கிராமிய வீதிகளை புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பம்- பந்துல குணவர்தன

நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி சுமார் 20 பில்லியன் ரூபா கடனுதவி வழங்க இணங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், உரிய கடன் தொகை கிடைத்த பின்னர் வீதிப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

“இந்நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் செயற்பட சர்வதேச நிபுணத்துவத்துவமுடைய பிரான்ஸ் நாட்டு லாசார்ட் நிறுவனமும், சர்வதேச கடன்களை செலுத்தாததால் ஏற்பட்டுள்ள சட்ட விடயங்களுக்கு கிளிபர்ட் ஹான்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடன் வழங்குனர்களுடன் அவர்கள் விரிவாக கலந்துரையாடினர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களின் போது ஜப்பான், இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவைக் கோரினார்.

தற்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டை மேற்கொள்ள சர்வதேச சமூகம் உத்தியோகபூர்வமாக இணங்கியுள்ளது. அது ஒரு நாடாக நாம் பெற்ற வெற்றியாகும். நாடு மீண்டும் சுவாசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நாடளாவிய ரீதியில் நிறுத்தப்பட்டிருந்த திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும். ஒரு சில வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. மேம்பாலங்கள் அமைக்கும் பணி இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றே நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, இவ்வாறு நிறுத்தப்பட்ட அனைத்துத் திட்டங்களும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்பட உள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் சுமார் 20 பில்லியன் ரூபா கடன் உடன்படிக்கை மேற்கொண்டிருக்கிறோம். இந்தக் கடன் தொகை மூலம் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள சேதமடைந்த மற்றும் பயணிக்க முடியாத வீதிகளை புனரமைப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளது. அந்த வீதிகள் குறித்து ஆராயுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். அதன்படி, அடுத்த வாரத்திற்குள் வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

புகையிரதப் பாதைகள், அதிவேகப் பாதைகள் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். செயற்திறன்மிக்க புகையிரதப் பாதைகளாக மாற்ற, புகையிரத தண்டவாளங்களை நவீனமயப்படுத்த வேண்டும். நான் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் போது இந்திய கடன் திட்டத்தின் கீழ் 160 புகையிரதப் பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. இந்த புகையிரதப் பெட்டிகளுக்கான துறைமுக அபராதத் தொகையை செலுத்திய பின்னர், 123 புகையிரதப் பெட்டிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களின் அடிப்படையில்தான் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் அளவுக்கு நமது நாட்டில் பொருளாதாரப் பலம் இல்லை. துறைமுகங்கள், விமான நிலையங்கள், வருமான வரித்திணைக்களம் உள்ளிட்ட அரச வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும். தற்போதுள்ள காலாவதியான செயற்பாட்டுப் பொறிமுறையுடன் தொடர்ந்து செல்ல முடியாது.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்று இலங்கையை மாற்றுவதற்கு அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவது அவசியமாகும். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொழில்நுட்ப மாற்றத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். ” என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்

அமைச்சரவை மாற்றத்தில் மகிழ்ச்சியில்லை‌ : பொதுஜன பெரமுன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) அமைச்சரவையில் மாற்றம் செய்தார்.

03 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் நேற்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

எவ்வாறாயினும், இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கவலையடைந்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செயலாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தீர்மானம் ஜனாதிபதி எடுத்த தவறான முடிவாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை வழிநடத்தும் பலத்தை பாராளுமன்றத்தின் தலைவருக்கு வழங்குகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த ஆற்றலை வழங்குகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஐந்து பேர் மாத்திரமே உள்ளனர். ஆனால் இங்கிருந்து ஒரு அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அரச அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அது தவறு. தவறை தவறு என்று சொல்ல நாங்கள் பயப்படுவதில்லை. ஜனாதிபதி கூட தவறு செய்தால் தவறுதான்.

இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீரவும், சுகாதார அமைச்சராக டொக்டர் ரமேஷ் பத்திரனவும் நியமிக்கப்பட்டனர்.

மேலும், தற்போது நிதி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டியவை, அரச பெருந்தோட்ட முயற்சியாண்மை மறுசீரமைப்பு அமைச்சரவை அல்லாத அமைச்சராகவும் ஜனாதிபதி நியமித்தார்.

தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் சட்டம், உள்ளூராட்சி மன்ற வாக்களிப்பு கட்டளைச் சட்டம், ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது.

எவ்வாறாயினும், சட்டங்களை தனித்தனியாக திருத்துவதற்கு பதிலாக, புதிய தேர்தல் சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளை கவனத்தில் எடுக்க முடியாது

“வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சியினர் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாகவுள்ளனர். அவர்களின் ஆட்டத்துக்கு ஆட முடியாது” என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தனவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“தமிழ் மக்களை உசுப்பேத்தி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாட தொழிலாக உள்ளது.

இதனூடாக அவர்கள் தங்கள் சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹர்த்தால் போராட்டங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது. தமிழ் மக்களை ஏமாற்றவே இப்படியான போராட்டங்களைத் தமிழ்க் கட்சியினர் நடத்துகின்றனர்.”என தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வடக்கு – கிழக்கில் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, ஹர்த்தால் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று நீதிமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

எஞ்சிய கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்துகின்றது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் இடம்பெறவுள்ளது.

ஆளும்தரப்பில் இருந்து எதிர் தரப்பில் இருந்து பல அனுபவமிக்க அரசியல்வாதிகள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து விலகியவர்களும் அரசாங்கத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி 30 அமைச்சர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சார சபை, அமைச்சரவைக்கு மின் கட்டணத்தை உயர்த்த அதிகாரமில்லை – சம்பிக்க

இலங்கை மின்சார சபை, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அல்லது அமைச்சரவை அமைச்சர்களுக்கு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அதிகாரம் இல்லை என முன்னாள் எரிசக்தித்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார சபை சட்டம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் அடிப்படையில் இது ஏற்புடையது இல்லை என்றும் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தை பாதிக்கும் வகையில் கட்டணத்தை மாற்றுவதற்கு இந்த தரப்புக்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனினும் மின்சாரக் கட்டணத்தை அறிவிப்பதற்கான முழு அதிகாரமும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின் கட்டணத்தை உயர்த்தும் யோசனையை ஒத்திவைத்தது அமைச்சரவை

உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை கூட்டத்தில் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்தார். இதேவேளை, அமைச்சரவை பத்திரத்தை பரிசீலித்து முடிவெடுப்பதை அடுத்த வார கூட்டத்திற்கு அமைச்சரவை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தேவைகள், முன்மொழியப்பட்ட கட்டணக் கட்டமைப்பு, எரிசக்தி முன்னறிவிப்பு மற்றும் நிதி குறித்து அமைச்சர்களுக்கு விளக்கமளித்ததாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. தேவைகள், முன்மொழியப்பட்ட கட்டண அமைப்பு, எரிசக்தி முன்னறிவிப்பு மற்றும் நிதி குறித்து அமைச்சர்களுக்கு விளக்கப்பட்டது. முன்மொழிவுகள் மீதான அவதானிப்புகளுக்காக அமைச்சர்களின் அமைச்சரவைக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முன்மொழிவுகள் தொடர்பான அவதானிப்புகளுக்காக அமைச்சரவைக்கு மேலும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.” என குறித்த டுவிட்டர் பதிவில் காஞ்சன குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவன நிகழ்வுகளுக்கான செலவுகள் இரத்து

அரச நிறுவனங்களில் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்வுகளுக்கான செலவுகளை இரத்து செய்து சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட நிதி கட்டமைப்பிற்குள், அரச நிறுவனங்களின் துறைசார் நிகழ்வுகள் மற்றும் வௌி நிகழ்வுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்த கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது.

அதற்கமைய, அமைச்சுகள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நிறுவனங்கள், அரச தொழில்முயற்சியான்மை, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச வங்கிகள், கடமைகளை பொறுப்பேற்றல் மற்றும் ஓய்வு பெறுவதுடன் தொடர்புடைய நிகழ்வுகள், சினேகபூர்வ சந்திப்புகள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட அ​னைத்து நிகழ்வுகளுக்கும் அரச நிறுவனங்களூடாக ஈட்டப்படும் நிதியை செலவிடுகின்றமை நிறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.