பதவி விலக மறுக்கும் ஆளுனர்களுக்கு எதிராக விரைவில் முறைகேடு விசாரணை?

ஜனாதிபதி செயலகத்தினால் பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ள நான்கு மாகாண ஆளுநர்களும் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய மறுத்தால், அவர்களை ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக கருத வேண்டாம் என அரச அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், இந்த ஆளுநர்களின் முறைகேடுகள் தொடர்பாக நீதிபதி தலைமையில் ஒரு குழுவை நியமித்து, குற்றச்சாட்டுகளில் ஆளுநர்களைக் குற்றவாளிகள் என்று பெயரிட்டு அவர்களை நீக்கவும், ஆளுநர் பதவிக்கு வேறு நபர்களை நியமிப்பது மற்றும் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்ட ஆளுநர்களுக்கு பணம் வழங்காமல் இருப்பது குறித்தும் ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளது.

பதவிவிலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ஆளுநர்கள் பதவி விலகத் தயாரில்லை, எனவே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி பதவி விலகி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் போது ஆளுநர்கள் பதவி விலகுவது வழமையான மரபு எனவும், பிரதமர் பதவி விலகும் போது அமைச்சரவையை கலைப்பது போன்றது எனவும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் மேற்படி சம்பிரதாயத்திற்கு அமைவாக ஆளுநர்கள் பதவி விலகாததால், அவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகுவதற்கு ஜனாதிபதி சிறிது காலம் காத்திருந்ததாக ஜனாதிபதி அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சிசபை தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென்ற ஜனாதிபதியின் விருப்பத்துக்கு சாதகமாக செயற்பட்ட முன்னாள் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம்.சாள்ஸூம் புதிய ஆளுனராக நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ் நாவலர் மண்டபத்தை கலாசார திணைக்களத்திடம் ஒப்படைத்தார் ஆளுநர்

யாழ் நல்லூர் நாவலர் மண்டபத்தின் செயற்பாடுகள் எவ்வித இடையூறும் இன்றி புனிதத் தன்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்து சமயம் மற்றும் கலாச்சார திணைக்கப் பணிப்பாளர் அனிருதனனுக்கு எழுத்து மூலமான நிபந்தனைகளுடன் பணிப்புரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,

இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சமய மற்றும் ஆன்மீக நடவடிக்கைகள் நாவலர் கலாசாரத்தில் எவ்வித இடையூறும் இன்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் பின்வரும் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நாவலர் மண்டபத்தின் சமய மற்றும் ஆன்மிக நடவடிக்கைகளுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமே முழுப் பொறுப்பாக இருக்க வேண்டும்.

நாவலர் கலாசார மண்டபம் புனிதமாக பாதுகாக்கப்படுவதோடு நடவடிக்கைகளுக்காக மாகாண கலாச்சார திணைக்களத்துடன் ஒத்துழைத்தல். நாவலர் நினைவுப் பொது நூலகத்தை யாழ்ப்பாண மாநகர சபையால் பராமரிக்க முடிவதோடு அதற்கான நியாயப்படுத்தல்கள் மற்றும் தொடர்வதற்கு ஒப்புதலை பெறுவதோடு பொறுப்பு வாய்ந்த இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது

வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது

கச்சத்தீவில், இலங்கை கடற்படையினர் இரு புத்தர் சிலைகளை திடீரென நிறுவி உள்ளதாக கூறப்படும் தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுவதாகக் கூற முடியாது என, தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு இடங்களிலும் ஒருசில பிரச்சினைகள் வரும்போது, அதற்கு வழிபாட்டுத் தலங்களை அந்த பிரச்சினைக்குள் கொண்டுவரக் கூடாது என்பதே தமது கருத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எம்மதமும் சம்மதம் என்ற நிலையில் வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை எந்த அரசாங்கமும் அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும், மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும்,வடமாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார்.

வட்டுவையில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது மாரடைப்புக்கு உள்ளான முன்னாள் முதலமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.

முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் நோயாளர் காவுகை வண்டி மூலம் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் வேட்பாளர் தெரிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்தவேளையே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டதாக களுத்துறை மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கனவான்களை வடக்கு, கிழக்கு ஆளுநர்களாக நியமனம் செய்ய வேண்டும் – அரசாங்க பொது ஊழியர் சங்கம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுனர்களை உடனடியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீக்கி விட்டு மக்கள் நலன் சார்ந்த புதிய ஆளுனர்களை நியமிக்க வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் இன்று வியாழக்கிழமை கோரியது.

நான்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் ஜனாதிபதியால் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஊடகங்களுக்கு கல்முனையில் வைத்து தெரிவித்தவை வருமாறு,

மக்கள் நலன் சார்ந்த புதிய ஆளுனர்களையே ஜனாதிபதி நியமிக்க வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட வேண்டியது அவசியம்.

தற்போது பதவி வகித்து கொண்டிருக்கின்ற வடக்கு, கிழக்கு மாகாண ஆளுனர்களால் மக்கள் மனங்களை வெல்லவே முடியவில்லை. அவர்களுடைய மக்கள் நலன் சார்ந்த வேலை திட்டங்கள் உண்மையிலேயே போதாது.

Posted in Uncategorized

வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய தினம் (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.

“வடமாகாண கல்வி அமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் நிர்வாக ஆளுமையற்ற தன்மை காரணமாகவும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததாக ஆசியர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, வடமாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வடமாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 100 பக்க முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தோம்.

அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர். குறித்த விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை கேட்டபோதும் அது இதுவரை எமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

முறைப்பாட்டை வழங்கி அண்ணளவாக ஒரு வருடமாகிய போதும் கூட விசாரணை இன்னும் முடிவுறாத நிலைமையில் எமக்கு இதனுடைய பின்னணி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மூன்றாம் தவணை ஆரம்பித்த போதும் இரண்டாம் தவணைப் பரீட்சையை வைக்கமுடியாத அளவுக்கு வடமாகாண கல்வியமைச்சு மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் நிலைமை போயுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தோம் என்றனர்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணக்கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே – கருத்துக்கணிப்பில் மக்கள்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணக்கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே என மக்கள் கருதுவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் சமூகக் குறிகாட்டி அமைப்பு நடத்திய பொருளாதார சீர்திருத்த குறியீடு ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை அவசியமான பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுக்க கூடியவர் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவே என அதிகளவான இலங்கையர்கள் நம்புவது இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 56.6 வீதமானவர்கள் பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுக்க கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 31.4 வீதமானவர்கள் தாங்கள் அவரை நம்பவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடியும் நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 45 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். 50 வீதமானவர்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையின்மை வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா மீது 42 வீதமானவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ள அதேவேளை சம்பிக்க ரணவக்க மீது 23 வீதமானவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆளுநரின் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடுவோம் – சீ.வீ.கே. சிவஞானம்

வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதி சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளோம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார்.

கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,

வடக்கு ஆளுநர் கடந்த 27 திகதி இரண்டு நியதி சட்டங்கள் என்று சொல்லப்படுகின்ற இரண்டினை வர்த்தமானியில் பிரசித்துள்ளார். ஒன்று வாழ்வாதாரம் தொடர்பான விடயம் மற்றையது சுற்றுலா தொடர்பான விடயங்கள் என்ற இரண்டு நியதிச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

இந்த இரண்டுமே ஆளுநருடைய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும் சட்டவிரோதமானதும் முறையற்றதுமான மாகாண சபைகள் சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் மாகாண சபைகள் கட்டளை சட்டத்திற்கு முரணானது.

மாகாண சபை சட்டத்தின் படி ஆளுநர் தனது அதிகாரங்களை ஜனாதிபதியின் பணிப்புரையின் பெயரால் செயற்படுத்த முடியும் என்றுள்ளது.

எனவே ஆளுநருக்கு சட்டவாக்க அதிகாரம் எந்த இடத்திலும் கொடுக்கப்படவில்லை, எந்த இடத்திலும் ஆளுநர் சட்டம் இயற்றலாம் என்று குறிப்பிடப்படவில்லை.

இவர் துணிவாக எதேச்சாதிகாரமாக தனது இரண்டு நியதி சட்டங்களை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இருக்கக்கூடிய அதிகாரங்களையும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநர் பறித்தெடுக்கின்றார் என்பதே விடயம். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இது பாரதூரமான ஒரு விடயம் அரசியல் ரீதியாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். எங்களுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களையும் பறிக்கக் கூடிய ஒரு செயற்பாடாக காணப்படுகின்றது.

இந்த விடயத்தில் விழிப்பாக நாங்கள் இருக்க வேண்டியதுமாகும், ஆளுநர் எதேச்சாதிகாரமாக கேட்பதற்கு யாரும் இல்லை என்ற நிலையில் செயற்படுகின்றார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்து உள்ளோம். உடனடியாகவே ஜனாதிபதி மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கும் இந்த விடயத்தினை உடனடியாக தெரியப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என்றார்.