பாகிஸ்தான் தூதரை கொல்ல முயன்ற வழக்கிலிருந்து முன்னாள் எம்.பி கனகரத்தினத்தின் மகன் உள்ளிட்ட 3 பேர் விடுதலை!

இலங்கைக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதுவராக இருந்த வசீர் அலி மொஹமட் என்பவரை கொலை செய்ய முயன்றமை, அதற்கு சதி செய்தல் மற்றும் உதவி செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் நீண்ட விசாரணையின் பின்னர் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராக இருந்த வசீரை படுகொலை செய்ய சதி செய்து முச்சக்கர வண்டியில் வெடிகுண்டு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களே விடுவிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி அல்லது அதற்கு அருகில் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகள் வாதிகளால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் இன்று தனது உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 25 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நீண்ட விசாரணைக்குப் பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் மகன் ரஞ்சன் எனப்படும் கனகரத்தினம் ஆதித்தன், ஸ்டார்ஸ் எனப்படும் யோகராஜா நிரோஷன் மற்றும் முச்சக்கரவண்டி சாரதி சுப்ரமணியம் சோதிராஜா ஆகியோரே விடுவிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா சந்தேகநபர்கள் சார்பில் நீண்டகாலமாக முன்னிலையாகி வந்தார்.

அண்மைய இலங்கை நீதித்துறை வரலாற்றில் 15 வருடங்களாக தடுப்புக்காவலில் இருந்து, நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட கைதியாக கனகரத்தினம் ஆதித்தன் குறிப்பிடப்படுகிறார். 2009 இல் கைது செய்யப்பட்டது முதல் இன்று விடுதலையாகும் வரை அவர் தடுப்புகாவல் கைதியாகவே வைக்கப்பட்டிருந்தார்.

Posted in Uncategorized

அரசியல் கைதிகள் இருவர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை

1996 ஆம் ஆண்டு 91 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த, இலங்கை மத்திய வங்கி மீதான  குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு 200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உள்ளிட்ட இருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

செல்லையா நவரட்ணம் என்ற குறித்த அரசியல் கைதியுடன் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த சண்முகரட்ணம் சண்முகராஜா என்ற தமிழ் அரசியல் கைதியும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இவர்கள் கடந்த 18 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் 200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த செல்லையா நவரட்ணம் தனது 69 ஆவது வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் விடுதலை செய்யப்பட்டுள்ள சண்முகரட்ணம் சண்முகராஜாவின் வயது 56 ஆகும். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பொருட்களை கொண்டு சென்ற குற்றத்திற்காக இவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

சிறைச்சாலையில் இவர்களது நன்னடத்தையை கருத்திற்கொண்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

Posted in Uncategorized

பொது மன்னிப்பில் மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் இருவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நேற்று விடுதலை செய்யப்பட்டனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது. சண்முகரட்ணம் சண்முகராஜன், செல்லையா நவரட்ணம் ஆகியோரே நேற்று மாலை சிறைகளிலிருந்து இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு உதவினர் என்ற குற்றச்சாட்டில் செல்லையா நவரட்ணத்துக்கு 200 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று வெடிப்பொருள்களுடன் கைதான சண்முகரட்ணம் சண்முகராஜனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுவிக்கப்பட்ட சாந்தனை இலங்கை வருவதற்கு அனுமதிக்குமாறு கோரி தாயார் கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தனை இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் பணிமனை ஊடாக ஜனாதிபதிக்கான கடிதத்தையும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஊடாக வெளிவிவகார அமைச்சருக்கான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உள்ளிட்டவர்களை அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் விடுதலை செய்தது.

இதில், இலங்கையர்களான சாந்தன், முருகன், றொபேர்ட்ஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வர் திருச்சி சிறப்பு முகாமில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த சாந்தன்,  தன்னை இலங்கைக்குள் வர அனுமதிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளது.

லைக்கா குழுமத்தின் தலைவர் ஜனாதிபதியிடம் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்

லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரித்தானியாவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யுத்தத்தினால் நலிவடைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி, ஆதரவற்றோரின் வாழ்வை வளப்படுத்தல், அரசியல் தீர்வு என்பன குறித்து தனது நிலைப்பாட்டை ஜனாதிபதியுடனான உரையாடலில் வலியுறுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில் அரசாங்கமும், ஜனாதிபதியும் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்கான ஆரம்பமாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பது குறித்த கோரிக்கையையயும் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் முன்வைத்திருந்தார்.

இதனை நிறைவேற்றுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கான சட்ட நடைமுறைகளை துரிதப்படுத்துவதற்கும் இணங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் மேற்கொண்ட சந்திப்புக்களில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

அத்துடன் நின்றுவிடாது, இலங்கை அரசாங்கத்தினால் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்ட 5 பேருக்கும், இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 10 பேருக்கும், தற்போது 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 13 பேருமாக 28 அரசியல் கைதிகளுக்கும் தலா 25 லட்சம் – (7கோடி ரூபாய்) லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஊடாக வழங்கி வைத்துள்ளார்.

தமது வாழ்வை சிறைகளில் தொலைத்த அரசியல் கைதிகளுக்கு தனி ஒருவரால் இதுவரை வழங்கப்பட்ட அதி கூடிய உதவியாக இந்த உதவி அமைந்துள்ளது என சில ஆய்வாளர்கள் தமது கட்டுரைகளில் கூட்டிக்காட்டியிருந்தார்கள்.

யுத்தம் காவு கொண்ட பிரதேசங்களையும், மக்களின் வாழ்வையும் கட்டி எழுப்புவதற்கு அரசியல் தீர்வை நோக்கி பயணிப்பது அவசியம். அந்த அரசியல் தீர்வைப் பெறுவதற்கும், அதனோடு சமாந்தரமாக – அப்பிரதேசங்களின் அபிவிருத்தியையும், நாளாந்தம் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு, ஆளும் அரசாங்கங்களோடும், அவ்வரசாங்கங்களின் தலைவர்களோடுமே பேசவேண்டியது அவசியம் என்ற அடிப்படையில் தனது இந்த சந்திப்புகள் தொடர்வதாக, லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி, லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் பாரியாரும் லைக்கா ஹெல்த்தின் தலைவருமான பிரேமா சுபாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கடந்த 13 ஆண்டுகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2,793 பேர் கைது

கடந்த 13 ஆண்டுகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2,793 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 2, 474 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைதானவர்களில் 184 பேர் சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களில் 44 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 31 பேர் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவல்களிலேயே இந்த தகவல் தெரியவந்துள்ளது.

லொகான் ரத்வத்தையின் மீது கொலைக்குற்றச்சாட்டுகளையும் சுமத்தும்படி நீதியரசர் தலைமையிலான விசாரணைக்குழு பரிந்துரை

ராஜாங்க அமைச்சராக லொகான் ரத்வத்தை பதவி வகித்தவேளை வெலிக்கடை அனுராதபுரம் சிறைச்சாலைகளிற்குள் அத்துமீறிநுழைந்து சிறைக்கைதிகளை அச்சுறுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் குழு பரிந்துரை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

குற்றவியல் சட்டம் உட்பட பல சட்டவிதிகளிற்கு ஏற்ப கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என தனிநபர் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆயுதம் ஏந்திய நிலையில் இரு சிறைச்சாலைகளிற்குள் அமைச்சர் நுழைவதற்கு அனுமதித்த சிறைக்காவலர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்குள் நுழைபவர்கள் வெளியேறுபவர்களை கண்காணிப்பதற்காக சிசிடிவி கமராக்களை பொருத்தவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

2021 செப்டம்பர் 21ம் திகதி முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதியரசர் குசலா சரோஜினி வீரவர்த்தன தலைமையிலான குழுவொன்று இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டது.

இந்த குழு தனது அறிக்கைகளை 60 நாட்களிற்குள் பரிந்துரை செய்யவேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்தகுழுவின் பரிந்துரைகளைபார்வையிட்டுள்ள தெரிவித்துள்ள த மோர்னிங் லொகான் ரத்வத்தை இழைத்த குற்றங்கள் குறித்து நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திவெளியிட்டுள்ளது.

சிறைச்சாலையில் ஆயுதங்களை பயன்படுத்தியமை ( சிறைச்சாலை சட்டம்)ஆயுதங்களை பயன்படுத்தி குற்றமொன்றை இழைத்தமை நாட்டிற்கு அவதூறு ஏற்படுத்த முயன்றமை மக்கள் மத்தியில் அரசாங்கம் குறித்த விருப்பமின்மையை ஏற்படுத்தியமை கொலை முயற்சி மரணத்தை ஏற்படுத்தப்போவதாக அச்சுறுத்தியதன் மூலம் குற்றவியல் அச்சுறுத்தலில் ஈடுபட்டமை ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தி காயங்களை ஏற்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகளை லொகான் ரத்வத்தை புரிந்துள்ளார் என தனிநபர் குழு தெரிவித்துள்ளது.

அரசாங்க விஜயமொன்றிற்கு ஏற்றதல்லாத லொகான் ரத்வத்தையின் பல நடவடிக்கைகள் குறித்தும் தனிநபர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை தலைவர் சுபாஸ்கரனால் நிதியுதவி

இலங்கை அரசாங்கத்தால் 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கும் (செல்லையா சதீஸ்குமார், குணசிங்கம் கிருபானந்தன், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், பந்தவேலு சசிகலராஜன், செனரத்கே லக்ஸமன்குரே, அஜித் சிஸாந்த எதிரிசிங்க, வைரமுத்து சரோஜா, பந்துளகஜவீர குணரட்ண, கந்தையா இளங்கோ, ராசதுரை திருவருள், மதியரசன் சுலக்ஸன், ஞனேசன் தர்சன்) லைக்கா குழுமத்தின் நிறுவுனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தலா 25 லட்சம் ரூபாககளை கடந்த செவ்வாய்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைத்துள்ளார்.

ஜனாதிபதியுடனான ஒவ்வவொரு சந்திப்புகளிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக லைக்கா குழுமத்தின் நிறுவுனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் விடுத்த வேண்டுகோள்களாலும், நீதிமன்ற தீர்ப்புகளாலும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பாலும், பிணை அடிப்படையிலும், இதுவரை 26 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

நீண்டகாலம் சிறைகளில் தம் வாழ்வைத் தொலைத்த இவர்கள், தமது வாழ்வை செப்பனிடவும், மறுசீரமைக்கவும், தமது குடும்பங்களுடனும், சமூகத்துடனும், இணைந்து வாழவும் அவர்களுக்கான வாழ்வாதாரத்திட்டம் அவசியம் என்பதை உணர்ந்த லைக்கா குழுமத்தின் நிறுவுனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் செயற்பாட்டு வடிவமே ஞானம் அறக்கட்டளையின் ஊடான இந்தப் பேருதவியாக அமைந்துள்ளது.

 

அதன் அடிப்படையில் லைக்கா குழுமத்தின் நிறுவுனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையிலான லைக்கா ஞானம் அறக்கட்டளை, முதற்கட்டமாக விடுதலை பெற்ற 5 பேருக்கும், இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 10 பேருக்கும், தற்போது 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 13 பேருமாக 28 அரசியல் கைதிகளுக்கும் தலா 25 லட்சம் ரூபாக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

22 தமிழ் அரசியல் கைதிகளே தற்போது சிறைகளில் உள்ளனர் – நீதி இராஜாங்க அமைச்சர்

யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர் எனவும் அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் ஆண் கைதிகள்,பெண் கைதிகள், நீதிமன்றத்தினால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ள கைதிகள்,சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், மரண தண்டனை கைதிகள், சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகள்,ஆயுள் தண்டனை கைதிகள்,சிறு வயது கைதிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11,290 ஆக காணப்பட வேண்டும். ஆனால் பௌதீக வள பற்றாக்குறையினால் 25,899 சிறைக்கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். மேலதிகமாக 14,609 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 45 ஆண்களும், 01 பெண் என்ற அடிப்படையில் 46 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பேரின் எண்ணிக்கை 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 பேருக்கு எதிரான விசாரணைகள் நிறைவு பெறாத காரணத்தினால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த 22 பேர் தொடர்பில் நீதியமைச்சு சட்டமாதிபர் திணைக்களத்துடன் ஒன்றிணைந்து விசேட நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்

வவுனியா மேல் நீதிமன்றினால் மூன்று அரசியல் கைதிகள் விடுதலை

வவுனியா மேல் நீதிமன்றினால் மூன்று அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு விடுதலையானவர்கள், சுலக்சன், தர்சன், திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இவர்கள் தொடர்பான வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது அரசியல் கைதிகள் சார்பாக சட்டத்தரணி அன்ரன் புனிதநாயம் முன்னிலையாகியிருந்தார்.

மேலும் இன்றைய தினம் விடுதலையான சுலக்சன் என்ற அரசியல் கைதியையே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த, அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.