இலங்கையுடன் ‘ஏயர் பபுள்’ விமான சேவையை ஏற்படுத்தியுள்ள இந்தியா

இரு நாடுகளுக்கிடையில் சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்க இலங்கையுடன் இருதரப்பு ‘ஏயர் பபுள்’ விமான சேவையை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயான இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை தங்களது விமான நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தக்கூடிய நிலைமைகளின் கீழ் இயக்க முடியும்.

இலங்கை மாத்திரமன்றி ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஈராக், ஜப்பான், மாலைத்தீவு, நைஜீரியா, கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளுடன் இந்தியா தற்சயம் அத்தகைய ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது டுவிட்டர் பதிவில்,

இந்தியா இலங்கையுடன் ஒரு ‘ஏயர் பபுள்’ விமான சேவை ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது, இது சார்க் பிராந்தியத்தில் இதுபோன்ற 6 ஆவது ஏற்பாடாகவும், மொத்தம் 28 ஆவது இடமாகவும் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 2020 மார்ச் 23 முதல் இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்கள் கடந்த ஆண்டு மே முதல் வந்தே பாரத் மிஷனின் கீழ் மற்றும் ஜூலை முதல் இருதரப்பு ஏயர் பபுள் ஏற்பாடுகளின் கீழ் இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நான்கு நாடுகளில் இருந்து இஸ்லாமிய மத போதகர்கள் இலங்கைக்குள் நுளைவதற்குத் தடை

பாகிஸ்தான், கட்டார், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து இஸ்லாமிய மத போதகர்கள் இலங்கை வருவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு மத போதகர்களை வரவழைத்த 32 இஸ்லாமிய அமைப்புகள் தொடர்பாக அரச புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 1800 இஸ்லாமிய மத போதகர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் பேருவளை, அக்கரைபற்று, காத்தான்குடி, மாதம்பை, மூதூர் ஆகிய பிரதேசங்களுக்கு சென்று மத போதனைகளை நடத்தியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தெரியவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

உள்நாட்டு சர்வதேச ஒத்துழைப்பு இல்லாது உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த முடியாது : ரெலோ செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்நாட்டு சர்வதேச ஒத்துழைப்பு இல்லாமல் நடத்த முடியாது. அத்துடன் தாக்குதலுக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தாமல் அதனை புலிகளின் மீது சுமத்தி பாதுகாப்பு துறை வேடிக்கை பார்த்துள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான ஆறாவதுநாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஏப்ரல் தாக்குதல் சாதாரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக இருக்க முடியாது. அதற்கு உள்நாட்டு சர்வதேச ஒத்துழைப்புகள் இருந்திருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் இதனை நடத்தமுடியாது.

அதேபோன்று ஏப்ரல் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் பல தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த சம்பவங்கள் அனைத்தையும் விடுதலை புலிகளின் மீது சுமத்தி பாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

வடக்கில் இடம்பெற்ற மோட்டார் கைக்கிளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பானது ஏப்ரல் தாக்குதலுக்கான பரீட்சாத்த நடவடிக்கையாகவும் இருந்திருக்கலாம். இந்த சம்வவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு என்ன நடந்தன.

மேலும் ஏப்ரல் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் உட்பட குண்டுதாரிகளில் அதிகமானவர்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக சம்பளம் பெற்றுக்கொண்டவர்கள் என்பது தற்போது வெளிப்படையாகி இருக்கின்றது. அதனால் அப்போதைய அரசாங்கத்தை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இந்த தாக்குதலை பயன்படுத்தி இருக்கலாம்.

அத்துடன் ஏப்ரல் தாக்குதலின்போது 8 குண்டுகளே வெடிக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க கர்த்தினால் மெல்கம் ரஞசித் குரல் கொடுத்து வருகின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோன்று வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் ஆயிரக்கணக்கான குண்டுகள் வெடிக்கப்பட்டன. தேவாலயங்கள் தாக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும் கர்த்தினால் மெல்கம் ரஞ்ஜிசி குரல் கொடுக்கவேண்டும்.

மேலும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 2009 இல் முடிவடையும்வரை இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் ஆட்சியில் இருந்து அரசாங்கங்களால் பாராட்டப்பட்டு வந்தனர். ஆனால் 2009 க்கு பின்னர் ஆட்சியில் இருந்து அரசாங்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தன. அந்த நடவடிக்கை இன்றுவரைக்கும் இடம்பெறுகின்றது.

முஸ்லிம்களின் மத கலாசாரத்தின் மீது கைவைத்தார்கள். அவர்களின் பொருளாதாரத்தின் மீது கைவைத்தார்கள். பல நெருக்கடிகளை கொடுத்து வந்தார்கள். கொராேனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் உரிமையையும் பறித்தார்கள்.

எனவே நாட்டில் இடம்பெற்ற 83 கலவரம் ஒரு சிறிய இனவாத குழுவாலே ஆரம்பிக்கப்பட்டதாகும் அதனை தடுக்க தவறியதாலே அது யுத்தம் வரைக்கு சென்றது. அதனால் அவ்வாறான இனவாத குழுக்களின் நடவடிக்கைகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதா அல்லது நாட்டில் மீண்டும் இனவாத பிரச்சினை ஒன்றை ஏற்படுத்துவதா என்பதை அரசாங்கம் தீர்மானிக்கவேண்டும் என்றார்.

யாழ். மாநகர சபை முதல்வருக்கு பிணை வழங்கியது அரசாங்கமா, நீதிமன்றமா?

யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா, நீதிமன்றமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்றிரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பதாகத் தன்னிடம் கூறியதாக ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மணிவண்ணன் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னராகவே, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட மாட்டாது எனவும் சாதாரண சட்டத்தின் கீழேயே வழக்கு தொடரப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சரின் இந்தக் கூற்று இந்த நாட்டில் நீதிமன்றங்களும், பொலிஸாரும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றனவா என்ற கேள்வியையும் ஜனாதிபதியினதும் அவரின் அரசாங்கத்தினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்பவே அவை செயற்படுகின்றனவா என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, மணிவண்ணன் அரசியல் உள்நோக்கம் கருதி, வேண்டுமென்றே கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்ற உண்மையையும் அமைச்சரின் கூற்று வெளிப்படுத்தி நிற்கின்றது. மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளித்தது உண்மை என்றால், மணிவண்ணன் ஏதோ தவறு செய்துள்ளார் எனறே அர்த்தப்படும்.

ஆனால், மணிவண்ணன் செய்தது தவறு என்று பொலிஸாரினால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே, ஜனாதிபதி என்ன அடிப்படையில் மணிவண்ணனுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்?

அமைச்சர் ஏற்கனவே கூறியதுபோல, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

ஆனால், யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பொலிஸார் மற்றும் மணிவண்ணன் தரப்பு வாதப் பிரதிவாதங்களைக் கேட்டு அறிந்த பின்னரேயே மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாக அறிகின்றேன்.

ஆனால், மணிவண்ணனுக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தேவானந்தா கூறியிருப்பதும் மணிவண்ணன் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படுவதற்கு முன்னதாகவே அவர் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் பொலிஸார் இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள் என்றும் அமைச்சர் முன்னதாகவே கூறியிருப்பது, இந்த நாட்டில் பொலிஸ் திணைக்களமும் நீதிமன்றங்களும் எந்தளவுக்குச் சுயாதீனத்தை இழந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரமாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான செயல்களை பொலிஸ் திணைக்களத்தையும் நீதிமன்றங்களையும் அவமதிக்கும் செயற்பாடுகளாகவும் கொள்ள முடியும்.

இதுதொடர்பாக, ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே பொது மக்கள் இம்சைப்படப் போகின்றார்கள் என்றால் நீதிமன்றங்கள் எதற்காக?

அத்துடன் பொலிசார் மக்களுக்கான பொலிசாரா அல்லது ஜனாதிபதியின் கையாட்களா? விடை வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

அரசாங்கம் குறைப்பாடுகளை திருத்திக்கொள்வது அவசியம் – திஸ்ஸ விதாரண

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியை பலவீனப்படுத்துவது எமது நோக்கல்ல.

ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிக்குமிடையில் கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்காகவே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அரசாங்கத்தின் செயற்பாடுகளில் உள்ள குறைப்பாடுகளை திருத்திக் கொள்வது அவசியமாகும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று முன்தினம் இரவுபெற்ற பங்காளி கட்சி தலைவர் கூட்டத்தில் இடம் பெற்ற சந்திப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுன தலைமையில் கூட்டணியில் கூட்டணிய அமைத்துள்ள பங்காளி கட்சிகள் இடம் பெற்று முடிந்த பொதுத்தேர்தலிலும் , ஜனாதிபதி தேர்தலிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளன. இருப்பினும் பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்களின் கருத்துக்களும், செயற்பாடுகளும் பங்காளி கட்சிகளை புறக்கணிப்பதாகவும் அமைகின்றன.

அரசாங்கத்தை பலவீனப்படுத்துவது பங்காளி கட்சிகளின் நோக்கமல்ல, ஒரு சில வெறுக்கத்தக்க பேச்சுக்கள் கூட்டணியை பலவீனப்படுத்துவதாக காணப்படுகிறது. இவ்விடயம் குறித்து கூட்டணியின் சிரேஷ்ட தலைவர்களுக்க பல முறை குறிப்பிட்டும் எவ்வித சாதகமான தீர்மானமும் கிடைக்கப் பெறவில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் 12 அரசியல் கட்சி தலைவர்களை உள்ளடக்கிய பேச்சுவார்த்தையின் போது மாகாண சபை தேர்தல் முறைமை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது. எல்லை நிர்ணய பிரச்சினைக்கு தீர்வு காணாமல் மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைமையில் நடத்த இடமளிக்க முடியாது.

சுபீட்சமாக எதிர்கால கொள்கை திட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். ஆளும் தரப்பின் ஒரு சிலரது வெறுக்கத்தக்க பேச்சுக்கள் கூட்டணியை பலவீனப்படுத்துகிறது. முரண்பாடுகளை ஏற்படுத்தி கூட்டணியை பலவீனப்படுத்தி 2014 ஆம் ஆண்டு காணப்பட்ட அரசியல் சூழலை ஏற்படுத்துவது ஆளும் தரப்பின் ஒரு சிலரது நோக்கமாக காணப்படுகிறது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகின்றன. குறைப்பாடுகளை திருத்திக்கொண்டு ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும். கடந்த காலங்களில் இடம் பெற்ற ஒரு சில செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் கையாண்ட விதம் முற்றிலும் தவறு என்பது பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டப்பட்டது என்றார்.

Posted in Uncategorized

சஹ்ரானின் பெண்கள் பயிற்சிமுகாம் : இருவர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், பெண்களுக்கு பயிற்சியளித்ததன் பின்னர் அவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டுள்ளனர்.

அவ்வாறு உறுதிமொழி எடுத்துகொண்டவர்களுக்கு உணவு வழங்கிவந்த காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரும் மற்றும் அடிப்படைவாத வட்ஸ்ப் குருப்பில் செயற்பட்ட நிந்தவூரைச் சேர்ந்த ஒருவருமெ இருவர், பயங்கரவாத புலனாய்பு தடுப்பு பிரிவினரால் வெள்ளிக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஹ்ரான் கடந்த 2018ஆம் ஆண்டு பயிற்சிமுகாம் ஒன்றில் பெண்களுக்கு பயிற்சியளித்து அவர்கள் உறுதிமொழி செய்தனர் இதன்போது அவர்களுக்கு உணவு வழங்கிவந்த மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த 44 வயதுடைய முஹமட் இர்பான் மற்றும்

பயங்கரவாத புலனாய்வு தடுப்பு பிரிவினரால் ஏற்கெனவே, கைது செய்யப்பட்ட வம்மா உம்மா அடிப்படைவாத வட்ஸ்ப் குருப்பில் செயற்பட்டு வந்தவர்கள் வழங்கிய தகவலுக்கமைய அந்த குருப்பில் செயற்பட்டுவந்த அம்பாறை நிந்தவூரைச் சேர்ந்த 31 வயதுடைய அலியர் காதிக் ஹக் உட்பட இருவரையும் அவரவர் வீடுகளில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு பயங்கரவாத புலனாய்வு தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கடந்தவாரம் வம்மா உம்மா அடிப்படைவாத வட்ஸ்ப் குருப்பில் செயற்பட்டுவந்த 6 பேரை பயங்கரவாத புலனாய்வு தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தயாபரனின் தரம் கெட்ட வேலை ! – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா எம்.பி

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா. தயாபரனின் தரம் கெட்ட வேலை அப்பாவி மக்களை பாதிக்கக் கூடியதாக இருக்கின்றதாகவும் இலவச அமரர் ஊர்தி சேவைக்கு தடையாக உள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்

GK அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தியின் பாதுகாப்பு கருதி மாநகர சபையின் வாகனத் தரிப்பிடத்தில் கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக மாநகர சபையின் 38 உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின் பிரகாரம் ஊர்தியை நிறுத்தி வைத்தோம்.

தயாபரன் ஆணையாளராக சில மாதங்களிற்கு முன்பு வந்ததின் பிற்பாடு ஊர்தியை தரிப்பிடத்தில் நிற்பாட்டுவதற்கு தடை விதித்தார். ஆணையாளருக்கும் முதல்வர் மற்றும் உறுப்பினர்களுக்கும் இடைப்பட்ட அதிகாரப் போட்டியில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மீண்டும் இலவச ஊர்தி வாகனத்தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டது.

ஆனால் இன்று ஆணையாளர் தயாபரனின் அடாவடி அப்பாவி மக்களை பாதிக்கக் கூடியதாக இருக்கின்றது. தற்போது ஒரு ஏழை இறந்து அந்த பூதவுடல் இந்த அமரர் ஊர்தியில் ஏற்ற வேண்டுமாக இருந்தால் எப்படி இந்த வாகனத்தை வெளியில் எடுப்பது என்பது பற்றி சிந்தக்க வேண்டும்.

இந்த ஆணையாளர் மக்களை நேசிக்கின்றாரா அல்லது சிந்திக்கும் இடத்தில் இவருக்கு கோளாறா என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் உள்ளது.

இந்த ஊர்தி இதுவரை 1200 இற்கு மேற்பட்ட ஏழைகளின் பூதவுடல்களை மட்டக்களப்பு மாவட்டம் தாண்டி கிழக்கு மாகாணம் முழுவதும் ஏற்றி இறக்கியிருக்கிறது

கோவிந்தன் ஜனா கருணாகரம் பா. உ,
தலைவர், GK அறக்கட்டளை .

Posted in Uncategorized

அதிகார பிரச்சினையை பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் அணுகி உள்ளூராட்சிகளை அரசு அச்சுறுத்துகின்றது – ரெலோ தவிசாளர் நிரோஷ்

யாழ்ப்பாண மாநகர சபையின் அதிகாரம் சார் விடயத்தை நிர்வாக ரீதியாக அணுகுவதை விடுத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பொலிஸாரைக் கொண்டு அணுகுவது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை அச்சுறுத்தி மட்டுப்படுத்தும் முயற்சியாகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளமையை ஜனநாயக மறுப்பாகவும் அதேவேளை பகிரப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம் உள்ளுராட்சி மன்றங்கள் இயங்க முடியாது. வெறுமனே ஓர் திணைக்களம் போல் இயங்குக என மத்திய அரசினால் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவுமே பார்க்கமுடிகின்றது. இக் கைது உள்ளிட்ட அண்மைக்காலமாக உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மீது முடுக்கிவிடப்பட்டுள்ள பொலிஸ் விசாரணைகள் ஜனநாயக ரீதியில் மக்கள் ஆணை வழங்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட சபைகள் தமது கருமங்களை மேற்கொள்ள முடியாது என அடக்குமுறைக்குள்ளாக்கும் முயற்சியாகும்.

உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக விடயங்களில் மாகாண சபைகளுக்கு மேற்பார்வை செய்வதற்கான வழிவகைகள் உள்ளன. மாகாண உள்ளூராட்சி அமைச்சர் பதவியில் இல்லாத நிலையில் ஆளுநரின் அதிகாரம் ஊடாக மாநகரசபைக்கு மேற்படி விடயத்தில் உள்ள அதிகார வரம்பு பற்றி ஆராய்ந்திருக்கலாம். கொழும்பு மாநகர சபை இவ் விடயத்தில் ஒத்தவிடயங்களை நடைமுறைப்படுத்தியிருந்ததை நான் அச் சபையின் முன்னாள் உறுப்பினர் என்றவகையில் அனுபவ ரீதியில் அறிந்திருக்கின்றேன்.

கொழும்பு மாநகர சபையில் நடைமுறைப்படுத்தப்படும் விடயம் ஒன்றை யாழ் மாநகர சபை நடைமுறைப்படுத்த முடியாது என்பது சர்ச்சைக்குரியது. மேற்படி விடயத்திற்கு உப விதிகள் தேவைப்பட்டால் அதனை மாநகரசபையினால் உருவாக்கமுடியும். புலிகளின் காவல்துறை சீருடையின் வடிவத்தை ஒத்த ஆடையமைப்பை யாழ் மாநகரசபை பயன்படுத்தியது என கூறுவதாயின் கூட அரசு எப்போது காவல்துறை சீருடையை அடையாளப்படுத்தி தடை ஒன்றைப்பிறப்பித்தது என்ற கேள்வி உள்ளது.

அடிப்படையில் மத்திய அரசாங்கம் ஜனநாயகக் கட்டமைப்பில் குறைந்தது உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப்பகிர்வைக்கூட ஏற்றுக்கொள்ளத்தயாரில்லை என்பதையே இக் கைது காட்டுகின்றது. மக்களால் தேர்தல்களில் ஆணை வழங்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சிக் கட்டமைப்பினை முடக்கவேண்டுமாயின் அது உள்ளூராட்சி அமைச்சருக்கிருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி சபைகளைக் கலைக்க முடியும். அரசு டம்மியாக உள்ளுராட்சி மன்றங்களை அடக்கிவிட எத்தனிப்பது ஜனநாயக விரோதமானது.

முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டதன் வாயிலாக விடுக்கப்படும் அச்சுறுத்தல் பாரியது. உலகளவில் மிலேச்சத்தனமான சட்டம் என மனித உரிமை ஆர்வலர்களால் விமர்சிக்கப்படும் கொடுங்கோல் சட்டம் அதிகார பிரச்சினை சார்ந்த ஓர் விடயத்திற்கு பிரயோகிக்கப்பட்டுள்ளமை ஏறறுக்கொள்ளமுடியாதது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் ரெலோவின் பொருளாளர் விந்தன் வாகனத்துடன் மோதிய இராணுவ வாகனம்

வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், ரெலோ அமைப்பின் பொருளாளருமான விந்தன் கனகரத்தினத்தினமும் மற்றும் அவரது குடும்பத்தினரும் யாழிலிருந்து துணுக்காய் நோக்கித் திருமண வைபவம் ஒன்றிற்காகச் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதி விந்தன் கனகரத்தினம் பயணம் செய்த ஹைஏஸ் வாகனம் கடும் சேதங்களுக்கு உள்ளானது.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (09) பிற்பகல்-03 மணியளவில் முல்லைத்தீவு வெள்ளாங்குளம் காட்டுப் பகுதியில் நடந்துள்ளது.

எனினும் தெய்வாதீனமாக விந்தன் கனகரத்தினத்துக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

வேகமாக வந்த வெள்ளாங்குளம் 65 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினரின் வாகனம் பின்னால் விந்தன் கனகரத்தினம் பயணம் செய்த வாகனத்தை மோதியுள்ளது. இந்நிலையில் மோதிவிட்டுத் தப்பிச் செல்ல இராணுவத்தினர் முயற்சித்த நிலையில் விந்தன் கனகரத்தினம் அவர்களைத் தடுத்து நிறுத்தி மல்லாவிப் பொலிஸாருக்குச் சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளார். இதனையடுத்துப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகள் மேற்கொண்டதுடன் சம்பவ இடத்தில் பொதுமக்கள் பலரும் ஒன்றுகூடினர்.

சீருடையை பார்த்து அரசாங்கம் அச்சம் கொள்வது எதற்காக ? யாழ். முதல்வரை விடுதலை செய்ய வேண்டும் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

தமிழர்களின் நிர்வாக திறமையை சகித்துக்கொள்ள முடியாத சிங்கள அரசு, யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ். மாநகர சுத்தப்படுத்தும் நோக்கில் உருவாக்கிய காவல் படையை சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்.

இத்தனை வருடங்களாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த அரசினால் ஒரு மாநகர சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் செயற்பாட்டை அவர்களால் செய்ய முடியவில்லை.

அதனை ஒரு தமிழன் செய்து விட்டான் என்ற காழ்புணர்ச்சியில் இந்த கைது நாடகம் அரங்கேறியுள்ளது.

சீருடை காரணமாக யாழ். மாநகர காவல் படையை தடைசெய்து முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை கைது செய்துள்ளமை சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

யாழ். மாநகர காவல் படையினரின் இதேவகையிலான சீருடை கொழும்பு மாநகர சபையிலும் உள்ளதாக மணிவண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

அவ்வாறு விளக்கமளித்தும் மணிவண்ணனை கைது செய்திருப்பது, இந்த அரசு தமிழர்கள் எந்த வகையிலும் முன்னேறி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

சாதாரண சீருடையைப் பார்த்து அரசாங்கம் அச்சம் கொள்வது எதற்காக என்று எமக்குத் தெரியவில்லை.

எனவே, கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு யாழ். நகரை சுத்தப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாநகர காவல் படையை சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இந்த வேளையில் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized