விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முயற்சித்தமைக்காக இந்திய புலனாய்வு அமைப்பு 13 பேர் மீது குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகளை மீளஉருவாக்குவதற்காக ஆயுதங்கள் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பத்து இலங்கையர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு வியாழக்கிழமை குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளது.

இலங்கை இந்தியாவில் விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் அளிப்பதற்காக ஆயுதம் பணம் போதைப்பொருள் ஆயுதங்களை சேகரித்தல் பதுக்கிவைத்தல்போன்றவற்றிற்காக இவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என  இந்தியாவின் என்ஐஏ குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இலங்கையை சேர்ந்த குணா என அழைக்கப்படும் குணசேகரன் பூக்குட்டி கண்ணா என அழைக்கப்படும் புஸ்பராஜாவும் பாக்கிஸ்தானை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர் ஹாஜிசலீம் என்பவருடன் இணைந்துசெயற்பட்டனர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் கொடுப்பதற்கான சதிமுயற்சிகள் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளன அவர்கள் கடந்தவருடம் திருச்சி விசேட முகாமில் கைதுசெய்யப்பட்டனர்  குற்றச்செயல்கள் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்கூட்டியே செயற்படுத்தப்பட்ட சிம்கார்ட்டுகளுடன் பல கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன பெருமளவு பணமும் தங்கப்பாளங்களும் கைப்பற்றப்பட்டன என இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலமே பணமும் தங்கமும் கிடைத்துள்ளது இந்த பணத்தை இவர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பரிமாறியுள்ளனர் எனவும்அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா – யாழ். கப்பல் சேவை தற்போது சாத்தியம் இல்லை

இந்தியா – யாழ்ப்பா ணம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை நடத்தும் சாத்தியக்கூறு இந்த ஆண்டு இறுதிவரை இல்லை என்று விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகளுடன் முதல் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை வந்தது. இந்தக் கப்பலை வரவேற்ற பின்னர் துறைமுக முனையத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காங்கேசன்துறையில் 25 கோடி ரூபாய் செலவில் பயணிகள் முனையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு மிகவும் பலமானது. இரு நாடுகளுக்கும் இடையில் கலாசார ரீதியான உறவுகள் மேலும் பலமடைய வேண்டும். இதற்கான வாய்ப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பம் அமைந்துள்ளது.

எனினும், இந்தியா – காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னும் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அது இந்தஆண்டு டிசெம்பருக்கு முன்னர் பூர்த்தியாகாது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவையை அடுத்த வருடத்திலாவது ஆரம்பிக்க வசதிகள் செய்யப்படும் – என்றும் கூறினார்.

சென்னை – காங்கேசன் துறை முதலாவது பயணிகள் கப்பல் நாளை மறுதினம்

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை இந்த கப்பல் காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது.

குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக இந்த பரீட்சாத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நெருக்கடி நிலையில் இருந்து மீள இந்தியாவின் ஒத்துழைப்பு மிக அவசியம் – அமெரிக்க திறைசேரி செயலாளர்

இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடி நிலைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதென அமெரிக்காவின் திறைசேரியின் செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டியதும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இலங்கையின் நடவடிக்கைகளை அவதானித்து வருவதுடன், கடந்த ஆறு மாதங்களில் பல்வேறு விடயங்களில் முன்னேற்றகரமான செயற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மூன்றாம் உலக நாடுகள் எதிர்கொள்ளும் கடன் அச்சுறுத்தல் பொருளாதாரத்திற்கும் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருவதுடன், இலங்கை போன்ற நாடுகளுக்கு உரிய தருணத்தில் முழுமையான கடன் நிவாரணங்களை வழங்குவதற்கு மேலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் திர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீன கடலட்டை பண்ணைகள்: மோடியிடம் உதவிகோரும் வடக்கு கடற்தொழிலாளர்கள்!

வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜரொன்றை கையளித்தனர்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து இன்று (13) காலை கலந்துரையாடினர்.

இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதி அ.அன்னராசா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 15ம் திகதி இந்தியாவில் மீனவர்களுடைய மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகிற நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, தீவக கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பான நடவடிக்கைகள் வெளிப்படையாக இடம்பெற்று வருகின்றது. இதனால் கடற்றொழிலாளர்களும் மீன் சாப்பிடும் மக்களும் பாதிக்கப்படுவர்.

டொலர் வருகிறது ஏற்றுமதி இடம்பெறுகிறது என்பதற்காக அரசாங்கம் சட்டவிரோதமான தொழிலை கனகச்சிதமாக அனுமதிக்கிறது.

கடற்றொழில் இருந்து வடக்கு கடற்றொழிலாளர்களை அந்நியப்படுத்தும் முயற்சி தற்போது இடம்பெற்று வருகின்றது. சீன கடலட்டைப் பண்ணைகளால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சட்டவிரோதமான தொழில் மற்றும் சீன கடலட்டைப் பண்ணை விவகாரங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆறுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர் சங்கங்களும் மூன்று கடற்றொழிலாளர் சமாசங்களும் இணைந்து குறித்த மகஜரை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு வழங்கினர்.

சீனா செல்லும் முன் அழைத்தது இந்தியா; ஜூலை 21ஆம் திகதி ரணில் – மோடி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் ஜனாதிபதி எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்துவார்.

இலங்கையின் தலைவராக யார் தெரிவானாலும் அவர் இந்தியாவுக்கு முதல் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்வது சம்பிரதாயமாகும். இது வழக்கமானதாக இருந்தாலும் ஜனாதிபதியாக தெரிவான ரணில் விக்கிரமசிங்கவை இந்தியா அழைக்கவில்லை. இதனால், அவர் தனது முதல் உத்தியோகபூர்வ பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. பல தடவைகள் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், அது சாத்தியமாகவில்லை.

இந்த நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி இந்தியா செல்லும் ஜனாதிபதி அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடத்துவார் என்று தெரிய வருகிறது. இதேபோன்று அமைச்சர்களையும் சந்தித்து ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார். சீனாவின் பெல்ட் அன்ட் றோட் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா செல்லவுள்ளார். இந்த மாநாடு ஒக்ரோபரில் நடக்கிறது. இதில் பங்கேற்க ரணில் விக்கிரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு திகதிகளை இந்தியா வழங்கியுள்ளதாக அறிய வருகின்றது.

இலங்கை செல்ல அனுமதி வழங்கக் கோரி சாந்தன் இந்தியப் பிரதமருக்குக் கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன், தமக்கு இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையாகி தற்போது ஒரு அறையில் கைதி போல அடைக்கப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய சொந்த நாடான இலங்கைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி சாந்தன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த முகாமில் ரத்த உறவுகளை மட்டுமே சந்திக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தம்மை போன்ற வெளிநாட்டு பிரஜைகளுக்கு இந்தியாவில் எவ்வாறு ரத்த உறவுகள் இருக்க முடியும் எனவும் சாந்தன் தமது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

முதலில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அதனை அடுத்து, சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ரொபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் இலங்கையை சேர்ந்த, முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ரோபர்ட் பயஸ் ஆகிய நால்வரும்

விடுதலை செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை – யாழ்ப்பாணம் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கும்; இந்திய துணைத்தூதர் நம்பிக்கை

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையை, விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னைக்கும் – யாழ்ப்பாணத்துக்கும் இடையில், அலையன்ஸ் எயார் மூலம் இயக்கப்படும் 100ஆவது விமானச் சேவைக்கான நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே தொடர்பினை பேணுவதற்கு போக்குவரத்து மிக முக்கியமானதாகும்.
அந்த போக்குவரத்தை மேம்படுத்த, இருநாட்டு அரசாங்கங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் முதற்தடவையாக இந்தியா – இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகளினால், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

மேலும், கடந்த பத்தாண்டுகளில் இந்திய பாதுகாப்புத் துறையின் முன்னேற்றத்தினால், இந்தியாவிலிருந்து பாதுகாப்பு தொடர்பான வன்பொருள் கொள்முதலானது புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி ஊக்குவிப்பு கருத்தரங்கு மற்றும் இருநாட்டு உற்பத்தி பொருட்கள் கண்காட்சி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் புதன்கிழமை (7) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உரையாற்றுகையில் , தமது அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் திறன்களை வளர்த்துக்கொள்வதிலும் தாங்கள நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அனைத்துக் துறைகளிலும் இலங்கையுடனான ஒத்துழைப்பை பெறுமதி வாய்ந்ததாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியா – இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் கண்காட்சியானது பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது.

மேலும், உள்ளுர் கைத்தொழில்கள் மற்றும் இலங்கை பாதுகாப்பு படைகளால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்களை காட்சிப்படுத்தவும், சம்பந்தப்பட்ட இந்திய தொழில்துறை நிபுணர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் இந்த நிகழ்வானது இலங்கைக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என தாம் நம்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தெரிவித்தார்.

வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்கொள்ள பாதுகாப்புப் படைகளை தொடர்ந்து நவீனமயமாக்குவதன் மூலம், இந்த முன்னேற்றங்களில் முன்னணியில் இருப்பது அவசியம் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ரிமோட் தொழில்நுட்பம் மூலம் உரையாற்றிய இந்திய பாதுகாப்பு செயலாளர் (உற்பத்தி) கிரிதர் அரமனே, இந்தியாவின் முக்கிய பங்காளிகளில் இலங்கையும் ஒன்று என்றும் இருதரப்பு உறவுகளில் அது முக்கிய தூணாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஆரம்ப நிகழ்வின் போது, இலங்கை இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட் ஆகியோர் இரு நாடுகளின் முன்னேற்றம் தொடர்பாக விளக்கமளித்தனர்.

பாதுகாப்பு கொள்முதல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட விஷேட புத்தகம் இந்திய உயர்ஸ்தானிகரால், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இக்கண்காட்சியில் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்புத் துறையின் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

வடக்கு ஆளுநர் – இந்திய துணைத்தூதுவர் இடையே சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வடமாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெற்றதாக இந்திய துணைத் தூதரகம் டுவிடடர் பதிவொன்றில் தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பின்போது, வடக்கில் இந்திய அபிவிருத்தித் திட்டங்களின் நிலை மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவிற்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் வடமாகாண ஆளுநருக்கு இந்திய துணைத் தூதர் இந்திய நூல்கள் சிலவற்றையும் அன்பளிப்பு செய்தார்.