நாடாளுமன்ற உறுப்பினரை மிரட்டிய பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத்தளபதி

இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல் மற்றும் வீண் செலவுகளை மட்டுப்படுத்துமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான தெரிவுக்குழுவில் நான் குறிப்பிட்ட போது பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி ஆகியோர் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள்.

ஆகவே இவர்களை உடனடியாக பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை தொடர்பான தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு வியாழக்கிழமை (5) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது.

இதன்போது இராணுவத்தின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் அப்பாவி இராணுவ வீரர்களின் தொழில்வாய்ப்புக்களை முடக்கும் வகையில் தீர்மானம் எடுத்தால் அது சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

ஆகவே இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்காமல் இராணுவ உயர் அதிகாரிகளின் ஊழல் மற்றும் வீண் செலவுகளை குறைக்க வேண்டும் என்று தெரிவுக்குழுவில் யோசனை முன்வைத்தேன்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னிலையாகும் அரச அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட கூடாது என பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை தொடர்பான விதிவிதானங்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதும் பாதுகாப்பு செயலாளர் உட்பட இராணுவ தளபதி நான் குறிப்பிட்ட விடயத்தை சுட்டிக்காட்டி எனக்கு தெரிவுக்குழுவின் தலைவர் முன்னிலையில் அச்சுறுத்தல் விடுத்தனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகரவுக்கு பாராளுமன்ற விதிவிதானங்கள் ஒன்றும் தெரியாது.

நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த பிரச்சினையில் உள்ளதால் அவர் எனக்கு எதிராக தெரிவுக்குழுவுக்குள் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து அவதானம் செலுத்தவில்லை. அத்துடன் தெரிவுக்குழுவுக்குள் பேசப்பட்ட விடயங்களின் குரல் பதிவுகளை வெளியிட வேண்டாம் எனவும் தெரிவுக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ உயர் அதிகாரிகளுக்காக அதிக நிதி செலவிடப்படுகிறது.

பாதுகாப்பு செயலாளர் காலையில் நடைபவணி செல்லும் போது அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு மக்கள் நிதி செலவிடப்படுகிறது. ஆனால் நாட்டு மக்கள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் எனக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்தமை நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைக்குரிய விடயமாகும்.

ஆகவே இவர்களை பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமை மீறல் குழுவுக்கு அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

2030 இனுள் இலங்கை இராணுவத்தை பாதியாகக் குறைக்க கொள்கை ரீதியில் தீர்மானம்

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கை இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்போது இரண்டு இலட்சத்தைத் தாண்டியிருக்கும் இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை பாதியாகக் குறைப்பதே அரசின் இலக்கு.

2030 ஆம் ஆண்டுக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க உத்தேசித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் சிறிலங்கா அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே திண்டாடி வருகிறது.

அதிலிருந்து ஓரவுக்கேனும் மீளும் வகையில் முப்படையிலிருந்து ஆளணி வளத்தை குறைக்க முடிவு செய்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

சீனாவினால் அதி நவீன தொடர்பாடல் வாகனங்கள் இலங்கை இராணுவத்துக்கு கையளிப்பு

2017 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும், இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், சீன மக்கள் குடியரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பாடல் அமைப்புகளுடன் கூடிய வாகனங்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன ஆகியோரால் உத்தியோகபூர்வமாக செவ்வாய்க்கிழமை (22) இராணுவ தலைமையக வளாகத்தில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

45 மில்லியன் யுவான் (அமெரிக்க டொலர் 6.2 மில்லியன்) பெறுமதியான இந்த தொடர்பாடல் முறைமை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த வாகனங்கள் அனைத்திலும் அதிநவீன ஈஎல்டி தொடர்பாடல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளன. குறுங் அலைவரிசை அமைப்பு, மற்றும் அவசர காலங்களில் நேரடி தகவல் தொடர்பாடலுக்கு உதவும் விமானிகள் அற்ற விமானங்கள் (ட்ரோன்கள்) என்பன பொறுத்தப்பட்டுள்ளன.

இந்த அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், இலங்கை இராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வலையமைப்பை மிகத் திறமையாகவும் ஒருங்கிணைக்கப்பட்ட முறையிலும் இயக்கும் திறனைப் பெறுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு வாய்ப்பாக அமையும்.

பொலிஸாரிடம் நம்பிக்கை இல்லை; இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி மக்கள் போராட்டம்

பொலிஸார் மீது நம்பிக்கை இல்லாததால், தமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இன்று திங்கட்கிழமை (14) காலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸாார் மீது நம்பிக்கை இல்லை. பொலிஸார் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை இராணுவத்தின் மீதே எங்களுக்கு நம்பிக்கை. தனியார் காணியில் உள்ள இராணுவ முகாமை மாற்றுவதாக இருந்தால், அரச காணியில் இராணுவ முகாமை அமையுங்கள் என போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமனம்

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

அத்துடன் இலங்கை விமானப்படையின் தற்போதைய பதவி நிலைப் பிரதானியான எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்சவுக்கு நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் எயார் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ச இந்நாட்டின் 19 ஆவது விமானப்படை தளபதியாகவுள்ள நிலையில், அவர் கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர் என்ற வகையில் ஆனந்த கல்லூரியில் உருவான முதலாவது விமானப் படைத் தளபதியாகவும் கருதப்படுவார்.

1988 ஆம் ஆண்டில் பயிலுநராக கொத்தலால பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இணைந்துக்கொண்டதோடு, அநுராதபுரம் முகாமில் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் முதலாம் இலக்க 33 ஆவது விமானப்படை பயிற்சி பாடநெறியில் பங்குபற்றி பாடநெறியின் மிகச்சிறந்த பயிலுநராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகளில் விமானப்படை அதிகாரியாக பங்கேற்ற அவர் சிறப்பான திறன்களை வெளிப்படுத்தியுள்ளார்.

விமானப்படை தளபதியாக நியமனம் பெறுவதற்கு முன்பாக அவர் விமானப்படையின் இரண்டாம் நிலை அதிகாரியாக நியமனம் வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.

உயர் இராணுவ அதிகாரியின் பாதுகாப்பிற்கு 7 வாகனங்கள்

உயர் இராணுவ அதிகாரி ஒருவரின் வாகனத்துடன் ஏழு வாகனங்கள் பாதுகாப்பிற்காக சென்றமை குறித்து காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கேள்வியெழுப்பியுள்ளார்.

உணவு கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் இந்த சந்தர்ப்பத்தில் இதுபோன்ற உயர் அதிகாரிகளுக்கு அதிகளவு பணத்தை செலவழிப்பது சரியா என்றும் அவர் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

மூன்று மாதங்களாக முதியோருக்கான உதவித்தொகையும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறான சூழலில் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு ஏழு வாகனங்களை அணிவகுப்புக்கு அழைத்துச் செல்ல பணம் ஒதுக்கியது யார் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இராணுவத்தை சரியான எண்ணிக்கைக்குள் பேணுவோம் என அமெரிக்க அதிகாரியிடம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உறுதி

இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை சரியான அங்கீகரிக்கப்பட்ட அளவுக்குள் பேணி, பாரம்பரிய இராணுவக் கடமைகளில் அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் (தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம்) திருமதி அஃப்ரீன் அக்தருடன் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அமெரிக்க பிரதி உதவிச் செயலாளர் திருமதி அக்தரிடம் தெரிவிக்கப்பட்டன.

அமெரிக்கா வழங்கிய ஒத்துழைப்பு நடவடிக்கைகளை நினைவு கூர்ந்த இராஜாங்க அமைச்சர் தென்னகோன், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

மேலும் கடல்சார் விழிப்புணர்வு மற்றும் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இலங்கைக்கு உதவும் அமெரிக்காவின் முயற்சிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகளை அதன் பாதுகாப்புக் கொள்கையில் முன்வைப்பதற்கான இலங்கையின் முயற்சிகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் இராஜாங்க அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார்.

இச்சந்திப்பை நினைவுகூரும் வகையில், பிரதி உதவிச் செயலாளர் அக்தர், இராஜாங்க அமைச்சர் தென்னகோனுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் இ.சொனெக், தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கடவுச்சீட்டுக்களுடன் பிரான்ஸில் தலைமறைவான இலங்கை முப்படை வீரர்கள்

2023ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ டிரையத்லான் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் முப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பிரான்சில் காணாமல் போயுள்ளனர்.

அதன்படி, நிகழ்விற்காக பிரான்ஸ் சென்ற 13பேர் கொண்ட தூதுக்குழுவின் தலைவரிடமிருந்து இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இலங்கை விமானப்படையின் இரண்டு அதிகாரிகள், தமது கடவுச்சீட்டுகளை திருடி, குழுவிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முப்படையைச் சேர்ந்த ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் மூன்று அதிகாரிகள் அடங்கிய 13 பேர் கடந்த 04 ஆம் திகதி அன்று பிரான்ஸ் சென்றனர்.

கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததால், போட்டியாளர்களின் கடவுசீட்டுக்கள் மூத்த அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. எனினும் குறித்த ஏழு பேரும் தங்களது கடவுச்சீட்டுக்களை திருடிச் சென்றதாக நம்பப்படுகிறது.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது – சவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அடிக்கல் நட்டிருந்தார்.

தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சவேந்திர சில்வா, குறித்த திஸ்ஸ விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது என்றார்.

மேலும் இனவாத, மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

25,000 இராணுவத்தினர் பணியிலிருந்து விலகினர் – பொன்சேகா

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25,000 இராணுவத்தினரும் 1,000 பொலிஸாரும் பணியிலிருந்து விலகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் சுமார் 1,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதவிகளைவிட்டு வெளியேறியுள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 200 பொலிஸ் அதிகாரிகள் பதவிகளை விட்டு விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.