பெளத்த மயமாக்கலை தடுத்து நிறுத்திய ஆளுநருக்கு எதிராக பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை நிலாவெளி வீதியில் இலுப்பைக்குளத்தில் தமிழ் மக்கள் வாழுமிடத்தில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பிக்குகள் சிலர் இன்று (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை புல்மோட்டை வீதியின் ஒரு பாதையை மறித்து பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பொலிஸார் பாதையின் ஒரு பகுதியின் ஊடாக போக்குவரத்தை ஒழுங்கமைத்தனர்.

விகாரை அமைக்க அத்திவாரமிடப்பட்ட பகுதிக்கு சென்ற பிக்குகள் அங்கு தற்போது புதிதாக நடப்பட்ட அரச மரக்கன்றுக்கு முன்பாக சமய அனுஷ்டானங்களை மேற்கொண்டு, பின்னர் வீதிக்கு வந்து இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம், புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை குறித்த பகுதியில் எது வித விகாரையும் இருக்கவில்லை என அக்கிராமத்தில் உள்ள வயோதிப பெண்ணொருவர் உட்பட சிலர் ஊடகங்களுக்கு தமது கருத்துக்களையும் வெளியிட்டு இருந்தனர்.

இதனையஅடுத்து. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்களுக்கும், பௌத்த மதகுரு ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம் பெற்ற போதிலும் பொலிஸாரினால் சமரசம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த மொரவெவ மஹா திபுல்வெவ ஸ்ரீ இந்திரராமதிபதி பொல்ஹெங்கொட உபரதன தேரர், இந்த இடத்தில் விகாரை அமைப்பதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆளுநர் செந்தில் தொண்டமான் மகாசங்கத்தை வீதிக்கு இழுத்தார்.இப்போது இப்படி என்றால் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படுமாயின் பிக்குகள் தமது சமய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார்.

இரா.சம்பந்தனின் அறிவுறுத்தலின் பிரகாரமே ஆளுனர் இந்த உத்தரவை பிறப்பித்ததாக பிக்குகள் குமுறினர்.

இந்திய வர்த்தகக் குழுவொன்று வடக்குக்கு விஜயம்

இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை  திங்கட்கிழமை (31) சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையதாக தெரிவிக்கப்படுகின்றது .

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பின் போது  கைத்தொழில், நகர அபிவிருத்தி அதிகார சபை, முதலீட்டு சபை, கூட்டுறவு, பால் பண்ணை மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட புவியியல் மற்றும் வர்த்தக இணைப்புகள் கலந்துரையாடப்பட்ட விடயங்களில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு மற்றும் விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையின் பல துறை பிரதிநிதிகள், மரபுசார் போன்ற துறைகளில் நிபுணர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களை உள்ளடக்கியது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு கப்பல் போக்குவரத்து, நீர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகியவை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தன.

இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுடனான நெருக்கமான ஒத்துழைப்பு இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக மீள உதவும் அதே வேளையில் பகிரப்பட்ட செழிப்பை உறுதி செய்யும் என ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

வடமாகாணத்திற்கான தமது 3 நாள் விஜயத்தின் போது சம்பந்தப்பட்ட முதலீட்டுத் தளங்களையும் பார்வையிடும் அதேவேளை, வடமாகாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்களைச் சந்திப்பதற்கும் தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

வடக்கில் முதலிடுமாறு புலம்பெயர் தமிழர்களிடம் ஆளுநர் கோரிக்கை

“எமது வடக்கு மாகாணத்தைப் பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதுவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள எமது பகுதியை மீட்டெடுக்க நம்மிடம் உள்ள ஒரேயொரு உபாயம். புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் என வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக அனைத்துத் தரப்புக்களும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“எமது மாகாணத்தின் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. மாகாணத்தின் முன்னேற்றத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எதிர்பார்க்கும் பெறுபேற்றைத் தருவதற்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கின்றேன்.

முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தைக் முன்னேற்றுவதற்கான பலப்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்படுகின்றது.

புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளை வடக்கு மாகாணத்தில் அதிகரித்து பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கான திட்டங்கள் ஆலோசிக்கப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பாகவும் சிந்திக்கப்படுகின்றது. சுற்றுலாத்துறையை இன்னும் விரிவுபடுத்தி, அதனூடான வருமானமீட்டலையும் வடக்குக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசனைகளையும் பெற்று வடக்கு மாகாணத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல எதிர்பார்க்கின்றேன்.

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கள், கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்படும். எமது மாகாணத்தைச் சிறந்த மாகாணமாக மாற்ற வேண்டும் என்ற அவா எனக்கு உண்டு. மாகாணத்தின் முன்னேற்றத்துக்காக நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் சிறந்த பெறுபேற்றைத் தருவதற்கு அனைத்துத் தரப்பினரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

வடக்கு ஆளுநர் – இந்திய துணைத்தூதுவர் இடையே சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெற்றதாக இந்திய துணைத் தூதரகம் டுவிடடர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பின்போது, வடக்கில் இந்திய அபிவிருத்தித் திட்டங்களின் நிலை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவிற்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் வடமாகாண ஆளுநருக்கு இந்திய துணைத் தூதர் இந்திய நூல்கள் சிலவற்றையும் அன்பளிப்பு செய்தார்.

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிப்பேன்; பதவியேற்ற பின் வட மாகாண ஆளுநர் அறிவிப்பு

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) காலை 9.30 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தர முயல்வேன் தெரிவித்தார்.

அனைத்து மதங்களும் தங்களுடைய மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்றும் அதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுக்க தான் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல மாகாண மக்கள் குறிப்பாக யாழ் மாவட்ட மக்களின் கொண்ட குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக வடக்கு மாகாண அவைத்தலைவர் எடுத்துக் கூறியிருந்த நிலையில் அது சம்பந்தமாகவும் நான் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்ற குடிநீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியாக தான் உணர்ந்திருப்பதாகவும் எனவே அந்த பிரச்சனையயை தீர்க்க நிச்சியமாக முக்கியமாக கவனம் எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

செந்தில் தொண்டமான் ஆளுநராக பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக தனது கடமையை இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 16ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் பெற்றுக்கொண்ட ஆளுநர் அவர்கள் இன்று திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், வியாழேந்திரன்,கிழக்கு மாகாண சபையின் அரச திணைக்களங்களது செயலாளர்கள், அரச திணைக்கள உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வடக்கு, கிழக்கு, வட மேல் மாகாண ஆளுநர்கள் நியமனம்

வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இன்று (17) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்களாக இன்று சத்தியப்பிரமாணம்

வட மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், வட மேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோர் இன்று (17) புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மற்றும்  வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் பதவிகளிலிருந்து நேற்று நீக்கப்பட்டதையடுத்து புதிய ஆளுநர்களாக இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

பதவி விலக மறுக்கும் ஆளுனர்களுக்கு எதிராக விரைவில் முறைகேடு விசாரணை?

ஜனாதிபதி செயலகத்தினால் பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ள நான்கு மாகாண ஆளுநர்களும் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய மறுத்தால், அவர்களை ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக கருத வேண்டாம் என அரச அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், இந்த ஆளுநர்களின் முறைகேடுகள் தொடர்பாக நீதிபதி தலைமையில் ஒரு குழுவை நியமித்து, குற்றச்சாட்டுகளில் ஆளுநர்களைக் குற்றவாளிகள் என்று பெயரிட்டு அவர்களை நீக்கவும், ஆளுநர் பதவிக்கு வேறு நபர்களை நியமிப்பது மற்றும் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்ட ஆளுநர்களுக்கு பணம் வழங்காமல் இருப்பது குறித்தும் ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளது.

பதவிவிலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ஆளுநர்கள் பதவி விலகத் தயாரில்லை, எனவே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி பதவி விலகி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் போது ஆளுநர்கள் பதவி விலகுவது வழமையான மரபு எனவும், பிரதமர் பதவி விலகும் போது அமைச்சரவையை கலைப்பது போன்றது எனவும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் மேற்படி சம்பிரதாயத்திற்கு அமைவாக ஆளுநர்கள் பதவி விலகாததால், அவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகுவதற்கு ஜனாதிபதி சிறிது காலம் காத்திருந்ததாக ஜனாதிபதி அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சிசபை தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென்ற ஜனாதிபதியின் விருப்பத்துக்கு சாதகமாக செயற்பட்ட முன்னாள் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம்.சாள்ஸூம் புதிய ஆளுனராக நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ் நாவலர் மண்டபத்தை கலாசார திணைக்களத்திடம் ஒப்படைத்தார் ஆளுநர்

யாழ் நல்லூர் நாவலர் மண்டபத்தின் செயற்பாடுகள் எவ்வித இடையூறும் இன்றி புனிதத் தன்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்து சமயம் மற்றும் கலாச்சார திணைக்கப் பணிப்பாளர் அனிருதனனுக்கு எழுத்து மூலமான நிபந்தனைகளுடன் பணிப்புரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,

இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சமய மற்றும் ஆன்மீக நடவடிக்கைகள் நாவலர் கலாசாரத்தில் எவ்வித இடையூறும் இன்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் பின்வரும் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நாவலர் மண்டபத்தின் சமய மற்றும் ஆன்மிக நடவடிக்கைகளுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமே முழுப் பொறுப்பாக இருக்க வேண்டும்.

நாவலர் கலாசார மண்டபம் புனிதமாக பாதுகாக்கப்படுவதோடு நடவடிக்கைகளுக்காக மாகாண கலாச்சார திணைக்களத்துடன் ஒத்துழைத்தல். நாவலர் நினைவுப் பொது நூலகத்தை யாழ்ப்பாண மாநகர சபையால் பராமரிக்க முடிவதோடு அதற்கான நியாயப்படுத்தல்கள் மற்றும் தொடர்வதற்கு ஒப்புதலை பெறுவதோடு பொறுப்பு வாய்ந்த இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது