒரு பொன்னான தருணம் கிடைக்கவில்லை. இந்த மக்கள் எழுச்சிக்கு தலைமை தாங்கி அவற்றை அவற்றின் உச்சம் வரை கொண்டு போக எதிர்க்கட்சிகள் தயாரா?

கடந்த சில வார நிகழ்வுகளை உற்றுப்பார்த்தால், குறிப்பாக நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களை உற்றுப் பார்த்தால் எதிர்க்கட்சிகளுக்கு அவ்வாறு மக்கள் எழுச்சிகளை ஒருங்கிணைத்து புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் இல்லை என்றே தெரிகிறது.

இதுபோன்ற மக்கள் எழுச்சிகளை சரியாக வழி நடத்தினால் அவை புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும். அவ்வாறு வழி நடத்தாவிட்டால் அவை திசை திருப்பப்படும்.அல்லது காலகதியில் சோர்ந்து போய்விடும்.

வழிநடத்தப்படாத மக்கள் எழுச்சிகள் திசை திருப்பப்படுமாக இருந்தால் அவை விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும். அவை வன்முறையில் போய் முடியும். அது அரசாங்கத்துக்கு படைத்தரப்பை ஏவிவிடுவதற்குரிய வாய்ப்புக்களை வழங்கக் கூடும்.அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களை கையாள்வதற்கு படைத்தரப்பை அனுப்பத் தயாரில்லை.சரத் பொன்சேகா கூறியதுபோல எட்டாம் வகுப்பு வரை படித்த சிப்பாய்களை அங்கே அனுப்பக்கூடாது என்று தீர்மானித்து அரசாங்கம் அதை செய்யவில்லை.சரத் பொன்சேகா கூறுவதற்கு முன்பே அரசாங்கம் அந்த முடிவை எடுத்து விட்டது.

ஏற்கெனவே இன முரண்பாட்டில் போர்க் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கும் படைத்தரப்பை ஒப்பீட்டளவில் அதிகம் பாதுகாத்தது இந்த அரசாங்கம்தான். போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து ஒருவர் மற்றவரை பாதுகாக்க வேண்டிய தேவை பரஸ்பரம் படைத்தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் உண்டு. கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக அரசாங்கம் அதைச் செய்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு அரசாங்கம் படைத்தரப்பை அதன் சொந்த மக்களோடு மோத விடத் தயங்குகிறது.அதன் மூலம் படைத்தரப்பின் பெயர் மேலும் கெடுவதை அரசாங்கம் விரும்பவில்லை.

தவிர இதுபோன்ற தன்னியல்பான எழுச்சிகளின்போது படைத் தரப்பை முன்னிறுத்துவது எதிர்மறையான விளைவுகளையே தரும்.ஏற்கனவே கொழும்பில் அவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்ட முற்பட்ட ராணுவத்தின் பீல்ட் பைக் அணியைச் சேர்ந்த ஒரு சிப்பாய் போலீசாரால் தாக்கப்பட்டது விவகாரம் ஆக மாறியிருக்கிறது.

அதேசமயம் வழிநடத்தப்படாத எழுச்சிகளை அடக்க முற்படாமல் அவற்றை அவற்றின் போக்கிலேயே விட்டால், அவை ஒரு கட்டத்தில் தேங்கி நின்றுவிடும் அல்லது சோர்ந்து போய்விடும்.இதற்கு உலகளாவிய அனுபவங்கள் உண்டு.எனவே தன்னியல்பான மக்கள் எழுச்சிகளை எதிர்க்காமல் அவற்றின் போக்கிலேயே விடுவதன்மூலம் ஒரு கட்டத்தில் அவை தாமாக நீர்த்துப் போய்விடும்,சோர்ந்து போய்விடும் என்று அரசாங்கம் நம்பக் கூடும்.

இக்காரணங்களினால்தான் அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு படைத்தரப்பை அனுமதிக்கவில்லை.அனுமதிக்கப்பட்ட பொலிசாரும் பல சமயங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக காணப்படுகிறார்கள்.

ஹோமகமவில் ஊரடங்கு வேளையிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய பொலிசார் அனுமதித்தார்கள். அதனால் ஹோமாகம பொலிஸுக்கு ‘ஜெயவேவா’ என்று மக்கள் கோஷமெழுப்பியுள்ளார்கள். குருநாகலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் தமது பக்க நியாயங்களை விளக்கிக் கூறிய பொழுது ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கண்ணீர் விடுகிறார். கொழும்பில் பீல்ட் பைக் சிப்பாயை தாக்கியது ஒரு போலீஸ் அதிகாரி தான்.

எனவே இதுபோன்ற தன்னியல்பான எழுச்சிகளை படைத்தரப்பு, பொலீஸ் போன்றவற்றின்மூலம் அடக்குவதில் உள்ள வரையறைகளை அரசாங்கம் உணர்ந்து இருக்கிறது.மாறாக அவற்றை அடக்காமல் அவற்றின் போக்கிலேயே விடுவதன் மூலம் ஒரு கட்டத்தில் அவை தாமாக வேகம் தணிந்து சோர்ந்து போகக்கூடிய வாய்ப்புக்களையும் கவனத்தில் எடுத்து அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்களை அதிகம் அடக்க முற்படவில்லை.

இவ்வாறு அரசாங்கம் அடக்க தயங்கும் மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கி மக்களின் கோபத்தை ஒரு அரசியல் ஆக்க சக்தியாக மாற்ற எதிர்க்கட்சிகளும் தயாரில்லை.எதிர்க்கட்சிகள் மேற்படி மக்கள் எழுச்சிகளை ஒருங்கிணைக்க முடியாதவைகளாகக் காணப்படுகின்றன. ஒருபுறம் எதிர்க்கட்சிகள் தாங்களாக கூட்டங்களையும் எழுச்சிகளையும் ஒழுங்குபடுத்தி வருகின்றன.ஆனால் தன்னியல்பான மக்கள் எழுச்சிகள் பொறுத்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒரு பொதுவான வழி வரைபடம் இருப்பதாக தெரியவில்லை.

எதிர்க்கட்சிகளால் புரட்சிகரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதனை அரசாங்கம் நன்கு விளங்கி வைத்திருக்கிறது.மக்கள் எழுச்சிகளுக்கு தலைமை தாங்கத் தவறியது மட்டுமில்லை நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிரான உறுப்பினர்களை திரட்டி ஒரு பெரும்பான்மையைக் காட்டுவதிலும் எதிர்க்கட்சிகள் இன்று வரையிலும் முன்னேறவில்லை. அரசாங்கம் அதை ஒரு சவாலாகவே எதிர்க்கட்சிகளின் நோக்கி முன்வைக்கின்றது. ஆனால் அரசாங்கம் கேட்கும் பெரும்பான்மையை காட்ட எதிர்க்கட்சிகளால் முடியாமல் இருக்கிறது அதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு.

முதலாவது காரணம் எதிர்க் கட்சிகள் மத்தியில் எல்லாரையும் ஒன்றிணைக்கவல்ல, மூன்று இன ங்களின் வாக்குகளையும் கவரவல்ல ஜனவசியம் மிக்க தலைவர்கள் குறைவாகக் காணப்படுவது.

இரண்டாவது காரணம் எதிர்க்கட்சிகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கத் தயாரில்லை.அவ்வாறு ஆட்சிப்பொறுப்பை ஏற்பதன்மூலம் தோல்வியின் பங்காளிகளாக மாறத் தயாரில்லை.இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளை யார் வந்தாலும் எடுத்த எடுப்பில் தீர்க்க முடியாது என்பது எதிர்க்கட்சிகளுக்கும் நன்கு தெரிகிறது. எனவே ஏற்கனவே தோற்றுவிட்ட அரசாங்கத்தை மேலும் மோசமாக தோல்வியுற வைப்பதன் மூலம் தமக்கு சாதகமான ஒரு நிலைமையை கனிய வைக்கலாம் என்று எதிர்கட்சிகள் கார்த்திருக்கின்றனவா?ஆனால் அரசாங்கம் எவ்வளவுதான் தோல்வியுற்றாலும் யாப்புக்குள் நின்று ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாமா?

மூன்றாவது காரணம் யாப்பு. இப்போதிருக்கும் நெருக்கடிகள் யாவும் ஒருவிதத்தில் யாப்பு நெருக்கடிகள்தான். யாப்புக்குள் நின்று இப்போதிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெறுவது கடினம்.நாடாளுமன்றத்தை உரிய காலம் வரும்வரை கலைக்க முடியாது.நாடாளுமன்றத்தைக் கலைக்கும்வரை நெருக்கடிகளை பொறுத்துக்கொள்ள முடியாது. ஜனாதிபதி ஒன்றில் தானாக முன்வந்து பதவி விலக வேண்டும்.அல்லது அவரை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் தோற்கடிக்க வேண்டும்.எதிர்க்கட்சிகளிடம் அதற்கு வேண்டிய பலம் உண்டா? இல்லையென்றால் இந்த ஜனாதிபதியின் கீழ்தான் ஒரு இடைக்கால ஏற்பாட்டுக்கு போக வேண்டியிருக்கும். அப்படி இடைக்கால ஏற்பாட்டுக்கு போனால் அதில் ஜனாதிபதியின் தோல்வியை புதிய இடைக்கால கட்டமைப்பும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். எப்படித்தான் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இந்த பிரச்சினைக்கு யாப்புக்குள் தீர்வு கிடையாது. யாப்புக்கு வெளியே சிந்திக்க வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் தயாரில்லை.”நாங்கள் யாப்பு ரீதியிலான ஜனநாயகத்தை அதற்குரிய கட்டமைப்புக்களுக்கூடாக உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த ஜனாதிபதி முறைமையின் கீழ் இந்த ஜனாதிபதியின் கீழ் அதற்கான வழி எதுவும் முன்னாள் இல்லை” என்று சஜித் கூறுகிறார்.

மேற்கண்ட மூன்று காரணங்களின் அடிப்படையிலும் தொகுத்துப் பார்த்தால் இப்போதிருக்கும் நெருக்கடியை யாப்புக்குள் நின்று தீர்க்க முடியாது. ஆனால் யாப்புக்கு வெளியே போனால் தீர்வு உண்டு.அவ்வாறு வெளியே போகத் தேவையான துணிச்சலையும் பலத்தையும் மக்கள் எழுச்சிகளை ஒருங்கிணைப்பதன்மூலம் பெறலாம்.ஆனால் அதற்கு எதிர்க்கட்சிகள் தயாரில்லை.இதுதான் பிரச்சினை.

ஏற்கனவே தோல்வியுற்ற ஓர் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப யாப்பு தடையாக இருக்கிறது. அந்தத் தடையை உடைத்துக்கொண்டு முன் செல்ல தேவையான பலத்தை மக்கள் எழுச்சிகள் வழங்குகின்றன.ஆனால் எதிர்க் கட்சிகளும் இந்த பொன்னான சந்தர்ப்பத்தை பயன்படுத்த தயாராக இல்லை. இப்படிப்பார்த்தால்,இலங்கைதீவில் அரசாங்கம் தோற்றுவிட்டது. எதிர்க்கட்சிகளும் தோற்றுவிட்டன. மொத்தத்தில் இலங்கைதீவே தோற்றுவிட்டது. இதில் 2009இல் ராஜபக்சக்கள் சிங்கள மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த வெற்றி எங்கே?

மனித உரிமைகளும் மதித்தல், பாதுகாத்தலையும் உறுதி செய்யுமாறு ஐ.நா. நிபுணர்கள் குழு அரசாங்கத்திற்கு அழைப்பு

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் நடத்தப்பட்ட சில போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அனைத்து மனித உரிமைகளும் மதிக்கப்படுவதையும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு ஐ.நா. நிபுணர்கள் குழு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை அவசரகால பிரகடனம் மற்றும் சமூக ஊடகங்கள் மீதான தடை ஆகியவற்றால் மிகவும் கவலையடைவதாகவும் ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் குழு கூறியுள்ளது.அமைதியான முறையிலான ஒன்றுகூடல் மற்றும் போராட்டங்களின் போது கருத்து தெரிவிப்பதற்காக உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிகத்தை அதிகமாகப் பயன்படுத்துவதையும் கண்டிப்பதாக அறிவித்துள்ளது.வெளிநாட்டு கடன், ஊழல் மற்றும் கொரோனா நெருக்கடி ஆகியவற்றின் தாக்கம், நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது

Posted in Uncategorized

“இனவரம்பில்லாமல் உதவ வேண்டும்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனோ கணேசன் வேண்டுகோள்

இனவரம்பில்லாமல் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவ வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “தமிழக முதல்-அமைச்சரின் உதவி கரங்கள், எல்லா தமிழருக்காகவும் நீள்வதை நன்றியுடன் வரவேற்கும், அதேவேளை, இன்று இலங்கையில் நிகழும் ஏகோபித்த போராட்டங்களை அனுசரிக்கும் விதமாக முதல்-அமைச்சரின் சமூகநீதி கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காகவும் நீள வேண்டுமென கோருகிறோம்” என்று அதில் மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இலங்கையில் வசிக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழக அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகவும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் மத்திய வெளியுறவுத் துறை மந்திரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியால் அகதிகளாக மக்கள் தொடர்ந்து இடம்பெயர்

இலங்கை நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் பொருளாதார கஷ்டத்தின் நிமித்தம் வட பகுதி மக்கள் மன்னார் பாக்குநீர் வழியாக இந்தியாவுக்கு தங்கள் குடும்பங்களுடன் அகதிகளாக இடம்பெயரும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்து.

ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரைச் சேர்ந்த 19 பேர் அதிகளாகச் சென்று தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக மக்கள் உணவு அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்ற இவ்வேளையில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரை சேர்ந்த 9 பேர் படகு ஒன்றில் மன்னாரில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (10.04.2022) அதிகாலை தனுஷ்கோடி வந்து பின்னர் அங்கிருந்து பேருந்து மூலமாக மண்டபம் அகதிகள் முகாமுக்கு போய் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து மெரைன் போலீசார் இலங்கை தமிழர்கள் 9 பேரிடமும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சூழலில் தற்போது இலங்கை மன்னார் பகுதியில் இருந்து புறப்பட்ட மேலும் 10 பேர் மணல் தீடையில் இறங்கியுள்ளதாகவும்

ஞாயிற்றுக்கிழமை (10.04.2022) மட்டும் ஒரே நாளில் 19 இலங்கை அகதிகள் தலைமன்னார் பாக்குநீர் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் அகதிகளாகச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.தீடையில் நின்றவர்களை தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் ஹெவர் கிராப்ட் கப்பல் மூலம் 10 பேரை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் அகதிகளாகச் சென்ற இவ் இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளமன்ற உறுப்பினர்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார் ஜனாதிபதி ! இன்றிரவு முக்கிய பேச்சு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திலிருந்து விலகி, சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்துள்ள பாராளமன்ற உறுப்பினர்களை , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய, 41 எம்.பிக்களுக்குமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றிரவு 7 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்குமாறே கோரியுள்ளனர்.

இதேவேளை, விமல் வீரவங்ச உள்ளிட்டவர்கள், அதனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

Posted in Uncategorized